Nov 242016
 

spl 4

காய்ந்தவன் என்றாய் நினைத்தாய்… நான் எவ்வளவு சத்து நிறைந்தவன் தெரியுமா!

சிவப்பு நிற கேசரி, பால் பாயசத்தில் சினிமாவில் ஹீரோவுக்கு நண்பன் போல் வரும் காமெடியனாட்டம் சைலண்டாக முந்திரியுடன் உலா வரும உலர் திராட்சையை பார்த்திருப்போம்… சாப்பிட்டும் இருப்போம்… அதில் எத்தனை சத்துக்கள் உள்ளடங்கி இருக்கிறது என்று தெரியுங்களா? உலர் திராட்சையின் பயன்கள் என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போமா!

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அட என்னப்பா… காய்ந்த அதில் என்ன இருக்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் தங்கநிறம் என்று 3 நிறங்களில் கிடைக்கிறது.

இதில் வைட்டமின் பி, சி, போலிக் ஆசிட், இரும்புச்சத்து, புரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் அட ஆமாங்க… ஆமாம்… இவ்வளவு சத்துக்களும் இருக்கு. நாம கேசரியிலும், பாயசத்திலும் டேஸ்ட்டுக்காக போட்டு சாப்பிடுகிறோம். ஆனால் இதன் மகத்துவம் அறிந்துதான் இதை இதில் போட்டு சாப்பிட நமக்கு கற்று தந்துள்ளனர் நம் முன்னோர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்றா… பர்ஸ்ட் அதை குணமாக்க ஆயுர்வேதம் என்ன மருந்தை பரிந்துரைக்கிறது தெரியுங்களா? இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வர வேண்டும் என்பதைதான். இதனால் அந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.

குடற்புண் ஆற அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன.  இந்த பிரச்னையில் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடற் புண்கள் ஐயோ… ஐயய்யோ… வந்துட்டாரு டாக்டருன்னு ஓட்டமாய் ஓடிவிடும். அந்தளவிற்கு உலர்ந்த திராட்சையில் பலன் இருக்கு.

உடல் சூடு தாங்க முடியலையேன்னு பலர் வேதனைப்படுவாங்க… இயல்பாகவே அவர்கள் உடல் அதிக உஷ்ணத்துடன் இருக்கும்.  இதற்கு 1 லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால் விரைவில் உடல் வெப்பம் தணியும்.

சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே இருப்பார்கள். காரணமின்றி கோபமும் அதிகரிக்கும். இவர்களுக்கு பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு லப்டப்… லப்டப்… என்று சீரான லயம் பாட ஆரம்பித்து விடும்.

மிக முக்கியமான பிரச்னை. இது 100க்கு கண்டிப்பாக 40 சதவீதம் பேருக்கு இருக்கும் பிரச்னைதான். மலச்சிக்கல். சாப்பிட்டது சரியாக ஜீரணம் ஆகாது. இவர்கள் என்ன செய்யவேண்டும் தெரியுங்களா? ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகளுக்கு அதிகம் ஏற்படும். அவர்களும் இதேபோல் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும்.

ஓடி…ஓடி உழைத்தாலும்… அக்கடான்னு தூங்க முடியலையேன்னு சோககீதம் பாடாதவங்க யாராவது இருப்பாங்களா? எல்லோருக்கும் சுகமான தூக்கம் இருந்தால் தானே மறுநாள் உற்சாகமாக தினசரி பணிகளில் ஈடுபட முடியும். தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் அப்புறம் என்ன நீங்க விடும் குறட்டைக்கு வீட்டில் குட்டு விழாமல் இருந்தால் சரி…!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான ரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இப்படி தம்மாந்துண்டு காய்ந்த திராட்சையில் மலையளவு சத்துக்களா என்று மலைத்து போகாதீர்கள். இதன் அருமையை உணர்ந்ததால்தான் முன்னோர்கள் அதை உணவுடன் சேர்க்க நமக்கு பழக்கி இருக்கிறார்கள்.

N.நாகராஜன்

Likes(3)Dislikes(1)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share