Nov 232016
 

cot

புதுசு கண்ணா… புதுசு… சீறுநீரக கற்களை அகற்ற புதிய கட்டில்

சீனா:
புதுசு கண்ணா… புதுசு… இது ரொம்பவே புதுசு என்று ஒரு புதிய கட்டிலை உருவாக்கி உள்ளார் சீனர் ஒருவர். இந்த கட்டில் எதற்காக தெரியுங்களா?

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜீ கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கு புதிய கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளதுதான் விஷயமே.

இவரது மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஏற்கெனவே ஒரு சிறுநீரகத்துடன் இருப்பவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுவது ஆபத்து என்ற நிலையால்  தினமும் சில நிமிடங்கள் தலைகீழாக நின்றால் கற்கள் இடம் மாறும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளனர் டாக்டர்கள்.

என்ன செய்வது என்று யோசித்த அவர்… தன் மனைவிக்காக ஒரு புதுமையான கட்டிலையே உருவாக்கி விட்டார். எப்படி என்கிறீர்களா? மனைவியைப் படுக்க வைத்து, கட்டிலோடு சேர்த்து பிணைத்தார்.

டிராக்டர் இன்ஜின் மூலம் கட்டிலுக்கு அதிர்வுகளை உண்டாக்கினார்.
கட்டில் மேலும் கீழும் செல்லும்போது சிறுநீரகக் கற்கள் இடம்பெயர்ந்தன. விஷயம் பரவி, அந்த கிராமத்தில் மட்டும் மூன்று பேர் சிறுநீரகக் கற்கள் பிரச்னையில் இருந்து வெளிவந்து விட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்க… இந்த கட்டிலுக்கான காப்புரிமை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜீ கிங்வா. மனைவிக்காக களத்தில் குதித்து புதுகட்டிலையே கண்டுபிடித்துள்ளார்.

தர்றோம்… தர்றோம்… சுவிஸ் ஒப்புதல்… “கருப்பு பண” இந்தியர்கள் கலக்கம்

சுவிட்சர்லாந்து:
தர்றோம்… தர்றோம்… அந்த லிஸ்டை தர்றோம்… என்று சுவிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

சுவிஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை வழங்க அந்நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியர்கள் பலரும் முறைகேடான வகையில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்த பட்டியல் என்று அவ்வபோது ஒரு பட்டியல் வெளியாகும். பின்னர் அது போலி என்றும் வதந்தி என்றும் தெரிய வரும். பரபரப்பிற்காக இப்படி செய்யப்படுகிறது.

எனினும், மத்திய அரசு தரப்பில் போதுமான விவரங்களை கேட்டு, சுவிட்சர்லாந்து அரசுக்கு பல முறை விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு எதிர்பார்க்கும் விபரங்கள் கிடைக்காத நிலையே நீடித்து வந்தது.

இந்நிலையில் தற்போது தங்கள் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை வழங்குவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக, அந்நாடு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாக, சுவிஸ் வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்களின் விவரம் படிப்படியாக இந்திய அரசுக்கு வழங்கப்படும் என்றும் சுவிஸ் அரசு கூறியுள்ளது.

இந்த தகவல் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்துள்ள இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மயக்கும் குரலால் பாடிய பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

சென்னை:
தன் மயக்கும் இசை புலமையால் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (86) உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இந்நிலையில் சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் பெற்றவர்.

சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா.

துயரம், வேதனையடைந்தேன்… முதல்வர் ஜெயலலிதா இரங்கல் அஞ்சலி

சென்னை:
கர்நாடக இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலமுரளிகிருஷ்ணா தனது 86வது வயதில் உடல்நலக்குறைவால்
காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக இசை கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
பாலமுரளிகிருஷ்ணா மறைந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். கர்நாடக இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர், சினிமா படங்களிலும் காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார்.

அவரது 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி கடந்த 2005ம் ஆண்டு சென்னையில் எனது முந்தைய ஆட்சியின்போது அரசு சார்பாக விழா எடுத்து, கவுரவிக்கப்பட்டது. அந்த விழாவில், அவர் எனக்காக ஜெய ஜெய லலிதே என்ற ராகத்தை அர்ப்பணித்தார்.

பதிலுக்கு நான், கந்தர்வ கான சாம்ராட் என்ற பட்டத்தை வழங்கியதும் பசுமையான நினைவுகளாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வின்னரும்… ரன்னரும்தான்… மற்றவங்களுக்கு டெபாசிட் கூட இல்ல…

தஞ்சாவூர்:
வின்னர், ரன்னருக்கு அப்புறம் யாருமே இல்லீங்களே… டெபாசிட்டையே காலி செய்து விட்டார்களே மக்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன விஷயம் தெரியுங்களா? தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வின்னர் ஆகி உள்ளது. திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

ஆனால் பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை டெபாசிட்டை இழந்து தவிக்கின்றன. இதில் 3ம் இடத்தை பெற்று சற்று கவுரவமாக தலை நிமிர்ந்துள்ளது பாஜ.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு பெறும் வேட்பாளர்கள் மட்டுமே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும். திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 57 வாக்குகள் பதிவானது. இங்கு டெபாசிட் தொகையை பெறுவதற்கு, 33 ஆயிரத்து 843 வாக்குகள் பெற வேண்டும்.

இதேபோல, 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவான அரவக்குறிச்சி தொகுதியில் 27 ஆயிரத்து 430 வாக்குகளும், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவான தஞ்சாவூர் தொகுதியில் 31 ஆயிரத்து 65 வாக்குகளும், பெற வேண்டும்.

ஆனால், பாஜ, தேமுதிக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றன. இதனால், அந்தக் கட்சிகள் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.

தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை… வோடோபோன் அறிவிப்பு

மும்பை:
தமிழகத்தில், விரைவில் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக, வோடோபோன் இந்தியா தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வோடோபோன் நிறுவனத்தின் சேவையை 1.50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 4ஜி சேவை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

4ஜி ஸ்மார்ட்போன்களில் இச்சேவை எளிதாக கிடைக்கும். 4ஜி சிம் கார்டுகள் 2ஜிபி டேட்டா வேலிடிட்டி உடன் விநியோகிக்கப்படும் என்றும் வோடோபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக, தனது 4ஜி சேவையும் சிறப்பான வரவேற்பை பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

குழந்தை- ஐபேட்… இரண்டும் ஒரே வெயிட்… அபுதாபியில் அதிசயம்..

அபுதாபி:
அட என்னப்பா… உண்மையா… என்றுதான் மக்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆமாங்க… நம்ப முடியாத அந்த விஷயம் இதுதான்…

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ-பேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளதுதான் அனைவரின் புருவங்களும் கேள்விக்குறியாக காரணமாக அமைந்துள்ளது.

அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான் என்றால் நம்புவீர்களா. ஆனால் அதுதான் உண்மை. இந்த பிரசவத்தை வெற்றிகரமாக முடிந்து குழந்தை பிறந்ததை டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.

இதுகுறித்து டாக்டர் குழு தலைவர் கோவிந்தா ஷெனாய் கூறுகையில், ‘‘அந்த அதிசய குழந்தை 26.5 வாரங்கள் கருவில் இருந்து பின்னர் பிரசவமானது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை உள்ளது. குழந்தையை பிரசவம் செய்த நேரம் தான் மிகவும் முக்கியமானது.

அப்போது அந்த தாய் மிகவும் அபாயகரமான சூழலில் இருந்தார். பிரசவ வலி வந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது. தாயும், குழந்தையும் மிகவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குணமடைந்துள்ளனர்.

தற்போது குழந்தையின் எடை 2.05 கிலோவாக அதிகரித்துள்ளது. குழந்தை மிகவும் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வாங்க… வாங்க… நாளையிலிருந்து பிக் பஜாரில் ரூ.2000 வாங்கலாம் வாங்க…

புதுடில்லி:
நாளொரு அறிவிப்பாக கொடுத்து மக்களின் பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் பிரச்னைக்கு மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக தீர்வு கண்டு வருகிறது. ஆமாங்க… இப்போ… வாங்க… வாங்க… பிக் பஜாருக்கு பணம் வாங்க வாங்க… என்று அறிவித்துள்ளது.

நாளை (24ம் தேதி) முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000 பெறலாம் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 8-ந் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30-ந் தேதி வரை அவகாசமும் அளித்தது.

இதனால் பணத்தை மாற்றுவதற்காக நாட்டின் அனைத்து வங்கிகளிலும் மக்கள் இன்றும் அலை மோதி வருகின்றனர். வங்கிகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

ஏ.டி.எம்.களிலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இது தேவைக்கு ஏற்ப பணம் எடுத்து செலவு செய்யும் மாத சம்பளக்காரர்களை அதிகளவில் பாதித்துள்ளது.

வரும் வாரம் 1-ந்தேதி சம்பளத்தையும் ஏ.டி.எம்.மில் எடுக்க முடியாமல் போய் விட்டால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போய் விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாத சம்பளத்தை ரொக்கமாக தருமாறு தனியார் நிறுவன ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாளை (24ம் தேதி) முதல் பிக் பஜாரில் டெபிட் கார்ட் மூலம் ரூ.2000 பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஓரளவிற்கு பணத்தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்கிரதை… “தில்லாலங்கடி” வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

புதுடில்லி:
ஜாக்கிரதை என்று சுட்டு விரல் நீட்டி வங்கி அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ளது ரிசர்வ் வங்கி. எதற்காக தெரியுங்களா?

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தினமும் தங்களின் மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர்.

ஆனால், ஒருசில வங்கிகளில் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்த நபர்களுக்கு அதிகளவில் நோட்டுக்களை மாற்றிக்கொடுப்பதாக பெரிய அளவில் புகார் எழுந்துள்ளது. மக்கள் வரிசையில் காத்துக்கிடக்க இப்படி வங்கி அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொள்வது மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா!

சில இடங்களில் வங்கி கிளை அதிகாரிகள் அதிக ரொக்கமாக பணம் பறிமாறப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் மோசடி முறைகளில் ஈடுபட வேண்டாம். ஊழியர்களை கண்காணித்து ரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைகேடு செய்யும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், ரூபாய் நோட்டு விவரத்தை வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். டெபாசிட் ஆவணங்களை வங்கிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பழைய ரூ.1000 நோட்டுக்கட்டுகளுடன் டில்லியில் ஆப்கன் பெண் சிக்கினார்

புதுடில்லி:
புதுடில்லியில் 10 லட்சம் ரூபாய் பழைய நோட்டுகளுடன் இருந்த ஆப்கான் பெண்ணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த தகவல் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளுடன் பிடிபட்டுள்ளார்.

காபூலில் இருந்து புறப்பட்டு அவர் புதுடில்லி வந்துள்ளார். விமான நிலையத்திற்குள் இறங்கியவுடன் அந்த பெண் மீது சந்தேகப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது இந்தியாவில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள பழைய 1000 ரூபாய் நோட்டுகள் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போதைப் பொருள் கடத்தலுக்காக அவர் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கான் பெண்ணிடம் சோதனை செய்யப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து 9.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. அவர் அணிந்திருந்த ஆடையிலும் பணத்தினை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.

அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காம்பீர் காலி… புவனேஸ்வர் வந்துட்டார்… இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காம்பீர் இடம் பெறவில்லை. புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

2-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த நிலையில் 3-வது போட்டி மொகாலியில் வரும் 26-ந்தேதி தொடங்குகிறது. மீதமுள்ள 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கம்பீர் காணாமல் போய் உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி வீரர்கள் விபரம்: விராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா,  கருண் நாயர், சகா, அஸ்வின், ஜடேஜா, ஜயந்த் யாதவ், மிஸ்ரா, ஷமி,  உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா.

முதல் போட்டியில் மட்டும் பங்கேற்ற கம்பீர் 2வது போட்டியிலும் இடம்பெறவில்லை. தற்போது 3வது போட்டியிலும் இவருக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share