Nov 232016
 

Spl 2

சங்கீத சாம்ராஜ்ய த்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணா
தாலாட்டும் குரலால் மக்களை துயில வைத்த இசை மாமேதை

தூங்காத குழந்தைகளும் அமுதகானம் போன்ற இசையை கேட்டால் தூங்கிவிடும் என்பர். தாலாட்டும் அந்த வகைதானே! அப்படி இசையால் நம்மை தாலாட்டி துயில வைத்த இசை மேதை மீளாத் துயரில் நம்மை ஆழ்த்தி விட்டு நிரந்தரமாக துயில சென்றவிட்டது. ஆம்… இசையில் பல சாதனைகள் செய்த கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (86) காலமாகிவிட்டார். தாலாட்டிய இசைக்கு நம் கண்ணீர் அஞ்சலி…

பாலமுரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற இடத்தில் 1930–ம் ஆண்டு ஜீலை மாதம் 6–ந் தேதி பிறந்தார். குடும்பமே இசைக்குடும்பம் என்று சொல்ல வேண்டும்.

காரணம் பாலமுரளி கிருஷ்ணாவின் தந்தை பட்டாபி ராமய்யா… இசையமைப்பாளர். தாயார் தாய் சூர்ய காந்தம்மாள். வீணை வாசிப்பதில் சிறந்தவர். குழந்தை பருவத்திலேயே சோகத்தை சுமந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இவரது தாயார் இறந்து விட தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

இசையில் தவழ்ந்த வீட்டில் பிறந்த இந்த சிறுவனுக்கும் இசைத்துறையில பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. கர்நாடக இசையை கற்க தொடங்கினார். இவரது முதல் இசை நிகழ்ச்சி என்றால் அது 8 வயதிலேயே நடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆந்திரா விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனை இசைநிகழ்ச்சியில் முதன்முதலாக பங்கேற்றார். ஆராதனையில் இவர் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.

இவரது துருதுருப்பும், சுறுசுறுப்பும் இசையில் அடுத்த பக்கங்களை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு உதாரணமாக இவர் மஹதி, சுமுகம், சர்வபநீ, ஓம்காரி, கணபதி உள்பட பல்வேறு ராகங்களை உருவாக்கியவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கு முக்கிய காரணம் இசையில் மீது இவருக்கு இருந்த அதீத ஆர்வம்தான்.

உலக அளவில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல நாடுகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். சினிமாவிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. இதனால்தான் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சமஸ்கிருத மொழிகளில் 400–க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

தில்லானாக்களில் சங்கதிகளைப் புகுத்தி புதுமை செய்தவர். இப்படிப் பல சாதனைகளை செய்திருந்தாலும் கூட இவரது புதிய முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரி முதல்வராகி, இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகளை அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் பால முரளி கிருஷ்ணா.

1967–ல் வெளிவந்த ‘பக்த பிரகலாதா’ என்ற புராண படத்தில் நாரதர் வேடத்தில் நடித்துள்ளார். இசை, இசையமைப்பு, நடிப்பு என்று பல துறைகளிலும் “பக்காவாக”  கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டியவர். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் இசையில் இவர் செய்தது எல்லாம் சாதனை என்றே சொல்லவேண்டும்.

இசை குறித்த இவரது ஆய்வுகள் வாழ்நாள் சாதனையாகும். இசை வைத்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவர். தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத, மலையாள, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.

சிவாஜிகணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா! இன்றொரு நாள் போதுமா! நான் பாட இன்றொரு நாள் போதுமா!…’ என்ற பாடல் இன்றும் பல கோயில்களில் மார்கழி மாதத்தில் ஒலிக்கிறது. இதை பாடியது இந்த இசை மேதைதான்.

இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. ‘கவிக்குவில்’ படத்தில் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான், ராதையை…’ , ‘கலைக்கோவில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது…’, ‘நூல் வேலி’ படத்தில் ‘மவுனத்தில் விளையாடும் மனசாட்சி…’, ‘பசங்க’ படத்தில் ‘அன்பாலே அழகாகும் வீடு ஆனந்தம் அதற்குள்ளே தேடு’ என்ற காலத்தாலும் அழிக்க முடியாத கல்வெட்டு போன்ற அருமையான பாடல்களை பாடி இசையை ரசிக்க தெரியாதவர்களை கூட தாளம் போட வைத்தவர் பாலமுரளிகிருஷ்ணா.

இவரது இசை சாதனைகளுக்காக மத்திய அரசு பத்மபநீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை பெற்ற இசைக்கலைஞரும் இவர்தான். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக 2 முறை தேசிய விருது தேடி வந்து இவரிடம் அடைக்கலமாகி உள்ளது.

கர்நாடக இசைத்துறையில் சங்கீத கலாநிதி, சங்கீத கலா சிகாமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். மயக்கும் சங்கீத குரலில் மக்களை தாலாட்டிய மகத்தான கலைஞர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

தனக்கே உரித்தான தனித்துவமான குரலால் மக்களை ஈர்த்து வந்த கானக்குயில் கண்மூடி நிரந்தரமாக தூங்கி விட்டது. இந்த இழப்பு இசைத்துறைக்கு பெரும் பேரிடிதான் என்பதை மறுக்க முடியாது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share