Nov 222016
 

Doc

மக்கள் நேய டாக்டரின் இறுதிச்சடங்கு… ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்பு

கோவை:
மக்கள் நேய டாக்டரின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆயிரமும் வேண்டாம்… ஐந்நூறும் வேண்டாம்… வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும்… வாங்க… என்னிடம் மருத்துவம் பார்க்கலாம் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் மனிதநேயத்தோடு மருத்துவம் பார்த்தவர் கோவை சிங்காநல்லூர் ராஜ கணபதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (67).

நல்ல உள்ளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது போல் சின்ன காயத்திற்கு கூட அந்த டெஸ்ட்.. இந்த டெஸ்ட் எடுக்க சொல்லும் மருத்துவமனைகள் மத்தியில் தளராமல் தன் சேவை செய்து வந்தவர் பாலசுப்பிரமணியன்.

ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறை ஒன்றில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். நோயாளிகளிடம் 2 ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை வழங்கி வந்தார். பணம் இல்லாதவர்களிடம் அதைக்கூட வாங்கமாட்டார் என்றால் பார்த்துக்கோங்க…

கடந்த சில ஆண்டுகளாக தனது கட்டணத்தை 2 ரூபாயில் இருந்து படிப்படியாக 20 ரூபாயாக உயர்த்தி மருத்துவ சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் பயனடைந்த ஆவாரம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி ஏழை, எளிய மக்கள், அவரை 20 ரூபாய் டாக்டர் என்றே அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் இவர் இறந்தார். நேற்று அவரது உடல் ஒண்டிப்புதூர் அருகே மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர் என்றால் பார்த்துக்கொள்ளுங்க… மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய டாக்டருக்கு மக்களின் இறுதி அஞ்சலி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.

நீ அன்பானவன்… கருணையானவன்… ஒபாமாவின் பாராட்டு மழையில் நனைந்த சிறுவன்…

வாஷிங்டன்:
நீ அன்பானவன், கருணையானவன் என்று ஒபாமாவால் பாராட்டப்பட்டுள்ளான் சிறுவன் ஒருவன். யார் தெரியுங்களா?

சிரியாவில் குண்டுவெடிப்பால் இடிந்து போன கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் புகைப்படம் வைரலானதே ஞாபகம் வருகிறதா? அந்த சிறுவனை சிரியாவில் இருந்து அழைத்து வந்து தன்னுடன் பள்ளியில் ஆங்கிலம் பயிற்றுவிக்க போவதாக ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினான் அமெரிக்க சிறுவன்.

அதை ஒபாமா படித்து மிகவும் உறைந்துபோனார். அந்த சிறுவனை நேரில் அழைத்து அவனுக்கு பார்ரட்டுகள் தெரிவித்தார். அந்த சிறுவனிடம், நீ மிகவும் அன்பானவனாகவும், கருணை உள்ளவனாகவும் இருப்பதோடு மட்டுமில்லாமல் பிறரையும் அதேவகையில் நினைக்கும்படி செய்து விட்டாய் என்று பாராட்டி தள்ளியுள்ளார்.

சின்ன வயதில் பெரிய விஷயம் அல்லவா? நாமும் பாராட்டுவோம்…

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி ரொக்கம்… மம்தா அதிரடி

கோல்கட்டா:
யார் என்ன அதிரடி திட்டம் கொண்டு வந்தா என்ன… எங்க மாநில அரசு ஊழியர்களுக்கு நாங்க இருக்கிறோம் என்று மம்தா குரல் எழுப்பி உள்ளார். எப்படி தெரியுங்களா?

”மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக அளிக்கப்படும்,” என்று அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

பழைய நோட்டுகள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இதற்கிடையில் மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும் என்று நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை, மாநில அரசே ரொக்கமாக அளிக்கும் என்றும் சொல்லியிருப்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 ஜப்பானை ஆட்டியது நிலநடுக்கம்… ரிக்டரில் 7.4 பதிவு… சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ:
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பான் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன காரணம் தெரியுங்களா?

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.4 எனப் பதிவாக… உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் ரிக்டரில் 7.4 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புக்குசிமாவுக்கு அருகாமையில் 20 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.

நிலநடுக்கம் காரணமாக டோக்கியோ வரை நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இதில் 2 பேர் காயடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக புக்குசிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி உடனடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புக்குசிமாவில் அணு உலை அமைந்துள்ளதால் சுனாமி ஏற்பட்டால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியல் ஏற்பட்டுள்ளது.

அணு உலையில் 1 மீ., உயரத்துக்கு சுனாமி தாக்கியதாகவும், இதனால் பாதிப்பு இல்லை எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலையில் நீர் குளிர்ச்சி கட்டமைப்பின் மூன்றாவது உலை செயற்பாட்டை நிறுத்தியுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல்தான் கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் புக்குசிமா அணு உலை சேதத்துக்குள்ளானது என்பது இங்கு நினைவுப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர். பலர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

மழை தொடரும்… வானிலை மையம் தகவல்… வட தமிழகத்தில் வறண்ட வானிலையாம்…

சென்னை:
மழை தொடரும் என்று வானிலை மையம் வழக்கம் போல் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு மக்கள் கமெண்ட் என்ன தெரியுங்களா? வரும்… ஆனா வராது… என்பதுதான். சரி விஷயத்தை பார்ப்போம்…

‘குமரி கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால், தென் மாவட்டங்களில் மழை தொடரும்’ என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியை ஒட்டி, இலங்கை அருகே, இந்திய பெருங்கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 நாட்களாக மையம் கொண்டுள்ளது. இதனால் தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 55 மி.மீ., மழையும், திருத்துறைப்பூண்டியில் 100 மி.மீ., மழையும் பெய்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: குமரி கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் வடக்கு நோக்கி நகர்வதால், தென் மாவட்ட கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் கனமழை பெய்யும். வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

அடப்பாவிங்களா… என்ன நடக்குது நாட்டுல… வங்கியிலிருந்து பழைய நோட்டுக்கள் ரூ. 1 கோடி கொள்ளை

புவனேஸ்வர்:
எப்படிங்க… இது எப்படிங்க நடக்கும்… என்ன நடக்குது நாட்டுல என்று புரியாமல் மக்களி விழிப்பிதுங்கிடி வருகின்றனர். என்ன விஷயம் தெரியுங்களா?

மத்திய அரசு நோட்டு விவகாரத்தில் அதிரடிக்க… மக்கள் வங்கிகளுக்கு படையெடுக்க என்ற நாடே விழிப்பிதுங்கி கிடக்கும் நிலையில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது ஒடிசாவில். என்னன்னு பாருங்களேன்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள், ஒடிசாவில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதுதான் அது.

ஒடிசாவில் தென்கனல் மாவட்டத்தில் ஒடிசா கிராமிய வங்கியின் கிளை உள்ளது. மத்திய அரசால் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய 500 – 1,000 ரூபாய் நோட்டுகள், ஒரு பெரிய பெட்டியில், இங்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு, 8 கோடி ரூபாய்.

இந்நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பின், நேற்று காலை வங்கியை திறந்த அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பணம் வைக்கப்பட்டு இருந்த பெட்டி, உடைக்கப்பட்டு இருந்ததுதான் அது.

பெட்டியை சோதனையிட்டபோது, அதில் இருந்த, 1.15 கோடி ரூபாய் கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  போலீசார் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா? ‘வங்கியில் பணியாற்றுவோரின் உதவி இன்றி, இந்த கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை’ என்கின்றனர். உண்மைதானே… இந்த பழைய ரூபாயை வேறு எங்காவது மாற்றிக் கொள்ள முடிவு செய்து இப்படி ஒரு திட்டம் போட்டு இருக்காங்களா?

பிசிசிஐ., நிர்வாகிகளை ஒட்டு மொத்தமாக தூக்குங்க… லோதா குழு அதிரடி…

புதுடில்லி:
ஒட்டு மொத்தமாக தூக்குங்க… என்று லோதா குழு அதிரடியான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என, லோதா குழு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி, லோதா குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

இவற்றை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் அவகாசம் வழங்கியது. ஆனால், இதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பி.சி.சி.ஐ., காலம் தாழ்த்தி வருகிறது.

இதையடுத்து, பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்கங்கள் பண பரிவர்த்தனை செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதற்கிடையே லோதா குழு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய பரிந்துரை அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில்தான் அந்த அதிரடி காட்டப்பட்டுள்ளது. தற்போதைய பி.சி.சி.ஐ., மற்றும் மாநில சங்க நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக நீக்கவேண்டும். முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை என்பவரை பி.சி.சி.ஐ., பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

லோதா பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டு, நிர்வாகிகள் நீக்கப்பட்டால், புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் வரை ஜி.கே.பிள்ளை பொறுப்பில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தப்பியோடிய மல்லையாவுக்கு பிடிவாரண்ட்… மும்பை கோர்ட் உத்தரவு

மும்பை:
தப்பியோடியவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மும்பை சிறப்பு நீதிமன்றம்… யாருக்கு தெரியுங்களா?

‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார்.

இந்த வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையே பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா கொடுத்திருந்த காசோலைகள் அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.

மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share