Nov 212016
 

naga


இலை, பட்டை, வேர், பழம், விதை என்று உடலுக்கு நலம் தரும் நாவல் பழம்… ஆமாங்க… பெரிய சைஸ் கருப்பு திராட்சை போல் இருக்குமே… அதுபற்றிய கட்டுரைதான் இது.

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… பள்ளிக்கூட வாசலில் பாட்டியிடம் நாவல் பழம் வாங்கி தின்றது ஞாபகம் வருதே… என்று இப்போதும் பாடாத நபர்கள் இருந்தால்…. இல்லை கண்டிப்பாக இருக்கவே முடியாது. அந்த கால தலைமுறையினரும் சரி… இன்றைய ஸ்மார்ட் போன் கால தலைமுறையினரும் சரி. கண்டிப்பாக நாவல் பழத்தை ஒருமுறையாவது டேஸ்ட் செய்து இருப்பார்கள்.

இந்த நாவல் பழத்தில் சிறிது உப்பும், மிளகாய் தூளும் தூவி தருவாங்க பாருங்க… அடடா… டேஸ்ட் செம அள்ளு அள்ளும். ஆனால் அது டேஸ்ட்டுக்காக சாப்பிட்டு வேஸ்ட் செய்யும் பழம் இல்லீங்க. அற்புதமான இயற்கை அன்னை நமக்கு அள்ளித் தந்த வரப்பிரசாதம். இயற்கை மருத்துவர் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அதில் பல நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கு.

அப்படி என்ன விஷயங்கள் இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிடுவோம். நாவல் பலத்தை சாப்பிடுவதால் மூளை பலப்படும், ஈரல் நோய் குணமாகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமாக என்று கேட்காதீர்கள். அதையும் தாண்டி… அதுக்கும் மேல என்று பல மேட்டர் இருக்குங்க பாஸ்.

நாவல் பழக்கசாயம், வாயுத்தொல்லை நீக்கும். மண்ணீரல் வீக்கம்,நாள்பட்ட கழிச்சல் நோய், உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி என்று நாவல் பழம் ஸ்மால் டாக்டர் போல நமக்கு உதவுகிறது.

இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் ரத்தத்தை சுத்தி செய்யும் மகிமை கொண்டது. ரத்த விருத்திக்கு உதவும் சிறுநீர்க்கழிவை தூண்டும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். இன்னும் இருக்குங்க பாஸ்… நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாவது குறையலாம்.

இந்த பழத்தை சாப்பிடுவதால் நீர்வேட்கை நீங்கும். பழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து அருந்தினால் குணம் அடையும். இப்பழத்தில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் உள்ளது

சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தின் விதையை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்துக் கொண்டு தினமும் 2-4 கிராம் வீதம் மூன்று வேளை எனத் தண்ணீரில் கலந்து அருந்தி வரவேண்டும். அப்படி செய்வதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

மேலும் விதையைப் பொடித்து மாம்பருப்புத் தூளுடன் சேர்த்துத்தர சிறுநீரைப் பெருக்கும். இது பித்தத்தையும் போக்கும். நாவல் கொழுந்துச் சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கித் தர சீதக்கழிச்சல் போகும். இப்படி இயற்கை நமக்கு அருகிலேயே நாவல் மரம் என்ற பெயரில் ஒரு மருத்துவரை வைத்துள்ளது.

இப்படி இலை, பழம், விதையின் பயன்கள் இது என்றால்… நாவல்மரப்பட்டை குரல் இனிமையை அதிகரிக்கும். ஆஸ்துமா, தாகம், களைப்பு குருதி சீதபேதி, பெரும்பாடு, ஈளை இருமல் ஆகிய நோய்களுக்கும் ரொம்ப ரொம்ப நல்லது.

நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கும் இதன் சாற்றைப் பயன்படுத்தி வாய் கொப்புளிக்கலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத் தயிரில் சாப்பிட பெண்களின் உதிரப்போக்கு குணமாகும்.

மரப்பட்டைத் தூளை ரத்தம் வழிகின்ற புண்ணில் தூவ குணமாகும். அத்தகைய சிறப்பு இந்த மரத்தின் பட்டைக்கு இருக்கு. பட்டைக் கஷாயத்தைக் கொண்டு புண்களையும் கழுவலாம்.

இந்த மரத்தின் வேர் என்ன பயன் கொடுக்கிறது தெரியுங்களா? வாதம், கரப்பான், நீரிழிவு, குருதி, சீதபேதி, வாதகரம், மேகம், செரியாமை ஆகியவற்றைப் போக்கும்.  இப்படி நுனி முதல் வேர் வரை அருமையான பலன்களை அள்ளித்தருகிறது நாவல்.

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. 30 மீட்டர் உயரம் வரை வளரும். 100 ஆண்டுகள் வரை வாழும். ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் இந்த மரம்.

பிறகு மார்ச் – மே மாதம் பூப்பதும் அதன் பின்னர் ஜீலை–ஆகஸ்ட்– செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருவதும் இந்த மரத்தின் இயல்பு.

பெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மரம் நட்ட 8 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் தரும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 மீட்டர் இடைவெளி விட்டு நடப்படும் நாவல் மரம் ஆண்டுக்கு 50 முதல் 80 கிலோ வரை பழங்கள் தருகிறது.

கருநாவல், கொடி நாவல், சம்பு நாவல் என நாவல் வகைகள் உள்ளன. இதை சாகுபடி செய்ய விவசாயிகள் தற்போது முன் வருகின்றனர். நீண்ட காலப்பயிராக இருந்தாலும் தொடர்ந்து வருமானம் தருவதால் தங்கள் தோப்புகளில் இதை பயிர் செய்து வருகின்றனர்.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் நாவல் மர சாகுபடி செய்துள்ள விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:

ஒரு ஏக்கரில் சம்பு நாவல் பழ சாகுபடி செய்துள்ளேன். 96 மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். ஆனால் ஆண்டு தோறும் கவாத்து (மரத்தின் பக்க கிளைகளை வெட்டி சீரமைத்தல்) செய்து வருகிறேன். இதனால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன.

இயற்கை முறையில் மட்டுமே உரம் இட்டு வருகிறேன். இதனால் சாகுபடி அதிகரிக்கிறது. பழத்தின் சுவையும் கூடுதலாக இருக்கிறது. அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறேன்.

மரத்தில் நோய் தாக்குதல் இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடி பயன்படுத்தினால் போதும். நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன. ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது.

சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும். பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும். நான் சாகுபடி செய்துள்ள இந்த மரத்தில் உள்ள ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்க முடிகின்றது.

அதிக தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மே முதல் ஜீலை வரை சாகுபடி செய்கிறோம் என்றார்.

உடலுக்கு குளிர்ச்சியை அள்ளிதரும் நாவல் பழத்திற்கு அந்த பெயர் வந்த காரணம் என்னவென்று தெரியுங்களா? நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நாக்கு வறண்டு தண்ணீர்ங அதிகம் குடிக்க வேண்டும்போல் இருக்கும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் ‘நா+அல்’ (நாவல்) என்றனர் என்று பெயர் விளக்கம் அளிக்கின்றனர்.

இந்த நாவல் பழச்சாற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்கி கடைகளிலும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share