Nov 182016
 

 

1

ஐயா ஜாக்கிரதை… அம்மா ஜாக்கிரதை… எடுத்தீங்க… அப்புறம் சிறைதான்

தஞ்சாவூர்:

ஐயா ஜாக்கிரதை… அம்மா ஜாக்கிரதை… குப்பைத் தொட்டிகளிலோ… சாலைகளிலேயே செல்லாத பணம் கொட்டப்பட்டு கிடந்தால் எடுக்காதீங்கோ… எடுக்காதீங்கோ… அப்புறம் நீங்க கம்பிதான் எண்ணும்… ஜாக்கிரதைங்கோ…

என்ன இம்புட்டு பில்டப் என்கிறீர்களா… உண்மைதாங்க… அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்ததை தொடர்ந்து, நடுத்தர மக்கள் வங்கிகளை நோக்கி ஓட்டம் பிடிக்க, பணத்தை அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் நகைக்கடைகளை நோக்கி ஓடுகின்றனர். இதனால் சில தினங்களுக்கு நகை விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து தங்கம் வாங்குபவர்கள், தங்களது பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தடாலடியாக அறிவிக்க, இப்போ நகைக்கடைகள் காற்று வாங்குகிறதாம்.

இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையாக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருவதாகவும், சாலை ஓரங்களில் வீசப்பட்டு வருவதாகவும், கோயில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வந்தபடியே இருக்கிறது.

இங்குதான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஏன் என்கிறீர்களா? இந்த பணம் எல்லாம் கள்ள  நோட்டுகள் என்பதுதான் விஷயமே.

“ரோட்டிலோ, குப்பையிலோ யாரும் செல்லுபடியாகும் நோட்டுகளை கொட்டுவதில்லை. எங்காவது ஓரிரு இடங்களில் அப்படி நடந்திருக்கலாம், ஆனால், பெரும்பாலான இடங்களில் கொட்டப்பட்டு கிடப்பது எல்லாம் கள்ள நோட்டுகள்தான். டிசம்பர் 30-ம் வரை பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், அளவுக்கதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதனை வேறு விதமாக புதிய நோட்டுகளாக மாற்றி வருகின்றனர். குப்பையில் கொட்டப்படுவது எல்லாம் செல்லாத கள்ள நோட்டுகளே” என்று சொல்கின்றனர் விபரமறிந்த சில அதிகாரிகள். எனவே ஜாக்கிரதை மக்களே… நீங்க ஆஹா குப்பையில் பணமா என்று எடுத்து வங்கிக்கு சென்றால் அங்கிருந்து நேராக மாமியார் (சிறை) வீட்டுக்கு செல்ல நேரிடும். கவனம்… கவனம்…

தபால் ஓட்டு இல்லீங்கோ… 3 தொகுதி தேர்தலிலும்… இல்லீங்கோ…

சென்னை:

தமிழகத்தில் தஞ்சை உட்பட 3 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் தபால் வாக்கு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவும் உடல் நலக்குறைவால் இறந்தார். தொடர்ந்து 3 தொகுதிகளுக்கான தேர்தலும் நாளை (19-ம் தேதி) நடைபெற உள்ளது.

இங்குதான் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி ஒரு ஸ்டேட்மெண்டை போட்டுள்ளார். என்ன தெரியுங்களா? 3 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் தபால் வாக்குகள் கிடையாது என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

அரசியல்ல… இதெல்லாம் சகஜமப்பா… ஆதரவாளர்களை சமாதானப்படுத்திய ஹிலாரி

வாஷிங்டன்:

அரசியல்ல… இதெல்லாம் சகஜமப்பா… என்ற நம்ம காமெடி நடிகர் கவுண்டமணியின் டயலாக்கை போல் தன் ஆதரவாளர்களை மனம் தளர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன்.

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். அத்துடன் அமெரிக்க பார்லியில் அதிக இடங்களை குடியரசு கட்சி பெற்றதால், ஹிலாரி ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது. தேர்தல் தோல்விக்கு பின் முதன்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹிலாரி என்ன பேசினார் தெரியுங்களா?

தேர்தல் தோல்வியால் நீங்கள் அடைந்துள்ள அதிருப்தி போலவே எனக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தோல்வியை கண்டு மனம் தளரா மல், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். நாட்டு மக்களிடையே ஆழமான பிளவுகள் இருந்தாலும், அதையும் தாண்டி அமெரிக்கா உச்சத்தை எட்டும் என்று தன் ஆதரவாளர்களுக்கு “பூஸ்ட் அப்” கொடுத்துள்ளார்.

“ஐ சப்போர்ட்…” நான் அப்படி சொல்லைங்க… பில்கேட்ஸ் அலறல்…

புதுடில்லி:

யாருய்யா… அது இப்படி கிளப்பி விட்டு வெறும் தண்ணீரில் வெங்காயத்தை வதக்குறதுன்னு நொந்து போய் உள்ளார் பில்கேட்ஸ். எதற்காக தெரியுங்களா?

அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ‘மைக்ரோசாப்ட்’ மென்பொருள் நிறுவன தலைவரும், பிரபல தொழிலபதிருமான, பில்கேட்ஸ், இந்தியா வந்துள்ளார்.

பிரதமர் மோடியின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு, அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்குதான் இப்படி ஒரு ரியாக்சன் கொடுத்துள்ளார். எப்படி?

பிரதமர் மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை குறித்து, நான் எதுவுமே கூறவில்லை. ஆனால், இந்தியா, ‘டிஜிட்டல்’மயமாக மாறி வருகிறது என்றுதான் தெரிவித்தேன். இந்தியாவின், ஆதார் அடையாள அட்டை சிறப்பான திட்டம்.

அமெரிக்காவின், புதிய அதிபராக, டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி, எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. யார் அதிபராக இருந்தாலும், அவருடன் இணைந்து பணியாற்ற தயார். இப்படி சொல்லியிருக்கிறாருங்க…

உங்க அரசியலுக்கு நீதிமன்றம் இடமில்லை… நீதிபதிகள் “கடும் காட்டம்”

சென்னை:

உங்க அரசியலுக்கு இது இடமில்லை என்பதுபோல் நீதிமன்றம் “கடுமை” காட்டியுள்ளது. எதற்காக தெரியுங்களா?

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தஞ்சை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்று கூறி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. சிலபல தடைகளுக்கு பிறகு தற்போது நாளை (19ம் தேதி) தஞ்சாவூர் தொகுதியில் தேர்தல் நடக்கிறது.

இதற்கிடையில் இந்த தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் காந்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் என்ன சொல்லியிருந்தார் தெரியுங்களா?

“தஞ்சை தொகுதி அதிமுக வேட்பாளர் ரங்கசாமியின் வேட்புமனுவில் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் முதல்வர் வைத்துள்ள கைரேகையின் உண்மைத் தன்மையை யாரும் நிரூபிக்கலை. இந்த காரணத்தால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி கூறுகையில், “இந்த கைரேகை தொடர்பாக ஒருவர் மாற்றி ஒருவர் வழக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் போட்டியிடுகிறீர்கள். அரசியலை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள்.

தேர்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை எதிர்கொள்ள அச்சமிருந்தால் ஏன் சுயேட்சையாக போட்டியிட வேண்டும். தேர்தல் சின்னம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

டிவி நடிகர் மரணம்… தற்கொலையா… விபத்தா போலீசார் தீவிர விசாரணை

மும்பை:
தற்கொலையா… விபத்தா என்று புரியாமல் அதிர்ச்சி நிலையில் உள்ளனர் மக்கள். காரணம் டி.வி. நடிகர் ஒருவர் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம்தான்.

சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. அதேபோல்தான் மும்பை மேற்கு வழி ரயில் தடத்தில் காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வர  உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் அந்த முதியவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் (66) என்பது தெரியவந்துள்ளது. இவர் இந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். இந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்ததும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share