Nov 212016
 

images

அது ஒரு அழகிய கிராமம். விவசாய நிலங்கள், சுற்றி மலைகள் என இயற்கை பொலிவுடன் இருந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களும்  கடுமையாக உழைத்து செழிப்பாக இருந்து வந்தனர்.

சோலையாக விளங்கிய கிராமம், ஒரு சமயத்தில் நீர் வரத்து குறையவே, பாலைவனமாக மாறத் தொடங்கியது. மூன்று வேலை சாப்பாட்டுடன் மகிழ்ச்சியாக இருந்த மக்களின் நிலை, ஓரிரு வேலை என சுருங்கியது.

பஞ்சம் தலை விரித்து ஆடியதில், மக்கள் அக்கம் பக்கம் உள்ள ஊர்களுக்குச் சென்று வேலை செய்ய ஆரம்பித்தனர்.  என்ன செய்வதென்று அறியாது துன்பத்தில் வாடினர்.

கிராமத்தின் இந்த முக்கிய பிரச்சினையை ஆராய்ந்த ஒரு முதியவர் மக்களிடம் ஒரு யோசனையை தெரிவித்தார்.

“மக்களே, நம் கிராமத்தை சுற்றியுள்ள மலைகளில், ஒரு உயரமான மலை தெரிகிறதல்லவா? அதன் உச்சியிலிருந்து நீர் பிரவாகித்து, ஓடையாக மாறி, வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஓடையை திசை மாற்றினால், நீர் முழுதும் நம் கிராமத்தை வந்து சேரும்.

ஆனால் அந்த மலையின் உச்சியை அடைவது சுலபமில்லை. போகும் வழியில் கொடிய பாம்புகளும், விஷ பூச்சிகளும் இருக்கும். மேலும், மலை உச்சியை நெருங்குகையில், அங்கு சுவாசிக்க போதுமான காற்று இல்லாமல் இருக்கலாம் என்ற நம்பப் படுவதால், இதுவரை யாரும் அங்கு செல்ல முயலவில்லை” என்றார்.

இதை கேட்ட மக்களுக்கு ஆச்சரியம். ஆனால் பாதைகளில் உள்ள ஆபத்தை நினைத்து, எவரும் மலை உச்சிக்கு செல்லும் திட்டத்தை செய்ய முன் வரவில்லை. தண்ணீர் கிடைக்கும் வழி இருந்தும், எடுக்க முடியாமல் இருக்கிறோமே, என்ன பண்ணலாம் என யோசித்தனர். நாட்கள் செல்ல செல்ல, தொடர் பட்டினியில் மக்கள் நிலை இன்னும் மோசமானது.

இந்த சூழ்நிலையில் கிராமத் தலைவர் ஒரு போட்டி அறிவித்தார். மலை உச்சிக்கு சென்று நீரோடையை நம் கிராமத்து பக்கம் எவர் திருப்பி விடுகிறாரோ, அவரே, அடுத்த தலைவராக நியமிக்கப்படுவார் எனவும், அவருக்கு சில நிலங்களும் பரிசாகத் தரப்படும் எனவும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு பொது மக்கள் கூடும் பல இடங்களில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போட்டித் துவங்கும் நாளும் வந்தது.

போட்டியைக் காண அனைத்து மக்களும் கூடியிருந்தனர். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் மட்டும் போட்டியில் கலந்துக் கொள்வதாய் களம் இறங்கினர். அப்போது அந்த கிராமத்திற்கு வழிப்போக்கனாய் வந்த மற்றொரு இளைஞனும், அறிவிப்பு பலகையை பார்த்து தானும் கலந்துக் கொள்ள போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தான்.

ஒரு வழியாக மூன்று இளைஞர்கள் தேறிவிட்டனர் என கிராமத் தலைவரும் போட்டியைத் துவக்கி வைத்தார்.

மூன்று இளைஞர்களும் முன்னே நடக்க, பின் தொடர்ந்த மக்கள் மலை அடிவாரம் வரை வந்தனர்.

மலையில் மூவரும் நடக்கத் தொடங்க, கீழிருந்த மக்களில் சிலர், கரகோஷம் எழுப்பினர். வேறு சிலரோ “போகாதீர்கள், அது ஆபத்தான பாதை, அங்கு சுவாசிக்கும் காற்று கிடையாது, இதுவரை அங்குச் சென்றவர்கள் திரும்பி வந்ததில்லை. தண்ணீர் இல்லையென்றால் கூட பரவாயில்லை, இப்போது உள்ளது போலவே, ஒரு வேலை சாப்பாட்டுடன், உயிருடனாவது இருந்து விடலாம், திரும்பி வந்துவிடுங்கள்” என எச்சரித்தனர்.

ஆனால் இளைஞர்கள் மூவரும் விடுவதாயில்லை. மேலே என்ன தான் இருக்கிறது, ஒரு கை பாத்துவிடுவோம் என்ற தோரணையில் நடையைக் கட்டினர்.

கொஞ்சம் தூரம் சென்றபின், முதியவர் கூறியது போலவே கொடிய விஷப் பூச்சிகளும், பாம்புகளும் பாதையின் ஓரமாக ஊர்ந்துக்கொண்டிருந்தன. இதைக் கண்ட முதல் இளைஞன், பயந்து போய், நமக்கு இந்த வீர விளையாட்டு வேண்டாம் என கீழே இறங்கிவிடுகிறான்.

மற்ற இரு இளைஞர்கள் மட்டும் தொடர்ந்து மேலே செல்கின்றனர்.

மலை உச்சியை அடையும் தருவாயில், இரண்டாம் இளைஞனுக்கு கீழிருந்த மக்கள் கத்திய குரல்கள் மீண்டும் மீண்டும் காதில் விழுவது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டது. “ஆம் அவர்கள் சொன்னது சரிதான், இங்கு சுவாசிக்க காற்று இல்லைதான் போலுள்ளது” என நினைக்க ஆரம்பித்தான். நெஞ்சு படபடத்தது. உடல் வியர்க்க ஆரம்பித்தது. நடக்கையில் மூச்சு விட சிரம்மப்பட்டான். இதற்கு மேலும் நடந்தால், மரணம் நிச்சயம் என எண்ணி அவனும் கீழே இறங்கி விடுகிறான்.

வழிப்போக்கனாய் வந்த மூன்றாவது இளைஞனோ, எந்த வித சலனமும், பதட்டமும் இன்றி உறுதியுடனும் நம்பிக்கையுடனும் மேலே சென்றுக் கொண்டேயிருந்தான். மலை உச்சியை அடைந்து, நீரோட்டத்தையும் கிராமத்து பக்கம் வருமாறு திருப்பிவிட்டு, போட்டியில் வெற்றியும் பெறுகிறான்.

கிராமத்திற்குள் தண்ணீர் சர சரவென பாய்ந்து பெருக்கெடுத்து ஒடி வருகிறது. காய்ந்து போன பூமி உயிர்பித்து எழுகிறது!

மக்களுக்கு மற்றட்ட மகிழ்ச்சி. வழிப்போக்கன் கீழே இறங்கியதும், ஓடிச்சென்று அவனை உற்சாகத்துடன் சூழ்ந்துக்கொள்கின்றனர். அவனை வெகுவாக பாராட்டுகின்றனர். அவனிடம் மலை உச்சியில் நடந்த அனுபவம் பற்றி பல கேள்விகளை ஆர்வத்துடன் கேட்கின்றனர்.

அவனோ கொஞ்சம் கூட சலனமின்றி தான் வந்த குதிரையை நோக்கிச் செல்கிறான்.

அவனது இந்த செயல் கிராமத்து மக்களை கோபமடையச் செய்தது. வெற்றியினால் அவனுக்கு ஆணவம் வந்துவிட்டது. நாம் இத்தனை பேர் கேட்கிறோம், நம்மை கொஞ்சம் கூட மதிக்காமல் செல்கிறானே எனத் திட்டித் தீர்த்தனர்.

அமைதியாக குதிரை அருகில் சென்ற இளைஞன் தான் வைத்திருந்த காகிதத்தில், எதையோ எழுதி அந்த மக்களிடம் காண்பித்தான்.

அந்த காகிதத்தில், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஏனெனில், பிறந்ததிலிருந்து எனக்கு வாய் பேசவும், காது கேட்கும் திறனும் கிடையாது. எனக்கு எந்த பதவியும் பரிசும் வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ததே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறி தன் குதிரையில் ஏறி விடைப்பெற்றுக் கொள்கிறான்.

இந்த கதையை சற்று ஆராய்ந்து பார்த்தால் சில விஷயங்கள் புலப்படும். நம் வாழ்வில் நடந்த மற்றும் நடக்கும் சம்பவங்களையும் இது போல் கதைகளுடனும் தொடர்பு படுத்தி பார்க்கலாம்.

நாம் ஏதாவது புதிய முயற்சி எடுக்கலாம் என நினைக்கையில், நம்மை சுற்றியுள்ள சிலர், “வேண்டாம், அதை செய்யாதே, அது பெரிய ரிஸ்க்” எனக் கூறுவதை பார்த்திருப்போம்.

“ரிஸ்க் என்று சுற்றியுள்ளவர்கள் கூறுவதற்கு, இரண்டு காரணங்கள் உள்ளது. இதுவரை யாரும் அந்த காரியத்தை முயற்சித்ததில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அப்படி ரிஸ்க் என்று சொல்பவர்களுக்கு அந்த காரியத்தை செய்ய முடியாமலோ, செய்வதில் விருப்பம் இல்லாமலோ இருப்பது மற்றொன்று” என்கின்றனர் வெற்றிப் பெற்றவர்கள்.

இத்தனை பேர் சொல்கிறார்களே, நம்மீது உள்ள அக்கரையில் தானே சொல்கிறார்கள், உண்மையிலேயே இது ரிஸ்க் தான் போலுள்ளது என எண்ணி தங்கள் விருப்பத்தை தொடங்காமலேயே பலர் கைவிட்டு விடுவதுண்டு.

இன்னும் மோசமாக, சிலர் தொடங்கிய செயலை சுற்றியுள்ளவர்கள்  சொல்வதால் பாதியில் கைவிட்டு விடுவதுண்டு.

நம் வாழ்வின் அனைத்து முக்கிய முடிவுகளையும் பெரும்பாலும் தீர்மானிப்பது இது போல் சுற்றியுள்ளவர்கலாய் தான் இருக்கின்றனர். அவர்களது நோக்கம் நாம் தோற்று விடக்கூடாது என இருப்பதினால்,  பாதுகாப்பான பாதையிலேயே சென்றுவிட அறிவுரை வழங்குவார்களே தவிர, அந்த பாதை நமக்கு வருமா, பிடித்ததா என்று அவர்கள் பார்ப்பதில்லை.

மத்த எந்த முடிவானாலும் சரி, ஆனால் தொழில் (Career) சம்பந்தப்பட்ட முடிவை மட்டும் யாரிடமும் தராதீர்கள், நீங்களே உங்கள் மனதிற்கு பிடித்தவாறு எடுங்கள் என்கின்றனர் பல துறையில் சாதித்தவர்கள்.

தனக்கு பிடித்த வேலையை செய்வதில் முயற்சி எடுத்து அதனால் தோல்வி ஏற்பட்டால் கூட பரவாயில்லை, ஆனால் பிடித்த செயலை செய்யாமலேயே கடைசி வரை வாழ்ந்து விடுவது தான் உலகிலேயே மிகப் பெரிய ரிஸ்க் என்கின்றனர் சாதனையாளர்கள்.

அதனால் சரியான முடிவை எடுங்கள், சரித்திரம் படையுங்கள். வெற்றி உங்களதே!

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(4)Dislikes(0)
Share

  One Response to “சிகரம் தொடு!”

  1. அருமையான தன்னம்பிக்கைப் பகிர்வு.

    Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share