Nov 112016
 

Art 2

விவசாயிகளின் உற்றத் தோழனான கோவைக்காய்…

கிராமப்புறங்களில் உள்ள ஆறு, குளம், வீடுகளின் பின்புற தோட்டத்தில் தானாக விளைந்து காய்த்து தொங்கும் கோவைக்காய் பார்த்திருப்போம். ஆனால் அவற்றை உணவுக்காக என்றும் தமிழக மக்கள் விரும்பியதில்லை. காய்கள் பழுத்து தொங்கும் போது அதை கல்வீசி பறித்து சிறுவர்கள் சாப்பிடுவார்கள்.

ஆனால் இன்று அந்த கோவைக்காய் தமிழக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவுப் பொருளாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதை சாகுபடி செய்து செம விளைச்சலும், கல்லா நிரம்பும் பணத்தையும் அறுவடை செய்து சந்தோஷத்தில் உள்ளனர் விவசாயிகள்.

காய்கறிகளை சாகுபடி செய்ய பல பட்டங்கள் இருந்தாலும், ஆடிப்பட்டம்தான் உகந்த ஒன்று. ஆடிப்பட்டத்தில் காய்கறி மட்டுமில்ல, வேற எந்தப் பயிர் விளைவித்தாலும் மகசூலுக்கு பாதகம் இருக்காது. இதைதான் நம் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ஆடிப்பட்டத்தில் கோவைக்காய் சாகுபடி செய்து செமத்தியாக வருமானம் பார்த்து வருகின்றனர் விவசாயிகள். இவர்கள் விளைவிக்கும் கோவைக்காய்கள்தான் தமிழகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கிறது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதிகளான தென்பழனி, கே.கே.பட்டி, சுருளிபட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், காலானப்பாடிபட்டி, திருச்சியில் துறையூர், மணச்சநல்லூர், கும்பகோணம் பகுதியில் சில பகுதிகள் என தமிழகத்தின் பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் தற்போது கோவைக்காய் சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

முதலுக்கும் மோசமின்றி அதிக வருவாயையும் அள்ளித் தரும் இந்த கோவைக்காய் தற்போது விவசாயிகளின் நண்பனாகவே மாறிவிட்டது. கோவைக்காய் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டி வரும் சுருளிப்பட்டியை சேர்ந்த விவசாயி தனசேகரிடம் இந்த சாகுபடி பற்றி கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:

ஆரம்பத்தில் 3 ஏக்கர் நிலத்துல வருஷத்துல ஒரு போகம் ஆடிப்பட்டத்துல மட்டும் மானாவாரியா நெல், வேர்கடலை சாகுபடி செய்து வந்தோம். அதுல கிடைக்கிற வருமானமும், அப்பா வைத்திருந்த சிறிய மளிகை கடையின் வருமானமும்தான் குடும்பத்தை பிரச்னை இல்லாமல் ஓட்ட உதவியது.

எனக்கு திருமணம் நடந்த பிறகு, கடன் வாங்கி, 60 அடி ஆழத்துக்கு கிணறு வெட்டினேன். அந்தக் கிணற்றுத் தண்ணீரை வெச்சு தோட்டக்கால் பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். இதன்படி ஆரம்பத்தில் ஒரு போகம் நெல், கத்திரி, வெண்டைக்காய் சாகுபடி செய்தேன்.

அப்போதுதான் இப்பகுதியை சேர்ந்த வேளாண் அதிகாரிகளை சில சந்தேகங்களுக்காக சந்தித்த போது அவர்கள் கோவைக்காய் சாகுபடி பற்றியும், அதற்குள்ள வியாபாரம் பற்றியும் விளக்கி சொன்னார்கள். சரி இதை செய்து பார்க்கலாம் என்று 50 சென்ட் நிலத்துல கோவைக்காய் கொடிகளை நட்டு, பந்தலும் போட்டேன்.

இயற்கை விவசாய முறைப்படி ரசாயன உரங்கள் இன்றி முறையா பாரமரிப்பு செய்ய நல்ல விளைச்சல். அதிகாரிகளின் ஆலோசனையின் படி நேரடியாக காய்கறி விற்பனை நிலையத்துக்கு விற்க நல்ல லாபம் கிடைச்சது.

அதற்கு பிறகு எனக்கு கோவைக்காய் சாகுபடியே முதன்மையானதாக மாறிவிட்டது. இப்போ 2 ஏக்கரில் கடந்த பல வருடமாக கோவைக்காய் சாகுபடி செய்றேன். வருமானத்தை அள்ளித் தருகிறது. கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்துக்கிட்டு போறாங்க…என்று சந்தோஷமாக கூறினார்.

கோவைக்காயை தமிழக மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் பெரிய ஓட்டல்களில் கூட கோவைக்காயை சமையலில் சேர்ப்பதால் விற்பனை வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம்.

இந்த கோவைக்காயை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ரூ.55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கொடி வளர்ந்த 90 நாட்கள் பின்னர் 10 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றரை ஆண்டுகளுக்கு காய் பறிக்கலாம். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தினால் 30முதல் 35டன் வரை காய்கள் பறிக்க முடியும். செலவு போக ரூ.5 லட்சம் வரை லாபம் ஈட்ட முடிகிறது என்று சொல்கின்றனர் விவசாயிகள்.

கோவைக்காய் சாகுபடி குறித்து வேளாண் அதிகாரி சாம்பசிவம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். சாகுபடி முறைகள் குறித்து அவர் விளக்கமாக கூறினார்.

ஒரு முறை நடவு செய்யும் கோவைக்காய் செடிகளை, மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். வடிகால் வசதியுடன் கூடிய செம்மண், மணல்சாரி, லேசான களிமண் ஆகிய மண்வகைகள் கோவைக்காய்க்கு ஏற்றவை.

சித்திரை மாதத்தைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்யலாம். ஆனால், ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 2 டிப்பர் எருவைக் கொட்டிக் கலைத்துவிட்டு, மூன்று சால் உழவு செய்து, நான்கு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு முளைத்து வரும் களைகள் நீங்கும் அளவுக்கு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பின்னர் 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் கிழக்கு-மேற்காக வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலில் 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து… ஒவ்வொரு குழியிலும், இரண்டு கிலோ எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூடி, மூன்று அல்லது நான்கு கோவைக்காய் கொடித் தண்டுகளை நடவு செய்ய வேண்டும்.

விதைக்கான கொடித் தண்டுகளைத் தேர்வு செய்யும்போது இரண்டு முதல் இரண்டரை வயதுள்ளவையாக இருக்க வேண்டும். தரையில் இருந்து அரை அடி உயரத்துக்கு மேல் இருக்கும் கொடிகளாகப் பார்த்து, அரை அடி துண்டுகளாக வெட்டி, அவற்றை சாணிப்பாலில் நனைத்து நடவு செய்ய வேண்டும் (ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சாணியை, 30 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்).

நடவு செய்த பிறகு குழிகள் மீது வைக்கோல் கொண்டு மூடாக்குப் போட்டு உயிர்த் தண்ணீர் கொடுக்க வேண்டும். மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஏற்ப 5 நாட்கள் வரை ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பின்னர் பாசன இடைவெளியைக் கூட்டிக் கொள்ளலாம். சாதாரண முறையில் பாசனம் செய்வதைவிட, சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது மிகவும் நல்லது. நான்கு நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் மற்றும் அமுதக்கரைசல் ஆகியவற்றை மாற்றி மாற்றி தண்ணீரில் கலந்து விட வேண்டும்.

15-ம் நாளில் கொடிகள் துளிர்விட்டு வைக்கோலுக்கு வெளியே தெரிய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் வைக்கோலை அகற்றி விட வேண்டும்.
ஆறடிக்கு ஆறடி இடைவெளியில் ஐந்தரை அடி உயரத்தில் மூங்கில் கொம்புகளையோ அல்லது கல் தூண்களைக் கொண்டோ பந்தல் அமைக்க வேண்டும்.

20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் செடியை ஒட்டி குச்சி ஊன்றி, கொடிகளைப் பந்தலில் ஏற்றிவிட வேண்டும். 60-ம் நாளில் கொடிகள் படர ஆரம்பித்து, 70-ம் நாள் முதல் காய்க்க ஆரம்பிக்கும்.

80-ம் நாள் முதல் தொடர்ச்சியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்களில் மகசூல் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவைக்காயை பொறியல் மட்டுமின்றி, கோவைக்காய் சில்லி, வறுவல், கூட்டு, சாம்பார் என பலவகையிலும் சமைக்கின்றனர். ஒரு சில இடங்களில் கோவைக்காயை நீளமாக நறுக்கி பஜ்ஜியாகவும் போட்டு விற்பனை செய்கின்றனர்.

– நாகராஜன், தஞ்சாவூர்

Like our FB page for regular feeds  https://www.facebook.com/bpositivenews

Likes(1)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share