Nov 112016
 

5

நீ “சுனாமி”ன்னா… நான் காத்து நிற்கும் அரண்டா என்று கபாலி ஸ்டைலில் கம்பீரமாக மக்களை பாதுகாக்கும் இந்த காடுகளை, காப்பாற்றுவதும், பராமரிப்பதும் அரசின் வேலை மட்டும் இல்லை, மக்களாகிய நம் பங்கும் முக்கியம். அந்த காடுகள் எந்த காடுகள் என்று தெரியுங்களா? தெரிஞ்சுக்கிறீங்களா?

வாங்க… சுனாமியையே சுண்ணாம்பாக்கும் அந்த காடு பற்றி அறிவோம். மாங்குரோவ் காடுகள்தான் அவை. இதற்கு அலையாத்திக்காடுகள் என்ற பெயர் உண்டு. மாங்குரோவ் என்றாலும் கூட யோசிப்பவர்கள் அலையாத்திக்காடுகள் என்றால்… அட நம்ம முத்துப்பேட்டை காடுதானே என்று சொல்வார்கள்.

அந்தளவிற்கு இந்த காடுகள் பிரபலம் அடைய முக்கிய காரணகர்த்தா தமிழகத்தை தாக்கிய சுனாமிதான். கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி யாராலும் மறக்கமுடியாத சோகப்பதிவேடு. வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பதிவாக காரணமாக இருந்த சுனாமி முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை கண்டு மிரண்டது.

நாகையின் பல பகுதிகள் பாதிப்புகளை சந்தித்த போதும் முத்துப்பேட்டை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட காரணமாக இருந்தது அலையாத்திக்காடுகள்தான். அலையாத்திக்காடுகள் என்பது மருவி அழைக்கப்படும் வார்த்தை. உண்மையில் இந்த காடுகள் அலைகளின் வேகத்தை ஆற்றி (ஆசுவாசப்படுத்தி, அமைதிப்படுத்தி) திருப்பி அனுப்பும் செயலை செய்யும் திறன் வாய்ந்தவை. அதனால்தான் அலையாற்றிக்காடுகள் என்று அழைக்கப்பட்டவை

காலப்போக்கில் மருவி அலையாத்திக்காடுகள் என்று கூப்பிடப்படுகின்றன. இதுபோன்ற மரங்களை வேறு எங்கும் காண இயலாது. இதன் வேர்கள் தண்ணீரில் வளரும். இவற்றுக்கு தண்ணீரில், நிலத்திலும் ஆக்சிஜனை இழுத்து கொள்ளும் வகையில் வேர்களை இயற்கை வரப்பிரசாதமாக அளித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் பிச்சாவரத்திலும்… அடுத்த பெரிய அளவில் முத்துப்பேட்டை பகுதியிலும் தான் இந்த அலையாத்திக்காடுகள் உள்ளன. இவை சுனாமி மட்டுமின்றி, பெரும்புயல்களையும் தடுக்கும் திறன் கொண்டவை.

மக்களுக்கு பெரிய அளவில் அரணாகவும், வெளி நாட்டு பறவைகளின் விருப்பத்திற்கு உரிய இடமாகவும் விளங்கும் இந்த காடுகளின் இன்றைய நிலை… கண்ணில் கண்ணீரை… இல்லை… இல்லை… ரத்தத்தையே வரவழைத்துவிடுகிறது.

தமிழகத்தில் கோடியக்கரை தொடங்கி மரவக்காடு வரை தன் அன்புக்கரங்களை நீட்டியுள்ளது அலையாத்திக்காடு. இவை நன்னீரும், உப்பு நீரும் கலக்கும் கடல் முகத்துவாரத்தில் வளரும் தன்மை கொண்டவை.

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கோரையாறு, பாமணி ஆறு ஆகியவை கடலில் கலக்கும் இடத்தில்தான் இவை அதிகளவில் உள்ளன. மண் அரிப்பை பெருமளவில் தடுக்கும் திறனும் இந்த வகை காடுகளுக்கு உள்ளது.

நீண்டு கிடக்கும் இந்த மரங்களின் வேர்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு தகுந்த இடமாக விளங்குகிறது. மீன் உற்பத்தியை பெருக்குவதிலும் இந்த மரங்கள் முன்னணியில் உள்ளன. தென்னகத்து ராம்சார் என்று இதை அழைக்கின்றனர்.

அதாவது மீன்களின் உற்பத்தி நிலையமாகவே இந்த காடுகள் விளங்குகின்றன. இதனால் சீசன்களில் வந்து சேரும் வெளிநாட்டு பறவைகளின் விருப்ப இடமாக இந்த அலையாத்திக்காடுகள் அமைந்திருந்தன.

அலையாத்தி மரங்களில் கூடு அமைத்து அதன் வேர்களில் மீனை உண்டு தங்களின் இனப்பெருக்கத்தை வளர்த்து வந்த வெளிநாட்டுப்பறவைகள் இப்போது இந்த பக்கம் தலையை கூட ஏன் இறக்கையை கூட காட்டுவதில்லை.

காரணம் வேறு யார்? நாம்தான். இந்த காடுகள் இயற்கை அரணாக அமைந்துள்ளன. இவற்றை இப்படியே விட்டு வைத்தாலே போதுமே. ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இங்கு இயக்கப்படும் மோட்டார் படகுகளின் அதீத சப்தம் வெளிநாட்டு பறவைகளை ஒரு பக்கம் அச்சப்படுத்தி வருகையை குறைத்தது என்றால்… சுற்றுலாவாக வரும் மக்கள் செய்யும் சேட்டைகள் மேலும் வேதனையில் ஈட்டி… இல்லை… சூலாயுதத்தையே பாய்ச்சுகிறது.

எப்படி தெரியுங்களா? வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப்பண்டங்கள் சுற்றிய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றுப்பகுதியிலும், கடல் முகத்துவாரத்திலும் வீசி எறிகின்றனர். இதை உணவு என்று நினைத்து தின்னும் மீன்கள் பாதிக்கப்பட அவை மலட்டுத்தன்மைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

மீன்பாடு குறைந்தால் பறவைகளுக்கு ஏது உணவு? இதனால்தான் வெளிநாட்டு பறவைகள் வரத்து வெகுவாக… குறைந்து… றைந்து… ந்து… து… போய்விட்டது. ஒரு பக்கம் இப்படி என்றால் மறுபக்கம்… இப்பகுதியில் உள்ள இறால் வளர்ப்பு குட்டைகள் இந்த பகுதியை நாசப்படுத்தி வருகின்றன.

இறால் குட்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த நீர் கடல் முகத்துவாரப்பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை அழிக்கிறது. இதனால் மீன்கள் அதிகளவில் இறப்பை சந்திக்கின்றன. இப்படி இயற்கை அரணாக மக்களை பாதுகாத்து வரும் அலையாத்திக்காடுகளால் பல்வேறு பயன்கள் இருந்தாலும் அவற்றை அழிப்பதில்தான் நம்மவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

வருமானத்தையே குறியாக கொண்டு இயற்கையை நாம் அழிக்க அழிக்க நம்முடைய அழிவும் சேர்ந்து உருவாகிறது என்பதை என்று அறிவீர்கள். இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வும்… நம் வாழ்வும் எத்தனை வித்தியாசங்களை கொண்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த அலையாத்திக்காடுகள் ஒரிசா உட்பட பல பகுதிகளில் காணப்பட்டன. ஆனால் அவை அழிவை சந்தித்ததால்தான் ஒரிசா பல வகையிலும் இயற்கையின் சீற்றத்தில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தமிழகத்தில் ஒருங்கிணைந்த நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கும் தேவையா…?

இந்த காடுகளை பராமரிக்கவும், இவற்றின் பரப்பளவை அதிகரிக்கவும் கனடா, ஜப்பான் உட்பட பல வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி சென்ற இடம் தெரியாத நிலை.

இவற்றை முறையாக பயன்படுத்தி இருந்தால் அலையாத்திக்காடுகளின் பரப்பளவு இன்னும் அதிகரித்து இருக்கும். இப்போது அலையாத்திக்காடுகள் வளர்ச்சி குறைந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் பூமி அதிர்வால் அச்சப்பட்டு வருகிறது.

மீண்டும் ஒரு சுனாமி உருவானால் அதை தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பதுதான் உண்மை. ஒரு பக்கம் ஓசோனில் நாம் போட்ட ஓட்டையால் தற்போது சூரியனின் அதிகளவு உஷ்ணம் நம்மை வறுத்தெடுத்து வருகிறது.

இப்படி இயற்கை நமக்கு அரணாக இருக்கிறது. நாம் அதற்கு அரணாக மாறினால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும். செய்வோமா? செய்தால்தான் நன்று.

N.நாகராஜன், தஞ்சாவூர்

Like our FB page for regular feeds  https://www.facebook.com/bpositivenews

Likes(2)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share