Oct 142016
 

Spl 3

உறுதியான உடலும், தளராத மனமும் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் முறையான உணவு பழக்கம், இவர்களை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக மாற்றி இருந்தது.

நாகரீகம் என்ற பெயரில் நாம் சமைக்கும் பாத்திரத்தில் ஆரம்பித்து உணவையும் மேற்கத்திய நாகரீகத்திற்கு மாற்றி கொண்டதால் ஏற்பட்ட வினை இன்று நமக்கு வரும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.

இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. இது உண்மைதான் என்று உரக்கவே சொல்கிறார் அரசு டாக்டர் சிவக்குமார். அவர் கூறிய தகவல்கள் அப்படி தந்துள்ளோம்.

40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். ஆனால் இப்போது 30திலிருந்து 35 வயது வரை உள்ளவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் சரியான உடலுழைப்பு இல்லாததும், மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமுமே காரணம். இப்படி எலும்பு தேய்மானத்தால் முதலில் பாதிக்கப்படுவது கால்கள்தான்.

அதிலும் மூட்டு வலி வந்து விட்டால் 30 வயதுக்காரர்களும் 60 வயது முதியவர்கள் போல்தான். இந்த மூட்டு வலிக்கு எளிமையான மருந்தை நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

இந்த கீரைக்கு இந்த பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுங்களா? கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கீரையை இப்போது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். இதன் பலன் தெரியாமலேயே இதை முடக்கி விட்டோம். ஆனால் காலத்தின் சுழற்சியால் இப்போது முடக்கத்தான் கீரையை தேடிப்பிடித்து சாப்பிடும் நிலையில் உள்ளனர் மக்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

இந்த கீரை புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது. இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தருகிறது.

வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி பஞ்சாய் பறந்து விடும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர கால் மூட்டு வலி வராது.

இப்படி அற்புதமான மூலிகை போல் செயல்படும் முடக்கத்தான் கீரை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ்சுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் சிறப்புக் குணம்தான் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதே போல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலிலே விட்டு விடுகிறது.

இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது. இதனால்தான் அந்த காலத்திலேயே தினம் ஒரு கீரை என்று சாப்பிடடு வந்த நம் முன்னோர்கள் முடக்கத்தான் கீரைக்கும் முக்கிய இடம் அளித்திருந்தனர்.

கடினமான உழைப்பை கொடுத்த அவர்களுக்கு எலும்பு தேய்மானத்தை தடுத்தது இந்த முடக்கத்தான் கீரைதான். சாதாரணமாக தண்ணீர் உள்ள இடத்தில் பரவலாக இந்த முடக்கத்தான் கீரை வளரும். அந்த காலத்தில் வீட்டின் பின்பக்கத்தில் அதிகளவில் இந்த கீரை வளர்ந்துள்ளது.

இன்றும் கிராமப்பகுதியில் இந்த கீரையை வளர்த்து உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த கீரையை எப்படி பயன்படுத்தலாம் என்கிறீர்களா? முடக்கத்தான் கீரையை பறித்து சுத்தம் செய்து அரைத்து தோசை மாவில் கரைத்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்.

இந்த கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. இதனால் இதில் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும் என்பதையும் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி என அனைத்து வலிகளும் விட்டு விலகி ஓடிவிடும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணாப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரிகிறது.

முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்.
கீரையைச் சாறு எடுத்து சூப்பாகச் சாப்பிடுவது பயன் தரும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாக முடக்கத்தான் கீரை உள்ளது.

தற்போது தமிழகத்தில் பல பிரபலமான ஓட்டல்களில் முடக்கத்தான் தோசை பிரபலம் ஆகி வருகிறது. இப்படி உணவுக்கு உணவாகவும், உடலை காக்கும் மருந்தாகவும் உள்ளது முடக்கத்தான் கீரை.

– N.நாகராஜன், தஞ்சாவூர்

Likes(2)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share