Oct 142016
 

RB

கல்லூரியில் எங்களுடன் பொறியியல் படித்த நெருங்கிய நண்பருக்கு IITயில், டிசைன் பிரிவில் மேல் படிப்பு படிக்க ஆர்வம் வந்தது. டிசைனில் ஈடுபாடு இருந்தும், படங்கள் வரைவதில் அவருக்கு அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும் டிசைன் பிரிவாயிற்றே, நேர்முகத் தேர்வின் போது ஏதேனும் படத்தை வரைய சொல்லி கேட்கலாம் என எண்ணி தன் வீட்டினுள் சுற்றி பார்த்திருக்கிறார். மேசை மீதுள்ள தொலைபேசி கண்ணில் படவே, அதையே வரைந்து பழகியுள்ளார். என்ன ஆச்சரியம்! நேர்முகத் தேர்வில் இவரை, தொலைபேசி படத்தை வரைய சொல்லிக் கேட்டுள்ளனர். அட்டகாசமாக வரைந்து, IIT யில் நுழைவும் பெற்று விடுகிறார்.

அடுத்ததாக, இன்னொரு முக்கிய நிகழ்வு. கோயமுத்தூர் ஆணையர் திரு.விஜய் கார்த்திகேயன் சமீபத்தில் நடந்த ஒரு கூடுதலில், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்றதை பகிர்ந்துக்கொள்ளும் போது, ஒரு அருமையான சம்பவத்தை நினைவுக் கூர்ந்தார். ஒருநாள் அவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார், அப்போது சில வண்டிகளில் Bharat Stage என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதைக் கண்டு, அது என்ன என்ற விவரத்தை சேகரித்தார். அது காற்று மாசுப்படுவதை தடுக்க ஏற்படுத்தியுள்ள Emission Standards என்பதை தெரிந்துக்கொள்கிறார். அதிர்ஷ்ட வசமாக, அவர் சிவில் சர்விஸ் எழுதிய அந்த வருடம் Bharat Stage குறித்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நிகழ்வும் உணரத்துவது ஒரு விஷயத்தை தான். நம் மனது ஆழமாக ஒரு செயலில் வெற்றிப் பெற்று விடுவோம் என நம்புகையில் நமக்கே தெரியாத வகையில், சுற்றியுள்ள சில விஷயங்களை நாம் எதேச்சையாக கவனிக்க (observe செய்ய) நேரும். இந்த observation power மூலம் வெற்றிக்குத் தேவையான சின்னஞ்சிறு முக்கிய தகவல்களும், யோசனைகளும் நம்மை தானாகவே வந்து சேரும்.

நம்பிக்கையின் சக்தி அத்தகைய பெரியது. நடக்கவே முடியாது என உலகமே ஒதுக்கி விட்ட ஒரு விஷயத்தை தன் அசாத்திய நம்பிக்கை மூலம் நடத்திக் காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ரோஜர் பானிஸ்டரின் வாழ்வை இதற்கு ஒரு பெரிய உதாரணமாக பலர் காண்கின்றனர். இவரது வெற்றிப் பயணம் தோல்வியினால் துவண்டு கிடக்கும் எந்த மனிதனையும் தூண்டி விட்டு ஓட வைக்கும். எத்தனை சவால்கள் வந்தாலும் சாதிக்க துடிப்பவர்களுக்கு, இவரது வாழ்க்கை ஒரு உதாரணமாகவும் உற்சாக டானிக்காகவும் அமைந்துள்ளது.

இவரது சாதனையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள சுமார் 60 வருடங்கள் பின்னோக்கி செல்வோம்.

ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் எந்த ஒரு மனிதனாலும் ஓடி கடக்க இயலாது என்ற ஒரு கூற்று பல வருடங்களாக ஓட்டப்பந்தய உலகத்தில் அசைக்கமுடியாத சவாலாக இருந்தது. இந்த வேகத்தில் ஓடினால் மன அழுத்தத்தில் உடல் நிலைகுலைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை வரும் என ஓட்டப்பந்தய வீரர்களும், வல்லுநர்களும், ஆராய்ச்சியாளர்களும் எண்ணினர்.

“அனால் இந்த கூற்று உண்மையில்லை, என்னால் இந்த சவாலை உடைக்க முடியும்” என தன்னை முழுமையாக நம்பி 1954 ஆம் ஆண்டு அந்த சாதனையை படைத்தார் ரோஜர் பானிஸ்டர். அது மட்டுமல்லாது நான்கு நிமிடங்களில் ஒரு மைல் தூரத்தை ஓடி அடைந்த உலகின் முதல் மனிதர் என்ற பேரும் பெற்றார்.

சிறு வயதிலேயே மருத்துவராக வேண்டும் என கனவு கண்ட பானிஸ்டர், நலிந்துள்ள  தன் குடும்ப பொருளாதார சூழ்நிலையினால், தனது பெற்றோர்கள் தன்னை மருத்துவம் படிக்க வைக்கமாட்டார்கள் எனப் புரிந்துக்கொண்டார்.

வேறு வழியில்லை தன் கனவை விட்டுவிட வேண்டியது தான் என அவர் நினைக்கையில், தன்னுள் ஒரு ஓட்டப்பந்தய வீரன் ஒளிந்துள்ளான் என உணர்ந்தார். அந்த திறமை மூலம் பல போட்டிகளில் வென்று, விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப் மூலம் oxford பல்கலைகழகத்தில் நுழைந்தார்.

Oxford பல்கலைகழகத்தில் உள்ள பலர், அவர் ஓடும் திறமையைக் கண்டு, 1500மீட்டர் பந்தயத்தில் அவருக்கு வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது என, 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் தன் படிப்பைத் தொடர வேண்டும் எனக் கூறி அந்த ஆண்டின் ஒலிம்பிக்ஸ் வாய்ப்பை நிராகரிக்கிறார் பானிஸ்டர்.

படிப்பு முடித்தவுடன் 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில், தீவிர பயிற்சிகளுடன் 1500மீட்டர் பந்தயத்தில் களம் இறங்கினார். கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என மக்களின்  எதிர்பார்ப்பு இவர் மீது அதிகமாக இருந்தது. ஆனால் அந்த போட்டிகளில் நான்காம் இடத்தை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது.

பிரிட்டன் நாட்டின் பிரஸ்களும், அவர் எதிர்ப்பாளர்களும் அவரின் தோல்வியை கண்டு எள்ளி நகையாடினர். நான்கு ஆண்டு முன்னரே, வாய்ப்பு நன்றாக இருந்தது, அப்போதே  போட்டியில் கலந்திருந்தால் பதக்கம் வென்றிருக்கலாம் என பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். வெறுப்பின் உச்சம் ஒருபுறம். மீண்டும் ஓடலாமா அல்லது ஓட்டத்திற்கே முழுக்கு போட்டு விடலாமா என்ற குழப்பம் மறுபுறம்.

இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவருவதற்கே சுமார் இரு மாதம் காலம் தேவைப்பட்டது பானிஸ்டருக்கு.

ஆனால் தெளிவாக, பிரம்மாண்டமான கனவுடன் மீண்டு வந்தார். தன் உண்மையான திறமையை தனக்கும் உலகிற்கும் நிருபிக்க இன்னும் பெரிய இலக்கை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்தார். அதுதான் நான்கு நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையை புரிய அவருக்கு உதவியது.

இது அடையக்கூடிய இலக்கு இல்லை என்பது மட்டுமில்லை, அபாயகரமானது கூட எனவும் பலர் எச்சரித்தனர். ஆனாலும் உறுதியுடன் தன்னம்பிக்கையுடனும் பயிற்சியில் இறங்கினார். அவரது தீவர நம்பிக்கை வீணாகவில்லை. அவரது விடாமுயற்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. தன் லட்சியத்தின் வாயில் கதவை அடைந்துவிட்டதைக் காணத்தொடங்கினார்.

கடைசியாக அந்த நாளும் வந்தது. 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி நடைப்பெற்ற ஒரு போட்டியில் அந்த அற்புதச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பானிஸ்டர்.  3 நிமிடங்கள் 59 நொடிகளுக்குள் ஒரு மைல் தூரம் ஒடி உலக சாதனை படைத்து பலரை வியப்பில் ஆழ்த்தினார்.

முடியவே முடியாது என உலகம் ஒதுக்கிப் போட்ட ஒரு இலக்கை ஆழ்ந்த நம்பிக்கையின் மூலமும், தீவிர முயற்சியின் மூலமும் சாதித்த இவரை முன்னோடியாக வைத்து, “ஆம், இந்த இலக்கு சாத்தியம் தான்” என இவருக்கு பின் மேலும் பலர் இந்த சாதனையை செய்து முடித்துள்ளனர்.

இந்த செயல் நடக்காது என்று எப்போது எதிர்மறையாக நம்புவதை நிருத்துகிறோமோ, அப்போதே அது சாத்தியாமாக தொடங்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நம்பிக்கை தான் பல அரும்பணிகளின் ஆணி வேராக இருக்கிறது.

ஒரு செயல் கண்டிப்பாக முடியும் என நீங்கள் நம்புகிறபோதும், அந்த செயலையே ஒவ்வொரு தருணமும் முழு மனதோடு எண்ணிக் கொண்டிருக்கையில், அந்த அற்புதம் நிகழ்கிறது, வெற்றிக் கதவை நீங்கள் திறக்கின்றீர்கள். மருத்துவ உலகம் இதை RAS (Reticular Activating System) எனப்படும் மூளை சம்பந்தப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் விளைவு என்கின்றனர்.

“ஆழமான காரணம் (Purpose), தெளிவான இலக்கு, அதை அடைந்தே தீரும் தீவிர நம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் எத்தகைய சாதனைகளையும் புரிந்து விடலாம். இந்த நம்பிக்கையின் மூலம் RAS System வெற்றி பெற தேவையான எண்ணம், தேவையற்ற எண்ணம் என பிரித்து, நமது எண்ணங்களை ஒருமித்து, நம்மை கவனத்துடன் செயல் பட வைக்கிறது” என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.

இந்த சக்தி தான் மேலே குறிப்பிட்டதைப் போல், நம்மைச் சுற்றியுள்ள வெற்றிக்குத் தேவைப்படும் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும், உணர்வுகளையும் நம்மை கவனிக்க வைத்து, சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

அதே நேரத்தில் நம்பிக்கையில்லாது ஒரு செயலில் ஈடுபட்டோம் என்றால், வெற்றிக்குத் தேவையான சின்னஞ்சிறு முக்கியத் தகவல்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

அதனால் வென்றிடுவோம் என ஆழமாக நம்பிக்கை வையுங்கள், சாதித்து காட்டுங்கள். வெற்றி உங்களுடையதாகட்டும்!!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

(To follow us, LIKE our FB Page https://www.facebook.com/bpositivenews)

Likes(6)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share