Oct 142016
 

4

சென்னையில் 2009ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு, யு.கே நாட்டில் MBA, பின் 9 வருடங்கள் ஐடி துறையில் பிசினஸ் இதெல்லாம் முடித்து விவசாயத்தில் நுழைந்து உள்ளார் திரு.ஸ்ரீராம் அவர்கள்.

Future Farms என்ற நிறுவனத்தை தொடங்கி, Hydroponics  என்ற நவீன தொழில்நுட்ப  விவசாயம் செய்து, அதன் மூலம் நல்ல உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறார். இவரை சென்னை பெருங்குடியில் உள்ள இவரது தோட்டத்திற்குச் சென்று நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்திற்காக சந்தித்து பேட்டி எடுத்தோம்.

வணக்கம் ஸ்ரீராம், விவசாயம் ஆர்வம் எவ்வாறு வந்தது?

சுமார் பத்து வருடங்களாக வியாபாரம் செய்து, அதில் முன்னேற்றம் கண்டு வந்தாலும் ஏதோ முழு திருப்தி இல்லாத நிலை இருந்தது. உண்மையான சாதனை ஏதும் நாம் செய்யவில்லை என்ற எண்ணம் நிலவியது. Real life problem ஏதேனும் ஒன்றை கையில் எடுத்து அதில் வேலை செய்யலாம் என்று தேட ஆரம்பித்த போது, Hydroponics என்ற தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் U-Tube இல் கிடைத்தன.

மண்ணே இல்லாது செய்யப்படும் இந்த விவசாய முறையைப் பார்த்து மிக ஆச்சரியமாக இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் சில இடங்களில் மட்டும் செய்கிறார்கள். இந்தியாவில் யாரும் செய்யாத நிலை. ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆரம்பித்தோம். பின்னர் இதுவே Future Farms என்ற நிறுவனமாக மாறியது.

Hydroponics விவசாய முறை பற்றி?

சுருக்கமாக சொன்னால், இது ஒரு Integrated Urban Farming எனலாம். உரமற்ற முறையில் உயர் தர செடிகளை, காய் கனிகளை பைப்புகளில் தயாரிக்கும் ஒரு அறிவியல். இம்முறையில் உரம் மண்ணில் போடாமல், தண்ணீரில் கலக்கப்படுகிறது.

இந்த முறைக்கு சரியான அளவில் காற்று, தண்ணீர், சூரிய ஒளி, ஊட்டச்சத்து இருந்தால் போதும். வீடுகளில், மாடியில், பாலைவனத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். சுமார் 80% வரை நீரை சேமிக்கலாம். மண் இல்லாததால், பூச்சிகள் வராது. அதனால் பூச்சிக்கொல்லி கிடையாது. தொழில்நுட்பம் மூலம் மின்சக்தி தேவையையும் சிக்கனமாக செலவு செய்ய முடிகிறது. வருங்காலங்களில் சூரிய ஒளி இதற்கு பயன்படும்.

பாதுகாப்பான சுத்தமான பயிர்வகை கிடைக்கும். நான்கு ஏக்கரில் வளர்க்க வேண்டிய செடிகளை இந்த முறை மூலம் ஒரு ஏக்கரிலேயே வளர்க்க முடியும். நான்கு மடங்கு வேலையாட்கள் தேவை குறையும். இம்முறையில் ஆற்றலும், திறனும் அதிகம்.

இந்த துறையில் சில ஆராய்ச்சிகளும் செய்து வருகிறீர்களே?

ஆம், எங்கள் ஆராய்ச்சி நிலத்தில், நாம் தொலைத்த மனிதர்களுக்குப் பயனுள்ள செடி வகைகள், கீரைகள், உணவு பயிர் வகைகளை தேடி அதை வளர்த்து வருகிறோம். ஒவ்வொரு விதமான விதையையும் எடுத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ள சூழ்நிலையில் எவ்வளவு அதிகமான மகசூலை பெற முடியும் என புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம். உதாரணமாக, இந்தப் பருவநிலையில், இந்த விதையை உபயோகித்தால், இவ்வளவு அறுவடை இருக்குமென எங்களால் உறுதியாக கூற முடியும்.

தோட்டத்தில் நீங்கள் வைத்துள்ள Controller வேலை செய்யும் முறைப் பற்றி..

விவசாயப் பின்னணி இல்லாத ஒருவர் கூட இம்முறையில் செய்யுமளவிற்கு இதை வடிவமைத்துள்ளோம். நாங்கள் பயன்படுத்தும் Sensor தண்ணீர், வெப்பம் உரம் அளவு எவ்வளவு உள்ளது என தெரிவித்துவிடும். இவை அனைத்தையும் இந்த Controller கணக்கிட்டு  தேவையான நீரையும், உரத்தையும் எடுத்துக்கொள்ளும்.

தனிநபர்கள் இந்த விவசாய முறையை அவர்கள் வீட்டில் செய்யலாமா?

கண்டிப்பாக முடியும், அவர்களுக்குத் தான் சிறு சிறு Kits விற்கிறோம். IFCA (Indian Federation of Culinary Association) ஒரு சர்வே எடுத்தார்கள். அதில் நாம் அதிகம் உட்கொள்ளும் புதினாவும் கொத்தமல்லியும் தான் அதிகம் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர். இந்த  முறையில் வீட்டு மாடியிலும், பால்கனியிலும் இம்மாதிரி சின்னஞ்சிறு செடிகளை, கீரை வகைகளை வளர்க்கலாம்.

இந்த முறைக்கு முதலீடு எவ்வளவு இருக்கும்?

கீரைகள் போன்ற இலைகள் உள்ள செடி வகைகளுக்கு ஆயிரம் சதுர அடியில் செய்வதற்கு ஆரம்ப முதலீடு மூன்று முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை ஆகும். Turnkey போன்று இந்த தோட்டத்தை முழுவதுமாக நாங்களே தொடக்கம் முதல் முடிவு வரை வைத்து கொடுத்து விடுவோம். மாதாமாதம் ஆகும் பராமரிப்பு செலவு மிகக் குறைவு.

தினமும் களை எடுக்க வேண்டும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாததால் வயதானவர்கள் கூட இந்த தோட்டத்தை கவனித்துக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தால் ஆரம்ப கால முதலீடு சற்று அதிகம் இருப்பதால், விலை உயர்ந்த, தரம் அதிகம் தேவைப்படுகிற செடி வகைகளை வளர்ப்பது நல்லது. எப்படியும் குறைந்தது இரண்டே ஆண்டுகளில் நாம் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து விடலாம்.

விவசாயத்தின் எதிர் காலம் எப்படியுள்ளது? அடுத்த தலைமுறை விவசாயிகள் தொழில்நுட்ப பின்னணியில் உள்ளவர்களாய் இருப்பார்களா?

நிறைய வாய்ப்புகள் உள்ளது. எங்கள் விவசாய முறையிலேயே வேதியியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ், தானியங்கி முறை (Automation) என அனைத்தும் உள்ளது. பாரம்பரிய விவசாயிகள் அவர்கள் செய்யும் முறையை தொடர்ந்து கடைபிடிக்கலாம். எதிர்காலத் தேவை அதிகம் இருப்பதால், புது முறை விவசாயமும் தேவை. புதிய உக்திகளும் கண்டுபிடிப்புகளும் அவசியம். அப்போது தான் தேவைகளை சமாளிக்க முடியும்.

2050 இல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும். விலை நிலமும் நீரின் அளவும் குறைந்துக்கொண்டே வருவதால் இது போன்ற புதிய விவசாய முறையும் (Integrated Urban Farming) தேவைப்படுகிறது.

இந்த முறையை ஆரம்பிக்கையில் எந்த மாதிரி சவால்களை சந்தித்தீர்கள்?

நம் நாட்டில் புதிய முயற்சி என்றாலே பெரிய சவால் தான்.

“நம்மூர் மக்களுக்கு தரத்திற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், விலை குறைவாக இருக்க வேண்டும் அது தான் பலர் இங்கு விரும்புவார்கள்” என்றெல்லாம் சிலர் ஆரம்பத்தில் கூறினர். இது உண்மை கிடையாது. பல மக்கள் பிராண்டட் (Branded) பொருள்களை தேடிப் போகிறார்கள். பிராண்டைத் தேடி போவது எதற்கு, தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே? அந்த தரத்தை தேடும் மனிதர்களை அடைந்தாலே போதும். எங்களது ஆரம்ப கால சவால் இதுவாகத் தான் இருந்தது. அதனால் எண்ணிக்கைக்கு (Quantity) முக்கியம் தராமல் தரத்திற்கு (Quality) முக்கியம் தரலாம் என்றே முடிவெடுத்தோம்.

நிதியுதவிக்காக யாரிடமும் செல்லவில்லை. முக்கிய குழுவில் பன்னிரண்டு பேர் உள்ளோம். எங்களது சுய முதலீட்டில் தான் செய்யத் தொடங்கினோம். பயிற்சி தருவது, இந்த Kits களை விற்பது இவைகளை வைத்து தினசரி செலவுகளை பார்த்துக்கொள்கிறோம்.

நல்லபடியாக சென்ற வியாபாரத்தை விட்டுவிட்டு விவசாயித்தில் வந்து  கஷ்ட்டப்படுகிறோமே என்று எப்போதாவது தோன்றியதா?

அதுமாதிரி இல்லை. அது தவறும் கூட. இறங்கும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம். இறங்கிய பின் கூடாது. Plan B, Plan C என்றெல்லாம் இருக்க கூடாது. திட்டமிட்ட செயல் நடக்கும் அல்லது நடக்காது என்ற தெளிவு வேண்டும். நடுவில் குழம்பிக் கொண்டிருந்தால் தான் பிரச்சினை. சிலர் செல்லும் பாதையில் சிரிய தடங்கள் வந்தாலும் பாதையை மாற்றிச் சென்றுவிடுவர். பாதுகாப்பான ரிஸ்க் இல்லை பாதி ரிஸ்க்  என்றேல்லாம் இருக்கக் கூடாது. ரிஸ்க் எடுத்தால் நல்ல பெரியதாக எடுக்க வேண்டுமென நம்புபவன் நான். ஒன்று வென்றிட வேண்டும் இல்லையெனில் கீழே விழ வேண்டும். நடந்தால் நல்லது இல்லையெனில் வேறு தொழில் செய்துக் கொள்ளலாம்.

உங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்ன?

நாங்கள் திட்டமிடுவது முழுவதுமாக நகர விவசாயம் தான். நிறைய பொருளீட்டும் சின்னஞ்சிறு விவசாயத் தோட்டங்கள் நகரத்தில் அமைத்துத் தரும் நிறுவனமாக இருக்க எண்ணம். தென்கிழக்கு ஆசியாவின் பெரிய Urban Farming Brand ஆக நமது நிறுவனம் இருக்க ஆசை. இதற்காக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பேசி வருகிறோம்.

விவசாயத்திற்கு தேவையான பொருள்கள், பயிற்சி, தகவல்கள், விதைகள் என என்ன கேட்டாலும் கிடைக்கும் One Stop Shop ஆக நம் நிறுவனம் இருக்க எண்ணுகிறோம்.

மேலும் காசு இருப்பவர்களுக்குத் தான் என இல்லை, சுத்தமான உணவு குறைந்த விலையில் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கம்.

Right to Quality Food என்ற தனி சட்டமே வர வேண்டும். இதற்காக எங்கள் நிறுவனம் ஏதேனும் ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என நினைக்கிறோம்.

உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்ன?

CII நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த விவசாய Startup விருது கிடைத்துள்ளது, MIDH (Ministry of Integrated Horticulture) கிஸான் உன்னதி மேலா என்ற அவர்கள் விழாவில் எங்களை அழைத்தபோது, எங்கள் விவசாய முறையை காண்பித்தோம். ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாய்டு நடத்திய Aqua Aquaria என்ற கண்காட்சியில் நமது முறையை காண்பித்தோம்.

Likes(4)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share