Jul 142016
 

1

மாற்றம் அறக்கட்டளையின் Managing Trustee, Infosys நிறுவனத்தின் சென்னை HR Head, தேசிய மனித வள மேம்பாட்டுக் குழுவின் (NHRD) சென்னை பகுதி தலைவர், சிறந்த மேடைப் பேச்சாளர் என்று திரு.சுஜித் குமார் அவர்களுக்கு பல முகங்கள்.

நம் B+ இதழுக்கான சாதனையாளர்கள் பகுதிக்கு இவரை பேட்டி எடுக்க சென்றபோது, “எப்படி இத்தனை வேலைகளையும் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல், பிடித்த வேலைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செய்கிறேன், அது தான் காரணம்” என்கிறார்.

பேட்டியின் நடுவே ஒரு கேள்விக்கு “எப்போது செய்யும் வேலை பிடிக்கவில்லையோ அப்போது தான் பல complaints வரும். ஒரு வேலையை பிடித்து தன்னை ஈடுபடுத்தி செய்கையில் இதெல்லாம் வராது. உதாரனமாக, இளையராஜா அவர்கள், 70 வயதாகிவிட்டது, இன்னும் இசை compose செய்கிறேன் என வருத்தம் தெரிவிக்கிறாரா? அது அவருக்கு பிடித்த விஷயமாயிற்றே?” என்று தனது HR தொழிலின் அக்மார்க் பஞ்சை வைத்தார்.

மேலும் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று தனது நகைச்சுவை பேச்சு மூலம் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைக்கும் இவர், கல்வி முறையை சீர்திருத்தம் செய்தால்,  நம் நாடு பெரும் மாற்றமும் வளர்ச்சியும் அடையும் என்பதை தெளிவாக நம்முடன் பதிவு செய்தார். இனி அவர் பேட்டியிலிருந்து..

வணக்கம் சார், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

வணக்கம், பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை தாம்பரம் தான். பெற்றோர்கள் இருவரும் அரசுப் பணியாளர்கள். படித்தது சங்கர வித்யாலையா பள்ளி, மற்றும் லயோலா கல்லூரி. கல்லூரி படிக்கும்போதே ரோட்டிராக் மூலம் மேடைப்பேச்சுக்கள் ஆரம்பமாகியது. இதுவரை 1567 சிறப்புரை (Guest Lectures) தந்துள்ளேன். பல பள்ளிகள், கல்லூரிகள், சென்று மாணாவர்கள் நலனுக்காகவும், Faculty development செய்யவும் பல விதமான தலைப்புகளில் பேசியுள்ளேன்.

பல பள்ளிகளுக்கு சென்றுள்ள நீங்கள், நமது கல்வி முறையைப் (Education System) பற்றி என்ன கருதுகிறீர்கள்?

நம் கல்வி முறை ஒரு தவறான முறை (Flawed System) என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இதற்கு ஒரு கார்ட்டூனை வைத்து உதாரணம் கூறலாம். அந்த கார்டூனில் ஒரு ஆசிரியர் உள்ளார், மாணவர்களாக மலைப்பாம்பு, ஒட்டகம், குரங்கு, பறவை, மீன் என சில விலங்குகள் உள்ளன. இந்த மாணவர்கள் அனைவரும் மரம் ஏற வேண்டும், இது தான் பரீட்சை. இது எப்படி முடியும், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறதல்லவா, அதை விடுத்து, அனைவருக்கும் ஒரே பரீட்சை என நிர்ணயித்தால் எப்படி சாத்தியம் ஆகும்? இப்படி தான் உள்ளது நம் கல்வி முறையும். ஒரு பரீட்சை என்பது நம் என்ன கற்று புரிந்துக்கொண்டோம் என்பதை வெளிபடுத்தும் விதமாக இருக்க வேண்டுமே தவிர, மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்குமாறு இருக்கக் கூடாது.

அறிவின் ஆரம்பமும் அடிப்படையும் பள்ளிகளில் இருந்து தான் தொடங்க வேண்டும். ஆனால் பள்ளிகளிலோ மனப்பாடம் செய்யும் மெஷின்களை தயாரித்து வருகிறோம். ஒரு புத்தகத்தை கொடுத்து எவ்வளவு மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து, ஒருத்தன் மதிப்பெண் வாங்கிவிட்டால், அவன் வெற்றியடைந்த மாணவனாகக் கருதப்படுகிறான்.

அனைத்து மாணவர்களுக்கும் பேச்சுத்திறன், வாழ்க்கைக் கல்வி போன்ற அவசிய திறன்களை, பள்ளிகளில் வளர்க்க தவறிவிடுகிறோம். வெற்றியடையும் மாணவர்களுக்கு தோல்வி வந்துவிட்டால் அதை எப்படி சமாளிப்பது என்று கூட நாம் சொல்லித் தருவதில்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. அதை அடையாளம் காண்பதில்லை. பள்ளிகளில் எந்த மாணவர் அதிகம் மதிப்பெண் எடுக்கிறாரோ அவருக்குத் தான் அதிக கவனமும் தரப்படுகிறது. எந்த மாணவர் தனது தனித்திறமை மூலம் சாதிக்க விரும்புகிறாரோ அவரை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் பள்ளிகளுக்குச் சென்று, பழைய ஆவணங்களை எடுத்து பார்க்கையில், மதிப்பெண் அதிகம் எடுத்தவரை விட தனது தனித்துவத்தை காண்பித்தவர் தான் பெரும்பாலும் வாழ்க்கையில் சாதித்திருக்கிறார் என்பது தெரியவரும்.

கல்லூரிகளின் நிலை எவ்வாறு உள்ளது? மாணவர்களுக்கு வேலைக்கு சேரும் தகுதிகள் (Employable Skills) இருக்கிறதா? ஒரு HR ஆக நீங்கள் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

எங்கள் IT துறைக்கு தேவையானவற்றை நான் கூறுகிறேனே. கல்லூரி மாணவர்களிடம் ஒரு HR ஆக நாங்கள் எதிர்பார்ப்பது வெகு சிலவற்றைத் தான்.

முதலில், ஒரு மாணவருக்கு பாடத்தில் புரிதல் (Domain Depth) எத்தனை ஆழமாக உள்ளது என பார்ப்போம். பாடங்களில் மேலோட்டமாக பதில் சொல்லும் மாணவர்கள், ஒரு நிலை (level) விட்டு அடுத்த நிலை சென்று கேட்டாலே பதில் சொல்வதில்லை.

இரண்டாவதாக, பகுந்தாய்ந்து வெளிபடுத்தும் முறை(Analytical/verbal reasoning), குழுவுடன் இணைந்து வேலை பார்க்கும் திறன்(team playing), பிரச்சினைகளை கையாளும் முறை(problem solving skills) போன்ற தகுதிகளை சோதிப்போம்.

மூன்றாவதாக, பேச்சுத்திறன் (Communication Skills). மாணவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் நடைபெறுகிறது. அந்த 20 நிமிட நேர்முகத் தேர்வு நாடகத்திற்கு நம் மாணவர்கள் தயார் செய்ய உள்ளது.

முதல் கேள்வி எல்லா இடத்திலும், “உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்பது தான். அந்த அடிப்படை கேள்விக்கு பதில் சொல்லவே பல மாணவர்களால் முடிவதில்லை. இத்தகைய நிலைகளில் தான் பல மாணவர்கள் உள்ளனர்.

இந்த பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள தனி வகுப்புகள் போக வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. தினமும் அறிவை வளர்க்கும் புத்தகங்களை ஒரு பத்து பக்கம் படித்தாலே போதுமானது.

செய்தித்தாள்களில் Current Affairs, பொது விழிப்புணர்வு தரும் செய்திகள் ஏதேனும் படித்தீர்களா என்று மாணவர்களை கேட்டால், நிறைய பேர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் சினிமாத்துறை பற்றிக் கேட்டால், முழு விவரமும் தருகிறார்கள். சினிமாவிற்கும், விளையாட்டிற்கும் தரும் ஆர்வத்தை மற்ற விஷயங்களுக்கு தராத ஒரு சமூகமாக இருக்கிறது.

இந்த சவால்களை எவ்வாறு கையாள்வது? சில கல்லூரிகள் இதற்கு என ஏதேனும் வித்தியாசமான பயிற்சிகளைத் தருகின்றனரா?

சில கல்லூரிகளில் Zero Hour என்று ஒரு கான்செப்டை வைத்துள்ளனர். இந்த நேரங்களில் தங்கள் படிப்புக்கு தொடர்பில்லாத மற்ற பொது பாடங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். பொருளாதாரம், வணிகம், அரசியல் என பல பொது அறிவு விஷயங்களை அந்த நேரங்களில் கலந்துரையாடுகிறார்கள்.

“ஒருபுறம் உங்களுக்கு புடிச்ச துறையை படியுங்கள் என சொல்கிறீர்கள், இன்னொரு புறம் எல்லாத்துறைகளை பற்றி அறிவை வளர்த்துகொள்ளுங்கள் என்கிறீர்கள், நாங்கள் எத்தனை விஷயங்களில் தான் focus செய்வது” என்று மாணவர்கள் கேட்க கூடுமே?

அதுபோல் நாம் பிரித்து பார்க்க முடியாது. மாணவர்களுக்கு சில விஷயங்களில் அடிப்படை அறிவாவது இருந்தே ஆக வேண்டும். அதற்காக பெரிதும் நேரம் ஒதுக்கி நிறைய படிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. டிவியில் News Channels சிறிது நேரம் பார்த்தால் கூட பொது அறிவு, விழிப்புணர்வு எல்லாம் ஓரளவு வந்துவிடும்.

செய்தித்தாள்களில் Editorial Section தொடர்ந்து படிக்கையில் ஒரு “Point of View” வளர்த்துக்கொள்ளப்  போகிறார்கள். அது மாதிரி எல்லாவற்றிலும் திறன் இருக்கக்கூடிய ஒரு முழுமையான மாணவனையே (Wholesome Personality) நாங்கள் தேடுகிறோம்.

மற்ற துறைகளில் வல்லுனர்களாக இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், அடிப்படையாவது தெரிந்து வைத்திருத்தல் அவசியம். சினிமா மாணவர்கள் துறைக்கு தேவையில்லாத ஒன்று தான், இருந்தாலும் அதைப் பற்றிய முழு புள்ளி விவரமும் வைத்திருக்கின்றனரே? அதில் காட்டும் ஆர்வத்தை மற்ற பொது விஷயங்களிலும் காட்டலாமே என்று தான் நாங்கள் கூறுகிறோம்.

பல ஊர்களுக்குச் சென்று மாணவர்களை வேலைக்காக தேர்ந்தெடுக்கிறீர்கள். உங்கள் பார்வையில் கிராம-நகர மாணவர்களுக்குள் என்ன வேறுபாடுகள் உள்ளன?

இரண்டு இடங்களிலும் மதிப்பெண்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் கிராமப்புற மாணவர்களிடம் communication skills குறிப்பாக ஆங்கிலத்தில், குறைவாகவே இருக்கிறது. அடுத்து கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை. இந்த நிலை மாற வேண்டும். நகர் புற மாணவர்களை காட்டிலும் நாம் எதற்குமே சளைத்தவர்கள் இல்லை என்ற நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது தவிர, நகர மாணவர்களிடம், exposure, awareness, extra-curricular activities இதெல்லாம் சற்று அதிகம் இருக்கிறதுதான்.

Technology இந்த சவால்களுக்கு எவ்வாறு உதவ முடியுமென நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக பல விதங்களில் உதவ முடியும். உதாரணத்திற்கு Course-Era என்ற வலைதளம் பல பல்கலைகழகங்களின் உதவியுடன் பல பாடங்களை அவர்கள் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இன்று எல்லா பாடங்களையும், தகுதிகளையும், திறமைகளையும் Online கல்வி மூலம் சிறந்த முறையில், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.

இணையத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது. இந்த மாதிரி அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்திற்கு பயன்படுத்துவதை விடுத்து, ஒரு படத்தின் Trailerஐ மட்டும் பார்க்க இணையத்திற்கு சென்றால் கஷ்டம்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சி உங்கள் பார்வையில் எவ்வாறு உள்ளது?

2020 ஆம் ஆண்டில் சராசரி இந்தியனின் வயது 27 ஆக இருக்குமென்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். மற்ற நாடுகளில் வயதானவர்கள் தான் அதிகம் இருப்பர். ஆனால் நம் இளைய சமுதாயத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அடுத்தது  நம் நாட்டினர் கடின உழைப்பாளர்கள். இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள நாம், கல்வித்துறையில் மட்டும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி விட்டால், வல்லரசாவது உறுதி.

வளர்ச்சி விகிதம் (GDP) ஒருபுறம் இருக்க, Gross National Happiness (GNH) எனப்படும் மகிழ்ச்சி குறியீட்டில் நாம் பின் தங்கி உள்ளோமே?

நம் மக்களை போல் மகிழ்ச்சியைத் தள்ளிபோடும் சமூகத்தை எங்குமே காண இயலாது. மகிழ்ச்சி என்பது என்ன? பிடித்த வேலையை செய்வது. ஆனால் அதை விடுத்து “படி, மதிப்பெண் வாங்கு, வேலைக்குப் போ, சம்பாதி” என்று மட்டும் கூறி பிள்ளைகளை வளர்க்கிறோம்.

நம் சமூகம் ஒரு Time Bound சமூகம். இங்கு குறிப்பிட்ட வயதுகளில் படிப்பு, வேலை, கடனில் வீடு, திருமணம், குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கை என ஒரே மாதிரியான வலையில் எல்லோரும் மாட்டிக்கொள்கிறோம். மகிழ்ச்சி குறியீட்டில், முன்னேறி உள்ள மற்ற நாடுகளில் இதுபோல் எந்த வரைமுறைகளும், நீதிகளும் கிடையாது. மற்ற நாட்டினர், என்ன பிடிக்கிறதோ அதை செய்வேன் என உறுதியாக இருக்கிறார்கள்.

இரண்டாவது, நம்மில் பலருக்கு மகிழ்ச்சி பணத்திலிருந்து மட்டும் தான் வருகிறது என்ற ஒரு பிம்பம் உள்ளது. அனால் அவ்வாறு கிடையவே கிடையாது. சம்பாதிக்கும் பணம் எங்கிருந்து வருகிறது, எவ்வாறு வருகிறது என பார்க்க வேண்டும்.

ஒருவர் செய்யும் வேலையை பிடித்து செய்தால் அது அவருக்கு மகிழ்ச்சியைத் தரும், சம்பாதிக்கும் பணத்தை தன் விருப்பம் போல் செலவு செய்தால் மகிழ்ச்சியைத் தரும். அனால் அப்படி செய்யாமல், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை பார்த்து, அவர்களுடன்  ஒப்பிட்டு நடக்கத் தொடங்கினால் அது மகிழ்ச்சியை கண்டிப்பாக தராது.

Software துறை வந்தப்பின் Rich-poor gap அதிகமாகி விட்டதாக ஒரு பேச்சு உள்ளதே?

மீடியா Software துறையில் வேலை செய்கிறவர்களை பார்ட்டி (Party) செல்பவர்கள், பணத்தில் புரளுபவர்கள் என்ற மாயையை ஏற்படுத்திவிட்டது. நிஜத்தில் அவ்வாறெல்லாம் இல்லை.

ஏதேதோ குக்கிராமத்தில் இருந்து இங்கு வந்து, மேன்ஷன்களில் தங்கி மாத சம்பளம் வாங்கி, பணத்தை சேமித்து வீட்டுக்கு அனுப்பி, தன் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முயல்கிறவர்களாய் தான் பலர் உள்ளனர். அடுத்து, இன்றைய காலகட்டத்தில், மற்ற பல துறைகளிலும், வியாபாரம் செய்வதிலும் அதிகமாக பொருளீட்டும் வாய்ப்புகளும் பெருகியுள்ளது.

அதனால் IT துறையை மட்டும் காரணமாக சொல்வது சரியல்ல. அவ்வாறே IT துறையில் ஒருவர் நன்றாக சம்பாதிக்க முடியும் என நினைத்தால், இதையே  குறிக்கோளாக வைத்து இத்துறையில் வந்து வேலை செய்யலாமே?

இருந்தாலும் மற்ற பொறியியல் துறைகளை விட, IT துறையில் வேலை செய்யும் சூழ்நிலை (Work Environment) நன்றாக உள்ளது என்ற எண்ணமும் எழாமல் இல்லையே?

நான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பேன். சில மெக்கானிக்கல் துறையினரிடம் கேட்டால், எப்போதும் மெஷின்களோடு அழுக்கு, கிரிஸ் என சுத்த வேண்டியுள்ளது என்பர். சில IT துறையினரோ, எப்போதும் உயர்ந்த கட்டிடங்களில், கணினியின் பச்சை நிற ஸ்க்ரீனையே பார்க்க  வேண்டியுள்ளது எனவும், வெளியில் வெயிலா, மழையா ஒன்றுமே தெரிவதில்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

எப்போது செய்யும் வேலை பிடிக்கவில்லையோ அப்போது தான் இது போல் Complaints வரும். ஒரு வேலையை பிடித்து தன்னை ஈடுபடுத்தி செய்கையில் இதெல்லாம் வராது. உதாரனமாக,  இளையராஜா அவர்கள், 70 வயதாகிவிட்டது, இன்னும் இசை compose செய்கிறேன் என வருத்தம் தெரிவிக்கிறாரா? அது அவருக்கு பிடித்த விஷயமாயிற்றே?

மாற்றம் அறக்கட்டளை பற்றி..

Infosys சுஜித் குமார் என்ற அடையாளம் தாண்டி, மாற்றம் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று கூறுவேன். மாற்றத்தின் அடிப்படை நோக்கமே, ஆதரவற்ற, ஆனால் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி இலவசமாக கிடைக்கவேண்டும் என்பது தான்.

ஒரு மேடைப்பேச்சு முடிவில், மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலும், எப்போதும் 1100 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் 12th மாணவி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பே மாற்றத்திற்காக வித்திட்டது என்பேன்.

இது போல் எத்தனை நன்றாக படிக்கும் மாணவர்கள் உள்ளனரோ என எண்ணி, இவர்களுக்கு ஏதாவது செய்யலாமே என எண்ணினேன். எனக்கு தெரிந்த கல்லூரி முதல்வர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, ஒரு கஷ்ட்டப்படும் மாணவி இருக்கிறார், ஒரு இலவச சீட் தர முடியுமா என்று நான் கேட்டபோது, 20 சீட் தருகிறோம் என்ற பதில் வந்தது.

அவ்வாறு தொடங்கிய மாற்றத்திற்கான பணி, Whatsapp, Facebook, ரேடியோ என வேகமாக பரவி, இன்று வரை 327 மாணவர்கள் முழு இலவச கல்வி அடைந்த நிலையை எட்டியுள்ளது.

அடுத்த இலக்கு என்ன?

மாற்றம் மூலம் பயன்பெரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஒரு இலக்காக உள்ளது. மாற்றம் மூலம் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளிலும் மாணவர்களை சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. பள்ளிகளிலும் படிக்க இயலாத மாணவர்களை சேர்த்து விடுகிறோம்.

அடுத்து அரசு பள்ளிகளில் நூலகங்கள் ஏற்படுத்தித் தருகிறோம். இதை தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியுள்ள மாணவர்கள் மூலம் செய்கிறோம். மேலும் Santa Kids என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கும் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறோம்.

உங்களது நிறுவனம் நீங்கள் செய்யும் பணிகளுக்கு எவ்வாறு ஆதரவளிக்கிறது?

மிகப்பெரிய ஆதரவு தருகிறது என்பேன். Infosys நிறுவனத்தில் 15 வருடம் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த விஷயத்தை செய்ய எந்த தடையும் விதிக்க மாட்டார்கள். எனது வேலையை மட்டும் நேரத்திற்குள் முடித்துவிட்டால் போதும். வெளியே lectureகளுக்கு செல்கையிலும், அறக்கட்டளை பணிகளுக்கு செல்லும்போதும் விடுப்பு எடுக்க நேரிட்டால், அலுவலக பணிகள் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வதால், மேலாளர்களும் ஆதரவாகத் தான் இருப்பர்.

உங்களுக்கு கிடைத்த விருதுகளும் அங்கீகாரமும்..

Raindrops என்ற மீடியா NGO நிறுவனம், வருடாவருடம் தங்களது காலண்டரில் 12 சிறந்த மனிதர்கள் (Change Agents) என கண்டுபிடித்து அங்கீகாரம் செய்கிறார்கள். சென்ற வருடம் அவர்கள் காலண்டரில் என்னை பற்றி வெளியிட்டு அங்கீகாரம் தந்தனர்.

Rotaract நிறுவனத்தின் உயரிய அங்கீகாரமான “Icon of Rotaract” கிடைத்தது. Naascom விருது கிடைத்தது. இவை அனைத்திற்கும் மேல் லயோலா கல்லூரியின் “Distinguished Alumni” விருதும் சென்ற வருடம் அக்டோபர் மாதம் கிடைத்தை பெருமையாக நினைக்கிறேன்.

Likes(7)Dislikes(0)
Share

  One Response to “சுஜித் குமார்!”

  1. Respected sir please contact me because i want to share some thing about india without poverty children my con no 8428028899

    Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share