May 142016
 

tn-election-date-04-1457096300

இலவசமில்லா தமிழகம் என்ற பதிவை நம் B+ இதழின் சென்ற டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்தோம். அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல் நமது குழு இரண்டு நிவாரணப் பணிகளை வெள்ளத்திற்குப் பின் செய்திருந்தது.

ஆனால் அந்த மாத இதழில் பதிவிடாத ஒரு முக்கியமான நிகழ்வை இந்த இதழில் பதிவிடுகிறோம். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக இல்லை.

வெள்ள நிவாரணத்தின் போது, அன்று நம்மிடம் 200 குடும்பங்களுக்கு மட்டுமே  தேவைப்படும் பொருட்கள் இருந்தது. அதனால், சென்னையில் ஏதேனும் ஒரு பாதிக்கப்பட்ட பகுதியில், மிகவும் சேதமடைந்த 200 வீடுகளை தேர்வு செய்து, அந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணப் பொருள்கள் தரலாம் என முடிவெடுத்தோம்.

காலையில் அத்தகைய வீடுகளை கண்டுபிடித்து டோக்கன்கள் வழங்கலாம், மாலையில் டோக்கன் எடுத்து வருபவர்களுக்கு பொருள்கள் தரலாம் எனவும் திட்டமிட்டோம்.

சுமார் ஆயிரம் வீடுகள் இருந்த அந்தப் பகுதியில் தெருத்தெருவாக சுற்றி பாதிப்பை அலசி பார்க்கையில், சில வீடுகள் நல்ல நிலைமையில் இருக்கவே, அவர்களுக்கு டோக்கன் தராமல் அடுத்த விடுகளுக்குச் சென்றோம். ஆனால் அவ்வாறு டோக்கன் பெற இயலாத சிலர், நம்மை பின்தொடர்ந்தும் வாக்குவாதம் செய்தும் டோக்கனை வாங்கிச் சென்றனர்.

அவ்வாறே ஒரு இளைஞனும் நம்மை பின் தொடர்ந்து வந்தான். தன் வீட்டருகில் ஏன் வரவில்லை எனவும், தனக்கு ஏன் டோக்கன் தரவில்லை எனவும் வாக்குவாதம் செய்தான். “தம்பி, எங்களிடம் மொத்தமே 200 டோக்கன்கள் தான் இருக்கின்றன, இந்தப் பகுதியிலோ ஆயிரம் வீடுகள் இருக்கின்றன, எங்களால் எல்லா வீட்டிற்கும் தர இயலாத சூழ்நிலை. மேலும் நீ குறிப்பிட்ட தெருவில் சேதாரம் அத்தனை இல்லை” என்று முடிந்தளவிற்கு பொறுமையாக எடுத்துக் கூறினோம்.

இளைஞனோ விடுவதாக இல்லை. தந்தாலே போயிற்று என தொடர் வாக்குவாதம் செய்தான். நேரம் விரயமாவதால், “சரி தம்பி, பார்த்தால் படித்தவனாக இருக்கிறாய், உன் வீடு இருக்கும் தெருவில், எந்த வீட்டினருக்கு சேதாரம் அதிகம் உள்ளதோ, எங்கு முதியவர்கள், இயலாதவர்கள் இருக்கின்றனரோ, அந்த வீட்டிற்கு இதை கொடுத்துவிடு” என்று ஒரு டோக்கனை கொடுத்தோம்.

திட்டமிட்டபடியே, அன்று மாலை விநியோகம் முடிந்தது. மூன்று நாட்கள் கழித்து, அந்த இளைஞனை யதேச்சையாக வேறொரு பகுதியில், காலை வேளையில், ஒரு தேநீர் கடையில் சந்திக்க நேர்ந்தது. கூலிங்கிளாஸ், ஜெர்கின் எல்லாம் அணிந்துக்கொண்டு, தன் நண்பனுடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய trolley bag கையில் வைத்திருந்தான்.

என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் இருக்கவே, “என்னப்பா, எப்படி இருக்கிறாய், என்னை நியாபகம் இருக்கிறதா?” என அவனிடம் சென்று விசாரித்தேன். சட்டென்று கையில் வைத்திருந்த சிகரெட்டை பின்னால் மறைத்துக்கொண்டு  “எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே” என்று இழுக்கவே,  என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

பதிலுக்கு அவனும், தன் பெயர் விவேக் என்றும், ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அறிமுகப் படுத்திக்கொண்டு, தில்லிக்கு தனது நிறுவனம் வேலை விஷயமாக அனுப்புவதாகவும் தெரிவித்தான். இரண்டு நிமிடங்கள் அவனிடம் பேச்சு தொடர்ந்தது.

“அன்று நிவாரணப் பொருள்கள் வாங்கும் இடத்தில் உன்னைப் பார்க்க முடியவில்லையே” என்று நான் கேட்க, தன் அம்மா வந்து பொருள்கள் வாங்கிச் சென்றதாக தெரிவித்தான். இருவரும் எங்களது கைப்பேசியின் எண்களை மாற்றிக்கொண்டு விடைப்பெற்றோம்.

பேசும் போது, என்னை நேருக்கு நேர் சரியாக பார்க்காது, ஏதோ குற்ற உணர்வில் அவன் நெளிந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில், அவன் கொடுத்த கைப்பேசி எண்ணும் வேறொருவரின் எண் என்று தெரிய வந்தது.

சில தினங்களில், மேலும் ஆச்சரியமூட்டும் விதத்தில்,  விவேக் போன்றே, அந்தப் பகுதியை சேர்ந்த வேறு சிலரும், நல்ல நிலையில் இருந்தும் இந்த இலவசத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டது தெரிய வந்தது.

நிவாரணம் நடந்த அன்று நடந்த இன்னொரு சம்பவம். கிட்டத்தட்ட அனைவருக்கும் பொருள்கள் வழங்கி முடித்திருந்த நேரம். ஒரு வயதான பாட்டி தள்ளாடிக் கொண்டே எங்களருகில் வந்தார். மிகவும் ஏழ்மையான தோற்றம். தான் எந்தவித ஆதரவும் இல்லாதவர் என தெரிவித்துக்கொண்டார்.

தன்னிடம் டோக்கன் இல்லை என்றும், தனக்கும் பொருள்கள் தருமாறும் கேட்டுக்கொண்டார். பாட்டியை பார்க்க பாவமாக இருக்கவே, அவருக்கும் நாம் பொருள்கள் தர, சற்றும் எதிர்பாராவிதமாக தான் அணிந்திருந்த பழைய செருப்பைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, தன் கைகளை தலை மீது தூக்கி நம்மை வணங்கினார் அந்த பாட்டி. நம்மை ஆசிர்வதித்தும் சென்றார்.

சரி, தேர்தல் வரவிருக்கும் சமயத்தில், இந்த சம்பவங்கள் குறித்து நாம் பேச காரணம் என்ன? இருக்கிறது. அந்தப் பாட்டி போல், எத்தனையோ கோடிப்பேர் நம் நாட்டில் இருக்க, விவேக் போன்ற கூட்டமும் இல்லாமல் இல்லை. பாட்டி போன்றவர்களுக்குச் செல்ல வேண்டிய சலுகைகளை விவேக் போன்ற எத்தனை மனிதர்கள் தட்டிப் பறித்துக்கொண்டு இருக்கின்றனர்?

பாட்டி போன்றோர்கள் வாங்கியது, உண்மையான நிவாரணம் என்றால், விவேக் போன்றோர் ஏமாற்றி அடித்து பிடித்து வாங்கியதற்கு பெயர் என்ன? பிச்சைதானே?

தன் உடல் மற்றும் மனம் வளமாக இருந்தும், உழைக்காமல் அடுத்த மனிதனை ஏமாற்றியோ, இலவசமாகவோ ஒரு பொருளை பெற வேண்டும் என்ற மனநிலை, இத்தகைய மனிதர்களுக்கு எவ்வாறு வருகிறது?

சுயநலத்துடன், நியாயமற்ற முறையில் அடுத்தவர்கள் பொருள்களுக்கு பேராசைப்படும் இத்தகைய மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதை சமூகத்தில் காண முடிகிறது.

வருத்தப்படாத வாலிப சங்கங்களுமாய், மாரிகளுமாய், ஊதாரித்தனமாக இருந்து வாழ்க்கை நடத்துவதை பலர் வெட்கமே இல்லாமல் செய்வதும் தெரிகிறது. திரைப்படங்கள் சிலவும் அவற்றை ஹீரோக்களின் குணநலன்களாய் சித்தரித்து இதுபோல் இருப்பது தவறில்லை என்ற என்னத்தை விதைக்கின்றன.

இத்தகைய மக்கள் மனநிலையும், விவரங்களும் நமக்கே தெரிகையில், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கும்?

அத்தகைய மனிதர்கள் நம்முள் வேகமாக பரவும்போதும், ஒரு சமுகத்தின் பெரும்பான்மை மக்களின் விருப்பம் இப்படி தான் இருக்கிறது என்ற போதும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் எப்படி இருக்கும்? பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தானே இருக்கும்?

எங்களுக்கு இலவசம் என்ற பேச்சே வேண்டாம், உழைக்கவும் வேலை வாய்ப்பை பெருக்கவும், வளர்ச்சித் திட்டத்தை தாருங்கள் என எப்போது மக்கள் விழிப்புற்று,  விரும்பி, கேட்க ஆரம்பிக்கின்றனரோ, அப்போது தான் அரசியல் கட்சிகளின் எண்ண ஓட்டமும் மாறும்.

ஆனால் இந்த கருத்துக்களை ஒத்துக்கொள்ளாமல் சிலர், அரசியல்வாதிகள் இலவசங்களை அள்ளி வீசியதால் தான், மக்களின் மனநிலை இதுபோல் மாறியது என்று விவாதிப்பது உண்டு.

நம் எண்ணங்களை மேம்படுத்தாமல், அந்த கட்சியிடம் தொலைநோக்கு பார்வையில்லை, இந்த கட்சியிடம் வளர்ச்சிப்பாதை இல்லை என்றெல்லாம் குறைக்கூறி சுட்டிக்காட்டுவது எவ்வாறு சரியாகும்?

முதலில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்ல நாம் மனதளவில் தயாராகிவிட்டோமா, இல்லை இன்னும் உழைக்க தயாராகாமல், இலவசங்களை எதிர்நோக்கி உள்ளோமா என எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு சிங்கப்பூர் போன்றோ, துபாய் போன்றோ ஆகவேண்டுமானால், முதலில் நமது சிந்தனைகள் அதற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும். அதுதான் ஆட்சியாளர்களிடமும் மாற்றத்தை கொண்டு வரும்.

அதை விடுத்து, சுயநல சிந்தனையுடன், தொலைக்காட்சி கிடைக்கிறது, ஸ்கூட்டர் கிடைக்கிறது என்று இலவசங்களை எதிர்பார்க்கிறோம், அதற்கேற்றவாறு தேர்தலில் வாக்குகளைப் பதிவிடுகிறோம்.

இந்த இலவசங்களால், இப்போதே தமிழகத்தின் மீது சுமார் இரண்டு லட்சம் கோடி கடன் உள்ளது, நாம் அறிந்ததே. அதாவது தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் முப்பாதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது.

உழைப்பின் அருமையை மறந்து, குடியில் மூழ்கி உல்லாசத்தில் பொழுதை கழிக்கும், இந்த சமூகம் இதே விதத்தில் தொடர்கையில், பிச்சைக்கார அடையாளத்திலிருந்து, கொத்தடிமைகளாக மாறும் அபாயத்தை நோக்கியுள்ளது.

நமது தலைமுறை நல்ல முறையில் மாற வேண்டுமானால், அது நமது அரசியலவாதிகளின் கையில் இல்லை, நாம் வைக்கப் போகும் மையில் உள்ளது.

உழைப்பும் அதன் மூலம் வரும் வளமும் பெருமையும் தான் எங்களுக்கு வேண்டும், எந்த இலவசமும், அடுத்தவரின் பொருளும் வேண்டாம் என நம்மில் பெரும்பான்மையினர் உணரத் துவங்கும் அந்த நாள், தமிழகம் வளர்ச்சியில் சிங்கப்பூர் போன்ற பல நாடுகளை தாண்டி பயணிக்கத் தொடங்கும்.

அதனால், இலவசம் வேண்டாம் என்று முதலில் நாம் மாறத் தொடங்குவோம். மக்களின் மனநிலை மாறினால், அரசியலவாதிகளின் மனநிலையும் தானாகவே மாறும்.

மக்கள் எவ்வழியோ, மன்னனும் அதே வழி என்பது தான் இன்றைய சூழ்நிலை. எதா  ப்ரஜா, ததா ராஜா என்பதை உணருவோம்!

சுயநலமில்லாத, உழைத்து வாழும் சிந்தனை நம்மில் வரட்டும், தமிழகம் தலை நிமிரட்டும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(6)Dislikes(0)
Share

  One Response to “எதா ப்ரஜா, ததா ராஜா!!!”

  1. s....Finding and judge a right person to donate something is a difficult work..

    Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share