Mar 142016
 

Bhumi1 (640x361)

“நல்ல சிந்தனையும் உருதியும் கொண்ட ஒரு சிறு குழுவால் இந்த உலகத்தை எப்படி மாற்றிவிட  முடியும் என நினைக்கிறீர்களா, உண்மையில் அத்தகைய மனிதர்கள் தான் இதுவரை சமூக மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்”.

“இன்றைய சிறு மாற்றமே நாளைய பெரிய மாற்றத்தின் தொடக்கம்”

நம்பிக்கை தெறிக்கும் இந்த இரு வரிகளைக் கொண்டு நம்மை வரவேற்கிறது “பூமி” என்ற தன்னார்வ நிறுவனம். பல இளைஞர்களை சிறப்பாக வழிநடத்தி, அவர்களின் மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்கி வருகிறது பூமி. (www.bhumi.org.in)

மூன்று நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய இந்த நிறுவனம், பத்தே வருடங்களில், 13 நகரங்கள், சுமார் 12000  இளைஞர்கள் என தன் கிளைகளை விரித்து, பல சமுதாய சேவைகளை செய்து வருவது பெரிய ஆச்சரியம். பூமியின் துணை நிறுவனர்களின் ஒருவரான திரு.பிரஹலாதனை சந்தித்து அவரிடம் பூமியை பற்றி பல சுவையான தகவல்களை கேட்டறிய முடிந்தது. இனி அவரின் பேட்டியிலிருந்து..

வணக்கம் உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்

வணக்கம் என் பெயர் பிரஹலாதன். சென்னையில் கண் மருத்துவராக பணிப்புரிகிறேன். பூமி  நிறுவனத்தின் துணை நிறுவனர். என் மனைவியும் பூமியில் முழு நேரம் பணி செய்கின்றார்.

பூமி அமைப்பின் எண்ணம் எவ்வாறு வந்தது? எப்படி தொடங்கினீர்கள்?

2006 ஆம் ஆண்டின் போது ORKUT என்ற சமூக தளம் தான் மிகவும் வேகமாக வளர்ந்துவந்தது. ORKUT மூலம், ஒத்தக் கருத்துள்ள சில நண்பர்கள் சேர்ந்து, சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றினைந்தோம்.

என்ன செய்யலாம் என விவாதிக்கையில், கல்வித்துறைக்காக ஏதேனும் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் வேலைகளை செய்யத்தொடங்கிய பின் தான், இத்துறையில்  எத்தனை சவால்கள் உள்ளது என புரிந்தது. அதற்கு ஒரு நிறுவனமும் எங்களுக்கு தேவைப்பட்டது. அப்படி தான் பூமி உருவாகியது. 2006 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

நிறுவனம் செய்து வரும் பணிகளைப் பற்றி..

வாய்ப்பு வசதிகள் சரியாக இல்லாத குழந்தைகளுக்கு, தரமான கல்வியை கொண்டு சேர்ப்பது தான்,நாங்கள் இப்போது செய்யும் முக்கிய பணியாக உள்ளது. எங்கள் குழுவினர் வார இறுதி நாட்களில் அந்த குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு பள்ளி பாடங்களை சொல்லித்தருவர். கல்வி தவிர, இந்த அமைப்பின் மூலம் பல மற்ற சமூகபணிகளையும் செய்து வருகிறோம். தற்போது கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் எங்கள் குழு ஈடுபட்டுள்ளது.

ஆரம்பிக்கும் போது எத்தகைய சவால்களை சந்தித்தீர்கள்?

ஆரம்பிக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமலேயே இயங்கிக் கொண்டிருந்தோம். எங்கள் பணியின் விளைவும், பெரியளவில் இல்லை. நிறைய உதவியும் ஆதரவும் தேவைப்பட்டது. ஒரு நிறுவனம் என்று வைத்து இயங்கும்போது தான் அனைத்து சவால்களையும் சரியான முறையில் சந்திக்க முடியுமென உணர்ந்தோம்.

குழந்தைகள் காப்பகம் சென்று அவர்களுக்கு டியூஷன் எடுக்கலாம் என்று அணுகினோம். அதற்கு, “நீங்கள் எந்த குழு, எந்த அமைப்பு, எந்த NGO என்று பல கேள்விகள்.. உங்கள் அமைப்பின் LETTER HEAD இல் விண்ணப்பம் கொடுங்கள், அப்போது தான் அனுமதி கிடைக்கும் என்றெல்லாம் பதில்கள் வந்தது.

அவ்வாறு ஆரம்பித்த அந்த பயணம் இன்று எத்தனை தூரம் வந்துள்ளது?

இன்று 13 நகரத்தில் இயங்கி வருகிறோம். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஹைதராபாத், பெங்களூர், பூனே, மும்பை, ஜெய்ப்பூர், தில்லி, சண்டிகார், கோல்கத்தா மற்றும் இந்தோர் பகுதிகளில் எங்களது பணிகள் நடந்து வருகின்றது. சராசரியாக 12000  தன்னார்வ நபர்கள் (VOLUNTEERS) எங்களிடம் வேலை செய்கின்றனர்.

தங்களது குழு வேலை செய்யும் முறை எவ்வாறு இருக்கும்?

கல்வித்துறைக்கென மட்டும் இப்போது நம்மிடம் 2000 தன்னார்வ நபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குழந்தைகள் இல்லங்கள் சென்று பாடங்கள் சொல்லித்தருவர். சில இடங்களில் குடிசை பகுதிகளுக்குச் சென்று பாடம் நடத்துகின்றோம்.

தன்னார்வ நபர்கள் பொதுவாக கல்லூரி மாணவர்கள் அல்லது வேலைக்கு செல்பவர்களாக இருக்கின்றனர். சராசரி வயது 22 – 23 என இருக்கும். அந்த இளைஞர்கள் ஏதேனும் சமுதாயப் பணி செய்ய வேண்டுமென இணையத்தின் மூலம் எங்களை அணுகுவார்கள். பூமி அமைப்பில் பதிவும் செய்வார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆரம்ப பயிற்சி அளித்து, செய்யும் பணிகளைப் பற்றி தெரிவிப்போம். அவர்களுக்கு பிடித்த வேலை மற்றும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளை தேர்வு செய்வோம்.

உதாரணமாக ஒரு இளைஞர் தனக்கு ஆங்கிலம் நன்றாக சொல்லித்தர வரும், இந்த பகுதி எனக்கு அருகாமையில் உள்ளது என முடிவெடுத்து எங்களிடம் தெரிவிப்பார். பின் அவருக்கு அந்த பாடத்தில் பயிற்சி அளித்து அதற்கான பாடகோப்புகளை கொடுப்போம்.

பயிற்சி முறை எவ்வாறு இருக்கும்?

ஒரு குழந்தைகள் காப்பகம் என எடுத்துக்கொண்டால், ஒரு தன்னார்வ நபர் மட்டும் சென்று பாடம் நடத்துவது போல இருக்காது. 50 குழந்தைகள் இருக்கிறார்கள் எனில் பத்து முதல் பதினைந்து நபர்கள் கொண்ட நமது குழு அங்கு செல்வர்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என தனித்தனியாக ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பார்கள். மொத்தமாக ஒரு குழந்தைகள் காப்பதகத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் இருப்பார். இது போல் 4 – 5 குழந்தைகள் காப்பதகங்கள் இருந்தால், அதற்கு ஒரு ப்ராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் இருப்பார்.

இவ்வாறு உள்ள கட்டமைப்பில், ஒருவர் முதலில் சேர்ந்தபின், பாடம் நடத்த ஆரம்பிப்பார். சிறிது மாதங்களில் அவருக்கு மேலும் சில நேரம் தர இயலும் என நினைத்தால், ஒருங்கிணைப்பாளர் பணியை எடுத்துச் செய்வார்.

எத்தனை முறை செல்வீர்கள்?

ஒரு வாரம் ஒரு குழு சென்றால், அதே குழு மீண்டும் அடுத்த வாரமும் செல்லும். ஒரு குழந்தைகள் காப்பதகத்திற்கு ஒரு நபரை நியமித்துவிட்டால், அவர் வருடம் முழுதும் அனைத்து சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ அதே பகுதிக்குச் சென்று அதே குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லித்தருவார்.

எத்தனை காப்பகங்களுக்கு இது போல் உங்களது குழு சென்றுவருகிறது?

இந்தியா முழுவதிலும் சுமார் 200 வரை இருக்கும்.

12802919_1017264325008197_6764390011218596699_n

நீங்கள் பாடம் எடுக்கும் குழந்தைகளின் அறிவுத்திறன் எவ்வாறு உள்ளது? அதை எப்படி அளவிடுகிறீர்கள்?

சரியான நேரங்களில் தேர்வுகள் நடத்தி சோதனை செய்வோம். அரசு பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவர்களின் அறிவுத்திறன் தனியார் பள்ளிகளில் படிப்போரின் திறனிற்கு சமமாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். தொடர்ந்து இந்த எண்ணத்தில் முன்னேற்றம் அடைய முயற்சிக்கிறோம். எங்களது பயிற்சி முறையும் பிராக்டிக்கலாக (ACTIVITY BASED) இருக்கும்.

இதுவரை உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் பற்றி..

அமெரிக்காவின் “இந்தியா ஷைன்” என்ற விருது, சென்னை ரோட்டரி கிளப்பின் விருதுகள், லையன்ஸ் கிளப் விருது, FYSE அமைப்பு நடத்திய ஆசியாவின் வளர்ந்து வரும் 100 இளைய சமூக ஆர்வலர்களுக்கான விருது ஆகியன கிடைத்துள்ளது.

மிகவும் மகிழ்ச்சி தந்த அங்கீகாரமாக – மும்பையில் தேசிய அளவில் நடந்த ஒரு போட்டியில், தன்னார்வ நபர்களை மிகச் சிறந்த முறையில் உபயோகித்து செயலாற்றுகிறது என பூமிக்கு ஒரு விருது கிடைத்தது (LEADER IN VOLUNTEERS ENGAGEMENT AWARD FROM IVOLUNTEER)

இந்த செயல்களின் மூலம் மிகவும் மகிழ்ச்சியோ பெருமையோ அடைந்த தருணம்?

நாங்கள் பயிற்சி அளித்த ஒரு மாணவர், தன்னார்வ நபராக எங்கள் குழுவில் சேர்ந்தது, எங்களுக்கு மிகவும் திருப்திகரமாய் அமைந்தது. ஆனால் அது போல், நூறு பேர், ஆயிரம் பேர் என வர வேண்டும்.

அடுத்த இலக்கு என்ன?

இப்போது பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். கல்வியையும் தாண்டி மாணவர்கள் அவர்கள் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய, அவர்கள் சொந்தக் காலில் நிற்கத் தேவையானவற்றை செய்ய விரும்புகிறோம்.

தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுறியும் தகுதியை வளர்த்துக் கொள்கிறான் என்றால், அரசு பள்ளிகளில் படிக்கும் நம் மாணவர்களும் அத்தகைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறோம்.

25 முதல் 30 வரை வயதான ஓரு இளைஞன் வாழ்க்கையில் வீணாகிப் போகிறார் என்றால், அது அவர் தெரிந்தே எடுக்கும் முடிவு. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள் வாய்ப்புகள் இல்லாததால், அவர்கள் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது. அதற்கு தேவையான முழு கவனத்தையும், வாய்ப்பையும் தர விரும்புகிறோம்.

மேல் படிப்பு, கல்லூரி வசதிகள், தொழில் செய்ய தேவையான திறமைகள், நிதியுதவி என ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிர்காலம் சிறப்பான முறையில் அமைய, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம்.

அதனால் எங்களது மொத்த இலக்கு – நல்ல சமுதாயம். சமமான,  செல்வாக்குள்ள சமூக விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்கும் நோக்கம் உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள், குழந்தைகளுக்கான ஒரு லட்சம் தன்னார்வ நபர்களை உருவாக்கும் எண்ணம் உள்ளது.

மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஒரு முறையாவது இது போல் சமுதாயப் பணிகளில் ஈடுபடுங்கள். சேவை செய்யும்போது, உண்மையான மகிழ்ச்சியை உணருவீர்கள். VOLUNTEER ஆக ஒரு முறையாவது வேலை செய்து பாருங்கள், உங்களுக்கு கண்டிப்பாக அது நிம்மதியை தரும்.

Likes(3)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share