Jan 142016
 

12391414_924956920929721_8475639180000277652_n

(சென்ற இதழின் தொடர்ச்சி….)

இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுத்துள்ளீர்கள்? உங்களை போல் யூ-டியுபில் வகுப்பு எடுப்பவர்கள் சந்தித்த சவால்களைப் பற்றி ஏதேனும்?

இதுவரை 40 வீடியோக்களை வெளியிட்டுள்ளேன். Logarithm வீடியோ எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்த வீடியோ என்று சொல்வேன். அது போல் ஒரு வீடியோ எடுக்க சுமார் மூன்று வார காலம் வரை உழைக்க வேண்டும்.

அதன் பின்னணியில் உள்ள உழைப்பை நன்கு அறிந்த, கல்வித்துறைக்காக ஏற்கனவே வீடியோக்கள் வெளியிட்டு வகுப்பெடுத்த நான்கு நபர்களிடம்  பேசியபோது, “பொதுவாகவே கல்வி மற்றும் நல்ல விஷயங்கள் என்றால் நம் மக்களது ரெஸ்பான்ஸ் அத்தனை சிறப்பாக இருப்பது இல்லை, சினிமா மற்றும் ஏதேனும் பொழுதுபோக்கு விஷயங்களுக்கான மீம்ஸ் என்றால் அதற்கான வரவேற்பு மிகுதியாக இருக்கும். ரெஸ்பான்ஸ் சரியாக இல்லாததால் அந்த பணிகளை தொடர முடியாமல் பாதியில் விட்டு விட்டோம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பொழுதுபோக்கிற்கு உள்ள ஆதரவு நல்ல விஷயங்களுக்கு கிடையாது என்பது ஒரு பிராக்டிக்கலான பிரச்சினை தான். இதை எவ்வாறு கையாளலாம் என நினைத்தீர்கள்?

மக்கள் ஏன் ஆக்கபூர்வமான நல்ல விஷயங்களை ஆதரிக்காமல் பொழுதுபோக்கு பதிவுகளை பெரியளவில் ஆதரிக்கிறார்கள் என்ற வருந்தி,  “PLEASE SAVE THE CREATORS” என்ற ஒரு வீடியோவை எடுத்து ரிலிஸ் செய்தேன்.

மொத்தமாகவே, 45 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட அந்த வீடியோவிற்கு விருப்பங்களும், வரவேற்பும் இதுவரை நான் எடுத்த அனைத்து வீடியோக்களை விடவும் அதிகமாக இருந்தது. இது என்னை மிகவும் வியக்க வைத்தது.

ஒரு வீடியோவோ, ஒரு கட்டுரையோ, அதன் கருத்தை பார்த்து ரசிக்கிறவர்கள் நம்மூரில் சற்று குறைவு தான். ஏதாவது உணர்ச்சியை தூண்டும் வகையில் ஒரு கருத்தை வெளியிட்டால் அதை விரும்பி,  அதிகளவில் ஷேரிங் செய்கிறார்கள்.

இதை பார்க்கும்போது, எதற்கு மிகவும் உழைத்து அதிக நேரம் செலவு செய்து ஒரு நல்ல விஷயத்தை தர வேண்டும், நேரமே செலவழிக்காமல் இது போன்று எதாவுது உணர்ச்சிகரமானப் பதிவை ரிலிஸ் பண்ணிவிடலாமே என்று பலருக்கு தோன்றும் அல்லவா?

ஏதெனும் கல்வி நிறுவனங்களை அணுகி உங்களது வீடியோக்களை பார்க்குமாறு கேட்டிருக்கிறீர்களா? இந்த முயற்சிக்கு ஆசிரியர்களின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது?

இதுவரை நானாக சென்று எந்த கல்வி நிறுவனங்களிடமும் இதைப்பற்றி தெரிவிக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் வரை என்னை தொடர்பு கொண்டு, இந்த பணிகளை சிறப்பாக பாராட்டியுள்ளனர்.

தங்களது வகுப்புகளில் இந்த வீடியோக்களை போட்டுக்காட்டுகையில், மாணவர்களிடமிருந்து வரும் வரவேற்பு சிறப்பாக இருக்கிறது என்றும், இந்த வீடியோக்களின் மூலம் கற்பிப்பது மிகவும் எளிமையாக இருக்கிறது என்றும், இதை தொடர்ந்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

ஆனால் இந்த வீடியோக்கள் கிராமப்புற மாணவர்களுக்கு சென்றடையாமல் உள்ளது. என வீடியோ தொகுப்புகளை எல்லாம், குறுந்தகட்டில் பதிவேற்றி, அத்தகைய மாணவர்களுக்கு தரும் ஆசை உள்ளது.

உங்கள் பார்வையில் நம் கல்வி முறை எவ்வாறு உள்ளது?

கல்வி இப்போது முழுமையாக வியாபாரம் ஆகிவிட்டது. வாடிக்கையாளர்களை தம்மிடம் எவ்வாறு ஈர்ப்பது என்பது மட்டும் தான் ஒரு வியாபாரியின் நோக்கமாக இருக்கும். அதே நோக்கத்தில் தான் பள்ளிகளும் பேனர்களை அடித்து, எங்கள் பள்ளியில் இத்தனை விழுக்காடுகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், மாவட்ட அளவில் இத்தனை மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர் என விளம்பர படுத்துகின்றனர்.

அடுத்தது பல கல்வி நிறுவனங்களில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களை பணியில் அமர்த்துகின்றனர். ஆசிரியர்களுக்கு அனுபவம் இருக்கிறதா சொல்லித்தரும் திறமை இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பல கல்லூரிகளில், அந்தாண்டு படிப்பு முடித்த மாணவர்கள் அடுத்த வருட மாணவர்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கின்றனர்.

வேலைக்குச் சென்று அனுபவம் பெறாத அந்த ஆசிரியர்களுக்கு என்ன பிராக்டிக்கல் அறிவு இருக்கும், அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு சொல்லித் தரமுடியும்? அந்த கல்வி நிறுவனங்களின் பணம் சம்பாதிக்கும் பேராசையில், செலவை எவ்வாறு குறைத்துக்கொள்ள முடியும் என்று எண்ணி அத்தகைய ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.

அதனால் தான் பல கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகள், தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் அடிப்படை அறிவும் திறமையும் இன்றி வெளிவருகின்றனர். என்னை பொறுத்தவரை, பிராக்டிக்கல் அனுபவம் இருக்கும் ஒருவரால் தான் நல்ல ஆசிரியராக வர இயலும். இப்போது நாம் கற்றுக்கொடுக்கும் முறை சரியில்லை.

மேலும் மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, வகுப்பில் உள்ள கருப்பு பலகையில், சூத்திரங்கள், பாடங்கள் என ஆசிரியர்கள் எழுதி தள்ளுவார்கள். அதை அப்படியே தனது நோட்டில் எழுதவில்லை என்றால் அடி விழும் என்று மாணவர்களும் எழுதிவிடுவர். பரீட்சையிலும் மனபாடம் செய்து மதிப்பெண்கள் வாங்கி விடுவர். ஆனால் அதில் அறிவு எங்கு வளர்கின்றது?

நீங்கள் இருக்கும் அமேரிக்கா போன்ற நாடுகளில் கல்வி முறை எவ்வாறு இருக்கிறது?

கல்விக்காக வீடியோக்களை நான் செய்யத் தொடங்கியவுடன், இங்குள்ள பல  ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் பேசி நிறைய விவரங்களை திரட்டுகையில், இரண்டு நாடுகளில் உள்ள கல்வி முறைகளில் வேறுபாடுகள் தெளிவாக தெரிந்தது.

இங்கு எல்லா படிப்பிற்கும் ப்ராஜக்ட் செய்ய சொல்லி விடுவார்கள். ஐந்தாவது ஆறாவது படிக்கும் மாணவர்கள் கூட ப்ராஜக்ட் செய்தாக வேண்டும். ஆறாவது படிக்கும் மாணவன், எலக்ட்ரானிக்ஸ், உயிரியல், மைக்ரோபயாலாஜி என பல பாடங்களில் சிறு சிறு ப்ராஜக்டாவது செய்கின்றனர்.

அறிவியல் ப்ராஜக்ட் என்பது இந்நாட்டில் அவசியம் செய்தே ஆக வேண்டும். சிறு குழந்தைகள் கூட பள்ளிகளில் அவற்றை ரசித்து மகிழ்ந்து செய்கின்றன. நம்மூரில்  எல்லா பாடங்களையும் நாம் படிக்கிறோமே தவிர, பிராக்டிக்கலாக செய்து பார்ப்பதே இல்லையே? பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் மட்டும் வலுக்கட்டாயமாக ஆய்வுக்கூடங்களில் மாணவர்களை அனுப்புகிறோம்.

நமது மாணவர்களின் அறிவும் திறனும் மேற்கத்திய நாட்டு மாணவர்களை ஒப்பிடுகையில் எவ்வாறு உள்ளது?

அந்த வகையில் பெரிதும் வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கு வளரும் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தொழில்நுட்பத்திற்கு தொடர்பு எளிதாக கிடைத்துவிடுகிறது. அந்த மாணவர்கள் ஏதேனும் பாடம் புரியவில்லை என்றால், வீடியோக்களின் மூலம் அதை கற்றுக் கொள்கின்றனர். அம்மாதிரியான வசதி நம் நாட்டில், சில நகரங்களில் மட்டும் கிடைக்கிறதே தவிர பல கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. இது அடிப்படை கல்விக்கான (EDUCATIONA INFRASTRUCTURE) கட்டமைப்பில் உள்ள பிரச்சினை.

நாம் என்ன தருகிறோமோ, அவை தான் மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும். இன்னும் அந்தளவிற்கு நம் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை தரவில்லை.

இதற்கு என்ன செய்யலாம்? எவ்வாறு இதை மாற்றலாம்?

APPLICATION ORIENTED ஆக நம் கல்வி முறை இருக்க வேண்டும். இது தான் கான்செப்ட், இந்த இடங்களில் தான் இந்த பாடம் பயன்படுகிறது என்று பிராக்டிக்கலாக சொல்லித்தந்து, அடிப்படை கான்செப்டை புரியவைத்து விட்டால், மாணவர்கள் எத்தனை பெரிய சூத்திரம் கொடுத்தாலும், அவர்களே தீர்வை எழுதிவிடுவார்கள். மாணவர்களுக்கும் படிப்பில் ஒரு பிடித்தம் வரும்.

இந்தியாவில் APPLICATION BASED, VALUE BASED கல்வி முறையெல்லாம் சாத்தியம் தானா? அவைகளுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புகள் வருமா?

தற்போது எந்த அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் அதற்கான செயலையும் திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. இந்த கல்விமுறை போகும் வரை போகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தான் அனைவரும் இருக்கின்றனர்.

ஆனால் மாற்றம் கண்டிப்பாக வரும், வந்தே ஆக வேண்டும். அத்தகைய பயிற்சியையும், திறமையையும் பள்ளிகளில், கல்லூரிகளில் கிடைக்கவில்லை என்றால் கூட, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம், மாணவர்களுக்கு வெளியிலிருந்து அவற்றை தந்துவிடும் அளவிற்கு மாற்றம் நம் சமுதாயத்தில் வரும். இன்னும் ஐந்து பத்து ஆண்டுகளில் நமது மாணவர்கள் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் நிலையில் இருப்பர்.

கல்வித்துறையில் வீடியோக்களை, அணிமேஷன்களை வைத்து சொல்லித்தரும் பாடமுறைகளுக்கு வாய்ப்பும் வரவேற்பும் மிக அதிகமாக வரும் காலங்களில் இருக்கும். வகுப்பறை INTERACTIVE SESSIONS ஆக இருக்கும்.

பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

உங்கள் பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து பேசாதீர்கள். இரண்டாவதாக தங்கள் பள்ளிகளின் ரிசல்டிற்காக பள்ளிகள் தான் மாணவர்களை மதிப்பெண் எடுங்கள் என்று மன அழுத்தம் தருகிறார்கள் என்றால், பெற்றோர்களும் அதே தவறை செய்கின்றனர்.

மதிப்பெண் என்பது ஒரு மாணவனின் வாழ்வில் கடைசி வரை வரப்போவதில்லை. படித்து முடித்துவிட்டால், மாணவனின் திறமையை பொறுத்துதான் அவன் வாழ்க்கை அமையப்போகிறது. என் கூட படித்து, மதிப்பெண் சரியாக எடுக்காத சிலர், தங்கள் திறமையால் பெரியளவு சாதித்துள்ளதையும், மதிப்பெண் நன்றாக எடுத்தும் கஷ்டப்படும் சிலரையும் நான் பார்த்துள்ளேன்.

அதனால் மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என மாணவனை பெரும் மன உழைச்சலுக்கு ஆளாக்காமல் பெற்றோர்கள் இருக்க வேண்டும். நிறைய பெற்றோர்களுக்கு மதிப்பெண்களுக்கும் அறிவிற்கும் வித்தியாசமே தெரிவதில்லை. மதிப்பெண்களுக்கும் அறிவிற்கும் சம்பந்தமே இல்லை என அவர்கள் உணர வேண்டும்.

மாணவர்கள் எத்தனை மதிப்பெண் எடுக்கிறார்கள் என்று பார்க்காதீர்கள், என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் ஆசையை அவன் மீது திணிக்காதீர்கள், அவனுக்கு எது விருப்பமோ அதை படிக்க வையுங்கள். ஒருவேலை அவனுக்கு எந்த தனிப்பட்ட விருப்பமும் இல்லையெனில், அவனுக்கு ஆலோசனை கூறுங்கள்.

ஆசிரியர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

கண்டிப்பாக உண்டு. பல வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வித்துறையின் நல்ல விஷயங்களை சேகரித்துக்கொண்டு வருகையில் எனக்கு ஒன்று புலப்படுகிறது. நம் நாட்டில் உள்ள மாணவர்கள் உளவியல் ரீதியில் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். எந்த நாட்டிலும், பரீட்சை வைத்து முடித்தவுடன், வகுப்பறையில் பப்ளிக்காக மாணவர்களை கூப்பிட்டு, விடைத்தாள்களை தந்து, மதிப்பெண்களையும் கூறி அவமதிப்பதில்லை.

ஒரு மாணவனை நூறு பேர் மத்தியில் வைத்து, “நீ பத்து மதிப்பெண் தான் வாங்கி இருக்கிறாய், எதுக்குமே லாயக்கு இல்லை” என்று அவமதிக்கும் போது, அந்த மாணவன் பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகிறான். நமக்கு படிப்பு வராது என்ற எண்ணம் சிறு வயதில் அவனுக்கு ஆழமாக பதிந்து விடுகிறது.

குழந்தைகள் உளவியல் (CHILD PSYCHOLOGY) என்பது மிகவும் முக்கியமான சீரியஸான விஷயம். அதை கவனமாக கையாள வேண்டும். இது வகுப்பறை பிரச்சினை கிடையாது. சமுகப் பிரச்சினை.

மாணவர்களின் மதிப்பெண்களையும், அவர்களின் திறமைகளை குறித்தும் மாணவர்களிடமே தனியாக ஆசிரியர்கள் பேச வேண்டும் என்கிறீர்களா?

கண்டிப்பாக. பத்தாவது பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை ரிசல்டை இணையத்தில் வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் எந்த மாணவனின் மதிப்பெண்ணை பார்க்கலாம் என்ற சூழ்நிலை இங்குள்ளது. மேலும், மாநிலத்தில் முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் என்று கூறி செய்தித்தாள்களில் பரப்புவது, இதெல்லாம் மிக மோசமான விஷயங்கள். இது தோல்வியடைந்த மற்ற மாணவர்களை எப்படி எல்லாம் பாதிக்கிறது? இதை ஏன் ஒரு சமுக பிரச்சினையாக நாம் யாரும் பார்ப்பதில்லை? எந்த வளர்ந்த நாட்டிலும் இவையெல்லாம் நடக்காத செயல்கள். வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு இணைய தளத்தின் கடவுச்சொல் தரப்பட்டு அவன் மட்டும் அவன் மதிப்பெண்ணை பார்க்கும் அதிகாரம் தரப்படுகிறது.

அது மட்டுமன்றி, மாணவர்களை அனைவருக்கும் முன் முழங்காலில் மண்டியிட செய்தல், பப்ளிக்காக அடித்தல் போன்ற தண்டனைகளை தரும்போதே அவனது வாழ்க்கையையும், நம்பிக்கையையும் முழுதுமாக சிதைத்து விடுகிறோம். மாணவனின் தன்னம்பிக்கையை உடைத்து, அவனுள் தாழ்வு மனப்பான்மையை கொண்டு வந்துவிடுகிறோம். இவையெல்லாம் நம் கல்வித்துறையில் உள்ள மிகப்பெரிய குறைபாடுகள். இவற்றை உடனடியாக தீர்க்க வேண்டும்.

உங்கள் லட்சியம் என்ன?

கல்வியில் மாற்றத்தை பொறுத்தவரை நான் கல்வித்துறையையோ, கல்வி நிறுவனங்களையோ  நம்பவில்லை, மக்களை தான் நம்புகிறேன். மக்களே மக்களுக்காக மாற்றத்தை கொண்டு வரவேண்டும். மிகப் பெரியளவில் இதை நான் செய்ய நினைக்கிறேன்.

எனது முதல் திட்டமாக, ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் மற்றும் கணித பாடங்களின் ஒவ்வொரு கான்செப்டையும், APPLICATION ORIENTED கல்வி முறையாக எளிமையாக எடுத்துரைத்து, அவற்றை வீடியோக்களாக ஒரு இணைய தளத்தில பதிவு செய்ய நினைக்கிறேன். இது எப்போதும் மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

அடுத்த இலக்காக பள்ளிகளில் கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடங்களையும் இதே முறையில், மாணவர்களுக்கு புரியும் வகையில் பதிவு செய்திட வேண்டும். இது எளிமையான வேலை இல்லை.

இது என்னால் மட்டும் முடியக்கூடிய விஷயமில்லை. எனக்கு நிறைய மக்களின் உதவி தேவைப்படுகிறது. நிறைய அனுபவமுள்ள தொழில்முறை வல்லுனர்களை வைத்து பாடகோப்புகளை தயார் செய்ய வேண்டும். அவர்களின் அறிவையும் அனுபவத்தையும், பாடங்களில் உள்ள கான்செப்டுகளோடு இணைத்து, வீடியோக்களாக தயார் செய்து ஒரு பெரிய DATABASEஐ வைத்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை, அவர்களுக்கு ஆழமாக மண்டையில் எத்தி அனுப்பி விடவேண்டும். இவை அனைத்தையும் அவர்களுக்கு இலவசமாக கிடைக்க வழி செய்ய வேண்டும். அதோடு என் கடமை முடிந்து விடும். அதற்கு பின் அவர்கள் வாழ்கையை அவர்களே பார்த்துக்கொள்வர்.

டெக்னிக்கல், வீடியோ வேலைகள், எடிட்டிங் வேலைகள், நிதியுதவி, நல்ல தன்னார்வலர்கள், என பல உதவிகளும், ஆதரவும் தேவைப்படுகிறது. நிறைய கைகள் சேர வேண்டும். அப்போது தான் இது சாத்தியப்படும்

(இந்த பணிகள் தொடர்பாக, விருப்பமுள்ள யாரேனும் திரு.பிரேமை தொடர்புகொள்ள நினைத்தால், premanand2008@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

Likes(18)Dislikes(2)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share