Mar 142014
 

           

அலுவலக பணிகள் தொடர்பாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்கிற வாய்ப்புகள் எனக்கு  கிடைத்தன. அந்த இடங்களுக்கு போகும்போது, ராஜபுத்திர மன்னர்கள் பற்றிய சுவையான விவரங்கள், அவர்களது குணநலங்கள், வாழ்க்கைச் சரித்திரங்கள் பற்றியெல்லாம் தெரிய வந்தது.

அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ராஜபுத்திர வம்சத்தில் வந்த  மிக மிக முக்கியமான வீரனான பிருத்விராஜ் சவுகான் என்ற மன்னரைப் பற்றி கிடைத்த தகவல்கள் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. யாரிந்த மன்னன்? பல நூறு வருடங்கள் கழித்தும், அங்குள்ள மக்கள் இவரை நினைவில் வைத்து வணங்குவதற்குக் காரணங்கள் என்ன என்பதைப்பற்றி, இந்த மாத B+ இதழில், கதைக் கட்டுரைப் பகுதியில் காண்போம்.

இந்த மன்னரைப் பற்றிய நிறையத் தகவல்கள், அவரது வீரம், பெருந்தண்மை, தியாகம், காதல் வாழ்க்கை என பல விஷயங்கள் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவரது இறப்பைப் பற்றி மட்டும் வேறுபட்டத் தகவல்கள் இணைய தளங்களில் இருக்கின்றன. மேற்கூறிய மாநில மக்களிடம் கிடைத்த கருத்துக்களையும், இணையங்களின் பெரும்பாலரின் கூற்றுகளையும் வைத்து அந்த வீரணைப் பற்றி சில விவரங்களை இங்கே காண்போம்.

பெயரிலேயே வருவதைப் போல், ராஜபுத்திரர்கள் என்றால், மன்னர்களின் மகன்கள் என்று பொருள்படும். ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த ராஜபுத்திரர்களின் தொழில் போர் புரிதலும், விவசாயமும் ஆக இருந்திருக்கிறது. போர் புரிதலுக்கு தேவையான பல திறமைகள் மற்றும் தற்காப்புக் கலைகளில் வல்லவர்களாய் இருந்தாலும், ராஜபுத்திரர்கள் என்றுமே இசை, சிற்பக்கலை, ஓவியம் என்று பல கலைகளில் கைத்தேர்ந்தவர்களாய் இருந்துள்ளனர். நமது நாட்டின் கலைத் துறையில், இவர்களின் அர்பணிப்பு ஒரு பெரும் பங்காக இருந்தது என்றே சொல்லலாம்.

சவுகான் என்ற வம்சவழி வந்த பிருத்விராஜ் சவுகான் 1169 ஆம் ஆண்டு, தனது 20 வயதிற்குள்ளேயே, பெரும் சாம்ராஜியத்தை அஜ்மீர், மற்றும் தில்லியையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிப் புரிந்திருக்கிறார். பொதுவாக அச்சிறு வயது இளைஞர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அந்த பருவ வயதில் அவர்கள் என்னவெல்லாம் செய்துக் கொண்டிருப்பார்கள்? ஆனால் நம் மன்னரோ, இரு பெரிய சமஸ்தானங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார் என்றால், அவரது வீர தீரமும், ஆளுமைத்திறனும் எவ்வாறு இருந்திருக்க வேண்டுமென்று யோசித்துப் பாருங்கள்.

சிறு வயதிலிருந்தே கூர்மையான புத்தியும், போர்க்கள யுக்திகளில் கைத்தேர்ந்தவராய் இருந்திருக்கிறார். வில்வித்தையில் மிகச் சிறந்த வல்லுநராய்த் திகழ்ந்த நம் மன்னர், கண்களைக் கட்டிக் கொண்டு கூட, ஓசையை  வைத்தே துள்ளியமாக இலக்கை தாக்கி அழிக்கும் பேராற்றலைப் பெற்றிருந்தார்.  சிறு வயதில், எந்த ஒரு ஆயுதமுமின்றி ஒரு சிங்கத்தைத் தனி ஆளாய் எதிர்த்து நின்று கொன்றது, அவரது வீரத்திற்கு மற்றொரு சான்றாக சரித்திரத்தில் உள்ளது.

பிருத்விராஜ் மன்னனின் காதல் மற்றும் வீரம் தொடர்பான ஒரு அருமையான சம்பவம். கன்னாஜ் என்னும் மாவட்டத்தை ஜெய்சந்திர ரத்தோட் என்றொறு ராஜபுத்திர மன்னர் ஆண்டு வந்துள்ளார். (இப்போது உத்தரப்பிரதேஷ மாநிலத்தைச் சேர்ந்த பகுதியாக இந்தக் கன்னாஜ் உள்ளது). ஜெய்சந்திரனும் பிருத்விராஜும் தங்களுக்குள் அச்சமையத்தில், ஒற்றுமையின்றி மிகப்பெரிய எதிரிகளாய் இருந்துள்ளனர். இருப்பினும், ஜெய்சந்திரனின் மகளான சம்யுக்தைக்கும் (சன்யோகிதா என்றொரு பெயரும் உண்டு) பிருத்விராஜுக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதை மிக மிக பிரசித்திப் பெற்றது.

இவர்களது காதல் ஜெய்சந்திர மன்னருக்கும் தெரிய வந்தது. ஜெய்சந்திரன் ஒரு பெரிய சுயம்வரத்தை தன் மகளுக்கு ஏற்பாடு செய்தார். பல தேசங்களின்  இளவரசர்களை அழைத்து, சுயம்வரத்தில் கலந்துக் கொள்ளச் செய்தார். மேடையின் வாசலுக்கருகில், ஒரு காவல் காக்கும் வீரனைப் போல் பிருத்விராஜ்  கற்சிலை ஒன்றை செய்து, அவரை அவமதிக்கும் வகையில் அச்சிலையை அங்கேயே நிறுத்தி வைத்தார்.

சுயம்வரத்திலோ ஒரு அதிசயத்தக்க, யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தேரியது. சம்யுக்தை மாலையுடன் சுயம்வரத்திற்கு வர, யாரும் எதிர்பாராத வகையில், பிருத்விராஜின் சிலைக்கு மாலையிட்டு, தன் காதலைப் பறை சாற்றினாள். அப்போது அந்த சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிருத்விராஜ்  சம்யுக்தையை நொடிப்பொழுதில் தனது குதிரையில் தூக்கிக்கொண்டு சென்றது, இன்றும் காதலுக்கு அடையாளமாய் திகழ்கிறது. சம்யுக்தாவுடனானக் காதலும், மணமுடித்த வீரச்செயலும் சரித்திரத்தில் சிறப்பாய் இடம் பெற்றுள்ளது.

அது 1191 ஆம் வருடம். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மன்னனான முஹமது கோரி பிருத்விராஜ் மன்னன் மீது படையெடுத்து வருகிறான். சிங்கமென போர் புரிந்த பிருத்விராஜ் மன்னனும், அவரது படையினரும், கோரியின் படையை  தோற்கடிக்கின்றனர். கோரி கைது செய்யப்பட்டு, பிருத்விராஜ் மன்னர் முன் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு நிற்கிறான். பல போதகர்களும், ராஜகுருவும் எச்சரித்தும், ராஜபுத்திர வம்சத்தினரின் பண்பாட்டின்படியும், பெருந்தண்மையோடும், “பிழைத்துப் போ” என்று உயிர் பிச்சை வழங்கி கோரியை அனுப்பி விடுகிறார்.

நயவஞ்சகர்களுக்கு மன்னிப்பளிக்கக் கூடாது என்று அருமையாக உணர்த்திய ஒரு உண்மைச் சம்பவமாய் சரித்திர வல்லுனர்கள் இன்று கூட இதனை எடுத்துக் காட்டுகின்றனர். ஏனெனில், இந்த மன்னிப்பு முடிவு தான் ஹிந்துக்களின் சாம்ராஜ்யம் இந்தியாவில் முடிவிக்கு வரக் காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அடுத்த வருடமே (1192 இல்), கோரி இன்னுமொரு பெரும் படையுடன் வந்து,  பிருத்விராஜ் மன்னரை அவரது மாமனார் ஜெய்சந்திரனின் உதவியோடு, வஞ்சகமாய் போர்களின் விதிகளை கடைப்பிடிக்காமல், தோற்கடித்தான்.

பிருத்விராஜ் மன்னரால் எப்போதுமே தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என நினைத்து, காய்ச்சுப் பழுக்க வைத்த இரும்புக் கம்பிகளினால், பிருத்விராஜின்  இரண்டு கண்களையும் பொசுக்கி, பார்வையற்றவராய் ஆக்கி விடுகிறான். பிருத்விராஜின் அத்தனை சொத்துக்களையும் சூரையாடியது கோரியின் படை. இந்த விஷயங்கள் அனைத்தையும் கேள்வி பட்டவுடன், கோரி அந்தபுரத்திற்குள் நுழைவதற்கு முன்பே, ராஜபுத்திரர்களின் கலாச்சாரத்தின்படி, பிருத்விராஜ் மன்னரின் மனைவியும், அவரது படை வீரர்களின் மனைவிகளும், தங்கள் உயிரை மாய்த்து இருந்தார்கள்.

இப்போது கதையின் முக்கியமான விஷயத்திற்கு வருவோம். ஆஃப்கானிஸ்தானிற்கு பிருத்விராஜ் மன்னரைக் கொண்டு சென்று சிறையில் அடைத்த கோரி, பல சித்திரவதைகளை கொடுத்தான். பிருத்விராஜின் சிறந்த நண்பரும், அரண்மனைக் கவிஞரான சந்த் பார்டாய் என்பவரும் அவருடன் ஆஃப்கானிஸ்தானில் கைதியாக இருந்தார். கோரி ஒரு நாள் வில்வித்தைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். விளையாட்டு மைதானத்தில் பல படிகட்டுகளுடன் உயரமான இடத்தில், சிம்மாசனத்தில் அவன் அமர்ந்திருக்க, மைதானத்தை சுற்றிலும் பார்வையாளர்கள் போட்டியை ரசித்து ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். கோரி உட்கார்ந்திருந்த நேரெதிர் திசையில் ஒரு மணி உயரத்தில் கட்டி விடப்பட்டிருந்தது. பிருத்விராஜ் அந்த மைதானத்திற்கு இழுத்து வரப்பட்டார். அவரைப் பார்த்து, கோரி, “நீ தான், வில்வித்தை வீரனாயிற்றே, அதோ அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் மணி ஓசை ஒளிக்கும், அதனை சரியாக வில்லால் வீழ்த்து” எனக்கூறி சவால் விட்டான்.

சந்த் பார்டாயும், பிருத்விராஜிற்கு மணி எந்த இடத்தில், எத்தனை தூரத்தில் கட்டப்பட்டுள்ளது எனவும், கோரி எங்கு அமர்ந்துள்ளான், எத்தனை தொலைவில் உள்ளான் என்ற விவரத்தையும் ஒரு அழகானக் கவிதை மூலம் தெரிவிக்கிறார்.  முதல் மணி மைதானத்தில் அடிக்கப்பட்டவுடன், நண்பன் கூறியிருந்த விவரங்களை வைத்தும், மணியோசையினையும் கவணித்து, துள்ளியமாக கணக்கிட்டு, பிருத்விராஜ் அம்பை எடுத்து வில்லை மணி இருந்த இடத்தில் சீராகப் பாய்ச்ச, கட்டப்பட்டிருந்த மணி தொப்பென்றுக் கீழே விழுந்தது. இதனைப் பார்த்த கோரி ஆர்வத்தை அடக்க முடியாமல், “சபாஷ்” எனக் கத்தி ஆர்ப்பரிக்கவும், “இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது, முடித்து விடு பிருத்வி அந்தக் கொடிய மிருகத்தின் கதையை” என்று சந்த் பார்டாய் கர்ஜிக்கவும், அடுத்த வில்லை பிருத்விராஜ் மின்னலென கோரியின் கழுத்தை நோக்கி எய்கிறார். அம்பிலிருந்து சீரிப்பாய்ந்த வில், கோரியின் கழுத்தை நேராக சென்று துளைத்து, அவன் தலையைத் துண்டிக்கிறது. இரத்த வெள்ளத்துடன் கோரி சிம்மாசனத்திலிருந்து சாய்ந்துக் கீழே விழுந்து உயிர்விடுகிறான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இது அத்தனையும் நடந்து முடியவே, கோரியின் படை வீரர்கள், பிருத்விராஜை நோக்கி மைதானத்திற்குள் வேகமாகப் பாய்கின்றனர். அவர்கள் நெருங்குவதற்கு முன்பே, “என் மரணம் உன் கையில் நிகழ்ந்தால் தான் மகிழ்ச்சி நண்பா” என இருவரும் ஏற்கனவே பேசி வைத்தபடி, பிருத்விராஜும் நண்பர் சந்த் பார்டாயும் தங்களை ஒருவருக்கொருவர் கத்தியால் குத்திக் கொண்டு வீர மரணம் அடைகின்றனர். பிருத்விராஜின் உடலுக்கு ஆஃப்கானிஸ்தானிலேயே ஒரு சமாதி, கோரியின் சமாதிக்கு அருகில் அந்நாட்டு மக்களால் கட்டப்பட்டுள்ளது.

kk1கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் முன் நடந்த உண்மையான வீர சம்பவத்தைக் கண்ட பின், இன்றைய நிகழ்காலத்திற்கு வருவோம். இன்று வரை, ஆஃப்கானிஸ்தானில் கோரியின் சமாதியினைக் காணச் செல்லும் அந்நாட்டு மக்கள், தங்கள் மன்னன் கோரியை கொன்றதற்காக, பிருத்விராஜ் சமாதியினை கல்லால் அடித்தும், காலால் உதைத்தும் அவமரியாதை செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். நமது இந்திய அரசு முயன்றால், இத்தகைய சிறப்புடைய மாவீரன் பிருத்விராஜ் சவுகானின் சுவடுகளையும், அடையாளங்களையும், நினைவுப் பொருள்களையும் ஆஃப்கானிஸ்தானிலிந்து வரவழைக்கப்பட்டு நமது தேசிய பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்றாய் பராமரிக்கலாம் என்று பிருத்விராஜின் வம்சாவழியினர் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் இன்றும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

Likes(3)Dislikes(0)
Share
 Posted by at 6:25 am

  5 Responses to “வரலாற்றுக் காவியம்”

 1. ஒவ்வொரு மாநிலத்திலும் அரிய பல‌
  தகவல்கள் பொக்கிசமாய் புதைந்துள்ளன்.
  இது வரை அறியப்படாத புதுத் தகவல் என்றாலும்
  கோர்வையாக சம்பவங்களை வெளியிட்டுள்ள‌
  உங்கள் எழுத்தாளுமையும் அருமை!
  வாழ்த்தும், பாராட்டும்!
  ஆல்பர்ட்,
  விச்கான்சின்,
  அமெரிக்கா.

  Likes(0)Dislikes(0)
 2. your languagage is very good/every one can understand/correct way of telling a story/all the best/now i understand about prithivi raj

  Likes(0)Dislikes(0)
  • thank you so much Annamalai Sir for your encouragement. These historical events are treasures to be proud of us!!

   Likes(1)Dislikes(0)
 3. Inspiring....

  Likes(0)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share