Sep 142015
 

Arvind4_jpg_2528474g

முற்றிலும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்துவிடாமல், தங்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது என்று நம் சினிமாத் துறையினர் அவ்வப்போது தெரிவிப்பதுண்டு. சென்ற வருடம், மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பகிரங்கமாக தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் “சதுரங்க வேட்டை” என்றால், கண்டிப்பாக “தனி ஒருவன்” படம் இந்த வருடத்திற்கான சமூக விழிப்புணர்வை தந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தனி ஒருவனில், சித்தார்த் அபிமன்யுமாகவே மாறி வாழ்ந்திருந்த நடிகர் அரவிந்த ஸ்வாமியின் பாத்திரத்தை செதுக்கிய விதம் உலகத் தரம். அவரது உடல் மொழி, முக பாவனைகள், சிரித்துக்கொண்டே செய்யும் வில்லத்தனம், வசன உச்சரிப்பு அனைத்தும் ஆஸ்காரையும் தாண்டி பயணம் செய்யக்கூடியவை.

சினிமாப் பதிவுகளை பொதுவாக தொடாத நமது B+ இதழில், இந்த சினிமாவைப் பற்றிக் குறிப்பிட 2 முக்கியக் காரணங்கள் உள்ளன.

முதல் காரணம் – அந்த படத்தில் வரும் பல தீப்பொறி வசனங்களுக்கு இடையே, விஞ்சி நிற்கும் 2 சிறந்த வசன வரிகள்..

“வாழ்க்கையில் ஒரே ஒரு ஐடியாவ எடுத்துக்கோங்க, அந்த ஐடியாவையே உங்க வாழ்க்கையா ஆக்கிகோங்க” என்ற வசனமும்,

“சுத்தி சாக்கடை நடுவில் வாழ்ந்துட்டு, மூக்கை மூடிக்கிட்டு, நாத்தமே அடிக்கலனு, என்ன நானே ஏமாத்திக்க போறனா, இல்ல, தைரியமா, மூக்கிலேந்து கைய எடுத்துட்டு, நாத்தம் அடிக்கத்தான் செய்யுது, என் சுத்தத்த நானே செய்ய எறங்க போறனானு, அன்னைக்கி நான் கேட்ட கேள்விக்கு, இன்னைக்கி என் வாழ்க்கை தான் பதில்” என்று ஹீரோ முடிக்கும் மற்றொரு வசனமும் மிகச் சிறப்பாய் அமைந்தன.

இரண்டாவது காரணம், தொழிலதிபர்கள் நினைத்தால், என்னென்னவெல்லாம் நம்நாட்டில் செய்ய முடியுமென்றும், மருத்துவ உலகில் நடக்கும் வியாபார அவலங்களையும் போட்டு உடைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கேற்ப, மருத்துவ உலகில் நடக்கும் வியாபார விளையாட்டுகளை, நேரடியாக அறியும் வகையில், சில சம்பவங்களை சமீபத்தில் நான் காண நேர்ந்தது. இரண்டு வாரங்களிற்கு முன், சென்னையின் ஒரு பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனையில் என் தாயாரை அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த 10நாட்களில், எனக்கு மட்டுமன்றி, நான் சந்தித்த பல நோயாளிகளும், அவர்கள் கூட வந்த அட்டெண்டர்களின் மன உளைச்சலும், கண்ட அந்நியாயங்களையும், ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.

கார்ப்பொரேட் மருத்துவமனைகளில், பல்ஸ் ரேட்டை (PULSE) கவனிப்பதைவிட, பர்ஸ் ரேட்டை (PURSE) பற்றி மட்டுமே அதிக குறி வைப்பதும், மனித உயிரையெல்லாம் துச்சமாக கருதப்பட்டு, பணம் மட்டுமே கண்ணிற்கு தெரியும், பேசும் கருவியாக மாறி வருவதும், பெருந்துயரம், அவலம், கேவலம்.

மற்றொரு சோகமான விஷயம், அங்கு வேலை செய்யும் மருத்துவர்கள், தாங்கள் படித்த படிப்பையும், உன்னத மருத்துவ தொழிலின் புனிதத்தையும் அடமானம் வைத்துவிட்டு, நிர்வாகத்தின் முதலை முதலாளிகளுக்கு கைக் கட்டி வாய்பொத்தி அடிமைகளாக நிற்பதுதான்.

“படிப்பு, மார்க்கு என்று பள்ளிகளில் இருந்தே அரும்பாடுபட்டு MBBS, MD என படிக்கும் எல்லா மருத்துவ துறை மாணவர்களும் தனியாக கிளினிக் அமைத்து, பெரும் பேரையும் பணத்தையும் சம்பாதிக்கும் மருத்துவர்களாகி விட முடிவதில்லை. அதெல்லாம், வெகு சிலருக்கு மட்டும் தான் சாத்தியப் படுகிறது. நிறைய மருத்துவர்கள், இதுபோன்ற கார்ப்பொரேட் மருத்துவமனைகளை நம்பி தான் பணி செய்து கொண்டு இருக்கின்றனர். பல லட்சங்களை நோயாளிகளிடம் கறக்கும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள், அங்கு வேலை செய்யும் மருத்துவர்களுக்கு சில ஆயிரங்களை மட்டுமே தருகின்றனர்” என்று அவர்கள் தரப்பு கவலைகளை தெரிவித்தார் என் மருத்துவ நண்பர் ஒருவர்.

மனசாட்சி உள்ளவர்கள், மூக்கின் மீது வைத்தக் கையை எடுத்துவிட்டு, ஆமாம் சாக்கடையில் தான் இத்தனை நாட்களாக வாழ்ந்துள்ளோம், என்று உணரவாவது செய்யட்டும், இல்லாதவர்கள், மூக்கை மூடிக் கொண்டு, எல்லாம் சரியாக உள்ளது என்று நினைத்துக் கொள்ளட்டும்.

மருத்துவமும் கல்வித்துறையும் எந்த நாட்டில் 100% வியாபாரம் ஆக்கப்படுகிறதோ, அந்த சமுதாயத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

மிக்ஸி, டீவி, மின்விசிறி என இலவசங்களை அள்ளி வீசும் அரசாங்கம், அம்மாதிரியான இலவசங்களை தவிர்த்து, “தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்காமல், 100% அரசு மருத்துவமனையில் தான் மக்களுக்கு சிகிச்சை” என்று அறிவித்து அதன் செலவுகளை நாட்டு மக்களுக்காக ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும்?

துயர சிந்தனையுடன் இருந்த எனக்கு, அந்த ஒரு நிகழ்வு பெரும் நம்பிக்கை விதையாய் தெரிந்தது.

கூடிய விரைவில் அதைப் பற்றி பேசுவோம்..

தொடரும்….

விமல் தியாகராஜன் & B+ TEAM

 

Likes(11)Dislikes(0)
Share

  3 Responses to “தனி ஒருவன்!”

 1. தமிழ் உணர்வும், நாட்டுணர்வும் கலந்த நல்ல இதழ் பி+. மிகவும் சந்தோஷமாக உள்ளது. சில தமிழ்ப் பதிவுகளில், எழுத்துப் பிழைகள் அதிகமாய்க் காணப் படுகிறது.

  Likes(1)Dislikes(0)
  • திரு.ராஜேந்திரன் அவர்களே, உங்கள் பாராட்டுக்கு நன்றி..
   பதிவுகளில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள், தவறுக்கு மன்னிக்கவும். முடிந்தளவிற்கு பிழை வராமல் இனி வரும் இதழ்களில் பார்த்துக்கொள்கிறோம்..

   Likes(0)Dislikes(0)
 2. அம்மாவுக்கு நல்ல விஷயங்களை எடுத்துசொல்ல ஆள் இல்லை ===இலவசங்களேதேவை இல்லை கல்வியையும் மருத்தவத்தையும் வியாபாரமாக்காமல் இருந்தாலே போதும்--சரஸ்வதிராசேந்திரன்

  Likes(2)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share