Jul 142015
 

Ach2 (1)

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிக உயரிய பதவி, நீச்சல் போட்டிகளில் பல முறை தேசிய சாம்பியன் விருதுகள், கூடைப்பந்து மற்றும் நீச்சல் சங்கங்களில் முக்கிய பொறுப்பு, தொண்டு நிறுவனம் என ஏகப்பட்ட முகங்கள் அவருக்கு.

இயற்கை அவருக்கு இரண்டு கைகள் மட்டுமே சரியாக கொடுத்தது, ஆனால் அதை பொருட்படுத்தாமல் “இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை, அடைவதற்கு இந்த உலகமே உண்டு” என்ற வரிக்கு ஏற்றார் போல், தன்னையும் தன்னைப் போல் உள்ள பலரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தி வரும் திருமதி.மாதவி லதாவின் சாதனைகளும் பேட்டியும் இந்த மாத B+ சாதனையாளரின் பக்கத்தில்.

தான் யாரது ஆதரவின்றியும் வாழ வேண்டும், யாருக்கும் பாரமாக இருந்திடக் கூடாது என்ற அவரது ஆழ்ந்த எண்ணம், பேட்டிக்காக அவர் மட்டும் தனியாக தானியங்கி வீல் சேரை லாவகமாக ஓட்டி வந்த பாங்கில் தெரிந்தது.

அவரிடம் வெளிப்பட்ட தன்னம்பிக்கை கலந்த புத்துணர்ச்சி, சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கும் அவரது பாதைக்கு “வானமே எல்லை” என்பதை தெளிவாக காட்டியது. இனி அவர் பேட்டியிலிருந்து..

வணக்கம், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்..

வணக்கம், என் பெயர் மாதவி லதா. மாற்றுத் திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டின் கூட்டமைபிற்கு தலைவராகவும், தமிழக பாராலிம்பிக்ஸ் (PARALYMPICS) நீச்சல் சங்கத்தின் பொது செயலாளராகவும், “YES WE TOO CAN” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் நிறுவனராகவும் உள்ளேன். ஒரு தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் துனைத் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

(பாராலிம்பிக்ஸ் போட்டிகள் என்பது பல விதமான ஊனத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சி)

இதை படிக்கும் வாசகர்களுக்காக, உங்கள் உடல் ரீதியான பாதிப்பைப் பற்றி..

ஏழு வயது குழந்தையாக இருக்கும் போதே, என் இடது கை தவிர மற்ற உடல் பாகங்கள் தீவிர போலியோ நோயால் பாதிக்கப்பட்டன. சிறிது நாட்கள் கழித்து, வலது கை சரியானது, ஆனாலும் இரண்டு கால்களும், முதுகு தண்டும் சுத்தமாக பாதிக்கப்பட்டது.

பிறந்தது, படித்தது..

(இப்போதய தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள) சத்ரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தேன். தந்தை ஒரு உயர்நிலைப் பள்ளியில் பணிப்புரிந்த ரிடையர்ட் தலைமை ஆசிரியர். பத்தாவது வரை சத்ரப்பள்ளியில் படித்தேன். அதற்கு மேல், மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகள் அங்கு இல்லை என்பதால் வீட்டிலிருந்தே 12ஆம் வகுப்பு, பீ.ஏ. டிகிரியும் தனியாக படித்தேன்.

வெளியே என்னால் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் வீட்டிற்குள் வெளியுலகத்தினர் என்னை வந்து பார்க்க ஒரு வழி செய்தேன். கணக்குப் பாடத்திலும், பயிற்றுவித்தலிலும் ஈடுபாடு அதிகம் இருந்ததினால், மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே டியுஷன் சொல்லித்தருவேன்.

வங்கி வேலை எவ்வாறு ஆரம்பித்தது?

சிறுவயதில் ஆசிரியர் ஆக தான் விருப்பம் அதிகம் இருந்தது. ஆனாலும் நிக்க முடியாத சூழ்நிலையால், வேறு வேலை தேடலாம் என பல இடங்களில் விண்ணப்பித்தேன். சில நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களால் வேலை தர இயலாது என மறுத்துவிட்டனர். அப்போது தான் என் உறவினர் ஒருவர், வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என கூறவே, வங்கிகளுக்கு முயற்சி செய்தேன்.

WRITTEN பரீட்சையிலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றாலும், மெடிக்கலில் UNFIT என்று கூறி வங்கி வேலையில் என்னை நிராகரித்துவிட்டனர். அதை எதிர்த்து போராட, எங்கள் கிராமத்தை விட்டு பெற்றோர்களுடன், ஹைதிராபாத் சென்றேன். எலும்பு மருத்துவர்கள், பல அரசு அதிகாரிகள், வக்கீல்கள் என அனைவரையும் சென்று சந்தித்தோம். பின்னர் மீண்டும் ஒரு மெடிக்கல் சோதனை, ஒரு எலும்பு மருத்துவரை வைத்து ஃபிட்னஸ் நடத்தினார்கள். இம்முறை எனக்கு அனுமதி அளித்து, ஸ்டேட் பாங்கில் பணிக்கு நியமித்தனர்.

நீச்சல் துறையில் எவ்வாறு நுழைந்தீர்கள்?

வேலையில் ஈடுபாடு அதிகம் என்பதால், கடுமையாக உழைப்பேன். பல வருடங்கள் நீண்ட நேரமாய் ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலை செய்தது உடலுக்கு பெரும் கேடு விளைவித்தது.

2007ஆம் வருடம் கடும் முதுகு வலி வந்து தசைகள் வலுவிழந்தன. மருத்துவர்கள் உடனடியாக முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தினர். செய்யாவிடில், ஒரு வருட காலம் தான் என் வாழ்க்கை இருக்கும், அதிலும் நிறைய உடல் பிரச்சினைகள் உண்டாகும் என தெரிவித்தனர். சிகிச்சையின் பலனும், சந்தேகம் தான் என்றும் கூறவே, ஹோமியோபதி மற்றும் பிசியோதெரபி முறைக்கு சென்றேன். பிசியோதெரபி மூலம் WATERTHERAPHY முறைக்கு அறிமுகம் கிடைத்தது.

WATERTHERAPHY முறையில் நீரில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது தான் நீச்சலுக்கும் நுழைந்தேன். சிறு வயதிலிருந்தே நீச்சல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நீச்சல் அடிப்பது என்பது ஒரு பெரும் கனவாக இருந்தது. ஆனால் எனக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்துவிடும் என்று வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. இந்த உடல் வலிக்காக நீச்சல் செய்தாக வேண்டும் என அனுமதி வாங்கினேன். அதற்கு என் உடல்நிலைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

நீச்சலும் நானே கற்றுக்கொண்டேன். ஏனெனில் அந்த காலத்தில் கோச்சுகளுக்கு என்னைப் போன்றோர்களுக்கு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுப்பது தெரியாது. நீச்சல் என் உடல் நிலையை சீராக்கியது. அது போல் ஒரு சிகிச்சை இல்லை. இந்த விவரம் அனைவருக்கும் பரவி தெரிய வேண்டும் என நினைக்கிறேன்.

 

இந்த நீச்சல் ஆர்வம் தான் ஒரு தேசிய சாம்பியன் பிறக்க காரணமாயிருந்ததா?

ஆம். நீச்சல் தெரிந்ததால், சாதாரண மக்களுடன் போட்டிகளில் கலந்துக்கொள்ள ஆரம்பித்தேன். முதல் முறை நீச்சல் போட்டிக்கு நான் இறங்கியபோது, போட்டி நடத்துபவர்கள், இந்த பெண் எவ்வாறு நீந்துவார் என வெகுவாக பயந்தனர். பாதுகாப்பிற்கு எனக்கு முன்பும், பின்பும் இரண்டு நீச்சல் வீரர்களைப் போட்டு அனுமதி அளித்தனர். ஆனால் சர்வதேச விதிகளின் படி நடந்த அந்த 100மீ போட்டியில், அவர்கள் உதவி இல்லாமலே நான் முழுமையாக நீந்தி முடித்தேன். அதற்காக எனக்கு “சிறந்த ஊக்குவிக்கும் வீராங்கனை” என்ற விருதை தந்தனர்.

அந்த போட்டி நடக்கும் வரை, மூளை வழியாக நடக்கும் எல்லா போட்டிகள் தான் நமக்குரியது, உடல் ரீதியான போட்டிகள் நமக்குறியதில்லை என எண்ணியிருந்த என் வாழ்வில் ஒரு பெரும் மாற்றம் வந்தது. பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்தது. அதற்கு முன்னரே ஸ்கூட்டர் ஓட்டுவது, கார் ஓட்டுவது, பல வேலைகள் செய்வது இவைகள் தான் என்னால் அதிக பட்சமாக செய்ய முடியும் என இருந்த நான், அதற்கு மேலும் நம் வாழ்வில் முடியும் என என் பயணத்தை தொடங்கினேன்.

தெருக்களில் யாராவது விளையாடினால் கூட, விளையாடுபவர்கள் என் மீது தெரியாமல் விழுந்து விட்டால் எனக்கு அடிபட்டு விடும் என்ற அக்கறையில், என் பெற்றோர்கள் விளையாட்டு பக்கமே என்னை அனுப்ப மாட்டார்கள். பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, பரீட்சைகளில் முதல் மார்க்குகள் என பள்ளிகளில் SCHOOL DAY விழாக்களில் பல பரிசுகள் எனக்கு ஒவ்வொரு வருடமும் கிடைக்கும். ஆனால் எப்போதும் விளையாட்டுகள் என்றால் பூஜ்ஜியம் தான்.

அப்படியெல்லாம் இருந்த எனக்கு, 40 வயதிற்கு மேல், விளையாட்டு வீராங்கனையாக வாய்ப்பு கிடைத்தது, ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போலிருந்தது. பின்னர் பாராலிம்பிக்ஸ் (PARALYMPICS) போட்டிகளின் வழியாக தேசிய சாம்பியன் ஆனேன். பல மாற்றுத் திறனாளிகளை  விளையாட்டுத் துறையில் நுழைய ஊக்குவித்துக் கொண்டிருக்கிறேன்.

பாராலிம்பிக்ஸ் சங்கம் குறித்து..

தமிழகத்திலிருந்து, ஏழாவது தேசிய பாராலிம்பிக்ஸ் சாம்பியன் போட்டிகளில் என்னுடன் சேர்த்து மூன்று மற்ற நீச்சல் வீரர்களையும் அழைத்து சென்று கலந்துக்கொண்டேன். நாங்கள் நால்வரும் 4 தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 8பதக்கங்களை குவித்தோம். அதில் நான் மட்டும் 3 தங்கப்பதக்கங்கள் வென்று தேசிய சாம்பியன் ஆனேன். அதற்கு பின்னும் தொடர்ச்சியாக பல போட்டிகள், பல பதக்கங்கள் வென்றோம்.

அதோடு நில்லாமல், பாராலிம்பிக்ஸ் நீச்சல் சங்கத்தை நிறுவினோம். 4 நீச்சல் வீரர்களை வைத்து ஆரம்பித்த நிறுவனம் மூலம், கடந்த வருடம் சுமார் 250 வீரர்கள் வரை இடம்பெற்றனர். அதில் 60 பேரை தேர்வு செய்து தேசிய போட்டிகளுக்கு அனுப்பினோம்.

இது போன்ற போட்டிகளுக்கு சமுதாயத்தில் ஆதரவு எவ்வாறு உள்ளது?

சென்னை ஐஐடி (IIT) கல்வி நிறுவனம் நீச்சல் போட்டிகளில் மாற்றுத் திறனாளிகள்  கலந்துக்கொள்ள வேண்டி, நீச்சல் குளத்தில் இயங்கும் ஒரு சிறப்பு லிஃப்டை (LIFT) தயார் செய்துள்ளனர். தமிழக அரசும், விளையாட்டு முன்னேற்ற கழகமும் எங்களுக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர். 16வயதுக்குள்ள மாற்றுத் திறனாளிகள், அரசின் எந்த விளையாட்டு வசதிகளையும் இலவசமாக பயன்படுத்தலாம், 16 வயதிற்கு மேலுள்ள மாற்றுத் திறனாளிகள், 50% மட்டும் கட்டணம் தந்தால் போதுமானது. அது மட்டுமன்றி அரசு, பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய நீச்சல் அரங்கை கட்டி வருகிறது.

 Ach2 (2)

கூடைப்பந்து ஈடுபாடு பற்றி..

CHOICE INTERNATIONAL என்ற நிறுவனம் என்னை அனுகி மாற்றுத் திறனாளிகளுக்கான  கூடைப்பந்து விளையாட்டிற்கென்று ஒரு அமைப்பு ஏற்படுத்தும் எண்ணத்தை தெரிவித்தனர். கூடைப்பந்து நீச்சல் போல் அல்லாது, ஒரு குழுவாக இனைந்து விளையாடும் ஓர் ஆட்டம். விளையாடுவோர் மத்தியில் மிகுந்த ஆர்வமும் உற்சாகமும் இருக்கும். அதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, 5மாநிலங்களில் உள்ளோர்களை வரவழைத்து கூட்டங்கள் நடத்தினோம். சென்னையில் கூடைப்பந்திற்கென தேசிய சாம்பியன்ஷிப் நடத்தினோம்.

கூடைப்பந்து ஒரு சவால் நிறைந்த ஆட்டம். அதற்கென்று சிறப்பு விளையாட்டு சக்கர நாற்காலிகள் வேண்டும். அவை இந்தியாவில் கிடைப்பதில்லை. அவைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இந்தியாவிலேயே  ஏதாவது நிறுவனம் இதை வடிவமைத்து செய்தால் தந்தால் நன்றாக இருக்கும்.

YES WE TOO CAN நிறுவனம் பற்றி சில வரிகள்..

விளையாட்டில் ஈடுபடுவதில் கிடைக்கும் நன்மைகளை நான் உணர்ந்திருக்கிறேன். இந்த இயக்கத்தை ஆரம்பித்ததன் நோக்கமே, மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு மூலம் எத்தனை பலன் அடையலாம் என்று அனைவரையும் அறிய வைக்கதான்.

பெற்றோர்களுக்கு விளையாட்டுத் துறையில் அத்தனை ஈடுபாடு இல்லை. மாற்றுத் திறனாளிகள் என்று மட்டும் இல்லை, அனைத்து குழந்தைகளும் அவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு கூடவே, அவர்கள் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும், உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க, ஏதேனும் ஒரு விளையாட்டிலாவது கலந்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுகளில் நான் கவனம் செலுத்தவதற்கான காரணம், அவர்களுக்கு வாய்ப்புகளும் ஆதரவும், சமுதாயத்திலும் பெற்றோர்களிடம் இருந்தும் கிடைப்பதில்லை. அவர்களது உடல் பாதிப்பு உண்டாகும் என பயமுறுத்தப் படுகின்றனர். ஆனால் உண்மையில் விளையாட்டு அவர்களது மனநிலையையும், உடல் நிலையையும் மேம்படுத்துகிறது. அவர்கள் எதிர்மறை மற்றும் தாழ்வு மனப்பாண்மை எண்ணத்திலிருந்து வெளிவருவர். தாமும் ஒரு சாதாரண மனிதன் தான் என்ற எண்ணம் வரும்.

நீச்சலிலும் மற்றப் போட்டிகளிலும் முக்கிய பொறுப்புள்ளதால், நான் பல இடங்களுக்கு சென்று பல மனிதர்களை சந்தித்து கருத்தரங்கமும், கூட்டமும் நடத்த நேர்கிறது. என் நம்பிக்கை பல மடங்காக பெருக காரணமாக இருந்தது விளையாட்டுத் துறை தான். அதனால் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டு துறையில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்நிறுவனம் மூலம் இவற்றையெல்லாம் பரப்பி வருகிறேன். (Ref:  http://ywtccharitabletrust.hpage.in/)

மக்களுக்கு உங்கள் கருத்து..

ஹைட்ரோதெரபி அனைத்து மக்களுக்கும் ஒரு அருமையான சிகிச்சை. என்னை நடமாட வைத்தது மருத்துவர்கள் என்றால், என்னை சுதந்திரமாக பல இடங்களுக்கு இந்த வீல் சேர் மூலம் சுற்ற வைத்தது பொறியாளர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வேன். ஆனால் பொறியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். அவர்கள் எந்தப் பொருளை வடிவமைத்தாலும், அது UNIVERSAL DESIGN ஆக இருக்க வேண்டும். அவை எல்லா விதமான மக்களாலும் பயன்படுத்தப்படும் விதத்தில் இருக்க வேண்டும்.

பள்ளிகளில், கல்லூரிகளில் இருந்து வரும் கோச்சுகள் பாராலிம்பிக்ஸ் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களுக்கும் பொழுதுபோக்கு தேவை என அனைவரும் உணர வேண்டும்.

முக்கியமாக பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். முதலில் அவர்கள் குழந்தைகளை அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும். பயத்தில், குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆதரவு தந்து, அவர்களின் விருப்பத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கடைசியாக மாற்றுத் திறனாளிகளுக்கு.. உங்கள் மீது சந்தேகப் படாதீர்கள். புது முயற்சி எடுக்க நேர்ந்தால், மக்கள் சிரிப்பார்கள் என எண்ணாதீர்கள். தாழ்வு மனப்பாண்மையை தூக்கி எறிந்து, வானமே எல்லை என எண்ணுங்கள். உங்கள் ஆசைகளையும், லட்சியங்களையும் வெளிப்படுத்துங்கள், உலகம் உங்களுக்கு ஆதரவு தரும். உங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்து விடாதீர்கள்.

இந்த கருத்துக்களை எல்லாம் வெளியுலகத்திற்கு எவ்வாறு கொண்டு சேர்க்கிறீர்கள்? அதை எவ்வாறு மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?

எனக்கு மேற்கூறிய கருத்துக்களை பரவலாக எடுத்துக் கூற ஆசை. அதனால், பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என பல இடங்களுக்கு சென்று பேசுகிறேன். பல மீடியாக்களில் எனது பேட்டிகளை கேட்டு எனக்கு தொலைபேசி அழைப்புகளும், மெயில்களும் வரும். ஒருமுறை எனது தொலைக்காட்சி நேர்காணலைக் கண்டப்பின், ஒரு நபர் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, தான் ஒரு தீராத நோயால் அவதிப்படுவதால் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம் என நினைத்து இருந்ததாகவும், என் பேட்டி கண்டு, தனது நம்பிக்கை மிகுந்து அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் தெரிவித்தார்.

உங்கள் நோக்கம் என்ன?

சிறு வயதிலிருந்தே யார் உதவியின்றியும் இருக்க வேண்டும் என்றும் சமுதாயத்திற்காக ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் ஆழமாக நினைப்பேன்.  அதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கான  விளையாட்டுத் துறையை கையில் எடுக்க காரணமாக இருந்தது.

இந்தியா போன்ற நாட்டில் அது ஒரு பெரிய கடினமான காரியம். அதுவும் இங்கு விளையாட்டைப் பற்றி விழிப்புணர்வும் இல்லை. அதனால் என் கடைசி மூச்சு உள்ள வரை இதற்கான பணிகளை செய்வேன், நம் நாட்டில் பாராலிம்பிக்ஸ் நன்றாக வளர கடினமாக உழைப்பேன்.

Likes(5)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share