Jun 142015
 

1

பாம்பாட்டிகள் வாழும் தேசம், மூன்றாம் உலக நாடு என்றெல்லாம் பொதுவாக மேற்கத்திய நாட்டினரினால் எள்ளி நகையாடப்படும் நம் நாட்டை, கடந்த இரு வாரங்களாய் மேற்கத்திய சமூகம் சற்றே ஆச்சரியத்துடன் தான் பார்த்திருக்கக் கூடும். இந்தியர்களுக்கு உணவிலும், வாழ்க்கை முறையிலும் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்ச்சி கிடையாது, இந்தியர்களை எப்படியாவது ஏமாற்றி, தமது பொருட்களை விற்றுவிடலாம், தட்டிக்கேட்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், விலைக்கு வாங்கி, பல்லாயிர கோடிகளை ஈட்டிடலாம் என்று கொக்கரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மலைத்திருக்கக் கூடும்.

மேகி நூடுல்ஸ் (MAGGI NOODLES) பற்றிய சர்ச்சை, நம் நாடு முழுதும் காட்டுத்தீயாக பரவி, தடம் மாறிய வாழ்க்கை முறை, உடல் நலம் குறித்த நமது விழிப்புணர்வு போன்றவற்றை பற்றி சிந்தித்து அறிய நமக்கு ஒரு பெரும் தொடக்கமாய் அமைந்துள்ளது.

சுமார் 100பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருவாயுடன், உலகத்திலேயே பெரிய உணவுப் பொருள்களுக்கான நிறுவனம் என்ற பெருமையுடன் கொடிகட்டி பறக்கும் சுவிட்ஜர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே (NESTLE) நிறுவனத்தின் ஒரு பிரபலமான தயாரிப்பு தான் இந்த மேகி நூடுல்ஸ்.

1982 ஆம் வருடம் இந்தியாவில் அறிமுகம் ஆகியிருந்தும், கடந்த பத்து வருடங்களாய் மீடியாக்களின் உதவியோடு, தமது விளம்பரங்கள் பட்டித் தொட்டியெல்லாம் சென்று சேர, அசுர வளர்ச்சி கண்டது மேகி. நமது பாரம்பரிய உணவு வகைகளை புறந்தள்ள வைத்துவிட்டு மக்களை (குறிப்பாக குழந்தைகளை) இந்த நூடுல்ஸை தங்கள் உணவில் ஒரு முக்கிய பகுதியாக்க வைத்தது நெஸ்லே. நூடுல்ஸ் விற்பனையில் மட்டும் கிட்டத்தட்ட 60%க்கும் மேல் (MARKET SHARE) தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நெஸ்லே, பல்லாயிர கோடிகள் வருவாயை இந்தியாவிலிருந்து ஈட்டியது.

கடந்த மாதம் உத்திரப்பிரதேச மாநில FOOD AND SAFETY DRUG ADMINISTRATION (FSDA) அதிகாரிகளின் சோதனையின் போது, மேகியில் ஈயம் (LEAD) மற்றும் எம்.எஸ்.ஜி (MSG – MONOSODIUM GLUTAMATE) என்ற வேதிப்பொருளும், பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்ட, நமது அரசும் FSSAI (FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA) இந்த பிரச்சினையை கையாள ஆரம்பித்தன.

கடந்த ஐந்தாம் தேதி, மேகியில் உள்ள வேதிப்பொருள்கள் மனிதர்கள் உட்கொள்ள பாதுகாப்பற்ற முறையில் உள்ளது எனக் குறிப்பிட்டு, மேகியின் ஒன்பது விதமான உணவுப்பொருள்களையும் இந்தியாவில் விற்க FSSAI அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்தது.

FSSAI வழங்கிய இந்த தடை உத்தரவு, மேகியை போன்று டப்பாக்களில் உணவுப்பொருள்களையும், விதவிதமான குளிர்பானங்களை விற்கும் மற்ற பல பன்னாட்டு நிறுவனங்களையும் கொத்தாக உலுக்கியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கட்சி வித்தியாசம் பாராமல், பல மாநில அரசுகளும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில், உறுதியாக நின்று அவர்களது கடமைகளை முடித்துள்ளபோது, குடிமகன்களாக நமது கடமைகளை நாம் செய்தோமா என்று எண்ணி பார்க்க வேண்டிய சூழ்நிலையில், மேலும் சில கேள்விகள் இத்தருணத்தில் எழுகிறது..

 • மேகியின் மீதும், மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் பாதுகாப்பற்ற JUNK FOOD, டப்பாக்களில் அடைத்து விற்கும் INSTANT FOODஇன் மீதும் நமக்கு இத்தனை ஆர்வம் வரக் காரணம் என்ன?
 • ஏன் இன்னும் சூப்பர் மார்க்கெட்களிலும், மளிகைக் கடைகளிலும் உணவுப்பொருள்களுக்கு காலாவதியான நாள் (EXPIRY DATE) பார்த்து வாங்கும் பழக்கம் நம்மில் அனைவருக்கும் வருவதில்லை?
 • இட்லி, தோசை, சப்பாத்தி, ரோட்டி, போகா போன்று பல வகை என்னற்ற பாரம்பரிய உணவு வகைகளை மறக்க வைத்து, இந்த புது வரவு உணவுகள் கிட்டத்தட்ட தேசிய உணவாக எவ்வாறு மாறியது?
 • இந்த JUNK FOOD உணவுகளை மாதத்திற்கு என்றாவது ஒருமுறை ஒரு வித்தியாசத்திற்காக வைத்து இருக்காமல், அவைகளையே தினசரி உணவாக மாற்ற காரணம் என்ன?
 • பிரபலமான நடிகர்களோ, நடிகைகளோ, விளையாட்டு வீரர்களோ, ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்து நடித்தால், ஏன் அந்த பொருள்களின் மீது உடனடியாக அத்தனை ஆர்வம் வந்து விழுந்து விடுகிறோம்? ஏன் தொடர் விளம்பரங்களுக்கு, அப்பொருள்களைப் பற்றி ஆராயமலே அடிமையாகி விடுகிறோம்?

(FSSAI கொடுத்த மற்றொரு தகவல் – 2014 ஆம் ஆண்டு, நெஸ்லே நிறுவனம் தனது உணவு தரத்தை சோதனையிட 19 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது, ஆனால் விற்பனையை அதிகரிக்க விளம்பரத்திற்கும், பிராண்டிங்கிற்கும் 445 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது!!)

 • இன்றைய சூழ்நிலையில் தம்பதிகள் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். அதனால் இந்த 2நிமிட INSTANT FOOD வகைகளை தேர்ந்தெடுக்கின்றனர். குழந்தைகளும் விளம்பரங்களினாலும், வித்தியாசமான சுவையினாலும் இந்த உணவு வகைகளை விரும்புகின்றனர். இது போன்ற காரணங்கள் இக்காலத்திற்கு வாழும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் இருக்கலாம், ஆனால் இந்த உணவு பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பதை ஏன் தவற விடுகிறோம்?
 • சாதாரண உணவு விஷயம் தானே? இதற்கு ஏன் இத்தனை கோஷம் என கேள்வி எழலாம். இது சாதாரண விஷயமன்று. செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட MSG போன்ற ரசாயனங்களை குறிப்பிட்ட அளவிற்குமேல் உட்கொள்கையில் உடல்பருமன் (OBESITY), தலைவலி, வாயுத்தொல்லை, நரம்புக்கோளாறு, இரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, தோல் வியாதி, இதயக்கோளாறு என்று விளைவுகள் நீள்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிடுகின்றனர். ஆனால் அம்மாதிரியான வேதிப்பொருள்களை, ரசாயனங்களை கொண்ட உணவுவகைகளை தான் நாம் உட்கொள்கிறோம்.
 • அடுத்த தலைமுறையினருக்கு கல்வி தருவது, பொருளாதார ரீதியில் உயர்ந்து நிற்க செய்வது மட்டுமன்றி, அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பாக இருக்க செய்வதற்கும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்?

இன்னும் எத்தனையோ கேள்விகள்.. நம் நாட்டு பெருமைகள் நமக்கு தெரிவதில்லை அல்லது நமது பாரம்பரிய முறைகளை குறைவாக மதிப்பிடுகிறோம்.

வெளிநாட்டு பொருள் என்றால் அதற்கு இங்கு மதிப்பு அதிகம். பன்னாட்டு நிறுவனங்களும் இந்த மனநிலையை புரிந்து வைத்திருப்பதால் தான், அவர்கள் பொருள்களை விற்றுத்தீர்க்கும் சந்தையாகவே நம் நாட்டைப் பார்க்கின்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவை நம் கலாச்சாரத்திற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் கேடாக இருப்பது தான் வேதனை.

முக்கியமான மற்றொரு உதாரணம் – நமது யோகா கலை. அதைக் கூட வெள்ளையர்கள் பயிற்சி செய்து அங்கீகரித்த பின் தான், நம் நாட்டில் நிறைய மக்கள் அதைப் பற்றி சிந்திக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

சென்ற ஐந்தாம் தேதி – உலக சுற்றுப்புரச் சூழல் நாள். அன்று ஒரு அருமையான சொற்பொழிவை கேட்க நேர்ந்தது. அந்த கூட்டத்தில் பேசிய தலைமை பேச்சாளர், “கடந்த 20வருடங்களாக நமது சுயநலத்தினால், இயற்கை வளத்தை மிகுதியாக அழித்துவிட்டோம், தேவையான அளவு மரங்களை வளர்க்கவில்லை, காற்று, தண்ணீர் அதிகமாக மாசுப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறையினர் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என எண்ணுகிறோமே தவிர, அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இவ்வுலகம் இருக்குமா என்று எண்ணத்  தவறிவிட்டோம். இந்நாட்டின் உண்மையான குடிமகன்களாக நமது சமுதாயக் கடமைகளை செய்ய தவறுகிறோம்” என்று முடித்தார்.

உண்மை தான். அனைவரும் யோசித்து சில முக்கியமான செயல்களை ஆரம்பிக்கும் சூழ்நிலையில் உள்ளோம். அரசுகளையும், அரசு அதிகாரிகளையும் குறை கூறுவதை தவிர்த்து, பொறுப்புள்ள குடிமகன்களாக நமது கடமைகளை சரியாக செய்கிறோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

வரும் தலைமுறையின் உடல் ஆரோக்கியம், அவர்கள் வாழ இருக்கும் சுற்றுப்புரச் சூழல் ஆகியவற்றை திட்டமிட்டு வடிவமைக்கும் சிற்பியாக நாம் இருப்பது தான், பெற்றோர்களாக அவர்களுக்கு நாம் சேமிக்கும் செல்வமாக இருக்கும்.

அவர்கள் சாபத்திற்கு ஆளாகமல் இருக்கும் வகையில், பொறுப்புள்ள பெற்றோர்களாக, சமூக ஆர்வலர்களாக, நல்ல குடிமகன்களாக வாழும் கடமை நம் ஒவ்வொருவர் முன்பும் பெரும் சவாலாக உருவாகி நிற்கிறது.

சவாலை சந்திக்க துவங்குவோம், சரித்திரத்தை சரியாக எழுதுவோம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(20)Dislikes(0)
Share
 Posted by at 12:09 am

  5 Responses to “உணவே மருந்து!”

 1. குடிக்கும் குளிர்பானம்
  குளிக்கும்சோப்புகள்
  துலக்கும் பற்பசைகள்
  உண்ணும் உணவுகள்
  அயல் நாட்டு பொருட்களை
  என்று பகிஷ்கரிக்கிறோமோ
  அவர்களின் பொருளாதார
  ஆதிக்கத்தை ஒழிக்கிறோமோ
  அன்றுதான் இந்த கொடுமைகளும்
  ஒழியும் இன்றைய இளைஞர்கள்
  எழுச்சியுடன் எழுவீர் கடமையை உணர்வீர்

  சரஸ்வதிராசேந்திரன்-

  Likes(2)Dislikes(0)
 2. Well Said sir !

  வருமானம் பெருக்கவே
  சுருக்கான வழி
  வெளிநாட்டு நிறுவனம்
  வெட்டிய குழி - ஆனால்
  விழுந்தது இந்தியன் தானே !

  தரங்கெட்ட அரசியல்வாதி
  துணை நிற்கும் அதிகாரி -
  தன்மானம் விற்ற வியாபாரி
  தறி கெட்ட தப்பாட்டம்

  ஏற்றமற்ற போட்டி கொண்டு
  ஏமாற்றியவர் பலர் உண்டு
  ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று
  ஏதோ ! இன்றாவது விழித்தோமே !

  Likes(3)Dislikes(0)
 3. ஒவ்வொருவரும் தங்களின் கடமையை சரிவர செய்தாலே போதும், பல அவலங்கள் தடுக்கப்படும்.

  இன்று மேகிக்கு ஏற்பட்ட நிலை மற்ற வகை உணவுகளுக்கும் தொடருமா? தொடர விடுவார்களா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. மீண்டும் மேகியே திரும்பி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கோக், பெப்சி நிலையை ஞாபகப்படுத்திக்கொள்ளவும். இதனால் லாபம் அடைந்தவர்கள், இவ்வளவு பெரிய இந்திய சந்தையை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டார்கள்.

  என்று நம் நாடு சுயசார்பை இழந்து கார்பரேட் என்ற மகுடியின் வசம் ஆடும் பாம்பாக ஆனதோ: அன்றே அழிவு நோக்கி நம் பயணம் தொடங்கிவிட்டது. இன்றும் இதை எல்லாம் அறிந்தாலும் அறியாதது போல் இருக்கும் அரசும், அதிகாரம் உள்ள அதிகாரிகளும் ஒரு சில நல்ல மனிதர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வண்ணம் உள்ளது/உள்ளனர்.

  மக்கள் ஆகிய நாம் இந்த மாயாஜாலங்களில் நாங்கள் மயங்க மாட்டோம் என்று தெளிந்த சிந்தனையுடன் இருந்தால் போதும்..மாற்றம் ..அதுவும் நல்லவிதமான மாற்றம் நிச்சயம்.

  Likes(3)Dislikes(0)
 4. It's a serious topic and beautifully covered. I am really glad that as a nation we are awake and more aware of the hazards of the additives, preservatives and instant food. One thing which constantly bothers me is the type of pesticides and preservatives used right from cultivation to the point of consumption to keep the food fresh and increase the production. These harmful substances can gradually accumulate in the body and are not easily excreted posing a long term risk to one's health. There is a powerful saying in Tamil "சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்". Let's build good health and develop a stronger nation.

  Likes(3)Dislikes(0)
  • Very rightly said Doctor.. Yes, it will be really good if our next focus would be on all food products and vegetables we consume. Is it not a sin to poison some one by adulterating the food products? If everyone follows this our country would be free from all adulteration in food products.

   Likes(1)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share