May 142015
 

2

“ஒன்றை இழந்தால், மற்றொன்றை பெற முடியும். கையிருந்தால் தான் எதுவும் செய்ய முடியும் என்று முடங்கிவிடாமல், எழுந்து வெறியுடன் ஓட ஆரம்பித்ததின் விளைவுகள் தான் இவைகள் அனைத்தும்!!” – நம்பிக்கை தெரிக்க பேசும் திரு.வெங்கடேசனை இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் B+ இதழ் பெருமை அடைகிறது.

கை கால்கள் நன்றாக இருந்தும், உழைக்காது வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை என கூறி வருத்தப்படும் சிலர், திரு.வெங்கடேசனின் உழைப்பிலும் வெற்றியிலும் சமூக அக்கறையிலும் பலவற்றை கற்றுக்கொள்ளலாம்.

சென்னை கீழ்ப்பாக்கம் அருகில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் இவரது மாணவர்களை கூட்டி வந்து போட்டிகளில் ஊக்கப் படுத்திக் கொண்டிருந்தார். இனி அவர் பேட்டியிலிருந்து…

வணக்கம், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்

வணக்கம், என் பெயர் வெங்கடேசன். தர்மபுரி மாவட்டம், எம்.ஒட்டப்பட்டி கிராமம். சிறு வயதில் மின்சார விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தேன். இருந்தும் விடாமுயற்சியினாலும் பல நல்ல உள்ளங்களின் உதவியினாலும் MA, MEd, DTEd. வரை படித்து, அரசு உயர்நிலை பள்ளியில் தமிழாசிறியராக பணிப்புரிகிறேன்.

அந்த விபத்தைப் பற்றி சில வரிகள்..

என் அப்பாவின் தொழில் ஆடு வளர்த்தல். அப்பா ஏதெனும் கூலி வேலைக்கும் சிலசமயம் செல்வார். அந்த நேரங்களில் ஆடுகளை நான் மேய்ப்பதுண்டு. எனக்கு அப்போது பத்து வயது இருக்கும், ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறை நாட்கள். சரியாக 27/5/1995 ஆம் நாளன்று, சில ஆடுகள் காணாமல் போய்விடவே, தூரத்தில் மேய்கின்றனவா, என்று காண்பதற்கு, அருகில் உள்ள மரம் மீது ஏறி பார்க்க முயற்சித்தேன். அப்போது தலைக்கு மீது சென்ற மின்சார கம்பிகளின் மீது தெரியாமல் கைவத்து விடவே, மின்சார அதிர்வு அலை தாக்கி, விபத்து ஏற்பட்டு கைகளை இழந்தேன்.

இத்தனை பெரிய துயரத்தை எவ்வாறு தாங்கிக்கொண்டீர்கள்?

கைகளை இழந்த ஆரம்ப நாட்கள் கடினமான போராட்டமாக தான் இருந்தது. பள்ளிகளில் என்னை காட்சிப்பொருளாக சிலர் பார்த்தாலும், பலர் எனக்கு உதவி செய்தார்கள் என்றே கூற வேண்டும். எனக்கோ, கைகள் போனாலும் ஏதெனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழமாக இருந்தது.

அதனால் அப்போதே சைக்கில் ஓட்டுவதை மிக சிரமத்துடன் பழகிக்கொண்டேன். அதேபோல், கைகள் இருக்கும் போது தெரிந்த நீச்சலையும் திரும்பி ஆரம்பித்தேன். அது ஒரு சுவாரசியமான சம்பவம். கிணற்றில் நண்பர்கள் குளிக்கும்போது, கரையில் அவர்களின் துணிகளையும் உடைமைகளையும் பாதுகாக்க என்னை இருக்க செய்வார்கள். அப்படி ஒருநாள் கரையின் மீது அமர்ந்து நான் பாதுகாக்கையில், எதேச்சையாக அங்கு வந்தார் என் உறவினர் ஒருவர். எப்படியாவது நான் நீந்திவிடுவேன், பின்னர் கிணற்றில் இருந்து தூக்கிவிடலாம் என்ற எண்ணத்துடன், என்னை தண்ணீருக்குள் தள்ளி விடுகிறார். நானும் அவர் எதிர்பார்த்தது போன்றே, கால்களால் மட்டுமே நீந்தி நீரின் மேல்பரப்பிற்கு வந்தேன். அவ்வாறாக என் நீச்சல் பயிற்சி தொடங்கியது.

அன்றாடப் பணிகளை செய்வதற்கு எங்கு பயிற்சி பெற்றீர்கள்?

ஒருமுறை தமிழக முதல்வர், தர்மபுரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். என் நிலையைப் பற்றி கூறி, எனக்கு செயற்கை கைகள் பொருத்துவதற்கும், என் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்ற மனுவை முதல்வரிடம் அப்போது கொடுத்தேன். கருணையுடன் அந்த மனு பரிசீலிக்கப்படு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, முதல்வரின் தனிப்பிறிவிலிருந்து எனக்கு கடிதம் வந்தது.

அக்கடிதத்தை எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள ஒரு உறவினர் துணையுடன், சென்னைக்கு வந்து சேர்ந்தேன். அசோக் பில்லர் அருகில் உள்ள அரசு புணர்வாழ்வு மருத்துவ மைய்யத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கு தான் எனக்கு கால்களால் எழுதவும், படிக்கவும், அன்றாட பணிகளை நானே செய்துகொள்வதற்கும், காலை 10 முதல் 1மணி வரை தினமும் பயிற்சி கொடுத்தனர்.

நீச்சலை உங்கள் துறையாக எப்போது மாற்றினீர்கள்?

2009 இல், மதுரையில் நடந்த தென்னிந்தியாவிற்கான விளையாட்டு போட்டிகள், என் வாழ்க்கை பாதையை மாற்றியது என்றே கூற வேண்டும். இந்த போட்டிகளில், நீச்சலில் கலந்துக்கொண்டேன். எனக்கு அப்போது, நீச்சல் மட்டும் தான் தெரியும். நீச்சலில் உள்ள நான்கு முறைகளைப் பற்றியெல்லாம் தெரியாது. அதிர்ஷ்டவசமாக அது FREESTROKE நீச்சல் முறையாக இருந்தது. FREESTROKE முறையில் எப்படி வேண்டுமானாலும் நீச்சல் அடிக்கலாம். அந்த போட்டிகளில் எனக்கு இரண்டாம் இடம் கிடைத்தது, பெரும் உற்சாகத்தை தந்ததோடு மட்டுமன்றி, நம் துறையையே நீச்சலாக மாற்றிவிடலாம் என்ற எண்ணத்தையும் தந்தது.

பின் சென்னையின் ஆந்திரா கிளப் தலைவர் திரு.நர்சா ரெட்டி அனுமதியுடன், பயிற்சியாளர் திரு.கோபி எனக்கு நீச்சலின் அனைத்து பயிற்சிகைளயும் அளித்தார். 2011இல், மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடைபெற்ற மாற்று திறனிகளுக்கான 11ஆம் தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டிலிருந்து நான்கு பேர் கலந்துக்கொண்டோம். பல பதக்கங்களை வாங்கி, பல அமைப்புகளின் பாராட்டுகளை பெற்றேன்.

இதுவரை நீச்சலுக்காக என்னென்ன பரிசுகளின் வாங்கியுள்ளீர்கள்?

2011 ஆம் ஆண்டு, கோலாப்பூரில் நடந்த 11ஆவது தேசிய நீச்சல் போட்டியில் நான்கு பிரிவுகளில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றேன்.

2012 ஆம் ஆண்டு, 12ஆவது தேசிய நீச்சல் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி வென்றேன்.

2013 ஆம் ஆண்டு, பெங்களூரில் நடைப்பெற்ற 13ஆவது தேசிய நீச்சல் போட்டியில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றேன்.

2014 ஆம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் நடைப்பெற்ற 14 ஆவது தேசிய நீச்சல் போட்டியில் 1 தங்கம் வென்றேன்.

பல மாநில அளவு போட்டிகளிலும், மாவட்ட போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளேன்.

உங்கள் கல்வி ஈடுபாடு பற்றி..

கல்வித்துறையும், நீச்சல் துறையும் இரண்டு கண்களாக பார்க்கிறேன். இப்போது தர்மபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில், 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழாசிரியரக பணியாற்றி  வருகிறேன். கூடவே இருக்கும் ஆசிரியர்களும், நல்ல ஒத்துழைப்பும், ஆதரவும் தருகின்றனர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றேன். என்னால் இயன்ற அளவில் மாணவர்களுக்கு பல விளையாட்டு போட்டிகளுக்கு கூட்டி செல்கிறேன்.

மாணவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவீர்கள்?

மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, மன ரீதியான, உடல் ரீதியான வகுப்புகளை எடுத்து ஊக்குவிக்கிறேன். பல பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு MOTIVATION CLASS எடுக்கும் வாய்ப்புகளும் வருகிறது. வருகின்ற 28ஆம் தேதி, ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளேன்.

ஒன்றை இழந்தால், மற்றொன்றை பெற முடியும். கையிருந்தால் தான் எதுவும் செய்ய முடியும் என்று முடங்கிவிடாமல், எழுந்து வெறியுடன் ஓட ஆரம்பித்ததின் விளைவுகள் தான் இவைகள் அனைத்தும். இப்போது கால்களால் BALANCE செய்ய முடியும். கைகளால் செய்யக்கூடிய பல வேலைகளை கால்களால் செய்துக்கொள்கிறேன். இதற்கெல்லாம் காரணம் விடாமுயற்சி, கடின உழைப்பு, முறையான பயிற்சி, பல நல்ல உள்ளங்களின் உதவியும் ஒத்துழைப்பும் என்று  என் கதையை கூறியும் ஊக்கப்படுத்த்வேன். என்னால் முடியும்போது, அவர்களாலும் முடியும் என்றும் கூறுவேன்.

உங்களைப் போல் கடினமாக உழைத்து முன்னேற விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு நீங்கள் சொல்லவிரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆற்றல் உண்டு. அதை நான் உணர்ந்து பயண்படுத்திக் கொண்டேன். அதேபோல் எல்லோரும் அவர்களின் ஆற்றலை பயண்படுத்த வேண்டும்.

இன்றைக்கு இந்த தடகள போட்டிகளை பார்த்தீர்கள். எத்தனை மாற்றுத் திறனாளிகள் கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடினர்?! இரு கால்களும் முழுமையாக இயங்காத நிலையிலும், அந்த சிறு மாணவி 100மீட்டர் பந்தையத்தில் கலந்து, எல்லைக்கோட்டை தொட்டது எத்தனை பெரிய சாதனை?! நம்மால் முடியாது என்று அவர்களின் கிராமங்களில் முடங்கி இருந்திருந்தால், கபடி, ஓட்டப்பந்தையம், BASKETBALL என்று இத்தகைய சாதனைகளை படைத்திருக்க முடியாதல்லவா? தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் பலன்களை தான் இவைகள் காட்டுகின்றன. போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற மன நிலையே பெரிய சாதனை தான்.

இந்த போட்டிகள் நடப்பதற்கு பலர் உதவிகளை செய்கின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு கூட்டமைப்பை தலைவரும் செயலாளரும் ஏற்படுத்தி, பெரும் பங்காற்றினர்.

சமீபத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இந்த போட்டிகள் நடந்தன. வீட்டிலேயே அடைப்பட்ட அவர்களுக்கு அது போட்டி என்றே கூட தெரியாது. ஆனாலும் மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

நம் சமுதாயம் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தகைய உதவி செய்கிறது?

நம் சமுதாயத்தில் நிறைய நல்ல மனிதர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும், MULTIPLE CHALLENGESஇல் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கும் (ஒன்றுக்கு மேல்பட்ட ஊனமுடையவர்கள்) அன்பும், பரிவும் காட்டுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சில ஆண்களும், பெண்களும் தாமாக முன்வந்து மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து தங்கள் உயர்ந்த உள்ளத்தையும், வாழ்க்கையும் அளிக்கின்றனர்.

இன்று நான் இந்த நிலைமையில் இருக்க சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனர் திரு.லியோ முத்து அவர்களும் ஒரு பெரிய காரணம். மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும், இலவச கல்வி, கட்டணச் சலுகைகள் என்று பல உதவிகளை செய்து வருகின்றார்.

இன்று தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளாத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். தர்மபுரி தடகள் செயலாளர் திரு.பாலமுருகன் போன்ற பல நல்ல மனிதர்கள் உதவி செய்கின்றனர். நீச்சலில் கலந்துக்கொள்ள உடைகளை அணிவிப்பது, GOGGLES (நீச்சல் கண்ணாடி) அணிவிப்பது, அனைத்து இடங்களுக்கும் கூட்டி செல்வது போன்ற பல உதவிகளை எனக்கு பல உயர்ந்த உள்ளங்கள் இன்றும் செய்வதால் தான் இந்த வெற்றியெல்லாம் சாத்தியமாகிறது. இல்லையேல் இதெல்லாம் கண்டிப்பாக சாத்தியமாகாது.

நான் கூட இரு கைகளும் இல்லாத, ஆறு பேரை இதுவரை தமிழகத்தில் கண்டுபிடித்து, தனிப்பட்ட முறையில் இயன்றளவில் உதவிகளை செய்து வருகிறேன். அதில் ஒருவருக்கு அரசு பணி கிடைக்கவும் உதவி செய்துள்ளேன்.

எங்கள் வாசகர்களுக்கு ஏதாவது கருத்து சொல்லுங்களேன்?

உடல் ஊனம் என்று நினைத்தால் தான் ஊனம். உண்மையில் உள்ளத்தில் தான் ஊனம் இருக்க கூடாது. உடல் ரீதியாக நன்றாக உள்ள சிலர், எப்போதும் கவலைப்பட்டு கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். அது தான் தவறு. நாம் மனதளவில் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான், நம்மால் மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள முடியும்.

உடலளவில் ஊனம் இருந்தால் கூட நம்பிக்கை இருந்து, வெறியுடன் உழைத்தால் வெற்றி பெற்றிடலாம், ஆனால் உள்ளத்தில் ஊனம் இருக்க கூடாது.

உங்களின் நோக்கம் என்ன?

மாற்றுத்திறனாளிகளில் எத்தனையோ திறமையுள்ளவர்கள் உள்ளனர். ஆனால் செலவு செய்து இந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளவும், பயிற்சி எடுத்துக்கொள்ளவும் இயலாத சூழ்நிலையில் உள்ளனர். அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றே ஒரு விளையாட்டு கழகம் ஏற்படுத்தி தரவேண்டும்.

அரசு தரும் உதவித்தொகை, ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு சரியான முறையில் சென்று சேர வேண்டும். அதற்கான விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்த வேண்டும். பல கடினங்களையும், போராட்டங்களையும் சந்தித்து மாற்றுத்திறனாளிகள் வெற்றிபெறுகின்றனர். அதனால் அவர்களுக்கு பரிசுகளும், உதவித்தொகையும், அங்கீகாரங்களும் சரியானளவில் கிடைக்க செய்யவேண்டும்.

Likes(4)Dislikes(0)
Share
 Posted by at 12:07 am

  2 Responses to “நம்பிக்கையால் சாதித்தவர்!”

 1. What a man !!! i feel really proud of him...
  My hearty wishes to him..

  Likes(1)Dislikes(0)
 2. மிக அருமையான பதிவு ! திரு வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :

  "அங்கத்தில் குறை அதை ஒதுக்கி
  அயராமல் தடைகளை படியாக்கி
  அரிய சாதனை செய்தவர் ஆயிரம்
  அவருள் வெங்கடேசன் ஒரு காவியம் " - பாராட்டுக்கள்

  Likes(4)Dislikes(0)

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share