May 142015
 

3

”இதோ பாருங்களேன், உங்க பையனை! பிறந்து இன்னும் ஒரு வருஷம் கூட  ஆகலை. அதுக்குள்ளே, எப்படி , கொடுக்கற சாமானையெல்லாம் தூக்கி தூக்கி போடறான் பாருங்க. எவ்வளவு ஸ்மார்ட் இல்லே நம்ம கண்ணன்?” – அம்மா பாருவுக்கு பெருமிதம் தாங்கலை.

“பின்னே அவன் யாரு? என் பிள்ளையாச்சே! பின்னாடி விளயாட்டுலே பெரிய ஆளா வருவான் பாரு! ஷாட் புட், டிஸ்கஸ் த்ரோ அப்படின்னு நம்ப கண்ணன் நாட்டையே கலக்கப் போறான், பாரு!”  பையனை சுற்றி கும்மி அடித்தார் வங்கியில் வேலை செய்யும் கண்ணனின் அப்பா, பார்த்திபன். ‘அது பார்த்திபன்  கனவு’.

ஆனால்,  இது எதுவும் நடக்க வில்லை. கனவு கண்ட அப்பாவின் ஆவல், கதை கந்தல் ஆச்சு. 

காலப் போக்கில் கண்ணன், எதையும் தள்ளிபோடுவதில் கில்லியாகிவிட்டான். 

நாளை நாளை என ஒத்திப் போடும் வழக்கம்,  அவனோடு ஒட்டிக்கொண்டது. கண்ணன் சோம்பியிருந்து சுகம் காண ஆரம்பித்து விட்டான்.
***
இப்போது கண்ணனுக்கு வயது பதினேழு. பிளஸ் டூ மாணவன். மாணவர் அனைவரும், தனித்தனியாக கணினி சம்பந்தமாக ஒரு ப்ராஜக்ட் பண்ண வேண்டும்.  

இவனது ப்ராஜக்ட் வணிகம், வங்கி சம்பந்த பட்டது. ஆசிரியரிடம் கேட்டு வாங்கி கொண்டான். ‘மின் அணு நிதி மாற்றம் (EFT) , மின் அணு பரிவர்த்தனை முறை (ECS) இவைகளின் செயல்முறை,’ பற்றி ஒரு ஆய்வு கட்டுரை, வரை படங்களுடன்  எழுதுவது இவன் ப்ராஜக்ட்.


“ மச்சி! நீ ரொம்ப லக்கிடா. நாங்கள் எல்லாம் சி, சி பிளஸ் ப்ராஜெக்ட் பண்றோம். நிறைய கோடு எழுதணும். உனக்கு மட்டும் வெறும் கட்டுரை, ரிப்போர்ட் மட்டும் தான். என்ஜாய்டா” -நண்பர்கள் பொறாமை கண்ணில் வழிய .

கண்ணனின் நண்பன் மாதவனுக்கு மட்டும் சந்தேகம். கண்ணனை பற்றி அவனுக்கு தெரியும். .  “ ஏன் மச்சி ! இதுக்கு நிறைய புஸ்தகம் பிடிக்கணுமே. உனக்கு புரியாதே! என்ன பண்ணப்போற?”

“அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல மாதவா.  எங்க அப்பா வங்கியிலே தானே வேலை பன்றார். அவர்கிட்டே கேட்டுப்பேன். எவன்டா கோடு எழுதி கஷ்டப் படறது? ”- கண்ணன்.

கண்ணன் வீட்டிற்கு வந்தான்.

ப்ராஜக்ட் ஒரு மாசம் கழிச்சி, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த மறுநாள் கொடுக்க வேண்டும். பாத்துக்கலாம். ரொம்ப சிம்பிள். பின்னாடி, ரெண்டு மூணு புஸ்தகம் படிச்சி ஒப்பேத்திடலாம்.

ஒரு மாதம் இருக்கே. அதனாலே, இப்பத்திக்கு ப்ராஜக்டை ஓரம் கட்டிவிட்டான்.  விடுமுறை உல்லாசம். மஜாதான். டிவி., சினிமா,  அரட்டை,  தெரு மதில் சுவர் ,  நேரம் போனதே தெரியவில்லை.

பள்ளி திறக்க ஐந்து நாட்கள்:

’ஐயையோ! ப்ராஜக்ட் பண்ணனுமே! மறந்தே போயிடுத்தே!’. தன் நண்பன் மாதவனை கை பேசியில் அழைத்தான்.

“மாதவா! உன் ப்ராஜக்டை  முடிச்சிட்டியா?”

“ஓ! நேத்திக்கே கோடெல்லாம் எழுதி ஒரு மாதிரி முடிச்சிட்டேன். இன்னிக்கு நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் சினிமாக்கு போறோம். எல்லாரும் ப்ரீ. நீ இன்னும் முடிக்கல்லே?”

“இன்னும் இல்லேடா! சரி, பரவாயில்லே. நானும் வரேன். நாளைக்கு எழுதிக்கறேன். ரிப்போர்ட் தானே!” கண்ணன் மீண்டும் தன் வேலையை தள்ளி வைத்தான்.

“சரி வா! சத்யம் தியேட்டர்க்கு நேரே வந்துவிடு.  மத்தியம் 3.00 மணி.”

 

“ஓகே. வரேன்.”. கண்ணன் அலைபேசியை அணைத்தான்.  சினிமா தான் முக்கியம் ப்ராஜக்டை நாளைக்கு பாத்துக்கலாம். இன்னும் நாலு நாட்கள் இருக்கே!

பள்ளி திறக்க நான்கு நாட்கள்:

“டே கண்ணா ! உன் சித்தி வீட்டுக்கு போய் இந்த நகையையும் புடவையும் கொடுத்துட்டு வரியா!. அவசரமா வேணும்னு கேட்டாள்!” – அம்மா

“போம்மா! என்னை தொந்திரவு பண்ணாதே! எனக்கு ப்ராஜக்ட் வேலை தலைக்கு மேலே இருக்கு!”

“சரி! அப்படின்னா, நாளைக்கு கொண்டு போய் கொடு”

“ சாரிம்மா! நாளைக்கும் முடியாது! ப்ராஜக்ட் பண்ணலைன்னா பெயில் பண்ணிடுவாங்க”

“சரி! சரி! உன் வேலையை பாரு. நான் வேற வழி பாக்கறேன்! என்னமோ போ, எப்ப கேட்டாலும் பிசி பிசிங்கறே! இப்படி ஸ்கூல்ல போட்டு பிழியராங்களே?”

கண்ணன் ஒரு நோட்டு புத்தகம், பேனா, லேப்டாப் சகிதம் உட்கார்ந்து கொண்டான்.

புத்தகத்தை பிரித்தான். தலை சுற்றியது. என்ன கொடுமைடா இது. EFT , ECS, RTGS, என்னவோ சொல்றாங்களே. ஒரு இழவும் புரியலியே. எப்போ இதை படிச்சி, புரிஞ்சி, இதனாலே ஏற்படும் இடர்பாடு பற்றி எழுதறது? 

‘சரி, ஒண்ணு பண்ணுவோம், நெட்லே பாத்து காப்பி அடிச்சி எழுதிடலாம்.’ கண்ணன் லேப்டாப்பை திறந்தான்.

ஐயோடா! இது இன்னும் பெரிய தலைவலியா இருக்கும் போலிருக்கே. என்னென்னவோ சொல்றானே! நெட்வொர்க் ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க், லிகுடிட்டி ரிஸ்க் , ஒரு இழவும் புரியலியே. தெரியாத வேலையா எடுத்துகிட்டோமே! பேசாம, சி ப்ளஸ் கோடு ப்ராஜக்ட் எடுத்திருக்கலாம். நல்லா மாட்டிக்கிட்டேன்

‘ஐடியா! அப்பா கிட்டே கேப்போம்’. அவர் பேங்க் மேனேஜர் தானே! நிச்சயமா அவருக்கு தெரிஞ்சிருக்கும். அவர் சொல்றதை வெச்சி எழுதிடுவோம். முடிஞ்சா எழுதியே கொடுக்க சொல்லிடுவோம்.

“அம்மா! அப்பா எங்கேம்மா?”
“அப்பா இன்னிக்கு லேட்டாக வருவார்டா. பேங்க்லே ஆடிட்டிங் இருக்காம்”

“ச்சே! இந்த அப்பாவாலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே. எப்போ பாத்தாலும் ஆடிட் மீட்டிங்னு பேங்க்கை கட்டிக்கிட்டு  அழறார். என்னமோ இவர் தலைலே தான் பேங்க் ஓடறா மாதிரி.   எனக்கு எதுவும் சொல்லி கொடுக்க அவருக்கு நேரமே இல்லே. அப்பா சுத்த வேஸ்ட் பீஸ்மா”

“ஏன்டா! நேத்திக்கெல்லாம் என்ன கழட்டிகிட்டு இருந்தே! வீட்டிலே தானே இருந்தார். அப்போ கேட்டிருக்கலாமில்லே?”

“அட போம்மா!. எதுக்கும் என்னையே குறை சொல்லிக்கிட்டு” கண்ணன் படாரென்று தன் அறைக்கதவை மூடிக் கொண்டான். எரிச்சலாக வந்தது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. என்ன பண்ணப் போறேனோ தெரியலியே?

பள்ளி திறக்க மூன்று நாட்கள்:

“அப்பா! அப்பா!”
“என்ன கண்ணா ! என்ன விஷயம் ! என்னை தேடினியாமே!”

“வந்துப்பா!. ஒரு ப்ராஜக்ட் பண்ணனும்பா. மின் அணு நிதி மாற்ற இடர்ப்பாடுகள் பற்றி.”

“என்னடா சொல்றே! ஒரு கன்னராவியும் புரியலே. புரியறமாதிரி தமிழ்லே சொல்லு!”

“இல்லேப்பா, ஈ.சி.எஸ்(eletrronic Clearing System), ஈ.எப்.டி (Eletronic Funds Transfer) பத்தி எழுதணும்பா”

“ஐயோ! அது  ரொம்ப பெரிய விஷயமாச்சே! என்னடா  பண்ண போறே?”

“படிச்சேம்பா! ஒண்ணும் புரியலே. நீ என்னன்னு சொல்லிக் கொடு. அதை ரிப்போர்ட் கட்டுரையா எழுதிடறேன்.”

“கண்ணா! நான் பேங்க் மேனேஜர் தான். இல்லைன்னு சொல்லலை. ஆனால், இந்த கம்பூட்டர் கிம்பூட்டர்ன்னாலே எனக்கு அலர்ஜி. ஏதோ, சுமாரா தட்டி தடவி உபயோகிப்பேன். நீ சொல்லற விஷயம் எதுவுமே எனக்கு அவ்வளவா தெரியாதே. கேள்விப்பட்டிருக்கிறேன். ரொம்ப சாரிடா. வேற யாராவதை கேளேன்” – கண்ணனின் அப்பாக்கு நைசா  தப்பிக்க நல்லாவே தெரியும். பேங்க் மேனேஜர்னா சும்மாவா?

“இல்லேப்பா! இந்த புஸ்தகம் படிச்சி எனக்கு சொல்லேன்”
“சரி கொடு”
கண்ணன் புஸ்தகங்களை கொடுத்தான்.

“இன்னாடா! தலைகாணி மாதிரி புஸ்தகம் கொடுக்கறே? சரி. படிச்சுட்டு சொல்றேன். சிஸ்டம் பத்தி தானே.!  ஒரு பத்து நாள் டைம் கொடு. யார்கிட்டயாவது கேட்டு எழுதிக்கொண்டு  வரேன்”


“ஐயய்யோ! நான் மூணு நாளிலே ரிப்போர்ட் ரெடி பண்ணனும்”

“என்ன விளையாடறியா? சான்சே இல்லே. எனக்கு இப்போ ஆபீஸ்லே ஆடிட் நடக்குது. இவ்வளவு நாள் என்ன பண்ணிகிட்டிருந்தே! ஒரு பத்து நாள் முன்னாடியே கொடுத்திருக்கலாமில்லே? என்ன வெட்டி முறிச்சிகிட்டிருந்தே?  ஸ்டுபிட்!” அப்பா கண்ணனை வைதார். கையிலிருந்த கனமான புத்தகங்களை  கீழே வைத்தார்.

“இப்போ என்னப்பா பண்றது?”

“என்ன வேணா பண்ணு. ! எங்காவது சுவத்திலே போய் முட்டிக்கோ. என்னாலே முடியாது!” அப்பா ஜகா வாங்கி விட்டார்.

கண்ணனுக்கு செம எரிச்சல். இந்த அப்பாவே சுத்த டம்மி. .

பள்ளி திறக்க இரண்டு நாள் பாக்கி :

 

கண்ணனுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. நோட் புக், பேனா திறந்தது திறந்த படியே இருந்தது. ஒன்றுமே ஓடவில்லை. இரண்டு வரி கூட எழுதவில்லை. சனியன்! என்ன கொடுமை இது ? ஏதாவது புரிஞ்சாதானே!

“டே கண்ணா! சாப்பிட்டுவிட்டு வேலை பாரேன். நான் எவ்வளவு நேரம் உனக்காக காத்துக் கிட்டிருக்கிறது?” – அம்மா சமையலறையிருந்து கூப்பிட்டாள்.

 

“போம்மா! எனக்கு பசியில்லே! ஏகப்பட்ட வேலையிருக்கு. நீ வேறே! ஒன்னும் வேணாம் கம்முனு கிட” – எரிச்சலை அம்மாவிடம் காட்டினான்.

கண்ணனது எல்லா நண்பர்களும் அவர்களது ப்ராஜக்டை முடித்து விட்டார்கள். இவன் மட்டும் ஆரம்பிக்கவே இல்லை. படித்தால் தூக்கம் வருகிறது. அப்பா வேறு, ஒரு உதவியும் செய்யவில்லை. சலிப்பு, ஆத்திரம், சுய பச்சாத்தாபம். என்ன ஆகுமோ தெரியலியே! பயம் நடுக்கியது.

 

“ச்சே! இது என்ன ஒரு முட்டாள்தனமான படிப்பு. எதுக்கு இந்த ப்ராஜக்ட்.? பைசாக்கு பிரயோசனமில்ல. ஏண்டா இப்படி நம்மளை சாவடிக்கிறாங்க ?” – அலுத்துக்கொண்டான் நண்பர்களிடம். 


பள்ளி திறக்க ஒரு நாள்:

ஏதோ அரைகுறையாக ஒரு கட்டுரையை கிறுக்கினான் கண்ணன். அவனாலேயே அதை புரிந்து கொள்ள முடியவில்லை. முடிக்க முடியவில்லை. ப்ராஜக்ட் ரிசல்ட் என்ன ஆகும்? பேசாமல் பள்ளிக்கு ஜுரமென்று லீவ் போட்டுவிடலாமா?

முடியாதே! ப்ராஜக்ட் கொடுத்தே ஆகவேண்டுமே. இல்லாவிட்டால், கம்ப்யூட்டர் பாடத்தில் பெயில். அப்பா கொன்னேபுடுவார்.

கண்ணனுக்கு ஒரே டென்ஷன். நினைக்க நினைக்க அவனுக்கு ஜுரமே வந்து விட்டது. தலைவலி மண்டையை பிளந்தது. மூளை சுத்தமாக வேலை செய்யவில்லை. அவன் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறான்?

தண்ணியை குடித்தான். புஸ்தகங்களை அடுக்கினான். கொஞ்ச நேரம் பாட்டு கேட்டான். கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் பேஸ் புக்கில் அரட்டை. எதிலும் மனம் லயிக்க வில்லை. ஆனால் கட்டுரை மட்டும் மேலே எழும்பவில்லை. 


என்ன பண்ணுவது? சட்டியில் இல்லை, அதனால் அகப்பையில் எதுவும் வரவில்லை. கோபம் மட்டும் வந்தது.

பள்ளி திறந்தது

கண்ணன் விருப்பமே இல்லாமல் பள்ளி சென்றான்.. ஏதோ உளறிக் கொட்டி,  ப்ராஜெக்ட் கட்டுரையை ஒப்பேத்திவிட்டான். “ச்சே என்ன வாழ்க்கைடா இது?” செம கடுப்பு அவனுக்கு.  பயந்து கொண்டே, பள்ளியில் ரிப்போர்ட்டை கொடுத்தும் விட்டான்.

ஒரு வாரம் கழித்து:

கணிணி வகுப்பில், ப்ராஜெக்ட் ரிப்போர்ட் முடிவு அறிவிக்கப் பட்டது. எல்லோரும் பாஸ். சிலர் நல்ல மதிப்பெண். மக்கு என்று பேர் வாங்கியிருந்த அவன் நண்பன் மாதவனும் கூட 72 % மார்க் வாங்கியிருந்தான்.

ஆனால், கண்ணன் மட்டும் பெயில்.  அது மட்டுமல்ல, மிக குறைந்த மதிப்பெண்.

ஆசிரியர் வகுப்பில் இதை சொல்லும்போது கண்ணன் குனிந்த தலை நிமிரவில்லை. நண்பருக்கிடையே என்ன ஒரு அவமானம்.

“கண்ணா! நீ, நீ மட்டும்தான், இந்த முழு கிளாஸ்லே பெயில். தண்டமா ஒரு ரிப்போர்ட். இதுக்கு பேர் ப்ராஜெக்டா? என்ன எழுதினேன்னு படிச்சி பாத்தியா?  கண்ணராவி ! ஒரே அபத்தக்களஞ்சியம்.”

“சார்! என் ப்ராஜக்ட் ரொம்ப கடினம் சார்”- தயங்கி தயங்கி சொன்னான் கண்ணன்.

“உன்னை யாரு இந்த ப்ராஜெக்டை தேர்ந்து எடுக்க சொன்னாங்க! நீயே தானே கேட்டு எடுத்துகிட்டே?”

“சாரி சார், சி பிளஸ் ப்ரோக்ராம் எழுதாமே, வித்தியாசமா ஒரு கட்டுரை எழுதலாமேன்னு நினைச்சேன் சார் . எங்கப்பா சொல்லிகொடுப்பார்னு நம்பினேன் சார்!”- சொல்லும்போது கண்ணன் கண் விழியோரம் ஈரம்.

“அப்புறம் என்னாச்சு?”
“வணிக சம்பந்தமான இந்த கணிணி சப்ஜெக்ட் புரியலே சார்.”

“இதை பத்தி நான் பாடம் எடுக்கையில் உன் கவனம் எங்கே போச்சு?”
”கவனிச்சுகிட்டு தான் சார் இருந்தேன்”
“தினமும் வீட்டுக்கு போய் படிப்பே தானே! அப்போ நல்லாவே புரிஞ்சிருக்குமே”
“சாரி சார்! ”

“இப்போவாவது புரிஞ்சுக்கோ! நீ படிப்பை தள்ளி போட்டா, வெற்றி உன்ன விட்டு தள்ளி போகும்”


“புரியுது சார்”. நாக்கு தழு தழுத்தது கண்ணனுக்கு. அழுது விடுவான் போல இருந்தது. எவ்வளவு அவமானம் ?

ஆசிரியர் யோசித்தார். “சரி கண்ணன் . நீ ஒரு புத்திசாலி பையன். அதனாலே உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கறேன். இன்னும் ஒரு நாலு நாளில் வேறு ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் பண்ணிக் காட்டு. நல்லாயிருந்தால் நீ பாஸ். ஓகே வா.? ”

“ரொம்ப தேங்க்ஸ் சார்” – கண்ணனுக்கு மூச்சு வந்தது.

“சரி! என்ன சப்ஜெக்ட் எடுத்துக்கப்போறே? ”

“நீங்களே சொல்லுங்க சார்”

 “குட். ம்.. இங்கே இருக்கிற ப்ராஜக்ட்லே இருந்து  ஐந்து பேருடைய சி பிளஸ் ப்ரோக்ராம்களின் குறைகள் என்னன்ன என்பதை பற்றி ஒரு ரிப்போர்ட் எழுது. அதுதான் உனக்கு தண்டனை.”
“நிச்சயம் பண்றேன் சார்”

***

கண்ணனுக்கு, தான் மட்டும் பெயில் ஆனது ரொம்ப பெரிய ஷாக். இவனோட சுற்றிய அத்தனை நண்பர்கள் எல்லோரும் பாஸ். அது தான் அவனுக்கு இன்னும் ரொம்ப அவமானமா இருந்தது. பாவி பசங்க, எல்லாரும் பாஸ் பண்ணிட்டாங்களே ! அவனால் தாங்கவே முடியலே.

வீட்டில் அவன் யாரோடும் சரியாக பேசவேயில்லை. இறுக்கமாகவே இருந்தான்..

கண்ணனின் தாத்தா இதை கவனிச்சிகிட்டேயிருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து, அவனை தனியா அழைச்சிகிட்டு போய்  “ஏன் கண்ணா! ரொம்ப நெர்வசா இருக்கே! ரொம்ப இறுக்கமா தெரியரே! என்ன விஷயம்! என் கிட்டே சொல்லு!” ன்னு கேட்டார்.

கண்ணனும் தனது பிரச்னை பத்தி சொன்னான்.

அதுக்கு அவர் சொன்னார்: “கண்ணா! தள்ளிப் போடறது ஒண்ணும் பெரிய தப்பில்லே”


கண்ணனுக்கு புரியவேயில்லை “என்ன தாத்தா சொல்றீங்க?”

தாத்தா சொன்னார் “ நம்மாலே முடியுமோ முடியாதோன்னு ஏற்படற பயம், அதனாலே அந்த வேலையை கொஞ்ச நேரம் தள்ளி வெக்கிறோம். தள்ளிப் போடறதினாலே, நமக்கு கொஞ்சம் மன உளைச்சல், தற்காலிகமா குறைகிறது.”

“ஆமாமா! அதேதான்!”

“அப்புறம், சில சமயங்களில், நம்ப தள்ளி போடற அந்த வேலையை வேற யாராவது செஞ்சு கொடுத்துடுவாங்க. அது லாபம்தானே! என்ன நான் சொல்றது சரியா?”

“நீங்க சொல்றது சரிதான் தாத்தா! அப்பா ஹெல்ப் பன்னுவார்னு பாத்தேன். ஆனால் அவர் காலை வாரி விட்டுட்டார்.”

“இன்னொன்னு, இந்த ஒத்தி போடறதாலே, நிறைய சமயங்களிலே சாக்கு போக்கு சொல்லி நாம தப்பிச்சுக்க முடியும். இவ்வளவு வசதி இருக்கரதினால தான் நாம, நம்மால் ஈசியா முடியாத அல்லது பிடிக்காத வேலையை தள்ளிப் போடறோம்.”

கண்ணனுக்கு புரிந்தது. “ஆனா, தாத்தா, நான் இன்னிக்கு சுத்தமா மாட்டிக்கிட்டேன். பெயில் ஆயிட்டேன்.”

“அதை தான் நான் சொல்லவரேன். எல்லாத்தையும் எப்போவும் தள்ளிப் போடக்கூடாது. பின்னாலே, வேறே வேறே பிரச்னைகள் வரும். நம்ம வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும். அதனாலே, தேவையற்றதை மட்டும் தான் தள்ளி போட வேண்டும்.

ஒன்னு தெரிஞ்சுக்கோ, நிச்சயமா, வெற்றிக்கு தேவையானதை ஒத்தி போடக் கூடாது. ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய் படிச்சதில்லே ?”  – தாத்தா கேட்டார்


“படிச்சிருக்கேனே!”

“எந்த காரியத்தையும் எப்போ முடிக்கிறதுன்னு நினைக்ககூடாது. ஏன்னா, அந்த நினைவே நமக்கு டென்ஷன் உண்டு பண்ணும். எப்போ ஆரம்பிக்கலாமுன்னு தான் நினைக்கணும். ஒரு வேலை எடுத்துகிட்டா, ஐயோ தலையெழுத்தே! இந்த வேலையை பண்ணியே ஆகணும்னு நினைக்கக் கூடாது. அப்போ, அதுவே நமக்கு ஒரு வெறுப்பு, டென்ஷன் உண்டுபண்ணும்.
“சரி தாத்தா”

“எதையும், இவ்வளவு பெரிய வேலையான்னு நினைச்சா, நிச்சயமா பயமாத்தானிருக்கும். நமக்கு நாமே தன்னம்பிக்கை வளர்த்துக்கணும். சின்ன சின்ன அடியா, எளிதில் முடிக்க கூடிய ஸ்டெப்சா, எடுத்து வெச்சா, பாத்துகிட்டே இருக்கச்சே,எவ்வளவு பெரிய வேலையும் தன்னாலே முடிஞ்சுடும்”

கண்ணனின்  தாத்தா சொன்னது அவனை முழுமையாக மாற்றியது. இந்த ப்ராஜக்ட்லே தான் வெற்றி பெறணும் என குறிக்கோளோட உழைத்தான்.

அவன் கஷ்டப்பட்டு படிக்கறதை பாத்திட்டு, அவனது  மாமா இன்போசிஸ்லே வேலை, அவரும் நிறைய ஐடியா கொடுத்தார்.

நான்கு நாள் கழித்து

இப்போது கண்ணன் தனது வேலையை தள்ளி போடவில்லை. மிக அழகாக ப்ராஜக்டை முடித்தான்.

இந்த தடவை ஆசிரியர் கண்ணனின் ரிப்போர்ட் பார்த்து மூக்கில் விரலை வைத்தார். கண்ணனை கிளாஸ்ல எல்லார் முன்பும் பாராட்டினார்.

“வெரி குட் கண்ணா. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. போனதடவை நீ பெயில். கேவலமா மார்க். வாங்கியிருந்தே !  ஆனால்,இப்போ, இப்போ ரொம்ப நல்ல மார்க். குட். இன்னும் கூட உன்னால நல்லா பண்ண முடியும்!.”   

“தேங்க்ஸ் சார்”

 

கண்ணனை தட்டிக் கொடுத்து அனுப்பினார் ஆசிரியர். சிரித்த முகத்துடன், தலை நிமிர்ந்து நண்பர்களுக்கு கை காட்டியபடியே சென்று அமர்ந்தான் கண்ணன். நண்பரிடையே தனது மதிப்பு உயர்ந்தது பெருமையாக இருந்தது.


மனதிற்குள் தாத்தாவிற்கு நன்றி சொன்னான். ”தப்பிச்சேண்டா சாமி. இனி ஒரு போதும் ஒத்தி போடமாட்டேன்”.


****முற்றும்.

–    முரளிதரன் செளரிராஜன்

Likes(4)Dislikes(0)
Share

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)

Share
Share