Oct 302018
 

இரண்டு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளை ஒரு தராசில் வைத்து நிறுத்து பார்க்கும் அனுபவம் சமீபத்தில் கிடைத்தது. ஒரு தட்டில் பெரும் வெற்றியடைந்த மூன்று தொழிலதிபர்களின் வாழ்க்கை பயணம். இரண்டாவதாக, சிறு வயதிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட எங்கள் உறவுக்கார இளைஞர் ஒருவர்.

தராசின் முதல் தட்டில் மூன்று தொழிலதிபர்கள். முதலாமானவர் தமிழகத்தில் பெரிய ஜவுளிக்கடையை வெற்றிகரமாக இயக்கி வருபவர். இரண்டாம் தொழிலதிபர் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை இயக்கி, சென்னையின் பல மென்பொருள் நிறுவனங்களுக்கு உணவு சப்ளைகளை வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கிறார். மூன்றாவது தொழிலதிபர் கட்டடக்கலையில் முதுகலைப் பெற்ற ஒரு பெண். அவரும், கட்டிடங்கள், பொட்டிக் என இரு தொழில்களை பெரியளவில் வெற்றிகரமாக இயக்கி வருகிறார்.

மூன்று தொழிலதிபர்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணம். செய்யும் தொழில், பிறந்த இடம், வளர்ந்த பின்புலம், வயது என மூவருக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள். ஆனாலும் இந்த மூன்று வெற்றியாளர்களுக்குள்ளும் சில பொதுவான ஒற்றுமைகள் இருந்தன.

அவற்றுள் முதலாமானது, மூவரும் கடுமையாக உழைத்து தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொண்டு வருபவர்கள். அதை தக்க வைப்பதற்கு புதிது புதிதாக எதாவது ஒரு விஷயத்தைக் கற்று வருகிறார்கள். அப்படி கற்றுக்கொள்கையில் தாங்கள் வெற்றி அடைந்த நிலை, வயது போன்றவற்றை அவர்கள் பார்க்கவில்லை. கற்றுக்கொள்கையில், குழந்தைகள் போல் மாறி அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள். பல தோல்விகளை, ஏமாற்றங்களை சிறு வயதிலிருந்து கண்ட இந்த சாதனையாளர்கள், போராடும் குணத்தை பெருமளவில் வளர்த்து உள்ளனர்.

ஒவ்வொரு முயற்சியிலும் அவர்கள் பெற்ற வெற்றி தோல்விகளில் ஏதேனும் ஒரு அனுபவத்தைக் கற்றுக்கொண்டு, அதை அடுத்த முயற்சிகளில் பயன்படுத்த தெரிந்தவர்கள். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் வித்தகர்கள்.

தராசின் இரண்டாவது தட்டில் எங்கள் உறவினர் ஒருவன். 24 வயது இளைஞன். பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில். பிறப்பிலிருந்தே வசதி அதிகம். “இல்லை” என்ற நிலையே கேள்விபட்டதில்லை. எல்லாமே அதிகப்படியாகத் தான் கிடைத்தது. சென்னையில் மருத்துவம் பயில்வதற்கு அவனது பெற்றோர்கள் அவனை நம்மூர் அனுப்பி வைத்தனர். பெற்றோர்கள் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்க, அவன் மட்டும் சென்னையில் அவனது பாட்டியுடன் தங்கி மருத்துவம் பயின்று வந்தான்.

சென்னையில் படிக்கும்போது, அவனை பார்த்துக்கொள்ள ஒரு பாதுகாவலர், ஒரு ஓட்டுனர், ஒரு சமையல்காரர் என 24 மணி நேரமும் மூன்று பணியாட்களை அமர்த்தியிருந்தனர் அவனது பெற்றோர்கள். அவன் அடிக்கடி அமேரிக்கா போவதும், பெற்றோர்கள் அவனை பார்க்க சென்னை வருவதும் கூட உண்டு. இத்தனை இருந்தும், சில தினங்களுக்கு முன், அந்த இளைஞன் தற்கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டான்.

இப்படியான இரு வித்தியாசமான சூழ்நிலைகளை ஒரே தட்டில் வைத்து ஆராயும் போது, பெற்றோர்களாகிய நாம் என்ன கற்க வேண்டும், நம் பிள்ளைகளுக்கு எதை சொல்லிக்கொடுக்க வேண்டும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் போன்ற புரிதல் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு சொத்து சுகம் சேர்ப்பதில் மட்டும் பெரும் கவனம் கொடுக்கும் பல பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உண்மையாக என்ன தேவை என்பதை புரிந்துக்கொள்வதில்லை. பொருள்களை சேமித்து கொடுக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால், சமாளிக்கும் பக்குவத்தை, மனோபாவத்தை பெரும்பாலும் சொல்லித்தர விட்டுவிடுகின்றனர்.

அதிலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிறுவயது முதல் எதிலும் தோற்றுவிடக்கூடாது, ஏமாந்துவிடக்கூடாது என்ற உறுதியான எண்ணத்துடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்கையில் அந்த குழந்தைகளுக்கு எத்தகைய துன்பத்தை எதிர்காலத்தில் தர இருகின்றனர் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

“வீழ்வது தோல்வியல்ல, வீழ்ந்த பின் எழ மறுப்பதே தோல்வி. ஒவ்வொரு தோல்வி தரும் பாடமும், அனுபவமும் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்மையான ஆசிரியர்கள். வெற்றிகள் தற்காலிக மகிழ்வை தருகின்றன, ஆனால் தோல்வி மட்டுமே நீண்ட நெடிய பயணத்துக்கு தேவையான எரிபொருளைத் தருகிறது”. இந்த முக்கியமான பாடங்களை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும்.

ஒரு வித்தியாசமான கோணத்தில் வாழ்வை பார்க்கலாம். தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், துயரங்கள், இழப்புகள் தான் வாழ்வில் பெருமளவு வெற்றியடந்தவர்களை செதுக்கியுள்ளன. இதற்கு வரலாற்றில் எண்ணற்ற ஆதாரங்களும் சான்றுகளும் உள்ளன.

தோல்விகளை வெற்றியின் படிக்கற்களாக பார்ப்பவர்கள், வாழ்வை வென்றுவிடுகிறார்கள், தோல்வி பயம் உள்ளவர்கள், முயற்சி செய்யாமல், அந்த படிக்கட்டிலேயே உட்கார்ந்துவிடுகின்றனர்.

உங்கள் குழந்தைகளுக்கு நிறைய முயற்சிகளையும் சவால்களையும் காண்பியுங்கள். நிறைய தோற்கவிடுங்கள். வெற்றியின் தாரக மந்திரத்தை, வாழ்வின் உண்மையான அர்த்தத்தை, லட்சியத்தை அவர்கள் தானாக புரிந்துக்கொள்வர்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(4)Dislikes(0)
Share
Aug 312018
 

 

1990 ஆம் ஆண்டு. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எலிசபெத் நியுடன் என்ற பெண் முதுகலை பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஒரு எளிமையான ஆனால் வித்தியாசமான விளையாட்டு போட்டியை தனது ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்தினார்.

அந்த விளையாட்டில் சில மனிதர்களை கலந்துக்கொள்ள வைத்து, அவர்களை இரண்டு அணிகளாக பிரித்தார். ஒன்று “ஒலி எழுப்புபவர்கள்” குழு, மற்றொன்று அந்த “ஒலியை கேட்பவர்கள்” குழு.

போட்டி இது தான். உலகின் புகழ்பெற்ற 25 பாடல்களை ஒலி எழுப்புபவர்களிடம் கொடுத்து, அவர்களை அதற்கான இசையை, ஒரு மேசையில் தாளமாக தட்டி வாசிக்க வைப்பது (அதாவது மேசையை தட்டி அந்த பாடலுக்கான இசையை எழுப்பவேண்டும். இந்த 25 பாடல்களும் “happy birthday to you” போன்று நாம் மிகவும் பழக்கப்பட்ட, பல முறை கேட்டும் உபயோகப்படுத்தியும் உள்ள பாடல்கள்)

அந்த 25 பாடல்களில் ஒரு பாடலை தேர்ந்தெடுத்து, ஒலி எழுப்புபவர் ஒருவர் மேசையில் வாசிக்க வேண்டும். அதே போல் எதிரணியில் உள்ள ஒருவர்  அது என்ன பாட்டு என யூகித்து சரியாக சொல்ல வேண்டும்.

அவ்வளவு தானே, இது ரொம்ப எளிதாயிற்றே என் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. நடந்ததோ முற்றிலும் வித்தியாசமான செயல். கேட்பவர்களின் வேலை அத்தனை எளிதாக இருக்கவில்லை. சரியான பாடலை கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இருந்தது.

மொத்தமாக எலிசபெத்தின் சோதனையில் 120 முறை பாடல்கள் வாசிக்கப்பட்டது. கேட்பவர்கள் அணியிலிருந்து வெறும் மூன்று முறை மட்டுமே சரியாக பதில் கிடைத்தது.

முக்கியமாக இந்த உளவியல் சோதனையில் ஒரு விஷயம் தெளிவாக உணரப்பட்டது. எலிசபெத் விளையாட்டின் துவக்கத்தின் போது ஒவ்வொரு ஒலி எழுப்புபவரிடமும் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். “நீங்கள் எழுப்ப இருக்கும் இந்த பாடலின் இசையை, கேட்க இருக்கும் நபர் கண்டுபிடித்து விடுவாரா?” என்பதே அந்த கேள்வி.

ஒலி எழுப்புவர்களும், தாங்கள்  எழுப்பும் இசையை கேட்டு எளிதாக கண்டுபிடித்து விடலாம் என தீர்மானத்துடன் கூறினர். ஆனால் மொத்தமாக 120 பேரில், மூன்று பேர் மட்டுமே சரியாக பாடல்களை கண்டுபிடித்தனர்.

என்ன தான் நடந்தது என அலசி ஆராய்ந்த எலிசபெத், மிக அருமையான ஒரு விஷயத்தைக் கண்டறிந்தார்.

ஒலி எழுப்புபவர்கள், ஒலியை மீட்டும்போது அந்த பாடலுக்கான இசை அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அனால் அந்தப் பாடலுக்கான இசையை கேட்பவர்களுக்கு அவர்களால் சரியாக தெரியபடுத்த முடியவில்லை.

கேட்பவர்கள் அணியில் இருந்த பெரும்பாலான நபர்கள், தங்களுக்கு எதிரணி நபர் வாசித்த தாளமே புரியவில்லை என்றும், ஏதோ சில ஒலிகள் மட்டும் விட்டுவிட்டு கேட்டதாகவும், அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்கவே இயலவில்லை எனவும் தெரவித்தனர்.

ஒலி எழுப்புபவர்கள் அணியிள் இருந்தவர்களுக்கு அந்த பதில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “எத்தனை எளிதான பாடல்? இதைக் கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே? மிகவும் தெளிவாகத் தானே நாம் வாசித்தோம்” என எண்ணினர்.

நடந்தது இதுதான்.

ஒலி எழுப்புபவர்களுக்கு அது என்ன பாடல் என்று தெரிவதால், அது என்ன என்று தெரியாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாதுதான்.

சுருக்கமாக சொன்னால், நமக்கு ஒரு விஷயம் தெரியும் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த விஷயம் தெரியாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என நமக்கு தெரிவதில்லை. பெரும்பாலும் அதை நம் மனது கற்பனை செய்து பார்ப்பதில்லை.. இதற்கு பெயர் “அறிவின் சாபம்”  என கூறுகிறார் எலிசபெத்.

இதில் இன்னொரு பெரிய சவால் என்னவென்றால், நம் அனுபவத்தையும், அறிவையும் அடுத்தவர்களுக்கு புரியுமாறு பகிர்வது.

மனிதர்களுக்கு வாழ்வில் அன்றாடம் வீட்டில், அலுவலகத்தில், சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கும், இடைவெளிகளுக்கும், புரிதளின்மைகளுக்கும் இந்த “அறிவின் சாபம்” ஒரு முக்கிய காரணமாகிறது.

அலுவலகத்திலும், வீடுகளிலும் இதை நாம் பல முறை பார்த்திருப்போம்.

“இது ஒரு சுலபமான வேலை தானே, இதை செய்வது மிக எளிதாயிற்றே” என வேலை வாங்குபவர்கள் எளிதாக யூகித்துக் கொள்கின்றனர். அனால் அந்த வேலையை செய்பவர்களுக்கு அந்த வேலை சுத்தமாக தெரியவில்லை, வேலை வாங்குபவர் கூறியது சுத்தமாக புரியவில்லை என்றால் என்ன நடக்கும்? கண்டிப்பாக அந்த வேலை முடியாமல் தானே போகும்?

ஒரு விஷயத்தில் நம் புரிதல் இங்கு அவசியம் ஆகிறது.

நாம் ஒரு பொறுப்பை, ஒரு வேலையை மற்றவரிடம் ஒப்படைக்கும் போது, அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என நமக்குத் தெரிந்தால் மட்டும் போதாது. அது செய்பவர்களுக்கும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

பொறுப்பை ஒப்படைப்பவருக்கு எந்தளவிற்கு அறிவும் அனுபவமும் உள்ளதோ, அதே அளவு அந்த வேலையை செய்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒருவர் சொல்வது, கேட்பவருக்கு புரியவில்லை எனில் அது சொல்பவர் பிரச்சினை தான் தவிர, கேட்பவர் பிரச்சினை அல்ல. கேட்பவருக்கு புரியுமாறு கூறுவது தான் உண்மையான உரையாடலின் வெற்றி.

நமக்கு ஒன்று தெரிந்தால் மட்டும் போதாது, அதை கேட்பவர்க்கு சரியாக புரியவைக்கவும் தெரிய வேண்டும். இது வீடு, அலுவலகம், சமூகம், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். இந்த உண்மையை சரியாக புரிந்துக் கொள்பவர்கள், வெற்றிப் பெறுகிறார்கள்.

புரிந்துக் கொள்வோம். புரிய வைப்போம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(5)Dislikes(0)
Share
Jul 242018
 

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் திரு.ஷிவ் கேரா உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். படிப்பில் பெரியளவில் இல்லையென்றாலும் தனது விற்பனை, வியாபாரம் மற்றும் பேச்சுத்திறமை மூலம் உயர்ந்த இடத்தை அடைந்தவர் இவர். இவரின் “You can win” புத்தகம் நிறைய பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் சென்ற அவரது பேச்சின் முடிவில் ஒரு கதையை கூறினார். அந்தக் கதையை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். (கதை என்பதால் லாஜிக் இல்லை)

இந்தக் கதையில் நீங்கள் தான் முக்கிய கதாப்பாத்திரம். ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றை பயணியாக, விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்துவிடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது. அப்போது விமானி உங்களிடம், பாராஷூட் ஒன்றை கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார்.

நீங்களும் பாராஷூட்டை எடுத்துக்கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால் சோதனையாக அந்த பாராஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கிவிடுகிறது. காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப் புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

சில நொடிகள் சுற்றிமுற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப் பட்டிருக்கிறது.

முதல் விதி, மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது, கிழக்கு பக்கமாக சென்றால் மட்டும் தான் அந்தக் காட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது என்று   தெரியவில்லை. என்ன செய்வது என்று ஒரு யோசனையும் வரவில்லை. காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் வேறு ஒரு பக்கம்.

அப்போது அந்த இடத்தில் திடிரென்று ஒரு தேவதை உங்கள் முன் தோன்றுகிறது. உங்களின் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு, உங்களிடம் இரு பொருள்களை நீட்டுகிறது.

ஒன்று மணிப் பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக்கூடிய திசை தெரியும். ஆனால் நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என்று தெரியாது.

தேவதை, உங்களிடம் இந்த இரு பொருள்களையும் காண்பித்து, “நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இருப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்?” என்று கேட்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தேர்வு செய்வீர்கள்? எது உங்களுக்கு மிக முக்கியமானதாக தோன்றும்?

திசையா, நேரமா?

வேகமா, வழியா?

ஆம், உங்கள் யூகமும் பதிலும் சரிதான். திசைகாட்டும் கருவிதான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

இந்தக் கதைக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் இதே நிலை தான்.  பல பிரச்சினைகள் நமக்கு வரும்போதும், சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது.

ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தெரியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாதக் காரியமே.

வெற்றிக்கு வேகமாக ஓடுவதை காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது.

எனவே உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றிபெறட்டும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

 

Likes(16)Dislikes(0)
Share
Jun 292018
 

நம் கதாநாயகி 1915 ஆம் ஆண்டு, கியூபாவின் ஹவானாவில் பிறந்தவர். ஓவியம் என்றால் பெரும் ஈடுபாடு அவருக்கு. எட்டு வயதிற்குள் ஒரு பேராசிரியரிடம் ஓவியப் பாடங்களைப் கற்றார். பள்ளிக்குப் பிறகு, கட்டிடக்கலை பாடத்தில் சேர்ந்தது, அவரது ஓவியத்தை மேலும் மெருகேற்றியது.

1939-ல், ஒரு ஆங்கில ஆசிரியரை திருமணம் செய்து, நியூயார்க்கிற்கு குடிப்பெயர்ந்தார். 1943 முதல் 1947 வரை நியூயார்க்கில் பிரபலமான கலைக் கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தும், தனது படங்களை சேகரித்துக் கொண்டேயும் இருந்தார். படங்களின் எண்ணிக்கை தான் கூடியதே தவிர அவருக்கு உரிய அங்கீகாரமோ, வெற்றியோ என்றுமே கிட்டவில்லை. தனது படைப்புகளை பல கண்காட்சிகளில் சமர்ப்பித்து வந்தார், ஆனால் உலகம் அவரை என்றுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

பிறகு 1948 ஆம் ஆண்டில், கலைக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ள பாரிஸ் நகரத்திற்கு சென்று குடியேறினார். பிரபலமான கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பும் அவர்களிடமிருந்து மேலும் சில நுணுக்கங்களை கற்கவும் முடிந்தது. அவரது கலைத் திறனில் மேலும் சில முன்னேற்றம் இருந்தது. ஆனாலும் அவருக்குத் தேவைப்பட்ட சிறு அங்கீகாரம் கூட கிடைக்காத சூழ்நிலையே தொடர்ந்தது.

1950 ஆம் ஆண்டில், ஹவானாவில், தனது அத்தனை படங்களையும் சேர்த்து ஒரு கண்காட்சி செய்து முயற்சித்தார், ஆனால் இம்முறையும் மக்கள் அவருடைய படைப்புகளுக்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்கவில்லை. மீண்டும் தோல்வியடைந்தார்.

அவரது திறமையையும் விடாமுயற்சியையும் கண்டு, என்றாவது ஒரு நாள் அவர் பிரபலமாகிவிடுவார் என்று நம்பிக்கை வைத்து அவருடைய கணவரும், அவருக்கு பெரிதும் உதவினார். ஆனால் பொருளாதாரச் சுமை அவர்களை துரத்தியது. எனவே 1953 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தை விட்டுத் திரும்பவும் நியூயார்க்கிற்கு செல்ல வேண்டியிருந்தது.

நியூயார்க்கிற்குத் திரும்பியபின்னும், அவர் தொடர்ந்து வரைந்துக் கொண்டே இருந்தார். தனது படங்களில் நிறைய பரிசோதனைகளும், புது முயற்சிகளும் செய்தார்.

என்ன தவறு நடக்கிறது என்று தீவிரமாக யோசிக்கையில், ஒரு உண்மை விளங்கியது. ஓவியக்கலை உலகில் அப்போது ஆண் ஆதிக்கம் நிரம்பியிருந்தது. போட்டிகளுக்கு இடையில் எவ்வாறு வேலை செய்வது அல்லது போட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஆண்கள் நன்றாக அறிந்திருந்தனர். இந்த காரணம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க ஒரு பெரிய சவாலாக இருந்தது.

1965 ஆம் ஆண்டில் அவர் 50 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது இன்னொரு சிக்கலையும் சந்தித்தார். பழைய கலைஞர்களை அறிமுகப்படுத்துவதை தவிர்த்து, புதியவர்களை சேர்க்குமாறு கண்காட்சிகளில் அதிகாரப்பூர்வமற்ற விதி வந்திருந்தது. இதனால் ஒவ்வொரு வருடமும் அவரது வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருந்தன.

ஆனாலும்… அவர் தடுமாறவில்லை. ஓவியத்தைத் தொடர்ந்தார், உலகமும் அவரை தொடர்ந்து அவமதித்தது.

புகழ்பெற்ற அரங்கங்களில் தனது கலையை காண்பிப்பதற்கு ஒரு வாய்ப்பைப் பெற முடியவில்லை என்றாலும், சின்னஞ்சிறு தனி நிகழ்ச்சிகளில் கடினமாக முயற்சித்தார், ஆனால் வெற்றி அவரை நெருங்கவே இல்லை. இருப்பினும், அவரது கணவர் தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவளித்து, மேலும் உழைக்கும்படி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது வேலையை பாராட்ட அல்லது விமர்சிக்க யாரும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வரைவார். “எப்படியும் யாரும் நமது கலையை கண்டுக்கொள்ளப் போவதில்லை.. பின் எதற்காக உலகத்திற்கு ஏற்றமாதிரி வரைய வேண்டும், தன் இஷ்டம் போல் வரையலாமே?” என எண்ணி பல புது முயற்சிகளை, சோதனைகளை செய்து பார்த்தார். அதற்கான சுதந்திரம் அவரிடம் இருந்தது. அவருடைய ஆர்வம் மற்றும் நோக்கம் மட்டுமே தொடர்ந்து அவரை பணியாற்ற வைத்தது.

1970 கள், 1980 கள் மற்றும் 1990 களில் தொடர்ந்து வரைந்தார். அவருடைய ஓவியங்களிலிருந்து பணத்தையோ பெயரையோ சம்பாதிக்கவில்லை. வயது அதிகரித்துக் கொண்டே இருந்தது ஆனால் அவர் மனவலிமை மற்றும் குறைந்துபோகவில்லை.

அவரது ஓவியங்களை அவர் மட்டுமே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.

வரைவதும் பார்வையாளரும் அவர் மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஓவியம் வரைந்து அவற்றை பராமரித்து வைப்பது கடினமாக இருந்தது. பொருளாதார நெருக்கடி வேறு. சில படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்துப்போக ஆரம்பித்தது.

1998 ஆம் ஆண்டில், 83 வயதை எட்டினார்.

அப்போது தான் அத்தனை வருட உழைப்பிற்கு முதன் முதலில் ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்தது. ஒரு பத்திரிகை அவரைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் சிறு தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆனால் அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. 2000 ஆம் ஆண்டில் அவரது கணவர் இறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த துணையை இழந்ததில் மிகவும் இடிந்து விடுகிறார்.

“ஒரு நாள் நீ இந்த உலகில் மதிக்கப்படுவாய்” என்று அடிக்கடி நம்பிக்கை கொடுத்து, வாழ்க்கையில் பெரும் உந்துசக்தியாக இருந்தார் அவர் கணவர். கணவரின் நம்பிக்கை பொய்க்க கூடாது என மீண்டும் வரையத் துவங்குகிறார்.

கணவரின் மரணத்திற்குப் பின்னரும், ஒவ்வொரு காலையும் எழுந்து தொடர்ந்து வரைந்தார். உடலில் மூட்டுகள் பாதிப்படைந்த போதிலும், அவர் மனம் உறுதியுடனே இருந்தது.

2000 ஆம் ஆண்டில், 85 வயதை எட்டி இருந்தார். வேறு எவரையும்விட கலை உலகில் பல நிராகரிப்புகளை கண்டிருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய பணமோ, புகழோ, அங்கீகாரமோ பல வருடங்கள் ஆகியும் கிடைக்காமலே இருந்தன.

பொதுவாக மற்றவர்கள் வாழ்வில் இது போல் நடந்து இருந்தால், தம் திறமை சரியில்லை, அல்லது நேரம் சரியில்லை என ஏதாவது காரணம் கூறி வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருப்பர். ஆனால் நம் கதாநாயகி அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை. அவர் எளிதாக வெறுப்படைந்து இருக்கலாம், சோகமோ, கோபமோ அடைந்து இந்த உலகத்தை திட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் இதை எதுவும் செய்யாமல் வரைந்துக்கொண்டே இருந்தார்.

விதி பணிந்தது.. வெற்றி கதவை தட்டுகிறது..

2004 ஆம் ஆண்டில், அவரது நெருங்கிய நண்பர், மன்ஹாட்டன் நகரத்தில் உள்ள லத்தீன் கலெக்டர் கேலரி உரிமையாளரான ஃபிரடெரிகோ சேவியுடன் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்த இரவு அவரது வாழ்வில் ஒரு பெரும் விடியலை கொண்டு வந்தது.

மூன்று பெண் ஓவியர்கள் இடம்பெற வேண்டுமென திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியை சேவி ஏற்பாடு செய்திருந்தார். அதிர்ஷ்டவசமாக ஒரு பெண் ஓவியர் கலந்துக் கொள்ள முடியாமல் போகவே, அவருக்கு மாற்றாக ஒருவரை சேவி தேடிக்கொண்டிருந்தார்.

நண்பர் நம் கதாநாயகி பெயரை பரிந்துரைத்து, அவரது படைப்புகளில் சில மாதிரிகளை காண்பித்தார். சேவி அவரது ஓவியங்கள் பார்த்த போது, பிரமித்து விடுகிறார். அவரது மற்ற ஓவியங்களையும் சேகரித்து, கண்காட்சியில் வெளியிடுகிறார்.

கண்காட்சி மிகப்பெரிய வெற்றி அடைகிறது. இறுதியாக, 85 வயதிற்கு மேல் நம் நாயகியின் கதவை வெற்றி தட்ட ஆரம்பிக்கிறது.

அதற்கு பின் நடந்த சம்பவங்கள் நம்பமுடியாததாக இருந்தன. பல பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் நம் நாயகியை பிரசுரித்தனர். “89 வயதில் இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு” என பாராட்டி தள்ளினர். குறுகிய காலத்தில், நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது.

அவரது ஓவியங்களின் விற்பனை தொடங்கியது. கோடிகணக்காண பணத்திற்கு அவரது படங்களை வாங்கினர் ஓவிய ஆர்வலர்கள். மாபெரும் செல்வந்தராக ஆனார். கணவன் தன் வெற்றியைப் பார்த்து இருந்திருக்கலாமே என்று விரும்பினார். பின்னர், அவரது ஒவ்வொரு படைப்புகளும், சிறந்த கலைஞர்களின் பல புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் வைக்கப்படுகின்றன.

அத்தனை பெரும் சாதனை புரிந்த அந்த பெண்மணியின் பெயர் ‘கார்மென் ஹெர்ரெரா’.

இத்தனை வெற்றிக்குப் பின்னரும் கூட, ஒவ்வொரு நாளும் எழுந்து ஒரு உதவியாளரின் உதவியுடன் வண்ணம் தீட்டுகிறார் ஹெர்ரெரா. அவர் 101 வயதை வரை வரைந்தார். இப்போது அவருக்கு 102 வயது ஆகிவிட்டது.

இந்த மாபெரும் சரித்திரம் நமக்கு சில பாடங்களை விட்டுச் செல்கிறது.

தம் மீது ஏதோ பிரச்சினை உள்ளது என தவறாக எண்ணி எத்தனையோ மனிதர்கள் வெற்றியை நெருங்கும் நேரத்தில் தங்களது முயற்சியை விட்டுச்சென்றுள்ளார்கள். அவை பெரும்பாலும் சூழ்நிலை சரியாக அமையாததே காரணமாய் இருக்கும் என்பது பலருக்கு புரிவதில்லை.

தோல்வி என்பது தள்ளிப்போகும் வெற்றி என்பதை நாம் ஆழமாக உணர வேண்டியுள்ளது.

அதனால் எதையும் நம் பிரச்சினை என எண்ணி போட்டியிலிருந்து விலகிவிடாதீர்கள். நீங்கள் விரும்பும் வேலையை ரசித்து செய்யுங்கள். பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், பிடித்த வேலையில் தம்மை முழுமையாக அர்பணித்து ரசித்து செய்கையில், சாதாரண மனிதனும் ஒருநாள் சாதனையாளர் ஆகிறார்.

பயணம் தொடரும்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(நன்றி: கார்மென் ஹெர்ரெராவின் கதையை ஆங்கிலத்தில் எழுதிய நண்பர் ஷா முஹமது அவர்களுக்கு)

Likes(4)Dislikes(0)
Share
May 182018
 

1-cuGQFeKbVTDX_tyj4UGuOQ

1938 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கரோலி டக்காக்ஸ் (Károly Takács), தன் நாட்டின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் எனப் பெயர் பெற்றிருந்தார். ராணுவத்தில் சர்ஜன்ட்டாக பணிப்புரிந்த அவரிடம் “உலகத்தின் தலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக ஒருநாள் ஆக வேண்டும்” என்பது மட்டுமே ஒரே ஒரு கனவாக இருந்தது.

பல வருடங்கள் இந்த இலக்கிற்காக உழைத்ததினால், கிட்டத்தட்ட அந்த இலக்கை அடைந்துவிடும் தூரத்தில் இருந்தார். அடுத்து நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இவர் தான் தங்கம் வெல்வார் என அனைவரும் நம்பினர்.

ஆனால் 1938 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ பயிற்சியில் அந்த துயர சம்பவம் நடந்தது. எந்த கையை எப்போதும் பார்த்து, ஒருநாள் உலகப்புகழ் அடையப்போகிறது என்று பெருமைப் பட்டுக்கொண்டே இருந்தாரோ, அந்த கையில் தவறுதலாக வீசிய கைக்குண்டு ஒன்று வெடித்துவிடுகிறது. அந்த சம்பவத்தில், இத்தனை வருடமாக பயிற்சி செய்து வந்த கையை இழந்து விடுகிறார். கை போய்விட்டது, அதனோடு சேர்ந்து அவர் கண்ட கனவும்.

அந்த சமயத்தில் அவரிடம் இரண்டே வழிகள் இருந்தன.

ஒன்று – கனவு கலைந்துவிட்டதே என வருந்தி, மீதமுள்ள மொத்த வாழ்க்கையையும் தொலைத்து, எங்காவது போய் ஒளிந்துக்கொள்வது.

மற்றொன்று – ஒரு கை போனால் என்ன, நம்பிக்கை இருக்கிறது என மீண்டும் தன் கனவைப் பற்றிக்கொள்வது.

கரோலி கடினமான இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தார். தான் எதை இழந்தோம், தன்னிடம் எது இல்லை என்பதை மறந்து, கனவை மீண்டும் நினைவாக்க தன்னிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்கிறார்.

தனது இடது கையை முதன் முதலாக வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்.

இதுவரை எழுதக் கூட பயன் படுத்தாத தன் இடது கையால், முயற்சி செய்ய ஆரம்பிக்கிறார். நாட்டில் யாருக்கும் தெரியாமல், ஒரு வருடம் கடுமையாக பயிற்சி செய்கிறார்.

1939 ஆம் ஆண்டு, ஹங்கேரியில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. நாட்டின் பல வீரர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டிக்குச் சென்று அவர்களை வணங்கி வாழ்த்து சொல்கிறார் கரோலி.

“என்ன ஒரு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்! இந்த நிலையிலும் தங்களை வாழ்த்த, உற்சாகப்படுத்த வந்துள்ளாரே” என மற்ற வீரர்கள் வியக்க, கரோலியோ, “நான் உங்களை வாழ்த்த வரவில்லை, வீழ்த்த வந்துள்ளேன்” என கர்ஜிக்கிறார்.

போட்டிகள் தொடங்குகின்றன. அங்குள்ள மற்ற வீரர்கள் தங்களிடம் இருக்கும் இரு கைகளுள் சிறந்த கையை பயன்படுத்தி போட்டிப்போட, கரோலியோ தன்னிடம் உள்ள ஒரே கையால் போட்டிப்போடுகிறார்.

கடைசியில் ஒரே கையுள்ள கரோலி, தான் கூறியது போலவே வென்றுவிடுகிறார்.

ஆனால் அவர் அந்த போட்டியுடன் நின்று விடவில்லை. அவரது இலக்கு ஹங்கேரியின் தலை சிறந்த வீரனாவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் சிறந்த வீரர் ஆவதாக இருந்தது.

அந்த இலக்கிற்காக 1940 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நோக்கி பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் கரோலி. அனால் உலகப்போரினால் அந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்தாகின்றன.

அதை அடுத்து, 1944 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம் என முயற்சிக்கிறார். அந்த போட்டிகளில் தங்கம் வெல்லலாம் என முழு கவனம் செலுத்துகிறார். ஆனால் அந்த முயற்சிகளும் வீணாகின்றன. உலகப்போரினால் 1944 ஆம் ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் ரத்தாகின்றன.

கரோலி சற்றும் மனம் தளராமல், 1948 ஆம் ஆண்டு நடக்க இருக்கும், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம் என மீண்டும் பயிற்சி செய்கிறார். அனால் வேறு சில சவால்கள் இம்முறை வந்தன. அவருக்கு 38 வயது ஆகியிருந்தது. அவருக்கு  போட்டியாக வேகமும் வீரமும் நிறைந்த பல சிறிய வயது இளைஞர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

இம்முறை வயது அவருக்கு தடையாக, கடினமாக இருக்கும் என பலர் நினைத்தனர். ஆனால் கடினம் என்ற வார்த்தையே அவரது அகராதியில் இல்லாமல் இருந்தது.

உலகத்தின் ஒட்டுமொத்த தலை சிறந்த வீரர்களும் தங்களது இரு கைகளுள் சிறந்த கைகளால் போட்டியில் சுட, கரோலி மட்டும் தனது ஒரே கையால் சுடுகிறார்.

அவரது கடும் நம்பிக்கைக்கு விதி வழி விடுகிறது. வெற்றிக்கனியை பறிக்கிறார்.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று, உலகத்தின்  தலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெயர் பெறுகிறார். வெற்றிப் பெற கைகளோ, உடலோ முக்கியமல்ல, உள்ளமும், நம்பிக்கையும் தான் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் கலந்து, தனது  42 ஆம் வயதில் மீண்டுமொரு தங்கம் வென்று, பல சாதனைகளை முறியடிக்கிறார்.

25 மீட்டர் ரேபிட் பயர் (Rapid Fire) துப்பாக்கி சுடும் போட்டியில் தொடர்ந்து இரு முறை தங்கப்பதக்கம் வென்ற ஒரே மனிதர் என்ற சாதனையை அடைகிறார்.

தோல்வியாளர்கள், இலக்கில் வெற்றிப் பெற முடியாமல் போவதற்கு பல காரணங்கள் கூறுவர். தங்களை தோற்கடிக்க கூடிய, அதே காரணங்கள் வெற்றியாளர்களிடமும் இருக்கும், ஆனால் அந்த காரணங்களையும் தாண்டி, வென்றே ஆவதற்கு ஒரு பலமான சக்தியுள்ள காரணம் வெற்றியாளர்களிடம் இருக்கும். அதுதான் இருவருக்கும் உள்ள சிறு வித்தியாசமாக இருக்கிறது.

தன்னிடம் என்ன இல்லை, தான் என்னவெல்லாம் இழந்துள்ளோம் என்பதையே நினைப்பவர்கள் தோர்த்து விடுகின்றனர். ஆனால் தன்னிடம் இருப்பது என்ன, அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன் படுத்தலாம் என சிந்திப்பவர்கள் சாதித்து விடுகின்றனர்.

அதனால் நண்பர்களே, உங்களிடம் இருப்பவைகளை மட்டும் நேசியுங்கள், சரியாக கவனியுங்கள், சிறப்பாக பயன்படுத்துங்கள், உலகமே உங்களிடம் இருக்கும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(11)Dislikes(0)
Share
Mar 302018
 

maslows-Tamil

மாஸ்லோவின் பிரமிடு பற்றி எனது மாணவர்களிடம் சமீபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். அதை தெரிந்துக்கொண்டவர்களிடம் ஒரு பெரிய உற்சாகம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.

அவர்களது வரவேற்பை கண்டவுடன், இதைப் பற்றி நம் B+ தளத்திலும் எழுதலாம் என்று தோன்றவே இந்த இதழில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மாஸ்லோவின் பிரமிட்டில், (படத்தில் உள்ளது போல்) ஐந்து வெவ்வேறு கட்டங்கள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். மனிதனுக்கு வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான பொருள்கள், உணர்வுகள், மனநிலைகள் என அனைத்தும் அந்த ஐந்து கட்டங்களில் இருக்கும்.

தனது ஒவ்வொரு தேவைகளை முடித்து, கீழிருந்து மேலாக ஒவ்வொரு கட்டத்திற்கும், தாவிக் கொண்டே மனிதன் இருக்க விரும்புகிறான்.

முதல் கட்டம் – உடல் சம்பந்தப்பட்டது. இதில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், நீர், காற்று, உடல் உறவு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டம் – பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதில் பாதுகாப்பு, வேலை, சொத்து, சேமிப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியன இருக்கிறது.

மூன்றாம் கட்டம் – அன்பு சம்பந்தப்பட்டது. இந்தக் கட்டத்தில் நட்பு, பாசம், குடும்பம், உறவுகள், சமூகம் ஆகியவை அடங்கும்.

நான்காம் கட்டம் – மரியாதை சம்பந்தப்பட்டது. இங்கு மதிப்பு, அந்தஸ்து, அங்கீகாரம், வலிமை, சாதனைகள், சுதந்திரம் ஆகியன உள்ளன.

ஐந்தாம் கட்டம் – தன்னை அறிதல் பற்றி சம்பந்தப்பட்டது. இதில் நாம் ஏன் பிறக்கிறோம், ஏன் பிறந்தோம், இந்த பிறவியின் லட்சியம் என்ன போன்றவற்றை அறிந்து உணரும் மனநிலை உள்ளது.

இந்த ஐந்து கட்டங்கள் தான் மாஸ்லோவின் பிரமிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மனிதனும் இந்த கட்டங்களின் மூலம், தன் வாழ்வில் இப்போது எந்த கட்டத்தில் இருக்கிறோம், எந்த மனநிலையில் இருக்கிறோம், நமக்கு முக்கிய தேவையாக எது இப்போது இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக, கீழிருக்கும் முதல் மூன்று கட்டங்களில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதில்,  நிறைய மனிதர்களின் வாழ்க்கை பயணம் நின்றுவிடுகிறது.

ஒரே மாதிரியான வாழ்க்கை முறை அமைத்துக்கொள்ளாமல் சற்று ரிஸ்க் எடுத்து சாதித்து, வித்தியாசமான வாழ்க்கை முறையை தேடுவதை பலர் விரும்புவதில்லை.

தான் பிறந்தது எதற்கு, தன்னால் அதிகபட்சமாக செய்யக்கூடிய செயல்கள் என்ன என்று தெரிந்துக்கொள்ளும் மனநிலையை அவர்கள் எட்டிப்பார்பதில்லை. இருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை விட்டு, தங்களால் அத்தகைய கடினமான செயல்களை செய்ய முடியாது என இருந்துவிடுகின்றனர்.

ஆனால் அத்தகைய சாதாரண வாழ்க்கை வட்டத்தை தாண்டி, அடுத்த கட்டங்களைத் தேடி கடினமான இலக்குடன் பயணித்து வெற்றிப் பெறுபவர்களையே சரித்திர நாயகர்களாக இவ்வுலகம் கொண்டாடுகிறது.

அதனால் “வாழ்வில் பணம் வருகிறது, அடிப்படைத் தேவைகள் இருக்கிறது, என் தேவைகள் பூர்த்தி ஆகிவிட்டன” என இருக்கும் சில மனிதர்கள் தங்களது சுயநலக் கூட்டை விட்டு சற்று வெளியே வரவேண்டும்.

நான்காம் ஐந்தாம் கட்டங்களை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மனிதானாலும் இது கண்டிப்பாக முடியும்.

சரி, எவ்வாறு அடுத்தக் கட்டங்களுக்குச் செல்வது?

மிக எளிது..

உங்களது வாழ்வை அர்த்தமுள்ளதாக, அடுத்தவர்களுக்கு உபயோகமுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்த பூமியில் பிறந்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்வில் வித்தியாசத்தை, ஏற்றத்தை, மாற்றத்தை எப்படி ஏற்படுத்தலாம் என கற்றுக்கொள்ளுங்கள்.

“நீ இந்த உலகிற்கு வந்துள்ளதால், உனக்குப் பின் ஒரு முத்திரையை, தடயத்தை விட்டுச் செல். இல்லையேல் உனக்கும், கற்களுக்கும், மரங்களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை” என சுவாமி விவேகானந்தரும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தறிவுள்ள மரங்கள், பறவைகள் கூட பல விதங்களில் சுற்றுப்புறத்திற்கும், மனிதர்களுக்கும் உதவி செய்து விட்டுத்தான் மடிகின்றன. ஆறறிவு உள்ள நாமோ அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

“நீ உனக்காக தேடி வைப்பது, நீ மறைந்தபின் உனக்கு சொந்தமாகாது, அனால்

நீ பிறருக்காக தேடி வைப்பது, நிலையான மதிப்புள்ள புகழை உனக்குத் தேடி தருகிறது”.

என்ற கூற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்றே உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். எனது வீடு, எனது வாழ்க்கை என குறுகிய வட்டத்தில் இருந்துவிடாமல், மற்றவர்கள் வாழ்வில் சிறிதேனும் பாசிடிவான தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.

பேரின்பத்தை தேடுங்கள். நான்காம் ஐந்தாம் நிலைக்கு ஏற்றம் பெறுங்கள்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(9)Dislikes(0)
Share
Feb 282018
 

651452-priya-prakash-varrier

மது மரணம், மதுவால் மரணம், மஜ்ஜைக்காக மரணம், மழழைகள் மரணம் !!

கடந்த ஐந்து நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் தான் பெருமளவு விவாதிக்கப்பட்டு, அதிகளவில் பகிரப் பட்டும் வந்துள்ளது.

கேரளாவில் மது என்ற இளைஞர் பசியினால் அரிசி திருடியதாக, அங்குள்ள மக்கள் அவரை அடித்தே கொலை செய்தனர் என்ற ஒரு செய்தி;

அடுத்து, நடிகை ஸ்ரீதேவி துபாயில் மது அருந்தியப் பின், குளியல் தொட்டியில் குளிக்கும் போது மரணமடைந்தார் என்ற செய்தி;

மூன்றாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ட.ஜோசப் முதியவர்கள் இல்லத்தில் எலும்பு மஜ்ஜைக்காக 1560 முதியவர்கள் கொலை என்ற செய்தி;

அடுத்து சிரியாவில் குழந்தைகள் கொத்து கொத்தாக கொலை என்ற செய்தி.

இந்த நான்கு செய்திகளில் எந்த செய்தி, எத்தனை தூரம் உண்மை என்பது யாருக்கு தெரியும்? இந்த செய்தியை பகிர்ந்தவர்கள், ஏன் பகிர்கிறோம், இதை பகிர்வதால் யாருக்கு என்ன பயன், யாருக்கு என்ன தீமை என்பதை எல்லாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. கண்மூடித்தனமாக பல நேரங்களில் பல விஷயங்களை பகிர்ந்து விடப்படுகின்றன.

மக்களின் இந்த மனநிலை தான் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில் நிறுவனங்களுக்கு தேவை. இந்தியாவும் இங்குள்ள மக்களும், மக்களின் உணர்ச்சியும் வேகமும் ஒரு மாபெரும் சந்தை.

இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடிக்கும் அதிகமான மக்கள் இணையத்தை உபயோகிக்கின்றனர். சுமார் 30 கோடி ஸ்மார்ட் போன்கள் இங்கு உள்ளன. முகநூலில் 24 கோடிக்கும் அதிகமான அக்கவுண்டுகள் உள்ளன. வாட்ஸாப்பை 20 கோடிக்கும் அதிகமான மக்கள் உபயோகிக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நம்மூரில், மீம்ஸ் தயாரிப்பது, பொய்யான செய்திகள் உருவாக்குவது, ஹாஷ்டக் போடுவது, போட்டோக்களை, விடியோக்களை வைரல் ஆக்கி தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆக்கிவிடுவது போன்றவற்றை செய்வதற்கென்றே சில நிறுவனங்களும் ஆட்களும் பணியில் உள்ளனர்.

உழைப்பே இல்லாமல், ஏதாவது வித்தியாசமாக செய்து ஓவர்நைட்டில் உலகப் புகழ் அடைய வேண்டும் என்ற பைத்தியக்கார ஆசை சிலரிடம் பரவி வருவதை காண முடிகிறது.

சமீபத்திய ஜிமிக்கி கம்மலும், பிரியா பிரகாஷ் வாரியார் என்ற பெண்ணின் கண்ணடிப்பும் எத்தனை பெரிய விவாதங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியன  என்பதும், இவைகளுக்கு இத்தனை கவனமும் முக்கியத்துவமும் தேவையா எனவும் யோசிக்க வைக்கிறது.

சில நேரங்களில் இது போன்ற சில்லரை விஷயங்களுக்கு நாம் தரும் தேவையற்ற முக்கியத்துவம், ஒரு தவறான முன்னுதாரணமாய் அந்த பெண்ணின் வயதில் உள்ளோர்களுக்கு இருந்து விடுகிறது.

அது மட்டுமின்றி அரசியல் கேளிக்கைகளும், மீம்ஸ்களும் கிண்டல்களும் மற்றொரு புறம்.

முகநூலில் இந்த கட்சி/ஆட்சி சரியில்லை என ஒரு பகிர்வும், அந்த கட்சி/ஆட்சி சரியில்லை என அடுத்து பகிர்வும் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கலாம். வாட்ஸாப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அதுவும் “உண்மையான தன்மானத் தமிழன் என்றால் டக்குனு இந்த செய்தியை யோசிக்காமல் பகிரவும்” என ஒரு பின்னூட்டம் வேறு!

பெரும்பாலும் ஒரு பொய்யான தகவல் பகிரப்படும் போது, அதைப் பகிர்பவர் தனது பங்கிற்கு இரண்டொரு பிட்டை சேர்த்தே போட்டு விடுவது, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் ஆகி விடுகிறது.

நம் பகிரும் ஒவ்வொரு செய்தியும் எவரேனும் ஒருவருக்கு ஏதாவதொரு வகையில் பணம் ஈட்டி தந்து கொண்டிருக்கிறது. அதை அறியாமல் உணர்ச்சியின் வேகத்தில் சம்பளம் வாங்காத ஒரு மார்க்கெட்டிங் ஏஜெண்டாக நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

முன் பின் தெரியாத, அறிமுகமே இல்லாத ஒருவரை பற்றி தேவையற்ற விவாதங்களை வலைதளங்களில் செய்து, அறிமுகம் உள்ள, நல்ல பழகியவர்கள் உறவை, நட்பை இழக்கிறோம்.

ஒரு கணம் நின்று, ஏன் இத்தகைய பொய்யான செய்திகள் பரவுகின்றன என யோசித்து பார்த்தால், குறைந்து வரும் ஸ்மார்ட் போன்களின் விளையும், இன்டர்நெட் டேட்டாவின் விளையும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

நாணயத்தின் இரு பக்கங்கள் போல், ஒரு புறம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமக்கு பெரும் பலன்களை தரும் வேளையில், மறு புறம் இத்தகைய பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

எந்த வித முன்னெச்சிரிக்கையும், வழிகாட்டுதலும் இல்லாமல், திடீரென நம் கைக்கு எளிதாக வந்து விட்ட இந்த இருமுனை கூறிய கத்தியை கையாள தெரியாமல், விழிப்புணர்வும் கூட இல்லாமல் மாட்டிக் கொள்கிறோம்.

சமீபத்தில் இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அருமையான மூன்று வழிகளை கூறினார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  • முதலில் நமக்கு வரும் எந்த ஒரு எதிர்மறை தகவல்களையும், யோசிக்காமல் நம்பி விட கூடாது
  • அதை விட முக்கியம், முடிந்த வரை எதிர் மறை செய்திகளை உணர்ச்சிவசப்பட்டு பகிராமல் இருப்பது
  • தனக்கு கண்டிப்பாக உண்மையென தெரிந்த மற்றும் நல்ல செய்திகளை மட்டும் பகிர்வது

எளிமையான வழிகள் தான்! அதை கேட்டவுடன், சரி தான், நாமும் இது போல் செய்யலாமே எனத் தோன்றியது.

ஒரு சிறு கதை. ஒரு முறை ஒரு துறவியிடம் சீடர் ஒருவர், “சுவாமி, வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த துறவி சிரித்து கொண்டே, “பக்தா, இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்பதே ஒன்று கிடையாது. உனது ஒவ்வொரு நாளின் அனுபவத்தையும், உன் சிந்தனை மற்றும் நடத்தை மூலம், இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்று. அது தான் முக்கியம்” என்றார்.

எத்தனை ஆழமான அறிவுரை!

நாமும் இந்த சமூக வலைதளங்களில், நேரத்தை விரயமாக்கும் தேவையற்ற வதந்திகளை, மற்றும் அடுத்தவரை பாதிக்கும் பொய்யான செய்திகளை பகிராமல், நல்ல விஷயங்களை நல்ல பகிர்வுகளை மட்டும் பகிரலாமே?

மார்கெடிங் ஏஜெண்டாக இருந்து தான் ஆவோம் என்று முடிவெடுத்துவிட்டால், நல்ல விஷயங்களுக்கு மட்டும் இருப்போமே..

மாற்றி யோசிப்போம்.

அற்புதமான வாழ்வை மேலும் அழகாக்குவோம்!

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(8)Dislikes(0)
Share
Jan 132018
 

ML1 - Copy

சமிபத்தில், சுமார் 45வயது நிரம்பிய அந்த பெண்ணிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. நீச்சல் குளத்தில் நீருக்குள் தான் நடப்பதை வீடியோ எடுத்து மகிழ்வுடன் அனைவருடனும் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் நடப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா, அதை ஏன் படம் எடுத்து அவர் பதிவிடவேண்டும்?

காரணம் இருக்கிறது. அவருக்கு அது மகிழ்ச்சி தான். ஏனெனில் வாழ்வின் பெரும் பகுதியை சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுள் அவரும் ஒருவர். சக்கர நாற்காலியிலேயே தொடர்ந்து அமர்ந்திருந்ததினால், முதுகுத்தண்டில் பெரிய பிரச்சினை வரவே, சில மருத்துவர்களால் இனி பிழைப்பது சிரமம் என ஒரு நேரத்தில் கைவிடப்பட்டவர்.

“விழுவது தோல்வியல்ல, விழுந்தப்பின் எழ மறுப்பதே தோல்வி” என்று எண்ணி அந்த கடினமான தருணத்திலும் போராடி, படிப்படியாக முன்னேறி பல சாதனைகளைப் புரிந்த அபூர்வ சாதனைப் பெண் அவர்.

அவர் பெயர் மாதவி லதா. ஒரு தனியார் நிறுவனத்தில் உதவித் தலைமை அதிகாரியாக பணிப்புரிகிறார். தேசிய பாரா-ஸ்விம்மிங் போட்டிகளில் பல முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் கூடைப் பந்து அமைப்பின் தலைவர், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒரு தொண்டு நிறுவனத்தின் நிறுவி நடத்தி வருபவர் என பல முகங்கள் இவருக்கு. இவரது வெற்றிப் பயணத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்புவர்கள் இந்த லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். http://bepositivetamil.com/?p=1136

நீருக்குள் அவர் நடந்த வீடியோவை பதிவிட்டதுடன் கூடவே “என்னாலும் நடக்க முடியும்” என்ற பின்னூட்ட வரியின் மூலம் தன் மகிழ்வை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தார். அந்த வரி சற்று வித்தியாசமான கோணத்தில் என்னை சிந்திக்க வைத்தது.

இவர் போல் இயற்கையால் தண்டனை அளிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு எந்த மாதிரி உணர்வு இருக்கும்? “கண் தெரியாதவர்கள், தங்களது வாழ்வில், இந்த உலகத்தின் அழகை, வர்ணங்களை ஒரு முறையாவது பார்த்து ரசித்து விட மாட்டோமா எனவும், காது கேளாதோர் ஒரு முறையாவது ஒலிகளை, தங்களுக்கு பிடித்தோரின் குரல்களை கேட்டு விட மாட்டோமா” எனவும் தோன்றுமல்லவா?

இருந்தும் அத்தகைய துயர உணர்வை, ஏக்கத்தை உதறி தள்ளிவிட்டு பெரும் நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும், இயற்கை அளித்த தண்டனையை எதிர்த்து போராடி வென்றுக் கொண்டிருக்கும் மாதவி லதா போன்ற சாதனையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஆனால் உடல் ரீதியில் எந்த பிரச்சினையும் இல்லாமல், உள்ளத்தில் மட்டுமே பிரச்சினையுடன் சில மனிதர்கள் தங்களுக்கு கிடைத்த அருமையான வாழ்வை சோம்பல், அலட்சியம், முயற்சியின்மை, நம்பிக்கையின்மை என சில எதிர்மறை குணங்களினால் வீணடித்து விடுகின்றனர்.

முயற்சி செய்தால் எத்தகைய இலக்கையும் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை விட்டுவிட்டு, அருமையான இந்த வாழ்வையும் இன்னுயிரையும் சிறுசிறு தோல்விகளுக்குக் கூட இத்தகையோர் சிலர் மாய்த்துக் கொள்கின்றனர்.

அப்படி வாழ்வின் மீது நம்பிக்கையில்லாத சில மனிதர்கள், மாதவி லதா போன்ற மனிதர்களை,  அவர்களது கடும் முயற்சிகளை, அவர்களது அளவற்ற நம்பிக்கை சக்தியை, அதன் மூலம் வந்த வெற்றிகளை பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.

முயன்றால் முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை என்பதற்கு இத்தகைய வெ(ற்)றியாளர்கள் தான் சான்று.

புது நம்பிக்கையுடன் இந்த ஆண்டினை தொடங்குவோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(2)Dislikes(0)
Share
Share
Share