Jan 242017
 

 

wa

பெயர் வாட்ஸாப்
உருவாக்கியவர் ஜான் கூம் (உக்ரெய்ன் நாட்டில் பிறந்தவர், 19 பில்லியன் டாலர்களுக்கு முகநூலிடம் விற்றவர்)
மெயிண்டெயின் செய்பவர் மார்க் ஜக்கர்பர்க் (முகநூல்)
உபயோகம் செய்பவர் உலகம் முழுதும், குறிப்பாக இந்தியர்கள்
ப்ளஸ் ஒரு சில நொடிகளில் உலகத்தையே சுற்றி   வந்துவிடுவது
மைனஸ் ஒரு பதிவு உண்மையா, பொய்யா என விசாரிக்காமலே, பலரை ஷேர் செய்யவைப்பது
செய்வது எல்லோரும், குருப்பில் தங்கள் பதிவுகளை சமத்தாக அனுப்பிவிட்டு, அடுத்தவர்கள் பதிவுகளை ஜென்டிலாக படிக்காமல் விடுவது
ஸ்லிப் ஆவது நூற்றுக்கணக்கான மொக்கை மெசேஜ்கள் வருவதால், ஒன்றிரண்டு நல்ல மெசேஜ்களை  படிக்காமல் விட்டுவிடுவது
அட்டாக் பண்ணுவது கருத்துக்களை வக்கணையாக அடுக்கும் குருப்பில் உள்ள அப்பாடக்கர்கள்
அல்லோலப் படுவது அட்மின்கள்
சிக்கிக்கொள்வது “எப்போதும் அதையே பார்த்து, உங்களுக்குள்  சிரிக்கிறீர்களே” என வீட்டம்மா பூரிக்கட்டையை தேடுவது
உலக சாதனை 100 கோடிக்கும் அதிக முறை டவுன்லோட் செய்யப்பட்டது
உள்ளுர் சாதனை முகநூலுடன் இணைந்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில், அனைத்து தமிழர்களையும் இணைக்கும் பாலமாய் இருந்து கலக்கியது
வாழவைத்த சாதனை பண்டிகைக்கு எஸ்.எம்.எஸ் (SMS) அனுப்பினால்  எக்ஸ்ட்ரா சார்ஜ் என்ற மிரட்டலில் இருந்து காப்பாற்றியது
வாழ்நாள் சாதனை உலகத்தை சுருக்கியது

– விமல் தியாகராஜன் &  முத்து சிவா

Likes(9)Dislikes(0)
Share
 Posted by at 8:27 am
Jan 142017
 

3yrs journey

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே!

பொங்கல் வந்தாலே நமது குழுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான். ஒன்று இது தமிழர்களின் அடையாளம், இரண்டு இந்த நன்னாளில் தான், நமது B+ இணைய இதழை துவக்கினோம்.

ஆம், இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நேர்மையாக கூற வேண்டுமெனில், இந்த இணைய இதழை ஆரம்பிக்கையில், இத்தனை தூரம், இத்தனை விதமான அனுபவம் தரும் பயணமாக இருக்கும் என கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை.

இந்தப் பயணம் ஒரு தனி மனிதனின் வெற்றி அன்று. பலரின் ஏகோபித்த ஆதரவினாலும், அரவணைப்பினாலும் வந்துள்ளது. இதை ஏதோ தன்னடக்கத்தில் சொல்லுவதாக எல்லாம் நினைக்க வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் வாழ்க்கைத் தரும் அன்றாடச் சவால்களில், இந்த முயற்சியைக் கைவிட்டுவிடலாமா, வாசகர்களுக்கு உள்ள வேலைப்பளுவில் இதையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள், சமுதாயத்திற்கு உண்மையாகவே இந்த இணைய இதழால் பயன் உள்ளதா என்ற கேள்விகள் பலமுறை எழுந்ததுண்டு.

அப்படி கைவிட்டுவிடலாம் என்ற எண்ணம் ஒவ்வொரு முறையும் பலமாக  எழுந்தபோது, ஏதேனும் ஒரு வாசகர், ஏதாவது ஊரிலிருந்து, நமது ஏதாவது ஒரு பதிவு அவருக்கு அளித்த பலனையும், நம்பிக்கையையும், தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அந்த உரையாடல், அந்த நபர்களின் மகிழ்ச்சி, போன்றவை தரும் உந்துசக்தி, நம்மை மீண்டும் இயக்கி ஓட வைக்கும்.

பல முறை இது போன்ற நிகழ்வுகள் நடந்தபின் தான், “சரி, ஏதோ நம்மை மீறிய ஒரு சக்தி, நம்மை இந்தச் செயலை செய்ய இயக்கி வருகிறது” என்று தோன்றும்.

ஆனாலும் இது ஒரு சிறு இணையம் தானே, பல லட்சம் மனிதர்கள் தங்கள் எண்ணங்களை, எழுத்து ரூபத்தில் அரங்கேற்றிய இந்த உலகில், இதுவும் ஒரு சராசரி எழுத்துக்களம் தானே, இதனால் என்ன உறுதியான, அளக்கக்கூடிய (tangible & measurable) பயன், எவருக்கு இருக்கப் போகிறது என்ற எண்ணம் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது.

2015 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளம், இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக அமைந்தது. ஒரு தனிமனிதனாக செய்திருக்க முடியாத, இரு பெரும் வெள்ள நிவாரணப்பணிகளை நமது இணையத்தின் வாசகர்களின் ஆதரவின் மூலமாக வெகு எளிதாகச் செய்ய முடிந்தது.

இப்போது இந்த மூன்றாண்டு பயணத்தை திரும்பி பார்க்கையில்..

30 சாதனையாளர்களை பேட்டி எடுத்தது, இரண்டு சாதனையாளர்களை காணொளி மூலமாக பேட்டி எடுத்தது, பல மாணவர்களுக்கு, (அவர்களது கல்லூரிகளுக்கேச் சென்று) இந்த சாதனயாளர்களைப் பற்றி எடுத்துரைத்து ஊக்குவித்தது, பல மாணவர்களுக்கு பயிற்சி (Internship) கொடுத்தது, பல எழுத்தாளர்களுக்கு தங்கள் திறமையை நிருபிக்க ஓரு களத்தைக் கொடுத்தது என பறந்து விரிந்துள்ளது நம் இணையம்.

அதிலும் குறிப்பாக அரசியல், மதசிந்தனை, கிரிக்கெட், சினிமா போன்றவற்றைத் தொடாமல், எல்லோராலும் எற்றுக்கொள்ளக் கூடிய நல்ல விஷயங்களை, ஊக்குவிக்கும் நேர்மறை பதிவுகளை மட்டுமே வைத்து பயணித்தது, ஒரு சிறப்பம்சமாகவே இருந்துள்ளது.

இதுவரை, உலகின் பல்வேறு தேசங்களிலிருக்கும் ஒரு லட்சம் தமிழ் வாசகர்கள், கிட்டத்தட்ட 7லட்சம் முறை நமது இணையத்தைக் கண்டுகளித்துள்ளனர்.

மேலும், தற்போது, “தமிழ் online, but not talking” என்ற குறும்படத்தை, சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் உதவியோடு தயாரித்து இயக்கி வருகிறோம். இந்தக் குறும்படத்தின் மூலம் தமிழ் படிக்கும் மாணவர்களின் நிலையைக் கொண்டுபோய் தமிழ் ஆர்வலர்களிடம் சேர்த்து, அந்த மாணவர்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர முயற்சித்து வறுகிறோம்.

(அந்த குறும்படத்தின் முதல் அறிமுகப் பகுதியை இந்த லிங்கில் காணலாம் https://www.youtube.com/watch?v=SlDXngNkw5U&t=1s)

தற்போதுள்ள மனநிலையில் நமது இணைய இதழின் மூலம், ஒவ்வொரு வருடமும், நன்றாக தமிழ் படிக்கும் 100 மாணவர்களுக்கு வேலை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற விருப்பத்தை, எண்ணத்தை இலக்காக நிர்ணயித்துள்ளோம்.

இதையெல்லாம் தெரிவிக்கையில், சாதித்துவிட்டோம் என்ற பெருமை, அதீத நம்பிக்கை (over-confidence) போன்ற தேவையற்ற உணர்வுகள் எல்லாம் எழவில்லை. மாறாக பொறுப்பும், கவணமும், அக்கறையும் அதிகரித்துள்ளதாக உணர்கிறோம்.  நாம் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகமாக உள்ளது, இதுவரை பயணித்தது ஒரு தொடக்கம் மட்டுமே, அதைதான் உங்களுடன் தாழ்மையுடன் தெரிவித்து பகிர்ந்துக்கொள்கிறோம்.

வரவிருக்கும் சவால்களையும், நெடுந்தூரப் பயணத்தையும் உங்களைப் போன்ற நல்ல இதயங்களின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடும் கடந்து, தமிழ் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்ய, தமிழ்த்தாயை வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.

வானம் வசப்படும் என்ற நம்பிக்கையில்,

விமல் தியாகராஜன் & B+ Team

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(3)Dislikes(0)
Share
Jan 112017
 

love

எங்கள் குழுவில் சேது என்ற ஒரு இளைஞன் இருக்கிறான். மிகச் சுமாரான தோற்றம், கிராமப்புறத்திலிருந்து வருகின்ற வசதி குறைந்த இளைஞன் என்பதை அவனை பார்த்தவுடன் சொல்லிவிடலாம். ஆனாலும்…. சேதுவைச் சுற்றி எப்போதும் ஒரு பெரும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். உற்சாகம் அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கு கரைபுரண்டோடும். எத்தனை சீரியஸ் மனிதராக இருந்தாலும் அவனிடம் பேசினால், மனது இலதாகி, இளமையாகிச் செல்வர். சுருக்கமாக சொன்னால் அவனை பிடிக்காது என்று கூறுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், எங்கள் கூட்டத்தில் அவன் தான் ஹைலைட்..!

சேது போல் நாம் பலரை சந்தித்திருப்போம், ஒவ்வொரு கூட்டத்திலும் அவனைப் போல் ஒருவர் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள். இத்தகைய மனிதர்களால், இதுபோல் எப்போதும் உற்சாகத்துடன் இருந்து, எல்லோரின் அன்பையும், மதிப்பையும் எப்படி பெற முடிகிறது?

நீங்களும் இதுபோல் எல்லோராலும் விரும்பப்பட நினைக்கிறீர்களா? அப்படியெனில் கண்டிப்பாக இந்தப் பதிவு உங்களுக்குத்தான். இதில் கூறப்பட்டுள்ள வழிகள் உங்களை யோசிக்க வைக்கும்.

 1. ஈகோ இல்லாமல் இருக்கும் குணம்

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிகக் முக்கியமான குணம் இதுதான். மனிதன் தனது ஈகோவை எப்போது உடைக்கிறானோ, அப்போதே சக மனிதர்களிடம் உள்ள பிரிவு பாலத்தை உடைக்கிறான் என்றாகிறது.

“இவர் எவ்வளவு கிண்டல் பண்ணினாலும் கோபப்படமாட்டார், விளையாட்டாக எடுத்துக்கொள்வார்” என்ற பெயரை எடுங்கள். இதற்கு ஈகோ இல்லாதிருத்தல் வேண்டும். இந்த குணம் உள்ளவரை பலரும் விரும்புவர் (ஒருவேளை, உங்கள் தன்மானம் பாதிக்கும் அளவு கிண்டல் இருந்தால், நிதானமாக கிண்டல் செய்பவரிடம், அவர் தனியாக இருக்கையில் தெரிவித்துவிடலாம்)

 1. எல்லா மனிதர்களிடம் நல்ல விஷயங்களை கண்டுபிடிப்பது

செல்வா என்ற எனது நண்பரிடம் ஒரு சிறந்த குணமுண்டு. அவரது நட்பில் உள்ள எந்த மனிதரைப் பார்த்தாலும், அந்த மனிதர்களிடம் உள்ள ஐந்து நல்ல விஷயங்களை கடகடவென  அடுக்கி விடுவார். அதில் முகஸ்துதி இருக்காது, உண்மை இருக்கும்.

நம்மை ஒருவர், இன்னொருவரிடம் அறிமுகப்படுத்துகையில் நம்மைப் பற்றி ஐந்து நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னால், அந்த உணர்வு எப்படி இருக்கும்?! இந்தப் நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் அன்றாடம் பழகும் மனிதர்களிடம் குறைகளை காணாமல், அவரிடமுள்ள மூன்று நல்ல விஷயங்களையாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

 1. மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள்

எல்லோராலும் விரும்பப்படும் மனிதர்களின் அடுத்த நல்ல குணம் இது. நீங்கள் தப்பு செய்து விட்டீர்கள் என நீங்களே நினைத்தால், “நான் தப்பு செய்துவிட்டேன்”, “கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்”, “நான் அப்படி பேசி இருந்திருக்கக் கூடாது” போன்ற மன்னிப்பு வரிகளை கூறி, மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். “தவறு செய்பவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் மாமனிதன், மன்னிப்பவன் தெய்வம்”.

 1. நம்பகத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்

“இவரிடம் எத்தகைய ரகசியங்களையும் கூறலாம், யாரிடமும் சொல்ல மாட்டார்”. “இவர் ஒரு வேலையை செய்கிறேன் என ஒப்புக்கொண்டால், கண்டிப்பாக முடித்துவிடுவார்’ இது போன்ற குணங்களுக்குச் சொந்தக்காரர் ஆகிவிடுங்கள். உங்களின் மீது ஒருவரின் நம்பகத்தன்மை அதிகரிக்கையில், நன்மதிப்பும் பெருகும்.

 1. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது அன்பு செலுத்துங்கள்

“எவர் ஒருவரிடம் பெரிய இதயம் இருக்கிறதோ, அவரே மற்றவர்களின் இதயத்தையும் வெல்கிறார்”. எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, ஏழை பணக்காரன் போன்ற பாகுபாடும் இன்றி, சமூகத்தில் உள்ள எல்லோரிடத்தும் அன்பாகவும், கருணையாகவும் நடந்துக்கொள்ளுங்கள்.

 1. சுயத்தை இழக்காதீர்கள்

பணம், பதவி, பட்டம் வேண்டுமென விரும்பி சிலர் தங்கள் குணநலன்களை அப்படியே மாற்றிக்கொள்வர்.

ஆனால் வேறு சிலரோ, “இவருக்கு நடிக்கத் தெரியாது, பொய் சொல்லத் தெரியாது, ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், ‘தெரியாது’ என வெளிப்படையாக சொல்லிவிடுவர்” என்றெல்லாம் பெயர் எடுத்திருப்பர்.

இந்த இரு வகைளில், மக்களுக்கு யாரைப் பிடிக்கும்? எந்த நிலையிலும் உங்கள் சுயத்தை இழக்காதிருந்தால், பல மனிதர்களின் மதிப்பை ஸ்கோர் செய்வீர்கள்தானே?

 1. நன்றி உணர்வுடன் இருங்கள்

சின்னதோ, பெரியதோ, யார் எந்த உதவி செய்திருந்தாலும் மறக்காதிருங்கள். அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி பேசி நன்றி தெரிவியுங்கள். மிக முக்கியமாக, அவருக்கு ஒரு உதவி தேவைப்படுகையில், நீங்கள் அவரை மறக்கவில்லை என்பதை நிருபித்து அவருக்கு உதவுங்கள்.

 1. வெறுப்பை தொடர்ந்து வளர்த்துவராதீர்கள்

முதலில் யார் விட்டுக்கொடுப்பது என்ற போட்டியில் நீங்களே விட்டுக்கொடுங்கள். “விட்டுக்கொடுப்பது கோழைத்தனம் அல்ல, அது உயர்ந்த மனம்”. வெறுப்பை வளர விடாதீர்கள், எதுவும் கடந்து போகும் என நினைத்து, அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

 1. உங்கள் பெருமையை பேசிக்கொண்டே இருக்காதீர்கள்

நம்பிக்கையாய் இருப்பது, மிகுந்த உற்சாகத்துடன் இருப்பது, பாசிடிவாக இருந்து அனைவரையும் ஊக்குவிப்பது போன்ற குணங்கள் பலரை உங்களுக்கு விசிறிகளாக மாற்றும். அதே நேரத்தில், சுயத்தம்பட்டம் அடிப்பது, நம் துதியை நாமே திரும்பத்திரும்ப பாடுவது போன்ற குணங்கள், மனிதர்களை நம்மை விட்டு தெறித்து ஓட வைத்துவிடும்.

 1. பேசுவதை பொறுமையாக கவனியுங்கள்

பொதுவாகவே நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்திருப்பவர்கள், பொறுமையுடன் அடுத்தவர்கள் கூறுவதை கவனிப்பவர்களாக இருப்பர். “எனக்கு சில கஷ்டங்கள் இருக்கிறது, அவனிடம் சென்று ஷேர் செய்துக் கொள்ளப்போகிறேன், அவன் தான் பொறுமையாக நான் சொல்வதைக் கேட்பான்” என சிலர் கூறுவர். பல நேரங்களில் மக்கள், தங்கள் பிரச்சினைகளை வெளியில் கூறுவது, தீர்வு வேண்டியல்ல, சுமைகளை இறக்கி வைக்கத்தான்.

 1. சிரிக்கப் பழகுங்கள், சிரித்துப் பழகுங்கள்

போலித்தனமில்லாத உண்மையான சிரிப்பு உடையவர்கள், நிறைய மனிதர்களை கவர்வது இயற்கை. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்க காரணம் அவர்களின் கள்ளம் கபடமில்லாத சிரிப்பு மட்டுமே. சிலர் எத்தனை ஜோக் கூறினாலும், “சிரிப்பேனா பார்?” என்பதைப் போல் உம்மணாமூஞ்சியாக உக்கார்ந்திருப்பர். நீங்கள் அதுபோல் இல்லாமல், உங்கள் கூட்டத்தில் யாராவது ஜோக் கூறினால், ரசித்து மனம் விட்டு சிரித்துப் பழகி, நட்பைத் தொடருங்கள்.

 1. யாரையும் காயப்படுத்தாமல் பேசுங்கள்

சிலர் “நா எதுவாக இருந்தாலும், வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுன்னு, மூஞ்சியில் அடிப்பத போல் சொல்லிருவேன்” என்று பெருமையாக அடுத்தவர்களை காயப்படுத்தும் விதத்தில் கூறுவர். இருதய நோயாளிகளிடம் அதிர்ச்சி தரும் செய்திகளை பக்குவமாக கூறுவதைப் போல், எதை, எங்கு, எப்போது சொல்லவேண்டும் என்பது ஒரு கலை. அந்தக் கலையைக் கையாளத்  தெரிந்தவர்கள் ரசிக்கப்படுகிரார்கள்.

 1. இணைந்து முன்னேறுங்கள், போட்டி போடாதீர்கள்

ஆங்கிலத்தில் “Complement and Don’t Compete” என்பார்கள். இது குறிப்பாக தம்பதிகள் தங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு தன்மை. ஆண்கள் புரிதலை அதிகமாகவும், பெண்கள் அன்பை அதிகமாகவும் தேடுவது இயற்கையின் நியதி. இந்த அடிப்படை வித்தியாசத்தை புரிந்து நடக்கையில், நீங்கள் விரும்பப்படுவது சாத்தியப்படுகிறது, உறவு பலப்படுகிறது.

 1. வெளிப்படையாக பேசி தீர்த்துவிடுங்கள்

மனது விட்டு வெளிப்படையாக பேசுபவர்களை அனைவருக்கும் இயற்கையாகவே பிடிக்கும். அதே சமயத்தில், பேச்சு தொனதொன என்று loose-talk ஆக இல்லாமல் இருத்தல் அவசியம், (இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது). உங்களுக்கு ஒருவரிடம் பிரச்சினை இருக்கு என்றால், நேரடியாக அவரிடம் அதைப் பற்றி பேசுங்கள். அவர் இல்லாத இடத்தில், அவரைப் பற்றி பேசினால், அவரும் திருந்துவது கடினம், உங்கள் பெயரும் பப்ளிக்காக பாதிக்கப்படும்.

 1. சுயநலம் இல்லாமல் இருத்தல்

கடைசியாக ஆனால் மிக முக்கியமான பண்பு சுயநலமின்மை. உங்களுக்கு பிற்காலத்தில் தேவைப்படும் என்றெல்லாம் பார்க்காமல், சமூக அக்கறையுடன் பிறர்க்கு உதவி செய்யுங்கள். உதவியர்க்கு அந்த உதவிப் பற்றி, பெருந்தன்மையுடன் நீங்கள் சொல்லாமல் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு சமயத்தில் அவரே அதை வேறொருவர் மூலமாகத் தெரிந்துக்கொள்கையில், அவர் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்திருப்பீர்கள்.

15 விஷயங்களும் முடிந்து விட்டது. ஒரு சிறு எச்சரிக்கை.. நம்மால் அனைவரையும் திருப்தி படுத்துவது என்பது மிகக் கடினம், ஆனால் அந்த முயற்சியில், எத்தனை தூரம் இறங்குகிறோம் என்பதில் தான் வெற்றி உள்ளது.

அதனால் இங்கு கூறப்பட்டுள்ள 15 விஷயங்களை ஆராய்ந்து, “சரி” என உங்களுக்குத் தோணும் விஷயங்களை செயல்படுத்தி பாருங்கள். பல மனிதர்களின் அன்பை பெறத் தொடங்குவீர்கள்..!

விமல் தியாகராஜன்

Likes(10)Dislikes(0)
Share
Jan 032017
 

news

வேண்டாம்… வேண்டாம்… வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்:
வேண்டாம்… வேண்டாம்… அப்புறம் அவ்வளவுதான் என்று வடகொரியாவை எச்சரித்துள்ளது அமெரிக்கா… எதற்காக தெரியுங்களா?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புத்தாண்டு தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தொலைக்காட்டியில் பேசியபோது, தோன்றி நாட்டு மக்களிடையே பேசும்போது, “நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தும் திட்டத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம்.

இதை நாம் நிகழ்த்தி விட்டால் இங்கிருந்தே அமெரிக்காவின் கடற்கரை நகரங்களை (சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவு) நம்மால் தாக்க முடியும் என்று பேசினார்.

இதற்குதான் பென்டகன் உடனடி பதிலடியை வெளியிட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே வடகொரியாவுக்கு தடை விதித்து உள்ளது. அதையும் மீறி சோதனை நடத்துவோம் என்று வடகொரியா கூறுகிறது.

அப்படி செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

சிறைக்கு போயும் திருந்தாத கைதிகள்… மோதல்… பலி 60 பேர்

மனோவ்ஸ்:
சிறைக்கு போயும் திருந்த மாட்டேங்கிறாங்களேப்பா… என்று நொந்து போய் உள்ளனர் பிரேசில் மக்கள். எதற்காக தெரியுங்களா?

பிரேசில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம்தான் இப்படி ஒரு வேதனையை கிளப்பி உள்ளது.

பிரேசில் நாட்டில் அமேசான் காட்டு பகுதியை ஒட்டிய மனோவ்ஸ் சிறை உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தல் உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட அதிகார மோதல் பெரும் கலவரமாக மாறியது. இந்த கலவரம் இன்று காலை 7 மணி வரை நீடித்தது.

சிறை அதிகாரிகள் 12 பேரை பிணையமாக பிடித்த கைதிகள் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டு  ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதில் 60 க்கும் மேற்பட்டார் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

துருக்கி தீவிரவாத தாக்குதல்… கண்காணிப்பு கேமராவில் சிக்கிய மர்ம நபர்

இஸ்தான்புல்:
துருக்கி தீவிரவாத தாக்குதலின் போது கண்காணிப்பு கேமராவில் பதிந்த கொலையாளியின் உருவத்தை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் பிரபல இரவு நேர விடுதியில் புத்தாண்டை கொண்டாட கூடியிருந்த மக்களை மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். பின்னர் அங்கிருந்து அவன் தப்பியோடிவிட்டான்.

இந்த தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் பலியாகினர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த கொடூர தாக்குதலை நடத்தியவன் உருவன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை துருக்கி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளியின் உருவத்தை அடிப்படையாக கொண்டு அவனை தேடும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஐ.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது.

ஓட்ட வா என்றால்… ஊற்றிக் கொண்டு வந்த பைலட்… இப்போ சிறையில்….

கனடா:
ஓட்ட வா என்றால்… ஊற்றிக் கொண்டா வருகிறாய் என்று புல் போதையில் மட்டையான விமானியை சிறையில் தள்ளியுள்ளனர் போலீசார். எங்கு தெரியங்களா?

மேற்கு கனடாவின் கால்கரி விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவுக்கு 100-க்கும் அதிகமான பயணிகளுடன் போயிங் 737 ரக விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை புறப்படத் தயாராக இருந்தது.

விமானம் புறப்படுவதற்கு முன்பு, விமானத்தை ஓட்ட இருந்த பைலட் புல் போதையில் மட்டையாகி விமானத்தின் காக்பிட்டில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் அளிக்க, தொடர்ந்து வேறொரு விமானியை வைத்து அந்த விமானம் இயக்கப்பட்டது. அப்புறம் என்ன பொறுப்பில்லாமல் பணிக்கு வந்த அந்த விமானியை பொறுப்பாக போலீசில் ஒப்படைக்க… இப்போது கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

மழை… மழை… தென் கடலோர மாவட்டங்களில் மழை…

சென்னை:
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை… பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு அருகே நிலவி வரும் காற்றழுத்தம் வலுவிழந்துவிட்டது. மேலும் தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் (இன்று 3ம் தேதி காலை 8.30 மணியிலிருந்து) அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை.

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

N.நாகராஜன்

Likes(1)Dislikes(0)
Share
Jan 022017
 

final

புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளீர்கள். ஆனால் எப்படி என தெரியவில்லையா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.

சிலரால் மட்டும் எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க என்ன வேண்டும்..? கோடி ரூபாய் பணம்..? ஒரு பெரிய பங்களா..? கோடீஸ்வர வீட்டு சம்பந்தம்..? லட்ச லட்சமாய் பணம் புரளும் வியாபாரம்..?

இவை மட்டும் கிடைத்து விட்டால் போதுமா..? காலம் முழுவதும் கவலைகளின்றி சந்தோஷமாக இருந்து  விடுவோமா..?

சந்தோஷம் எதில் தான் இருக்கிறது? ரொம்ப சுலபம். நம் “எண்ணத்தில்” தான் அது இருக்கிறது.

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் சில வழிகளை இங்கு பார்ப்போம்!

1.எல்லா மனிதர்களையும், எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும் கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். உங்களை சுற்றியிருக்கும் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரின் நல்ல விஷயங்களை ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.. குழந்தைகளிடம் இதை நாம் கற்கலாம், எதையுமே ரசித்து பார்த்து மகிழ்வது குழந்தைகளின் குணம்.

2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்!

உளவியல் ஆய்வின் படி, ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.

3.பிடித்ததை செய்யவும்!

பிடித்த விஷயங்களை செய்யம்போது, மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பலருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். வேண்டாம் என தவிர்க்கவும் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி அதிகரிக்கும்.

4.செய்வதை திருந்தச்செய்வும்!

நீங்கள் எந்த வேலை  வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.

5. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!

சில ஆய்வுகளின் படி, புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்குமாம். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்க வைக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

6.தடை..அதை உடை.!

எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். தன்னம்பிக்கையை வளர்த்தலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், உங்கள் கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். சோக நினைவுகள் வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.

8.அடிக்கடி சிரியுங்கள்!

அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்க வேண்டும்? நகைச்சவை உணர்வு கொண்டவராக மாறிவிடுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப் பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து..

9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!

கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மறப்போம், மன்னிப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !

10.நன்றி சொல்வது, நன்று!

உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!

வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போது, அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.  அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். உற்சாகம் அதிகமாகும்.

12.ஆதலால் அதிகம் காதல் செய்!

நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !

13.நமக்கு நாமே நல்லது!

உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில், குறிப்பாக உங்கள் உடல் நலனில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.

14.தியானம் நல்லது!

ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின்  மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !

15.நன்மையே செய்வோம்!

நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி, மகிழ்ச்சியாக்கி விடும்.

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பல்கலைக்கழகம் சொல்லிக்கொடுக்கும் வழிகள்தான் மேலே கூறப்பட்டுள்ளவை. இது இந்த ஆண்டிற்கு மட்டுமல்ல, எல்லா ஆண்டிற்கும் பொருந்தும். முடிந்தவரை இந்த விஷயங்களை கடைபிடியுங்கள், ஆனந்தமாய் இருங்கள். மகிழ்ச்சியுடன் இந்த வாழ்வை கொண்டாடுங்கள்.

S.முரளிதரன்

Likes(13)Dislikes(1)
Share
Share
Share