Oct 142016
 

RB

கல்லூரியில் எங்களுடன் பொறியியல் படித்த நெருங்கிய நண்பருக்கு IITயில், டிசைன் பிரிவில் மேல் படிப்பு படிக்க ஆர்வம் வந்தது. டிசைனில் ஈடுபாடு இருந்தும், படங்கள் வரைவதில் அவருக்கு அத்தனை விருப்பம் இல்லை. ஆனாலும் டிசைன் பிரிவாயிற்றே, நேர்முகத் தேர்வின் போது ஏதேனும் படத்தை வரைய சொல்லி கேட்கலாம் என எண்ணி தன் வீட்டினுள் சுற்றி பார்த்திருக்கிறார். மேசை மீதுள்ள தொலைபேசி கண்ணில் படவே, அதையே வரைந்து பழகியுள்ளார். என்ன ஆச்சரியம்! நேர்முகத் தேர்வில் இவரை, தொலைபேசி படத்தை வரைய சொல்லிக் கேட்டுள்ளனர். அட்டகாசமாக வரைந்து, IIT யில் நுழைவும் பெற்று விடுகிறார்.

அடுத்ததாக, இன்னொரு முக்கிய நிகழ்வு. கோயமுத்தூர் ஆணையர் திரு.விஜய் கார்த்திகேயன் சமீபத்தில் நடந்த ஒரு கூடுதலில், சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்றதை பகிர்ந்துக்கொள்ளும் போது, ஒரு அருமையான சம்பவத்தை நினைவுக் கூர்ந்தார். ஒருநாள் அவரது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார், அப்போது சில வண்டிகளில் Bharat Stage என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதைக் கண்டு, அது என்ன என்ற விவரத்தை சேகரித்தார். அது காற்று மாசுப்படுவதை தடுக்க ஏற்படுத்தியுள்ள Emission Standards என்பதை தெரிந்துக்கொள்கிறார். அதிர்ஷ்ட வசமாக, அவர் சிவில் சர்விஸ் எழுதிய அந்த வருடம் Bharat Stage குறித்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நிகழ்வும் உணரத்துவது ஒரு விஷயத்தை தான். நம் மனது ஆழமாக ஒரு செயலில் வெற்றிப் பெற்று விடுவோம் என நம்புகையில் நமக்கே தெரியாத வகையில், சுற்றியுள்ள சில விஷயங்களை நாம் எதேச்சையாக கவனிக்க (observe செய்ய) நேரும். இந்த observation power மூலம் வெற்றிக்குத் தேவையான சின்னஞ்சிறு முக்கிய தகவல்களும், யோசனைகளும் நம்மை தானாகவே வந்து சேரும்.

நம்பிக்கையின் சக்தி அத்தகைய பெரியது. நடக்கவே முடியாது என உலகமே ஒதுக்கி விட்ட ஒரு விஷயத்தை தன் அசாத்திய நம்பிக்கை மூலம் நடத்திக் காட்டிய பிரிட்டனைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ரோஜர் பானிஸ்டரின் வாழ்வை இதற்கு ஒரு பெரிய உதாரணமாக பலர் காண்கின்றனர். இவரது வெற்றிப் பயணம் தோல்வியினால் துவண்டு கிடக்கும் எந்த மனிதனையும் தூண்டி விட்டு ஓட வைக்கும். எத்தனை சவால்கள் வந்தாலும் சாதிக்க துடிப்பவர்களுக்கு, இவரது வாழ்க்கை ஒரு உதாரணமாகவும் உற்சாக டானிக்காகவும் அமைந்துள்ளது.

இவரது சாதனையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள சுமார் 60 வருடங்கள் பின்னோக்கி செல்வோம்.

ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் எந்த ஒரு மனிதனாலும் ஓடி கடக்க இயலாது என்ற ஒரு கூற்று பல வருடங்களாக ஓட்டப்பந்தய உலகத்தில் அசைக்கமுடியாத சவாலாக இருந்தது. இந்த வேகத்தில் ஓடினால் மன அழுத்தத்தில் உடல் நிலைகுலைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை வரும் என ஓட்டப்பந்தய வீரர்களும், வல்லுநர்களும், ஆராய்ச்சியாளர்களும் எண்ணினர்.

“அனால் இந்த கூற்று உண்மையில்லை, என்னால் இந்த சவாலை உடைக்க முடியும்” என தன்னை முழுமையாக நம்பி 1954 ஆம் ஆண்டு அந்த சாதனையை படைத்தார் ரோஜர் பானிஸ்டர். அது மட்டுமல்லாது நான்கு நிமிடங்களில் ஒரு மைல் தூரத்தை ஓடி அடைந்த உலகின் முதல் மனிதர் என்ற பேரும் பெற்றார்.

சிறு வயதிலேயே மருத்துவராக வேண்டும் என கனவு கண்ட பானிஸ்டர், நலிந்துள்ள  தன் குடும்ப பொருளாதார சூழ்நிலையினால், தனது பெற்றோர்கள் தன்னை மருத்துவம் படிக்க வைக்கமாட்டார்கள் எனப் புரிந்துக்கொண்டார்.

வேறு வழியில்லை தன் கனவை விட்டுவிட வேண்டியது தான் என அவர் நினைக்கையில், தன்னுள் ஒரு ஓட்டப்பந்தய வீரன் ஒளிந்துள்ளான் என உணர்ந்தார். அந்த திறமை மூலம் பல போட்டிகளில் வென்று, விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப் மூலம் oxford பல்கலைகழகத்தில் நுழைந்தார்.

Oxford பல்கலைகழகத்தில் உள்ள பலர், அவர் ஓடும் திறமையைக் கண்டு, 1500மீட்டர் பந்தயத்தில் அவருக்கு வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது என, 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் தன் படிப்பைத் தொடர வேண்டும் எனக் கூறி அந்த ஆண்டின் ஒலிம்பிக்ஸ் வாய்ப்பை நிராகரிக்கிறார் பானிஸ்டர்.

படிப்பு முடித்தவுடன் 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில், தீவிர பயிற்சிகளுடன் 1500மீட்டர் பந்தயத்தில் களம் இறங்கினார். கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என மக்களின்  எதிர்பார்ப்பு இவர் மீது அதிகமாக இருந்தது. ஆனால் அந்த போட்டிகளில் நான்காம் இடத்தை மட்டுமே அவரால் பிடிக்க முடிந்தது.

பிரிட்டன் நாட்டின் பிரஸ்களும், அவர் எதிர்ப்பாளர்களும் அவரின் தோல்வியை கண்டு எள்ளி நகையாடினர். நான்கு ஆண்டு முன்னரே, வாய்ப்பு நன்றாக இருந்தது, அப்போதே  போட்டியில் கலந்திருந்தால் பதக்கம் வென்றிருக்கலாம் என பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். வெறுப்பின் உச்சம் ஒருபுறம். மீண்டும் ஓடலாமா அல்லது ஓட்டத்திற்கே முழுக்கு போட்டு விடலாமா என்ற குழப்பம் மறுபுறம்.

இந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிவருவதற்கே சுமார் இரு மாதம் காலம் தேவைப்பட்டது பானிஸ்டருக்கு.

ஆனால் தெளிவாக, பிரம்மாண்டமான கனவுடன் மீண்டு வந்தார். தன் உண்மையான திறமையை தனக்கும் உலகிற்கும் நிருபிக்க இன்னும் பெரிய இலக்கை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்தார். அதுதான் நான்கு நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை எட்டிப் பிடிக்க முடியும் என யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையை புரிய அவருக்கு உதவியது.

இது அடையக்கூடிய இலக்கு இல்லை என்பது மட்டுமில்லை, அபாயகரமானது கூட எனவும் பலர் எச்சரித்தனர். ஆனாலும் உறுதியுடன் தன்னம்பிக்கையுடனும் பயிற்சியில் இறங்கினார். அவரது தீவர நம்பிக்கை வீணாகவில்லை. அவரது விடாமுயற்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. தன் லட்சியத்தின் வாயில் கதவை அடைந்துவிட்டதைக் காணத்தொடங்கினார்.

கடைசியாக அந்த நாளும் வந்தது. 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி நடைப்பெற்ற ஒரு போட்டியில் அந்த அற்புதச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பானிஸ்டர்.  3 நிமிடங்கள் 59 நொடிகளுக்குள் ஒரு மைல் தூரம் ஒடி உலக சாதனை படைத்து பலரை வியப்பில் ஆழ்த்தினார்.

முடியவே முடியாது என உலகம் ஒதுக்கிப் போட்ட ஒரு இலக்கை ஆழ்ந்த நம்பிக்கையின் மூலமும், தீவிர முயற்சியின் மூலமும் சாதித்த இவரை முன்னோடியாக வைத்து, “ஆம், இந்த இலக்கு சாத்தியம் தான்” என இவருக்கு பின் மேலும் பலர் இந்த சாதனையை செய்து முடித்துள்ளனர்.

இந்த செயல் நடக்காது என்று எப்போது எதிர்மறையாக நம்புவதை நிருத்துகிறோமோ, அப்போதே அது சாத்தியாமாக தொடங்குகிறது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நம்பிக்கை தான் பல அரும்பணிகளின் ஆணி வேராக இருக்கிறது.

ஒரு செயல் கண்டிப்பாக முடியும் என நீங்கள் நம்புகிறபோதும், அந்த செயலையே ஒவ்வொரு தருணமும் முழு மனதோடு எண்ணிக் கொண்டிருக்கையில், அந்த அற்புதம் நிகழ்கிறது, வெற்றிக் கதவை நீங்கள் திறக்கின்றீர்கள். மருத்துவ உலகம் இதை RAS (Reticular Activating System) எனப்படும் மூளை சம்பந்தப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் விளைவு என்கின்றனர்.

“ஆழமான காரணம் (Purpose), தெளிவான இலக்கு, அதை அடைந்தே தீரும் தீவிர நம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் எத்தகைய சாதனைகளையும் புரிந்து விடலாம். இந்த நம்பிக்கையின் மூலம் RAS System வெற்றி பெற தேவையான எண்ணம், தேவையற்ற எண்ணம் என பிரித்து, நமது எண்ணங்களை ஒருமித்து, நம்மை கவனத்துடன் செயல் பட வைக்கிறது” என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.

இந்த சக்தி தான் மேலே குறிப்பிட்டதைப் போல், நம்மைச் சுற்றியுள்ள வெற்றிக்குத் தேவைப்படும் சின்னஞ்சிறு நிகழ்வுகளையும், உணர்வுகளையும் நம்மை கவனிக்க வைத்து, சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

அதே நேரத்தில் நம்பிக்கையில்லாது ஒரு செயலில் ஈடுபட்டோம் என்றால், வெற்றிக்குத் தேவையான சின்னஞ்சிறு முக்கியத் தகவல்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம்.

அதனால் வென்றிடுவோம் என ஆழமாக நம்பிக்கை வையுங்கள், சாதித்து காட்டுங்கள். வெற்றி உங்களுடையதாகட்டும்!!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

(To follow us, LIKE our FB Page https://www.facebook.com/bpositivenews)

Likes(6)Dislikes(0)
Share
Oct 142016
 

Spl 3

உறுதியான உடலும், தளராத மனமும் கொண்டவர்கள் நம் முன்னோர்கள். இவர்களின் முறையான உணவு பழக்கம், இவர்களை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக மாற்றி இருந்தது.

நாகரீகம் என்ற பெயரில் நாம் சமைக்கும் பாத்திரத்தில் ஆரம்பித்து உணவையும் மேற்கத்திய நாகரீகத்திற்கு மாற்றி கொண்டதால் ஏற்பட்ட வினை இன்று நமக்கு வரும் நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.

இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. இது உண்மைதான் என்று உரக்கவே சொல்கிறார் அரசு டாக்டர் சிவக்குமார். அவர் கூறிய தகவல்கள் அப்படி தந்துள்ளோம்.

40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். ஆனால் இப்போது 30திலிருந்து 35 வயது வரை உள்ளவர்களுக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதற்கு காரணம் சரியான உடலுழைப்பு இல்லாததும், மாறிப்போன உணவுப்பழக்க வழக்கமுமே காரணம். இப்படி எலும்பு தேய்மானத்தால் முதலில் பாதிக்கப்படுவது கால்கள்தான்.

அதிலும் மூட்டு வலி வந்து விட்டால் 30 வயதுக்காரர்களும் 60 வயது முதியவர்கள் போல்தான். இந்த மூட்டு வலிக்கு எளிமையான மருந்தை நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

இந்த கீரைக்கு இந்த பெயர் வருவதற்கு என்ன காரணம் தெரியுங்களா? கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கீரையை இப்போது உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான். இதன் பலன் தெரியாமலேயே இதை முடக்கி விட்டோம். ஆனால் காலத்தின் சுழற்சியால் இப்போது முடக்கத்தான் கீரையை தேடிப்பிடித்து சாப்பிடும் நிலையில் உள்ளனர் மக்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.

இந்த கீரை புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது. இந்த கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தருகிறது.

வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி பஞ்சாய் பறந்து விடும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர கால் மூட்டு வலி வராது.

இப்படி அற்புதமான மூலிகை போல் செயல்படும் முடக்கத்தான் கீரை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ்சுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் சிறப்புக் குணம்தான் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதே போல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை நம் உடலிலே விட்டு விடுகிறது.

இது ஒரு மிக முக்கியமான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது. இதனால்தான் அந்த காலத்திலேயே தினம் ஒரு கீரை என்று சாப்பிடடு வந்த நம் முன்னோர்கள் முடக்கத்தான் கீரைக்கும் முக்கிய இடம் அளித்திருந்தனர்.

கடினமான உழைப்பை கொடுத்த அவர்களுக்கு எலும்பு தேய்மானத்தை தடுத்தது இந்த முடக்கத்தான் கீரைதான். சாதாரணமாக தண்ணீர் உள்ள இடத்தில் பரவலாக இந்த முடக்கத்தான் கீரை வளரும். அந்த காலத்தில் வீட்டின் பின்பக்கத்தில் அதிகளவில் இந்த கீரை வளர்ந்துள்ளது.

இன்றும் கிராமப்பகுதியில் இந்த கீரையை வளர்த்து உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்த கீரையை எப்படி பயன்படுத்தலாம் என்கிறீர்களா? முடக்கத்தான் கீரையை பறித்து சுத்தம் செய்து அரைத்து தோசை மாவில் கரைத்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்.

இந்த கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. இதனால் இதில் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும் என்பதையும் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி என அனைத்து வலிகளும் விட்டு விலகி ஓடிவிடும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணாப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரிகிறது.

முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்.
கீரையைச் சாறு எடுத்து சூப்பாகச் சாப்பிடுவது பயன் தரும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாக முடக்கத்தான் கீரை உள்ளது.

தற்போது தமிழகத்தில் பல பிரபலமான ஓட்டல்களில் முடக்கத்தான் தோசை பிரபலம் ஆகி வருகிறது. இப்படி உணவுக்கு உணவாகவும், உடலை காக்கும் மருந்தாகவும் உள்ளது முடக்கத்தான் கீரை.

– N.நாகராஜன், தஞ்சாவூர்

Likes(2)Dislikes(0)
Share
Oct 142016
 

4

சென்னையில் 2009ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு, யு.கே நாட்டில் MBA, பின் 9 வருடங்கள் ஐடி துறையில் பிசினஸ் இதெல்லாம் முடித்து விவசாயத்தில் நுழைந்து உள்ளார் திரு.ஸ்ரீராம் அவர்கள்.

Future Farms என்ற நிறுவனத்தை தொடங்கி, Hydroponics  என்ற நவீன தொழில்நுட்ப  விவசாயம் செய்து, அதன் மூலம் நல்ல உணவு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என விரும்புகிறார். இவரை சென்னை பெருங்குடியில் உள்ள இவரது தோட்டத்திற்குச் சென்று நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்திற்காக சந்தித்து பேட்டி எடுத்தோம்.

வணக்கம் ஸ்ரீராம், விவசாயம் ஆர்வம் எவ்வாறு வந்தது?

சுமார் பத்து வருடங்களாக வியாபாரம் செய்து, அதில் முன்னேற்றம் கண்டு வந்தாலும் ஏதோ முழு திருப்தி இல்லாத நிலை இருந்தது. உண்மையான சாதனை ஏதும் நாம் செய்யவில்லை என்ற எண்ணம் நிலவியது. Real life problem ஏதேனும் ஒன்றை கையில் எடுத்து அதில் வேலை செய்யலாம் என்று தேட ஆரம்பித்த போது, Hydroponics என்ற தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் U-Tube இல் கிடைத்தன.

மண்ணே இல்லாது செய்யப்படும் இந்த விவசாய முறையைப் பார்த்து மிக ஆச்சரியமாக இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் சில இடங்களில் மட்டும் செய்கிறார்கள். இந்தியாவில் யாரும் செய்யாத நிலை. ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆரம்பித்தோம். பின்னர் இதுவே Future Farms என்ற நிறுவனமாக மாறியது.

Hydroponics விவசாய முறை பற்றி?

சுருக்கமாக சொன்னால், இது ஒரு Integrated Urban Farming எனலாம். உரமற்ற முறையில் உயர் தர செடிகளை, காய் கனிகளை பைப்புகளில் தயாரிக்கும் ஒரு அறிவியல். இம்முறையில் உரம் மண்ணில் போடாமல், தண்ணீரில் கலக்கப்படுகிறது.

இந்த முறைக்கு சரியான அளவில் காற்று, தண்ணீர், சூரிய ஒளி, ஊட்டச்சத்து இருந்தால் போதும். வீடுகளில், மாடியில், பாலைவனத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். சுமார் 80% வரை நீரை சேமிக்கலாம். மண் இல்லாததால், பூச்சிகள் வராது. அதனால் பூச்சிக்கொல்லி கிடையாது. தொழில்நுட்பம் மூலம் மின்சக்தி தேவையையும் சிக்கனமாக செலவு செய்ய முடிகிறது. வருங்காலங்களில் சூரிய ஒளி இதற்கு பயன்படும்.

பாதுகாப்பான சுத்தமான பயிர்வகை கிடைக்கும். நான்கு ஏக்கரில் வளர்க்க வேண்டிய செடிகளை இந்த முறை மூலம் ஒரு ஏக்கரிலேயே வளர்க்க முடியும். நான்கு மடங்கு வேலையாட்கள் தேவை குறையும். இம்முறையில் ஆற்றலும், திறனும் அதிகம்.

இந்த துறையில் சில ஆராய்ச்சிகளும் செய்து வருகிறீர்களே?

ஆம், எங்கள் ஆராய்ச்சி நிலத்தில், நாம் தொலைத்த மனிதர்களுக்குப் பயனுள்ள செடி வகைகள், கீரைகள், உணவு பயிர் வகைகளை தேடி அதை வளர்த்து வருகிறோம். ஒவ்வொரு விதமான விதையையும் எடுத்து கட்டுப்படுத்தப் பட்டுள்ள சூழ்நிலையில் எவ்வளவு அதிகமான மகசூலை பெற முடியும் என புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம். உதாரணமாக, இந்தப் பருவநிலையில், இந்த விதையை உபயோகித்தால், இவ்வளவு அறுவடை இருக்குமென எங்களால் உறுதியாக கூற முடியும்.

தோட்டத்தில் நீங்கள் வைத்துள்ள Controller வேலை செய்யும் முறைப் பற்றி..

விவசாயப் பின்னணி இல்லாத ஒருவர் கூட இம்முறையில் செய்யுமளவிற்கு இதை வடிவமைத்துள்ளோம். நாங்கள் பயன்படுத்தும் Sensor தண்ணீர், வெப்பம் உரம் அளவு எவ்வளவு உள்ளது என தெரிவித்துவிடும். இவை அனைத்தையும் இந்த Controller கணக்கிட்டு  தேவையான நீரையும், உரத்தையும் எடுத்துக்கொள்ளும்.

தனிநபர்கள் இந்த விவசாய முறையை அவர்கள் வீட்டில் செய்யலாமா?

கண்டிப்பாக முடியும், அவர்களுக்குத் தான் சிறு சிறு Kits விற்கிறோம். IFCA (Indian Federation of Culinary Association) ஒரு சர்வே எடுத்தார்கள். அதில் நாம் அதிகம் உட்கொள்ளும் புதினாவும் கொத்தமல்லியும் தான் அதிகம் நச்சுத்தன்மை வாய்ந்தது என்று தெரிவித்துள்ளனர். இந்த  முறையில் வீட்டு மாடியிலும், பால்கனியிலும் இம்மாதிரி சின்னஞ்சிறு செடிகளை, கீரை வகைகளை வளர்க்கலாம்.

இந்த முறைக்கு முதலீடு எவ்வளவு இருக்கும்?

கீரைகள் போன்ற இலைகள் உள்ள செடி வகைகளுக்கு ஆயிரம் சதுர அடியில் செய்வதற்கு ஆரம்ப முதலீடு மூன்று முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை ஆகும். Turnkey போன்று இந்த தோட்டத்தை முழுவதுமாக நாங்களே தொடக்கம் முதல் முடிவு வரை வைத்து கொடுத்து விடுவோம். மாதாமாதம் ஆகும் பராமரிப்பு செலவு மிகக் குறைவு.

தினமும் களை எடுக்க வேண்டும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாததால் வயதானவர்கள் கூட இந்த தோட்டத்தை கவனித்துக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தால் ஆரம்ப கால முதலீடு சற்று அதிகம் இருப்பதால், விலை உயர்ந்த, தரம் அதிகம் தேவைப்படுகிற செடி வகைகளை வளர்ப்பது நல்லது. எப்படியும் குறைந்தது இரண்டே ஆண்டுகளில் நாம் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து விடலாம்.

விவசாயத்தின் எதிர் காலம் எப்படியுள்ளது? அடுத்த தலைமுறை விவசாயிகள் தொழில்நுட்ப பின்னணியில் உள்ளவர்களாய் இருப்பார்களா?

நிறைய வாய்ப்புகள் உள்ளது. எங்கள் விவசாய முறையிலேயே வேதியியல், கணிதம், எலக்ட்ரானிக்ஸ், தானியங்கி முறை (Automation) என அனைத்தும் உள்ளது. பாரம்பரிய விவசாயிகள் அவர்கள் செய்யும் முறையை தொடர்ந்து கடைபிடிக்கலாம். எதிர்காலத் தேவை அதிகம் இருப்பதால், புது முறை விவசாயமும் தேவை. புதிய உக்திகளும் கண்டுபிடிப்புகளும் அவசியம். அப்போது தான் தேவைகளை சமாளிக்க முடியும்.

2050 இல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும். விலை நிலமும் நீரின் அளவும் குறைந்துக்கொண்டே வருவதால் இது போன்ற புதிய விவசாய முறையும் (Integrated Urban Farming) தேவைப்படுகிறது.

இந்த முறையை ஆரம்பிக்கையில் எந்த மாதிரி சவால்களை சந்தித்தீர்கள்?

நம் நாட்டில் புதிய முயற்சி என்றாலே பெரிய சவால் தான்.

“நம்மூர் மக்களுக்கு தரத்திற்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், விலை குறைவாக இருக்க வேண்டும் அது தான் பலர் இங்கு விரும்புவார்கள்” என்றெல்லாம் சிலர் ஆரம்பத்தில் கூறினர். இது உண்மை கிடையாது. பல மக்கள் பிராண்டட் (Branded) பொருள்களை தேடிப் போகிறார்கள். பிராண்டைத் தேடி போவது எதற்கு, தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே? அந்த தரத்தை தேடும் மனிதர்களை அடைந்தாலே போதும். எங்களது ஆரம்ப கால சவால் இதுவாகத் தான் இருந்தது. அதனால் எண்ணிக்கைக்கு (Quantity) முக்கியம் தராமல் தரத்திற்கு (Quality) முக்கியம் தரலாம் என்றே முடிவெடுத்தோம்.

நிதியுதவிக்காக யாரிடமும் செல்லவில்லை. முக்கிய குழுவில் பன்னிரண்டு பேர் உள்ளோம். எங்களது சுய முதலீட்டில் தான் செய்யத் தொடங்கினோம். பயிற்சி தருவது, இந்த Kits களை விற்பது இவைகளை வைத்து தினசரி செலவுகளை பார்த்துக்கொள்கிறோம்.

நல்லபடியாக சென்ற வியாபாரத்தை விட்டுவிட்டு விவசாயித்தில் வந்து  கஷ்ட்டப்படுகிறோமே என்று எப்போதாவது தோன்றியதா?

அதுமாதிரி இல்லை. அது தவறும் கூட. இறங்கும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம். இறங்கிய பின் கூடாது. Plan B, Plan C என்றெல்லாம் இருக்க கூடாது. திட்டமிட்ட செயல் நடக்கும் அல்லது நடக்காது என்ற தெளிவு வேண்டும். நடுவில் குழம்பிக் கொண்டிருந்தால் தான் பிரச்சினை. சிலர் செல்லும் பாதையில் சிரிய தடங்கள் வந்தாலும் பாதையை மாற்றிச் சென்றுவிடுவர். பாதுகாப்பான ரிஸ்க் இல்லை பாதி ரிஸ்க்  என்றேல்லாம் இருக்கக் கூடாது. ரிஸ்க் எடுத்தால் நல்ல பெரியதாக எடுக்க வேண்டுமென நம்புபவன் நான். ஒன்று வென்றிட வேண்டும் இல்லையெனில் கீழே விழ வேண்டும். நடந்தால் நல்லது இல்லையெனில் வேறு தொழில் செய்துக் கொள்ளலாம்.

உங்கள் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் என்ன?

நாங்கள் திட்டமிடுவது முழுவதுமாக நகர விவசாயம் தான். நிறைய பொருளீட்டும் சின்னஞ்சிறு விவசாயத் தோட்டங்கள் நகரத்தில் அமைத்துத் தரும் நிறுவனமாக இருக்க எண்ணம். தென்கிழக்கு ஆசியாவின் பெரிய Urban Farming Brand ஆக நமது நிறுவனம் இருக்க ஆசை. இதற்காக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் பேசி வருகிறோம்.

விவசாயத்திற்கு தேவையான பொருள்கள், பயிற்சி, தகவல்கள், விதைகள் என என்ன கேட்டாலும் கிடைக்கும் One Stop Shop ஆக நம் நிறுவனம் இருக்க எண்ணுகிறோம்.

மேலும் காசு இருப்பவர்களுக்குத் தான் என இல்லை, சுத்தமான உணவு குறைந்த விலையில் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது தான் முக்கிய நோக்கம்.

Right to Quality Food என்ற தனி சட்டமே வர வேண்டும். இதற்காக எங்கள் நிறுவனம் ஏதேனும் ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என நினைக்கிறோம்.

உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்ன?

CII நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த விவசாய Startup விருது கிடைத்துள்ளது, MIDH (Ministry of Integrated Horticulture) கிஸான் உன்னதி மேலா என்ற அவர்கள் விழாவில் எங்களை அழைத்தபோது, எங்கள் விவசாய முறையை காண்பித்தோம். ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாய்டு நடத்திய Aqua Aquaria என்ற கண்காட்சியில் நமது முறையை காண்பித்தோம்.

Likes(4)Dislikes(0)
Share
Oct 142016
 

u1

மனிதா நாம் மண்ணில் பிறந்தது மடிவதற்காகவா!

ஒரு முறை வீழ்ந்தால் என்ன, மறுமுறை எழுந்து வா

ஒரு நாள் வாழும் பூ கூட, தேன் தந்து செல்கிறது,

பல நாள் வாழும் நாம் பல தந்து செல்லலாமே?

 

வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று மூலையில் முடங்காதே

முடியும் என்று முயன்று பார் உலகம் முழுவதும் உனதாகும்

மண்ணுக்குள் புதைந்த விதை விருட்சமாக வெளிவருகிறது

மனிதனாகிய நாம் விறகாக வீழ்வது ஏனோ !

 

நிலத்தில் விழும் வியர்வை துளியே வானில் பறக்கும்

உன் புகழ் கொடியின் குறியாகும்

உனது ஏணியை வானில் போட்டு நீயும் ஏறு

இந்த உலகையும் உன்னோடு சேர்த்து முன்னேற்று .

 

– கோ.கோகுல்

Likes(13)Dislikes(0)
Share
Oct 142016
 

Hostel

சென்னை. திருவல்லிக்கேணி. 

வசதிகள் நிறைந்த, லேடீஸ் ஹாஸ்டல். வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி.

தனமும் மஞ்சுளாவும் கடந்த 15 நாட்களாக, விடுதியின் அறை தோழிகள்.

கொஞ்சம் கட்டை குட்டை தனத்திற்கு , இரண்டு வருடங்களாக இதே திருவல்லிக்கேணி ஹாஸ்டல் வாழ்க்கை தான்.

மஞ்சுளா இப்போதுதான் கோவையிலிருந்து வந்த, தனத்தின் புது ரூம் மேட். பார்க்க சுமாரான அழகுள்ள யுவதி.

இருவருக்கும் கிட்ட தட்ட 27 – 28 வயது. மணமாகாத குமரிகள் .

ஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.

“தனம்!.. ஏய் தனம்!” மஞ்சுளா தனத்தின் தோளை பிடித்து தன் பக்கம் திருப்பினாள்.

“ம்.” தனம் சுரத்தில்லாமல்.

“ஏய்! தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே!”

“ஒண்ணுமில்லே!”

“ஏன் ஹாஸ்டல்லே யாரோடும் பேச மாட்டேங்கிறே! ஒதுங்கி ஒதுங்கி போறே! நானும் பாத்துகிட்டு தான் வரேன் ! ரூமிலேயே இருக்கே !வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே? ஏண்டி?”

“போடி!. எனக்கு எதுவுமே பிடிக்கலை! என்னை ஏனோ யாருக்கும் பிடிக்கறதில்லை! ரொம்ப வெறுப்பாயிருக்குது!”

“உளறாதே! சரி வா!. இன்னிக்கு வெளிலே போய், ‘காபிடே’ லே காபி சாப்பிட்டு விட்டு ஜாலியா பீச்சுக்கு போய் வரலாம். வேடிக்கை பாத்தால் எல்லாம் சரியாயிடும்”

“நீ போப்பா. நான் வரல்லே !.” – தனம் மோட்டு வளையை பார்த்துக் கொண்டே.

“ஏண்டி! என்னாச்சு உனக்கு!” – மஞ்சுளாவின் குரலில் கரிசனம்.

“ஏன் கேக்க மாட்டே! பாரு என் மூஞ்சியை! எவ்வளவு பரு, மேடும் பள்ளமுமா! குண்டா இருக்கேன்! என் கலர் வேறே கம்மி. வெளிலே வந்தா, ஒரு பையன் கூட திரும்பி பாக்க மாட்டேங்கிறான். நீ பார்! எவ்வளவு அழகா இருக்கே!”

“அவ்வளவு தானே, தனம்! சரி வா! நல்ல பியூட்டி சலூன்க்கு போவோம். கொஞ்சம் ப்ளீச் பண்ணிக்குவோம். பளிச்சுன்னு ஆயிடலாம். ஹேர் ஸ்டைல் மாத்திக்கோ. சுடிதாருக்கு மாறு. நான் உன்னை அழகாக்கி காட்டறேன். அப்புறம் பாக்கலாம், எந்த பையன் உன்னை திரும்பி பாக்காம போறான்னு” (மஞ்சுளாவின் ஆர்வம் 100 %)

“பண்ணிக்கலாம்தான்! ஆனால் அதுக்கு செலவாகுமே! அடிக்கடி வேறே பண்ணிக்கணும்! வேண்டாண்டி! கையை கடிக்கும்.’

“அப்போ ஒண்ணு பண்ணலாம்!. ஸ்கின் டாக்டர் ஒருத்தி எனக்கு தெரியும். அவள் அழகு கலை நிபுணரும் கூட. பெஸ்ட் டாக்டர். ரொம்ப பீஸ் கேக்க மாட்டா. வரியா போகலாம்?”

“போலாம் தான்! ஆனால் வேண்டாம்பா!”

“ஏன் தனம் வேண்டாம்?”

“எனக்கே தெரியும் டாக்டர் என்ன சொல்லுவாளென்று!. சாப்பாட்டை கட்டு படுத்து! வெய்ட்டை குறை!. இதெல்லாம் எனக்கு முடியாதுப்பா! நொறுக்கு தீனி இல்லாமல் என்னால முடியாது!”

“அது சரி ! குண்டாயிண்டே போனால், அப்புறம் எப்படி அழகாறது?” (ஆர்வம் 80%)

“என்ன மஞ்சுளா ! நீயும் என்னை கேலி பண்றே? எனக்கு இந்த மருந்து மாத்திரை எல்லாம் அலர்ஜி ஆயிடும். ஒரு தடவை சாப்பிட்டு, தோல் கறுத்து போச்சு தெரியுமா? என் தலையெழுத்து அப்படி. டாக்டர் எல்லாம் வேண்டாம் மஞ்சுளா. இப்படியே இருந்து விட்டு போறேன்”

மஞ்சுளா விடுவதாக இல்லை. “ அப்படியெல்லாம் சொல்லாதே!  சரி, அப்போ ஒண்ணு செய். நீயே தினமும் பயத்தம் மாவு போட்டு முகம் கழுவு. மஞ்சள் பேஸ்ட், பரு மேல போடு. சரியாயிடும். . மருதாணி வெச்சுக்கோ. அப்புறம், கேலமைன் அப்பிக்கோ. இயற்கை வைத்தியம் தான் இருக்கவே இருக்கே! சீப் அண்ட் பெஸ்ட்!”

“பண்ணலாம்!. ஆனால், எனக்கு இந்த மஞ்சள் போட்டாலே, வெடிப்பு வந்துடும். வேண்டாம்பா!

“என்ன தனம்! எது சொன்னாலும் எப்படி நெத்தியடியா ‘நோ’ சொல்ற!. ச்சே! போப்பா!” – கொஞ்சம் அலுப்புடன் மஞ்சுளா.(ஆர்வம் 50%)

“நீ ஏன் சொல்ல மாட்டே மஞ்சுளா! உனக்கு அழகிருக்கு. பாய் பிரண்டு வேறே நீ கூப்பிட்ட நேரத்திற்கு ஓடி வரான்!. எனக்கு அப்படியா! போன வாரம் எங்க வீட்டிலே பெண் பார்த்த ரெண்டு வரங்களும் என்னை வேண்டாம்னுட்டாங்க! இத்தனைக்கும் பசங்க ஒன்னும் சுரத்தேயில்லை! அவனுங்க மூஞ்சிக்கு நான் வேண்டாமாம். என்ன பண்றது! நான் பிறந்த நேரம் அப்படி!”

ஐயோ பாவம் இந்த தனம். நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் தனது தோழிக்கு. (ஆர்வம் மீண்டும் 100%) 

“ஓ! இதுதான் விஷயமா? போகட்டும் விடு தனம்!. இதுக்கேல்லாம் மனசை போட்டு அலட்டிக்காதே!. வேறே எதிலயாவது மனசை செலுத்து. ப்ரோமோஷன் எக்ஸாம் எதாவது எழுதேன்! படியேன்!”

“பண்ணலாம். ஆனால், ரொம்ப கஷ்டம். என்னாலே முடியாது. நான் ரெண்டு தடவை ட்ரை பண்ணி விட்டுட்டேன். ஏற மாட்டேங்குது. ”

“அட பாவமே ! பரவாயில்லே! ஒண்ணு செய். என் கூட, எம்.பி.ஏ சேர்ந்திடு, லயோலா காலேஜ் லே. பார்ட் டைம். பொழுதும் போகும். வேறே நல்ல வேலையும் கிடைக்கும். நிறைய ஸ்மார்ட்டா பசங்க வேறே, கூட படிக்கிறாங்க !.. என்ன சொல்றே !” (80%) 

“வரலாம் தான் !. ஆனா சாயந்திரம் வகுப்பு , என்னாலே வர முடியாதே?”

“ஏன் தனம்! உன் ஆபிஸ் தான் 5.30 மணிக்கே முடிஞ்சிடுதே! நேர காலேஜ் வந்துடு.” (ஆர்வம் 70%)

“பண்ணலாம்! ஆனால், என்னால தினமும் முடியாதுப்பா!. ஆபிசிலேருந்து வரும்போதே ரொம்ப சோர்வா இருக்கும். வெளியே நகரவே பிடிக்காது.”

“என்னடி சொல்றே!. என்னாலே முடியரப்போ ஏன் உன்னாலே முடியாது?” (ஆர்வம் 50%) 

“இல்லேப்பா!. உன்னை மாதிரி நான் ஒன்னும் ஹெல்தி இல்லே!. எனக்கெல்லாம் அதுக்கு கொடுப்பினை இல்லை மஞ்சுளா!”

“சரி சரி!. வருத்தப்படாதே ! ம்ம்…இப்படி பண்ணலாமா! தபால் மூலமா படிக்கிறியா? என் பிரெண்ட்ஸ் நாலு பேர் எம்.பி.ஏ அப்படித்தான் படிக்கிறாங்க. ஏற்பாடு பண்ணட்டுமா? உனக்கு ஓகே வா!” (ஆர்வம் 30%) 

“ படிக்கலாம்தான். ஐடியா நல்லாதான் இருக்கு. ஆனால் எனக்கு ஒத்து வருமான்னு தெரியலியே?”

“ஏன்? இதுக்கு என்ன நொண்டி சாக்கோ ? தெரிஞ்சிக்கலாமா?” மஞ்சுளாவின் குரலில் இளப்பம். கொஞ்சம் காரம். (20%) 

“கோவிச்சுக்காதே மஞ்சுளா! சாரிடீ! பொதுவாவே, நான் ஒரு சோம்பேறி. அம்மாக்கு நாலு வரி லெட்டர் போடவே எனக்கு வணங்காது. யாராலே, இவ்வளவு ஹோம் வொர்க், அசைன்மென்ட் பண்ணி அனுப்ப முடியும்? இது ஆவர காரியமா எனக்கு படலே! எனை உட்டுருப்பா ”

என்ன பொண்ணு இவ. எதுக்கெடுத்தாலும் நொள்ளை சொல்லிக்கிட்டு. கடுப்பு தான் வந்தது மஞ்சுளாவிற்கு. அடக்கி கொண்டாள். “அதில்லை தனம்! நமக்கு தேவைன்னா படிச்சி தானே ஆகணும்? சோம்பேறித்தனம் பார்த்தால் யாருக்கு நஷ்டம்? பின்னாடி, இப்படி இருக்கொமேன்னு நீ தானே வேதனைப் படுவே!”. (10%) 

“நான் என்ன பண்ணட்டும், என்னை எங்க வீட்டிலே வளர்த்த விதம் அப்படி! ஆனால், நீ ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவ ! உனக்கு திறமை ஜாஸ்தி. நா அப்படி இல்லையே! எல்லாம் என் விதி !”

கோபம் பொத்து கொண்டு வந்தது கோவை மஞ்சுளாவுக்கு. “அதெப்படி! படிக்கறது முடியலை! ப்ரோமொஷன் வேண்டாம்! ஹெல்த் பாத்துக்க முடியலை! ஆனால், எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு ராத்திரி ஒரு மணி வரை டி.வி. பாக்க முடியுது? அது பரவாயில்லியா?. அப்போ சோர்வு எங்கே போச்சு? ” (5%) :

“நல்லா இருக்கே மஞ்சுளா நீ பேசறது? எனக்கு வேறே என்ன பொழுது போக்கு இருக்கு? உனக்கு இருக்காப்போல எனக்கு பிரண்ட்ஸ் எங்கே இருக்காங்க? எனக்கு டி.வி. தவிர வேறே யார் துணை?”

“ஆமா! எப்படியோ போ! உனக்கு போய் ஹெல்ப் பண்ண நினைச்சேனே! என்னை சொல்லணும்!” – மஞ்சுளா கோபமாக அறையை விட்டு வெளியேறினாள். :ஆர்வம் 0%)

தனம், டிவி ரிமோட்டை தேடினாள். கூடவே, நேத்து வாங்கி வைத்த கார சேவு, முறுக்கு பொட்டலங்களை தேடினாள்.

அப்பாடா ! தல அஜித் படம். தொந்திரவு இல்லாமல் பாக்கணும்.

****

தனம் மாறவில்லை. மாறிவிட்டாள், மஞ்சுளாதான்வேறு அறைக்கு.

அவளுக்கு தனத்தின் புலம்பல், இம்சை தாங்கவில்லை. இப்போ வனிதா, தனத்துடன். மஞ்சுளாவிற்கு பதிலாக வனிதா இப்போது தனத்தின் புதிய ரூம் மேட். திருச்சியிலிருந்து வந்தவள். . சக்கரம் திரும்ப சுற்ற ஆரம்பித்து விட்டது. முதலிலிருந்து.

****

கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து. தனத்தின் அறை. 

ஒரு ஞாயிறு. பிற்பகல் 4 மணி.

“தனம்!.. ஏய் தனம்!”

“ம்.”

“ஏய்! தனம். இங்கே பாரு. ஏன் டல்லா இருக்கே!”

“ஒண்ணுமில்லே!”

“ஏன் விடுதியிலே யாரோடும் பேச மாட்டேங்கிறே! ஒதுங்கி ஒதுங்கி போறே! நானும் பாத்துகிட்டு தான் வரேன் ! வெளியே எங்கேயும் வர மாட்டேங்கிறே? ஏண்டி?”

“போடி!. எனக்கு எதுவுமே பிடிக்கலை! போரடிக்குது ! ரொம்ப வெறுப்பாயிருக்குது!

…….” ( ரிபிட் – மஞ்சுளாவுக்கு பதில் வனிதா என்று மாற்றி கதையின் 15வது வரியிலிருந்து படிக்கவும்).

*****

தனத்திற்கு இன்றும் புரியாத விஷயம் இதுதான்.

“என்னை ஏன் யாருக்கும் பிடிக்கவில்லை? அப்படி என்ன குறை என்னிடம்?”

தனம்! அவள் பாவம். தன்னிலை உணராத பரிதாபம். அவள் சோம்பி இருந்தே சுகம் கண்டவள்.காண்பவள்.

அவள் அப்படித்தான். சிலரை மாற்றுவது கொஞ்சம் கஷ்டம்.

தனம் போன்றவர் கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம். அவர்களே மனது வைத்தால். பிறரை பார்த்து. 

அதுவரை, கஷ்டம் தான்! கூட இருப்பவருக்கு !

இருப்பினும் சமாளிக்கலாம் யு ஆர் நாட் ஓகே ! பட் தட்ஸ் ஓகே! “என்று தனம் போன்றவரிடம் பரிவு காட்டினால்!

அவர்களை புரிந்து கொண்டால்!

– முரளிதரன்.S

Likes(2)Dislikes(0)
Share
Share
Share