Aug 142016
 

dipa

தீபா கர்மாக்கர்! தற்போது பிரேசிலில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் Produnova Vault ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்று, இதுவரை எந்த இந்திய பெண்ணும் செய்யாத சாதனையை புரிந்துள்ளார். இதுவரை உலகில் இந்த சாதனையை செய்த ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கரணம் தப்பினால் மரணம் என்பதை மெய்பிக்கும் வகையில் உள்ள இந்த Produnova Vault ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், சென்ற சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் வீரர் சமீரி அயிட் காலை இழந்த துயர சம்பவமும் நடந்தது.

இத்தகைய வீர விளையாட்டில், மிக வேகமாக ஓடிவந்து ஜிம்னாஸ்டிக் பலகையின் மீது இரு கைகளால் உந்தி, உயரே பறந்து, காற்றிலே இரு குட்டிக்கரணம் அடித்து லாவகமாக தரையில் இறங்கி, தீபா கர்மாக்கர் வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றதைக் கண்டு இந்தியாவே சிலிர்த்தது. ஒட்டுமொத்த இந்தியர்களின் பார்வையும், வேண்டுதலும் இவர் நம் நாட்டிற்காக ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என எதிர்பார்த்து ஏங்கியுள்ளது.

இறுதிப் போட்டி வரும் பதினான்காம் தேதி நடைபெற இருப்பினும், மக்கள் மனதில் இவர் ஏற்கனவே ஒரு சாதனையாளராக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டை ஒரு மதமாகவே பார்க்கும் நம் நாட்டில் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டிற்குத் தேவையான கட்டமைப்பு இன்றளவும் பெரிதாக இல்லை என்றே கூற வேண்டும். அப்படி இருக்கையில் பதினேழு வருடங்களுக்கு முன் எந்த வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் இந்த விளையாட்டுகளில் நுழைந்துள்ள தீபாவின் வரலாறு, இந்தியாவில் இனி வரவிருக்கும் பல ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கு முன்னோடியாக இருக்கும்.

தீபாவிற்கு அப்போது ஆறு வயது. ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஆர்வம் வந்து தனது தந்தையுடன் அந்த விளையாட்டுகளில் சேர செல்கையில், ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு தேவையான பாத அமைப்பு சரியாக இல்லை என நிராகரிக்கப்படுகிறார்.

அடுத்த சவால் அவர் பிறந்து வளர்ந்த மாநிலம். எந்த மெட்ரோ நகரிலோ, பெருநகரிலோ தனது பயணத்தை அவர் தொடங்கவில்லை. பொதுவாகவே பல இந்தியர்களாலும் மீடியாக்களாலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான திரிபுராவில் இருந்து வந்தவர்.

பதினேழு வருட போராட்டங்களுக்கு, அயராமல் உழைத்ததற்கு கிடைத்துள்ளது இந்த வெற்றியும் அங்கீகாரமும். அவர் கடந்து வந்த பாதைகளையும் சவால்களையும் வைத்து பாலிவுட்டில் கூடிய விரைவில் அவரது வாழ்க்கை திரைப்படமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.

தீபாவின் சாதனைகளை ஒரு புறம் இவ்வாறு அடுக்கி பெருமை படுகையில், ஷோபா டே என்ற எழுத்தாளர், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் ஏதும் இதுவரை எடுக்காததை சுட்டிக்காட்டி மிக ஏளனமாக, ட்விட்டரில் ஒரு பதிவை செய்துள்ளார். “பிரேசில் செல்ல வேண்டும், செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும், பதக்கம் பெறாது வெறும் கையுடன் நாடு திரும்ப வேண்டும், இதுதான் இந்திய வீரர்களின் நோக்கம் என்றும் வாய்ப்புகளும் பணமும் இவர்களால் வீணாகி விட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம், இவரது ஆதரவாளர்கள் சிலர் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், இந்த கருத்துக்கள் பெருவாரியான இந்தியர்களின் கோபத்தை கிளறியுள்ளது என்றே கூற வேண்டும். இவருக்கு எதிராக அதிகமான பின்னூட்டங்கள் சமூக தளங்களில் பதிவாகி வருகின்றன.

குட்டி குட்டி நாடுகள், மக்கள் தொகை குறைந்த நாடுகள், ஏழை நாடுகள் என பல நாடுகள் பதக்கங்களை வாங்க, இத்தனை பெரிய தேசம், 120 கோடி மக்கள் தொகை, பல வசதிகள் இருந்தும், நம் தேசம் பதக்கங்களை வாங்காதது, பல இந்தியர்களின் மனதில் ஏக்கத்தை உருவாக்கி இருக்கும் இந்நேரத்தில், ஷோபா டேவின் இந்த கருத்து மக்களின் கோபத்தை மேலும் வரவழைத்துள்ளது.

ஷோபா டே, நம் நாடு பதக்கம் வாங்கவில்லையே என்ற ஆதங்கத்தில் கூட அந்தப் பதிவை போட்டிருக்கலாம். ஆனால் அவர் வீரர்களை குறை கூறுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும். ஏன் நம்மால் பதக்கங்கள் மற்ற நாடுகள் போல் வாங்க முடியவில்லை என்ற கேள்வியின் மூலக்காரனத்தை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது தானே சரியாக இருக்கும்?

பதக்கங்கள் வாங்குவது வீரர்களின் பொறுப்பு மட்டுமே என இருந்துவிடாமல், இதை ஒட்டு மொத்த சமுதாய பொறுப்பாகத் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதற்கு சில காரணங்களை அலசுவோம்.

முதலில் இந்தியா போன்ற தேசத்தில் விளையாட்டு துறைகளுக்கு அத்தனை முக்கியத்துவமும் மதிப்பும் கிடைப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற விளையாட்டுத் துறைகளை ஒருவர் தேர்ந்தேடுக்கிறார் என்றால் அவரது வாழ்க்கையையே பணயமாக வைக்கிறார் என்றாகிறது.

அடுத்து விளையாட்டுத் துறைகளுக்கு இங்குள்ள கட்டமைப்பு. பல நாடுகளில் உள்ளது போல் advanced பயிற்சி முறையும் நம் நாட்டில் இல்லை. விளையாட்டிற்குத் தேவையான Sponsors கிடைப்பதும் அத்தனை எளிதல்ல.

மேலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தங்களது நண்பர்கள் ஏதாவது வேலைக்குச் சென்று சம்பாதித்துக் கொண்டிருக்கையில், குடும்ப மற்றும் சமூக அழுத்தங்களைத் தாண்டியும், தங்களது பயிற்சிக்காக மேலும் பணமும் நேரமும் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

அடுத்த முக்கிய காரணம் பள்ளிகள். பல பள்ளிகளில் விளையாட்டிற்கு என ஒதுக்கப்படும் நேரங்கள் மிக மிக குறைவு. மொத்தமாக வாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கி, அந்த ஒரு மணி நேரமும் மாணவர்களை விளையாட விடாமல் ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ் வைத்து விடுகின்றன பல பள்ளிகள்.

அதேபோல் நமது சமூகத்தின் வாழ்க்கை முறை. இங்கு மதிப்பெண்கள், நிரந்தர வேலை, இந்த வயதில் இத்தனை வருமானம், இந்த வயதில் திருமணம் என்ற Stereo Life-style இருப்பது. இதையெல்லாம் மீறி ஒருவர் சற்று வித்தியாசமாக யோசித்து விட்டால், சமூகத்தில் அவருக்கு தரப்படும் மன அழுத்தம் மிக அதிகம்.

விளையாட்டு வீரர்களின் தேர்வுகளில் நடக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த பயத்தினால் பல பெற்றோர்கள் தங்களது மகள்களை இதுபோல் போட்டிகளுக்கு அனுப்பாமல் இருப்பது என்று பல பிரச்சினைகள், சவால்கள் நம் நாட்டில் உள்ளது.

இவை அத்தனையும் தாண்டி ஒருவர் பதக்கம் வெல்வது என்பது அத்தனை சுலபம் அல்ல. அதனால் தான் இங்கு ஒரு வெண்கல பதக்கம் வாங்கினால் கூட மீடியாக்கள் உட்பட ஒட்டுமொத்த தேசமே, சாதித்தவர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறது.

ஆனால் அது மட்டும் போதாது. சாதிக்க துடிக்கும் திறமையுள்ள அனைவரையும் ஆரம்பத்திலிருந்தே பொருளாதார மற்றும் உளவியல் ரீதியில் முடிந்த வகையில் ஊக்குவிக்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டும். அவ்வாறு இல்லையெனில் இழப்பு நமக்குதான்.

இதற்கு நம் எல்லோருக்கும் தெரிந்த இன்னொரு உதாரணத்தை காண்போம். 13வயதில் இங்கிலீஷ் கால்வாய் மற்றும் உலகின் பெரும் 5 கால்வாய்களை நீந்தி உலக சாதனை படைத்தவர் அவர். அவரின் திறமையை பார்த்த இத்தாலி, தன் நாட்டிற்கு தத்தெடுக்க விரும்பியது. ஆனால் அந்த சிறு வயதிலும் யாரிடமும் கேட்காமல் எனக்கு இந்தியாதான் உயிர், என்று காசுக்காக விலை போகாமல் இங்கே இருந்து விடுகிறார். அதையே அவர் பெற்றோரும் ஆமோதித்தனர். அவர் குற்றாலீஸ்வரன்.

ஆனால் அடுத்த சில மாதங்களில், பல போட்டிகளில் கலந்துக்கொள்ள தேவையான sponsorship தராமல், நம் சமூகம் அவரை மெதுவாக கை கழுவி விட ஆரம்பித்தன.

சாதனை நடந்தவுடன் பேசியவர்கள், ஊக்கமளித்தவர்கள், அரசு, அரசியவாதிகள், நமது சிஸ்டம் எல்லாம் அவரை மெதுவாக கை கழுவி விட ஆரம்பித்தன.

ஒரு long distance ஸ்விம்மிங் போட்டியில் உலக அளவில் கலந்து கொள்ள பணம் தேவை. முதலில் அரசாங்கத்தை நாடினார். இங்கே அங்கே என்று அழைக்கழித்தார்கள். அடுத்து பிரைவேட் நிறுவனங்களை நாடினார். கடலில் நீந்தும் போது கூட்டம் வராது என்று கிரிக்கட் பக்கம் திரும்பி கொண்டார்கள்.

அவர் அப்பாவே தன் சேமிப்பில் இருந்து செலவு செய்து போட்டிக்கு அனுப்பினார்.
ஜெயித்தால் கைதட்டுவார்கள். ஆனால் அவரின் அடுத்த போட்டிக்கு partial sponsorship கூட கிடைக்காமல் அவதிபட்டார். தனக்காக தான் தந்தை ஒவ்வொரு இடமாக sponsorship தேடி அலைவது பொறுக்காமல் தன் ஸ்கூல் பென்சிலில் swimming என்று எழுதி பின்னால் Full-stop ஒன்றை கண்ணீரில் வைத்தார்.

வருடங்கள் ஓடின. குற்றாலீஸ்வரன் கடலில் நீந்திக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து, சாப்ட்வேர் என்ஜினீயராக இப்போது கலிபோர்னியாவில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இன்று அவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியை பார்க்கும் போது எப்படி அவரின் மனது என்னவெல்லாம் நினைத்து பார்க்கும்? எப்படி வலிக்கும்?

நம் நாட்டை விட்டு வெளியே வந்தவர்களில் பல குற்றாலீஸ்வரன்கள் இருக்கிறார்கள். சாதனை படைத்த, படைக்க இருந்த பலரை இன்று நம் நாடு இழந்து இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் இப்படி பல குற்றாலீஸ்வரன்களை நாம் உருவாக்கியது தான் இந்த நூற்றாண்டின் நமது மிகப் பெரிய இழப்பு. (Kutraleeswaran Story Courtesy: Social Media)

இப்போது சொல்லுங்கள், நாம் யாரை குறை கூறுவது? வீரர்களையா அல்லது நம் சமூகத்தையா?

ஒன்று திறமையுள்ள அனைவரையும் ஆரம்பத்திலிருந்தே பொருளாதார மற்றும் உளவியல் ரீதியில் முடிந்த வகையில் ஊக்குவிக்கும் சமுதாயமாக நாம் மாறவேண்டும். அதெல்லாம் கடினம் என்றால், குறைந்தபட்சம் குறை கூறாமல் இருக்கும் மனநிலையாவது வேண்டும்.

நம் நாட்டில் குறை சொல்லும் ஆயிரம் ஷோபா டேக்கள் கிடைக்கலாம். தீபா கர்மாக்கரோ, குற்றாலீஸ்வரனோ கிடைப்பது என்பது அரிது. அத்தகைய திறமைகளை அங்கீகாரிக்காது, பதக்கத்தை மற்றும் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

நாளை நாட்டின் எழுபதாவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாம், இனியாவது நம் மனதில் உள்ள குறை கூறும் போக்கை விடுத்து, திறமையானவர்களை அங்கீகாரிக்க தொடங்குவோம்.

சாதனையாளர்களை ஊக்குவித்து, உருவாக்கி கொண்டாடுவோம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(2)Dislikes(0)
Share
Aug 142016
 

JP

திரு.ஜே.பி என்ற ஜே.பிரபாகர் செய்து வரும் சமுதாய தொண்டுகள் நம்மை வியப்பில் ஆழ்த்த கூடியவை. எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் மூலம் 1100 சமுதாய தொண்டு புரிபவர்களையும், தன்னார்வ நிறுவனங்களையும் இணைத்து வைத்துள்ளார்.

வருடாவருடம் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, பல நல் எண்ணங்களின் சங்கமத்தை  கடந்த பதினொரு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தற்போது இருளர் சமுதாயததிற்காக கடுமையாக உழைத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் அவல நிலையையும் மிகவும் துயரத்துடன் விவரித்தார். இனி அவருடனான பேட்டியிலிருந்து..

வணக்கம் சார், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்..

வணக்கம், நான் பிறந்தது ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் உள்ள சீதாராம்பெட் என்ற ஒரு ஊர். 1973 ஆம் வருடம் முதல் சென்னையில் உள்ளேன். தொண்டு பணிகள் செய்வதில் ஈடுபட்டு வருகிறேன். 1973 முதல் 2002 ஆம் வருடம் வரை, அஷோக் லைலான்ட் நிறுவனத்தில் பிட்டராக பணி புரிந்தேன். அங்கும் “நல்லோர் வட்டம்” என்ற அமைப்பின் மூலம் சில தொண்டு பணிகளை செய்து வந்தோம். 2002 ஆம் வருடம் விருப்ப ஒய்வு பெற்று சுமார் பத்து வருடங்கள் ஆனந்த விகடனில் ஓவியம் வரையும் வேலைகளை செய்தேன். 2005 ஆம் வருடம் “எண்ணங்களின் சங்கமம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினோம்.

தொண்டு செய்யும் எண்ணம் எவ்வாறு வந்தது?

சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை நிறைய படித்ததன் விளைவாக இருக்கும் என நினைக்கிறேன். பத்தாவது படிக்கும் போதே அவரின் “ஞான தீபம்” பத்து புத்தகங்களையும் தொடர்ந்து படித்திருக்கிறேன்.

எண்ணங்களின் சங்கமம் அமைப்பு பற்றி?

இன்றும் தினசரி உலகத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது, நிறைய நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் இந்த செய்திகள் வெளியே மீடியாக்களின் மூலம் வருவதில்லை. அதையெல்லாம் மக்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம் என நினைக்கும்போது தான் இந்த அமைப்பு உருவானது.

முதலில் சமுதாயத்தில் தொண்டு செய்கிறவர்களை கண்டுபிடித்தோம். உதாரணத்திற்கு கல்வி, மருத்துவம், சுற்றுப்புறச் சூழல், கிராம முன்னேற்றம், இயற்கை வேளாண்மை, மது ஒழிப்பு, அரசியல் தூய்மை, இப்படி ஒவ்வொரு துறையிலும் பல ஊர்களில் பல தொண்டு நிறுவனங்கள் வேலை செய்கின்றன. அவைகளை ஒன்றிணைத்து அந்த தகவல்களை வெளியே தெரிவிக்க ஆரம்பித்தோம்.

முதலில் வருடத்தில் 100 தொண்டு அமைப்புகளை நேராகச் சென்று பார்க்க நினைத்தோம். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்தோம். ஒவ்வொரு அமைப்பின் பணிகளையும் மற்ற அமைப்புகளை சந்திக்கும்போது தெரியப்படுத்தினோம். முதல் வருடத்தில் 100 அமைப்புகளின் தொடர்பை வைத்திருந்த நம் அமைப்பு, இரண்டாம் வருட முடிவில் 200 அமைப்புகளின் தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறே தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளில் 1100 அமைப்புகளின் தொடர்பை ஏற்படுத்தி உள்ளோம்.

இந்த தொண்டு அமைப்புகளை எவ்வாறு ஒருங்கினைக்கிறீர்கள்? என்ன வேலைகள் அமைப்பின் மூலம் செய்வீர்கள்?

தொண்டு செய்பவர்களை முதலில் அங்கீகரித்து மதிப்பு கொடுக்க நினைத்தோம். அதற்காக அவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, அவர்கள் செய்யும் தொண்டை அனைவருக்கும் தெரியப்படுத்த நினைத்தேன். முதலில் இது குறித்து சங்கர நேத்ராலயா டாக்டர்.பத்ரிநாத்திடம் இது குறித்து பேசினேன். அவருக்கு இந்த திட்டம் பிடிக்கவே, அவரது இடத்திலேயே இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல் அளித்தார். 2006, ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுகிழமை அவர் தலைமையில் முதல் நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வும் அதில் கலந்துக்கொண்டவர்களின் உற்சாகமும் அடுத்தடுத்து வேலைகளை செய்யும் உற்சாகத்தை கொடுத்தது. அதே போன்ற நிகழ்வு வருடாவருடம் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை ஹிந்துக் கல்லூரி, திருச்சி, கோயம்புத்தூர், கும்பக்கோணம் ஆகிய இடங்களில் இதுவரை நடந்துள்ளது.

சமீபத்தில் என்ன தொண்டுகள் செய்து வருகிறீர்கள்?

சமீபத்தில் பெருவெள்ளம் பாதித்த பகுதியில் தொண்டு வேலைகள செய்யும்போது தான், இருளர் சமுதாயத்தைப் பற்றியும் அவர்களின் அவல நிலைப் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். வெள்ளத்திற்கு பிறகு அவர்கள் வீடுகள் முற்றிலுமாக சேதமாகி தங்க முடியாத சூழ்நிலை உருவானது. வீடுகளை திரும்பவும் கட்டிக்கொள்ள தேவையான பொருளாதார சூழ்நிலை அவர்களுக்கு இல்லாததால், அவர்களுக்கு வீடுகளை நாங்களே கட்டித்தரலாம் என முடிவு செய்தோம்.

திருக்கண்டலம் என்ற பகுதியில் 24 வீடுகளை கட்டித்தந்துள்ளோம். அதேபோல் ஈச்சங்காடு என்ற பகுதியில் 11  வீடுகளும் உப்புநெல்வாயிலில் 10 வீடுகளும் கட்டும் பணிகளில் உள்ளோம். இதையெல்லாம் எண்ணங்களின் சங்கமத்தின் சில அமைப்புகளே செய்துக்கொண்டிருக்கின்றன. மேலும் சுமார் 100 வீடுகளை கட்டும் பணிகளை எங்கள் அமைப்பு மூலம் செய்து வருகிறோம்.

அடுத்து வீடுகள் மட்டும் போதாது, இருளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். மீன் பிடி தொழிலைச் சேர்ந்த சில இருளர்களின் வலைகள் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்படுவிடவே, மீன் பிடிக்கும் வலைகளை வாங்கித் தந்தோம். சிலர் படகுகள் கேட்டனர். படகுகள் செலவு மிக அதிகம். ஒரு படகு 60000 ரூபாய் முதல்  1லட்சம் வரை ஆகும். அதை CII நிறுவனம் மூலம் செயல் படுத்துகிறோம். பழவேற்காடு அருகில் காமராஜர் நகரைச் சேர்ந்த மீனவர்களுக்கு 10 படகு வாங்கித் தருவதாக முடிவாகியுள்ளது.

சில இடங்களில் பெண்களுக்கு தையல் பயிற்சி கொடுத்து, தையல் மெஷின்களும் வாங்கி கொடுத்துள்ளோம். அடுத்து மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த “மகாத்மா காந்தி Study Centre” என்ற அமைப்பை கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு மையத்திலும் 3000 ரூபாய் செல்வு செய்து இரு ஆசிரியர்களை நியமித்து செய்கிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் இது போன்ற Study Centre வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.

இருளர்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது?

பண்ருட்டி அருகில் அங்குச்செட்டிப்பாளையம் என்ற கிராமத்திற்குச் சென்ற போது தான், அவர்களது துயரமான வாழ்க்கை பற்றி தெரியவந்தது. அங்கு 75குடும்பங்கள் உள்ளன, 26 வீடுகள் மட்டும் உள்ளன. பெற்றோர்கள் மாலையில் வீடு திரும்பியவுடன் அனைவரும் தெருக்களில் தான் படுக்கின்றனர்.

அடுத்து அவர்கள் வாழ்வில் நடக்கும் சில விஷயங்களைப் பார்க்கையில் இப்போது கூட இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகம் வரும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காஞ்சவயல் என்ற கிராமத்தில் சில இருளர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதி தவிர மற்ற அனைத்து பகுதிகளுக்கும் அந்த கிராமத்தில் நல்ல தண்ணீர் வருகிறது.

அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விட்டலாபுரம் என்ற பகுதியில் உள்ள இருளர்களுக்கு கிடைக்கும் நீர் மஞ்சள் நிறத்தில் உள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் அவர்களுக்குச் சென்றடையவில்லை.

அவர்களுக்கும் இதையெல்லாம் கேட்டுப் போராடும் என்ற விழிப்புணர்வும் இல்லை. இருளர்களுக்கு ஆதரவாக போராடும் தலைவர்களும் பெரியளவில் இல்லை என்ற நிலை. விருத்தாச்சலம் அருகே, தாழைநல்லூர் என்ற கிராமம். அவர்கள் தண்ணீர் பிடிக்க விருத்தாச்சலம் ரயில் நிலையம் வரை தினமும் செல்ல வேண்டியுள்ளது. அங்கு சுமார் 25 இருளர் குடும்பங்கள் உள்ளன. அனைத்து மக்களும் 20 முதல் 40 வருடங்களாக அங்குள்ளனர். அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டெடுத்து அரசாங்கம் இந்த இடங்களில் தங்க வைத்துள்ளது.

சிலருக்கு ரேஷன் கார்டுகளும், ஜாதி சான்றிதழ்களும் இல்லை.

இருளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு வந்தது?

செஞ்சிமாநகர் என்ற கிராமத்திற்கு சென்றபோது நடந்த ஒரு சம்பவம். வெள்ளத்திற்குபின் எல்லாரும் அரிசி உணவு எல்லாம் தருகின்றனர். ஆனால் ஒரு வாரமாக எங்களுக்கு மாற்றுத்துணிகள் இல்லை, உடைகள் கிடைக்குமா என்று எங்களை கேட்டனர். உடனே நாங்களும் சென்னையிலிருந்து 100 உடைகளை வாங்கி வந்து கொடுத்தோம். கொடுத்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

செஞ்சிமாநகர் அருகில் உள்ள மற்றொரு கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது. உடைகள் தந்து உதவியதற்கு நன்றி தெரிவித்தனர். எனக்கு மிகுந்த வியப்பு. உங்கள் கிராமத்திற்கு நாங்கள் உடைகளை தரவில்லையே என்று தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “ஐயா, நீங்கள் செஞ்சிமாநகர் கிராமத்திற்கு 100 உடைகளை தந்துள்ளீர்கள், அங்கு மொத்தமே 25 பெண்கள் தான் உள்ளனர். அவர்கள் 25 உடைகளை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள உடைகளை அருகில் உள்ள எங்கள் கிராமத்திற்கு கொடுத்து விட்டனர் என்றனர்.

அப்போது எனக்கு வெள்ள நேரத்தில் தினசரிகளில் சென்னை கடலூர் போன்ற பகுதிகளில் மக்களின் மனநிலை நினைவிற்கு வந்தது. சில மக்கள், சில இடங்களில் நிவாரணப் பொருள்களை அபகரித்தனர், ஆனால் அதற்கு மாறாக நடக்கும் இருளர்களின் இந்த குணம் என்னை பெரிதும் கவர்ந்தது.

அதேபோல் சாய்பாபா நகர் என்ற கிராமத்தில் வெள்ள நிவாரணமாக அரசாங்கம் 25 வீடுகளுக்கு 4000 ரூபாய் வழங்கியது. அனால் அங்கு மொத்தம் 35 வீடுகள் உள்ளது. நிவாரணத்தை 35 வீடுகளும் சரி சமமாக அமர்ந்து பிரித்துக்கொண்டனர்.

பணத்தை சரியாக, நேர்மையாக பயன்படுத்தும் பழக்கம் இந்த மக்களிடம் தான் காண்கிறேன். அடுத்து இருளர்களிடம் ஏமாற்றும் பழக்கம் சுத்தமாக இல்லை. இருளர் சமுதாயத்தில் மது அருந்தும் பழக்கம் மிக குறைவு. அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை உள்ளது. இந்த நல்ல குணங்களே இவர்களுக்கு உதவும் எண்ணத்தை மேலும் வரவழைத்தது.

இருளர்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள்? படிக்க செல்வார்களா?

இருளர்களின் குழந்தைகளுக்கு படிக்கும் வாய்ப்புகள் இருப்பதில்லை. உதாரணமாக திருவள்ளூர் பகுதியில் உள்ள இருளர் சமுதாயத்தில் பெற்றோர்கள் பூப்பறிக்கும் வேலைக்காக காலை 4மணிக்கே வீட்டை விட்டுச் சென்றுவிடுவர். திரும்ப வருவது மதியம் ஒரு மணிக்குத்தான். அதுவரை குழந்தைகள் சாப்பிட்டார்களா, குளித்தார்களா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள இருளர்கள் கட்டைகள் வெட்டச் செல்வர். அதில் ஒரு மாதம் இரு மாதம் என வீட்டை விட்டுச் செல்வர். அதுவரை இந்த குழந்தைகள் அந்த கிரமாத்தில் உள்ள மற்றவர்கள் வீட்டில் இருப்பர். குழந்தைகள் பள்ளிகள் செல்கிறார்களா என்பதெல்லாம் பற்றி அவர்களுக்குத் தெரிவதுமில்லை, விழிப்புணர்வும் இல்லை.

சில இடங்களில் செங்கல் சூளைகளுக்கு செல்வார்கள். அங்கும் இதே நிலை தான். எங்கள் அணி அதுபோன்ற இடங்களுக்குச் சென்று குழந்தைகளுடனும் பெற்றோர்களுடனும் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். குழந்தைகளிடம் படிப்பின் அவசியத்தை கூறும்போது அவர்கள் அதை நன்றாக புரிந்துக்கொல்கின்றனர், படிப்பதற்கு தயார் எனவும் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக,  சென்னையில் “சுயம் Charitable Trust” நடத்தி வரும் திருமதி.உமா அவர்களிடம் பேசினேன். அவரும், இருளர் சமுதாயத்திற்காக தான் ஒரு அகாடமி ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இப்போது திருவள்ளூர் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆறு கிராமங்களில் பேசி, தேவந்தவாக்கம் என்ற பகுதியில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடத்தை பயன்படுத்தி சிறு பள்ளியை ஆரம்பித்துள்ளோம். இதுவரை 68 குழந்தைகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கேயே தங்கி படிக்க உள்ளனர். சில வருடங்களில் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இருளர்களை எவ்வாறு தொடர்பு கொள்வீர்கள்?

அவர்களுள் சிலரிடம் செல்போன் இருக்கிறது. ஆனால் எண்களை கேட்டால் அவர்களுக்குத் தெரியாது. படிக்கத் தெரியாது. முப்பது வயது இளைஞர்களை கூப்பிட்டு, “என்ன படித்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டால், பதில் சொல்லாமல் நழுவி செல்வார்கள். ஏழு வயது தாண்டிவிட்டால் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி விடுவர்.

வாக்குகள் சேகரிக்க வருபோர்களிடம் இவர்கள் நிலைமையை கூறமுடியாதா?

இருளர்கள் எதையுமே கேட்க முடியாத, கிட்டத்தட்ட ஒரு அடிமை மனப்பான்மையில் தான் உள்ளனர். செங்கல் சூளை, சாலைகள் போடுவது, கட்டைகள் வெட்டுவது, மீன் பிடிப்பது, மல்லிகைப்பூ பறிப்பது போன்ற கூலித் தொழில் செய்யும் இவர்களுக்கு 200 முதல் 300 ரூபாய் வரை தினக்கூலியாய் கிடைக்கும். அதுவும் எல்லா நாட்களுக்கு வேலை இருக்காது. மூன்று மாதம் வேலை இருக்கும், மூன்று மாதம் வேலை இருக்காது. வேலை இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி சிலர் அவர்களுக்கு பணம் கடனாக கொடுப்பர். அந்த கடனை திருப்பி அடைக்க மீண்டும் வேலைக்குச் செல்வர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்கள், அரசியல்வாதிகளிடம் பேசவோ உரிமைக்காக குரல் கொடுக்கவோ முடியாமல் உள்ளனர்.

வீடுகளே இல்லாமல் இருளர்கள் எங்கு தங்குவார்கள், உறங்குவார்கள்?

வெள்ளம் வந்ததால் தான் இவர்களை நாம் சந்திக்க முடிந்தது. இவர்களைப் பற்றித் தெரியவும் வந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழை நேரங்களில் பெரிய பிரச்சினை  தான். அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தங்கிவிடுவர். மழை வந்தாலே பயந்து ஓடும் சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் நல்ல வீடுகள் கட்டித்தரவேண்டும்.

சரியாக பேசக்கூட வெட்கப்படும், பயப்படும் இவர்களுக்கு கல்வி சென்று அடைந்தால் தான், தங்களுக்கு தேவையானவற்றை கேட்கும் தைரியம் வரும். அப்போது தான் உண்மையான மாற்றம் வரும். கல்வி சென்றால் தான் செல்வம் வரும், கல்வியும் செல்வமும் வந்தால் தைரியம் வரும். அதை தான் நான் எதிர்பார்க்கிறேன். நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அங்குள்ள பெற்றோர்களிடம் நான் இதை எடுத்துக்கூருகிறேன். அனைத்தையும் அரசிடம் எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் கல்வி பயின்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தேவையானவற்றை அடையும் நிலைக்கு உயருங்கள் எனக் கூறியதைக் கேட்டுத் தான் குழந்தைகளை எங்களுடன் அனுப்பினர்.

தொண்டு செய்யும் இன்றைய இளைஞர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

இளைஞர்கள் அருமையாக வேலை செய்கின்றனர். வெள்ளம் வந்தபோது,  இருளர்களுக்கு வீடு கட்டலாம் என்று ஒரு திட்டம் தீட்டினோம். இரண்டே நாட்களில் பத்து லட்சம் ரூபாய் வரை நம் இளைஞர்கள் சேகரித்துக் கொடுத்தனர். இளைஞர்களுடன் இணைந்து வேலை செய்வதே பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

பொது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது? அவர்களுக்கு உங்கள் அறிவுரை.

சுயநல சிந்தனையைக் குறைத்து, பொது சிந்தனையை நிறைய வளர்த்துக்கொள்ள வேண்டும். நகர மக்கள், தன்னார்வ நிறுவனங்கள், வசதியானவர்கள், இவர்கள் எல்லாம் ஒரு கிராமத்தை தத்தெடுக்கலாம். கல்வி கொடுக்கலாம், வேலை கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

நகர மக்கள் இருளர்கள் போன்று துயரத்தில் உள்ள மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று சந்திக்கலாம். இருளர்கள் எல்லாம் இன்றும் இருக்கிறார்களா, அவர்கள் பாம்புகள் தானே பிடிப்பார்கள் என்றெல்லாம் என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். அப்படியெல்லாம் இல்லை, அதெல்லாம் மாறிவிட்டது என்று அவர்களிடம் கூறுவேன். அவர்கள் வாழும் முறையை சென்று பார்த்தால் தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். சம்பாதிப்பதில் ஒரு சிறு பங்கு அது போல் கஷ்டத்தில் இருபவர்களுக்கு என தரலாம். இந்த மனநிலை வந்தால் தான் மாற்றம் வரும்.

Likes(4)Dislikes(1)
Share
Aug 142016
 

 

childsmile

இறுக மூடிய உள்ளங்கையைக் காட்டி

அப்பா உள்ளே உள்ளது

என்னவென்று கண்டுபிடி என்கிறாய்…

 

பதில் எதிர்ப்பார்த்து

ஆர்வத்தில் படபடக்கும் உன்

இமைகளின் மேலமர்ந்து

ஒரு ஆனந்த ஊஞ்சலாடுகிறது என் மனம்…

 

பதிலாய் … தெரியலையே என்கிறேன் …

 

வானளவு வியாபித்திருக்கும்

என் அறியாமையை

ஒரு பெருஞ்சிரிப்பால் அழகாக்கி,

“சும்மா … “ என்று சொல்லிய வண்ணம்

பொத்திய வெறுங்கையை திறக்கிறாய்…

 

பெருவெளியும், ஆகாயமும்

பெயரறியா ஒளிக்கீற்றும்

உலகங்கள் உண்டாக்கிய

முதல் அணுத்துகளும்

உன் உள்ளங்கையைத் தரிசித்த

பெருமகிழ்ச்சியில்

விடைபெற்றன ….

 

நான் என்னவாய் மாறினால்

உன் உள்ளங்கையில்

பொத்திக் கொள்வாய் …

                                                -அ.க.இராஜாராமன்

Likes(2)Dislikes(0)
Share
Aug 142016
 

freedom

விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு,  தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா! வணக்கம்.  என் பெயர் தூங்கத் தேவர். என தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை அய்யா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னேங்கலாம்”  என்ற தூங்கத் தேவரின் பணிவான குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.

தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் கட்டிய வெண்மையான சிறு துண்டு, கவிஞர் ரவீந்தரநாத்தாகூரை நினைவுபடுத்துவதைப் போல், அடர்ந்த தாடி மீசை, ஒளி பொருந்திய கண்கள், எழுபத்தைந்து வயதைக் காட்டும் நெற்றிச் சுருக்கங்களுடன் அவர் காணப்பட்டார். தூங்கத்தேவரை மாவட்ட ஆட்சியர்  பார்த்துக்கொண்டே, அவரைப் பற்றி நேற்று காலையில் தான் அலுவலகத்தில் நடத்திய  மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கீழராஜகுலராமன்   கிராம மக்கள் கூறியவற்றை நினைவு கூர்ந்தார்.

தூங்கத் தேவர் என்பவர் கீழராஜகுலராமன் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு சிறை சென்றவர்களில் அவரும் ஒருவர். வயதானாலும் உழைத்து வாழ வேண்டும் எனக் கொள்கையில் இருப்பவர்.  அவர் தனக்குச் சொந்தமான கூரை வீட்டில்தான் குடியிருந்து வந்தார். அவர் முன்னோர்கள் வழியில் வந்த குறைந்த அளவில் உள்ள  நிலத்தில்தான் பாடுபட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தில்தான் வாழ்ந்து வருவதோடு , அவர் சேமித்து வைக்கும் பணத்தில் தன்னால் முடிந்த அளவு ஏழைக்குழ்ந்தைகளுக்கு படிப்பதற்கும் உதவி செய்து வந்தார். எப்படியும் வாழலாம் என்றில்லாமல், இப்படித்தான் வாழவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையில் வாழ்ந்து வந்துகொண்டிருந்தார்..

அவர் தனது மானசீகக் குருவாக சுவாமி விவேகானந்தரை ஏற்றுக் கொண்டு, அவரது வழியில் நடந்து செல்பவர். சுவாமி விவேகானந்தரின் கனிவுமிக்க அமுதமொழிகளான. ஏழைகளிடம், பலவீனர்களிடம், நோயாளிகளிடம் இறைவனை காண்பவனே அவரை உண்மையில் வழிபடுகிறான்., என்பதை  தம் உள்ளத்தில்  பதிந்து வைத்துகொண்டு  அதன்படி செயல்பட்டும்  வந்தார்.

அவருடைய பெயர்தான் தூங்கத்தேவர்.  தூங்காத தேவர் என்பவர் போல், அவர் தினமும் காலை ஆறு மணிக்கே அக்கிராமத்தில் ஏதோ ஒரு தெருவில் துப்பரவு செய்து கொண்டிருப்பார்.  அவர் துப்பரவை செய்வதைப் பார்த்து, அக்கிராமத்தில் உள்ள சிலபேர் ஆரம்பத்தில் “ ஏய் பெருசு உனக்கு வேலை வெட்டி இல்லே, தெருவை தோட்டிபோல் பெருக்கிகிட்டு இருக்கே”  என ஏளனமாக பேசுவதைக் கேட்டு  , அவர்களுக்கெல்லாம்  ஒரு புன்னகைதான் அவரது பதிலாக இருக்கும்.  இருந்தாலும் அவரது துப்பரவுப் பணி தினமும் தொடரும்.  நாளடைவில் அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், பேசியவர்கள் எல்லாம் , அவர்களே தானாக முன்வந்து , அவருடன் சேர்ந்து கொண்டு தெருவை அவரைப் போல் சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்..

தூங்கத் தேவர் செயல்களை உற்று நோக்கினால்,  சுவாமி விவேகானந்தர் கூறியதைப்போலதான்  இருக்கும். அதாவது   ‘ஒவ்வொரு பணியும்  மூன்று நிலைகளைக் கடந்துதான் ஆகவேண்டும்.  அதாவது ஏளனம் – எதிர்ப்பு- ஏற்றுக்கொள்ளல்’ என்ற நிலைபாடுதான் அவரிடம்   இருந்தது.

ஒருமுறை அக்கிராமத்தில் வாருகால் வசதியில்லாமல், தெருவின் நடுவே கழிவுநீர் ஓடி தெருவே சுகதாரக் கேடாக இருப்பதைக்கண்டு ,தூங்கத் தேவர், அக்கிராமத்தில் உள்ள நாட்டாமை என்று சொல்லிக்கொள்ளும், பண்ணையாரிடம் சென்று , தெருவில் வாருகால் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யும்படி அன்புடன்  கூறினார். அந்தப் பண்ணையார் அவர் கூறியதையெல்லாம்  செவிமடுத்ததாக தெரியவில்லை.  பொறுத்தது போதும் என்று ஒரு நாள் தன்னுடன் துப்பரவுப் பணியில் ஈடுபட்டவர்களுடன் மண்வெட்டி, கடப்பாரையுடன் தெருவில் வாருகால் தோண்டுவதற்கு ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்துக்கொண்டு இருந்த அத்தெருமக்களும் ஆளுக்கொரு கடப்பாரையுடன் வாருகால் தோண்டுவதற்கு வந்து விட்டார்கள். இதைப் பொறுக்கமாட்டாமல் அக்கிராம பண்ணையார் தூங்கத் தேவரை பலவிதமாக திட்டிப் பார்த்தார். அதற்கும் தூங்கத் தேவர் வழக்கம்போல் அவருடைய புன்னகைதான் பதிலாக இருந்தது.  தூங்கத்தேவரின் அன்பான கோரிக்கை, பொறுமை அவருடைய அணுகுமுறை எல்லாம் பண்ணையாரின் மனதை மாற்றியது. முடிவில் பண்ணையார் அவருடன் சேர்ந்து வாருகால் அமைப்பதற்கு  வேண்டிய உதவிகளை செய்தார்.

தூங்கத் தேவர் தனது குடிசையின் ஒரு பகுதியில் ஒரு மினி நூலகம் வைத்து, அதில் பாரதியார் கவிதைகள், விவேகானந்தர் வீர முரசு, ராமகிருஷ்ணர் அமுதமொழிகள் போன்ற பயனுள்ள ஆன்மீக நூல்களையும் வைத்திருந்தார். ஆலமரதடியின்கீழ் ஆடுபுலி ஆட்டம், தாயக்கட்டம், சீட்டுக்கட்டு போன்ற வெட்டியாக விளையாடிய அக்கிராம மக்களை, பயனுள்ள வகையில் நூலகத்தை பயன்படுத்தும்படி செய்தார். வீட்டில் உள்ள பெண்களிடம் யாராவது உங்கள் அப்பா எங்கே, மாமா, தாத்தா, எங்கே  என்று கேட்டால் தூங்கத் தேவர் வீட்டில் சென்று பாருங்கள் என்று நம்பிக்கையுடன்  பேசும்படி அக்கிராம மக்களை மாற்றிருந்தது. தூங்கத் தேவரின் பொறுமையுடன் கூடிய அவரது விடாமுயற்சி,சகிப்புத்தன்மை இனிமையான பேச்சு அணுகுமுறைகள்தான் காரணம்.

மாவட்ட ஆட்சியரின் டபேதார் “அய்யா, சிவகாசி கோட்டாட்சியர் வந்திருக்கிறார்”   என குரல் கொடுத்தவுடன்தான், மாவட்ட ஆட்சியர் தூங்கத்தேவரின்  நினைவலைகளிலிருந்து மீண்டு வந்தார்.  “சரி அவரை வரச் சொல்” என்று கூறிவிட்டு, எதிரே நிற்கும் தூங்கத்தேவரைப் பார்த்து “பெரியவரே ! திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுவாக மக்கள் தங்கள் குறைகளை கூறித்தான் மனுக் கொடுப்பார்கள்.  ஆனால் போன வாரம் கீழராஜகுலராமன் கிராம மக்கள் வித்தியாசமான மனு ஒன்று என்னிடம்  கொடுத்திருந்தார்கள். அதில்…. என்று மாவட்ட ஆட்சியர் கூறிக்கொண்டு இருக்கும்போது,… சிவகாசி கோட்டாட்சியர் ஆட்சியர் அறையில் நுழைந்தவுடன், அவரை இருக்கையில் அமரும்படி சைகையில் கூறிவிட்டு, தூங்கத் தேவரை நோக்கி “ பெரியவரே உங்களுக்கு அரசு வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் உங்களுக்கு கிடைக்கும்படி  கிராம மக்களே மனுக்கொடுத்து இருக்கிறார்கள்.  நீங்கள் ஏன் தியாகிகள் பென்சன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். ?  நீங்கள் உண்மையான சுதந்திர போராட்ட தியாகி .  மேலும் கிராம மக்களுக்கும் வேண்டிய நல்ல செயல்கள் எல்லாம் ஆர்வமுடன்  செய்கிறீர்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கோரி மனுக் கொடுக்க உங்களுக்கு என்ன சிரமம். …?” எனக்  கேட்டார் மாவட்ட ஆட்சியர்.

தூங்கத் தேவர் மாவட்ட ஆட்சியரை நோக்கி “ அய்யா நான் சுதந்திர போராட்டத்தில் கலந்துகிட்டது,  நானே விரும்பி கலந்துகிட்டது. எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது . இதற்கு ஏன் சர்க்கார் பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன் “ என்றார்.

அந்தப் பாமரன் என்ன்மோ நன்கு சிந்தித்து அறிவுபூர்மாக் பேசுவது போல்தான் மாவட்ட ஆட்சியருக்கு தோன்றியது. ‘நான் சுதந்திர போராட்டத்தில் கலந்துகிட்டது,  நானே விரும்பி கலந்துகிட்டது. எனக்கு அதிலே ஒரு ஆத்ம திருப்தி இருந்தது . இதற்கு ஏன் சர்க்கார் பென்சன் கொடுக்கணும்னு கேக்கறேன்’ என்று தூங்கத்தேவர்  பேசியதை கேட்டு மாவட்ட ஆட்சியரையே சிந்திக்க வைத்தது.

சிவகாசி கோட்டாட்சியர் குறுக்கிட்டு “.பெரியவரே ! அரசாங்கம் உங்களைப் போன்ற தியாகிகளுக்கு  கொடுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வாங்கித் தர வேண்டும் என்று கிராம மக்களும், மாவட்ட ஆட்சியரும் விரும்புகிறார்கள். நீங்கள் ஒரு மனு மட்டும் கொடுங்கள் . உங்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்” என விளக்கினார்.

“அய்யா நான் சுதந்திர போராட்டத்தில் விரும்பி கலந்து கிட்டது சர்க்கார்  ஏன் எனக்கு பென்சன் தர வேண்டும். நான் நாட்டிற்காக் பாடுபட்டது எனது கடமையாய்  நெனைக்கிறேன். கடமைக்கு பென்சனா உதவியா ? அய்யா  நீங்க சொன்னதுபோல் பென்சன் வாங்கினால், நான் சுதந்திரத்துக்கு  பாடுபட்டது அர்த்தமேயில்லை “ என தான் கூறியதையே மீண்டும் மீண்டும் கூறி, தன்னை  உண்மையான தியாகி என்பதைக் காட்டினார். .

சிவகாசி கோட்டாட்சியர் ஏதோ கூற முற்படும்போது, தூங்கத்தேவர் இடைமறித்து “ அய்யா, எனக்கு உழைக்க உடலில் தெம்பு இருக்கு. உதவி செய்ய என் கிராம மக்கள் இருக்காங்க. நான் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு எனக்கு பென்சனா ? நெனைக்கவே சிரிப்புதான் வருது. அய்யா  தியாகத்துக்கு விலை பென்சனா?  வேண்டாம் அய்யா,  பென்சன் கொடுத்து எங்களைப் போன்றவங்கள கொட்சப்படுத்தாதீங்க. மன்னிக்கவும். என் மீது அன்பு கொண்டு கூப்பிட்டு பேசியதற்கு நன்றிங்க “ என்று இருகரம் கூப்பி வணங்கிச் சென்றார்.

சிவகாசி கோட்டாட்சியர் , மாவட்ட ஆட்சியரை நோக்கி  “ சார் . இந்தக் காலத்திலும் இப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் இருக்கிறார்களே, அரசாங்கம் வழங்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் பென்சன் வேண்டவே வேண்டாம் என்று கூறும் வித்தியாசமான மனிதரை இப்போதுதான் நான் பார்க்கிறேன். பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியதுபோல் கடமைச் செய், பலனை எதிர்பாராதே என்பதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது இந்த வித்தியாசமான மனிதரை பார்க்கும்போது.  மேலும்  சிவகாசி கோட்டாட்சியர் ஏதோ கூற முற்படும்போது…

மாவட்ட ஆட்சியர் குறுக்கிட்டு “ இந்த வித்தியாசமான மனிதர் நம்மிடம் பேசியது நடந்துகிட்ட முறையெல்லாம்  ‘ வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல’ என்பதை நமக்கெல்லாம் உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார். நான் உணர்ந்து கொண்டேன்.  நீங்கள்……என ஏதோ மாவட்ட ஆட்சியர் பேச முற்படும்போது, அவர் மேசையில் உள்ள தொலைபேசி மாவட்ட் ஆட்சியர் கூறியதை ஆமோதிப்பதுபோல் டிரிங் டிரிங்  என ஒலித்தது.

                                         – பூ. சுப்பிரமணியன்.

Likes(3)Dislikes(0)
Share
Share
Share