Jun 142016
 

320

(நம் சர்வே லிங்க்)

மஹாராஷ்டிர மாநிலத்தின் மாரத்வாடா பகுதிகளில் வறட்சி முன் எப்போதும் இல்லாத வகையில் இருப்பதை தினசரிகளில் பார்த்திருப்போம். குறிப்பாக, அம்மாநிலத்தின் ஔரங்காபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது லாசர் என்ற கிராமம். “இங்கு ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 17லிட்டர் தண்ணீர்  மட்டுமே கிடைக்கிறது, அதுவும் 14 நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வண்டி அப்பகுதிகளுக்கு வருகிறது” போன்ற செய்திகள் எத்தனை ஆபத்தை வருங்காலத்தில் நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று காண்பிக்கின்றன.

ஜல்தூத் விரைவு ரயில்களும், டிரைலர்களும் தினமும் தண்ணீரை சுமந்தவாறு அப்பகுதிகளுக்கு சென்றுக்கொண்டே இருப்பினும், மாரத்வாடா பகுதிகளில் உள்ள எட்டு மாவட்டங்களில், நான்கில் விவசாயிகளின் தற்கொலை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் தண்ணீர் பிரச்சினையால் அந்த கிராமப்பகுதி மக்கள் பலரும் தங்கள் வீட்டுக் கழிப்பறைகளை விட்டுவிட்டு, திறந்தவெளியை பயன்படுத்த துவங்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் திருட்டு, சண்டை என வருவதால், 144 செக்ஷனும் உத்தரவிடப்பட்டுள்ளது. தண்ணீர் எங்குமே இல்லை, அத்தனை கோரமான வறட்சி..!

நிலைமை இத்தனை மோசமாக இருக்க, பாதிக்கப்பட்டவர்களின் பார்வை தண்ணீர் அதிகமாக புழங்கும் பகுதிகளுக்கு திரும்பியுள்ளது. உதாரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். 60 மேட்சுகளுக்காக, சுமார் 18 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதனால் தான் அம்மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை எழுந்தது.

அது மட்டுமன்றி, தண்ணீரை பெருமளவு விழுங்கும் மஹாராஷ்டிர மாநிலத்தின் 202 சர்க்கரை ஆலைகள். இவைகளில் 40% ஆலைகள் மாரத்வாடா பகுதிகளில் மட்டுமே உள்ளன. (இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 32% மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே வருகிறது). ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க சுமார் 1500 லிட்டர் தண்ணீர் தேவைபடுகிறது.

மாராத்வாடாவில் தானே பிரச்சினை, தமிழகம் அமைதி பூங்காவாகத்தானே இருக்கும், நமக்கென்ன பிரச்சினை என சிலர் கேட்கலாம். அப்படி கேட்பவர்களுக்கு, இன்னொரு அதிர்ச்சி ரிப்போர்ட் தயாராக உள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் வரும்காலத்தில் தண்ணீரின் பிரச்சினை குறித்து ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வில், 2050 ஆம் ஆண்டில், இந்தியா சீனா போன்ற ஆசிய நாடுகளில் சுமார் 100 கோடி மக்கள் கடுமையாக, தண்ணீர் பஞ்சத்தால் சிக்கித் தவிப்பர் என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

நீரின் முக்கியத்துவம் இவ்வாறு இருக்க, ஒவ்வொரு துளியையும் பாதுக்காக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும், தொழிலுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு, அதற்கேற்றவாறு எதிர்கால முடிவுகளை, மக்களும் அரசும் எடுப்பர்  என நம்பலாம்.

உதாரணமாக தற்போது உள்ள இரு புள்ளிவிவரங்கள்.. ஒரு கார் தயாரிக்க குறைந்தபட்சம் 1.5லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு லிட்டர் கோலா குளிர்பானம்  தயாரிக்க சுமார் 9 லிட்டர் தேவை. இத்தகைய தொழிற்சாலைகள்  எதிர்காலத்தில் இருக்குமா, அரசாங்கம் அவைகளுக்கு ஒப்புதல் தருமா என்பதெல்லாம் கேள்விக்குறி தான். மக்களின் வாழ்க்கை முறையும் அதற்கு தகுந்தாற்போல் மாறியிருக்கும்.

இத்தகைய அபாய சூழ்நிலைகள் நம்முன் இருப்பினும், சில நல்ல விஷயங்களும் அரசாலும், மக்களாலும் அவ்வப்போது செய்யப்பட்டு தான்  இருக்கின்றன.

இந்திய மத்திய அரசு, தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண, “உலகின் மாபெரும் பாசன கட்டமைப்பு திட்டம்” ஒன்றை தீட்டி வருகிறது. இதன் செலவு சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுதும் உள்ள 30 முக்கிய நதிகளை இணைக்கும் பணிகளையும், அதனால் ஏற்படும் பலன்களையும் National Water Development Agency (NWDA) தெரிவித்துள்ளது. பல கோடி மக்களுக்கு பயனாகும் இந்த திட்டம் நடந்தே தீர்வது காலத்தின் கட்டாயம்.

அடுத்து மக்களவில் ஆங்காங்கே நடைபெறும் சமூக விழிப்புணர்வு செயல்கள். சமீபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த திரு.ராஜேந்திர சிங் என்ற மனிதனின் செயல்கள் பிரமிக்க வைக்கின்றன. “இந்தியாவின் தண்ணீர் மனிதர்” என்றழைக்கப்படும் இவர், ராஜஸ்தானின் ஐந்து நதிகளை சீர்படுத்தி சுமார் ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீரை திரும்பிக் கொண்டுவந்து பல விருதுகளை பெற்றுள்ளார்.

இதெல்லாம் சரி, பாசிடிவ் தளமான B+ இதழில் இத்தகைய அச்சுறுத்தல்களை வெளியிடக் காரணம் என்ன? இருக்கிறது. தற்போது நமது B+ அணி, புத்தகம் வாசிப்பவர்களிடம் ஒரு சர்வே எடுத்து வருகிறது. இதில் மக்களின் தற்போதைய படிக்கும் நிலை, என்ன படிக்கிறார்கள், எதை தேடுகிறார்கள் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இந்த சர்வேயின் முதல் சுற்றில் ஆச்சரியமாக, பெரும்பாலான மக்கள் விரும்பிக் கேட்கும் அல்லது தேடும் பதிவுகள் எது தெரியுமா? General Awareness. அதாவது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை தெரிந்துக்கொள்ளும் வகையில், வெளிவரும் விழிப்புணர்ச்சி தரும் பகிர்வுகள். அதற்கடுத்து தங்களின் சோர்வை நீக்கி உற்சாகப்படுத்தும் Motivational Subjects.

அந்த சர்வேயில், ஒரு நபர் தனது கருத்தையும் தெளிவாக கூறியிருந்தார். “ஏற்கனவே, அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளையும், போராட்டங்களையும் கண்டு நொந்து போய்விடுகிறோம், அதனால் அந்த சவால்களையெல்லாம் உடைத்தெரிக்கும் வகையில், ஊக்குவிக்கும் பகிர்வுகளை அதிகளவில் வெளியிடுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மாதம் ஐந்தாம் தேதி உலக சுற்றுப்புற சூழல் தினம் கடைபிடிக்கப் பட்டு வருவதால், இந்த பகுதியில் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சில தகவல்களை பகிர்ந்தோம். சரி, இனி இரண்டாவது எதிர்பார்பான, Motivation பகிர்விற்கு செல்வோம்.

மாரத்தான் ஓட்டம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். 42 கிமீ, 21 கிமீ, 10 கிமீ என மூன்று தனித்தனி பிரிவுகள் அதில் உண்டு. ஓடுபவர்கள் தங்களால் முடிந்த இலக்கை தேர்ந்தெடுத்து போட்டிகளில் கலந்துக்கொள்வர்.

இந்த ஓட்டத்திற்கு பயிற்சிகளும் சற்று கடினமாகவும், தொடர்ச்சியாகவும் இருக்கும். மாரத்தானில் ஓட உடல் மற்றும் மன வலிமையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். சராசரியான, உடல் நல்ல ஆரோக்கியமான உள்ள மனிதர்களுக்கே, 10 கிமீ ஓடுவதற்குள் நாக்கு தள்ளி விடும்.

அப்படி இருக்க, இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் (Quadruple Amputee) மாரத்தான் ஓட முடியுமா என்றால், “முடியும்” என சாதித்துக் காட்டியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த திருமதி.ஷாலினி சரஸ்வதி அவர்கள்.

2012 ஆம் வருடம், கருவுற்று சில நாட்களாக இருந்த ஷாலினி “Rickettsial Atmos” என்ற மிக அரிய பாக்டீரியா நோயால் தாக்கப்பட்டார். அந்த நோயால், கருக்களைந்ததோடு, அவர் உடலின் பல உறுப்புகளும் செயலிழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். இரு கால்களும், கைகளும் அசைய மறுக்கவே, மருத்துவர்கள் அவற்றை அவர் உடம்பிலிருந்து அகற்றிவிடுகின்றனர்.

இரண்டு வருடம் படுத்த படுக்கையாய் பல போராட்டங்களை சந்திக்கிறார். விதி அவர் வாழ்க்கையை புரட்டிப்போட்டு மாற்றி விடுகிறது.

நின்று கொண்டிருப்பவன், காலத்தை தின்று கொண்டிருக்கிறான்,

சென்று கொண்டிருப்பவன், காலத்தை வென்று கொண்டிருக்கிறான்…

என்ற வரிகளை உணர்ந்த ஷாலினி, செயற்கை கால்களை பொருத்தி மெல்ல நடக்கத் தொடங்குகிறார். பின்னர் ரன்னர் பிளேடுகளை பொருத்தி ஓடவும் தொடங்குகிறார்.

அப்படி தொடங்கியவர், சென்ற மாதம் பெங்களூரில் நடைபெற்ற TCS மாரத்தானில் 10 கிமீ பிரிவில் கலந்துக்கொண்டு ஒடி சாதனை புரிந்துள்ளார்.

பல சவால்களையும், போராட்டங்களையும் மீறி வெறித்தனமாக உழைத்து வெற்றிப்பெறும் இத்தகைய மனிதர்களை காண்கையில், பல சமயங்களில் நமது பிரச்சினைகள் ஒன்றுமே இல்லை என நினைக்க தோன்றுகிறது. நமது போராட்டங்களை சந்திக்கும் உத்வேகமும் நம்பிக்கையும் வரத்தொடங்குகிறது.

நம்பிக்கையுடன் போராட்ட களத்தில் குதிப்போம், வெற்றி இலக்கை அடைவோம்!

விமல் தியாகராஜன் & B+ TEAM

(நண்பர்களே, இந்த பகுதியில் குறிப்பிட்டது போல், B+ அணி ஒரு சர்வே எடுத்து வருகிறது. நம் சர்வே லிங்கை இங்கே வழங்கியுள்ளோம், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த சர்வே இருக்கிறது. சிறப்பான யோசனைகளை கூறுபவர்களுக்கு பரிசுகளும் காத்துக்கொண்டுள்ளன. தயவுசெய்து இந்த சர்வேயை பூர்த்தி செய்யுங்கள், உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்)

https://docs.google.com/forms/d/1v7Ipw703nWigwX1Z645Kpyvx0T2Qq-jHgcmFvzU2q8s/edit

நன்றி..

Likes(2)Dislikes(0)
Share
Jun 142016
 

Neerja-Bhanot-Photos-Ads-Stamp-Biopic-Husband-Pics-Family-Wedding-Movie-Death-Images

(1986 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்)

மும்பையிலிருந்து புறப்பட்டு பாக்கிஸ்தானின் கராச்சி, ஜெர்மனியின் ஃப்ராங்ஃபோர்ட் (FrankFort) என இரண்டு இடை நிறுத்தங்களுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு செல்லும் விமானம்  Pan Am Flight-103.

செப்டம்பர் 5, 1986 ஆம் ஆண்டு, அதிகாலை மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் 6 மணி அளவில், பாக்கிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி பயணிகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது.

அப்பொழுது ஏர்போர்ட் செக்யூரிட்டி வாகனம் ஒன்றில் நான்கு செக்யூரிட்டி அதிகாரிகள் விமானத்தை நோக்கி செல்கின்றனர். அருகே சென்ற அவர்கள் வேக வேகமாக கையில் வைத்திருந்த துப்பாக்கிகளுடன் பயணிகள் விமானத்தில் ஏறும் படிக்கட்டுகள் வழியாக விமானத்திற்குள் நுழைகின்றனர். பின்னர்தான் தெரிகிறது அவர்கள் செக்யூரிட்டி ஆஃபீசர்கள் அல்ல என்றும் பயங்கரமான வெடிகுண்டுகளுடன், கையில் துப்பாக்கிகளுடனும் விமானத்தை கடத்த வந்த தீவிரவாதிகள் என்று.

தங்களிடமிருக்கும் ஆயுதங்களைக் காட்டி, விமானத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர். விமானத்திலிருந்த 360 பயணிகளுடன் விமான பணியாட்களும் உச்சகட்ட மரண பயத்தில் இருக்க, ஒருவருக்கு மட்டும் அந்த பயம் இல்லை. அவர் நீரஜா பன்னட்.  அவர் இந்த Pan Am Flight 103 இன் தலைமை விமானப் பணிப்பெண்.

விமானம் புறப்படத்தயாரக இருக்கிறது. தீவிரவாதிகள் அந்த விமானத்தை Cyprus க்கு செலுத்த வேண்டும் எனவும், சிறையிலிருக்கும் இன்னும் சில தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். துப்பாக்கி முனையில் இருக்கும்போது யாராக இருந்தாலும் மூளை செய்வதறியாது செயலற்றுவிடும். ஆனால் நீரஜா பன்னட் சுதாரித்துக்கொண்டார்.

உடனடியாக தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் விமானத்திலிருந்த விமானிகளுக்கு தகவலை தெரியப்படுத்த, பைலட், கோ-பைலட், ஃப்ளைட் எஞ்ஜினியர் மூவரும் பைலட் அறைக்கு மேல் இருக்கும் எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியாக விமானத்திலிருந்து உடனடியாக தப்பி வெளியேறினர். இதுவே தீவிரவாதிகளின் திட்டத்தின் முதல் தோல்வி. பைலட் இல்லாததால் விமானம் அங்கேயே நின்றது. இல்லையெனில் துப்பாக்கி முனையில் விமானம் எங்கோ சென்றிருக்கக்கூடும்.

பைலட் இல்லாததால் விமானம் பன்னட்டின் கண்ட்ரோலில் வருகிறது. பயணிகளின் மிகப்பெரிய ஆதரவு இப்பொழுது நீரஜா மட்டுமே. அவரும் அதை  நன்கு  அறிந்திருந்தார். தீவிரவாதிகளிடம் மன்றாடி பயணிகளின் கைகளை இறக்க  அனுமதியும் பெறுகிறார்.

மனிதன் மிக பெரிய பதட்டத்தை சந்திக்கையில் முதலில் தேடுவது நீர் என்ற ஆகாரத்தைதான். பயணிகளுக்கு நீர் வழங்கவும் துணிச்சலுடன் தீவிரவாதிகளிடம் வாதிட்டு  அனுமதியும்  பெறுகிறார் நீரஜா.

விமான ஓட்டுனர்கள் வரவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதிக்கின்றனர் தீவிரவாதிகள். இந்த கோரிக்கையை ஏற்றால் விமானம் நாடு கடத்தப்படும் என அறிந்து கையறு நிலையில் நின்றது அரசு.

கோரிக்கைக்கு அரசிடம் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகள் உயிருடன் விளையாட ஆரம்பித்தனர். இந்த தீவிரவாதிகள் லிபியாவைச் சேர்ந்தவர்களாதலால், முதலில் அமெரிக்கர்களை கொல்வது என முடிவெடுத்து பாஸ்போர்ட் மூலம் ஒரு அமெரிக்கரை கண்டுபிடித்து அவனை இழுத்து வந்து சுட்டு விமானத்திற்கு வெளியே எரிந்தனர்.

நீரஜா பன்னட்டிடம் மீதம் இருக்கும் பயணிகளின் பாஸ்போர்ட்டை சேகரிக்குமாறு கட்டளையிட்டனர். அப்போதுதான் மீதமிருக்கும் அமெரிக்கர்களையும் கொல்ல முடியும் என்று.

தீவிரவாதிகளின் இந்த திட்டத்தையும் நீரஜா பன்னட் பலிக்க விடவில்லை. பயணிகளிடமிருந்து பாஸ்போர்ட்டுகளை வாங்கி, அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்டை மட்டும் ஒரு இருக்கைக்கு அடியில் தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்தார். தீவிரவாதிகளால் இப்போது அமெரிக்கர்களை மட்டும் தனியாக இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்களின் வெறியாட்டத்தில் கிட்டத்தட்ட 18 பேர் பலியாகின்றனர்.

தாய் முன் மகன், மனைவி முன் கணவன் என கொடூர மரணங்கள் அரங்கேறுகின்றன.  விமானம் முழுதும் மரண ஓலமும், அழுகையும் தொற்றிக்கொண்டது.

17 மணி நேரத்திற்குப் பிறகு தீவிரவாதிகள் தங்களிடமிருந்த வெடிபொருட்களில் இரண்டை உபயோகிக்க, பன்னட் உடனடியாக எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறந்து, பயணிகளை வெளியேற்ற ஆரம்பித்தார். நினைத்திருந்தால் முதல் ஆளாக அவர் தப்பித்திருக்க முடியும். ஆனால் முதலில் பயணிகளை வெளியேற்றுகிறார்.

தீவிரவாதிகள் தங்கள் துப்பாக்கியால் பயணிகளைச் சுட ஆரம்பிக்கின்றனர். அனைவரும் விமானத்தை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டிருக்க மூன்று குழந்தைகள் கேட்பாரற்று விமானத்தில் தனியாக நிற்கின்றன. தீவிரவாதிகளால் சுடப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் நீரஜா வேகமாகக் குழந்தைகளை நோக்கிச் சென்று அரவணைக்கிறார். குழந்தைகளை நோக்கிப் பாய்ந்த தோட்டா நீரஜாவின் தலைக்குள் பாய்கிறது.

சினிமாக்களில் மட்டுமே சாத்தியப்படும் இந்த வீர சாகச நிகழ்வை, நிஜத்தில் நிகழ்த்த ஒரு அசாத்திய மன தைரியமும், தன்னலமற்ற தியாக மனப்பாங்கும் நிச்சயம் தேவை.

தலையை துப்பாக்கி குண்டு துளைக்கிறது. கைகளோ மூன்று குழந்தைகளை மார்போடு அணைத்தபடி இருக்கின்றது. வாழ்வில் பல துன்பங்களை சுமந்தவள்  சிலையாகி போகின்றாள்.

இன்னுயிர் பிரிகிறது. இத்தனை உயிர்களை காப்பாற்றிய அவள் தன்னுடைய உயிரை காப்பாற்ற வழி தெரியாமலா இருந்திருப்பாள்? தியாகம் மற்றும் தன்னம்பிக்கை என்றால் என்ன என கடவுளுக்கு பாடம் எடுக்க சென்றிருப்பாள். நீரஜாவால் காப்பாற்றப்பட்ட சிறுவன் இன்று விமான ஓட்டுனர். நீரஜா செய்த  தியாகத்தின் பயன்  தொடருகின்றது.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன் கணவனால் சில வருடங்களால் கைவிடபட்டவர் நீரஜா. அந்த பிரிவிற்கு பின் வாழ்க்கை முடிந்தது, வானம் இடிந்தது என அவர்  சுனங்கிவிடவில்லை. வாழ்கை போராட்டத்தை சந்திக்க துணிச்சலுடன் இறங்கினார்.

அந்த துணிச்சல் குணம் தான், தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து என அறிந்தபோதும், தன் கடமையிலிருந்து பின் வாங்காமல், தன் பணியை தொடர செய்தது.

இந்திய அரசு, பதட்டமான நேரத்தில் வீரமுடன் செயல்பட்டதால், அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கி கவுரவித்தது. (மிகச் சிறிய வயதில் இந்த விருதை பெரும் பெருமையையும் நீரஜா அடைந்தார்). மேலும் 2004 ஆம் ஆண்டு, இந்திய தபால் துறை, நீரஜாவை சிறப்பிக்கும் வகையில் அவரின் தபால் முத்திரையை வெளியிட்டது.

ஒவ்வொரு முறையும் தன் வீட்டை விட்டு கிளம்புகையில், என்னிடமும் என் மனைவியிடமும் “என் செயல்கள் உங்களை எப்போதும் பெருமை பட வைக்கும்” என சொல்லி விட்டு கிளம்புவார். அதே போலவே சொன்னதை செய்து விட்டார் எங்கள் நீரஜா என்று கண்ணிர் மல்க தன் மகளை நினைத்து பெருமையுடன் கூறுகிறார் நீரஜாவின் பாசமிக்க தந்தை.

பல விருதுகள் அமெரிக்க, இந்திய, பாகிஸ்தானால் அவரது மறைவிற்கு பின் வழங்கபட்டிருந்தாலும், நீரஜாவின் கடைசி ஆசை தீவிரவாதமில்லா உலகமும், தியாகம் உள்ள உள்ளமும் எங்கும் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கும்.

நீரஜா போன்ற மாமனிதர்களின் தியாகமும் சாதனையும் தான் இன்றைய இளைஞர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருக்கிறது.

– முருகேஷ் சுப்ரமண்யம், நெல்லை

Likes(2)Dislikes(0)
Share
Jun 142016
 

1 (640x505)

மணியின் வீடு:

மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். ஆனால், இப்போதெல்லாம் பெண் கிடைப்பதுதான் குதிரை கொம்பாக இருக்கிறதே!

மணியின் அப்பா ஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியர். அவர் வேலையில் சேர்ந்ததும் மற்றும் ஒய்வு பெற்றதும் எழுத்தராக. கடைசி வரை உத்தியோக உயர்வு கிடைக்கவேயில்லை. எப்போதாவது மனுஷன் வருத்தப் பட்டாரா என்ன? நெவெர். 

அவருக்கு கொஞ்சம் தற்பெருமை அதிகம். நிறைய பேசுவார். ஆனால் தன்னை பற்றியே பேசுவார். இப்போது பென்ஷன் வருகிறது. சொந்த வீடு, சென்னை திருவல்லிகேணியில். வீட்டில் ஒரு பகுதி வாடகை. பூர்விக சொத்தும் கொஞ்சம் இருக்கிறது. அதை குத்தகை விட்டு கொஞ்சம் காசு பார்க்கிறார்.

மணிக்கு , அவனது அப்பாவின் குணம் தப்பாமல். சொல்லப்போனால், அவனது அலட்டல் அப்பாவை விட கொஞ்சம் அதிகமே..

காலை. 8.00 மணி. அப்பா இரண்டாம் டோஸ் காபி குடித்துக் கொண்டு, கூடவே பேப்பர் மேய்ந்து கொண்டு இருக்க , அம்மா சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டு இருக்க, மணி அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். 

டேய் மணி, சாயந்தரம் 4.00 மணிக்குள்ளே வாடா..இன்னிக்கு பொண்ணு பாக்க போகணும். இந்தா பொண்ணு போட்டோ. பாக்க மஹா லஷ்மி மாதிரி இருக்கா. நல்ல வேலையாம்அம்மா மணியிடம் போட்டோவைக் கொடுத்தாள். அவள் ஏற்கெனவே உறவுக்கார ராமதுரை வீட்டு கல்யாணத்திலே பெண்ணை பார்த்தாகி விட்டது. தரகர் மூலமா இந்த ஏற்பாடு. 

போட்டோவைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது மணிக்கு. ஆனாலும், டம்பம் விடவில்லை. 

அட போம்மா! நீ இன்னும் அந்த காலத்திலேயே இருக்கியே! சும்மா தொணதொணக்காதே! எனக்கு ஆபீசில் இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. லண்டன் கிளை அதிகாரிகளுடன் சந்திப்பு. சோழா ஹோட்டலில். நான் இல்லேன்னா காரியம் கெட்டுவிடும். எங்க எம்.டிக்கு நான் கட்டாயம் பக்கத்திலேயே இருக்கணும்.” – ஆரம்பித்து விட்டான் தன் அலம்பலை, அம்மாவிடமே.

மணியிடம் ஒரு நல்ல வழக்கம். மற்றவர்களைப்பற்றி அவன் அதிகம் விமர்சிக்கமாட்டான். தன்னை பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவே அவனுக்கு நேரம் போதவில்லையே.

கேட்டுக் கொண்டிருந்த அப்பா அப்படி சொல்லாதே மணி! உனக்கும் வயசு ஆயிண்டே போறது பார்! தலை வேறே வழுக்கையாயிண்டே போறது!”- அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

அடங்கினான் மணி. சரி சரி! நீங்க முதலில் போங்க. நான் எப்படியாவது வந்துடறேன். பெண்ணோட தனியா பேசணுமே. ஒண்ணு பண்ணுங்க. 4.00 மணிக்கு சோழா ஹோட்டலில், பெண்ணோட பேசனும்னு வர சொல்லுங்க. பிடிச்சிருந்தா மேல பேசலாம்!

ஏதோ பண்ணு. நாங்க தரகரோட போய் பாக்கறோம். அவங்க சரி சொன்னாக்க, நீ மாலாவை, அதாண்டா பொண்ணை, ஹோட்டலில் வைத்து பேசு”.

சாயந்திரம் என்ன புடவை கட்டிக்கலாமென்று அம்மா இப்போவே யோசனை பண்ண ஆரம்பித்து விட்டாள். பேங்க் போய், லாக்கரிலிருந்து நகை வேறு எடுக்கணும். என்ன சீர் கேக்கணும்னு எழுதி வச்சுக்கணும். நிறைய வேலை இருக்கு. 

****

மாலாவின் வீடு.

மாலா ஒரு எம்.பி.ஏ. உளவியல் பட்டம் வேறு. பெற்றோர் நல்ல வரன் தேடிக் கொண்டிருந்தனர். இப்போ நல்ல வரன் ஒன்னு வந்திருக்கு. ஒரே பையன். நல்ல வேலை. சின்ன குடும்பம். கடவுளே! இது தகையவேண்டுமே! இப்போதெல்லாம் நல்ல வரன் எங்கே கிடைக்கிறது?

மாலா, பையன் போட்டோவை ஏற்கனவே பார்த்து விட்டாள். அவளுக்கு இஷ்டம் தான். சின்ன வயது மாதவன் போலிருக்கிறான். அமெரிக்காவில் படித்து கொஞ்ச நாள் அங்கேயே வேலை. இப்போது சென்னையில். மாலா மணி’. சொல்லிப்பார்த்துக் கொண்டாள். ஆஹா! பேர் பொருத்தம் கூட நல்லா இருக்கே. 

கனவை கலைத்தாள் அம்மா. மாலா! தரகர் கிட்டேயிருந்து போன். பையனின் அப்பா அம்மா இன்னிக்கு இங்கே வராங்களாம். ஆனால்,பையன் வரலை. அவன் உன் கூட தனியா பேசணுமாம். சோழா ஹோட்டலில் . உனக்கு ஓகேவா?”

சரிம்மா! எப்போன்னு கேட்டு சொல்.!”. இந்த காலத்து பெண். 

****

சோழா ஹோட்டல்

மணியும் மாலாவும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டெலில். சந்திப்பு. மணி கொஞ்சம் லேட். 

வாங்க மாலா!. உள்ளே போய் காபி சாப்பிட்டுகிட்டே பேசுவோம்”. மன்னிப்பு கேட்க மறப்பது மணியின் வழக்கம். தான் உயர்ந்தவன் என்கிற எண்ணம் எப்பவும். 

உள்ளே போனார்கள்.

சே! என்ன வெயில் ! என்ன வெயில்! எப்படித்தான் நீங்களெல்லாம் சென்னையில் தாங்கறிங்களோ? என்னாலே முடியலேப்பா!. எப்பவும் நான் ஏ.சி கார் தான். கோரல்லா வெச்சிருக்கேன். ஆபீஸ்லே, வீட்டிலே 24 மணி நேரமும் ஏ.சி தான்.ஆரம்பித்தான் மணி.

சிரித்தாள் மாலா.

24 மணி நேர காபி ஷாப். நான் எப்போவும் இங்கே தான் வருவேன்!மணியின் அடுத்த அலட்டல். 

சிப்பந்தியை கூப்பிட்டான். “2 ப்ளாக் காபி”. சிப்பந்தி போன பிறகு அவள் பக்கம் திரும்பினான்.

அடடா! உங்களை கேக்கவேயில்லியே! என்ன சாப்பிடறீங்க? சண்ட்விச், ஐஸ் டீ, கூல் டிரிங்க்ஸ். இங்கே சாண்ட்விச் நல்லாயிருக்கும்” – மணி விசாரித்தான். 

கொஞ்ச நேரம்தானே இருக்கப் போறோம் ! காபியே போதுமே!” – மாலா.

நீங்க என்ன பண்றீங்க மாலா?”

நான் இப்போ ஒரு எச்.ஆர் மேனேஜர்- ஒரு எம் என் சி கம்பெனி லே…

அவள் முடிக்குமுன், “நான் ஒரு பெரிய கம்பெனியில் உதவி பொது மேலாளர். நான்தான் அங்கே எல்லாம். எல்லாத்துக்கும் மணி, மணி தான். நான் ஒரு மணி நேரம் இல்லன்னா, எங்க எம்.டிக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.

மாலா முறுவலித்தாள். அட !எங்க ஆபீசிலும் இதே கதிதான். எங்க வி.பி, மாலா மாலான்னு எப்பவும் என் பின்னாடியே!

மணி முகம் கொஞ்சம் மாறியது. உங்க வி.பிக்கு வயசென்ன இருக்கும்?”

ஒரு 35 இருக்கும். கல்யாணின்னு பேரு. ஏன் கேக்கறீங்க?”

மணி சுதாரித்துக்கொண்டான். சும்மாதான் கேட்டேன்”. வழிந்தான். 

மாலா சிரித்தாள். அப்புறம் நீங்க அமெரிக்காவிலே வேலையிலே இருந்தீங்களாமே?”

அதை ஏன் கேக்கறீங்க மாலா. ஏண்டாப்பா சென்னை வந்தோமேன்றிருக்கிறது. என்ன ஊர் இது? ஒரே கூட்டம். எது எடுத்தாலும் இங்கே பிரச்னை.. எதிலே பார் ஊழல். சே! ஆனால், அமெரிக்கா அப்படி இல்லே. எனக்கு கடற்கரை பக்கத்திலேயே வீடு. ரொம்ப நல்ல வேலை. தினமும் சாப்பாட்டுக்கே 30 டாலர் செலவு பண்ணுவேன். பெரிய கார் வெச்சிருந்தேன். இப்போ அப்பா அம்மாக்காக , சென்னை வந்துட்டேன்”.

அடடே! அப்படின்னா அம்மா கோண்டா நீங்க? ” – மாலா சிரித்தாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்லே!. இங்கேயும் பெரிய வேலைதான். என் கீழே ஒரு 20 பேர். அதே கம்பனியின் இந்திய கிளை. எப்ப வேணாலும் நான் திரும்பி அமெரிக்கா போகலாம். நீ வந்துடு, வந்துடுன்னு அங்கேயிருந்து ஒரே தொந்திரவு. அதை ஏன் கேக்கறீங்க! ..ரொம்ப பிடுங்கறாங்க.!

மாலா மெலிதாக சிரித்தாள். சரி அப்படின்னா கேக்கலே!

மணிக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. ஏன் சிரிக்கிறாள்? ஒரு வேளை நக்கலோ? கிண்டலோ? இருக்கும். இருக்கும் . எச்.ஆர் மேனேஜர் ஆயிற்றே! ஜாக்கிரதையாக இருக்கணும்’.

நேரம் ஆனது. மணியின் பேச்சு அவனையே சுற்றி சுற்றி வந்தது. மாலா மெதுவாக மணியை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அவனது தற்பெருமை அவளுக்கு வேடிக்கையாயிருந்தது.

மணி சொன்னான் அப்புறம், எனக்கு ஆபிசில் நிறைய பெண் நண்பிகள். ஆனாலும், ஒரு உண்மையை சொல்லட்டுமா ?”

என்ன?”- மாலா தலையை தூக்கி கேட்டாள்.

எனக்கு உங்களை பிடித்திருக்கிறது.

மாலா ஏன், ஆபிசில் வேற யாரையும் பிடிக்கலையா?”

மணி ஆமா. ஏனென்று தெரியலே! எல்லாரும் என்னை துரத்தி துரத்தி வந்து பேசுவாங்க. ஆனால் நான் யாருக்கும் மசியமாட்டேன்.

மாலாவின் இதழ்கோடியில் ஒரு முறுவல். பரவாயில்லையே!

மணியின் மனதில் ஒரு நெருடல். நக்கல் பன்றாளோ? ஏன் இவள் என்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல மாட்டேன்கிறாள். ரொம்ப திமிர் பிடிச்சவள் போல இருக்குமணியின் எண்ண ஓட்டம். 

இருவரிடையே கொஞ்சம் மௌனம். மணிக்கு அவளிடம் உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்க ஒரு தயக்கம். தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவளே பிடிச்சிருக்குன்னு சொல்லட்டுமே!

சரி. அப்போ நான் கிளம்பட்டுமா? வேறே எதுவும் தெரிஞ்சிக்கனுமா?” – மாலா கேட்டாள்.

இல்லை. நான் வேணா உங்களை வீட்டில் கொண்டு விடட்டுமா?” – மணி

வேண்டாம். கம்பெனி கார்லே வந்திருக்கேன். ரொம்ப தேங்க்ஸ்”- மாலா. அலை பேசியில், டிரைவரை வரச்சொன்னாள்.

மணி வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்க, வெள்ளை சீருடையில், ஒரு டிரைவர், பவ்யமாக கார் கதவை திறக்க, மாலா ஏறியவுடன், சீறி பறந்தது அந்த வெளி நாட்டு கார்.

****

மாலாவின் வீடு.

மாலா தன் வீட்டிற்கு வந்த போது மணி ஆறு. அப்போது மணியின் அப்பா அம்மா புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாசலில் மணியின் அப்பா தன் சுய புராணம் பாடிக்கொண்டிருந்தார். மேனேஜர் இன்னிக்கு வந்தவன். எனக்கே பாடம் சொல்லி கொடுத்தான். இவனுகளுக்கு ரெண்டு வார்த்தை இங்கிலிஷில் பேச தெரியாது. லீவ் லெட்டர் எழுத என் கிட்டே கத்துகிட்ட பசங்கள் என்னை ஏவினாங்க! போங்கடா போங்கன்னு வேலையை விட்டுட்டேன். யாருக்கு வேணும் இந்த வேலை?. நன்னிலத்திலே 10 ஏகர் நிலம் இருக்கு. சொந்த வீடு இருக்கு. பிச்சைக்கார சம்பளம் தேவையேயில்லை! என்ன சொல்றீங்க சம்பந்தி?”

மாலாவின் அப்பா ஒரு தாசில்தார். ஆனாலும் என்ன சொல்ல முடியும்? பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி நீங்க சொல்றது ரொம்ப சரி”.. இம்சை தாங்கவில்லை. இவங்க போனால் போதுமென்றிருந்தது

உள்ளே நுழைந்த மாலாவை பார்த்த பார்வையில், மணியின் பெற்றோர் முகத்தில் திருப்தி தெரிந்தது. இரண்டு நிமிடம் குசலம் விசாரித்து விட்டு கிளம்பி விட்டனர். 

அப்பாடா! ஒரு வழியா கிளம்பினாங்க.அலுத்து கொண்டார் அப்பா. 

ஏம்பா! கொஞ்சம் வாட்டமாக இருக்கீங்க! என்ன ஆச்சு?”

அவளது அப்பா அம்மா முகத்தில் அவ்வளவு திருப்தி தெரியவில்லை. கொஞ்சம் சோர்ந்து போய் காணப்பட்டனர். 

இந்த இடம் சரிப்பட்டு வரும்னு தோணலை மாலா.” – அம்மா 

எனக்கு கூட அப்படித்தான் தோணறது மாலா! வேண்டாமென்று சொல்லிடலாம்னு படறது”- அப்பா

ஏம்பா?”

பையனோட அப்பா ரொம்ப அலட்டிக்கிறார். அவரோட பேச்சும், கர்வமும் அப்பப்பா! . எல்லாத்திலேயும், தாங்க மட்டும் தான் கெட்டிகாரங்க மாதிரி பேசறார். இத்தனைக்கும் அவர் ஒரு ரிடயர்ட் குமாஸ்தா. நான் தாசில்தார். கொன்னுட்டார். முடியலேம்மா.. ”- அப்பா .

பையனோட அம்மா அதுக்குமேலே! உனக்கு எங்கே வேலை? என்ன சம்பளம்? பிடுங்கி எடுத்துவிட்டாள்”- அம்மா தன் பங்குக்கு குறை பாடினாள்.

அப்பா இடைமறித்தார். அது போகட்டும். எங்களை விடும்மா ! நீ பேசினியா? உனக்கு பிடிச்சிருக்கா?”-.

பேசினேம்பா.! எனக்கு அவரை பிடிச்சிருக்குப்பா. எனக்கு சம்மதம்”- மாலா

அப்பா முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி. அடி சக்கை!. உனக்கு பிடித்தால் போதுமே!. வேறென்ன வேண்டும்? உனக்கு தெரியாதா மாமனார் மாமியாரை சமாளிக்க?”

அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் தயக்கம். மாப்பிள்ளை எப்படிம்மா?”

அவர் கொஞ்சம் கர்வி தான். சுய தம்பட்டம் ரொம்பவே அடிச்சிக்கிறார்”.- மாலா 

அப்போ எப்படி? நீ ரொம்ப அமைதியான பொண்ணாச்சே?உன்னாலே தாங்க முடியுமா?” – அம்மாவின் குரலில் கவலை இழையோடியது.

மங்களம், நம்ப பொண்ணு படித்தவள். அவளுக்கு தெரியாதா? நீ ஏன் கவலைப்படறே?”

மாலா நிதானமாக சொன்னாள் அம்மா! நீ நினைக்கறா மாதிரி ஆணவமா இருக்கறது அப்படி ஒன்னும் ரொம்ப கெட்டது இல்லே. சில சமயம் கர்வம் நல்லது கூட. கர்வம், சுய மரியாதையின் ஒரு வகை வெளிப்பாடுன்னே சொல்லலாம். தலை குனிய மறுப்பது தப்பா? “.

பாத்தியா! என் பொண்ணு எவ்வளவு தெரிந்து வைத்திருக்கா?”

மாலா மேலும் சொன்னாள் “கர்விங்க இன்னொருத்தர் கிட்டே கூழை கும்பிடு போட மாட்டாங்க. அவங்க செயலுக்கு அவங்களே பொறுப்பெடுத்துப்பாங்க. தன்னை தானே காப்பாத்திப்பாங்க. யாரையும் சார்ந்து இருக்க அவங்களுக்கு பிடிக்காது. அதனாலே அது ஒண்ணும் பெரிய குறை இல்லைம்மா !

அம்மா வாயடைத்து நின்றாள்.

அம்மா!. மணியைப் பார்த்தால் நல்லவராக தெரியறது. கொஞ்சம் வெகுளி. ஓட்டை வாய். அவருக்ககு அடிக்கடி ஐஸ் வைச்சி நான் சமாளிச்சிப்பேன். கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிடுவேன். இது சின்ன குறை தான். யார் கிட்டே குறை இல்லை? தானாக சரியாயிடும். நீ கவலைப்படாதே!

ரொம்ப சரி. அப்போ நாளைக்கே தரகரிடம் நம்ப சைடு ஓகேன்னு சொல்லிடறேன். இறைவன் அருள் இருந்தால், முடியட்டுமே?” அப்பா திருப்தியாக அந்த இடத்தை விட்டகன்றார். 

****

மணியின் வீடு:

மணியின் அப்பா அம்மாவுக்கு மாலாவின் வீட்டு சம்பந்தம் ரொம்ப திருப்தி. பெரிய இடத்து பெண். ஒரே பெண். அழகாயிருக்கிறாள் . படித்திருக்கிறாள். நல்ல வேலை. மணி அதிருஷ்டக்காரன் தான். மணி வரட்டும், அவனை கேட்டுக்கொண்டு நாளைக்கே ஓகே சொல்ல வேண்டியதுதான். 

மணி வீட்டிற்கு வரும் போது மணி ஒன்பது. 

வாடா வாடா மணி, உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கோம். மாலாவை பிடிச்சிருக்கா?” அப்பா 

மணி நேரிடையாக பதில் சொல்லாமல், “உங்களுக்கு பிடிச்சிருக்கா?” – வினவினான். அவன் குரலில் கொஞ்சம் சுரத்து குறைந்திருந்தது.

எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மணி.! பெண் வீட்டிலே எல்லாரும் தங்கமா இருக்காங்க. உன்னை தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க.அப்பா ரொம்ப ஆர்வத்தோடு.

நிறைய சீர் பண்ணுவாங்க போலிருக்கு. ரொம்ப மரியாதையாக நடந்துகிறாங்க” – அம்மா திருப்தியாக. 

அப்பா. இந்த பெண் வேண்டாம்னு சொல்லிடுங்கப்பா! எனக்கு பிடிக்கலை.குண்டை தூக்கி போட்டான் மணி.

ஏண்டா! ஏன் பிடிக்கலே? ”

பொண்ணு திமிரா இருக்காப்பா! படிச்ச கர்வம் நல்லா தெரியுது. நக்கலா சிரிக்கிறா. நிறைய சம்பாதிக்கிரோமென்ற அர்ரகன்ஸ். அப்புறம் என்னை பிடிச்சிருக்குன்னே அவள் ஒரு வார்த்தை கூட சொல்லலை. ரொம்ப பந்தா பண்றா. சரிபட்டு வராதுப்பா. அவங்க என்னை வேண்டாமென்று சொல்றதுக்கு முன்னாடி, பேசாம நாமே வேண்டாமென்று சொல்லிடலாம்ப்பா. வேறே பொண்ணு பாக்கலாம். என் படிப்புக்கும் வேலைக்கும் ஆயிரம் பேர் கிடைப்பாங்க.!

மணியின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. பேச முடியவில்லை. நல்ல வரன் தட்டி போகிறதே!

மாலாவின் வீடு:

மணியின் அப்பா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். 

அப்படியா! சரி. பரவாயில்லை. யார் யாருக்கு எங்கே முடிச்சு போட்டிருக்கோ? நம்ம கையிலே என்ன இருக்கு?” மாலாவின் அப்பா தொலைபேசியை வைத்தார். முகம் தொய்ந்து இருந்தது.

என்னப்பா! யார் போனிலே?” கேட்டுக்கொண்டே மாலா வந்தாள்.

தரகர்தாம்மா.. இழுத்தார்.

என்னப்பா! மணி வீட்டிலே என்னை வேணாம்னு சொல்லிட்டாங்களா?”

ஆமாம்மா! சரி விடு. அவங்களுக்கு கொடுப்பினை அவ்வளவுதான். பாக்கப்போனா, இந்த வரன் தட்டிபோனது நல்லதுன்னே தோணறது

இல்லேப்பா!. தவறு என் பக்கம் தான்.” – மாலா இடைமறித்தாள்.

அப்பா விழித்தார். என்னம்மா சொல்றே?”

நான் ஒண்ணு செய்யறேன். மணியோட போனிலே பேசறேன்.

அப்பா பதில் பேச வாயெடுக்குமுன் மாலா தொடர்ந்தாள். அப்பா. இந்த திருமணம் நடக்கும் பாருங்களேன். அவரை பார்த்து நான் கொஞ்சம் முகஸ்துதி பண்ணா எல்லாம் சரியாயிடும் .உங்களை போல் யாரும் இல்லேன்னு சொல்றேன்.

அப்பாவுக்கு புரியவில்லை. இந்த பெண் என்ன சொல்கிறாள் ? அம்மா கேட்டாள் என்னடி சொல்றே?”

அம்மா !, நான் அப்பவே நினைச்சேன். நான் அவரை விட உசத்தியோன்னு மணி நினைச்சு பயந்திருப்பார். நான் கொஞ்சம் யதார்த்தமாக நடந்து கொண்டதை தவறாக புரிந்து கொண்டு , என்னை கர்வி என நினைத்திருப்பார். நான் அந்த பயத்தை போக்கறேன். எனக்கும் அவரை பிடிச்சிருக்குன்னுசொல்றேன். அவர் கட்டாயம் சம்மதிப்பார் பார் ! மிக நம்பிக்கையாக சொன்னாள் மாலா.

மாலாவின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. பேச முடியவில்லை. 

மாலா உறுதியாக இருந்தாள். மணியுடன் வாழ்க்கை நடத்த. அவனை புரிந்து கொண்டிருக்கிறாள். அது போதுமே! 

மாலா இந்த காலத்து பெண். அவள் நினைத்ததை முடிப்பாள். 

மாலா, மனதிற்கு பிடித்த மணியை மணமுடிப்பாள். 

-S.முரளிதரன்

Likes(5)Dislikes(2)
Share
Share
Share