May 142016
 

tn-election-date-04-1457096300

இலவசமில்லா தமிழகம் என்ற பதிவை நம் B+ இதழின் சென்ற டிசம்பர் மாதம் பதிவிட்டிருந்தோம். அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல் நமது குழு இரண்டு நிவாரணப் பணிகளை வெள்ளத்திற்குப் பின் செய்திருந்தது.

ஆனால் அந்த மாத இதழில் பதிவிடாத ஒரு முக்கியமான நிகழ்வை இந்த இதழில் பதிவிடுகிறோம். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக இல்லை.

வெள்ள நிவாரணத்தின் போது, அன்று நம்மிடம் 200 குடும்பங்களுக்கு மட்டுமே  தேவைப்படும் பொருட்கள் இருந்தது. அதனால், சென்னையில் ஏதேனும் ஒரு பாதிக்கப்பட்ட பகுதியில், மிகவும் சேதமடைந்த 200 வீடுகளை தேர்வு செய்து, அந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணப் பொருள்கள் தரலாம் என முடிவெடுத்தோம்.

காலையில் அத்தகைய வீடுகளை கண்டுபிடித்து டோக்கன்கள் வழங்கலாம், மாலையில் டோக்கன் எடுத்து வருபவர்களுக்கு பொருள்கள் தரலாம் எனவும் திட்டமிட்டோம்.

சுமார் ஆயிரம் வீடுகள் இருந்த அந்தப் பகுதியில் தெருத்தெருவாக சுற்றி பாதிப்பை அலசி பார்க்கையில், சில வீடுகள் நல்ல நிலைமையில் இருக்கவே, அவர்களுக்கு டோக்கன் தராமல் அடுத்த விடுகளுக்குச் சென்றோம். ஆனால் அவ்வாறு டோக்கன் பெற இயலாத சிலர், நம்மை பின்தொடர்ந்தும் வாக்குவாதம் செய்தும் டோக்கனை வாங்கிச் சென்றனர்.

அவ்வாறே ஒரு இளைஞனும் நம்மை பின் தொடர்ந்து வந்தான். தன் வீட்டருகில் ஏன் வரவில்லை எனவும், தனக்கு ஏன் டோக்கன் தரவில்லை எனவும் வாக்குவாதம் செய்தான். “தம்பி, எங்களிடம் மொத்தமே 200 டோக்கன்கள் தான் இருக்கின்றன, இந்தப் பகுதியிலோ ஆயிரம் வீடுகள் இருக்கின்றன, எங்களால் எல்லா வீட்டிற்கும் தர இயலாத சூழ்நிலை. மேலும் நீ குறிப்பிட்ட தெருவில் சேதாரம் அத்தனை இல்லை” என்று முடிந்தளவிற்கு பொறுமையாக எடுத்துக் கூறினோம்.

இளைஞனோ விடுவதாக இல்லை. தந்தாலே போயிற்று என தொடர் வாக்குவாதம் செய்தான். நேரம் விரயமாவதால், “சரி தம்பி, பார்த்தால் படித்தவனாக இருக்கிறாய், உன் வீடு இருக்கும் தெருவில், எந்த வீட்டினருக்கு சேதாரம் அதிகம் உள்ளதோ, எங்கு முதியவர்கள், இயலாதவர்கள் இருக்கின்றனரோ, அந்த வீட்டிற்கு இதை கொடுத்துவிடு” என்று ஒரு டோக்கனை கொடுத்தோம்.

திட்டமிட்டபடியே, அன்று மாலை விநியோகம் முடிந்தது. மூன்று நாட்கள் கழித்து, அந்த இளைஞனை யதேச்சையாக வேறொரு பகுதியில், காலை வேளையில், ஒரு தேநீர் கடையில் சந்திக்க நேர்ந்தது. கூலிங்கிளாஸ், ஜெர்கின் எல்லாம் அணிந்துக்கொண்டு, தன் நண்பனுடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய trolley bag கையில் வைத்திருந்தான்.

என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் இருக்கவே, “என்னப்பா, எப்படி இருக்கிறாய், என்னை நியாபகம் இருக்கிறதா?” என அவனிடம் சென்று விசாரித்தேன். சட்டென்று கையில் வைத்திருந்த சிகரெட்டை பின்னால் மறைத்துக்கொண்டு  “எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே” என்று இழுக்கவே,  என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.

பதிலுக்கு அவனும், தன் பெயர் விவேக் என்றும், ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அறிமுகப் படுத்திக்கொண்டு, தில்லிக்கு தனது நிறுவனம் வேலை விஷயமாக அனுப்புவதாகவும் தெரிவித்தான். இரண்டு நிமிடங்கள் அவனிடம் பேச்சு தொடர்ந்தது.

“அன்று நிவாரணப் பொருள்கள் வாங்கும் இடத்தில் உன்னைப் பார்க்க முடியவில்லையே” என்று நான் கேட்க, தன் அம்மா வந்து பொருள்கள் வாங்கிச் சென்றதாக தெரிவித்தான். இருவரும் எங்களது கைப்பேசியின் எண்களை மாற்றிக்கொண்டு விடைப்பெற்றோம்.

பேசும் போது, என்னை நேருக்கு நேர் சரியாக பார்க்காது, ஏதோ குற்ற உணர்வில் அவன் நெளிந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில், அவன் கொடுத்த கைப்பேசி எண்ணும் வேறொருவரின் எண் என்று தெரிய வந்தது.

சில தினங்களில், மேலும் ஆச்சரியமூட்டும் விதத்தில்,  விவேக் போன்றே, அந்தப் பகுதியை சேர்ந்த வேறு சிலரும், நல்ல நிலையில் இருந்தும் இந்த இலவசத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டது தெரிய வந்தது.

நிவாரணம் நடந்த அன்று நடந்த இன்னொரு சம்பவம். கிட்டத்தட்ட அனைவருக்கும் பொருள்கள் வழங்கி முடித்திருந்த நேரம். ஒரு வயதான பாட்டி தள்ளாடிக் கொண்டே எங்களருகில் வந்தார். மிகவும் ஏழ்மையான தோற்றம். தான் எந்தவித ஆதரவும் இல்லாதவர் என தெரிவித்துக்கொண்டார்.

தன்னிடம் டோக்கன் இல்லை என்றும், தனக்கும் பொருள்கள் தருமாறும் கேட்டுக்கொண்டார். பாட்டியை பார்க்க பாவமாக இருக்கவே, அவருக்கும் நாம் பொருள்கள் தர, சற்றும் எதிர்பாராவிதமாக தான் அணிந்திருந்த பழைய செருப்பைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, தன் கைகளை தலை மீது தூக்கி நம்மை வணங்கினார் அந்த பாட்டி. நம்மை ஆசிர்வதித்தும் சென்றார்.

சரி, தேர்தல் வரவிருக்கும் சமயத்தில், இந்த சம்பவங்கள் குறித்து நாம் பேச காரணம் என்ன? இருக்கிறது. அந்தப் பாட்டி போல், எத்தனையோ கோடிப்பேர் நம் நாட்டில் இருக்க, விவேக் போன்ற கூட்டமும் இல்லாமல் இல்லை. பாட்டி போன்றவர்களுக்குச் செல்ல வேண்டிய சலுகைகளை விவேக் போன்ற எத்தனை மனிதர்கள் தட்டிப் பறித்துக்கொண்டு இருக்கின்றனர்?

பாட்டி போன்றோர்கள் வாங்கியது, உண்மையான நிவாரணம் என்றால், விவேக் போன்றோர் ஏமாற்றி அடித்து பிடித்து வாங்கியதற்கு பெயர் என்ன? பிச்சைதானே?

தன் உடல் மற்றும் மனம் வளமாக இருந்தும், உழைக்காமல் அடுத்த மனிதனை ஏமாற்றியோ, இலவசமாகவோ ஒரு பொருளை பெற வேண்டும் என்ற மனநிலை, இத்தகைய மனிதர்களுக்கு எவ்வாறு வருகிறது?

சுயநலத்துடன், நியாயமற்ற முறையில் அடுத்தவர்கள் பொருள்களுக்கு பேராசைப்படும் இத்தகைய மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதை சமூகத்தில் காண முடிகிறது.

வருத்தப்படாத வாலிப சங்கங்களுமாய், மாரிகளுமாய், ஊதாரித்தனமாக இருந்து வாழ்க்கை நடத்துவதை பலர் வெட்கமே இல்லாமல் செய்வதும் தெரிகிறது. திரைப்படங்கள் சிலவும் அவற்றை ஹீரோக்களின் குணநலன்களாய் சித்தரித்து இதுபோல் இருப்பது தவறில்லை என்ற என்னத்தை விதைக்கின்றன.

இத்தகைய மக்கள் மனநிலையும், விவரங்களும் நமக்கே தெரிகையில், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கும்?

அத்தகைய மனிதர்கள் நம்முள் வேகமாக பரவும்போதும், ஒரு சமுகத்தின் பெரும்பான்மை மக்களின் விருப்பம் இப்படி தான் இருக்கிறது என்ற போதும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் எப்படி இருக்கும்? பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தானே இருக்கும்?

எங்களுக்கு இலவசம் என்ற பேச்சே வேண்டாம், உழைக்கவும் வேலை வாய்ப்பை பெருக்கவும், வளர்ச்சித் திட்டத்தை தாருங்கள் என எப்போது மக்கள் விழிப்புற்று,  விரும்பி, கேட்க ஆரம்பிக்கின்றனரோ, அப்போது தான் அரசியல் கட்சிகளின் எண்ண ஓட்டமும் மாறும்.

ஆனால் இந்த கருத்துக்களை ஒத்துக்கொள்ளாமல் சிலர், அரசியல்வாதிகள் இலவசங்களை அள்ளி வீசியதால் தான், மக்களின் மனநிலை இதுபோல் மாறியது என்று விவாதிப்பது உண்டு.

நம் எண்ணங்களை மேம்படுத்தாமல், அந்த கட்சியிடம் தொலைநோக்கு பார்வையில்லை, இந்த கட்சியிடம் வளர்ச்சிப்பாதை இல்லை என்றெல்லாம் குறைக்கூறி சுட்டிக்காட்டுவது எவ்வாறு சரியாகும்?

முதலில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்ல நாம் மனதளவில் தயாராகிவிட்டோமா, இல்லை இன்னும் உழைக்க தயாராகாமல், இலவசங்களை எதிர்நோக்கி உள்ளோமா என எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு சிங்கப்பூர் போன்றோ, துபாய் போன்றோ ஆகவேண்டுமானால், முதலில் நமது சிந்தனைகள் அதற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும். அதுதான் ஆட்சியாளர்களிடமும் மாற்றத்தை கொண்டு வரும்.

அதை விடுத்து, சுயநல சிந்தனையுடன், தொலைக்காட்சி கிடைக்கிறது, ஸ்கூட்டர் கிடைக்கிறது என்று இலவசங்களை எதிர்பார்க்கிறோம், அதற்கேற்றவாறு தேர்தலில் வாக்குகளைப் பதிவிடுகிறோம்.

இந்த இலவசங்களால், இப்போதே தமிழகத்தின் மீது சுமார் இரண்டு லட்சம் கோடி கடன் உள்ளது, நாம் அறிந்ததே. அதாவது தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் முப்பாதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது.

உழைப்பின் அருமையை மறந்து, குடியில் மூழ்கி உல்லாசத்தில் பொழுதை கழிக்கும், இந்த சமூகம் இதே விதத்தில் தொடர்கையில், பிச்சைக்கார அடையாளத்திலிருந்து, கொத்தடிமைகளாக மாறும் அபாயத்தை நோக்கியுள்ளது.

நமது தலைமுறை நல்ல முறையில் மாற வேண்டுமானால், அது நமது அரசியலவாதிகளின் கையில் இல்லை, நாம் வைக்கப் போகும் மையில் உள்ளது.

உழைப்பும் அதன் மூலம் வரும் வளமும் பெருமையும் தான் எங்களுக்கு வேண்டும், எந்த இலவசமும், அடுத்தவரின் பொருளும் வேண்டாம் என நம்மில் பெரும்பான்மையினர் உணரத் துவங்கும் அந்த நாள், தமிழகம் வளர்ச்சியில் சிங்கப்பூர் போன்ற பல நாடுகளை தாண்டி பயணிக்கத் தொடங்கும்.

அதனால், இலவசம் வேண்டாம் என்று முதலில் நாம் மாறத் தொடங்குவோம். மக்களின் மனநிலை மாறினால், அரசியலவாதிகளின் மனநிலையும் தானாகவே மாறும்.

மக்கள் எவ்வழியோ, மன்னனும் அதே வழி என்பது தான் இன்றைய சூழ்நிலை. எதா  ப்ரஜா, ததா ராஜா என்பதை உணருவோம்!

சுயநலமில்லாத, உழைத்து வாழும் சிந்தனை நம்மில் வரட்டும், தமிழகம் தலை நிமிரட்டும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(6)Dislikes(0)
Share
May 142016
 

Untitled (640x334)

தென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள்? “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்றும் திரு.சுதீப் சபத் அவர்கள்.

2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் விற்று வருகிறார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டே, சுயத் தொழில் தொடங்கும் சிந்தனை ஆழமாக பரவ, தங்களது கண்டுபிடிப்புகளின் செலவிற்காகவும், அனுபவதிற்காகவும் மாலை நான்கு மணிக்கு மேல் இருவரும் சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளது ஒரு ஆச்சரியம்.

சென்னை SRM  கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பு முடித்து வெளிவந்தவுடன், தங்களுக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை நிராகரித்து, தங்கள் சுய தொழில் உறுதியாக நின்று வென்றும் உள்ளனர்.

பெங்களூரில் அலுவலகம் அமைத்து பல மெஷின்கள் ஆர்டர்கள் எடுத்து, நம் நாட்டில் விற்பதோடு மட்டுமன்றி, சுமார் 16 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் இந்த இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நம் B+ இதழுக்காக பேட்டி எடுத்தோம். இனி அவர்கள் பேட்டி..

பொறியியல் முடித்தப்பின் ஏன் வேலைக்குச் செல்வதை தேர்ந்தெடுக்காமல் சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் ஏன் வந்தது?

பொறியியல் படிக்கும்போதே, சுய தொழில் தான் எங்களது பாதை என்பதை தீர்மானித்து விட்டோம். பொறியியல் பயின்ற எங்களது உறவினர்கள் பலரும் தனியார் அலுவலகங்களில் தினமும் பட்ட கஷ்டங்களை நாங்கள் கண்டதும் ஒரு முக்கிய காரணம். அதனால் முழுநேரம் இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்கும் எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே வரவில்லை. எனவே சொந்த நிறுவனத்தை துவக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

இந்த மெஷின் தயாரிக்கும் திட்டம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது?

தில்லியில் ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து தோசை சாப்பிட வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு தோசைக்கு அங்கு 110 ரூபாய் பில் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தோசை 25 முதல் 50 ரூபாய் என விற்கப்படும் போது, தில்லியில் மட்டும் ஏன் இந்த விலை என யோசித்தேன்.

மெஷின்களை வைத்து செய்யப்படும் உணவான பீட்சா, பர்கர் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட, மனிதர்களால் செய்யப்படும் தோசை போன்ற உணவுகளின் விலை அதிகம் இருப்பதற்கு காரணம், அவற்றை செய்யும்   (பயிற்சி பெறப்பட்ட) பணியாளர்களுக்கு தரும் ஊதியம் என்பதை உணர்ந்தோம். இதற்கென மெஷின்கள் இருந்தால், விலை குறையும் என எண்ணியதன் விளைவு தான் இந்தத் திட்டம்.

புது முயற்சி ஆயிற்றே, தோற்றுவிடுவோம் என்ற பயம் எப்போதாவது இருந்ததா? அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள்? குடும்பத்தினர் ஆதரவு எவ்வாறு இருந்தது?

குடும்பத்தினர் ஆதரவு முழு அளவில் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அவர்கள் சிறு அளவில் நிதியும் தொடக்கத்தில் தந்தனர்.

தோல்வி பயம் எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. புது முயற்சியோ, வெற்றிப் பெற்ற தொழிலோ, அனைத்திலுமே தோல்விகள் இருந்துள்ளன. தோல்வியை மட்டுமே யோசித்தால் வெற்றி பெற இயலாது.

நீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து?

சவால்கள் ஆரம்பகட்டமான டிசைன் நிலையிலேயே தொடங்கியது எனலாம். எங்களுக்கு டிசைன் அனுபவம் இல்லாததால் அதற்கேற்ற சவால்களை பெருமளவில் சந்தித்தோம். பின்னர் அந்த டிசைனை வேலை செய்யும் மெஷினாக மாற்றுவது மேலும் கடினமாக இருந்தது.

அடுத்து, தோசை மாவை மெஷினிற்குள் பரப்புவதற்கு, மிக மெதுவாக சுற்றக் கூடிய ஒரு மோட்டார் தேவைப்பட்டது, அனால் எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நிமிடத்திற்கு 1400 முறை சுழலும் மோட்டார் மட்டுமே. இந்த பிரச்சினையை சமாளிக்க பல பேராசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டோம். கடைசியில் கல்லூரிக்குக் கூட செல்லாத சென்னையில் ஒரு மெக்கானிக் எங்களுக்கு அதற்கு முழு பதிலையும் சொல்லிக்கொடுத்தார்.

முக்கியமாக 150 கிலோ எடையுடன் இருந்த மெஷினை 60 கிலோவாக மாற்ற நினைத்தோம். அப்படி இருந்தால் தான் ஒரு ஆட்டோவில் அந்த மெஷினை ஏற்ற முடியும்.

இது போல் பல சோதனைகளை கடந்து, முதல் ப்ரோடோடைப் (மாதிரி) மெஷினை தயாரித்தும், அதலிருந்து சரியான முதல் தோசை வரவே எட்டு மாதம் ஆகியது.

இத்தனை பிரச்சினையால், எப்போதாவது ஏன் சுய தொழிலிற்கு வந்தோம், எங்காவது வேலைக்கே சென்றிருக்கலாம் எனத் தோன்றியதா? அவ்வாறு உள்ள மனநிலையை எவ்வாறு கையாண்டீர்கள்?

அதுபோல் சிந்தனை பல முறை வந்தது. OMR ரோட்டில் உள்ள IT நிறுவனங்களைப் பார்க்கும் போதும், ஏதாவது பெரிய நிறுவனங்களை பார்க்கும் போதும், அங்குள்ள வசதிகளைக் காணும்போதும் தோன்றும். அவைகளைப் பார்த்தப்பின்,  நம்மிடம் ஒரு நல்ல அலுவலகம் கூட இல்லையே, உட்கார கூட சரியான இடமில்லையே, அருந்துவதற்கு கூட நல்ல தண்ணீர் இல்லையே என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு.

ஆனாலும் யாரேனும் சவால் என அளித்தால் அதை எதிர்கொள்ள விரும்புவோம். நாம் எப்படி தோல்வி அடைவது? நாம் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இத்தனை சவாலையும் தாண்டி வரவழைத்தது.

உங்கள் எண்ணத்தில் தொழில் தொடங்குவதற்கு சரியான வயது என எதைக் கூறுவீர்கள்?

21 வயது என்று தான் சொல்லுவேன். எவ்வளவு சிறிய வயதில் தொடங்குகின்றீர்களோ, அத்தனை நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சிறு வயதில் நமக்கு பொறுப்புகள் மிகக் குறைவாக இருக்கும், குடும்பம் பிள்ளைகள் என கூடுதல் பொறுப்புகள் இருக்காது.

உங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக எதைக் கூறுவீர்கள்?

பல விஷயங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக விடாமுயற்சியை கூறுவோம். எப்போதுமே தொடங்கிய ஒரு செயலை, எத்தனை சவால்கள் வந்தாலும்  விட்டுவிடாதீர்கள்.

தொழில் அனுபவத்தில் ஏதேனும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா?

எண்ணிலடங்கா சம்பவங்கள் உள்ளன. சுய தொழிலில் தினமும் ஏதேனும் அனுபவம் கிடைத்துக்கொண்டே தானிருக்கும்.

ஒருமுறை கல்லூரி நாட்களில் எங்களது மெஷின் டிசைனை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க ஒரு மூத்த விஞ்ஞானியை அழைத்து வந்தோம். அவர் ஒப்புதல் அளித்தால் அரசிடமிருந்து எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவருக்கோ அந்த மெஷின் பிடிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகவும் அவர் இல்லை.

ஆனால் நாங்கள் இப்போது பெற்றுள்ள வெற்றியைப் பார்த்து பிரம்மித்த அவர், எங்களை வெகுவாக பாராட்டி அங்கீகாரித்தார். நமது முயற்சி பெற்றுள்ள வெற்றியைக் கண்டு நம்மைப் போன்றே பலர் முயற்சிப்பார்கள் என்றும் கூறிச் சென்றார்.

அடுத்த இலக்கு என்ன?

தோசை மெஷின் போலவே, சமோசா செய்யும் மெஷின், கறி செய்யும் மெஷின் என அடுத்தடுத்து திட்டம் வைத்துள்ளோம். இரண்டு வருடங்களில் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டவும் எண்ணியுள்ளோம்.

உங்களைப் போன்றே சுயத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை?

யோசித்தது போதும், உடனடியாக வேலை செய்யத் தொடங்குங்கள். அடுத்த மாதம் செய்யலாம், அடுத்த வருடம் செய்யலாம் என எந்த திட்டத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.

Likes(8)Dislikes(0)
Share
May 142016
 

Latur-drought-2016

நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.

அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.

நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..

இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.

அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.

எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.

வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.

என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.

சாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.

நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.

அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.

செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட  நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.

பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.

இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.

மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.

வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.

திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.

ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.

கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.

ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.

முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..

பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.

அதைத்தான்  அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.

என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.

நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.

கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.

அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.

ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது. அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.

நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.

அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.

திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன். மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.

அவர்கள் அதிக அளவில் ஒரு துளி  நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.

டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.

அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.

இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.

இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர். மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.

கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.

இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று டிக்கெட் செக்கர் சொன்னார்.

அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.

ரயில் தன் பயணத்தை துவக்கியது.

ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..

எங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.

ஒரு லிட்டர் பீர் தயாரிக்க சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.

ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.

ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.

கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –

இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.

சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால்  நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.

அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.

இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.

நன்றி

பஞ்சாட்சரம்

(மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு)

Likes(1)Dislikes(0)
Share
Share
Share