Apr 142016
 

12208753_965600023476059_686787513963878719_n

ஐடி நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்தை துறந்து விட்டு விவசாயம் பக்கம் திரும்பியவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகைய வேலையை விட்டுவிட்டு முழுநேர சமுதாயப் பணி பக்கம் திரும்பியவரைப் பற்றி இந்த மாதம் நமது B+ இதழின் சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம்.

தனது மனைவியின் பெயரை தனது பெயருக்கு பின்னால் சேர்த்ததே இவரின் தனித்துவத்தை காட்டுகிறது. டீம் எவரெஸ்ட்டை (TEAM EVEREST) என்ற சமுதாயப் பணிகள் நிறுவனத்தை தொடங்கி, சுமார் 9500 volunteer (தன்னார்வ நபர்களின்) மூலம் பல குழந்தைகளின் தலை எழுத்தை மாற்றி எழுதி கொண்டிருக்கிறார் திரு.கார்த்தி வித்யா. இவரின் பேட்டியிலிருந்து..

வணக்கம், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

வணக்கம், என் பெயர் கார்த்தி வித்யா. சொந்த ஊரான ஆரணியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை சென்னையில் படித்தேன். சேலம் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தவுடன், 2006 ஆம் ஆண்டு, சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணி கிடைத்தது. வேலையில் இருந்துக்கொண்டே டீம் எவரெஸ்ட்டை (TEAM EVEREST) என்ற சமுதாயப் பணிகள் நிறுவனத்தை தொடங்கினேன். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல், ஐடி நிறுவனத்தின் வேலையை விட்டு முழு நேர சமுதாயப் பணிகளை செய்து வருகிறேன்.

சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு வந்தது?

முதல் காரணம் பெற்றோர்கள். அப்பா பல சமுதாய சேவைகளை பல அமைப்புகள் மூலம் செய்தவர். அம்மா கிராமப்புற அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றதால், அவர்களது அறிவுரைகளும் காரணமாயிருந்தது. அடுத்தது பள்ளிகளில் கிடைத்த அனுபவம். எனது கிராமத்து பள்ளியில் ஏழை மானவர்களையும், சென்னையில் வசதியான மானவர்களின் நிலையையும் காண முடிந்தது. ஏன் சமுதாயத்தில் இத்தனை ஏற்ற தாழ்வுகள் உள்ளது என யோசிக்க தொடங்கியதன் விளைவு தான் இந்த volunteering (தன்னார்வ தொண்டு) என்னுள் வர ஆரம்பித்தது.

ஐடி நிறுவனத்தில் இருந்தும் எப்படி சமுதாயப் பணிகளையும் சமாளித்தீர்கள்?

2006 ஆம் ஆண்டு, பணியில் சேர்ந்தபோது, முதல் மாத சம்பளத்தில் நானும் எனது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து, எங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை சேகரித்தோம். அதை வைத்து, வார இறுதி நாட்களில் எங்களது கிராமத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தோம். ஒவ்வொரு வாரமும் இவ்வாறு செய்ய ஆரம்பித்தோம். வார இறுதி நாட்களை இந்த பணிகளுக்காக உபயோகப்படுத்தினோம்.

ஆரம்ப நாட்கள் எவ்வாறு இருந்தது? எந்தெந்த சேவைப் பணிகளை செய்தீர்கள்?

முதலில் அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்தோம். ஆங்கிலம், கணினி போன்ற பாடங்களை சொல்லித்தந்தோம். பின்னர் பொருளாதாரத்தில் கஷ்ட்டப்படும் மாணவர்களுக்கு, ஸ்காலர்ஷிப் தர ஆரம்பித்தோம். சிறிது சிறிதாக தான் வளர்ந்தோம்.

Volunteering செய்ய வந்த நண்பர்கள் அவர்களது நண்பர்களை சமூக தளங்கள் மூலம் தொடர்புக்கொண்டு, எங்கள் நிறுவனத்திற்கு அழைத்து வர ஆரம்பித்தனர். அவ்வாறே முதல் வருட முடிவில் 1000 volunteers வரை அடைந்தது TEAM EVEREST.

இவ்வாறு சிறிதாக ஆரம்பித்த பயணம் தான் இன்று, 9 வருடத்தில் 9500 volunteers மூலம் வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறோம். முதலில் மூன்று பேர் வைத்து ஆரம்பித்த எங்கள் அறக்கட்டளை நிறுவனம், இன்று 25 பேர் கொண்ட முக்கிய குழுவாக இருக்கிறது.  இந்த முக்கிய குழு மூலம் என்ன வேலை செய்ய வேண்டும், மாணவர்களுக்கு தேவைகள் என்ன என்றெல்லாம் விவாதித்து முடிவெடுப்போம்.

9500 volunteers எங்கெல்லாம் பணிப்புரிகின்றனர்? அவர்கள் அத்தனைப் பேரையும் எவ்வாறு ஒருமித்து வைத்திருப்பீர்கள்?

இப்போது சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், பெங்களூர், பூனே, கோல்கத்தா என ஆறு நகரங்களில் பணியாற்றுகிறது எங்களது குழு.

Volunteer engagement ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது தொழில்நுட்பம் இந்த சவாலுக்கு பெரும் துணையாக உள்ளது. எங்கள் குழுவில் உள்ள அத்தனை பேரையும் நேருக்கு நேர் பார்த்தது கூட இல்லை. அப்படி இருக்கையில் எங்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது தொழில்நுட்பம் தான். ஒருவேலை ஈமெயில், செல்போன் எல்லாம் இல்லாமல் இருந்திருந்தால், நம்மால் தினமும் சந்திக்கக்கூடிய 20-30 பேர்களை வைத்துதான் வேலை செய்திருக்க முடியும்.

அடுத்த சவால் நேரம் ஒதுக்குவது. இப்போது கூட சில Volunteers சரியாக நேரம் தர இயலவில்லை என்றால், திட்டமிட்ட பணிகளை முடிப்பது சவாலாகத் தான் இருக்கும். நாங்களும் கற்றுக்கொள்ளும் கட்டத்தில் தான் உள்ளோம். முடிந்த வரை சமாளிக்கிறோம்.

TEAM EVEREST மூலம் எந்த மாதிரி பணிகளை செய்கிறீர்கள்?

முதலில் கல்வித்துறை. கல்வித்துறைக்கென volunteerகளை தயாரிக்கிறோம். பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளுக்கு பொருளாதார ஆதரவு தருகிறோம். அரசுப் பள்ளிகளில் லேப் வசதிகள், கணினி வசதிகள், அமரும் பலகைகள் என பல தேவைகள் இருக்கும். அவற்றை வழங்குகிறோம். அடுத்தது எங்களது குழுவினர், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச சொல்லித்தருகின்றனர். இப்போது 10 அரசுப்பள்ளிகளில் இந்த வேலைகளை செய்கிறோம்.

ஆரணியில் “SMILE 100” என்ற ஒரு பிராஜக்ட் செய்கிறோம். இந்த பிராஜக்ட்டில், பெற்றோர்கள் அல்லாமல் உறவினர்களால் வளர்க்கப்படும் 100 குழந்தைகளை தேர்ந்தெடுத்தோம். அவர்களை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து, கல்விக்கான கட்டணங்களை கொடுத்து, தினசரி டியூஷன் எடுக்கிறோம். வார இறுதி நாட்களில் EXTRA CURRICULAR ACTIVITIES அந்த குழந்தைகளுக்கு வழங்குகிறோம். இந்த 100 குழந்தைகளையும் தினமும் சந்திக்கிறோம்.

அடுத்த பணி – கிராமத்தை தத்தெடுத்தல். ஆரணியை சுற்றியுள்ள பத்து கிராமங்களில் எங்களது பகுதி நேர ஊழ்யர்களை வைத்து குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கிறோம். நமது டியூஷன் வகுப்புகளில் 300 மாணவர்கள் படிக்கின்றனர். SUMMER CAMP, WINTER CAMP எல்லாம் நடத்துகிறோம். வருடத்திற்கு ஒருமுறை தொடர்பில் உள்ள அனைத்து குழந்தைகளையும் ஒருங்கிணைத்து “CHILD FEST” என்ற ஒரு போட்டி நடத்துகிறோம்.

அடுத்து ஆரணியில் “அப்பா அம்மா நினைவகம்” என்று ஒரு மையத்தை நடத்துகிறோம். அதில் இலவச கணினி பயிற்சி மற்றும் டியூஷன் தினசரி நடைபெறுகிறது. வருடத்திற்கு சுமார் 500 பேர் இதன் மூலம் பலனடைகிறார்கள். காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து மாலை ஏழு மணி வரை ஆறு குழுக்கள் வருகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பெற்றோர்களுக்கான வகுப்புகள் எடுக்கிறோம். அவர்களுக்கு கணினி சொல்லித்தருவோம்.

சென்னையில் ஏதாவது ப்ராஜக்ட் செய்கிறீர்களா?

இந்த வருடம் சென்னையில் “I AM THE CHANGE” என்ற ஒரு ஸ்காலர்ஷிப் நிகழ்ச்சி நடத்துகிறோம். பெற்றோர்கள் அல்லாமல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் 100 குழந்தைகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளை தேர்ந்தெடுக்க ஒரு தேர்வு முறை உள்ளது. அந்த குழந்தைகளுக்கு பயிற்சியும் வழங்குகிறோம்.

அது மட்டுமன்றி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், எதிர்காலத்தில் என்ன செய்யலாம் போன்ற பல பயிற்சிகளையும் நடத்துகிறோம்.

இது வரை எத்தனை குழந்தைகளை உங்களது குழு அணுகி இருக்கும்?

எங்களது அனைத்து பணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இது வரை சுமார் 8 லட்சம் குழந்தைகளை அடைந்திருப்போம். அதில் மிகச்சிறிய பணியான பென்சில் கொடுப்பதிலிருந்து முழு நிதியுதவி கொடுப்பது வரை அடங்கியிருக்கும்.

Volunteer களை எவ்வாறு ஊக்கப்படுத்துவீர்கள்?

அவர்கள் ஏற்கனவே ஏதாவது ஒரு உந்தலில் தான் எங்களிடம் வருவார்கள். சுயநலமற்ற சிந்தனைகள் இருந்தால் தான் volunteer ஆகவே வர முடியும். ஆனால் எங்கள் தரப்பிலிருந்து, சிறந்த volunteerகளை மேலும் மெருகேத்துகிறோம்.

எங்களது குழுவின் முக்கிய நோக்கமான மாதம் ஒருமுறையாவது volunteer செய்யுங்கள் என்ற கொள்கையை எடுத்துரைக்கிறோம். அது போல் ஒவ்வொரு மாதமும் தவறாமல் volunteer செய்தவர்களை பாராட்டி ஒரு விருது தருகிறோம்.

அது மட்டுமன்றி, “THANKS FROM THE HEART” மற்றும் “I AM THE CHANGE” என இரு விருதுகளை தருகிறோம். சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த திருமதி ரக்ஷா என்பவருக்கு அந்த விருதை வழங்கினோம். தொடர்ந்து 40வாரங்களில் 200-250 மனிதர்களை அவர் volunteering செய்ய வைத்தார்.

மேலும், volunteerகள் குழந்தைகளை பார்க்கையில் அவர்களாகவே ஈர்க்கப்படுவர். ஆதரவற்ற  குழந்தைகளின் நிலையைக் கண்டு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென எல்லோரும் நினைப்பார்கள்.

உங்களது நோக்கம் பற்றி

Volunteering பற்றிய விழிப்புணர்வை நிறைய மனிதர்களுக்கு எடுத்து சென்று, நிறைய volunteerகளை உருவாக்குவது. Volunteering செயல்களின் மூலம் சமுதாயத்திற்கு எத்தனை நல்ல விஷயங்களை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வது. எனக்கு தனிப்பட்ட முறையில் 2020 ஆம் ஆண்டிற்குள் 1000 குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் தர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.

உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் அங்கிகாரம் பற்றி

புதிய தலைமுறை 2009-10 ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற விருதை வழங்கியுள்ளது. I-Volunteer Hero Award இந்தியா முழுதும், சமூகப் பணியாற்றுபவர்களுக்கு வருடந்தோறும் வழங்குகின்றனர். அவர்கள் தொடங்கிய முதல் வருடத்தில் எனக்கு அந்த விருதை கொடுத்து, அமேரிக்கா அனுப்பி வைத்தனர். அது தவிர பல மீடியாக்களில் எங்களது பணிக்குறித்தும்  வந்துள்ளது.

மக்களுக்கு நமது B+ இதழ் மூலம் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

Volunteer ஆக இருந்து பாருங்கள். அதன் பலன் மிக அதிகம். சிறிய வயதிலிருந்து நான் எந்த போட்டிகளிலும் மேடைப்பேச்சுகளிலும் கலந்துக்கொண்டது இல்லை. ஆனால் Volunteering எனக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்துள்ளது. என் வாழ்க்கை முழுமையாக மாறியுள்ளது. பல நல்ல வேலைகளை இதன் மூலம் செய்துள்ளேன். எனக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நிறைய திருப்தியை அளித்துள்ளது. மாதத்திற்கு ஒருமுறையாவது Volunteering செய்து பாருங்கள். நிறைய பேர் இவ்வாறு தானாக வந்து சமூக தொண்டு புரிகையில் நம் நாட்டில் பெரும் மாற்றம் உருவாகும்.

திரு.கார்த்தியை தொடர்புக் கொள்ள..

வெப்சைட்: http://www.teameverestindia.org/

மெயில்: info@teameverestindia.org.

தொலைபேசி: +91 89399 12365

Likes(7)Dislikes(0)
Share
Apr 142016
 

handicap-sprinter

விளையாட்டுத்துறைக்கு மீடியாக்களின் உதவியும், மக்களின் ஆதரவும் பெருகி வரும் காலம் இது. “அப்படி இந்த விளையாட்டு போட்டிகளை ஏன் நடத்த வேண்டும்? இவைகள் என்ன தான் மக்களுக்கு கற்றுத் தருகின்றன? இவைகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தானே?” போன்ற கேள்விகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக ஒருபக்கம் எழுகின்றன.

இது போன்ற கேள்விகளில் ஓரளவு நியாயம் இருப்பினும், இம்மாதிரியான போட்டிகள் சில சமயம் பெரியளவில் பாசிடிவான சிந்தனைகளை நம்மில் விதைக்கவும் செய்கின்றன என்பதற்கு ஒரு உதாரண நிகழ்வைக் காண்போம்.

அந்த சிறுவன் ஒரு கிரிக்கெட் வீரன். அன்றைய கிரிக்கெட் போட்டியில் அவனது அணிக்கு,  அன்றைய நாள் சிறப்பான துவக்கமாக இல்லை. 22ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4விக்கட்டுகளை இழந்து ஒரு மோசமான துவக்கத்தைப் பெற்று தடுமாறி இருந்தது அவனது அணி.

எதிரணியிலோ, தங்களது அணி வெற்றி பெற்றே ஆக வேண்டுமென வெறித்தனமாகவும் நேர்த்தியாகவும் பந்தை வீசும் அனுபவமுள்ள பௌலர்கள். அவர்களது பந்து வீச்சின் சிறப்பைக் கண்டு அந்த சிறுவனின் அணியின் தோல்வி நிச்சயம் என்று பார்வையாளர்கள் கருதினர்.

இத்தகைய சவாலான சூழ்நிலையில் பேட்டிங் ஆட அன்றைய போட்டியில், மைதானத்திற்குள் நுழைகிறான் அனுபவமே இல்லாத அந்த சிறுவன். பந்து வீச்சை எதிர்கொண்டு நிற்க, இவனை அவுட்டாக்க வேண்டும் அல்லது தனது பந்தின் வேகத்தால் பயமுறுத்தி வெளியேற்றி விட வேண்டுமென ஓடிவந்து ஆக்ரோஷமாக ஒரு பௌன்சரை வீசுகிறார் எதிரணியின் முக்கிய பௌலர்.

அந்த பௌலர் எதிர்பார்த்தது கிட்டத்தட்ட நடந்தது. பந்து நன்றாக உயரத்தில் எழும்பி அந்த சிறுவனின் ஹெல்மெட்டில் நுழைந்து, அவனது முகத்தை தாக்குகிறது. பந்து தனது மூக்கை உடைத்து, ரத்தம் வழிந்து ஓடவே நிலைக்குலைந்து விடுகிறான் அச்சிறுவன்.

போட்டி சிறிது நேரம் நின்று விடுகிறது. அந்த சிறுவனின் அணியின் Physio ஸ்ட்ரெட்சருடன் அவனை நோக்கி ஓடி வருகிறார். மறுமுனையில் நின்றிருந்த ரன்னர் பேட்சுமேனும், பதட்டத்துடன் அவனருகில் ஓடிவந்து என்னாயிற்று என விசாரிக்கிறார்.

பார்வையாளர்களிடம் ஒரே சலசலப்பு. இந்த மாதிரி சிறுவயது பிள்ளைகளையெல்லாம் ஏன் விளையாட்டிற்கு அழைத்து வருகின்றனர் என கருத்து தெரிவித்து, அந்த சிறுவன் பேட்டிங்கை தொடராமல், சென்று ஓய்வு (RETIRED HURT) எடுத்துக் கொள்ளலாம் என தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

ரன்னரும் Physioவும் சூழ்நிலையை ஆராய்ந்து, அதே கருத்தை அந்த சிறுவனிடம் தெரிவித்து, ஸ்ட்ரெட்சரில் சென்று படுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

எதிரணிக்கோ சற்று மகிழ்ச்சி. அடி பலமாக பட்டதால், RETIRED HURT ஆகி சிறுவன் சென்று விட்டால் கிட்டத்தட்ட ஒரு விக்கெட் வீழ்ந்தது போல் தான். இன்னும் மீதம் ஐந்து விக்கெட் தான் எஞ்சி இருக்கும், எளிதாக வென்றிடலாம் என நினைத்தனர்.

அன்று மைதானத்தில் உள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்தது போல், போட்டியை தொடராமல் பயந்து போய் அச்சிறுவன் பெவிலியன் சென்று ஓய்வெடுத்துக் கொண்டால், எவரும் ஒரு கேள்வியும் கேட்டிருக்கமாட்டர்கள். ஆனால் அவனது அணியின் தோல்வியோ கிட்டத்தட்ட உறுதியாகிருக்கும்.

அப்போது தான் அந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தேறியது. மூக்கில் வழிந்த ரத்தத்தை துடைத்த சிறுவன், மிக நிதானமாக தனது ரன்னரை நோக்கி “நான் விளையாடுகிறேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்க அனைவருக்கும் ஆச்சரியம். போட்டி மீண்டும் தொடர்கிறது.

மூக்கு உடைப்பட்டு நிலைக்குலைந்து நிற்கிறானே, இவனை எளிதாக அவுட்டாக்கி விடலாம் என நினைத்த அந்த பந்து வீச்சாளர், ஒடிவந்து மேலும் ஆக்ரோஷத்துடன் அடுத்த பந்தை வீசுகிறார்.

என்ன ஆச்சரியம்! சூறாவளியாய் எழுந்த சிறுவன், தன்னை நோக்கி சீறிப்பாய்ந்த வந்த பந்தை லாவகமாக விளையாடி பவுண்டரிக்கு விரட்டி, போட்டிக்கு நான் தயார் என்பதை போல் எதிரணியை பார்க்கிறான். கூட்டத்தில் பலத்த கைத்தட்டல். சிறுவனின் அணியின் வீரர்கள் துள்ளிக் குதிக்கின்றனர்.

வெறுத்து போன எதிரணி, தங்களது அனுபவமுள்ள பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவராய் இறக்கி அவனை சோத்தித்து பார்க்க, அனைவரின் பந்துகளையும் நாலாபக்கமும் அடித்து நொறுக்குகிறான் சிறுவன். தோல்வியை நோக்கிச் சென்ற தனது அணிக்காக சிறப்பாக ஆடி, ஸ்கோரை ஒரு வலுவான நிலைக்கு கொண்டுவர, அந்த போட்டி டிரா ஆகிறது.

1989 ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் நடைப்பெற்ற அந்த டெஸ்ட் போட்டி, போராடும் குணத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது. பாகிஸ்தான் தரப்பில், வாசீம் அக்ரம், வக்கார் யுனுஸ், இம்ரான் கான் போன்ற உலக தரமுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள். அந்த ஜாம்பவான்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தனது திறமையை உலகிற்கு காட்டிய அந்த சிறுவன் யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆம், நீங்கள் யூகித்தது சரிதான், பிற்காலத்தில் “GOD OF CRICKET” என்று உலகமே கொண்டாடுமளவு பல ரெக்கார்டுகளை உடைத்து, மாபெரும் வரலாற்றை எழுதிய சச்சின் டெண்டுல்கர் தான் அந்த சிறுவன். அந்த தொடரின் மூலம் கிரிக்கெட் உலகத்திற்கு, 16 வயதினிலேயே, தனது என்ட்ரியை ஆழமாக தடம் பதித்துக் காட்டினார் அந்த சரித்திர நாயகன். இதோ ஒரு சாம்பியன் பிறந்து விட்டார் என பாகிஸ்தான் உட்பட உலகமே அவரை கொண்டாட ஆரம்பித்தது.

சற்று யோசித்து பார்த்தால், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் இந்த போட்டியை போன்ற போர்க்களம் தான். எத்தனை சவால்கள், இக்கட்டான சூழ்நிலைகள் பௌன்சர்களாக மாறி பலமுறை நம்மை தாக்கி நிலைக்குலைய செய்கின்றன?

சரிந்து கீழே விழுந்தபின், என்னால் இனி முடியாது என்று முடிவெடுத்து ஸ்ட்ரெட்சரில் ஏறி பெவிலியன் சென்றால், நமது முடிவு சரிதான் என்று நம்மை சுற்றியுள்ள உலகம் கண்டிப்பாக ஒத்துக்கொண்டு அனுதாபங்களை தெரிவிக்கும்.

அனால் ஒவ்வொரு முறையும் நாம் விழுந்தபின்னும், மீண்டும் எழுந்து துடிப்புடன் போராடி வெற்றி பெறுகையில் அதே உலகம் கைத்தட்டி நம்மை சாதனையாளன் என்று கொண்டாடும்.

வாழ்க்கை தரும் அடிகளால் கீழே விழுவது தோல்வி அல்ல, மாறாக அந்த அடிகளை தாங்கிக் கொண்டு மீண்டும் எழ மறுப்பதே தோல்வி.

சரித்திரத்தில் எந்த வெற்றியாளனும் தோல்விகளை சந்திக்காமல் வந்ததில்லை. அந்தத் தோல்விகளை போராடும் குணத்துடன் உதறித்தள்ளி, மீண்டும் போராட தயாரானவர்கள் தான் மாபெரும் வெற்றியாளர்கள் ஆகின்றனர்.

காலமும் சக மனிதர்களும் தங்கள் மீது வீசும் ஒவ்வொரு கல்லையும், தனது வெற்றியின் படிக்கல்லாக மாற்றத் தெரிந்தவர்களே சாதனையாளனாக வலம் வருகின்றனர்.

அதனால் உங்கள் தோல்வியைக் கண்டு, ஸ்ட்ரெட்சரில் ஏறி துவண்டு படுக்க போகின்றீர்களா, அல்லது துணிவுடன் நின்று சிக்ஸர் அடிக்க போகின்றீர்களா என்பதை நீங்களே முடிவெடுங்கள். உங்களது விளையாட்டு உங்கள் கையிலும் எண்ணத்திலும் தான் உள்ளது.

எத்தனை தோல்விகள் வந்தாலும் துவண்டு விடாமல், மன வலிமையுடன் எழுந்து நின்று தோல்விகளை நாலாப்புறமும் துரத்தி அடியுங்கள்.

துணிவுடன் நின்று போராடி விளையாடுகையில், உங்கள் வெற்றிக்கு வானமே எல்லை.

தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(5)Dislikes(0)
Share
 Posted by at 12:23 am
Apr 142016
 

download

அந்த கடையில் ஐஸ்கிரீமை பிளாஸ்டிக் பந்தில் வைத்து விற்கின்றனர். ஒரு ரூபாய்க்கு மூன்று ஐஸ்கிரீம் பந்துகள் கிடைக்கும். உள்ளே உள்ள ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு, மூன்று வெறும் பந்தை திரும்ப கடையில் கொடுத்தால், இன்னொரு ஐஸ்கிரீம் பந்து இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் 15 ரூபாய் எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்கின்றீர். உங்களிடம் மொத்தம் எத்தனை ஐஸ்கிரீம் கிடைத்திருக்கும்?

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

 

கடந்த முறை கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

X = 26,

Y = 53

சரியான பதில் அளித்தவர்கள்:

சுந்தரலிங்கம்

 

Likes(2)Dislikes(0)
Share
Share
Share