Nov 142015
 

img3

விவசாயமா!!! ஆளை விடுங்கள், நான் கஷ்ட்டப்பட்டது போதும், எனக்குப் பின் வரும் தலைமுறையினராவது, ஏதாவது பெரிய நிறுவனத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கட்டும் என்று பல விவசாயிகள் வலியினால் புலம்பும் காலம் இது. ஆனால், அப்படிப்பட்ட நல்ல  வேலையை விட்டுவிட்டு, விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு இளைஞர், விவசாயத்தில் இறங்கி பல சாதனைகளை செய்து வருகின்றார் என்றால் எத்தனை வியப்பான விஷயம்?!

சென்னை திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம் என்ற சிறு கிராமம். இங்கு தனது கீரைத் தோட்டத்தை வைத்து 100% இயற்கை வேளாண்மை சாம்ராஜ்யம் அமைத்து இருக்கிறார் திரு.ஜெகன்நாதன். இத்தனை கீரை வகைகளா என ஆச்சரியப் படுத்த வைக்கிறது இவரது கீரைத் தோட்டம். (இவரது இணைய தளம் – http://www.nallakeerai.com)

நல்லக்கீரை எனும் நிறுவனத்தை தொடங்கி, சென்னையில் பலரது வீட்டுக் கதவைத் தட்டி கீரைகளை தந்து வருகிறார். இதை இக்கால பசுமை புரட்சி என்றால் அது மிகையாகாது. இனி அவர் பேட்டியிலிருந்து..

விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?

வேலை செய்துக்கொண்டே கல்வித்துறையில், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ப்ராஜக்ட் செய்துக்கொண்டிருந்த சமயம். நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்று ஊக்கத்தொகை கொடுக்க எங்கள் குழுவினர் செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு மாணவர் வீட்டிற்கு நான் சென்றபோது, விவசாயம் செய்யும் அவர் அப்பா பசியால் வயிற்றில் ஈரத்துணி சுற்றி படுத்திருந்தார். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்து, உணவை அனைவருக்கும் அளிக்கும் விவசாயி, ஏழ்மையினால் உணவேதும் இன்றி, ஈரத்துணியுடன் படுத்துக்கொண்டிருந்த அந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதிக்கவே, விவசாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.

ஏன் இயற்கை விவசாய முறையை தேர்ந்தெடுத்தீர்கள்? 

திரு.ஜே.சி.குமாரப்பா எழுதிய  பொருளாதாரம் பற்றிய புத்தகங்களை அந்த சமயங்களில் நிறைய படிப்பேன். அதில் உந்தப்பட்டு, விவசாயத்தை மட்டுமே முக்கியமாக நம்பியுள்ள என் கிராமத்தில், அங்குள்ள கல்லூரி மாணவர்களை வைத்து 1999 ஆம் வருடம், ஒரு மதிப்பாய்வு (survey) செய்தேன். இந்த மதிப்பாய்வில், கிராம மக்கள் செய்யும் செலவுகளில் பெரும் பகுதியாக இருப்பது எது என்று கணக்கெடுத்தோம். 240 குடும்பங்களில், 210 குடும்பங்கள் ஒத்துழைப்பு கொடுத்து மதிப்பாய்வில் பங்கெடுத்தன.

அந்த வருடம் முழுதும் செய்த மதிப்பாய்வில், கிராமத்தினர் 60%ற்கும் அதிகமான தங்களது வருமானத்தை உரம் அல்லது பூச்சிக்கொல்லிக்கும், மாத்திரை மருந்துக்கும், மதுபானத்திற்கும் செலவு செய்கின்றனர் என தெரிய வந்தது. சுமார் 1கோடியே 6லட்ச ரூபாய் ஒரு சிறு கிராமத்தின் மூலம், ஒரு வருடத்திற்கு இந்த மூன்று காரணங்களுக்காக வெளியாவதை தெரிந்துக்கொண்டேன். இயற்கை சார்ந்த வேளாண்மை செய்யும் போது,  உரத்தின் தேவை இல்லாததால், செலவு குறைகிறது என அறிந்து, கிரமாப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இயற்கை விவசாயம் தான் சிறந்தது என இதை தொடங்கினேன்.

விவசாயம் ஆரம்பித்த நாட்களில் நிறைய சவால்களை சந்தித்திருப்பீர்கள். நல்ல வேலையை விட்டு, இப்படி விவசாயத்தில் கஷ்ட்டப்படுகிறோமே என எப்போதாவது வருந்தியுள்ளீர்களா?

நிறைய சவால்களை சந்தித்தேன். ஆனாலும் விவசாயத்தின் மீது நம்பிக்கையும், விருப்பமும் அதிகம் இருந்தது. சில வருடங்களில் விவசாயம் அடைய இருக்கும் பெரிய வளர்ச்சியைப் பற்றி எனக்கு நன்றாக தெரிந்தது. நான் அடைய இருக்கும் இலக்கும் தெளிவாக இருந்தது. 100% விவசாயத்தில் நம்பிக்கை இருந்தது. அதனால் அந்த சவால்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கார்போரேட்களில் வேலை செய்பவர்கள், கணினி துறையை சேர்ந்தவர்கள், பொறியாளர்கள் என நன்றாக படித்து சம்பாதிப்பவர்கள் சிலரின் பார்வை இப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி உள்ளதே? அவர்கள் இதை செய்ய முடியுமா?

என்னைக் கேட்டால் அவர்கள் தான் இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்யமுடியும். அவர்கள் அடையும் வெற்றியை பார்த்து தான் மற்ற விவசாயிகள் இயற்கை முறைக்கு மாறுவர். ஏனெனில், பல வருடங்களாக பூச்சிக்கொல்லி மூலம் விவசாயம் செய்து வருபவர்களை, இயற்கைமுறை விவசயாத்திற்கு மாற்றுவது அத்தனை எளிதல்ல. இது செய்தால் நல்லது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க முடியாது. இந்த தலைமுறையினர் இயற்கை விவசாயம் செய்து, அதில் நல்ல முறையில் வெற்றி பெற்று காண்பிப்பதன் மூலம் தான், மற்ற விவசாயிகளும் மாறுவர். அதனால் இளைய தலைமுறையினர் பலர், புது தொழில்நுட்பத்தை இத்துறையில் புகுத்தி வெற்றிப் பெறவேண்டும்.

நீங்கள் வரவேண்டும் என நினைக்கும் இந்த கார்ப்போரேட் ஊழியர்களும் பொறியாளர்களும், லட்சங்களில் சம்பளம் வாங்கும் வாய்ப்பு பெற்றவர்கள்.  விவசாயத்தில் அத்தகைய வருவாய் கிடைக்குமா?

அந்த துறைகளில் என்ன வருமானம் ஈட்டுகிறார்களோ, அதே அளவு விவசாயத்திலும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான திட்ட வடிவத்துடன் அவர்கள் வர வேண்டும். லட்சங்களில் சம்பளம் வாங்கிவிட்டு, விவசாயத்தில் சில ஆயிரங்களை சம்பாதிக்க வாருங்கள் என சொல்லவில்லை. அதே அளவு இங்கும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாருங்கள், அவ்வாறு வந்தால், சாதிக்க முடியுமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும் என்று சொல்வேன். பொறுமை, ஆர்வம், அர்பணிப்பு இந்த மூன்றும் வேண்டும்.

இயற்கை விவசாயம் என்றால் என்ன என்று கூட தெரியாது, ஆனால் நல்ல ஆர்வம் இருக்கிறது என்று எண்ணி, ஒருவர் இந்த துறைக்கு வர முடியுமா?

கண்டிப்பாக முடியும். என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன். ஆரம்பிக்கும்போது எனக்கு சுத்தமாக விவசாயம் தெரியாது. ஒரு கடையில் சென்று பொன்னாங்கண்ணியின் விதை கிடைக்குமா என்றேன், கடைகாரர் சிரித்துக்கொண்டே பொன்னாங்கண்ணியை நட்டு வையுங்கள், அது போதும் என்றார். அந்த நிலையிலிருந்து தான் ஆரம்பித்தேன்.

அதுவும் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் எந்த முன்னனுபவமும் இல்லாமல் ஆரம்பிப்பது மிக மிக நல்லது. இரண்டாவது, நம் முன்னோரெல்லாம் விவசாயம் செய்தவர்கள் தான். நமது மரபணுவில் விவசாயம் ஆழமாக இருக்கிறது. இது ஒன்றும் நமக்கு முழுவதுமாகப் புதிதல்ல. இப்போது நிறைய பேர் மனதில் விவசாய ஆர்வம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

இயற்கை வேளாண்மைக்கு எதிர்காலம் எவ்வாறு இருக்கிறது?

எந்த மனிதருக்கு தான், உயிர்க்கொல்லி விஷம் கொடுத்து பயிர் செய்யப்பட உணவு பிடிக்கும்?  அம்மாதிரி விஷ உணவு வகைகளை யாராவது ஒருவரேனும், சுவைக்காக அல்லது செரிமானத்திற்கு எளிதாக இருக்கும் என சாப்பிடுகிறேன் என்று கூறுவார்களா? கண்டிப்பாக இருக்காது. இன்று நமக்கு வேறு வழி இல்லை, அதனால் அத்தகைய உணவை உண்ணும் சூழ்நிலை.

விஷமில்லாத இயற்கை உணவு கிடைக்கையில், ஒருவர் கூட வேண்டாமென ஒதுக்கமாட்டர்கள் என்பது தான் உண்மை. அத்தனை தேவை (DEMAND) இயற்கை விவசாயத்திற்கு உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கில மருத்துவத்திற்கு (GENERIC MEDICINE) இந்தியர்கள் செய்ய இருக்கும் செலவு சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் என்ற ஒரு புள்ளிவிவரத்தை தற்போது ஒரு பத்திரிகையில் படித்தேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட உணவினை உட்கொள்கையில், இதற்கான தேவை இருக்காது.

இன்றைய விவசாய நிலை நம் நாட்டில் எவ்வாறு இருக்கிறது?

மத்தியில் சென்ற ஆட்சியின் போது, உச்ச நீதிமன்றம் FOOD CORPORATION OF INDIA (FCI) அதிகாரிகளிடம், நமது உணவுக் கிடங்குகளில் பல லட்சம் டன் உணவுப் பொருள்கள் வீணாகும் நிலையில் உள்ளது, மக்களுக்கு விநியோகம் செய்யலாமே என்று கேட்டது. அப்படி என்றால் தேவைக்கு அதிகமாக அரிசியும், கோதுமையும், சர்க்கரையும் நம்மிடம் இருக்கிறது. அதே சமயம், வருடத்திற்கு ஒரு கோடியே நாற்பது லட்சம் டன் எண்ணையை நாம் இறக்குமதி செய்கிறோம். சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் ஒரு லிட்டர் இறக்குமதி செய்யப்பட சமையல் எண்ணையை உட்கொள்கிறான். சுத்திகரிக்கப்பட்டது என்ற பெயரில் நம்மை ஏமாற்றி ரசாயனத்தை, பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்திய எண்ணைகளை, சில பன்னாட்டு நிறுவனங்கள் நம்மிடம் விற்று வருகிறார்கள், நாமும் அதை சாப்பிட்டு உடல் ரீதியிலான பல பிரச்னைகளை வளர்த்துக்கொள்கிறோம்.

இன்னொன்று, உலகிலேயே அதிகம் பருப்புகளை உட்கொள்ளும் நாடு இந்தியா தான். இவைகளை விவசாயம் செய்ய தட்பவெட்ப சுழல் உலகிலேயே இந்தியாவில் தான் சிறந்த முறையில் இருக்கிறது. அனாலும் கொடுமையாக இவைகளை நாம் தான் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். பர்மா, ஆப்பிரிகா போன்ற நாடுகளிடம் இருந்து பருப்புகள் வருமா என்று காத்துக்கொண்டுள்ளோம்.

ஒரு புறம் தண்ணீர் அதிகம் தேவைப்படும் அரிசி கோதுமைகளை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து புழுத்து போக வைக்கிறோம், மற்றொரு புறம், தண்ணீர் அதிகம் தேவைப்படாத எண்ணை வித்தையும், பருப்புகளையும் உற்பத்தி செய்யாமல் இறக்குமதி செய்கிறோம். அரிசி பயிரிடத் தேவையான தண்ணீரில் 10% இருந்தால் கூட பருப்புகளை நாம் விளைய வைக்க முடியும்.

மேலும் எண்ணை வித்துக்களையும், பருப்புகளையும் நாம் பயிரிடும் போது, அதன் வேர் முடிச்சில் நைட்ரஜன் மிகுதியாக இருக்கும். அதனால் நாம் தனியாக யூரியா மூலம் நைட்ரஜனை வரவைக்க வேண்டாம். மேலும் இம்மாதிரியான பயிர் வகைகளில் வரும் தவிடு, பொட்டு, புண்ணாக்கு ஆகியவைகளை வைத்து மாடுகளை வளர்க்க முடியும். இது மாதிரியான பல பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுகையில், பல உரங்கள் தேவைப்படாமல் போகிறது என்பது தான் உண்மை.

சாதாரண மனிதர்களாகிய நாம் இதற்கு என்ன செய்ய முடியும்?

நிறைய இருக்கிறது. முதலில் விவசாயம் குறித்த விழிப்புணர்வு வேண்டும். ஒவ்வொரு 30 நொடிகளுக்கும் ஒரு மனிதர் புற்றுநோயால் நம் நாட்டில் இறக்கிறார். இது வெறும் மது பானத்திலோ புகையினாலோ மற்றும் விளைகின்ற பாதிப்பு கிடையாது. பாதிக்கு மேல் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. உடலில் உருவாகியுள்ள அத்தனை விஷம் தான், இத்தனை நோயிற்கும் காரணம். உணவு என்ற பெயரில் விஷம் கலந்த பூச்சிக்கொல்லிகள் செய்த விணை.

விளையும் பொருள்களில் பூச்சிகளை கொல்வதற்கு, பூச்சிமருந்து அடிக்கிறோம் என்கிறார்கள். பூச்சியை கொள்ளும் விஷத்தை அடிக்கிறோம் என்று சொல்கிறார்களா? அது பூச்சுகளை கொள்ளும் விஷம் மட்டும் அல்ல, அதை சாப்பிட்டால் கோழி ஆடு மாடு, ஏன் மனிதன் கூட சாக வேண்டிதான். அப்படி என்றால், அது உயிர்க்கொல்லி விஷம் தானே? அந்த விஷம் கலந்த சாப்பாட்டினை தான் திரும்ப திரும்ப உட்கொள்கிறோம்.

நம் ஈரல்களுக்கு விஷத்தை, உடலில் எங்கு அனுப்புவது எனத் தெரியாது. எனவே, அவை நம் உடலிலேயே செட்டிலாகி விடுகிறது. இதையெல்லாம் அறிந்து, நாம் அனைவரும் சேர்ந்து, கிட்டத்தட்ட இன்னொரு சுதந்திரப் போராட்டம் போன்று, இயற்கை விவசாயத்திற்காக உழைக்க வேண்டிய நேரமிது.

உணவு முறைதான் அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் பரிசு என்கிறீர்களா?

என் குழந்தைக்கு சிறந்த கல்வி தர வேண்டுமென நினைக்கும் எத்தனை பெற்றோர்கள், ஆரோகியமான உணவு தர வேண்டுமென நினைக்கிறார்கள்? அந்த உணர்வு வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உணவே மருந்து. ஆனால் இந்த வரிகளை மறந்து விட்டோம்.

பிறந்த குழந்தையின் தாய்ப்பாலில் இருந்து ஆரம்பித்து, வாழ்வின் கடைசிநாள் வரை சாப்பிடும் அத்தனை உணவும் ரசாயானம், விஷம் என்றாகிவிட்டது. அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு நாம் வேலை செய்தே ஆக வேண்டும். வேற வழி இல்லை. மற்றவர்கள் தேவைக்கு கூட இல்லை, குறைந்தது தங்களது வீட்டின் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொருவரும் இயற்கை விவசாயத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

என் கருத்து அல்ல. திரு.ஜே.சி.குமாரப்பா அவர்கள் கூறியதையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். தாய்மை பொருளாதாரம், இயற்கை சார்ந்த விவசாயம் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் என 50 வருடங்களுக்கு முன்பே அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை தான் இன்று ஐ.நா. சபையும் தெரிவித்துள்ளது. அவர் கூறியபடி குறு விவசாயிகளும், இயற்கை விவசாயமும் தான் இன்று உலகிற்கு உணவளிக்க முடியும். அதனால் இயற்கை விவசாயம் நமக்கு மட்டும் இல்லை, ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

கீரையில் ஒரு பெயர் எடுத்து விட்டீர்கள். இனி உங்கள் அடுத்த இலக்கு என்ன?

நம் நாட்டில் நடைமுறையில் உள்ள விவசாயத்தில், மக்களின் தேவையை அறிந்து செய்யும் உற்பத்தி திட்டம் கிடையாது. அனால் இயற்கை முறையில் நான் கீரைக்காக செய்யும் விவசாயத்தில் மொத்த தேவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள சில வழிகளை செய்து வருகிறேன்.

ஆண்டு சந்தா 4500 ரூபாய் கட்டி எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வாரத்திற்கு ஐந்து வகையான கீரை என, வருடம் முழுதும் அவர்கள் வீட்டிலேயே, இயற்கை முறையில் விளைய வைத்தக் கீரையை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் இயற்கை முறையை விரும்புகிறார்கள் என்ற புள்ளிவிவரமும், அதற்கேற்றவாறு உற்பத்தியை செய்வதற்கான வழியும் கிடைக்கிறது.

கீரைக்கு அடுத்து, அரிசி, பால், காய்கறிகள், பழங்களை எல்லாம் மக்களுக்கு இயற்கை முறையில் செய்து கொடுக்கலாம். அதற்கான செயல் திட்டத்தை தொடங்கியுள்ளேன். இதை மனதில் வைத்து தான் நல்ல சந்தை என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இது இடைத்தரகர்கள் இல்லாது, விவசாயிகளிடமிருந்து நேராக வாடிக்கையாளர்களிடம் பொருள்களை கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கும்.

இந்த நோக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள பலர் எங்களைத் தொடர்புக் கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இயற்கை விவசாயம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்புவர்களுக்கும், அதை செய்ய நினைப்பவர்களுக்கும் எங்கள் நிறுவனம் மூலம் உதவி செய்கிறோம்.

Likes(15)Dislikes(0)
Share
Nov 142015
 

1

சில சந்திப்புகள், சில அனுபவங்கள் நம் ஒட்டுமொத்த எண்ண ஓட்டங்களையும் புரட்டிப்போடும் அளவு சக்திவாய்ந்தது. நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மறக்க வைத்து, எதிர்கால சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை, இதுபோன்ற சம்பவங்கள் நாம் வாழும்முறை சரிதானா என்று யோசிக்கவைக்கிறது. அது போன்ற ஒரு நிகழ்வு சென்ற ஞாயிற்று கிழமை நடந்தது.

அன்று என் எழு வயது மகனுடன் வீட்டருகே இருக்கும் முடி திருத்தகத்திற்கு சென்றிருந்தேன். அங்குள்ள சோஃபாவில் இரண்டு நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒருவருக்கு சுமார் 50 வயது இருக்கும். மற்றொருவர் ஒரு இளைஞர். அந்த இளைஞருக்கு உயரமான விளையாட்டு வீரனின் உடல்வாகு, சுமார் 20 வயது இருக்கும். டி-சர்ட், ஷாட்ஸில், ஏதும் பேசாமல் ஒரு அசால்ட்டான தோரணையுடன் அவர் அமர்ந்திருந்தது, ஏதோ பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் என்ற எண்ணத்தை வரவழைத்தது.

என் மகனும் அந்த சோஃபாவில் உட்கார விரும்பியதால், இரண்டாவதாக உட்கார்ந்திருந்த இளைஞரை பார்த்து, “சார், கொஞ்சம் நகருங்களேன், பையன் உட்கார விரும்புகிறான்” என்றேன். அந்த இளைஞரோ, கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், அதே தோரணையுடன், சற்றும் நகராமல் அமர்ந்தவாறே இருந்தார்.

என்னப்பா இது, ஒரு சிறுவன் உட்கார நினைக்கிறான், இடம் தர மறுக்கிறாரே என நினைத்து, அருகில் இருந்த அந்த முதியவரை நான் பார்க்கவும், முதியவரோ என்னைப் பார்த்து மெலிதாக சிரித்து, “ஒரு நிமிடம்” என்று என்னிடம் கூறிவிட்டு, “விஜய், move a  little bit” என்றவாறே இளைஞனின் கால்களை தன் பக்கம் இழுக்கவே, சோஃபாவில் அமர போதிய இடம் கிடைக்கவும், என் மகன் அங்கு சென்று அமர்ந்தான்.

விஜய்யை மேலும் கீழும் பார்த்த நான், ஒருவேளை நேற்று சனி கிழமை, அதனால் நண்பர்களுடன் சினிமா அல்லது பார்ட்டி என சுற்றிய மப்பில் (Hangover) இருக்கிறாரோ என எண்ணிக் கொண்டேன். அதை ஊர்ஜிதப் படுத்தும் விதத்தில் விஜய்யும் சற்றுக் கூட எங்கள் பக்கம் திரும்பாமல் அதே அலட்சியப் பார்வையுடனே அமர்ந்திருந்தார்.

ஒரு நபர் முடிவெட்டிக் கொண்டு கிளம்பவும், விஜய் முடி வெட்டிக்கொள்ள வாய்ப்பு வந்தது. அப்போது அந்தப் பெரியவர், “come on, let’s go” என விஜய்யை அழைக்க, அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது.

கைத்தட்டிக்கொண்டே, ஒரு குழந்தையின் பலத்த சிரிப்புடனும் உற்சாகத்துடனும் விஜய் எழுந்தார். பல விதமான ஒலிகளை எழுப்பியதோடு, வித்தியாசமான ரியாக்ஷனை கொடுத்தவாரே, முடிவெட்டும் நாற்காலியின் அருகில் சென்றவரை நாங்கள் அனைவரும் மிகவும் வியப்புடன் கண்டோம்.

முதியவரோ, கொஞ்சமும் சலனம் இல்லாமல், விஜய்யை கவனமாக முடிவெட்டும் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, அவரை பிடித்துக்கொண்டே “that’s all, இன்னும் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல் சொல்லியது எங்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

“சே, விஜய்யை தப்பாக நினைத்துவிட்டோமே, அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது போல” என்று உணர்ந்த நான், குற்ற உணர்ச்சியில், அந்தப் பெரியவரிடமே பேசுவோம் என முடிவு செய்து, “என்ன சார், ஏதேனும்…?” என்றேன் தயங்கியபடியே.

பெரியவர் சிரித்துக்கொண்டே, “பெரிதாக ஒன்றும் இல்லை சார், இவன் என் பையன். சிறு வயதிலிருந்தே அவனுக்கு ஆட்டிசம் (AUTISM)  என்ற பிரச்சினை. 20 வயது தாண்டியும் சிறு குழந்தைகளிடம் இருப்பதைப் போல பய உணர்ச்சி இவர்களுக்கு இருக்கும். இப்போது இங்கே உட்கார்ந்திருக்கையில் கூட முடிவெட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு இருக்கும், ஆனால் கத்தியோ, கத்திரியோ தன்னை குத்தி ரத்தம் வந்துவிடும் என்ற பயமும் அவனுள் கூடவே இருக்கும்.

இவனைப் போல் உள்ளவர்களுக்கான பள்ளியில் படிக்கிறான். பேசக் குறைவாகத் தான் வரும், ஆனாலும் நாம் பேசுவதை நன்றாகப் புரிந்துக்கொள்வான். பொய் சொல்லமாட்டான். வீட்டில் நாங்களும் யாரும் பொய் சொல்வதில்லை. ஏனெனில், நாம் செய்வதை தான் அவர்களும் செய்வார்கள்” என்றார் உற்சாகம் கலையாமல்.

நடுநடுவே கத்திரியின் முனை பயத்தையும் கூச்சத்தையும் விஜய்க்கு தந்திருக்க வேண்டும். எழுந்து செல்ல பல முறை முனைப்பட்டவரை, கட்டுப்படுத்திக்கொண்டே, “இதோ பார், முடி வெட்ட வெட்ட இன்னும் அழகாய் இருக்கிறாய், ஷேவ் பண்ணிகிறாயா, இன்னும் ஸ்மார்ட் ஆகிடுவ” என்று அவனை ஊக்கப் படுத்திக்கொண்டே என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார் பெரியவர்.

“சார், விஜய் ரொம்ப சமத்து, அனாவசிய தொந்திரவு கொடுக்கவே மாட்டான், வீட்டில் பாத்ரூம் வரைக் கொண்டு விட்டால் போதும், அவனது வேலையை அவனே பார்த்துக்கொள்வான். ஆனாலும் யாராவது ஒருத்தர் முழு நேரமும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதால், என் வேலையை சில வருடங்களுக்கு முன் ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் இவனுடனே இருக்கிறேன். என் மனைவியும் நானும் பார்த்துக்கொள்கிறோம்.

விளையாட்டுத் துறையில் அவனுக்கு ஆர்வம் அதிகமாக உண்டு. நீச்சல் மற்றும் ஓட்டப் பந்தையங்களில் கலந்துக்கொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறான்”.

முகத்தில் எந்த வித சோகமோ, களைப்போ இல்லாது, அந்தப் பாசமுள்ள, பொறுப்புள்ள தந்தை தன் மகனைப் பற்றி பெருமிதத்துடன், அவனது பாசிடிவான விஷயங்களை அடுக்கிக்கொண்டே சென்றார். அவரைப் பற்றி கேட்டதும், தன் பெயர் ஹரிஹரன் என்றும், பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் என்றும், விஜய்யின் ட்ரீட்மென்ட் வசதிக்காக சென்னையிலே செட்டிலாகி விட்டதாகவும் தெரிவித்தார். தன் மகனுக்காக வாழ்வையே தியாகம் செய்த அந்த மனிதனின் மீது பெரும் மரியாதை வந்தது.

“நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம், இருக்கும் வரை நாங்கள் அவனைப் பார்த்துக்கொள்வோம். அதற்குப் பின் என்ன நடக்கும் என்று நினைத்தால் தான் சிறு வருத்தமாக இருக்கும்” என்று பேச்சை நிறுத்தியவர், பார்ப்போம், அவர் இருக்கிறார் என்று மேலே கையை காட்டி, மீண்டும் உற்சாகத்துடன் சிரித்தார்.

கிளம்பும்போது, “விஜய், இவருக்கு ஹாய் சொல்லு” என்றவுடன், என் முன் அமைதியாக நின்ற விஜய்யைப் பார்த்து “How are you Vijay” என நான் கைநீட்ட, விஜய்யும் என் கையை குலுக்கியவாறே,  “Fine” என்று கூறி சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.

கனத்த இதயத்துடன் என் மகனைத் தேடிய என்னுள் சில கேள்விகள். அவன் செய்யும் சிறு தவறுக்கு எத்தனையோ முறை கோபப் பட்டுள்ளேன்? வீண் கோபத்தை தவிர்த்து அவனுக்கு பொறுமையுடன் எடுத்து சொல்லி இருக்கலாமே என்று தோன்றியது. அருகிலிருந்த என் மகனை அணைத்துக் கொண்டேன். எத்தனையோ ஹரிஹரன்கள் மகிழ்வுடன் இருக்கையில், நமக்கெல்லாம் பிரச்சினையே இல்லை எனவும் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனவும் தோன்றியது.

நாம் அன்றாடம் கவலைப் படும் பிரச்சினைகள் பலவும், நம் மனதில் நாமாகவே ஏற்படுதிக்கொள்பவை. இல்லாதவைகளை பற்றியே சிந்தித்து, கையில் இருக்கும் அழகிய வரமான நிகழ்காலத்தை இழக்கும் நாம், அதை உணருகையில், வாழ்வின் பெரும் பகுதி நம்மைக் கடந்துச் சென்று விடுகின்றது.

“நமக்கும் கீழே உள்ளவர் கோடி” என்ற பொன்னான வாக்கியத்தை நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடுவோம். வாழ்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து, அர்த்தமுள்ளதாய் அமைத்துக்கொள்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(15)Dislikes(1)
Share
Nov 142015
 

2B8C652400000578-3206031-India_s_Cochin_International_Airport_is_now_the_first_in_the_wor-a-29_1440161749578

 

மணி, சென்னை

சாதிக்கத் தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏதும் வருவதில்லையே?

சாதிக்க விரும்புபவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லையே.


மயுரி, நாகர்கோவில்

கொச்சி விமான நிலையம் உலகின் முதல் சோலார் விமான நிலையம் என பெயரெடுத்து வெற்றிப்பெற்றது பற்றி?

45 ஏக்கரில் 46150 சூரியத் தகடுகள் (SOLAR PANELS) அமைத்து, ஒருநாளில் 60000 யூனிட்கள் வரை மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே முன்னோடியாய் இருக்கும் கேரளாவின் இந்த செயல், பாராட்டப் படவேண்டியது மட்டுமல்ல பின்பற்ற வேண்டியது கூட.


வினோதினி, மும்பை

சமீபத்திய லெக்கின்ஸ் கலாச்சாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சமீபத்திய என்பது சரியா என்று தெரியவில்லை. அன்றைய ராஜா காலத்து படத்தில் எம்.ஜி.அர். வீரப்பபா போன்றோர்கள் அணிந்து இருப்பார்களே அது தான் இப்போது பெண்கள் அணிகிறார்கள். லெக்கின்ஸோ புடவையோ நாம் செய்யும் வேலைக்கு சௌகரியமான ஆடை அணிவது தவறில்லை. ஓட்டப்பந்தய வீராங்கனை சேலை கட்டி ஓட முடியுமா? சில மக்களிடம் மந்தை மனப்பான்மை [herd mentality] இருப்பது இயல்பு. ஆகையால், ஆணோ பெண்ணோ அடுத்தவர் போல உடை உடுத்த தயங்குவதில்லை.


பிரசன்னா, மதுரை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 தங்க முதலீடு திட்டங்களைப் பற்றி?

பலர் தங்கம் வாங்குவதை முதலீடாகவே பார்ப்பதால் கோல்டு பாண்டு திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது. கோல்டு பாண்ட் திட்டம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திட்டம் என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்றே நம்புகிறேன்.


ரவி ஷங்கர், துபாய்

உண்மையிலேயே சகிப்புத்தன்மை நம்மிடம் குறைந்து வருகிறதா அல்லது மீடியாக்களின் வளர்ச்சியினால் எல்லா விஷயங்களும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளதா?

“எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.” என்ற சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு இன்றும் உண்மை என்றே நம்புகிறேன்.
சகிப்புத்தன்மை குறையவில்லை. ஆனால் அவசரத்தன்மை, பொறுப்பின்மை, பொறுமையின்மை போன்றவை கூடியுள்ளதாக தெரிகிறது.


சரவணன், ஹைதராபாத்

தேசத்தின் பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதால் பயன் உண்டா?

பேசிக் கொண்டு மட்டும் இருந்தால் பழசோ புதுசோ பெருமை இல்லை. ஆனால், முன்னேறுவதற்கு பழம் பெருமையைப் பற்றி தெரிந்து வைத்தல் நமது நாட்டிற்கு மிக மிக அவசியம்.

“பழம் பெருமையும், தற்கால அவல நிலையும், எதிர் கால கனவும் உள்ள இளைஞர்களே இந்தியாவை முன்னேற்றுவர்” என்ற அரவிந்தர் வார்த்தை பொய்யாகுமா?


மாலதி, திருவண்ணாமலை

கோயில்களில் செய்யும் அபிஷேகங்கள், பிரசாதங்கள் போன்றவற்றை வீனடிக்காமல், ஏதெனும் குழந்தைகள் காப்பகங்களுக்கு கொடுத்தாக வேண்டுமென்ற சட்டம் வந்தால்?

அனைத்துமே சட்டத்தின் மூலமாக தான் நிறைவேற வேண்டும் என்றில்லை.

பிறகு கல்வியின் அவசியம் என்ன? நமது கல்வி ஓர் மனிதனிடம் சமுதாயத்தின் மேல் அக்கறையை வளர்க்க வேண்டும். சக மனிதன் மேல் பரிவு வந்தாலே பாதி சங்கடங்கள் குறையும்


சுந்தர், சேலம்

Oct 31 வல்லபபாய் படேல் பிறந்ததினம். அவரைப் பற்றி..

யார் இந்த வல்லபபாய் படேல் – என்ற கேள்வியை எழுப்பினார் ராஜகோபாலாச்சாரியார். அதற்கு அவரே பதிலும் தந்தார்: ஓயாத உத்வேகம், என்றும் சாயாத துணிவு, மாறாத தன்னம்பிக்கை, மலை போன்ற ஆற்றல் – ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக அவதாரம் எடுத்து வந்தவர்தான் இந்த வல்லபாய். இவரைப் போன்ற இன்னொருவரை நாம் மீண்டும் காணப் போவதில்லை என்றார். மூதறிஞரே சொன்னப் பிறகு இனி நான் இல்லை வேறு எவர் எதை சொல்ல.


ஜோசப், சென்னை

நமது பாடங்களில் வரலாறு திரிக்கப்படுகின்றனவா?

திரிக்கப்படுகின்றதா என தெரியவில்லை. ஆனால், மறைக்கப் படுகிறது.. பல பக்கங்களை அலெக்சாந்தருக்கு ஒதுக்கியவர்கள் அரைப் பக்கத்தில் ராஜராஜ சோழனை ஒடுக்கிவிட்டார்களே!


முருகேசன், திருப்பதி

விவசாயத்தில் தற்போதைய சவால்களினால், விவசாய நிலத்தை விற்று, பலர் வேறு வேலைகளுக்கு செல்லும் தற்போதைய நிலை தொடருமா?

தொடரவேண்டுமா? கார்பொரேட் துறையினர் சிலர் விவசாயம் பக்கம் வரும் போது பரம்பரை விவசாயி வெளியில் போகலாமா?

வள்ளுவன் என்ன சொல்கிறான் பாருங்கள்:

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் 
உழந்தும் உழவே தலை [1031]

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Likes(1)Dislikes(0)
Share
Nov 142015
 

Kavithai

உன்னோடு மட்டும் பேசுவதற்கு

ஓராயிரம் அந்தரங்கத் தகவல்களை

என்னிடத்தில் தேக்கியிருக்கிறேன்!

 

நாம் சந்திக்காத இடைவெளியில்

கிடைத்த பயண அனுபவங்களை

உணர்வு மாறாமல் பகிர வேண்டும்!

 

நான் பெற்ற பெருமித கணங்களை

ஒரு துளியும் விடாமல் ஒப்புவித்து

உன்னையும் குதூகலமாக்க வேண்டும்!

 

நாமிருவரும் பழகிய நண்பர்களையும்

அறிமுகமில்லாத புதிய முகங்களையும்

ஒன்றாய் சேர்ந்து அலசிட வேண்டும்!

 

நீ அருகில் இல்லாத பொழுதுகளில்

பட்ட துயரம் அத்தனையும் சொல்லி

உன் தோளில் சாய்ந்திட வேண்டும்!

 

புதிதாய் தோன்றிய எண்ண ஓட்டங்களை

நம் பழைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு

காலத்துக்கு ஏற்றவாறு மாறிட வேண்டும்!

 

நம் இருவரின் நட்புக்கு வலு சேர்த்த

ஆனந்தமான மலரும் நினைவுகளை

ஒய்யாரமாய் அசைபோட வேண்டும்!

 

உன்னோடு மட்டும் பேசுவதற்கு

ஓராயிரம் அந்தரங்கத் தகவல்களை

என்னிடத்தில் தேக்கியிருக்கிறேன்!

ஆனால்….

அமர்ந்து பேச இருவருக்கும் நேரமில்லை!

– கலாவதி

Likes(2)Dislikes(0)
Share
Nov 142015
 

IMG-20151027-WA0015

நண்பர் 1: இன்று அமெரிக்காவில் இரண்டு சூரியன் உதித்துள்ளது, நான் அனுப்பிய அந்த வீடியோவைப் பாருங்கள்.

நண்பர் 2: இரண்டு சூரியனா, இது உண்மையான செய்தியா இல்லை ஃபேக்கா?

நண்பர் 1: எனக்கு தெரியாது நண்பரே, எனக்கு வந்ததை அப்படியே ஃபார்வார்ட் செய்தேன். இந்த குழுவில் யாருக்காவது இது பற்றித் தெரிந்தால் தகவல் தரவும்.

நண்பர் 3: இது உண்மையில்லை. இது வதந்தி தான். நான் கூகுளில் தேடினேன், இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை.

நண்பர் 1: மிக்க நன்றி நண்பா..

நண்பர் 4: இது குறித்து கூகுளிலும், யு-ட்யுபிலும் தேடினபோது, இந்த பால் வழி மண்டல (Milky Way Galaxy) புகைப்படம் சிக்கியது. என் மகனும் என்னருகில் உட்கார்ந்து,  நம் பால் வழி மண்டலத்தை பற்றிய விவரத்தைக் கேட்கிறான். இந்த விவாதத்தை தொடக்கி வைத்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களால் தான் அவனுக்கு இதை காண்பிக்க முடிந்தது.

இந்த புகைப்படத்தை பார்க்கையில், ஒரே சூரியன் தான் இருக்கிறது. அதனால் வேறு ஏதேனும் கோல் எப்போதாவுது பூமிக்கு அருகில் வந்தபோது, இரண்டாவது சூரியன் வந்தது போல் ஒரு பிம்பம் இருந்திருக்குமோ?

நண்பர் 5: இன்னொரு கோலாக இருந்தாலும் அவ்வளவு பெரிதாக வர வாய்ப்பில்லை.

நண்பர் 1: அந்த இரண்டாவது சூரியன் நம் நாட்டிற்கு வரவில்லை. அமெரிக்காவில் தான் தெரிந்தது.

நண்பர் 4: ஒகே நண்பரே. அமெரிக்கா என்று சொன்னதால் இதை விட்டுவிடுவோம். நம்ம நாட்டிலேயே நிறைய பிரச்சினை இருக்கே, அதை டீல் பண்ணுவோம்

நண்பர் 1: இரண்டு சூரியன் கண்டதான தகவலுக்கு மேலும் சில தகவல்கள்??

வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால், சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும் என அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும் இந்த இரட்டை சூரியன் 2011 ம் ஆண்டு சீனாவில் பார்க்கப்பட்டதாகவும், பின்பு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தெரிந்ததாகவும் இணையத்தில் செய்திகள் இருக்கின்றன.

இது நேற்று இன்று நடப்பதல்ல. சூரியன் உதிக்க துவங்கிய காலத்தில் இருந்து நடக்கிறது.

இதற்கு பெயர் “சண் டாக்” sun dog. காற்றில் இருக்கும் பனித்திவலைகளால் ஏற்படும் ஒளி பிரதிபலிப்பால் இரண்டு சூரியனோ அதற்கு மேற்ப்பட்ட சூரியன்களோ தெரிவது போன்ற தோற்றம் ஏற்படும்

மேலும் விவரங்களிற்கு கூகுளில் Sun dog ணு அடிச்சு பாருங்க..

நண்பர் 6: மிக சரி. நான் கூட இந்த விவரத்தை ஒரு முறை படித்துள்ளேன். இது மாதிரியான தோற்றம் வட துருவத்திலும், தென் துருவத்திலும், அங்குள்ள தட்பவெட்ப சூழ்நிலையால் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

Likes(1)Dislikes(0)
Share
Share
Share