Oct 142015
 

e339fa41-6a58-4932-825e-503d1d72f5d7.Burma_

நண்பர்களே, இந்த மாத B+ இதழில், “உலகத் தமிழர்கள்” என்ற ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளோம். பல்வேறு நாடுகளில் குடிப்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன என அறியும் ஆர்வத்துடனும், நோக்கத்துடனும் இந்தப் பகுதியை ஆரம்பித்துள்ளோம். (இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டில் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்)

இந்த மாத “உலகத் தமிழர்கள்” பக்கத்தில், பர்மா நாட்டைப் பற்றி காண்போம். அங்கு ஆறு தலைமுறைகளாக செட்டிலாகியிருக்கும் குடும்பத்தை சேர்ந்த திருமதி.நாமகள் அவர்களின் பதில்களை காணலாம்.

பர்மாவின் சிறப்புகள் என்ன? உங்களுக்கு பர்மாவில் பிடித்த விஷயங்கள் என்ன?

இயற்கை சூழல் மற்றும் வேளாண்மை. நதிகள் இங்கு தேசிய மயமாக்கப்பட்டதால், விவசாயம் செழிப்புடன் இருக்கிறது.

எத்தனை வருடங்களாக அல்லது தலைமுறையினராக பர்மாவில் உள்ளீர்கள்? தமிழ் படிக்கத் தெரியுமா?

ஆறு தலைமுறையினராக எங்கள் குடும்பம் இங்கு வாழ்ந்து வருகிறோம். எனக்கு தமிழ் நன்றாக எழுத, படிக்க, பேசத் தெரியும். என் அம்மா எனக்கும், என் பாட்டி என் அம்மாவிற்கு தமிழைக் கற்றுக் கொடுத்தனர்.

உங்கள் உணவு வகைகள் என்ன?

அம்மியில் அரைத்து சமைக்கும் தமிழர் பாரம்பரிய உணவு முறை தான். சில பர்மா உணவுளும் சேர்த்து சாப்பிடுவோம்.

எத்தனை தமிழர்கள் மொத்தம் பர்மாவில் இருப்பார்கள்?

சரியான கணக்கெடுப்பு இதுவரை இல்லை. சுமார் 20லட்சம் பேர் வரை இருப்பார்கள் என சில தகவல்கள் உள்ளது.

தமிழர்கள் பொதுவாக என்ன பணிப்புரிவர்?

பொதுவாக வியாபாரம் மற்றும் விவசாயம் செய்கிறார்கள்.

அரசு/தனியார் அலுவலகங்களில் தமிழர்களின் வாய்ப்புகள் உண்டா?

எல்லா இடத்திலும் அடையாள அட்டை கேட்கப்படுவதாலும், சில இன வேறுபாடு பார்ப்பதனாலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் தமிழர்கள் குறைவு தான்.

தமிழ் மக்கள் தங்கள் தமிழ் பெயரோடு சேர்த்து பர்மாவின் பெயரும் வைக்க காரணம் என்ன?

எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும் குடியுரிமை வாங்கும் நிலை மிகவும் கடினமாக உள்ளது. இனவெறுப்பு காட்டப்படுவதும் ஒரு காரணம்.

என்ன படித்தீர்கள்? எந்த பள்ளியில் படித்தீர்கள்? தமிழர்கள் எங்கு பொதுவாக  படிப்பர்?

நான் கணினி பொறியியல் படித்தேன். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன். தமிழர்கள் இந்நாட்டில் யாங்கோன், மோன், அயிராவதி, பகோ, போன்ற  மாநிலங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.

இந்திய அல்லது தமிழக கலாச்சாரத்தையோ பழக்கங்களையோ இத்தனை வருடங்கள் கழித்தும் கடைப்பிடிக்கின்றீரா? ஏதாவது அப்படி உண்டெனில் கூறுங்களேன்..

அத்தனையும் சற்றும் மாறாது கடைப்பிடிக்கிறோம். பொங்கல் பண்டிகை உட்பட தமிழர் கலாச்சாரங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டுக் கூட நடத்துகிறோம்.

தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் வேட்டி, துண்டு, சட்டையுடன் காட்சியளிப்பார்கள். மற்ற இடங்களில் பர்மியரைப் போலவே வாழ்கின்றனர்.

பர்மாவில் உள்ள நம் கோவில்கள் பற்றி..

பிரசித்திப் பெற்ற பிலிக்கன் கோவில் உட்பட நிறைய உள்ளது. திருவிழா, கும்பாபிஷேகம் என அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

தமிழ்நாடு குறித்து எந்தெந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளது?

சினிமா மற்றும் அரசியல்

தமிழகத்தின் உதவி வேண்டுமென்றால் எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு தேவைப்படும்?

தமிழ் மொழி வளர்ச்சிக்கு மற்றும் பர்மா வாழ் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்விற்கு

இந்தியா வருவதுண்டா? வந்தால் என்ன செய்வீர்கள்? இங்கு யார் இருக்கிறார்கள்?

கோவில் வேண்டுதலுக்கும், உறவினர்களை சந்திக்கவும் இந்தியா வருவதுண்டு. சிலர் தொழில் ரீதியாகவும் வருவார்கள்.

தங்களைப் போல் பர்மாவில் தங்கிவிட்ட தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புவீரகள்?

தமிழை நேசியுங்கள். இன மொழி அடையாளங்களை காப்பாற்றுங்கள். தமிழர்கள் பர்மாவில் தன்மானத்தோடு வாழ, முக்கியமான தேவை ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பு. அதற்காக ஒற்றுமையுடன் வழி தேடுங்கள். இனத்திற்காக குரல் கொடுங்கள்.

—– X ——

(இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டில் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்)

Likes(17)Dislikes(0)
Share
Oct 142015
 

offer-Sandals-Halcyon-Beach-Saint-Lucia-660-425x250

இத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அழகிய பெரிய தீவு சிசிலி. சரியாக மத்தியத் தரைக் கடலின் நடுவில் உள்ள அந்த தீவில் சுற்றுலா விடுதி ஒன்றை தமக்குச் சொந்தமாக வைத்திருந்தார் ரெக் கிரீன் என்ற அமெரிக்கர்.

அக்டோபர் மாதம் 1994 ஆம் ஆண்டு. ரெக் தனது மனைவி மேகி மற்றும்  குழந்தைகளுடன் (நிக்கோலஸ் 7 வயது,  எலினார் 4 வயது), சிசிலியில் உள்ள தனது இல்லத்திற்கு விடுமுறையை கழிக்க, காரில் சென்றுக் கொண்டிருந்தார். பயணத்தின் போது, ரெக்கின் குழந்தைகள் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

ரெக்கின் காரை பின் தொடர்ந்தவாரே இன்னொரு கார் மிக வேகமாக வந்தது. அடுத்த காரில் வந்த மனிதர்கள் இரண்டு முறை ரெக்கின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆம், பின் தொடர்ந்த காரில் வந்தவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டத்தினர். ஒரு நகைக் கடையில் கொள்ளை அடித்துச் சென்ற மற்றொரு கூட்டத்தை தேடி வந்த அவர்கள், தவறாக ரெக்கின் காரை வழிமறித்து அந்த தாக்குதலை நடத்தினர். ரெக் தனது இலக்கு இல்லை என தெரிந்தவுடன் அந்த கொள்ளைக் கூட்டத்தினர் வேகமாக அங்கிருந்து மறைந்துவிடுகின்றனர்.

நொடிப்பொழுதில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பாராத ரெக் மற்றும் மேகி தம்பதியினர், சற்று சுதாரித்தப்பின், பின்னிருக்கையை திரும்பி பரபரப்புடன் பார்க்க இரண்டு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

சற்று நிமிட பயணத்திற்குப் பின், ஒரு சாலை விபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் குழு, ரெக்கின் காரை நிறுத்தி உதவி கோரவே, ஆம்புலன்ஸின் வெளிச்சத்தில் ரெக் அப்போது தான், தனது காரின் உள்ளே கவணிக்கிறார். தனது மகன் நிக்கோலஸின் கைகள் மிக மெதுவாக அசைய, அவனது வாயில் நுரை கக்கியிருந்தது. அந்த இரு தோட்டாக்களில் ஒன்று நிக்கோலஸின் பின் மண்டையில் பலமாக தாக்கியிருந்தது.

நிக்கோலஸின் நிலைமை மிக மோசமாக இருக்கவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப் படவேண்டும் எனவும், சிசிலியில் உள்ள பெரிய மருத்துவமணைக்கு அவனைக் கொண்டுச் செல்ல வேண்டுமென அங்குள்ளவர்கள் அறிவுறுத்தினர். நிக்கோலஸ் அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டான்.

ஆனால் அங்குள்ள மருத்துவர்களோ, நிக்கோலஸின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தங்களது நம்பிக்கை சிதைந்து விட்டதாகவும் ரெக்கிடம் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் மேலும் கடந்தது. மருத்துவர்கள் ரெக் தம்பதியினரிடம், நிக்கோலஸ் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாகவும், மூளையின்  செயல் இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

நிக்கோலஸ் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்கமுடியாமல் மாபெரும் துயரத்துடன் நின்றுக் கொண்டிருந்த ரெக்கிடம், மேகி தயக்கத்துடன் “நம் மகன்   நிக்கோலஸ் இறப்பது உறுதியாகி விட்டது, அவனது உறுப்புகளையும் திசுக்களையும் நாம் ஏன் தானம் செய்யக்கூடாது?” என கேட்கிறார்.

அந்த நிலையில், ரெக்கிடம் இரண்டு வழிகள் இருந்தன. காலம் முழுதும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே என எண்ணி உலகின் மீது வெறுப்பை அள்ளி வீசுவது அல்லது நிக்கோலஸின் உறுப்புகளை தானம் செய்வது மூலம் சில முன்பின் தெரியாத மக்களுக்கு பேருதவியாய் இருப்பது.

நிதானமாய் யோசித்த ரெக்கின் மனதில் சிறு மாற்றம் ஏற்பட்டது. “மேகி சொல்வது சரிதான், இனி நிக்கோலஸின் உடல் அவனுக்கு தேவைப் படாது, குறைந்தபட்சம் வேறு எவருக்கேனும் தேவைப்படட்டுமே” என எண்ணி அதற்கு ஒத்துக்கொள்கிறார். அந்த மாபெரும் துயர நேரத்திலும், ரெக் எடுத்த அந்த உன்னதமான முடிவு, ஐந்து முன்பின் தெரியாத மனித உயிர்களை காப்பாற்றியது.

தங்கள் நாட்டில் சுற்றுலா வந்த ஒரு வேறொரு நாட்டின் குடும்பத்திற்கு ஏற்பட்ட   அந்த துயர சம்பவத்திற்கு இத்தாலி மக்கள் மிகவும் வருந்தினர். ஆனால் அந்த நிலையிலும், தங்களின் ஐந்து குடிமகன்களின் உயிரைக் காப்பாற்றிய அந்த அமெரிக்க குடும்பத்தின் தியாக குணம், இத்தாலி நாட்டு மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்தது.

ரெக் குடும்பத்தின் இந்த தியாக உணர்வு, இத்தாலி, பிரிட்டென் மற்றும் அமெரிக்காவின் நாழிதள்களில் முக்கிய செய்தியாக பல நாட்கள் வெளிவந்தன.

நிக்கோலஸின் ஒவ்வொரு உறுப்பும் எங்கு யாருக்கு பயன்பட்டன என்று ஒவ்வொரு கட்டமாய் ஊடகங்கள் மக்களுக்கு “நிக்கோலஸின் பரிசு” என்ற தலைப்பில் காண்பித்தன.

இத்தாலியில் அந்த சம்பவத்திற்கு பின், உறுப்பு தானம் நான்கு மடங்காக உயர்ந்தது. நிக்கோலஸின் பெயர் இத்தாலியில் பல பள்ளிகளுக்கு, சாலைகளுக்கு, பூங்காக்களுக்கு சூட்டப்பட்டது.

ரெக்கிற்கு இப்போது 80 வயதை தாண்டிவிட்டது. அவர் குடும்பம், இன்று கூட நிக்கோலஸிற்கு நடந்த அந்த துயர சம்பவத்தை நினைத்து கண்ணீர் விடுகின்றனர். ஆனாலும் பல நாடுகளுக்கு சுற்றி உறுப்புகள் தானத்தைப் பற்றி பல அரங்குகளில் எடுத்துறைக்கிறார் ரெக்.

தினமும் பிரிட்டெனில் மூன்று மனிதர்கள், அமெரிக்காவில் 18 மனிதர்கள் என உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான மனிதர்கள், ஓராண்டில் உறுப்புகளுக்காக காத்திருக்கும் பட்டியலிலிருந்து இறக்கின்றனர். உறுப்புகள் தானம் சராசரியாக மூன்று அல்லது நான்கு உறுப்புகளை தருவதின் மூலம் மூன்று அல்லது நான்கு குடும்பத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறது என்று தீர்க்கமாக கூறுகிறார் ரெக்.

மிகவும் நேசிக்கும் ஒருவரின் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் ஒத்துழைக்காதது தான், தனக்குள்ள ஒரே வருத்தம் என்று குறிப்பிடும் ரெக், “எங்களுக்கு ஏற்பட்ட துயரம் போல் நடந்து தான் அது போல் ஒரு முடிவு எடுக்கும் மனநிலைக்கு யாரும் தள்ளப்படக் கூடாது” எனவும் “மக்கள் தாமாகவே முன் வந்து தானம் செய்வது பல மக்களின் உயிரைக் காப்பாற்றும்” என்கிறார்.

நிக்கோலஸ் இறந்தும், பல வருடங்களிற்கு பல மனிதர்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை ரெக் குடும்பம் ஏற்படுத்தியது.

ரெக் குடும்பத்தினர் செய்த அந்த தியாகத்தினை போல் பல எண்ணற்ற குடும்பங்களும், தனி மனிதர்களும் நம் நாட்டிலும், மற்ற பல நாடுகளிலும் இன்று வரை மருத்துவ துறையில் தியாகம் செய்து கொண்டு தானிருக்கின்றனர்.

எத்தனையோ மருத்துவர்கள் மிக நன்றாக சம்பாதித்த பின்னும், அதையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ கிராமத்திலோ, ஏழை மக்கள் வாழும் பகுதிகளுக்கோ சென்று, இலவசமாக மருத்துவம் செய்வதை இன்றும் நாம் பார்த்தும், கேள்விப்பட்டும் தான் வருகிறோம். இதற்கு பல உதாரணப்புருஷர்கள் இன்றும் உள்ளனர்கள்.

இவையெல்லாம் எதற்கு? மனிதர்களின் உயிர்களை வாழவைக்க தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற ஒரு உயர்ந்த எண்ணம் தானே?

ஆனால், நம் சமூகத்தில் பல பெற்றோர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை மருத்துவ படிப்பிற்கு அனுப்புவதை அன்றாடம் பார்க்கிறோம்.

சக மனிதனின் உயிரை காப்பாற்றும் மருத்துவ துறை உயர்ந்த சேவை செய்வதற்கான துறை என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் தோண்ற வேண்டுமே தவிர, அந்த உயிரை வைத்து விளையாடி பணம் சம்பாதிக்க நினைக்கும் வியாபார களமாக மாற்றும் எண்ணம் வரக்கூடாது.

தனி மனிதனின் தூய்மையான சிந்தனை, சுயநலமின்மை, சமூக அக்கறை இவைகள் தான் இந்த நேரத்தின் தேவையாக உள்ளது.

மாற்றம் நம் அனைவரிடத்திலும் வரவேண்டும்.

மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்,

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(12)Dislikes(0)
Share
Oct 142015
 

krishna-godavari-link

நண்பர்களே, நமது B+ இதழிற்காக திரு.சாரதி அவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொரு மாதமும் பதில் அளிக்க உள்ளார். இதுவரை வாசகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நமது B+ இதழிற்கு ஈமெயிலில் வந்த கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் திரு.சாரதி இந்த மாதம் பதில் அளித்து உள்ளார்.

*** குறியிட்ட கேள்வி இந்த மாதத்திற்கான சிறந்த கேள்வியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது

(நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)


ரஞ்சித், தஞ்சாவூர்

நம் நாட்டினர் அயல் நாட்டினர்களிடமிருந்து கற்க வேண்டிய ஒரு விஷயம் என எதை சொல்வீர்கள்?

காலந்தவறாமை.


ஷாகுள் ஹமீத், வந்தவாசி

*** அரசு செய்யும், அதிகாரிகள் செய்வார்கள் என இல்லாமல், தேச நலனுக்காக சாதாரன மக்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏதேனும் உண்டா?

இந்த தேசம் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் தானா என்ன? அனைவருக்கும் கடமைகள் உண்டு. நமது அரசியல் சாசனம் ஷரத்து 51A-ல் குடிமகனின் கடமைகள் என்ன என்று ஓர் பட்டியல் இட்டுள்ளது. அதை படிக்க நேரமில்லையெனில், ஓர் செடியையாவது நடுவது நல்லது.


கீதா, திருச்சி

அன்றாட உணவிற்கே கஷ்டப்படும் மக்களிடம் தேசம் குறித்த கடமைகளையும், விழிப்புணர்வையும் எப்பொழுது ஏற்படுத்த முடியும்?

உணவிட்டப் பிறகு.


சுப்பிரமணி, மதுரை

நம் நாட்டில் அனைத்து நதி நீர் இணைப்பு சாத்தியமாகுமா?

குஜராத் மற்றும் ஆந்திரம் பதில் சொல்லியுள்ளதே!


ரவிச்சந்திரன், சென்னை

ஏன் நம் நாட்டில் வெளிநாட்டு மோகம் அதிகமாக உள்ளது?

எப்பொழுதோ எழுத்தாளர்ளார் சுஜாதா சொன்னது- வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று – வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம்

இரண்டு -வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களின்மேல்

மூன்று – வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம்.

நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தால் மாக்கின்டோஷ் கணிப்பொறி வாங்கலாம். லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் அதைப் பயன்படுத்துவது முட்டாள்தனம்.

நம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளிநாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவை இருக்கும்போது வாங்கலாம். வெளிநாடு என்கிற ஒரே காரணத்திற்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.

வருடத்திற்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் சௌகரியம் இருக்கிறது என்றால் ஜீன்ஸ் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், அயல்நாட்டு பிராண்டு ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

வெளிநாடு தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.


சுசிலா, அமெரிக்கா

இளைய தலைமுறையினரிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா?

பெரியவர்களிடம் பெருகி வருகிறதா? இளைய தலைமுறையினர் பெரியவர்களிடமிருந்து தானே கற்றுக் கொள்கிறார்கள்.


பிரசன்னா, துபாய்

டெக்னாலஜி இத்தனை வளர்ந்தும், எதற்குமே நேரம் இல்லாதது போன்ற மாயை இருக்க காரணமென்ன?

முக்கியத்துவத்திற்கேற்ப செயல்களை அல்லது காரியங்களை வரிசைப்படுத்த தெரியாததே காரணம் என்ற ஞானம் வந்தால் மாயை அகலும்.


பாண்டியன், வெல்லூர்

பெண்களுக்கு மரியாதையும், சமத்துவமும் ஏன் நம் சமுதாயத்தில், முழு அளவில் வரவில்லை?

வேறு ஏதோ ஒரு சமூகத்தில் அல்லது நாட்டில் பெண்களுக்கு மரியாதையும், சமத்துவமும் உள்ளது போல் கேட்கிறீர்கள்?


மைக்கேல், சென்னை

வீட்டில் இருக்கும் பெண்கள், தங்களுக்கு கிடைக்கும் உபரி நேரங்களில் செய்யக்கூடிய சுயமுன்னேற்ற பணிகள் என்ன?

அது என்ன வீட்டில் இருக்கும் பெண்கள்? வேலைக்குப் போகும் ஆண் பெண்கள் உபரி நேரத்தை வீனடிக்கலாமா?


சிவா, சிங்கப்பூர்

தமிழைப் பற்றியும் தமிழர்களின் பெருமை பற்றியும் தமிழ்நாட்டில் உள்ளவர்களை விட, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வதுப் பற்றி..

அதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கார்கிலிலிருந்து துவங்கி, நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் அதிக மரியாதை வருகிறது. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு, எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்!!


(நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)

Likes(4)Dislikes(0)
Share
Oct 142015
 

WA

நண்பர்களே, B+ இதழிற்காக பாசிடிவ் மனிதர்களை ஒருங்கினைத்து ஒரு வாட்ஸப் குருப்பை ஆரம்பித்துள்ளோம். அதில் நல்ல விஷயங்கள் குறித்து தீவிர விவாதங்களும், உரையாடல்களும் நடைப்பெறும். இந்த விவாத மேடை பகுதியில் அங்கு நடக்கும் சில உரையாடல்களை பதிவு செய்கிறோம்.

(இந்த B+ வாட்ஸப் குருப்பில் நீங்களும் சேர விரும்பினால், உங்கள் பெயர், ஊர், மொபைல் எண்ணையும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)

நண்பர்1: ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு நான்கு மணிநேரம் கூட ஒதுக்குகிறோம். ஒரு படத்தை பார்பதற்கோ, வேறு ஏதேனும் பொழுதுபோக்கிற்கோ, ஒரு குழுவையும் எளிதாக கூட்டியும் விடுகிறோம். ஆனால், மரம் நடுவது, சுத்தம் செய்வது போன்ற சமுதாய நலனிற்கான செயல்களுக்கு என ஒரு குழுவை சேர்ப்பது மிக கடினமாக உள்ளதே? ஏன் இந்த மனநிலை நம்மில் பலருக்கு இருக்கிறது?

நண்பர்2: நமக்கும் நாட்டுப்பற்று எல்லாம் உண்டு. ஆனால் அது நம்ம இந்தியன் டீம் கிரிக்கெட் ஆடும்போது மட்டும் தான் அது வெளிவரும்..

நண்பர்1: அதை தான் கேட்கிறேன். நாம் ஏன் அப்படி இருக்கிறோம்?

நண்பர்3: சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், சுயநலம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நண்பர்1: ஓகே, அது ஒன்று மட்டும் தான் காரணமா?

நண்பர்3: வாழ்க்கை முழுதும் நமக்கு என்ன தேவையோ, அதை மட்டும் தான் செய்து கொண்டே இருக்கிறோம். இரண்டாவதாக, மக்களை சரியான வழியில் அழைத்துச் செல்ல சரியான தலைவர்களும் குறைந்துக் கொண்டே வருகின்றனர். சுயநலமில்லாத இயக்கங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றது.

நண்பர்2:  அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் குறை கூறுவதை தவிர்த்து, நாம் என்ன இந்த நாட்டிற்காக செய்யமுடியும் என்ற எண்ணம் ஒவ்வொருத்தர் மனதிலும் வரவேண்டும். முக்கியமாக மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்.

நண்பர்1: சரியாக சொன்னீர்கள். எந்த இயக்கம் நேதாஜி, பகத் சிங் போன்ற தலைவர்களை வளர்த்தது? அது அவர்களுக்கே தோன்றிய உள் உணர்வு தானே? அது மாதிரி நமக்கு ஏன் தோன்றவதில்லை என்பது தான் கேள்வி. எதாவது ஒரு தொண்டு செய்ய வேண்டுமெனில், ஒரு நிறுவனத்தையோ, இயக்கத்தையோ தேட வேண்டியுள்ளது. இப்போது, குடும்பங்களில் தர்மங்களைப் பற்றி பேசுகிறோமா? வாக்களிக்க கூட பல படித்தவர்கள் சரியாக செல்வதில்லை. அந்தளவிற்கு சமூக அக்கறை குறைய காரணம் என்ன?

நண்பர்5: இன்று, நிறைய மக்களின் நோக்கமே பணம் சம்பாதிப்பதும், பொழுதுபோக்கு விஷயங்களுக்கு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதுமாகவே இருக்கிறது. சமூகமும், பல தரப்புகளிடமிருந்து அதை தான் நமக்கு கற்றுத் தருகின்றது. பள்ளி, கல்லூரி செல்வது அனைத்துமே சம்பாதிக்கதான் என்ற நிலை. நாம் பணத்தின் பின் செல்கிறோமே தவிர, மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும் பின் இல்லை. சிலர் சமுதாயத்தில் நல்லது செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், அது பெரியளவு வெளியே தெரிவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக, இதையெல்லாம் உணரக் கூடியவர்கள் அமைதியாக, நமக்கேன் வம்பு என்று செல்கின்றனர் (“The world is bad not because of violence of bad people but because SILENCE of good people”) அல்லது, தற்போதைய நிலைமை இப்படி இருக்கிறதே என்று விமர்சித்து விட்டு செயல்கள் ஏதும் இன்றி இருந்துவிடுகிறார்கள்.

நண்பர்2:  அருமையாக சொன்னீர்கள்.

நண்பர்5: கொஞ்சமாவது மாற்றம் வரவேண்டுமெனில், நல்ல மனிதர்கள் விமர்சனம் மட்டுமே செய்வதை விடுத்து, ஏதேனும் சில நல்ல விஷயங்களையாவது செய்யத் தொடங்க வேண்டும். அவ்வாறு பல நல்ல மனிதர்கள் தனியாகவோ, சேர்ந்தோ, சிறிது சிறிதாக பல நல்ல வேலைகள் செய்வது, நல்வழியில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இது உடனடியாக மாற்றத்தை காண்பிக்க கூடியது அல்ல. இது ஒரு நீண்ட பாதை, ஆனால் அதை தொடங்க இதுவே தருணம்.

— x —-

(இந்த B+ வாட்ஸப் குருப்பில் நீங்களும் சேர விரும்பினால், உங்கள் பெயர், ஊர், மொபைல் எண்ணையும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)

 

Likes(2)Dislikes(0)
Share
Oct 142015
 

 

PUBLISHED by catsmob.com

இரண்டு உயரமான மலைக்கு நடுவே ஒரு சின்ன நடைப் பாலம் இருக்கிறது. அந்த இடத்தில் ராமு, ஒரு இளம் திருடன், ஒரு வயதான திருடன் என மூன்று பேர் வந்து மாட்டிக் கொள்கின்றனர். மூன்று பேரிடமும் மூன்று துப்பாக்கிகள் உள்ளன. மூவருள் யாரேனும் ஒருவர் மட்டும் தான் உயிருடன் திரும்பி செல்ல முடியும். அதனால் ஒவ்வொருவரும் மற்ற இரண்டு பேரை சுட்டுவிட்டு கீழே செல்ல துடிக்கின்றனர்.

ராமு மூன்று முறை சுட்டால், ஏதாவது ஒரு முறை தான் சரியாக இலக்கைத் தாக்க முடியும்.

இளம் திருடன் மூன்று முறை சுட்டால், ஏதாவது இரண்டு முறை சரியாக இலக்கைத் தாக்க முடியும்.

ஆனால் வயதான திருடன் திறமைசாலி. அவன் குறி தப்பவே தப்பாது. ஒரு முறை குறி வைத்துச் சுட்டால், எதிர் பக்கத்தில் உள்ள ஆள் காலி.

மூவரும் ஒரு போட்டிக்கு ஒத்துக் கொள்கின்றனர். போட்டியின் விதி இது தான்.  ராமுவில் தொடங்கி, பின் இளம் திருடன், பின் முதிய திருடன் என்ற வரிசையில் அவர்கள் மூவரும் ஒவ்வொருவராக, ஒரு முறை மட்டும் சுட வேண்டும். மூன்று பேரும் ஒவ்வொருவராக, வரிசையாக சுட்டே ஆக வேண்டும்.

ராமு அப்போது யோசிக்கிறான். அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க அவன் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது ராமுவின் எந்த மாதிரி செயல்பட்டால் அவனுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகமாகும்?

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

கடந்த ஆகஸ்ட் மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

21200

சரியான பதில் அளித்தவர்கள்:

வசந்த் காளிராஜ், ஸ்ரீகாந்த், பூபதி

Likes(9)Dislikes(2)
Share
Share
Share