Aug 152015
 

1

தன்னுடைய தேவைகள், லட்சியங்கள், மற்றும் ஆசைகள் எவை என பகுத்தறிந்து தேவைகளுக்கும் லட்சியங்களுக்கும் முன்னுரிமை அளித்து வாழ்பவர்கள் அடுத்து வரும் சந்ததியினருக்கு வழிக் காட்டியாக இருப்பார்கள். அதுபோல் ஓர் உன்னத மனிதர் தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

இவரைப் பற்றி லட்சக்கணக்கான பதிவுகளை பல ஜாம்பவான்கள் எழுதி முடித்துவிட்ட நிலையில், எழுத்துலகில் சிறு குழந்தையாக தவழ்ந்துக் கொண்டிருக்கும் நாமென்ன பெரியதாக எழுதிவிட முடியுமென நான் நினைக்கையில், நமது B+ இதழின் சில வாசகர்களின் விருப்பத்திற்கு இனங்க, இவரைப் பற்றி சிலவற்றை இந்த மாதம் பதிவு செய்து, இவருக்கு காணிக்கையாக்குவது சரியாகத் தான் இருக்குமென தோன்றியது.

ராமேஸ்வர மன்னில் சாதாரன குடும்பத்தில் பிறந்த இவர், ஞானக் கதிரவனாக மாறி கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் இதயக் கோயிலில் கனவுக் கதாநாயகனாக குடிக்கொள்ள செய்த தண்ணிகரில்லா சாதனைகள், பல நூற்றாண்டுகளுக்கு பேசப்பட இருக்கும் மாபெரும் சரித்திரம்.

அரசு பள்ளியிலும், கல்லூரிகளிலும் பயின்றே, இத்தனை மாபெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரராய் ஆன கலாம் அவர்களின் ஆரம்பக் காலம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. பல மைல் தூரம் கல்வி கற்பதற்கு நடைப்பயணம், பல தடைகள், பல சோதனைகள் என அவர் சந்தித்த பிரச்சினைகள், அவரை பக்குவபடுத்தியது. ராமேஸ்வர நகரத்து மக்களுக்கு, தனது சிறு வயதில் நாளிதழ் கட்டுகளை எடுத்து வந்து வினியோகித்த நாள் முதலே, தனது செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கத் தொடங்கினார் என்றே கூற வேண்டும்.

2007 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடிமகனாக, ஐரோப்பா பாராளுமன்ற கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய கலாம் அவர்கள், 3000 வருடங்களுக்கு முன்னரே, கணியன் பூங்குன்றனார் கூறிய, “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” வரியை அக்கூட்டத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டு உரைக்க, “தாம் கேட்டவற்றிலேயே மிகச் சிறப்பான பேச்சுகளில் ஒன்று” என்று அக்கூட்டத்தின் தலைவரின் பாராட்டுதலை கலாம் பெற்று “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று உலகரியச் செய்தார்.

தேச நலனுக்கு என்றே தியாகம் செய்த இவரின் வாழ்க்கை “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிக்கு ஏற்றார் போல் அமைந்ததினால், எந்த ஒரு தமிழனுக்குமே இதுவரை கிட்டாத பேரும், பெருமையும், அன்பும், அங்கீகாரமும் நம் ஒட்டுமொத்த தேசமும் இவருக்கு வழங்கி, இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

இவ்வாறாக மகாத்மாவாக நம்மில் வாழ்ந்து சென்ற ஒருவரின் வாழ்க்கை சரித்திர புத்தகத்தின் சில பக்கங்களையாவது புரட்டுவது நிச்சயமாக நம் வாழ்வை செம்மைப்படுத்தும் என்பதால், என் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட, இவரின் மூன்று சம்பவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

2

முதல் சம்பவம்: என் தந்தை, பண்ணிரண்டு வருடங்களுக்கு முன், ராமேஸ்வரத்திற்கு, எங்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்து சென்றார். கலாம் ஐயா வீட்டையும் நாங்கள் அனைவரும் சென்று காண நேர்ந்தது, எங்கள் பாக்கியம் என்றே கூற வேண்டும். அப்போது அவர் குடியரசு தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். நம் தேசத்தின் பெரும் சாதனையாளர் ஒருவரின் வீடு என்ற சுவடுகள் கொஞ்சம் கூட இல்லாதிருந்தது, பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

பெரிய தடுப்பு சுவர், காவல் துறையினர், செக்யூரிடி ஆள், ஆடம்பர வாகணம் என ஒரு வீ.ஐ.பி வீட்டின் எந்த வித அடையாளமும், கலேபரமும் இன்றி அமைதியான எளிமையான ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தின் பிம்பம் மட்டுமே பிரதிபலித்தது. நாங்கள் சென்றபோது, அவர்கள் அண்ணனும், அவரது குடும்பத்தினர் மட்டுமே அங்கு இருந்தனர்.

ஒரு ஜனாதிபதியின் வீடு போன்றே தெரியவிலையே என்ற எங்களது கேள்விக்கு, கலாம் அவர்கள் வீட்டிற்கு வருவதெல்லாம் மிகவும் அரிதென்றும், தேசப்பணிகளில் அவரது வாழ்வை அர்ப்பணித்து விட்டதாகவும், வீட்டைப் பற்றிய எண்ணமே இல்லாமல், நாட்டைப் பற்றிய எண்ணங்களே அவருக்கு உண்டு என்றும் அவர் அண்ணன் தெரிவித்தார். இந்த எளிமையிதான், பல கோடி இதயங்களை தன் வசப்படுத்திக் கொள்ள அவருக்கு காரணமாயிருந்தது. அந்த சாட்டிலைட் நாயகனை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அன்று முதல் என்னுள் தொற்றிக் கொண்டது.

இரண்டாவது சம்பவம்: பல வருடங்களாக அவரை ஒருமுறையாவது காண வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது. 2012ஆம் வருடம், சென்னை கீழ்பாக்கத்தில், 35ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடைப்பெற்றது. அங்கு ஒரு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்க கலாம் அவர்கள் வர இருந்ததினால், நல்ல கூட்டம் அன்று. மேடையில் அவர் பேச்சைக் கேட்க அந்த கூட்டத்தில் ஒருவனாக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன். கலாம் அவர்கள் மேடையில் அவருக்கென்ற நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேடையின் இரு பகுதிகளிலும் இரு மைக் ஸ்டாண்டுகள் இருந்தன.

வழக்கமாக தலைமை ஏற்பவர்களைப் பற்றி பலர், பலவற்றை பேசியபின் தான், கடைசியில் விழா நாயகர்கள் பேசுவர். இந்த வழக்கத்தை ஒரே நிமிடத்தில் உடைத்தார் கலாம் அவர்கள். மேடையின் இடதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்ட மைக்கில் ஒருவர் கலாம் பற்றி பெருமையாக கவிதை வடிவில் பேசத் தொடங்கினார், இரண்டு-மூன்று வாக்கியங்கள் தான் படித்திருந்தார். அதற்குள் கலாம் அவர்கள் வேகவேகமாக சென்று, வலதுபுறம் நிறுத்தி வைக்கப்பட்ட மைக்கில் சிரித்துக்கொண்டே நிற்க, கவிதை வாசித்தவரும், சிரித்துக்கொண்டே சென்று அமர்ந்துவிடுகிறார்.

வீண் புகழ்ச்சியும், பாராட்டும் தமக்கு தேவையில்லை என்பதை அந்த கவிஞரின் மனதை காயப்படுத்தாமல் நாசூக்காக தெரிவித்த கலாம் அவர்களின் அந்த செயல், அவர் பேச தொடங்குவதற்கு முன்பே, கூட்டத்தினரின் பெரும் பாராட்டை கைத்தட்டல் மூலம் பெற்றுத் தந்தது.

ஒரு மனிதனின் சாதனைகளைப் பற்றி பெருமையாக அவரே பேசத் தேவையில்லை, அவர் சாதனைகளே, அவரைப் பற்றி பேசும் என்ற வாக்கியத்தை ஒரு சில நொடித்துளிகளில், அன்று கலாம் அவர்கள் எங்கள் அனைவரின் மனதிலும் சொல்லாமலேயே, தன் செயல் மூலம் ஆழமாக விதைத்தார்.

மூன்றாவது சம்பவம்: எங்கள் அலுவலகத்தில் உள்ள அந்த மனிதரைக் கண்டாலே, அனைவரும் ஓடி ஒதுங்கிச்சென்று விடுவோம். அப்படி ஒரு கோபக்காரர். சின்ன விஷயத்திற்கு கூட படு டென்ஷனாகிவிடும் பேர்வழி. சமீப காலமாக பல மாற்றங்கள் அவரிடம். மிகவும் அமைதியாக, மவுன சாமியாராகவே மாறியிருந்தார்.

காரணத்தை அவரே விளக்கினார். “கலாம் அவர்கள் இறந்த பின் தான், அவருக்கு எத்தனை மரியாதை, முகம் தெரியாதவர்களிடமிருந்து கூட இரங்கள், அஞ்சலி இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவேலை நான் இறந்து போனால், எனக்கு என்ன நடக்கும் என எண்ணிப்பார்த்தேன், எனது வீட்டில் உள்ளவர்களிடம் கூட அத்தனை வருத்தம் இருக்காது என தோன்றியது. எதற்காக வாழ்கிறோம், நமக்கும் அதுபோன்ற மரியாதைகளை கொஞ்சமாவது, யாராவது ஒருவரேனும் கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்குமென தோன்றியது. அதனால் கலாம் அவர்களின் பண்புகளை நானும் பின்பற்றலாம் என்று முடிவெடுத்து மாறிவிட்டேன்” என்றார்.

இவரைப் போன்று பல மனிதர்கள் கலாம் ஐயா அவர்களின் இறப்பின் மூலம் மாறியிருப்பதை, அவர்கள் கூறியே நம்மில் பலரும் கடந்த ஒரு மாதமாய் கேட்டிருப்போம்.

இப்படி கலாம் அவர்கள் குறித்து, எத்தனையோ அருமையான நிகழ்வுகளும், அனுபவங்களும், கட்டுரைகளாகவும், அவரே பேசிய வீடியோக்களாகவும், வலைதளங்களிலும், வாட்ஸப்புகளிலும் கடந்த மாதம் குவிந்தவன்னம் இருந்தன. அவைகளுள், நமக்கு எக்காலத்திற்குமே பாடமாக பயன்படக்கூடிய சில முக்கியமான சம்பவங்களும் இருந்தன.

உதாரணத்திற்கு, தலைமை பண்பு என்பது என்ன என்றும் ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, “மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து, ஏதாவது நல்லவற்றை கொடுத்துக்கொண்டே இருங்கள்” என்ற அவரது ஒரு பேட்டி சிறப்பாக எடுத்துக்கூறியது.

அடுத்து, பைலட்டாக நினைத்த தன் வாழ்வின் லட்சியம், கைக்கெட்டிய தூரத்தில் தகர்ந்த சோகத்தில், ஹ்ரிஷிக்கேஷ் சென்று, சிவானந்தரை சந்தித்த அனுபவத்தின் மூலம் தோல்வியை எவ்வாறு சமாளிக்கலாம் என்று தெளிவாக்கியது.

முக்கியமாக பள்ளி வயதில், தனது ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணி ஐயர் அவர்கள், பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை பிராக்டிக்கலாக பறவைகள் பறக்கும் இடத்தில் வைத்து விவரித்து கூறியது, தனக்கு ராக்கெட் விஞ்ஞானத்தில் ஆர்வத்தை தூண்டியது என்ற சம்பவம், ஒவ்வொரு ஆசிரியரும் இது போல் நினைத்தால் பல கலாம்களை நமக்காக உருவாக்க முடியும் என உணர்த்தியது.

அனைத்திற்கும் மேலாக, நம் சமுதாயம் நேர்மையாக, அழகாக மாற வேண்டுமெனில், தாய், தந்தை, ஆசிரியர்கள், இந்த மூவரின் பங்கு தான் முக்கியம் என்று ஆழமாக அறிவுரை வழங்கியது என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மாணவர்கள், கல்வி என்று மட்டுமன்றி மரம் வளர்த்தல், விவசாயம், அறிவியல் மற்றும தொழில்நுட்பம் முன்னேற்றம், நதிநீர் இனைத்தல், கிராமப்புர வளர்ச்சி போன்ற பணிகளுக்காக வாழும்போது, இவர் கூறி வந்த மெசேஜ்கள், அவர் இறந்தபின் காட்டுத்தீயாய் பரவின.

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற இவரின் புகழ்பெற்ற வரி, இவர் புகைபடங்களுடன் சேர்ந்து, கட்-அவுட்களாக, பேணர்களாக தமிழகத்தின் பட்டித்தொட்டிகளெல்லாம் பரவி இவரது புகழை கோலோச்சின.

ஒரு சாதாரன மனிதனின் இறப்பை, அவனது குடும்பத்தினரும், நண்பர்களும் சிறிது நாட்களுக்கு போற்றுவர். ஆனால் அவதாரங்கள், பல நூறு வருடங்கள் தாண்டியும் மக்கள் மனதில் வாழ்ந்து வருவதை சரித்திரம் நமக்குச் சொல்கிறது. கலாம் ஐயா ஒரு அவதாரப்புருஷன் என்பதால், நம் மனதில் என்றென்றும் அவர் வாழ்வது உறுதி.

அறிவியல் தாண்டிய ஆன்மீகம், மதம் தாண்டிய மனிதம், தமிழினம் தாண்டிய தேசியம், பணிவையும், எளிமையையும் வைத்தே செய்த பயணம், பொருள்களின் மீதும், ஏன் புகழின் மீதுமே பற்றில்லாத சுயநலமற்ற சித்தாந்தம், என அவர் உருவாக்கிச் சென்ற புதிய பாதையில் “இந்தியா 2020” என்ற கனவு அனைத்து தேசபக்தர்களின் மனதிலும் எழுச்சி தீபங்களாய் உருவானது.

கலாம் ஐயா, “அக்னிச் சிறகுகள் புத்தகத்தில், உங்களது அன்னையைப் பற்றி பாராட்டி எழுதிவிட்டு, ‘என் பெருமைக்குரிய தாயே, மீண்டும் சந்திப்போம் அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்’ என முடித்திருந்தீர்கள். அவ்வாறே அந்த தீர்ப்பு நாளில் உங்களது அன்னையை சந்தித்து, ‘அன்னையே, நீங்கள் என்னை படைத்த நோக்கத்தை நான் நிறைவேற்றிவிட்டேன்’ என்று தெரிவித்து மகிழ்ந்திருப்பீர்கள்” என நம்புகிறோம்.

“பெருமைக்குரிய தமிழனாய், உண்மையான இந்தியனாய் நீங்கள் விதைத்த எண்ண விதைகளின் மூலம், அக்னிப்புத்திரர்களாகிய நாங்கள், எங்களால் முடிந்த பல மகத்தான காரியங்களை நம் தேசத்திற்காக செய்து, எங்களது நியாயத் தீர்ப்பு நாளில், உங்களை சந்திக்க, உங்களது ஆசிகளை கோருகிறோம்”.

மீண்டும் சந்திப்போம்..

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(12)Dislikes(0)
Share
Aug 152015
 

3

இந்த மாத B+ இதழ் சுதந்திர தினத்தை ஒட்டி வருவதால், நாட்டு மக்களுக்காக தொண்டு செய்யும் எவரையேனும் பேட்டி எடுத்து வெளியிடலாமா என்று தேடியபோது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் P.கனேசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

ராணுவத்தில் பணிப்புரிந்த போது மட்டுமன்றி, ஓய்வு பெற்றப்பின்னும் பல அரும்பணிகளை செய்து வரும் திரு.கனேசன் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காணலாம்.

வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.

வணக்கம், நான் கர்னல் P.கனேசன். திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் பிறந்தேன். படித்தது நன்னீலம் தொடக்கப் பள்ளியில். பின்னர், டிப்ளமோ செட்டினாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் படித்தேன். படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தேன். 1962ஆம் வருடம் சீனாவுடனான போர் முடிந்தபோது, இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக (LIEUTENANT) சேர்ந்தேன்.

உங்கள் ராணுவ பணிகளில் முக்கியமான அனுபவம் பற்றி..

இந்திய ராணுவம், அண்டார்டிக்கா (தென் துருவ) பகுதியில் “தக்‌ஷின் கங்கோத்ரி” என்ற பெயரில் ஒரு ஆய்வுதளத்தை அமைத்து உள்ளது. நம்மைப் போன்றே 52 மற்ற நாடுகளும், அங்கு ஆய்வு நடத்துகின்றன. 1987இல் அந்த பகுதிக்கு ஆய்வுக்குழு தலைவராக நம் ராணுவத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சென்றேன். 480 நாட்கள் அங்கு பணிப்புரிந்து திரும்பி வந்தேன். என்னுடன் சேர்ந்து 14 மற்ற ராணுவ ஊழியர்களும் வந்தனர். இந்தியாவின் 5ஆவது குளிர்கால குழு என்று எங்களுக்கு பெயர். அது என் வாழ்வில் ஒரு முக்கியமான அனுபவம்.

தென் துருவத்தில் நீங்கள் பணிப்புரிந்த அனுபவம் பற்றி..

தென் துருவம் கொடுமையான, பனி நிறைந்த, குளிர் நிறைந்த கண்டம். அதிசயமான உலகம். அங்கு பணி செய்த, ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியத்தை சந்தித்தேன். அங்கு பனியின் அடர்த்தி (ICE THICKNESS) சுமார் 5000மீட்டர் வரை கீழே படர்ந்திருக்கும். அதற்கு கீழ் தான் மண்ணையே பார்க்க முடியும். சாப்பாட்டில் பால், தயிர், காய்கறி எல்லாம் அந்த 480 நாட்களாக எங்கள் குழு பார்த்ததே இல்லை. இத்தகைய சூழ்நிலையிலும், முழு ராணுவ கட்டுப்பாட்டுடன் மகிழ்ச்சியாகவே அங்கு பணிப்புரிந்தோம்.

4

ராணுவ வாழ்க்கைப் பற்றி..

ராணுவத்தில் எப்போதுமே, இளமையாகவும், துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். நான் தினமும் 20கிமீ ஓடுவேன், எனது ஜவான்கள் கூட சில சமயம் ஓட மாட்டார்கள், நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.

ஒருமுறை எனது உடலின் முழு திறனை சோதித்துப்பார்க்க, ஒரே நாளில் 20கிமீ ஓட்டம், ஒன்னறை மணி நேரம் கூடைப்பந்து, பின் 5கிமீ நீச்சல் ஆகியவற்றை செய்தேன். இந்த மூன்றையும் தொடர்ந்து 5மாதம் செய்தேன். ராணுவத்தில் நீச்சல், கூடைப்பந்து, தடகளப் போட்டிகள் ஆகியவற்றில் சிறந்த வீரனாக தேர்வு செய்யப்பட்டேன்.

பெங்களூரில் ராணுவ பொறியாளர் படையின் பயிற்சி மையம் உள்ளது (MEG). அங்கு 1000 கணக்கான ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தருகிறார்கள். அந்த பயிற்சி மையத்தில், 3ஆண்டுகள் பயிற்சி அதிகாரியாக பணிப்புரிந்துள்ளேன்.

பின்னர் தென் துருவத்தின் ஆய்வு குழுவிற்கு தலைவர் என்ற வாய்ப்பு வந்தவுடன், என் சொந்த ஊரான சன்னாநல்லூருக்கு சென்று அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து, தென் துருவத்தில் தூவினேன். அதே போல் தென் துருவத்திலிருந்து கிளம்புகையிலும், அங்கிருந்து என்ன எடுத்து வரலாமென யோசித்தபோது, சுமார் 50 கோடி வருடங்கள் உறைபனியாய் கிடந்த 5கல் பாறைகளை நம் ஊருக்கு எடுத்து வந்தேன். அந்த பாறைகள் ஒவ்வொன்றும் 1டன் எடை இருக்கும்.

அந்த 5 கற்களையும் என்ன செய்தீர்கள்?

அந்த 5 கற்களையும் தமிழகத்தில் 5 வெவ்வேறு இடங்களில் வைத்து “அகத்தூண்டுதல் பூங்கா” (INSPIRATIONAL PARK) என்று அமைத்துள்ளேன். யாரேனும் இந்த கற்களை பார்க்கும்போது, தென் துருவத்திலிருந்து தெற்கு பசிஃபிக் கடல், தெற்கு அட்லாண்டிக் கடல், இந்திய பெருங்கடல், அரேபியக் கடல் என சுமார் 15000 கிலோமீட்டர் தாண்டி சன்னாநல்லூர் வரை அந்த காலத்திலேயே கொண்டு வர முடியும் என்றால், ஒரு மனிதன் நினைத்தால் எந்த விதமான லட்சியத்தையும், இலக்கையும் அடையலாம் என்ற எண்ணம் வரும். ஏனெனில் எண்ணங்கள் தான் வாழ்வை தீர்மானிக்கிறது.

கற்களை எந்தெந்த இடங்களில் வைத்துள்ளீர்கள்?

ஒரு கல்லை பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைத்துள்ளேன். ராணுவத்தில் சேரும் வீரர்கள் அந்த கல்லை பார்க்கையில் ராணுவத்தை பற்றி பெருமையடைய வைக்கும் எண்ணத்தில் அங்கு வைத்தேன்.

இரண்டாவது கல்லை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் என்ற ஊரில், 10ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள வேதாந்த மஹரிஷி ஆசிரமத்தில் வைத்தேன்.

மூன்றாவது கல்லை எனது கிராமமான சன்னாநல்லூரில் வைத்துள்ளேன். கடைசி இரண்டு கற்களை சென்னை அண்ணாநகரில் உள்ள எனது வீட்டில் வைத்துள்ளேன்.

ராணுவத்தில் சேர நினைப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ராணுவம் ஒரு அற்புதமான அமைப்பு. ஆனால் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்ட பின் தான் சேர வேண்டும். சிலர் அங்கு போனபின், அந்த சவால்களை கண்டு தாக்குபிடிக்க முடியாமல் ஓடி விடுவர். பெருமைக்கும் நாட்டிற்கும் பணி செய்ய நினைத்து வருபவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கு பணி செய்வர். அதை மக்களிடன் தெளிவு படுத்தவே, “ராணுவம் அழைக்கிறது” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும், கட்டாயமாக மூன்று ஆண்டுகளேனும் ராணுவத்தில் பணிப்புரிய வேண்டும். அவ்வாறு செய்தால், நம் நாட்டில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

நீங்கள் இரண்டு போர்களில் கலந்துக் கொண்டதைப் பற்றி..

நான் ராணுவத்தில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே ஒரு போர் 1965 ஆம் ஆண்டு வந்தது. அந்த போரில், பாகிஸ்தான் பகுதிக்குள் வெகு தூரம், எங்களது படை சென்றது. மேற்கு பாகிஸ்தானின் சியால்கோட் பகுதி வரை சென்று தாக்கினோம். அது ஒரு அருமையான அனுபவம்.

இரண்டாவதாக டாக்கா 1971 இன் போர். கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வெற்றிப் பெற்றோம். அந்த போரின் முடிவில் தான், கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது. போர் என்றால், வெற்றியும் வரும், தோல்வியும் வரும். அதிர்ஷ்டவசமாக நான் கலந்துக்கொண்ட இரண்டு போரிலுமே, நான் வெற்றிப் பெற்ற பக்கத்திலிருந்தேன்.

ராணுவத்தில் அத்தனை கஷ்டங்களை அனுபவித்து நம் தேசத்தை காக்கும் உங்களைப் போன்ற ராணுவ வீரர்களின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கிறது?

மக்களின் மனதில் இன்றைய காலத்தில் சுயநலம் பெருகி இருப்பது போல் தோன்றுகிறது. மக்களின் மனநிலை மாற வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்த அரசியல் சட்டமும், தலைவர்களும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. தனி மனித மாற்றம் வரவேண்டும். நாட்டுப்பற்று உடைய கல்வியை நாம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் இதெல்லாம் நடக்கும்.

உங்களது எதிர்கால திட்டம் என்ன?

கல்வி நிறுவனங்களில் கற்பதன் நோக்கம் என்ன என்று கேட்டால், மனிதனின் அறியாமையை நீக்க வேண்டும் என்ற பதில் வரும். மனிதன் இயற்கையில் மாபெரும் சக்தி படைத்தவன். ஆனால் அறியாமையால் மூடப்பட்டுள்ளான். அந்த அறியாமையை நீக்கும்போது, தான் ஒரு மகான் என்று அவனுக்கு தெரியவருகிறது. அதனால் மக்களிடம் உள்ள அறியாமையை எவ்வளவு நீக்க முடியுமோ, அவ்வளவு நீக்க பணி செய்வேன்.

அதைத் தவிர, என் சொந்த ஊரில், சொந்த நிலத்தில் வைத்துள்ள “அகத்தூண்டுதல் பூங்கா” சற்று வித்தியாசமானது. அந்த கிராமத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன்.

எனது பெற்றோர்களின் பெயரில் “பாவாடை தெய்வானை” பல்தொழில் பயிலரங்கம் என்ற கூடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். வருடத்திற்கு 4-5 ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை இதன் மூலம் உயர்த்தலாம் என்று நினைத்துள்ளேன். பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமே, நம் கிராம மக்கள் உலகலவில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பது தான். ஒத்த ஆர்வமும் நோக்கமும் உள்ள மற்றவர்களும் சேர்ந்தால் இந்த பணி விரைவில் நடக்கும்.

இந்த சுதந்திர தினத்திற்கு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இந்தியா ஒரு மாபெரும் தேசம். பல நூறு வருடங்களுக்கு முன்பே, பல நாடுகளுக்கு வழிகாட்டிய தேசம். யுவான் சுவாங் சீனாவிலிருந்து, மாத கணக்கில் பயணம் செய்து இந்திய மண்ணை தொட்டு வணங்க வந்தார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் படிக்க வந்துள்ளனர். நம் நாட்டின் பழைய பெருமைகள் அனைத்தையும் இளைஞர்கள் உணர்ந்து, திரும்பவும் பழைய நற்பெயர் உருவாவதற்கு பாடுபட்டால், கண்டிப்பாக நம்மால் உலக அரங்கில் முன்னேற முடியும்.

இரண்டாவது, மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது. முயற்சி செய்கிறவர்கள் தான் வெற்றி பெருகிறார்கள். தாழ்வு மனப்பாண்மை இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதை உணர வேண்டும்.

மனிதனின் செயல்பாடுகளுக்கு புறக்காரணங்கள், வெளியிலிருந்து தடைகள் ஆகியன இருக்க முடியாது. அவை அனைத்துமே, நமது எண்ணத்திலிருந்து தான் உள்ளது. மனதை திடமாகவும், உறுதியாகவும் வைத்து ஒரு காரியத்தை செயல்படுத்தும்போது, உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

Likes(5)Dislikes(0)
Share
Aug 152015
 

kavithai

 

பாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே,

ராமணால் அரியப்படும் ராமேஸ்வரம்

இனி உம்மால் உயர்வு பெரும்

 

காலம் உம்மை காயப்படுத்தலாம்

காலத்தையே திரும்பி நின்று

காலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே

எங்கே போனீர்?!

 

பிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல்,

ஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே

பொக்ரானில் பாரதத்தை பாதுகாத்து,

எம் மண்ணின் தலைக்குடிமகனாய்

பாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே

 

மத மாச்சர்யங்களைக் களைந்து

யாதும் ஊரே யாவரும் கேளீர் என சமத்துவத்தைப் படைத்து

மக்கள் மனதில் மகானாய் வியாபித்துவிட்டீர்

 

உம்மால் எப்படி முடிந்தது

ஒரு மனிதனால் இது சாத்தியமா?!

எம் மண்ணில் நீர் புதைக்கப்படவில்லையைய்யா

எல்லோர் மனதிலும் வேரூன்றி விருட்சமாய் விதைக்கப்பட்டுள்ளீர்!

 

கனவு காணுங்கள் என்று உறங்காமல்,

தூங்கி கிடந்தவரை தட்டி எழுப்பிவிட்டு

நீர் கண்ட கனவை கானாமலே உறங்கிவிட்டிர்!

 

அக்டோபர் பதினைந்து மாணவர்கள் தினம்

உம்மால் மதிக்கப்பட்ட நாங்கள் காணுவோம்

நீர் கண்ட கனவை நாங்கள் காணுவோம்

வல்லரசாகும் எம் பாரதம்!

 

தமிழரே, தமிழனை தலை நிமிர்த்தியவரே

பொக்கிஷமாய் உம்மை போற்றிப் புகழ்கின்றோம்

நீர் வாழ்க..!!

– சிவரஞ்சனி விமல்

Likes(10)Dislikes(0)
Share
Aug 152015
 

 

Puzzle

நம் நாட்டு சிறந்த விஞ்ஞானி ஒருவரை 5 தீவிரவாதிகள் கடத்திச் சென்று காஷ்மீரில் ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கின்றனர். ஒரே ஒரு ராணுவ வீரர் வந்து அவரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என நம் அரசிடம் தெரிவிக்கின்றனர்.

வீரமும் விவேகமும் நிறைந்த மேஜர் முகுந்த் அங்கு சென்று தீவிரவாதிகளைக் கொன்று, விஞ்ஞானி இருக்கும் அறையை அடைந்து விடுகிறார். விஞ்ஞானி இருக்கும் அறை ஒரு வித்தியாசமான பூட்டுடன் மூடப்பட்டிருக்கிறது.

ஒரு ஐந்து இலக்க எண்ணின் மூலம் தான் அந்த பூட்டைத் திறக்க முடியும். அந்த ஐந்து இலக்க எண்ணைக் கண்டுபிடிக்கும் வழியும் அங்கு கிடைக்கிறது.

அந்த ஐந்து இலக்க எண்ணில்

  • முதல் இலக்கம் எத்தனை 0 உள்ளது எனவும்
  • இரண்டாம் இலக்கம் எத்தனை 1 உள்ளது எனவும்
  • மூன்றாம் இலக்கம் எத்தனை 2 உள்ளது எனவும்
  • நான்காம் இலக்கம் எத்தனை 3 உள்ளது எனவும்
  • ஐந்தாம் இலக்கம் எத்தனை 4 உள்ளது எனவும் குறிக்கிறது.

(உதாரணம்: அந்த எண்ணில் நான்கு 0 இருந்தால், 40000 என்று இருக்கும்)

தவறான எண்ணைப் போட்டாலோ, பூட்டை உடைத்தாலோ, அங்குள்ள குண்டுகள் வெடிக்கும் சூழ்நிலை உள்ளது.

மேஜர் முகுந்த் அந்த ஐந்து இலக்க எண்ணை கண்டுபிடித்துவிட்டு, விஞ்ஞானியை காப்பாற்றுகிறார். உங்களால் அந்த எண்ணை கண்டுபிடிக்க முடிகிறதா?

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

கடந்த மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

6 என்ற எண்ணை திருப்பி வைத்தால் 9 என்ற எண்ணும் வரும். அதனால் 9 என்ற எண்ணிற்கு தனியாக ஒன்று வேண்டாம்.

சரியான பதில் அளித்தவர்:

சரவணக்குமார் அன்பழகன்

 

Likes(1)Dislikes(0)
Share
Aug 152015
 

Story

நேரம் காலை 7.30 மணி.

முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது ஒரு 30 இருக்கும். ஒரு கணிணி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மென்பொருள் எழுதும் வேலை. கேளம்பாக்கம், சென்னை. நடுத்தர வர்க்க மக்கள் கடனில் கட்டிய வீடுகள். ஒன்று அமரரான அவனது அப்பாவுடையது. அந்த வீட்டு மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். கீழே முகேஷும் அவனது அம்மாவும் குடியிருந்தார்கள்.

மாடி வீட்டு அனு, அழகான  7 வயது பள்ளி சிறுமி.  ரொம்ப ஸ்மார்ட். அணில் போல துறு துறு. பள்ளிசீருடையில், தூக்க முடியாமல் , புத்தக பையுடன் மாடியிலிருந்து இறங்கினாள். 

“ஹாய் அனு, ஸ்கூல் கிளம்பியாச்சா!” முகேஷின் கேள்விக்கு அனுவின் “ஆமா!” என்ற அரைகுறை முனகல்.

வாசலில், அனுவைப்போலவே 7-8 சிறுவர் சிறுமியர், பள்ளி பேருந்துக்காக காத்துக்கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்.. இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

வழக்கம் போல் ஸ்கூல் பஸ் 7.30 மணிக்கு வந்தது. வந்த பஸ், வழக்கம் போல் ஒரு 30 அடி தள்ளி நின்றது. பசங்கள், வழக்கம் போல் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி, ‘நான் முந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். வழக்கம் போல் அனு கொஞ்சம் பின்னால்.

இது தினம் நடப்பது வழக்கம் தான். இதை பார்த்துக்கொண்டே இருந்த முகேஷ், ஒரு நாள், அனுவிற்கு உதவி செய்ய நினைத்தான். 

அனுவின் அருகில் சென்று கேட்டான்: “ஆமாம்! அனு ! நீ பஸ் பிடிக்க ஏன் ஒரு நாளைப் போல ஓடற? ஏன் உனக்கு சீட் கிடைக்காதா?”

“ஏன் கேக்கறீங்க அண்ணா ? எல்லோருக்கும் சீட் இருக்கே!” – அனு

“பின்னே ஏன் நீ முன்டியடிச்சிகிட்டு ஓடற?” – முகேஷின் அடுத்த கேள்வி.

“முதல்லே வண்டியிலே ஏறணும்! அதுக்கு தான்.”- அனு

“ஏன் முதல்லே வண்டியிலே ஏறணும்?” – விடுவானா முகேஷ்.

“இது வரைக்கும் நான் பஸ்லே முதல்லே ஏறினதே இல்லே. எல்லாரும் எனக்கு முன்னாடியே எறிடறாங்க..” சொல்லும்போதே அனுவின் கண்கள் குளமானது.

“சரி! சரி , கண்ணை தொடச்சுக்கோ. நீ ஏன் முதல்லே ஏறணும்? என்ன கிடைக்கும் ? சாக்லேட் கிடைக்குமா ? வேறே எதாவது பரிசு கொடுப்பாங்களா என்ன ?”

அனு கொஞ்சம் யோசித்தாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லியே!”. 

“அப்போ நீ ஏன் அனு ஓடணும்?” முகேஷ் கேட்டான்.

அனு மீண்டும் யோசித்தாள். “தெரியல்லையே!”
புரிந்ததோ இல்லையோ, குழந்தை அனு ஓடி விட்டாள். பேருந்திலும் ஏறிக்கொண்டு விட்டாள்.

****
அடுத்த நாள் காலை.

வழக்கம்போல் வாசலில் முகேஷ் அவனது வண்டியை துடைத்துக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து கீழே இறங்குகையில், அனுவின் “ஹலோ அண்ணா” குரல். “ஹாய் அனு’ என்று முகேஷ் பதில் குரல் கொடுத்தான். அவன் அருகில் அனு வந்து நின்று கொண்டாள்.

வழக்கம் போல் பஸ் வந்தது. பசங்க அனைவரும் ஓடினர், அனுவைத்தவிர. இன்று அவள் ஓட வில்லை.  நிதானமாக போய் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு முகேஷை பார்த்து கையாட்டினாள்.

முகேஷ்க்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனுவிற்கு ஒரு பெரிய விஷயத்தை ரொம்ப சுலபமாக விளக்கிய திருப்தி. தன்னைத்தானே “நீ பெரிய புத்திசாலிடா முகேஷ்”  மார்பில் தட்டிக்கொண்டான்..

மத்தவங்க விஷயத்திலே தேவையில்லாமல் தலையிடுவது முகேஷின் ஹாபி. மூக்கை நீட்டுபவர் பல ரகம். சிலருக்கு மற்றவர் விஷயங்களில் தலையிடுவது, என்பது ‘ தான் உயர்ந்தவன்’ என்பதை காட்டிக் கொள்ளவே. தங்களது வாழ்க்கை தரத்தை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள ஒரு சிலர், பொறாமை காரணமாக , விஷயம் என்ன என்று அறிந்து கொண்டு நேரடியாகவோ பின்னாலோ குறை கூற வேறு சிலர். 

‘உங்களிடம் எனக்குஅக்கறை இருக்கிறது’ என்பதை காட்டி கொள்ள மூக்கை நீட்டும் மூக்கர்கள் பலர் உண்டு. அனைவரது பிரச்னைகளுக்கும் இவர்களிடம் தீர்வு உண்டு, அவர்களது பிரச்னைகளை தவிர.  முகேஷ் இந்த ரகம்.

அவன் பண்ணின வேண்டாத வேலையின் விபரீதம், அப்போது அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

****

மூன்று நாள் கழித்து.

அனுவின் அம்மா, முகேஷின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். 

“என்ன ஆச்சுன்னே தெரியலை அக்கா! திடீர்னு அனுவின் போக்கே புரிபடலை. பசங்க கூட விளையாட மாட்டேங்கிறா. “சும்மா பந்து போட்டு பிடிச்சு விளையாடறாதாலே என்ன லாபம்? ஓடிப்போய் கம்பம் தொட்டு திரும்பி ஓடி வந்து விளையாடறதிலே  என்ன பிரயோசனம்? நான் விளையாட போகலை! போகமாட்டேன்.” இதுமாதிரி ஏடாகூடமாக பேசறா. பள்ளி வகுப்பாசிரியை என்னை பள்ளியிலே வந்து பாக்க சொல்லியிருக்காங்க!” அனுவின் அம்மா குரலில் கவலை தெரிந்தது.

தற்செயலாக அங்கே வந்த முகேஷுக்கு ‘சொடேர்’ என்றது.  ‘ஐயையோ ! அனுவின் மாற்றத்திற்கு தான் தான் காரணமோ? அனு போட்டு கொடுத்து விட்டால், அம்மாவுக்கு கொலவெறி வந்துடுமே!.’ 

****
இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா சொல்படி, முகேஷ், வீட்டில் ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தான். மெல்லியதாக ‘க்ருக் க்ருக்’ என்று ஒரு சத்தம். ஒரு கூட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற கூட்டை உடைத்துக் கொண்டிருந்தது. தலை வெளியேவந்து விட்டது. ஆனால், அதன் . இறக்கை இன்னும் வெளியே வரவில்லை. முட்டி மோதிக் கொண்டிருந்தது. “ஐயோ பாவம்!”. பூச்சியின் அவஸ்தை, பார்த்துக் கொண்டிருந்த பரோபகாரி முகேஷின்  மனம் பதைபதைத்தது. அவனுக்கு  உதவி செய்ய ஆசை. உடனே, ஒரு மெல்லிய குச்சியை  எடுத்து அந்த கூட்டை , ரொம்ப மெதுவாக குத்தி உடைத்தான். வண்ணத்துப்பூச்சி, கூட்டை விட்டு, வெளியே வந்து விட்டது. அதை பார்த்து  முகேஷ்  ‘ஆஹா! பூச்சியை காப்பாற்றி விட்டோமே! என எண்ணினான். பூரித்தான். . அவன் மனம் ஆனந்தத்தால் இறக்கை கட்டி பறந்தது.
பூச்சி மெல்ல தத்தி தத்தி நடந்தது. ..நடந்தது…. நடந்தது….ஆனால் பறக்கவேயில்லை.

முகேஷ் இப்போது அந்த பூச்சியையே ஆதங்கத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தான். 

‘ஐயையோ! பூச்சிக்கு என்ன ஆயிற்று?’ அந்த வண்ணத்து பூச்சியின் இறக்கை இரண்டும் ஒட்டிக்கொண்டு, அது பறக்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. இப்போது முகேஷுக்கு புரிந்தது. கூட்டை அவசரப்பட்டு உடைத்ததனால், பூச்சிக்கு இந்த நிலை.

பூச்சியை அதன் போக்கில் விட்டிருந்தால், பூச்சி , தானே, அடித்து பிடித்து கூட்டை விட்டு வெளியே வந்து பறந்திருக்கும். பறக்கமுடியாமல் இப்போது பூச்சி இறந்து விடுமோ? தான் பூச்சி விஷயத்தில் அனாவசியமாக தலையிட்டிருக்க கூடாதோ?

****

மறுநாள் காலை நேரம் 7.30 மணி.

முகேஷ் தனது மோட்டார் பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போக தயாராக, அனுவும், கூட அவள் அம்மாவும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். . அனுவின்அம்மா அவளை அர்ச்சனை பண்ணிக் கொண்டே  வர, அனு முகேஷ் பக்கம் கை காட்டி, கண்ணை கசக்கிக் கொண்டு ஏதோ சொல்லி கொண்டே வந்தாள். அனுவின் அம்மா, முகேஷை பார்த்த பார்வையில் நெருப்பு. முகேஷ் தலையை தாழ்த்திக் கொண்டான்.

வழக்கம் போல், பள்ளி பஸ் வந்தது. தள்ளி நின்றது. வழக்கம் போல், பசங்கள் ‘ஓ’வென்று சத்தம் போட்டுக்கொண்டு ‘நான் முந்தி நீ முந்தி’ என்று ஓடி, முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அனுவின் அம்மா அனுவை ஓடிபோய் ஏற ஊக்குவித்தார்.  அவளும் ஓடிப்போய் முண்டியடித்து வண்டியில் ஏறினாள். அனு சிரிக்க, அம்மா கை காட்டி அனுப்பி வைத்தார். 

அப்பா!  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. அனுவின் அம்மா அனுவின் பிரச்சினையை  ஏதோ கண்டித்து பேசி, சரி செய்து விட்டார். . வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட இதெல்லாம் ஒரு முன்னோட்டம் போலிருக்கு. . ..

முடிவு செய்து விட்டான் முகேஷ், இனி தன் ஹாபியை மாற்றுவதென்று. இன்றிலிருந்து, முந்திரி கொட்டையாக, மற்றவர் காரியங்களில், தன்  மூக்கை நுழைப்பதில்லை. தேவையில்லாமல் தலையிடுவதில்லை. 

– முரளிதரன்.S

 

Likes(1)Dislikes(0)
Share
Share
Share