Mar 142015
 

 

1

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளம்பெண் அவர். மிகவும் முற்போக்கான சிந்தனையும், படைப்பாற்றல் திறமையும் உடையவர். அவருக்கு  மாப்பிள்ளை தேடும் நோக்கத்தில் அவரின் பெற்றோர்கள், வழக்கமாக அனைத்து பெற்றோர்களும் செய்வது போல் MATRIMONIAL SITE இல் அவரைப் பற்றிய விவரங்களை தந்து, தகுந்த மாப்பிள்ளை வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

பெற்றோர்களின் இந்த விளம்பரம், மிகவும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்று, அந்த பெண்ணே ஒரு இணையதளம் தொடங்கி அதில் அவர் பற்றியும் தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

வித்தியாசாமான முறையில் தன்னைப் பற்றியும் தனது எதிர்பார்ப்புகளையும் பற்றியும் அவர் கொடுத்த விவரங்கள், இணையத்தில் வேகமாக பரவி, ஏகப்பட்ட விருப்பங்களும், ஆதரவுகளும் கிடைத்தது.

கூடவே வருங்கால கணவரை பற்றிய இவர் தெரிவித்திருந்த இரு நிபந்தனைகள் சர்ச்சையைக் கிளப்பி அதிர்ச்சியும் அளித்தது. அந்த நிபந்தனைகள்..

– முதலாவது, குழந்தைகளை வெறுப்பவராக இருக்க வேண்டும்.

– இரண்டாவது, அவரது பெற்றோர்களிடமோ, குடும்பத்திலோ பெரிதாக ஆர்வம் உள்ளவராக இருக்க கூடாது.

இவரின் இந்த நிபந்தனைகளை ஆதரித்தும், எதிர் கருத்தை கொண்டவர்களுக்கு  பதில் அளிக்கும் வகையில், வேறு ஒரு பெண்ணின் பகிர்வு இவ்வாறாக இருந்தது.. “பெருநகரங்களில் நடுத்தர வர்கத்தின் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது? காலை 5மணிக்கு எழவேண்டும், குழந்தைகளுக்கும், கணவருக்கும் உணவு தயாரித்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். காலையில் உண்ணாமலே அவசரம் அவசரமாக கிளம்பி, 2மணி நேரம் கூட்டநெரிசலில் பேருந்தையோ, ரயிலையோ பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலகத்திலும் பல பிரச்சினைகளை சந்தித்து, பின் மீண்டும் அதே 2மணி நேரம் வீட்டிற்கு பயணம்.

களைப்புடன் வீட்டிற்கு வந்தவுடன், வீட்டு வேலைகளை முடித்து, குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து, வீட்டில் உள்ள பெரியோர்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். இதே போராட்டத்தில் கிட்டத்தட்ட 20வருடங்கள் வாழ்ந்தபின், குழந்தைகளும் ஒரு சமயத்தில் எதிர்காலத்திற்காக வீட்டை விட்டு வேறிடம்  சென்று விடுகையில், இவர்களுக்கு கடைசியில் எஞ்சி இருப்பது, தனிமையும், வியாதியும், முதியோர் இல்லங்களும் தான்.

இதில் எங்கே பெண்கள் வாழ்கின்றனர்? அதனால் இணையத்தில் அந்த இளம்பெண் கூறியுள்ள எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் தவறில்லை” என  தெரிவித்திருந்தார்.

பல வேலைகளில், பெண்கள் திருமணத்திற்கு மனரீதியில் தயாராகாத நேரத்தில், சமுதாயம் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதால், திருமணம்  சுமையாகவும் மன அழுத்தம் தரும் வைகையிலும் அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து விடுகிறது. எனவே இணையத்தில் அந்த பெண் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள்  இன்றைய புதுயுக இந்தியப் பெண்கள் பலரின் மனநிலை” என்று மேலும் சிலர் தெரிவித்திருந்தனர்.

வேறு சிலரோ, “கணவன் மட்டும் தான் வேண்டும், அவரது குடும்பம் தேவையில்லை, அந்தளவிற்கு கணவனை சேர்ந்தவர்கள் எங்களுக்கு துன்பத்தை தருகின்றனர். மேலும் நாங்கள் மனக்க விரும்பியது கணவரைத் தான் தவிர, அவர் குடும்பத்தை அல்ல” எனவும் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.

பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் தான் என்று இல்லை, காதல் திருமனங்களிலும் பிரச்சினைகள் அதிகம் தான். நிறைய பெண்களின் வாழ்க்கை இன்று போராட்டம் தான்” என்றும் சிலர் கூறியிருந்தனர்.

இந்த நிகழ்வையும், கருத்துக்களையும் சமீபத்தில் காண நேர்ந்தது. மேலே சிலர் தெரிவித்துள்ள பிரச்சினைகள் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகின்றன என்றும், அது எல்லை மீறுகின்ற போதுதான், இது போன்ற எண்ணச் சிதறல்கள் வெளிவருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நாம் உண்மையில் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் எனில், பெண்கள் வாழ்வின் தினசரி பிரச்சினைகளைப் புரிந்துக்கொள்தல் வேண்டும். அவர்களுக்கு சிறந்த வேலை சூழ்நிலைகளையும், சமூக சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுத்து, அவர்களை மகிழ்வுடன் இருக்க செய்ய வேண்டும். குறைந்தது, அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இல்லாமல், அவர்கள் நல்ல செயல்களுக்கு இடையூராய் இல்லாமலும் இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு மரியாதையும், அங்கீகாரமும், ஆதரவும் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்.

இது ஒருபுறம் என்றால், இரண்டாவது பக்கமாக, விட்டுக்கொடுத்தலும்  சகிப்புத்தண்மையும் இப்போதுள்ள தலைமுறையினரிடம் குறைந்து வருகிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. பொருளாதார சுதந்திரம், யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தை தந்திருந்தாலும், அதை தவறாக உபயோகப் படுத்தும் சிலரையும் இன்று காண்கிறோம்.

இப்போது இரண்டு பக்கங்கள். ஒன்று பெண்களுக்கு பிரச்சினைகளும், மன அழுத்தமும் தராத ஒரு சமுதாயமாக இருத்தல், மற்றொன்று விட்டுக்கொடுத்தல் மற்றும் சுயநலமற்ற வாழ்க்கை முறைகளை இந்த தலைமுறையினருக்கு  உணர்த்துதல்.

இந்த இரு விஷயங்களையும் குறித்து, என்னுள் எழுந்த சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பிகிறேன்.

  • பெண்களுக்கு நல்லாதரவும் சமத்துவமும் இருந்து, அவர்கள் மகிழ்வுடன் உள்ள சமுதாயமாக இருக்க நாம் அனைவரும் என்ன செய்யலாம்?
  • கூட்டு குடும்பம் என்ற கலாச்சாரம் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்துவிடுமா? இன்று கணவன் அல்லது மனைவி என்ற ஒரே ஒரு உறவு மட்டும் போதும் என நினைக்கும் சில இளைஞர்களின் இந்த மாற்றம், அடுத்த தலைமுறையில் ஒரு உறவும் வேண்டாமென நினைக்க வைக்கும் பாதையாகிவிடுமா? அதை நம்மால் முடிந்தளவிற்கு தடுக்கும் விதத்தில், அடுத்த தலைமுறைக்கு நல்லது எது, தீயது எது என்றும், உண்மையான, சுயநலமில்லாத வாழ்வு எது எனவும் புரியவைப்பது எப்படி?

ஒரு மகளையும், மகனையும் கொண்ட தந்தையாகிய என்னை சமீபத்தில் செய்தித்தாள்களிலும் இனையத்திலும் வந்த இது போன்ற பல பகிர்வுகள் உலுக்கியதால், இந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து, உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்.

நம் குழந்தைகளை எவ்வாறு நல்வழியில் நடத்துவது? அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியான வாழ்வை எவ்வாறு கற்றுத் தரப்போகிறோம்? உங்களுக்கு தெரிந்தால், B+ வாசகர்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..

PARENTING (குழந்தை வளர்த்தல்) பற்றி பல கருத்து பறிமாற்றங்களும், ஆராய்ச்சிகளும் நடந்து வரும் இந்த வேலையில், உங்களது சிறந்த பொருத்தமான கருத்து, இந்த பகிர்வைப் படிக்கும் இன்றைய மற்றும் நாளைய பெற்றோர்களுக்கு உதவலாம். சிறந்த சமுதாயம் அமையவும் வழிவகுக்கலாம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(11)Dislikes(0)
Share
Mar 142015
 

2.1

சுயதொழில் தொடங்கவதற்கெல்லாம் நல்ல அனுபவமும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் முடியுமென நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும், வயதும், அனுபவமும் பெரிய தடையில்லை என நிறுபித்து, வெற்றி பெற்று வருகின்றனர் இந்த சகோதரர்கள்.

மூத்தவர் 15வயதாகும் ஷ்ரவண் குமரன், இளையவர் 13 வயதாகும் சஞ்சய் குமரன். பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சிறு வயதிலேயே, கைப்பேசியில் உள்ள மென்பொருள் உருவாக்கத்  துறையில் ஆழமாக முத்திரை பதித்து வரும் இவர்கள், “GO DIMENSIONS” என்ற ஒரு நிறுவனத்தை துவக்கி அதன் அமைப்பாளர்களாகவும், இயக்குனர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இந்தியாவின் மிகச்சிறிய வயது MOBILE APP PROGRAMMERS ஆக அடையாளம் காணப்பட்டுள்ள இவர்களை, பல உயர்ந்த நிறுவனங்கள் அழைத்து, தங்கள் நிறுவனங்களில் இவர்களை பேசவைத்து, பலரை ஊக்குவித்தும் வருகின்றன.

விருதுகளால் இவர்களுக்கு அழகா, இவர்களால் விருதுகளுக்கு அழகா என்று வியக்கும் வகையில் என்னற்ற விருதுகளையும் பரிசுகளையும் பலதரப்பட்ட பெரிய நிறுவனங்கள் இவர்களுக்கு வழங்கி கவுரவித்துள்ளன. நமது B+ இதழின் இந்த மாத சாதனையாளர்களின் பக்கத்தில், இவர்களை அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறோம். இனி இவர்களுடன் பேட்டியிலிருந்து..

 

உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்..

வணக்கம், நாங்கள் இருவரும் IOS மற்றும் ஆண்ட்ராய்டிற்காக APPS DEVELOPMENT செய்கிறோம். இதுவரை ஏழு APPS தயார் செய்துள்ளோம்.

எத்தனை வருடங்களாக செய்து வருகிறீர்கள்?

எட்டு வருடங்களாக செய்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக  APPSகளை வெளியிட்டு வருகிறோம்.

உங்கள் APPS இதுவரை எத்தனை முறை DOWNLOAD செய்யப்பட்டுள்ளது?

அனைத்து APPSஉம் சேர்ந்து 63000 முறை ஆகியுள்ளது. CATCH ME COP என்ற APP மட்டும் 25000 முறை DOWNLOAD செய்யப்பட்டுள்ளது.

இவற்றிற்கு BACK-ENDஆக எந்தெந்த LANGUAGES (கணினி மொழிகள்) உள்ளது?

ஆப்பிள் நிறுவனத்தின் மொழியான OBJECTIVE-C யை உபயோகிக்கின்றோம். JAVA மற்றும் வேறு சில பிரோகிராம் மொழிகளையும் சிறிது கற்றுக்கொண்டோம்.

ஏதேனும் கணினி நிறுவனத்திற்கு சென்று இந்த மொழிகளை கற்றீர்களா?

இல்லை. கணினி புத்தகங்களை வைத்து நாங்களே படித்து கற்றுக்கொண்டோம். எங்கள் தந்தை சில அடிப்படை விஷயங்களை QBASIC இல் கற்றுத்தந்தார். அதிலிருந்து நாங்கள் இருவரும் எங்கள் பயணத்தை தொடங்கி மற்ற மொழிகளையும் பயின்றோம்.

இந்த வேலைகளை செய்வதற்கான நோக்கம் என்னவாக இருந்தது?

சிறுவயதிலிருந்தே, விளையாட்டு, APPS, பிரோகிராம் மற்றும் கணினி தான் எங்கள் இருவருக்கும் பிடித்த விஷயங்களாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தன. ஒரு சமயம் எங்கள் முன் இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கணினி APPS, மற்றொன்று கைபேசி APPS. ஆனால் கைபேசி APPS சிறந்ததாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்குமென எண்ணி கைபேசியை தேர்வு செய்தோம்.

அது IOS அத்தனை வேகமாக பரவியிராத நேரம், அப்போதே அதை நாங்கள் தொடங்கிவிட்டோம்.

ஒவ்வொரு APPSகளை செய்யும் யோசனை எவ்வாறு கிடைக்கிறது?

பெரும்பாலான APPSகளுக்கான யோசனை, தினசரி வாழ்க்கையின் சூழ்நிலை வைத்தே அமைகிறது. சமீபத்தில் “PRAYER PLANET”  என்ற ஒரு APPஐ உருவாக்கியிருந்தோம். இந்த யோசனை உருவாகியது ஒரு நெருக்கடியான சூழ்நிலையில். நாங்கள் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது, காற்று கொந்தளிப்பில் விமானத்தின் ஓட்டம் சீராக இல்லாமல் தடுமாறியது. அப்போது ஏதாவுது ஒரு கடவுளின் சிலையை வைத்து பிரார்தனை செய்ய விரும்பினோம். அப்போது தான் கைப்பேசியில் ஆண்மிகப் பாடலுடன் கடவுளின் உருவமும் உள்ள ஒரு APPஐ தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதைக் கொண்டு இந்த APPஐ செய்தோம்.

2.2

ஒரு APPஐ தயாரிக்க எத்தனை கால அவகாசம் தேவைப்படும்? படித்துக்கொண்டே இதற்கெல்லாம் நேரம் எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்?

மூன்று முதல் நான்கு மாதம் ஆகும். தினமும் 1மணி நேரம் இதற்காக கொடுப்போம், அது தவிர சனி, ஞாயிறுகளிலும் சிறிது நேரம் கொடுப்போம். தினமும் அரை மணி நேரம் வெளியே சென்று விளையாடுவோம், மற்ற நேரங்களில் படித்துவிடுவோம். எங்களது வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் சமூக வலைதளத்தில் நேரம் செலவிடுவர், அந்த நேரத்தை நாங்கள் இந்த வேலைகளை செய்ய பயன்படுத்துவோம்.

பெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்தது?

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும் பில் கேட்ஸ் பற்றியும் எனது தந்தை பல கதைகளை கூறுவார். எங்கள் அன்னை ரைட் சகோதரர்கள் பற்றிய கதைகளை கூறி வளர்த்தார். அந்த இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாய் இருந்து சாதித்து காட்டியதை கூறி வளர்த்தது, எங்களுக்கு அவர்கள் மேல் ஒரு ஈர்ப்பை தூண்டியது. அவர்களைப் போல் நாங்களும் ஏதெனும் சாதிக்க வேண்டுமென நினைத்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களை கனவு கண்டேயிருங்கள் என சொல்லிக்கொடுப்பார்கள்.

எங்களின் சில நண்பர்கள் அவர்கள் பெற்றோர்கள் கணினியில் உட்கார நேரம் கொடுப்பதில்லை எனக் கூறுவர். கணினி என்பது ஒரு கத்தி மாதிரி. காய்கறிகள் வெட்டவும் பயன்படும். காயப்படுத்தவும் பயன்படும். கணினியில் படிப்பு சம்பந்தப்பட்ட, அறிவை வளர்த்துக்கொள்ள கூடிய நிறைய விஷயங்கள் உள்ளது. நாம் சரியான விஷயத்திற்காக தான் கணினியை பயன்படுத்துகிறோம் என்று பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். அந்த மரியாதையை நாம் தான் பெற்றோர்களிடம் பெற வேண்டும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு உங்களுக்கு எவ்வாறு இருக்கும்? உங்கள் சாதனைகளைப் பார்த்து என்ன கூறுவார்கள்?

2வருடங்களிற்கு முன் 3 APPS வெளியிட்டிருந்த சமயம். NDTVஐ தொடர்ந்து பல மீடியாக்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றனர். அப்போது நண்பர்களும், உறவினர்களும், நீங்கள் இருவரும் உங்கள் நிறுவனத்திற்கு அதிபராகிவிட்டீர்கள், இனி எங்களுடன் நேரம் செலவிடுவீர்களா என கிண்டல் செய்வார்கள். அவ்வாறாக ஒரு இரண்டு வாரங்கள் சென்றது, பின்னர் எல்லோரும் சகஜ நிலைமைக்கு வந்துவிட்டனர்.

இதுவரை எத்தனை அவார்டுகள் வாங்கியுள்ளீர்கள்?

2012 ஆம் ஆண்டில் ரோட்டரி கிளபின் “சிறந்த தொழிலதிபர் விருது”, CII சண்டிகரின் “இளம் சாதனையாளர் விருது” போன்றவை சிறந்த விருதுகளாகும். இதுமட்டுமின்றி பல நிறுவனங்கள் பல விருதுகளை கொடுத்து ஊக்கப்படுத்தின. குறிப்பாக திரு.அப்துல் கலாம் அவர்கள் பாராட்டியது மறக்கவே முடியாது.

மேலும் NDTV, HINDU, INDIA TODAY, DECCAN Chronicle, சென்னையின் Rainbow FM, மும்பையின் Radio City, சன்டிகரின் BIG FM, NEWSX, என பல மீடியாக்கள் ஏற்கனவே எங்களைப் பேட்டியெடுத்து வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளன.

கல்லூரிகளும் உங்களை சிறப்புரை ஆற்ற அழைத்துள்ளதாக கேள்விபட்டோமே?

ஆம். நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களான IIM பெங்களூர், IIT சென்னை, VIT கல்லூரி, சிம்பையாசிஸ் கல்லூரி, மும்பையில் உள்ள WELLINKAR MANAGEMENT நிறுவனம், புதுச்சேரி பல்கலைகழகம், SAP TECH பல்கலைகழகம் மற்றும் பல கல்லூரிகள் எங்களை அழைத்து பேச வைத்து தங்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

கொரியா நாட்டில் உள்ள ஹெரால்டு என்ற செய்தித்தாள் நிறுவனம் நடத்திய மாநாட்டில் 200க்கும் அதிகமான CEOக்கள் கலந்து எங்ககளது பேச்சைக் கேட்டனர். அது மட்டுமன்றி, DRDO, CII, TEDx போன்ற நிறுவனங்களும் அழைத்து பேச வைத்துள்ளனர். ஹைதிராபாத், வைசாக், பஞ்சாப், சண்டிகர், கோயமுத்தூர், கரூர் போன்ற இடங்களில் உள்ள பல கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் சென்று தொழில்முனைதல் மற்றும் கைப்பேசி மென்பொருள் தொடர்பான பல தலைப்புகளில் உரையாற்றி உள்ளோம்.

இது தான் பாதை என்று சிறு வயதிலிருந்தே தெரிந்துவிட்டது. அதனால் பள்ளி படிப்பில் ஆர்வம் குறைகிறதா?

நாங்கள் இருவரும் பள்ளியையோ, கல்லூரிகளையோ விட்டுவிட விரும்பவில்லை. நல்ல கல்லூரிகளுக்கு சென்று நல்ல பட்டங்கள் பெற எண்ணம் உள்ளது. ஒரு BACK-UP இருப்பது நல்லது தானே.

உங்களைப் போல் உள்ள மாணவர்களுக்கு ஏதெனும் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?

உங்கள் ஆர்வத்தையும், கனவுகளையும் பின்பற்றி துரத்துங்கள். செய்யவேண்டும் என நினைப்பதையும், விரும்புவதையும் செய்யுங்கள். பொறியியல், மருத்துவம் என்று மட்டும் நினைக்காமல் மற்ற துறைகளையும் பற்றி எண்ணிப் பாருங்கள். DO WHAT YOU REALLY LOVE.

உங்கள் இலக்கு என்ன?

உலகத்தில் உள்ள 50% ஸ்மார்ட் ஃபோனில் எங்களது APPS கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். இப்போது எங்களுக்கு என ஒரு தனி டேப்லட்டையும் தயார் செய்து கொண்டிருக்கிறொம்.

அந்த டேப்லட்டை வெளியே விற்கும் திட்டம் உள்ளதா?

ஆரம்பத்தில் அந்த திட்டம் இருந்தது. ஆனால் மார்கெட்டில் ஏற்கனவே குறைந்த விலையில் நிறைய மற்ற நிறுவனங்களின் டேப்லட் விற்பனையில் உள்ளது. அதனால் இப்போது அந்த எண்ணம் இல்லை.

இப்போது நீங்கள் உங்கள் வயதிற்கேற்ப APPS செய்து வருகிறீர்கள். இன்னும் சில வரங்களில் சமுதாயத்திற்கு பயன்படும் APPS கூட செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..

கண்டிப்பாக. வரும் ஆண்டுகளில், பார்வையற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்காக ஏதெனும் ஒரு APP செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். மற்ற APPS உம் சமுகத்திற்கு பயன்படும் வகையில் செய்வோம்.

Likes(12)Dislikes(0)
Share
Mar 142015
 

3

 

(சென்ற மாத தொடர்ச்சி….)
ஹோட்டல்:

வாசலில் விஷ்வா காத்துக் கொண்டிருந்தான்.

“வா சுந்தர், என்ன இது கோலம்! இப்படி சோகமா! நாலு நாள் தாடி! என்ன விஷயம்?”
“அதை ஏன் கேக்கிறே விஷ்வா? நெறைய பிரச்னைகள்.”
“சரி வா! உள்ளே போய் பேசலாம்!”. விஷ்வாவின் கரிசனம் என்னை உலுக்கியது. என்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட்டேன்.

“சரி! சும்மா கவலைப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. சுந்தர், இங்கே பாரு, உன் பிரச்சனை என்ன தெரியுமா? அனாவசியமா, எதுக்கெடுத்தாலும் பயப்படறது? நாளைக்கு என்ன ஆகுமோன்னு நெனைச்சு கவலைப் படறது”

“வேறே வழியே தெரியலே விஷ்வா! என்ன பண்றதுன்னே தெரியலே?”

“எனக்கு ஆச்சரியமாக இருக்கு! நீ எல்லாம் எப்படித்தான் தொழிலதிபரா சமாளிக்கறியோ?”

“வெறுப்பேத்தாதே விஷ்வா! என்னதான் பண்ணனுங்கிரே?”

“அப்படிக் கேள் சொல்றேன்! முதல்லே உன் பிரச்சனைகளை ஒரு லிஸ்ட் போடு. அதிலே தீர்க்க கூடிய பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனை என்னங்கிறதை முடிவு பண்ணிக்கோ”
“எதுக்கு?”

“தீர்க்க கூடிய பிரச்சனைகளை தீர்த்துடலாம். அதனாலே அதைப் பத்தி கவலைபடறதை நிறுத்து. எப்படி தீர்க்கலாம்னு மட்டும் யோசனை பண்ணு”

“அப்போ தீர்க்க முடியாத பிரச்னைகளை என்ன பண்ணறது?”

“அவைகளை நீ ஒண்ணும் பண்ண முடியாது. அதனாலே கவலை பட்டு எந்த பிரயோசனமும் இல்லை”

எனக்கு சிரிப்பு வந்தது. “மொத்தத்திலே, எதுக்கும் கவலை படாதே சகோதராங்கறே”

“அதே!அதே! இதே நான் சொல்லலே, புத்தர் தான் சொன்னதே”- விஷ்வா சிரித்துக் கொண்டே.

“நீ சொல்றது சரிதான் விஷ்வா என் பிரச்சனை எல்லாம் தீர்க்க கூடியது தான். ஆனால், எப்படின்னு தான் தெரியலே?”

“அப்பாடா! ஆளை விடு. உன் கவலையை விடு. அடுத்த ஸ்டெப்க்கு வா”

“அது என்ன?” எனக்கு ஏதோ கொஞ்சமாக நம்பிக்கை வந்து விட்டது. என்னதான் சொல்றான்னு கேப்போமே!

“லிஸ்ட் போட்டியே !உன்னோட பிரச்னைகளிலே ரொம்ப முக்கியமானது, ரொம்ப அவசரமானது என்ன சொல்லு.”- விஷ்வா

நான் யோசித்தேன்.

“என்னோட முதல் பிரச்சனை ஐ.டி இன்ஸ்பெக்டர்”
“ரொம்ப சரி, இது அவசரம், அவசியம் கூட. அடுத்தது?”
“ஷூ பிரேக் உதிரி பாகம். டெலிவரி கொடுக்கணும்! ” நான் யோசனையுடன்.
“இதுவும் கூட அவசரம், அவசியம். மூணாவது?”
“மனைவி கூட ஊருக்கு போகணும்”

“சுந்தர், இது அவசரம். ஆனால், உன்னோட இந்த நிலைமைலே அவசியம் இல்லே. ஆமா! கேக்கனும்னு நினைச்சேன்! இது விஷயமா உன் வீட்டிலே சண்டை போட்டியா? திட்டினியா?”

“ஆமா! கடுப்பாகுதில்லே!வர முடியலேன்னா, அவங்க சண்டை போட்டா எப்படி? நம்ப கஷ்டத்தை புரிஞ்சிக்காம பேசறாங்க, விஷ்வா” நான் என் பக்க நியாத்தை சொன்னேன்.

“ முதல்லே அவங்களை நீ புரிஞ்சிகிட்டியா?அதை சொல்லு !அவங்களுக்கும் பிரச்னை இருக்குமில்லே”

“ஆமா! எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லு!”

“அவங்க பாவம் சுந்தர். உன்னை விட்டா அவங்களுக்கு வேறே யாரு இருக்கா? சரி, போய் முதல்லே மனைவிய சமாதானபடுத்து. அவங்களை ஊருக்கு அனுப்பி வை. உன் பிரச்னைகள் தீர்ந்துட்டா, நீயும் வரேன்னு சொல்லிவை. நிச்சயம் நீயும் ஊருக்கு போவே பாரு. அண்ணியை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு. சரி, வேறே ஏதாவது இருக்கா?”

“அடிக்கடி வயித்து வலி வருது. தூக்கம் இல்லை. லேசா படபடப்பு.”

“சுந்தர் இது ரொம்ப அவசியம். அவசரமும் கூட. உடனே டாக்டரை பார். சுவரிருந்தால் தானே சித்திரம்? அப்புறம் வேறே ஏதாவது இருக்கா?”

“கோயம்பத்தூர் கம்பனி புது ஆர்டர் கொடுப்பாங்க போலிருக்கு ! அதுக்கு வொர்க் பண்ண ஆரம்பிக்கணும் ”

“அது இப்போ அவசரமுமில்லே, அவசியமுமில்லே. இப்பத்திக்கு அதை கிடப்பில் போடு. நேரம் கிடைக்கச்சே எடுத்துக்கோ. ”

“சூப்பர்டா விஷ்வா! எனக்கு பெரிய பாரமே இறங்கினா போலே இருக்கு”

“இந்த பலூடா சாப்பிடு. இன்னும் நல்லா இறங்கும்”

எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் கவலை குறைந்து தான் இருந்தது. இப்போது இரண்டு பிரச்னைகள் தான். மற்ற பிரச்னைகள் மாயமாக போய்விட்டன.

கொஞ்ச நேரம் இரண்டு பெரும் பேசாமல் சாப்பிட்டோம். இனிப்பு உள்ளே போனவுடன் மூளை எனக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

“சுந்தர், பிரச்னைகளை எப்பவும் சுமந்து கிட்டு திரியாம இருக்க ஒரு வழி இருக்கு, சொல்லட்டா?”

“சொல்லு விஷ்வா ! நான் எப்பவும் பிரச்னைகள் நடுவுலே தான் வாழறேன்! .”

“சும்மா சீன் போடாதே சுந்தர், உனக்கு சாமி பக்தி உண்டா? எந்த சாமி ரொம்ப பிடிக்கும்?”

“நிச்சயமா! விநாயகர்தான். ஏன் கேக்கிறே?”

“கூல்! என்ன பண்றே! முதல்லே, வீட்டு வாசல்லே விநாயகர் படத்தை மாட்டறே! தினமும் மாலையிலே, வேலைய விட்டு வீட்டுக்குள்ளே நுழையச்சே, வாசல்லேயே, சாமி முன்னாலே உன் கவலை, பிரச்னை எல்லாத்தையும் மாலையா போட்டுடறே! ‘விநாயகா! இதை பத்திரமா வெச்சிக்கோ! நாளைக்கு பாக்டரி போகறத்துக்கு முன்னாடி திருப்பி எடுத்துக்கறேன்’ அப்படின்னு வேண்டிக்கோ. பாரத்தை இறக்கி வெச்சுடு. நிம்மதியா வீட்டுக்குள்ளே நுழையறே ! ஆனால், காலைலே திரும்ப மறக்காம சாமி கிட்டேயிருந்து எடுத்துக்கோ”

“இந்த டீல் நல்லா இருக்கே ! எனக்கு பிடிச்சிருக்கு ! வொர்க் அவுட் ஆகுமா?”
“கட்டாயம் ஆகும். முயற்சி பண்ணு. சொல்லபோனால், அடுத்த நாள் காலைலே உன்னோட பாதி கவலை காணமல் போயிருக்கும்”

“அதெப்படி?”
“ஏன்னா, கிட்டதட்ட ஒரு எழுபது பெர்சென்ட் கவலை நம்ப கற்பனைதானே?”

“சூப்பர் விஷ்வா! நான் ட்ரை பண்றேன். நீயும் இப்படித்தான் பண்றியா?”

“எனக்கு தான் அவ்வளவா சாமி பக்தி கிடையாதே! சாமிக்கு பதிலா எங்க அம்மா அப்பா படத்தை வெச்சிருக்கேன்!”

“இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு. அவங்க ஆசி இருந்தா போதுமே!”

விஷ்வா கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு சொன்னான்.

“சரி சுந்தர்! இப்போ உனது முதல் தலைவலிக்கு வருவோம்”.

“இன்கம் டாக்ஸ் தானே விஷ்வா ! என்னடா பண்றது?”

“இதோ பாரு, எந்த கவலையும் அணுகறதுக்கு முன்னாடி முதல்லே மூணு படி ஏறணும்”

“இது வேறேயா?”

“முதல்லே பிரச்னையை நல்லா அலசு. இந்த பிரச்னையினால் உனக்கு என்ன மாதிரி நஷ்டம் ஏற்படும் என யோசி. இரண்டாவது, இவ்வளவு தான் நஷ்டம் அல்லது கஷ்டம் வரும்னு தெரிந்தவுடன், ‘இவ்வளவுதானா, பரவாயில்லே’ என்கிற மன நிலையோட அதை ஏத்துக்கோ. மூணாவது, நிதானமா, அந்த சிக்கலிலிருந்து எப்படி கொஞ்சம் கொஞ்சமா அடி படாம வெளியே வரதுன்னு யோசி. அதை இம்ப்ரூவ் பண்ணு.”

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு விஷ்வா”

“சரி! இப்போ இந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் விஷயத்துக்கே வருவோம். இந்த பிரச்சனையினால், உனக்கு எவ்வளவு நஷ்டம்?”

“20 லட்சம் இருக்கலாம்”
“அதெப்படி உனக்கு நிச்சயமா தெரியும்? யாரையாவது கேட்டியா?”

“இல்லேடா! கொஞ்சம் பயமா இருந்தது”

“பாத்தியா, உன் பிரச்சனைய நீ அலசவேயில்லை. பயந்து போய் உக்காந்துட்டே!”

“நீ சொல்றது சரிதான் விஷ்வா! பயத்திலே கையும் ஓடலை, காலும் ஓடலை”

“லஞ்சம் கொடுக்க நீ தயாரா?”

“கொஞ்சம் அதிகம்! அதான் பாக்கிறேன்!”

“ஒன்னு செய். முதல்லே, நேரே உன்னோட ஆடிட்டரை பார். அவர் என்ன சொல்றாருன்னு கேள். தேவைப்பட்டா, இன்னொரு ரிட்டர்ன் பைல் பண்ணிக்கலாம். இன்கம் டாக்ஸ் என்ன பைன் போடராங்களோ, அதை ஒப்புக்கோ. இல்லே ஆடிட்டர் சொன்னா, அப்பீல் பண்ணு. முடிஞ்ச வரை லஞ்சம் கொடுக்கறதை தவிர். அதனாலே வேறே ப்ராப்லம் வரக்கூடும். ”

“கொடுக்கலேனா, அந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரச்சனை பண்ணுவானே?”

“பண்ண மாட்டான்னு தோணுது. ஏன்னா அவனும் மாட்டிப்பான்!”

“அதெப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே?”

“எனக்கு தெரியும். இன்கம் டாக்ஸ் ரூல் பிரகாரம், அவங்க வரதுக்கு முன்னாடி உனக்கு அதிகார பூர்வமான தகவல் கொடுக்கணும். அப்புறம், அவங்க மேலதிகாரி போன் நம்பர், ஈமெயில் எல்லாம் உனக்கு கொடுக்கணும்”

“ஓ. அப்படியா. சரி நான் இப்போவே ஆடிட்டர் பாக்கிறேன்”
“கவலை படாம போ. உன்னோட இன்னொரு பிரச்னையை நாளைக்கு பாக்கலாம்”

****
அடுத்த நாள்:

இப்போ எனக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை. தைரியம் வந்து விட்டது. என்ன ஆயிடும் பாத்துடலாம். ஆடிட்டரை பார்த்தேன்.

எங்க ஆடிட்டர் சொன்னார், “சுந்தர், உங்க ரிட்டர்ன்லே எந்த பிரச்னையும் இல்லை. யாரோ உங்களை போட்டு பாக்கராங்கன்னு நினைக்கிறேன்”

“எனக்கும் அது தான் சார் தோணறது”
“எதுக்கும், நாம ஐ.டி ஆபிஸ் போய் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்கலாம் வாங்க. எனக்கு தெரிந்தவர்தான்!”

எ.சியும் இதை கேட்டு ஆச்சரியப் பட்டார்.

“கோவிந்தனா ! அப்படி ஒரு இன்ஸ்பெக்டரே இங்கே வேலை செய்யலியே. உங்க கம்பனி ரெகார்ட் படி, உங்க பேரிலே எந்த புகாரும் இல்லையே”

“சார், அந்த கோவிந்தன் என்கிட்டே நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கான் சார்!”

“அப்படியா! சரி, நீங்க ஒன்னு செய்யுங்க ! அவன் வந்தவுடன், எங்களுக்கு தகவல் கொடுங்க. நாங்க வரோம்”

இதுக்கு மேலே, என்ன நடந்ததுன்னு நீங்க ஊகிச்சிருப்பீங்க. கோவிந்தனை அதிகாரிங்க, கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. அவன் ஒரு பிராடு. என் கிட்டே ஆட்டைய போட பார்த்திருக்கான். எங்க துரை தான் அவனுக்கு கையாள். துரையை கம்பனியை விட்டு துரத்திட்டேன்.

***
இப்போ எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான். ஷூ பிரேக் உதிரி பாகம் தயார் பண்ணுவது. துரைக்கு பதிலாக இப்போது முருகன் தான் சுபெர்வைசர். அவனிடம் அதை ஒப்படைத்து விட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து தயார் பண்ணினோம். அந்த மாதம் கொடுக்க முடியவில்லை. பரவாயில்லை. ஒன்றும் தலை முழுகிவிட வில்லை.

ஒரு பதினைந்து நாள் கால தாமதத்தில் 1000 யூனிட் டெலிவரி கொடுத்து விட்டோம். எனது கஸ்டமர் திருப்தியாக, புது ஆர்டர் வேறு கொடுத்து விட்டார். வியாபாரத்திலே இதெல்லாம் சகஜமப்பா!

மனைவியுடன் ஊருக்கு சென்று படையலில் கலந்து கொண்டேன். எனது மெடிக்கல் செக் அப்செய்து கொண்டேன். அல்சர் தான். எல்லாம் சரியாகிவிடும். ஒன்றும் பயமில்லை. இப்போது தான் நான் கவலை படுவதை விட்டுவிட்டேனே. விஷ்வாவின் சொல்படி வேளா வேளைக்கு, நேரந்தவராமல் சாப்பிடுகிறேனே!

ஒரு மாசம் கழித்து

விஷ்வாவிடமிருந்து போன்:
“சுந்தர், எப்படி இருக்கே!”
“நல்லாயிருக்கேன் விஷ்வா! இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை”

“அப்படி சொல்லாதே! பிரச்சனை இல்லாம யாருமே இருக்க முடியாது. பிரச்னைகளை கண்டு பயப்படாமே, வொர்ரி பண்ணிக்காம, சந்தோஷமா வாழ கத்துக்கிட்டேன்னு சொல்லு”

“உன்னோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றிடா. அது படிதான் நடக்கறேன்.”

“சுந்தர், இந்த வாசகத்தை மறக்காதே! ‘நேற்று என்பது சரித்திரம். நாளை என்பது மர்மம். இன்று என்பது இயற்கை நமக்களித்த வரம்.அதனாலே தான் அதை ஆங்கிலத்திலே பிரசன்ட் அப்படின்னு சொல்லறாங்க. இன்னி பொழுதை சந்தோஷமா கழி. நாளைய பிரச்சனை நாளைக்கு. பிளான் பண்ணு, அது அவசியம். கட்டாயம் பண்ணனும். அது தப்பில்லே. ஆனால் கவலைப் படாதே. அது அனாவசியம். அது தப்பு.”

“ரொம்ப தேங்க்ஸ் விஷ்வா. நீதான் என் நன்பேண்டா ! ”- மனதார நன்றி சொன்னேன் என் நண்பனுக்கு.

–    முரளிதரன் செளரிராஜன்

 

(நன்றி: கூகிள், விக்கிபிடியா, டேல் கார்னேகி, ஸ்டீபன் கோவி)

Likes(1)Dislikes(0)
Share
Mar 142015
 

4

சுடும் வெயிலில் சுருங்கிய கண்களுடன்

கொதிக்கும் ரத்தம் அனல் குடிக்க

உடலெங்கும் காய்ந்த குருதி நரம்பாக

சிதறிய உடல் எல்லாம் படிக்கட்டாக

வீரக்கடமை எனும் இருள் மறைக்க

மரண ஓலத்தின் மர்ம ரசிகனாக

எல்லாம் இழந்தும் எதையோ சாதிக்க

தாய் நாடே

வந்தால் வருவேன்

இல்லை

எதிரியின் படிக்கட்டாவேன்

– கவிஞர்.ஞ

 

 

இரவுக் கடமை

கதவோட்டை வழி குழந்தை போல் தவழ்ந்து வந்தது ஒளி

கருவிழி கதிரொளிக்கு சலனப்பட்டு ஓவென்று அழுதது

மனித கூப்பாட்டின் வேறு வடிவம் கதிரொளி

ஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் இறந்த பதபதைப்பு

பாதி உலகம் பிறந்தும் பாதி உலகம் இறந்தும்

சூரிய சேட்டைக்கு உலகம் ஓடுகிறது உயிர்ப்பெற்று

இரவு வேலைகாரன் நான்

தனிமை பேய் நான்

இறந்த உலகில் உயிர்ப்பெற்று நடப்பேன்

உலகம் விழித்தெழ பிணமாய் கிடப்பேன்

– கவிஞர்.ஞ

 

Likes(2)Dislikes(0)
Share
 Posted by at 12:29 am
Mar 142015
 

 

5

“அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம்? என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ? என எண்ணங்கள் ஓட… “ஒண்ணுமில்லமா பையனை ‘ஐ ஸ்கூல்’ இங்க்லீஸ் மீடியத்துல படிக்க வைக்கலாம்னு இருக்கேன் மா…. நாலு எழுத்து படிக்க வெச்சா அவன் எங்களாட்டும் கஷ்ட பட வேணாம் பாரு” என்று அவள் சொன்னதும் அவள் தாய் பாசத்தையும் அதை விட மேலாக குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பொறுபுணர்வையும் மெச்சினேன்.

டாக்டரிடம் சென்று வந்த தோழியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க சென்றேன். ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டாலே இப்போது எப்படி இருக்கிறாளோ என்று மனம் நெகிழுந்தது. வாசற்கதவை திறந்த அவள் கணவன், அவள் உள்ளே இருக்கிறாள் என்று செய்கை செய்தார். சலியால் வீங்கிய முகத்துடன் ஜுரத்தால் நீர் ஒழுகும் கண்களுடன் கூகல் குருநாதாரிடம் கேள்வி வேள்வி செய்து கொண்டிருத்தாள். கோபத்துடன் அவளிடம் நான் வினவ “டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றின் ரசாயன தொகுப்பையும், செயல் படும் விதத்தையும், பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது” என்று நீட்டி முடக்கினாள். ஆர்வத்திற்காக தெரிந்து கொள்ளும் தோழியை பாராட்டுவதா அல்லது கடிந்து கொள்வதா தெரியவில்லை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என் செல்ல “செல்” சிணுங்கினாள். தெரியாத நம்பரை கண் சிமிட்டி காட்டினாள். தூக்கம் கலையாமலே சிடுசிடுப்புடன் “ஹலோ” என்றது தான் தாமதம், எதிர் முனையில் உற்சாகத்துடன் ஒரு ஆண் குரல் . “மேடம் நீங்கள் விஞ்ஞானமும் கணிதமும் வீட்டில் தனி பாடமும் கற்று தருகிறீர்களாமே? அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா? எந்த தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்று கேட்டேன்.

அவரின் பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. இல்லை மேடம் டியூஷன் எனக்கு தான். எனக்கு இப்போ 55 வயதாகிறது. பசங்களுக்கு கல்யாணம் பண்ணி விட்டேன். அந்த காலத்துல 10 வகுப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து விட்டேன். +2 தேர்ச்சி பெற்றால் என் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆகும். நீங்கள் உதவி செய்து என்னை “just pass” செய்ய வைத்தால் போதும் என்று கெஞ்சினார். இவரிடத்தில் கற்பதற்கான ஆர்வமோ பொறுப்புணர்ச்சியோ இல்லை. ஏதோ படித்தால் பணம் கிடைக்கும் என்ற சபலம் மட்டுமே இருந்தது.

நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேத மந்திரங்கள் உபனிட ஸ்லோகங்கள் ராமாயணம் பாகவதம் போன்ற பல்வேறு ஆன்மீக நூல்கள் கற்பிக்கப்பத்கின்றன. அவ்வகுப்புகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில அதிகாரிகள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில விஞ்ஞானிகள், கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இவர்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். நன்றாக சம்பாதித்து பெயரும் புகழும் அடைந்த இவர்கள் ஒரு ஆர்வத்திற்காக கற்றுக்கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. அவர்களின் ஈடுபாடும் புலமை பெற அவர்கள் முயற்சியும் கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு.

இந்த துறையில் முதிர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சம்பள உயர்வோ உயர் பதவியோ கிடைக்கப்போவதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்காமல் நேரத்தையும் பணத்தையும் எதற்காக செலவிடுகிறார்கள்? அவ்வாறு ஒரு கலை கற்றால் அது இனிமையான இசையோ, இன்சுவை படைக்கும் சமையலோ, ஓவியமோ, ஒய்யார அழகுடன் இருக்கும் ஆடை செய்தாலோ மனத்திற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் “கற்றல் எதற்காக “? என்றும் பார்த்தால் நமக்கு பல்வேறு காரணங்கள் புலப்படுகின்றன.

நல்ல எதிர்காலம் அமைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள் , தகவல் சேர்க்கும் ஆர்வத்தில் படிக்கிறார்கள் சிலர். கருத்து கழன்சியங்கள் ஆகிறார்கள் சிலர், விருப்பு வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி பணம் சம்பாதிக்க பதவி உயர்வு பெற சிலர் படிக்கிறார்கள், உள்கடந்து நிற்கும் பூர்ணதுவத்தை உணர ஆனந்தத்தில் திளைக்க மிகவும் சிலர் ஈடுபாட்டுடன் கற்று பயில்கின்றனர். காரணம் எதுவானாலும் பிறந்தது முதல் இறக்கும் வரை கற்றல் என்பது ஒரு தொடர் பயணம் இதை SITUATIONAL LEARNING NEEDS (தேவைக்கேற்ப கற்றல்) என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.

பிச்சை புகினும் கற்கை நன்று என்று எதை கற்க சொன்னார்கள் நம் ஆன்றோர்கள். கற்றதனால் ஆய பயன் என்கோல்” என்று நீங்களும் நானும் சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்.

உங்கள் தோழி

பத்ம ரஞ்சனி

Likes(3)Dislikes(0)
Share
Mar 142015
 

7

ஒரு பூட்டிய அறையினுள் 20 நாற்காலிகள் உள்ளன. 20 நாற்காலிகளில் மீது பச்சை தொப்பிகள் உள்ளன. ஒவ்வொரு நாற்காலிக்கு கீழேயும் நீல தொப்பிகள் உள்ளன. 20 நண்பர்கள் அறைக்கு வெளியே இருக்கிறார்கள்.

வெளியிளிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராய் அறையினுள்ளே சென்று மேலிருக்கும் தொப்பிகளை கீழேயும், கீழ் உள்ள தொப்பிகளை மேலே என்று மாற்றி வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லாஜிக் தரப்பட்டுள்ளது உள்ளது, அந்த லாஜிக்படி குறிப்பிட்ட நாற்காலிகளிடம் மட்டும் தான் அவர்கள் சென்று தொப்பிகளை மாற்ற முடியும்.

முதலாமானவன் அறைக்குள் சென்று மேலே இருக்கும் பச்சைத் தொப்பிகள் அனைத்தையும் கீழே வைத்து, கீழே இருந்த நீல தொப்பிகள் அனைத்தையும் ஒவ்வொரு நாற்காலிகள் மேலேயும் மாற்றி வைக்கிறான்.

அடுத்து, இரண்டாமானவன் அறைக்குள் சென்று 2,4,6,8,10….. என இரட்டை வரிசையில் உள்ள நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுவான்.

பின்னர், மூன்றாமானவன் அறைக்குள் சென்று 3,6,9,12,15….. என்ற வரிசையில் உள்ள நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.

நான்காவது நண்பன் அறைக்குள் சென்று 4,8,12,16,20 ஆகிய நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.

ஐந்தாவது நண்பன் அறைக்குள் சென்று 5,10,15,20 ஆகிய நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.

அதேபோல், ஆறு, ஏழு, எட்டு என 20 நண்பர்களும், சரியாக அந்தந்த வரிசையில் சென்று தொப்பிகளை மாற்றுகின்றனர்.

ஆட்டத்தின் முடிவில், 20 நாற்காலிகளின் மீதும் எத்தனை பச்சை நிற தொப்பிகள், எத்தனை நீல நிற தொப்பிகள் உள்ளன? இது தான் புதிர்.

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

 

மூன்று விதமான சரியான விடைகள் உண்டு..

முதல் விதம்

சிகப்பு பந்து – 4 x 1

மஞ்சள் – 16 x 5

நீலம் – 80 x 0.20

 

இரண்டாவது விதம்

சிகப்பு பந்து – 10 x 1

மஞ்சள் – 15 x 5

நீலம் – 75 x 0.20

 

மூன்றாவது விதம்

சிகப்பு பந்து – 70 x 1

மஞ்சள் – 5 x 5

நீலம் – 25 x 0.20

 

சரியான பதில் அளித்தவர்கள்:

ராமலிங்கம், ராம்கி, அருன், கார்த்திகேயன், கிரிபாபு

 

Likes(3)Dislikes(0)
Share
Share
Share