Jan 152015
 

1

“நீண்ட இரவு முடிவுறுகிறது, கடும் துன்பம் விலகுகிறது, பிணம் போல் கிடந்த உடல் விழிக்கிறது. வரலாறும் மரபுகளும் கூட எட்டிப்பார்க்க முடியாத காலத்திலிருந்து புறப்பட்ட, நம் தாய்நாட்டின் குரல் கம்பீரமாக, இந்நேரத்தில் நம்மை நோக்கி வருகிறது. நாளுக்கு நாள் அதன் ஒலி அதிகரித்துக் கொண்டே வந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களை தட்டி எழுப்புகிறது.

தூங்கியவன் விழிக்கிறான்! அந்த குரல் உயிரிழந்த நிலையில் இருக்கும் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் உயிர்துடிப்பை தருகிறது. சோம்பல் நீங்க தொடங்குகிறது. நம் பாரதத்தாய் நீண்ட ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். அவளை யாரும் இனி தடுக்க முடியாது. இனி அவள் தூங்க போவதுமில்லை. புறசக்திகள் எதுவும் இனி அவளை அடிமைப்படுத்த முடியாது, ஏனெனில் அவளது காலடியில் எல்லையற்ற பேராற்றல் எழுந்துக் கொண்டிருக்கிறது.

என் சகோதரர்களே, நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை. மகத்தான வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. எதிர்கால இந்தியா நம் உழைப்பை பொருத்தே அமைய இருக்கிறது. எழுந்திருங்கள், விழித்திருங்கள்…!!”

– சுவாமி விவேகானந்தர், 29 ஜனவரி 1897 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பேசியது (சிகாகோ பாராளுமன்றத்தில் தனது உலக பிரசித்தி பெற்ற உரையை முடித்து இந்தியா திரும்புகையில் அவர் முதலில் தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது)

சுவாமிஜியின் இந்த பொன்னான வரிகளை படித்தவுடன் எனக்குள் ஒரு வியப்பு, ஒரு ஈர்ப்பு! வெள்ளையர்கள் நம்மை ஆட்சி செய்யும்போது, அதாவது நூறாண்டுகளுக்கு முன்பே அவர் கூறிய இந்த வரிகள் இன்றும் பொருந்துமா, செயல்படுத்தக் கூடிய விஷயம்தானா?

சமீபத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது பேருந்தில் என் சீட்டருகில் ஒரு இளைஞர் வந்து அமர்ந்தார். இருவரும் பரஸ்பர அறிமுகம் செய்துக் கொண்டோம். அவர் பெயர் நாராயணன் என்றும், பெங்களூரில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிகிறார் என்றும் தெரிவித்தார். அவருடன் நடந்த உரையாடல் சுவாமிஜியின் வரிகளைக் குறித்த எனது கேள்விக்கு பதிலாக அமைந்தது.

நாராயணன், புதுச்சேரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்து, படித்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அவர் கூறியது…
“நான் சிறு வயதிலிருந்தே அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். அதனால் ஆங்கிலம் என்றாலே சிறு வயதிலிருந்தே ஒரு பயம். கல்லூரியிலும், வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் ஆங்கிலம் தெரியாமல் தாழ்வு மனப்பாண்மையில் நொந்துபோவேன். அப்போதெல்லாம் யாரிடமும் பேசவும் மாட்டேன். ஆரம்ப நாட்கள் மிகக் கடினமாகத் தான் ஓடியது.

ஆனாலும் மனம் தளராமல், கடின உழைப்பினால், சிறிது சிறிதாக ஆங்கிலத்தை கற்றேன். அன்றாட பேச்சிற்கு தேவைப்படும் ஒவ்வொரு வார்த்தையாக குறித்துக் கொண்டு, அதன் அர்த்தங்களையும் சேகரித்து பயிற்சி செய்தேன்.

இவ்வாறாக சுமார் 3000 ஆங்கில வார்த்தைகளும், அதன் அர்த்தங்களும், எங்கே எவ்வாறு அந்த வார்த்தைகள் பயன்படுகிறது என ஒவ்வொரு வார்த்தைகளை வைத்தும் ஐந்து வரிகள் கொண்ட ஒரு தொகுப்பை தயார் செய்து வைத்துள்ளேன். பிறந்த ஊர் வரும்போது இந்த தொகுப்பை பயன்படுத்தி, சுற்றியுள்ள பல அரசு பள்ளிகளில் சென்று இலவசமாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்கிறேன்.

நான் பட்ட கஷ்டங்களும், என்னுள் ஆரம்பத்திலிருந்த தாழ்வு மனப்பாண்மையும் இந்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்க கூடாது என்பதில் மிக அக்கறையாக உள்ளேன்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அது தெரியாததனால் ஒரு பிரச்சினையும் இல்லை, உங்கள் தாழ்வு மனப்பாண்மையை தூக்கி எறியுங்கள் என நம்பிக்கையும் அளிப்பேன். மாணவர்களை தயார் செய்யும் இந்த வேலைகளினால், பெரிய திருப்தியும், மனநிறைவும் ஏற்படுகிறது.

இப்போது எங்கள் நிறுவனத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கும் ஒரு பெரிய டீமை கையாளும் நிலைமையில் வளர்ந்துள்ளேன். ஆனாலும் என்னைத் தவிர அவர்கள் அனைவரும் ஹிந்தியில் சிலசமயம் பேசும்போது சிறிய வருத்தம் இருக்கும், என் அடுத்த இலக்கு ஹிந்திதான் என்று முடிவு செய்துள்ளேன்” எனறு முடித்தார்.

எனக்கு அவர் பேச்சை கேட்டவுடன் மிகப்பெரிய ஆச்சரியம். “ஒரு பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தும், இத்தனை பெரிய சாதனைகளை செய்கிறீர்களே?” எனக் கேட்டேன்.

நாராயணனோ மிக அமைதியாக “நான் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை, எனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள், பல சமுதாய முன்னேற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மரங்கள் நடுவது, இயற்கை விவசாயங்களில் ஈடுபடுவது, சில பகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்வது, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் சென்று கணக்கு, ஆங்கிலம் போன்ற பாடங்களை சொல்லித்தருவது, ஆதரவற்ற குழந்தைகள் இருப்பிடம் மற்றும் முதியோர்கள் இல்லம் சென்று அவர்களுக்கு உதவுவது, என பல சேவைகளை அவரவர்களுக்கு முடிந்தளவு தனியாகவோ, குழுவாகவோ செய்கின்றனர்” என்றார்.

2

சமூக வலைதளங்களில் இதுபோல் சில சாதனைகளைப் நாம் படித்திருப்போம். ஆனால் அத்தகைய சாதனையாளர்களில் ஒருவரான நாராயணனை சந்தித்தும் அவருடன் நடந்த உரையாடலும், எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவர் மாதிரியான இளைஞர்கள் தான் இன்று நாட்டிற்கு தேவை, அவ்வாறு இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம், வலிமையான பாரதத்தை வரும்காலத்தில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கையையும் தந்தது.

விவேகானந்தரின் மேலேக் கூறியுள்ள வரிகளின் கூடவே, “தன்னலமற்ற நூறு இளைஞர்களை தாருங்கள், நம் நாட்டை வல்லரசாக மாற்றித் தருகிறேன்” எனக் கூறிய அவரது வரியும் நியாபகத்திற்கு வந்தது.

மஹாபுருஷர்களின் தீர்க்கதரிசனமும், வாக்கும் என்றுமே பொய்த்ததில்லை. அதனால், சிங்கமென எழுவோம், மகத்தான காரியங்களின் மூலம் இந்தியர்கள் யாரென உலகிற்கு பறை சாற்றிக் கொண்டே இருப்போம். நம்மால் எதுவும் முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்பட தொடங்குவோம்…!

நண்பர்களே, இந்த தமிழர் திருநாளில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் B+ டீமிற்கு உங்கள் ஆதரவும், ஊக்குவிப்பும் தொடரும் என மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இரு பார்வையுமற்ற சென்னை மாணவி IAS தேர்வெழுதி வெற்றிப்பெற்று சாதித்ததால், இந்த மாத சாதனையாளர்கள் பகுதியில் அவரைப் பற்றி விரிவாக காணலாம். புதிய எழுத்தாளர்களை தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தும் நம் நோக்கத்தில் இந்த மாதம் மூன்று புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை காணலாம்.

நெஞ்சை நெகிழ வைக்கும் கதையான “மாற்றம் எங்கே” வையும், மற்ற அருமையான பதிவுகளையும், B+இன் இரண்டாம் ஆண்டு சிறப்பு இதழாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கள் மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(16)Dislikes(0)
Share
Jan 152015
 

4

உடல் ஊனம் ஒரு தடை அல்ல, உள்ளத்தின் ஊனமே தடை என்பதை தன் வாழ்க்கையில் நிருபித்துக் காட்டியிருக்கிறார், சென்னையை சேர்ந்த 24வயது செல்வி பெனோசஃபைன். இரண்டு கண்களும் 100% பார்வையற்று இருந்தாலும், கடின உழைப்பின் மூலம் IAS ஆக உயர்ந்து நிற்கும் இவரை, B+ இதழின் இந்த மாத சாதனையாளராய் அறிமுகப் படுத்துவதில் மற்றற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

இவரைப் போன்ற சாதனையாளர்கள், உடல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி, நம்பிக்கை இழந்த சாமானியர்களுக்கும் பெரிய எழுச்சி தரும் சக்தியாக இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

இந்த நாடு எனக்கு வேலை தரவில்லை என்று சோம்பல் முறிக்கும் சில இளைஞர்களிடம் இவர் கேட்கும் சில கேள்விகள் சாட்டையடியாக இருப்பதோடு மட்டுமன்றி, இந்த உரையாடலை படிக்கும் அனைவருக்கும் உத்வேகமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி இவர் பேட்டியிலிருந்து..

கே: வணக்கம், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.

வணக்கம், என் பெயர் பெனோசஃபைன். அப்பா சார்லஸ், இரயில்வே துறையில் பணிப்புரிகிறார். அம்மா மேரி பத்மஜா. அனைத்து இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தற்போது அறிவிக்கப்பட்ட ரிசல்டில் 343 ஆம் ரேங்கு வாங்கி தேர்வாகியதால், அடுத்து பயிற்சிக்கு செல்லவுள்ளேன்.

படித்தது பார்வையற்றோருக்கான லிட்டில் ஃபிளவர் கான்வென்டில். 2011 ஆம் ஆண்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பீ.ஏ. (ஆங்கில இலக்கியம்) படித்தேன். பின், லயோலா கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு எம்.ஏ. (ஆங்கில இலக்கியம்) படித்தேன். தற்போது பாரதியார் பல்கலைகழகத்தில் டாக்டரேட் படித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்டேட் பாங்கு ஆஃப் இந்தியாவில் பணிப்புரிந்துக் கொண்டிருக்கிறேன்.

கே: உங்கள் சிவில் சர்வீஸ் தேர்விர்கான பயணம் எவ்வாறு தொடங்கியது?

“எனக்கு கண் பார்வை இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் IAS ஆக வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வை இருந்தது” என சின்ன வயதிலிருந்தே நான் அனைவரிடமும் கூறுவதுண்டு. நமது நாட்டின் பொருளாதாரம் ஏன் இப்படி உள்ளது, எவ்வாறு நாட்டை வளர்ச்சி அடைய செய்யலாம் என்று நம் நாட்டைக் குறித்த கேள்விகள் என் மனதில் எப்போதும் தோன்றும்.

நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டில் இருக்கும் வரை, நம்மால் முடிந்த ஏதாவது நல்ல பங்கினை அளிக்க வேண்டும். நம் நாட்டில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அனைவருக்கும் தேசபக்தியும் தேசத்தின் மீது பற்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த எண்ணம் எனக்குள் ஆழமாக என்றுமே இருந்து வருகிறது. இந்த மாதிரி சமுதாயம் குறித்த சிந்தனைகள் தான், என்னை IAS அதிகாரி ஆக வேண்டுமென்ற ஆசையை விதைத்தது என நினைக்கிறேன்.

கே: சமுதாயம் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு தெரிந்துக்கொள்வீர்கள்?

நம்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பேன். நிறைய தகவல்களை தினசரிகளின் மூலம் தெரிந்துக்கொள்வேன். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிய ஆரம்பிக்கும் போதுதான், நமக்குள் நல்ல தாக்கம் வரும்.

கே: IAS ஆகியவுடன் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு குறிப்பிட்ட சர்வீஸ் ஒதுக்கியப்பின் இரண்டு முதல் இரண்டரை வருடங்கள் வரை பயிற்சி இருக்கும். பயிற்சி முடிந்தபின், என்னால் எத்தனை சிறப்பாக செயலாற்ற முடியுமோ அனைத்தையும் செய்வேன். நான் இடும் ஒவ்வொரு கையெழுத்தும் ஒரு ஆக்கப்பூர்வமானதாக நிச்சயம் இருக்கும்.

கே: இந்தக் காலத்து இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது?

அவர்கள் கண்டிப்பாக அதீக திறமைகள் உள்ளவர்கள் தான். நம் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு பிடித்ததை செய்வதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில், நாட்டில் என்ன நடக்கிறது, நாட்டிற்காக நாம் என்ன செய்யலாம், எப்படியெல்லாம் நாம் முழு செயல்திறனுடன் முன்னேறலாம் என்று யோசிக்க வேண்டும்.

வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், நன்றாக அனுபவிக்கலாம் என்று மட்டும் இருந்துவிடாமல், அதையும் தாண்டி நிறைய சேவை செய்து, சாதிக்கலாம். IAS மாதிரியான வேலைகளை தேர்வு செய்து, நாட்டிற்கு தேவையான நல்ல திட்டங்களை கொடுப்பதன் மூலம் மக்களுக்கு உதவி செய்யலாம் என்ற நல்ல மனநிலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நம் நாட்டை நேசிக்க வேண்டும். நாட்டில் உள்ள உயர்ந்த விஷயங்களை வியந்து பார்க்க வேண்டும். இங்கு ஊழல் இருக்கிறது, பல பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறி நின்றுவிடாமல், இங்குள்ள நிறைய நல்ல சாதனைகளையும், சாதனையாளர்களையும் இளைஞர்கள் காணவேண்டுமென நினைக்கிறேன்.

கே: ஆனால் நம் இளைஞர்களுக்கு எத்தனை பிரச்சினைகள் உள்ளன? படிப்பு முடித்து பட்டம் வாங்கியவுடன் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அவர்கள் பல சோதனைகளினால் சோர்ந்துவிடுகின்றனரே?

இந்த நாடு எனக்கு வேலை வாய்ப்பு தரவில்லை. நான் வேலையில்லா பட்டதாரியாக இருக்கிறேன் என்று கவலைப்படும் சில இளைஞர்களைப் பார்த்து கேட்கிறேன்.

முதலில் நாம் வேலைக்குத் தேவையான தகுதிகள் முழுதும் வளர்த்துக்கொண்டோமா? நாடு நமக்கு வேலை தரவில்லை என்று சொல்வதற்குமுன், அந்த வேலையில் சேரும் தகுதி நமக்கு முழுமையாக இருக்கிறதா என்று முதலில் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, வேலை வாய்ப்பை நாம் எவ்வாறு தேடுகிறோம்? கணினியில் உட்கார்ந்து வேலை வாய்ப்புக்கான இணைய தளங்களில் தேவையான நேரத்தை செலவிடுகிறோமா அல்லது சமூக வலைதளங்களில் பொழுதை வீணடிக்கிறோமா?

எத்தனை வேலை வாய்ப்பு செய்திகள் வருகிறது? எந்தெந்த செய்தித்தாள்களில், புத்தகங்களில் வருகிறது போன்ற தகவல்களை தேடி பின்பற்றும் ஒருவருக்கு தான் நம்நாடு எனக்கு வேலை தரவில்லை என்று சொல்கிற தகுதி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

கே: அப்படி என்றால் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

நான் மேலே கூறியது போல், ஒரு வேலை செய்யும் முழு தகுதியையும் நாம் வளர்த்துக்கொண்டால், அந்த வேலை கிடைக்கவில்லை என்றாலும், நாமாகவே ஓரு தொழிலையே உருவாக்கலாம். நம்நாட்டில் வேலை வாய்ப்புகள் இல்லை என சொல்வது மிகத்தவறு. இங்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் சென்று பிடித்துக்கொள்ளும் பக்குவத்தையும் திறமையையும் நம் இளைஞர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

கே: தன்னம்பிக்கை வரும் வகையில் இளைஞர்களுக்கு என்ன அறிவுரைக் கூறுவீர்கள்?

அறிவுரை என்றில்லை. ஒரு தோழியாக சொல்கிறேன். தன்னம்பிக்கை என்பது நிறைய சாதனையாளர்களை பார்த்து ஒரு உந்துதளின் மூலம் பலசமயம் வரும், அதே நேரத்தில் நம் உள்ளத்திலிருந்தும் அது வரவேண்டும். என்றைக்கு என் வாழ்வில் நான் முடிவெடுக்க தயங்குகிறேனோ, என்றைக்கு என்னால் முடியாது என்று என்னை நானே குறைவாக மதிப்பிடுகிறேனோ, அன்றே நான் தோற்றுவிடிகிறேன். நான் இந்த வேலைக்கு லாயக்கு அல்ல, இது என்னால் முடியாது என்று சொல்கிற அளவு நான் தாழ்ந்து போகவில்லை என்ற உத்வேகம், தன்னம்பிக்கை, அனைவருக்கும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

கே: உங்களுக்கு அந்தளவு தன்னம்பிக்கையும் வேகமும் வரக் காரணமாய் இருந்தது எது?

இயற்கையாகவே வந்த ஒரு விஷயமென்றும் சொல்லலாம். சிறு வயதிலிருந்தே, உன்னால் இந்த விஷயத்தை செய்ய முடியாதென்று யாராவது சொன்னால், கண்டிப்பாக அதை செய்து முடித்து விடுவேன். மேலும், எனது குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் முக்கிய காரணம். நாம் ஒரு வேலையை நன்றாக செய்யும்போது, அதை பலர் பாராட்டுகையில், அந்த வேலையை இன்னும் சிறப்பாக செய்ய முடிகிறது.

5

கே: எத்தனை தூரம் சுயமாக ஊக்கப்படுத்திக் கொண்டாலும், பிராக்டிக்கலாக உள்ள பெரும் சவாலை நினைத்து, ஏதாவது ஒரு தருணத்தில் வருந்தியது உண்டா? அத்தனை சோதனைகளையும் தாண்டி எவ்வாறு வெற்றிக் கண்டீர்கள்?

நான் என்றுமே ஒரு குறைப்பாடு என்னிடம் உண்டு என்று கவலைப்பட்டதே இல்லை. நம்மிடம் அது இல்லை, இது இல்லை என்று கூறி வருத்தப்படுவதை விட, இத்தனை நல்ல விஷயங்கள் இருக்கிறது என்று அதைக்கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று எப்போதுமே பாஸிட்டிவான அணுகுமுறையில் தான் இருப்பேன்.

ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க கூடிய உரிமை மட்டுமே என்னிடம் இருக்கிறது என என்றுவரை நினைக்கிறேனோ, அன்று வரை நல்ல முடிவுகள் மட்டும் தான் எடுப்பேன்.

சிலர் கேளி கிண்டல் எல்லாம் எவ்வாறு கடந்து வந்தீர்கள் எனக் கேட்பார்கள். எனக்கு அதுபோல் யாரும் கேளி செய்ததாக நியாபகம் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்ததாகக் கூட தெரியவில்லை. ஏனெனில் நான் அவைகளை பெரியதாக எடுத்துக்கொண்டதும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என் தகுதி மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. என்னைப் பற்றி குறைவாக சான்றளிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற மனநிலை இருந்தால், இந்த மாதிரியான விஷயங்களுக்கு நாம் நேரம் கொடுக்கமாட்டோம்.

கே: IAS படிப்பிற்கு கடின உழைப்புடன், நிறைய படிக்க வேண்டுமென சொல்கிறார்களே? அதைப் பற்றி?

IAS பரீட்சைக்காக இவ்வாறு படித்தேன், அவ்வாறு படித்தேன், எந்த விழாக்களுக்கும் செல்லாமல் தியாகம் செய்தேன், இப்படியெல்லாம் சொல்வார்கள். பரீட்சைக்காக எதையும் நான் பெரிதாக இழக்கவில்லை. வேலைக்கு சென்றுக்கொண்டே தான் படித்தேன். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தான் படிப்பேன். ஒருநாளில் படித்தது கொஞ்சம் தான் என்றாலும் மிகவும் ஈடுபாட்டுடன் படிப்பேன். படித்த விவரங்களை நன்றாக புரிந்துக்கொண்டு, ஆய்வு செய்து, தொகுத்து விளக்கமாக சொல்கின்ற அளவிற்குப் படிப்பேன்.

கே: IAS தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரைகள்?

IAS தேர்விற்கு தன்னை தயார் செய்ய வேண்டும் என்று ஒருவர் நினைத்தலே பெருமையான விஷயம் தான். மேலும் அந்த முடிவை முழு நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் எடுத்து செல்லும்போது வெற்றி நிச்சயம்.

கே: உடல் ரீதியாக எந்தக் குறையும் இல்லாத சிலர், தங்களிடம் அந்த பிரச்சினை உள்ளது, அது இல்லை என பலக் காரணங்களை காட்டி சவால்களை ஏற்க தயங்குகின்றனர். அவர்கள் அந்த எண்ணத்தை உடைப்பதற்கு சில உபாயங்கள் கூறுங்களேன்..

மனரீதியில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு வயது குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருக்கிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு சின்ன விஷயமும் என்னை தோற்க்கடிக்கும் அளவிற்கு நான் அத்தனை சாதாரன ஆள் இல்லை என முழுமையாக நம்புங்கள். என் வாழ்வில் என்னைக் கீழே தள்ளுவதற்கு என்னை உட்பட எவருக்குமே அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கையில், ஒரு கஷ்டம் என்னை கீழே இழுத்தது, ஒரு பெரிய சவால் வந்ததும் நான் தோற்றுப் போய்விட்டேன் என்று சிலர் சொல்வதை ஏற்க முடிவதில்லை.

மிகவும் எளிமையாக சொல்கிறேன்.

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி” போன்ற வரிகளை நினைத்துப் பாருங்கள். உங்களிடம் உள்ள தனிப்பட்ட சிறந்த விஷயங்களை வைத்து மேலே வாருங்கள். எத்தனை தூரம் சூழ்நிலை நம்மை பின்னே தள்ளுகிறதோ, அத்தனை தூரம் முன்னே வருவேன் என்ற வேகம் வேண்டும்.

ஒரு ஹெலன் கெளர், என்னால் பார்க்க முடியாது, கேட்க முடியாது என்று நினைத்து இருந்தால், அவரது சாதனைகள் எதுவுமே நடக்காமல் போயிருக்கும்.

ஒரு காந்திஜி, என்னால் பேச முடியவில்லை, எனக்கு எந்த ஆதரவு இல்லை, போராடினால் கைது செய்துவிடுவார்கள், இப்படியெல்லாம் அன்று நினைத்து இருந்தால், இன்று காந்தீய கருத்துக்கள் இல்லாமலே போயிருக்கும்.

எல்லா வெற்றியாளர்களுக்குப் பின்னும் மிகப்பெரிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இருந்துள்ளது. இது இரண்டும் இருந்தால், எந்த மாதிரியான மனரீதியான பிரச்சினைகளையும் தாண்டிவிடலாம். சவால்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால், வாழ்க்கையில் சுவை இருக்காது. அந்த சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கே: நமது சமுதாயத்திற்கு ஏதெனும் கருத்து சொல்ல நினைக்கிறீர்களா?

சமுதாயம் எப்போது ஆரோக்கியமாக இருக்குமென்றால், அறநெறிகளை கடைபிடிக்கப்படும்போது தான். முழுமனதோடு அடுத்தவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்ற கேள்விக்கு விடையளித்துக் கொண்டே, தனக்குள்ள இலக்குகளை அடையும் தருணம் ஒரு சிறந்த சமுதாயத்தின் துவக்கமாக இருக்குமென நினைக்கிறேன்.

கே: இந்தியா வரும் ஆண்டுகளில் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அனைவருக்கும் நல்ல வேலை இருக்க வேண்டும். அவற்றை உருவாக்கி தரும் தகுதியும், வேலை செய்யக் கூடிய ஆற்றலும் அனைவருக்கும் இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் வளர்ச்சியுடன் கூடவே, அறநெறிகள் நிறைந்த சமுதாயமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசை. நம்பிக்கை தானே எல்லாம்.

கே: IAS ஆக வேண்டும் என்று விரும்பி ஆகிவிட்டீர்கள், அடுத்த நோக்கம் என்ன?

IAS ஆக வேண்டும் என்பது தொடக்கமே தவிர, முடிவள்ள. இது தான் செய்யணும் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் செய்கின்ற வேலையில் என்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செய்ய விரும்புகிறேன்.

கே: உங்களுடனான இந்தப் பேட்டி நிறைய மனிதர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு நன்றி..

மிக்க நன்றி. Bepositive என்ற உங்கள் இணைய தளத்தின் தலைப்பு நன்றாக உள்ளது. பாஸிட்டிவ் அணுகுமுறை தான் வாழ்க்கை. பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

Likes(6)Dislikes(0)
Share
Jan 152015
 

 

 

St1

கோபாலனுக்கு 60 வயது நிரம்புவதை கொண்டாட வெளியூரில் வசிக்கும் அவரது மகனும் , இரண்டு மகள்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு சிறிய குளிரூட்டப்பட்ட சத்திரம். கோபாலனும் அவரது மனைவியும், மனையில் அமர்ந்திருக்கின்றனர், சஷ்டியப்தபூர்த்தி சடங்குகளுக்காக.

அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்றிக்கொண்டே, புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். கூடவே , கோபாலனை பார்த்து “ சொல்லுங்கோ,”! என்று ஆணை வேறு. கோபாலனும் , மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு குருக்கள் சொல்வதை , தப்பு தப்பாக, திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், குடும்பத்தோடு நாற்காலிகளில் உட்கார்ந்து , முன் பக்கம் பின் பக்கம் திரும்பி பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

கோபாலனின் மகள்களும் மகனும் பட்டுப்புடவை, பட்டுவேட்டி சரசரக்க வாசலுக்கும், ப்ரோகிதருக்கும், டைனிங் ஹாலுக்குமாக , குறுக்கிலும் நெடுக்கிலும் வளைய வந்துக் கொண்டிருக்கின்றனர்.எல்லோர் முகத்திலும் ஒரு மலர்ச்சி.

உறவினர் மற்றும் கோபாலனின் குடும்பத்தினர் குழந்தைகள் ,இங்கும் அங்கும் ஆடி ஓடி , ஒரே அமர்க்களம் ,கும்மாளம், கூச்சல். .

அந்த வைதிக கூட்டத்தின் நடுவில், ஒரு சின்ன பையன். அவனுக்கு ஒரு 4 வயதிருக்கும். கொஞ்சம் புஷ்டியாக, வடக்கத்தி பையன் போல இருந்தான். . ரொம்ப துறு துறு முகம். தலை நிறைய முடி .

அந்த சிறுவன் , இங்கே ஓடினான், அங்கே ஓடினான், சிரித்துக் கொண்டே, கொஞ்சம் மழலையில் ஹிந்தியில் பேசிக்கொண்டு. குழந்தைகளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு எனெர்ஜி வருமோ, ஒரு நிமிடம் கூட அவன் ஓயவில்லை.

வேகமாக மணவறைக்கு ஓடி வந்து, குத்து விளக்கில் , காய்ந்த தர்ப்பை சருகுகளை , கம்பி மத்தாப்பு போல போட்டு எரித்தான். “டேய்! டேய்! “ என்று யாரோ சொல்வதற்குள், அங்கிருந்து ஓடி, ப்ரோகிதர் பக்கத்திலிருந்த தட்டை கவிழ்த்தான். அடுத்த வினாடி, மனையில் இருந்த கோபாலனிடம் ஓடிச் சென்று ஏதோ கேட்டான். அவரும் புன்சிரிப்புடன் தலையசைக்க, முன்னால் இருந்த தட்டில் இருந்து , குட்டிக் கை நிறைய முந்திரியை அள்ளி கொண்டான். “டேய், வாண்டு , எடுக்காதே! தட்டில் போடு” என்று ப்ரோகிதர் சொல்வதற்குள் சிட்டாய் பறந்து விட்டான்.

ஆரம்பத்தில், அந்த பையனின் குறும்பு மணவறையை சுற்றி இருந்த அனைவருக்கும் ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால், கொஞ்ச நேரத்தில் சிலருக்கு சலிக்க ஆரம்பித்து விட்டது. “யார் அந்த பையன்? சரியான வாலாக இருக்கிறானே ? அவன் அம்மா எங்கே ?” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால், அதை கோபாலன் சட்டை செய்யவேயில்லை. மணவறையில் இருந்து சிரித்துக் கொண்டே அந்த பையனை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்தார். பக்கத்தில் மனையிலிருந்த அவரது மனைவியும் கூட, அந்த பையனின் அட்டகாசத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஆச்சரியம், கோபாலனின் பிள்ளை, பெண்களுக்கு. நம்ம அப்பாவா இப்படி? முனுக்கென்றால் எல்லாவற்றிற்கும் மூக்கின் மேல் கோபம் வருமே, அவருக்கு. அவர் எப்படி இப்படி ? நம்ம குழந்தைகள் சேஷ்டை பண்ணினால், திட்டுவாரே! iஇப்போ மட்டும் எதுக்கு ஒன்னும் சொல்லாமல் இருக்கிறார்?

அவர்களுக்கு இன்னும் ஆச்சரியம், அம்மாவும் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தது !. நெருங்கிய சுற்றத்திற்கும் கூடத்தான். “யார் குழந்தை இவன்? அவனது அப்பா அம்மா எங்கே? ஏன் யாரும் கண்டிக்கவில்லை? ”.

முத்தாய்ப்பாக, அந்த குழந்தை புரோகிதர் முடியை பிடித்து இழுத்து விட்டான். அவர் வலி தாங்காமல் இந்த பக்கம் சாய, ஹோமத்திற்கு வைத்திருந்த நெய் எல்லாம் கொட்டி, அம்மாவின் பட்டுப் புடவை முழுக்க கறை. சுற்றியிருந்தவர்கள் எல்லாம் “டேய் டேய்” என்று கத்தினார்கள்.

கோபாலனின் கடைசி பெண்னுக்கு தாங்க வில்லை. இது என்ன விஷமம்? ஏதாவது அபசகுனமாக ஆகி விட்டால் ? பொறுக்கவேயில்லை. விடுவிடென்று போய், குழந்தையை பிடித்து இழுத்தாள். அவனை அடிக்க கையை தூக்கி விட்டாள்.

கோபாலன் தடுத்து நிறுத்தினார். “விடும்மா! பாவம் அவன் ! சின்ன குழந்தை!” .

மகள் கோபமாக “என்னப்பா நீங்க! இந்த லூட்டி அடிக்கிறான். உங்க பொறுமைக்கு ஒரு அளவே இல்லியா? யார் குழந்தைன்னு கூட சொல்ல மாட்டேங்கறீங்க?”

“இல்லேம்மா!. இந்த பையன் நம்ப எதிர் வீட்டிலே தான் இருக்கான். கொஞ்ச நாள் முன்னால் தான் குடி வந்தாங்க., டெல்லி பக்கத்திலிருந்து. இந்த சின்னப் பையன் கதை ரொம்ப பாவம்மா! “

நிறுத்தினார் கோபாலன். அந்த மணவறையே கொஞ்சம் அமைதியானது.

“உனக்கு தெரியாது ! நாலு நாள் முன்னாடிதான் இவன் அம்மா ஒரு விபத்திலே செத்து போயிட்டங்க. இவன் அப்பாவுக்கும் மண்டையிலே அடி. அதனாலே அவர் இன்னும் ஆஸ்பத்திரியில் இருக்கார். இன்னும் மயக்கம் தெளியலே. இவங்க கல்யாணம் கலப்பு திருமணம் . அதனாலே அவங்க அப்பா அம்மா வீட்டிலே ஒரே சண்டை ! தகவல் சொல்லியிருக்கு ! எப்போ வருவாங்களோ தெரியாது !”

கோபாலன் தொடர்ந்தார் .” அம்மா உயிரோட இல்லைங்கிறதே குழந்தைக்கு தெரியாது. இரண்டு நாளா குழந்தை. அம்மா அம்மா என்று அழுதுகொண்டேயிருந்தான்.. இன்னிக்கு தான் கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு இருக்கான். வேறே யாரும் இல்லாத இவனுக்கு இப்போதைக்கு நாங்க தான். . அம்மா இல்லாமல் வளரப் போற இந்த குழந்தையை எப்படி திட்டவோ அடிக்கவோ மனசு வரும்?”- கோபாலன் முடித்தார்.

சுற்றி நின்றவர்கள் ஸ்தம்பித்து விட்டனர். என்ன சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. “ஐயோ பாவமே” என்ற வார்த்தை மட்டும் சிலர் வாயிலிருந்து உதிர்ந்தது. சிலர் அந்த குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றிரண்டு பேர் கண்களில் லேசான நீர்த்திவலை.

இது எதுவும் புரியாத அந்த வடக்கத்தி குழந்தை, கோபாலனைப் பார்த்து சிரித்தது. அது மொழி தெரியாத கள்ளமற்ற வெள்ளை சிரிப்பு. பார்த்துகொண்டிருந்த கூட்டத்தில், ஒரு பெண்மணி , “வாடா என் செல்லமே !” என்று சொல்லிக் கொண்டே, குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள்.

கோபாலனின் மகள் கொஞ்சம் திராட்சையை அள்ளிக் கொடுத்தாள். அவளை கட்டிகொண்டு குழந்தை அவளது கன்னத்தில் ஒரு சிறிய முத்தம் கொடுத்தது. தன் அம்மா போல் இருக்கிறாள் என நினைத்தானோ என்னமோ ? புரோகிதர் கூட , தனது குடுமியை, குழந்தை பிடிக்க நீட்டினார்.

***

அதே வளசரவாக்கம். அதே சத்திரம். அதே கோபாலனும் அவரது மனைவியும் மனையில். புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களது குடும்பத்தோடு அமர்ந்திருக்கின்றனர். அதே பட்டுப்புடவை, பட்டுவேட்டியுடன் மகள்களும் மகன்களும்.அதே குழந்தை. அதே குறும்பு… எதுவும் மாறவில்லை..

ஆனால், இப்போது அந்த குழந்தையை யாரும் வையவும் இல்லை. சபிக்கவும் இல்லை. சலித்துக் கொள்ளவும் இல்லை. மாற்றி மாற்றி கொஞ்சி கொண்டு இருந்தார்கள். கன்னத்தை கிள்ளி ‘துமாரா நாம் க்யா ஹை?’ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

உறவினர் இடையே ஏன் இந்த பெரிய மாறுதல்? மாற்றம் எதனால்? குழந்தையை பற்றி உண்மை விபரம் தெரிந்ததால் ஏற்பட்ட நெகிழ்ச்சியா? அவனது இழப்பை பற்றி அவனுக்கே தெரியவில்லை என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட அனுதாபமா?

முற்றும்.

–    முரளிதரன் செளரிராஜன்

 

மேலுள்ள படத்தை ஒரு கோணத்தில் பார்க்கையில் ஒரு வயதான பெண்ணாகவும், மற்றொரு கோணத்தில் ஒரு இளம் வயது பெண்ணாகவும்  தெரிகிறது. படம் ஒன்று தான் ஆனால் பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொருத்து மாறுபடுகிறது.

நடப்பவை எல்லாவற்றையும் பாஸிடிவாக சிந்தித்து பார்த்து பழகுங்கள் என்பதை தான் நம் முன்னோர்களும் “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என்று கூறி இருந்திருக்கிறார்கள். அதனால் எண்ணங்களை எப்போதும் பாஸிடிவாகவே வைத்துக்கொள்வோம்.

Inspired by : Stephen R Covey’s concept “Paradigm Shift”

–    முரளிதரன் செளரிராஜன்

Likes(3)Dislikes(0)
Share
 Posted by at 12:26 am
Jan 152015
 

Kavithai

போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

உன்னிடம் உள்ள தன்னம்பிக்கை
உன்னை விட்டு அகலும் வரை
சோர்ந்து விடாதே!

இதுதானா வாழ்க்கை என்று
நீயும் கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார் ஒரு கூட்டம்,
உதவி என்று இன்னொரு கூட்டம்
கருணையில் நீயும் இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் வேண்டும் என்பார்கள்
இதுதான் முடியும் என்பாய்!
மறுகணமே கஞ்சப் பிரபு என
புறம் கூறிவிட்டு செல்வார்கள்!
கொடுத்ததை திரும்பக் கேட்டால்
கோமாளி என்பார்கள்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பார்கள்!

நாம் இழைக்கும் தவறுகளிலே
கதைப் பேசி பிழைக்கும் கூட்டம் இது!
இவர்களின் பேச்சைக் கேட்டு;
கவலைப்பட வேண்டாம்!!
கருணையற்ற கூட்டம் காணும்படி,
கண்ணீரை மட்டும் சிந்தி விடாதே!

போகட்டும் அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!
காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!

– ச.நித்தியலஷ்மி,

(திருகனூர்பட்டி, தஞ்சாவூர்)

0

Likes(2)Dislikes(0)
Share
Jan 152015
 

Youth

இன்று விடுமுறை தினம். எனது மடிக்கணினியை எடுத்து ஈமெயில்களை பார்க்கத் தொடங்கினேன். எனது நண்பனிடமிருந்து ஒரு ஈமெயில். அதில் ஒரு கடவுளின் புகைப்படம். அதை ஒட்டி ஒரு ஆண்மீக கருத்து. கடைசியில் ஒரு செய்தி. “உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டுமா, இதை உடனே 25 நண்பர்களுக்கு அனுப்புங்கள்”. அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, அந்த மெயிலை DELETE செய்துவிட்டு, முகப்புத்தகத்தில் வலம் வரத் தொடங்கினேன். அதில் ஒரு பதிவு “இந்த புகைப்படத்தை அடுத்த 10வினாடிகளுக்குள் ஷேர் செய்யாவிடில் துரதிர்ஷ்டம் வந்தடையும்” என்று இருந்தது.

இவை இரண்டையும் பார்த்த எனக்கு, சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம்  நினைவிற்கு வந்தது. பல வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை எட்டு மணி. அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் எனது பள்ளியில் அன்று முதல் முறையாக ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணினி கூடத்திற்கு அழைத்து செல்வதாய் இருந்தார்கள். கணினி என்பதே கேள்விப்படாத பல பள்ளிகள் இருக்கும்போது எங்கள் பள்ளி ஒரு கணினியை வாங்கி, ஒரு ஆசிரியரை பணி அமர்த்தி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக அறிவித்திருந்தது.

முதல் நாள் கணினி அறையை நுழைய எல்லா மாணவர்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம். நானும் மிகுந்த சந்தோஷத்துடன், காலணிகளை கழற்றிவிட்டு, ஆவலுடன் உள்ளே செல்ல காத்திருந்தேன். எங்கள் பள்ளியில் கணினி அறை குளிர்சாதன வசதியுடன் இருந்த ஒரே அறை. அதுவரை படத்திலும், பாடத்திலும் மட்டுமே கணினியை பார்த்த எனக்கும் மற்ற மாணவர்களுக்கும் மிகவும் வியப்பு.

எங்கள் பெயரை “BASIC” என்ற ப்ரோகிராமில் டைப் செய்து அதை DOT MATRIX PRINTERஇல் பிரிண்ட் செய்ய வேண்டும். அதுதான் அன்றைய கணினி பயிற்சி வகுப்பு. அந்த பிரிண்டை எனது புத்தகத்தில் ஒட்டி வைத்து, வீட்டில் எனது பெற்றோர், உறவினர் என்று எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தேன்.

அப்போது தபால்காரர் மணியடிக்க, அவரிடம் அந்த தபாலை பெறுவதற்கு வாசலுக்கு விரைந்தேன். அந்த தபாலில், இந்த உலகம் கூடிய விரைவில் அழிய இருக்கிறது, உடனே இந்த தபாலில் உள்ளது போல் 10தபால்கார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்பும்படி எழுதியிருந்தது. இதை என் தந்தையிடம் கேட்டபோது, அவர் இது யாராவது வேலையில்லா விஷமிகளின் செயல், இதை பொருட்படுத்தாதே என்று அந்த கார்டை கிழித்துக் குப்பையில் போட்டார்.

அந்த பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளையும் சிந்திக்க ஆரம்பித்தேன்.

நமக்கு தினமும் இது போன்ற பல தவறான மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகள் பல வருகிறது. சமூக வலைதளங்களில் பல நண்மைகளுக்கு இடையில் இது போன்ற பல பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அவற்றில் கீழுள்ள சிலவற்றை அடிக்கடி பார்த்திருப்போம்.

1)   கைப்பேசி டவரின் அலைக்கற்றையினால் சிட்டுக்குருவிகள் இறந்துவிடும் என வரும் ஒரு தகவல். உண்மையில், துபாயில் எனது வீட்டருகே அடுத்தடுத்து 3 டவர்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் வீட்டருகே பல சிட்டுக்குருவிகளை அடிக்கடி காணமுடிகிறது.

2)   இன்னொரு தகவல் – பிரபல குளிர்பான நிறுவனம் பற்றியும் அதில் உள்ள உடல்கேடு குறித்தும் படித்திருப்போம். இதுவும் ஒரு வியாபார உக்தி, NEGATIVE PUBLICITY. சக்கரை அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட பானம் என்று வேண்டுமானாலும் ஒதுக்கலாமே தவிர வதந்திகளுக்காக கூடாது. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் கூட, அனைத்து வாயு குளிர்பானமும் கேடுதானே, ஏன் ஒரு நிறுவனத்தை மட்டும் குறை சொல்லவேண்டும்?

3)   இன்னொரு தலைசுற்ற வைக்கும் தகவல் – ஒரு அழகான, பிரம்மாண்டமான வீடு மற்றும் பல வித கோணங்களில் அந்த வீட்டின் உள்கட்டமைப்பின் புகைப்படம். இது பிரபல தொழிலதிபரின் வீடு என்றோ, வரி ஏய்ப்பு செய்த நடிகரின் வீடு என்றோ, ஒரு விளையாட்டு வீரரின் வீடு என்றோ வரும் தகவல்களை பார்த்திருப்போம்.

4)   சமீபத்து வரவாக, ஒரு பெண்ணின் புகைப்படத்தை போட்டு, இவர் வீட்டிற்குள் புகுந்து, சிலிண்டரை சோதனை செய்யும் அதிகாரி எனக்கூறி வீட்டில் உள்ள பொருள்களை சூரையாடி ஓடிவிடுகிறார் என வேகமாக பரவிய ஒரு பதிவு. அது உண்மையில்லை, யாரும் நம்பாதீர்கள், அந்த புகைப்படத்தில் உள்ளவர் என் சகோதரி தான் என்று ஒரு வாரம் கழித்து இன்னொரு பதிவு. நமக்கு இரண்டில் எது உண்மை எனத் தெரியாது. அப்படியிருக்கையில் நாம் ஷேர் செய்வது ஒருவேலை ஒரு நிரபராதியை தண்டித்து காயப்படுத்தலாம்.

இவைகளைப்போல் தினமும் நாம் பல தவறான செய்திகளைக் காண்கிறோம், ஷேர் செய்கிறோம். இதையெல்லாம் வேலையில்லாத விஷமிகளின் விலையாட்டாகவும், தவறான உள் நோக்கத்துடன் அனுப்புகிறார்கள் என்பதையும்புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இவ்வாறு நாம் ஷேர் மற்றும் லைக் செய்யும்போது, நமது PROFILE SECURITY SETTING குறைவாக இருந்தால், நமது புகைப்படம் மற்றும் நம் சொந்த விவரங்கள் அனைவருக்கும் தெரியவரும். இதனால் தேவையில்லாத பல இன்னல்களுக்கு ஆலாககூடும்.

இந்த புத்தாண்டு முதல் நாம் அனைவரும் ஒரு நல்ல தீர்மானம் எடுக்கலாமே? நமக்குத் தெரியாத செய்திகளை பரப்பாமல் இருப்போம்.

சமூக வலைதளங்கள், மற்ற தகவல் தொழில் நுட்ப கருவிகளை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுதிதினால் நமது சமுதாயமும், அடுத்த தலைமுறையினரும் பயன்பெறுவது உறுதி.

காந்தியடிகள் சொன்னதுபோல், நல்லதையே படிப்போம், நல்லதையே பகிர்வோம், நலமாக வாழ முற்படுவோம்.

–    ச.கார்த்திகேயன்

(துபாயிலிருந்து)

 

Likes(1)Dislikes(0)
Share
Jan 152015
 

Kids

ஒரு ஊரில் பரம ஏழை ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அந்த ஊர் கோவிலை கடந்து செல்லும்போது, “கடவுளே, நான் உன்னை நினைக்காத நாள் இல்லை, இருந்தும் என்னை ஏன் இப்படி வறுமையில் வாட்டுகிறாய்?” என்று கதறி அழ, இறைவன் அவன் முன் தோன்றி, “நீ செல்வந்தன் ஆவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்.
“எனக்கு லாட்டரியில் பரிசு கிடைக்க வேண்டும்” என்று வேண்டினான். இறைவனும் அவனுக்கு வரம் அருளி மறைந்தார்.

இறைவனிடம் வரம் கிடைத்த அகந்தையில், “எப்படியும் நமக்கு தான் பரிசு என்று இறைவன் கூறிவிட்டாரே, எதற்காக லாட்டரி சீட்டு வாங்க வேண்டும்?” என்று எண்ணி சீட்டு வாங்காமல் இருந்து விட்டான்.

பரிசு அறிவிக்கும் நாள் வந்தது. பரிசு பெற்றவர்கள் பட்டியலில் தன் பெயர் இல்லாததை கண்டு கோபம் கொண்ட அந்த மனிதன் கோவிலுக்கு சென்று, “என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே இறைவா” என்று கதறினான்.

இறைவன் அவன் முன் தோன்றி, “மானிடா, நான் ஏன் உன்னை ஏமாற்ற வேண்டும்?” என்று கேட்டார்.

கோபம் தனியாத மனிதன், “எனக்கு பரிசு தொகை கிடைக்கும் என வரம் அளித்தாயே, பிறகு ஏன் எனக்கு அந்த பரிசு கிடைக்கவில்லை?” என கேட்டான்.

அமைதி மாறாத இறைவன், “லாட்டரி சீட்டில் பரிசு விழ வேண்டுமென கேட்டாய், நானும் வரமளித்தேன், நீ சீட்டு வாங்காமல் என் மீது பழி போடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்க வெட்கி தலை குனிந்தான் அந்த மானிடன்.

இறைவன் இருக்கிறானா, இல்லையா என்பது தனி வாதம், இறைவனிடம் நாம் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டு வரம் பெற்றாலும், நாம் செயல் பெற்றால்தான் அந்த வெற்றி சாத்தியமாகும்.

– ரக்ஷன்

Likes(17)Dislikes(0)
Share
 Posted by at 12:04 am
Jan 152015
 

Puzz1

ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு ரயிலிற்கும் நடுவில் 180கிலோமீட்டர் தொலைவு உள்ளது. முதல் ரயில் மணிக்கு 100கிமீ வேகத்திலும், இரண்டாம் ரயில் மணிக்கு 80கிமீ வேகத்திலும் ஒன்றை ஒன்று நோக்கி வருகின்றன.

அப்போது முதல் ரயிலின் மேல் இருந்த ஒரு பருந்து, இரண்டாவது ரயிலை நோக்கி மணிக்கு 140கிமீ வேகத்தில் பறந்து செல்கிறது. இரண்டாவது ரயிலை அடைந்தவுடன், திரும்பவும் முதல் ரயிலை நோக்கி பறந்து செல்கிறது. இவ்வாறு இரண்டு ரயில்களும் மோதிக் கொள்ளும் வரை அந்தப் பருந்து, இரண்டு ரயில்களுக்கும் மாறி மாறி பறந்து செல்கிறது.

பருந்தின் வேகம் குறையவே இல்லை, தண்டவாளத்து பாதையில் மட்டுமே பறக்கிறது. அப்படியெனில், ரயில்கள் மோதிக் கொள்ளும் வரை பருந்து மொத்தம் எத்தனை தூரம் பறந்திருக்கும்?

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்தமாத இதழில் வழக்கம்போல் வெளிவரும்…

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

முதல் பையிலிருந்து ஒரு கல், இரண்டாவது பையிலிருந்து இரண்டு கற்கள், மூன்றாவது பையிலிருந்தும் மூன்று கற்கள், எனற வகையில் ஒவ்வொறு பையிலிருந்தும் (10பைகளிலும்) எடுக்கவும்.

அவ்வாறு எடுத்த அனைத்து கற்களையும் மொத்தமாக எடை போடவும். மொத்த எடை 55.1 கிராம் என்றால் முதல் பையில் வைர கற்கள் உள்ளன என்று அர்த்தம்.

மொத்த எடை 55.2 கிராம் என்றால் இரண்டாவது பையில் வைர கற்கள் உள்ளன என்று அர்த்தம். கீழுள்ள அட்டவனையில் உள்ள பத்து வாய்ப்புகளை காணலாம்.

Puzz2

 

சரியான பதில் அளித்தவர்கள்:

கார்த்திக், அமன்

Likes(0)Dislikes(0)
Share
Share
Share