Dec 132014
 

1

சென்ற மாதத்தின் முக்கியமான ஒரு நாள் – 26/11. இந்திய வரலாற்றுச் சுவற்றில் மறக்க முடியாமல் தடம் புதைத்த நாள். 26/11/2008 அன்று பாகிஸ்தானிலிருந்து 10 தீவிரவாதிகள், நம் நாட்டுக்குள் நுழைந்து, மும்பையில் 164 அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், 308 பேர் படுகாயம் அடைந்தனர். நமது தேசிய பாதுகாப்பு படையும், மும்பை போலிஸும் சேர்ந்து (OPERATION BLACK TORNADO மூலம்) தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு, அவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதியை மட்டும் உயிருடன் சிறைப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அந்த சோக சம்பவத்தில் நம்மில் சிலர் அறியாத விஷயமும், அறிந்தும் நம்மில் சிலரால் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்- நாட்டுக்காக தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட நமது பாதுகாவலர்களின் தியாகம், மாவீரம், அவர்களது குடும்பத்தினரின் சோகமம்.

26/11/2008 ஐ, சற்று திரும்பி பார்ப்போம். துணை கமீஷனர் ஹேமந்த் கர்க்கரே, மேஜர்.சந்தீப் உண்ணிகிருஷ்ணன், துணை கமீஷனர் அசோக் காம்தே உட்பட 18  பாதுகாப்பு அதிகாரிகள் அன்று தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் துறந்தனர். அந்த 18 பேரில் முக்கியமான ஒருவர் போலிஸ் துணைசப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பளே.

திரு.துக்காராமைப் பற்றி கேள்வி படாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். கசாப் அனைவரையும் சுட்டு வீழ்த்தி, துப்பாக்கியுடன் தப்பி ஓடுகையில், தனியாக துரத்திச் சென்று, அவனை எந்த ஒரு ஆயுதமும் இன்றி, பாய்ந்து பிடித்துக் கொண்டார் அவர். அவ்வாறு கசாபை பிடித்துக் கொண்டே நின்றவுடன், சிறிது நிமிடங்களில் மற்ற பாதுகாப்பு வீரர்கள் அவனை சுற்றி வளைத்து உயிருடன் பிடித்து விட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே, கசாபின் குண்டுகள், துக்காராமின் உடலை சல்லடையாக்கிருந்தது. தனியாக ஆயுதமின்றி அவனை பிடிக்கையில், கண்டிப்பாக தன் உயிர் பிரியும் அபாயம் இருக்கும் என்று தெரிந்தும்,  நாட்டு மக்களுக்காக சுயநலமின்றி தன் உயிரை தியாகம் செய்த மாவீரர்  தான் திரு.துக்காராம்.

உயிர் பிரியப்போகிறது எனத் தெரிந்த பின்,  அவர் வாழ்வின் அந்த கடைசி நொடிகள் அவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்ககூடும்? அன்று வீட்டை விட்டு கிளம்பும்முன் அன்றுதான், தனது கடைசி நாள் என நினைத்தா இருந்திருப்பார்? தீவிரவாதியை பாய்ந்து பிடிக்கையில் தன் பிரியமான உறவுகளை விட்டுச் செல்கிறோமே என்ற உணர்வு அவருள் வந்திருக்காதா? மண்ணில் சாய்ந்து உயிர் பிரியுமுன் அவர் மகள்களின் முகங்கள் அவரது நினைவுகளில் வந்திருக்குமல்லவா? நாட்டிற்கு தானே செய்கிறோம், வீடும், உறவும் முக்கியமல்ல என்று தானே அந்த மாபெரும் சாதனையை அவர் செய்திருக்ககூடும்?

2

சரி, நிகழ்காலத்திற்கு வருவோம். 26/11/2014 அன்று ஒரு கல்லூரி அருகே நான் நின்று கொண்டிருக்கநேரிட்டது. அப்போது அங்கு வந்த ஏழெட்டு மாணவர்களின் உரையாடலை சில நிமிடங்கள் கேட்கவும் நேரிட்டது.

மாணவர்களின் பெரும்பாலான உரையாடல் பகுதி அடுத்து ரிலிஸாக இருக்கிற  தமிழகத்தின் மூன்று பெரிய நடிகர்களின் திரைப்படங்களை குறித்தே இருந்தது. பிடித்த நடிகர்களின் (தலைவர்கள் என்றே நடிகர்களை அழைத்தனர்) பட ரிலிஸன்று என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்று தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். கட்அவுட், பாலாபிஷேகம், முதல் காட்சிக்காக முன்கூட்டியே டிக்கட்புக்கிங்,  தியேட்டருக்குள் தீபாராதம் மற்றும் சில சடங்குகள் என்ற விஷயங்களை சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தனர். செலவுக்கு ATM மெஷினிடம் (அவர்களது அப்பாக்களுக்கு வைத்துள்ள அடைமொழி பெயர்) பொய் சொல்லி பணம் பெருவது என்றும் முடிவெடுத்தனர். நடுநடுவே தங்கள் தலைவர் தான் உயர்ந்தவர் என்ற விவாதம் வேறு அவர்களுள் எட்டிப்பார்த்தது.

சில நிமிடங்களுக்குப்பின், தன் கைப்பேசியில் சமூக வலைதளத்தைப் பார்த்துக்கொண்டே ஒரு மாணவன், அந்த செய்தியைக் கூறினான். “இன்று ஹேமந்த் கர்கரே இறந்த தினம், அஞ்சலி செலுத்துவோம் என்று வந்துள்ளது. யாருடா இந்த ஹேமந்த்?” என கேட்கவும், மாணவர்களிடம் சிறு மௌனம் நிலவியது. ஒரு மாணவன், “ஏதோ தீவிரவாதிகளுடன் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்டா” என்றான். நல்ல வேலையாக, கடைசி மாணவன் மட்டும், “ஏதோ ஒரு சண்டையில்லடா” என்றும், 26/11/2008இல் மும்பையில் நடந்த சம்பவத்தைப் பற்றி அழகாகவும் சுருக்கமாகவும் கூறினான்”.

அதுவரை உற்சாகம் கரைபுரண்டோடிய அந்த மாணவர்களின் மத்தியில் ஒரு நிசப்தம். “ஆமாம்டா, எனக்கு நியாபகம் வந்துவிட்டது” என ஒரு மாணவன் கூற, “ச்சே பாவம்டா, அன்று செத்தவர்கள்” என மற்றொருவன் கூறவும், அனைத்து மாணவர்களும் ஆமோதிக்கும் வகையில் தலையாட்டினர்.

பின்னர், டாபிக் கிரிக்கெட் பக்கம் திரும்பவே, மீண்டும் பழைய உற்சாகம் அவர்களுள் உயிர்ப்பித்து, உரையாடலை துவக்கினர்.

சில கேள்விகள் என்னுள் அப்போது உதித்தது.

கிட்டத்தட்ட அந்த மாணவர்களின் மனநிலையில் தான், நம்மில் பலரும் உள்ளோமா?

ஏன், சினிமா ஹீரோக்களையும், கிரிக்கெட் ஹீரோக்களையும் வழிப்படும் நாம், அன்றாடம் நாட்டின் எல்லையில் சுயநலமின்றி, உயிரை துச்சமென நினைத்துப் போராடும் வீரர்களையும்,  நாட்டிற்காக போர்களில் செத்து மடியும் தியாகிகளையும் அத்தனை பெரிதாக கொண்டாடுவதில்லை, நியாபகமும் வைத்துக்கொள்வதில்லை?

பொழுதுபோக்கு அவசியம்தான், ஆனால் அவைகளுக்கு தரும் முக்கியத்துவத்தில் சிறு பங்கேனும் நமக்காக போராடுபவர்களுக்கும் தரலாமே?

ரீல் ஹீரோக்களுக்கு உடல்நிலை சற்று சரியில்லை என்றாலும் கூட, உண்ணாவிரதம் இருந்தோ, கடவுளிடம் தீவிர பிரார்த்தனையோ செய்யும் நாம், ஏன் உயிர் தியாகம் செய்து அசோக சக்ரா விருதுப் பெற்ற திரு.துக்காராம் போன்ற ரியல் ஹீரோக்களுக்காக பெரிய அக்கறை காட்டுவதில்லை?

3

உதாரணத்திற்கு, நமது அன்றாட உரையாடல்களின் நேரத்தை எடுத்துக்கொள்வோம். பொழுதுபோக்கிற்காக செலவிடும், அல்லது அவைகளைப் பற்றி பேசும் நேரம் எவ்வளவு, நம்மை காக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி பேசும் நேரம் எவ்வளவு? நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பற்றி நமக்குத் தெரியும் தகவல்கள் எத்தனை, நம் BSF வீரர்கள் பற்றி நமக்குத் தெரியும் தகவல்கள் எத்தனை?

சமூக வலைதளங்களில் கூட, லைக்குகளூம், விவாதங்களும், ஷேர்செய்வதும், ஃபார்வார்ட் (FORWARD) செய்வதும், எந்த விஷயங்களுக்கு அதிகமாக இருக்கிறது?

சினிமாத் துறையில் தனது எதிர்காலத்தை பயணிக்கலாம் என்று நினைப்பவர்களோ,  தன் சொந்த கால்களில் நிற்பவர்களோ, இத்தனை ஆர்வத்துடன் இருந்து நடிகர்களுக்காக இந்த சேவைகள் செய்கிறார்கள் என்றால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் அடுத்த வேலை உணவிற்கே அடுத்தவர்கள் உதவியை நம்பி இருக்கும் சிலர் கூட, தங்கள் பிழைப்பைத் தேடாமல், நடிகர்களுக்காக செய்யும் தேவையில்லாத காரியங்கள் வேதனையின் உச்சம்.

ஏன் இந்த நிலை நம்மில் உருவாகியது? நம்மை அதிகம் பொழுதுபோக்கு விஷயங்கள் தான் கவருகிறதா, அல்லது நமக்கு அவைகள்தான், மீடியாக்கள் மூலம் எளிதில் கிடைக்கிறதா?

வரும் தலைமுறைகளுக்கும், இளைய தலைமுறைகளுக்கும், பொழுதுபோக்கு அம்சங்கள் தாண்டியும், சமூதாயத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் எவ்வாறு சொல்லித்தருவது?

நம் அனைவரிடமும் தேசபற்றும் சமுதாய சிந்தனைகளும் நிறைந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் அதையும்மீறி வேறு சில விஷயங்கள் நம்மை ஆட்கொண்டுள்ளது. என்ன செய்யலாம்?

தேசம் பற்றி விழிப்புணர்வை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல்,  தொடர்ந்து அனைவருக்கும் இருக்க செய்வதில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மீடியாக்கள் அதிக  அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பது ஒரளவிற்கு இதற்கு பதிலாக இருக்கும். ஆனால் இதை எப்படி செய்வது?

நண்பர் ஒருவரிடம் இதுபற்றி பேசுகையில், அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், 26/11 போன்ற நாட்களிலோ, அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் பிறந்த நாட்கள் வரும்போதோ, அந்த நாட்களில் நடந்த தியாகத்தையும்,  வீரர்களின் சாகசங்கள் பற்றியும் முதல் ஒரு மணி நேரத்தில், குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது சொல்லித் தரலாம். மேலும் பொதுமக்கள்,  தங்கள் சமூக வலைதளங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு நட்பு வட்டாரங்களுடன்  பகிர்ந்துக் கொள்ளலாம் என்றும் அருமையான யோசனைகளைத் தெரிவித்தார்.

இந்தியா முழுதும் நிரம்பியுள்ள வீரவரலாறுகளையும், தன்னலமற்றத் தொண்டுகளையும், தியாகங்களையும் இது போன்ற செயல்களின் மூலம் சொல்லித் தரும்போது,  கண்டிப்பாக அடுத்த சமுதாயம் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

நாம் ஓவ்வொருவரும் முடிந்தளவு இந்த சிறு தொண்டினை செய்யத் தொடங்குகையில், தேசப்பற்றும், நல்ல சிந்தனைகளும் வளர்ந்துக்கொண்டே இருக்கும் என்று நம்பிக்கையில்,

விமல்தியாகராஜன் & B+ Team

Likes(30)Dislikes(0)
Share
Dec 132014
 

4

பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருந்த பல விவசாயிகள் கூட தங்களது நிலத்தை விற்று விடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி கிட்டத்தட்ட 150 ஏக்கரில் மகத்தான  சாதனை புரிந்துள்ளார் லியோ ஆர்கானிக் பண்ணையின் உரிமையாளர் திரு.பாரதி.

வியப்பாக இருக்கிறதல்லவா? அதுவும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஒருவர் மகசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்றவுடன் அவரையும், அவர் தோட்டத்தையும் காண மிக ஆவலுடன் சென்றேன். B+ இதழின் இந்த மாத சாதனையாளராய், அவரைப் பேட்டி எடுக்கலாமா என்றவுடன், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார்.

இவரது பண்ணை இருக்கும் இடம் காவேரிராஜபுரம். திருவள்ளூர் மாவட்டத்தின்,  திருவாலங்காட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அமைதியான மிக ரம்மியமான இந்த தோட்டத்தை எட்டியவுடன், சென்னையிலிருந்து 50கிமிக்கு மேல் பயணம் செய்து வந்த களைப்பு காணாமல் போய்விடுகிறது.

மா, பலா, சப்போட்டா, கொய்யா, நெல்லி போன்றவை காய்த்துக் குலுங்கி,  இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த தோட்டம், நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மயில்கள், வாத்துகள், கினிக்கோழிகள், சண்டைக்கோழிகள், வான்கோழிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடு மாடுகள் என பல உயிரிணங்கள் வாழும் ஒரு சிறு சரணாலயமாகவும் உள்ளது. இனி இவருடன் பேட்டியிலிருந்து..

 

கே: வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்

வணக்கம் சார், என் பெயர் பாரதி. என் தம்பி சரவணன். நாங்கள் இருவரும் காவிராஜபுரத்தில் அங்ககப் பண்ணை வைத்து, இயற்கை முறையில் விவசாயம்   செய்துக் கொண்டிருக்கிறோம். 1997 ஆம் ஆண்டில் இந்த ஃபார்ம் ஹௌஸை வாங்கினோம். அப்போது இந்த இடம் முழுவதும் காடுமேடாகவும், கூழாங்கள் நிரம்பியும் இருந்தது. கடின உழைப்புடன் இந்த நிலையில் மாற்றியுள்ளோம்.

எங்களது பரம்பரைத் தொழிலே விவசாயம் தான். கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் டர்னர் பயிற்சி முடித்து, எங்கள் சிறுதொழில் நிறுவனத்தில் வேலை செய்தேன். விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் என்னை முழுநேர விவசாயி ஆக்கிவிட்டது. விவசாயம் செய்துக்கொண்டே, இப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டையப் படிப்பும் (BFT) படித்து வருகிறேன்.

 

கே: இந்த இயற்கை முறை விவசாயம் செய்ய உங்களுக்கு தூண்டுதலாக இருந்த விஷயம் எது?

இரசாயனம் முறையில் செய்யும் விவசாய உணவு, உடல் ரீதியாக பல கேடுகள் விளைவிக்கிறது. எங்கள் அண்ணன் இறந்ததற்கு முக்கிய காரணமாக இரசாயனங்களை மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அது பெரிய தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது. அத்தகை இரசாயனங்கள் இல்லாத உணவுகளை நம் சமூகத்திற்கு வழங்கவேண்டும் என நினைத்து தான், இந்த பயணம் தொடங்கியது.

அதனால், ஆரம்பித்தலிருந்தே யூரியா, பூச்சிமருந்து, உரம் என எதுவும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் அங்கக சான்றளிப்புத் துறையில் மாநில அவார்டு வாங்கிய முதல் பண்ணையும் நம்முடையது தான்.

 

கே: உரம் போட்டு வளர்க்கும் முறையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எங்கள் பண்ணையிலேயே 300 மூட்டை யூரியாபோட்டு விவசாயம் இந்த வருடம் செய்யலாம் என வைத்துக்கொள்ளுங்கள். செடியும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று அடுத்த வருடமும் அதே 300 மூட்டை யூரியாபோட வேண்டும், இல்லையேல் உற்பத்தி குறைந்துவிடும், இரண்டாவதாக, விளைச்சலும் இயற்கை விவசாயம் அளவிற்கு தரமுடன் இருக்காது.

5

கே: உங்கள் பண்ணை பற்றியும் நீங்கள் செய்யும் இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி கூறுங்கள்.

எங்கள் தோப்பில் சுமார் 200 வகை மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் பைப் லைன்கள் போடப்பட்டு, சொட்டுநீர்ப் பாசன வசதி செய்துள்ளோம். தோப்பு முழுவதும் சுற்றிப்பார்க்க சாலை வசதிகளும் செய்துள்ளோம். இயற்கை  முறையில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம்வைத்து தான் விவசாயமே செய்கிறோம்.

எங்களது தோப்பில் உள்ள ஒவ்வொரு மரத்தின் அருகிலும் சென்று பார்த்தால், ஒவ்வொரு அடி அளவிற்கு மண்புழு வளர்த்துள்ளோம். ஒரு மரத்திலும் கிட்டத்தட்ட 200 கிலோ இலைகள் இருக்கும், இவை அனைத்தும் அடுத்த வருடத்திற்குள் அதே இடத்தில் கீழே கொட்டி விடும். அத்தனை இலைகளில் இருந்தும் குறைந்தது 50 கிலோ உரமேனும் வரும். ஆக அந்த மரத்தின்  தேவையான சத்து அந்த மரத்தருக்கிலேயே கிடைத்து விடுகிறது.இந்த தோட்டத்து பழங்கள் முழுதும் இயற்கை விவசாயத்தில் செய்ததினால், அதன்  ருசியும் அதிகமாக இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக உகந்ததாக இருக்கும், வாசனையுடன் அதிக நாட்கள் அழுகாமலும் இருக்கும்.

 

கே: இலைக் கொட்டாத நேரத்தில் எவ்வாறு உரம் வரும்?

எங்களிடம் 300 ஆடுகள், 25 மாடுகள் உள்ளன. இவை அந்த மரங்கள் அருகில் சென்று சாணம் போடும். அவை உரமாக இருக்கும். மாடுகள் பாலுக்காக வளர்க்கபடும் ஜெர்சி பசுக்கள் அல்ல. அத்தனையும் விதவிதமான மாடுகள். இவைகளின் சாணம், கோமியம் எங்களுக்கு மிக முக்கியம். எங்கள் மாடுகளின் கோமியத்‌தில் கிட்டதட்ட 65% யூரியா இருக்கும். இதே போல் ஆடுகளும் பல விதப் பட்டவை. இந்த ஆடுகளும் மாடுகளும் உரங்களுக்காகவே பல மாநிலங்களில் இருந்து வரவைத்துள்ளோம்.

 

கே: மற்ற விலங்குகளெல்லாம் எதற்கு?

சில குதிரைகளை வைத்துள்ளோம். இத்தனை பெரிய பண்ணயை சுற்றி பார்க்க, பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தாமல்,காற்று மாசுபடாமல் இருக்க, இந்த குதிரைகள் மீதேறி சுற்றி பார்ப்போம்.

நம் தோட்டத்தில் மாம்பழ சீசனில் மாம்பழம் வாங்குவதற்கு நிறைய பேர் வருவார்கள். பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்கள் என ஒரு நாளில் 400-500 பேர் கூட வருவார்கள். மதிய உணவு கூட எடுத்து வருவார்கள், பார்வையாளர்கள் தோட்டத்திற்குள் சென்று நிறைய மாம்பழங்களை வாங்கிச் செல்வார்கள். அந்த மாம்பழங்களை தோட்டத்தில் இருந்து வாயில் வரை சுமந்து செல்வதற்கு, கழுதைகளையும் வளர்க்கிறோம். புகை பிடிப்பதையும், ப்ளாஸ்டிக் பொருள்களையும் பார்வையாளர்களிடம் அனுமதிக்க மாட்டோம்.

அது மட்டுமன்றி இரு ஒட்டகங்களும் வளர்க்கிறோம். நம் தோட்டத்து வேலியை சுற்றி தேவையில்லாத சிறு சிறு செடிகள் முளைக்கும். இந்த செடிகளை ஆடு மாடுகள் மேயாமல் விட்டுவிடும். அத்தகைய வேண்டாத செடிகளை மட்டும் இந்த ஒட்டகங்கள் சாப்பிட்டுவிடும். வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் இந்த தருணத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆட்கள் செய்யும் வேலையை ஒரு ஒட்டகம் செய்கிறது. ஒட்டகங்களின் சாணமும் ஒரு முக்கிய பூச்சிக்கொல்லியாய் இருக்கிறது.

பின், வாத்துக்கள், மயில்கள், வான்கோழிகள் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்து மகிழ்விக்க வளர்க்கிறோம். சிறு பூச்சிகளையும் இவைகள் தின்று விடும்.

 

கே: வேறு என்ன சிறப்பு இந்த தோட்டத்தில் உள்ளது?

எங்கள் தோப்பில் 5ஏக்கர் மூங்கில் மரங்கள் வைத்துள்ளோம். ஒரு ஏக்கர் மூங்கில் மரங்கள் கிட்டத்தட்ட 40டன் ஆக்ஸிஜனை  ஒருநாளில் தருகின்றன. 5ஏக்கர் மரங்களிலிருந்து 200டன் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதனால் நம் தோப்பை முழுதும் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு, சுத்தமான ஆக்ஸிஜன் உடலில் உள்ளே சென்று, மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.

தோப்பிற்கு வெளியிலிருந்து விவசாயத்திற்கு நாங்கள் எந்தப் பொருளும் வாங்கிக் கொண்டுவருவதில்லை. அனைத்தும் இந்த தோப்பிலேயேக் கிடைக்கிறது. சூரிய சக்தி மூலம் பம்புசெட்டுகளை இயக்குகிறோம். தோட்டத்தை சுற்றி முக்கியமான இடங்களில் கேமராக்கள் வைத்து பாதுகாப்பை மேற்கொண்டுள்ளோம். இத்தனை பெரிய தோட்டத்தை பராமரிக்க 2-3 ஆட்கள் இருந்தால் போதும் என்ற நிலை உள்ளதால் தான், இதை தானியங்கி தோட்டம் என்கிறோம்.

 

கே: இந்த விவரங்களையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்?

இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், கண்காட்சிகளிலும் கண்டிப்பாக கலந்துகொள்வேன். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, ஜோர்டான், பெத்லஹாம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று அவர்கள் எவ்வாறு செய்கின்றனர் என்றும், அவர்களின் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். பூச்சி மருந்தில்லாமல், எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் அறிந்தேன். கற்றுக்கொண்ட அந்த விவரங்களை நம் தோட்டத்தில் அறிமுகம் செய்கிறேன்.

 

கே: இதை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுத்தருகிறீரளா?

கண்டிப்பாக. இந்த இயற்கை விவசாய முறையை நம்மிடம் கற்றுக்கொள்ள பல  ஊர்களிலிருந்து, ஆர்வமுடன் நமது தோட்டத்திற்கு பலர்  வருவார்கள். அவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து, அவர்களும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஊக்கமளிப்போம். காலையில் வந்தால், மாலை வரை இருந்து செல்வார்கள்.

 

கே: பல ஊர்களுக்கு சென்று கற்று வந்தவைகளில் முக்கியமான விஷயமாக  நீங்கள் உங்கள் தோப்பில் செய்வது எதை?

பொதுவாக நம் ஊரில் செய்யும் தவறு – மரத்தை சுற்றி மட்டுமே, மூன்றடி வட்டத்தில் தண்ணீர் ஊற்றி நிறுத்திவிடுவார்கள். அதனால், வேர்கள், அதே இடத்தில் நின்றுவிடுகிறது. நாங்கள் மரங்கள் எத்தனை தூரம் விரிந்து பரந்துள்ளதோ அத்தனை தூரம் வரை வட்டமிட்டு தண்ணீர் பாய்ச்சுவோம். இதனால் வேர்கள் நன்றாக விரிந்து பரந்து வளர்கினறன. பெரிய காற்று அடிக்கும்போதும் கூட, எங்கள் மரங்கள் மட்டும் விழாமல் நிற்பதற்கு வலுவான இந்த வேர்கள்தான் காரணம்.

மக்களுக்கு பயிற்சி தருவதன் முக்கிய நோக்கமே, நம்மைப் பார்த்து, அவர்களும் இயற்கை முறை விவசாயத்தை கையாள வேண்டும் என்பதே. விஷமற்ற உணவை அவர்களும் தயாரித்து, அவர்களும், மற்றவர்களும் பயன்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பூச்சிமருந்து இல்லாத நல்ல உணவுமுறை சென்றடைய வேண்டும். இதை ஒரு சேவையாக எடுத்துக்கொண்டு எத்தனை மக்கள் வந்தாலும் பயிற்சி தருகிறோம்.

 6

கே: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி..

ஏற்கனவே கூறியதுபோல், எங்கள் தோட்டம் இந்த மாவட்டத்தில், தமிழக அரசின் அங்கக விவசாயச் சான்று பெற்ற முதல் தோட்டமாகும்.

மேலும் 18மாதத்தில் 4000 நெல்லிக்காய் காய்க்க வைத்து விருது வாங்கினோம்.

திரு.நம்மாழ்வாரும் நம் தோட்டத்திற்கு வந்து பார்த்து பாராட்டிவிட்டுச் சென்றார். சமீபத்தில் கூட கோவை வேளான் கல்லூரியின் துனை வேந்தர் வந்து பார்த்து பாராட்டிச் சென்றார். டெல்லியிலிருந்து சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழ்நாட்டு அதிகாரிகளும் வந்தனர்.

பசுமை ரத்னா என்ற விருது கொடுத்தார்கள். பச்சையப்பன் கல்லூரியில் நம்மாழ்வார் விருது கிடைத்தது. பல கல்லூரிகளிலிருந்து விருதுகளும் கிடைத்துள்ளது.

Likes(15)Dislikes(1)
Share
Dec 132014
 

enge

சென்னைக்கு சுமார் 100 கி.மீ தூரத்தில் உள்ள கொஞ்சம் கிராமியமான, ரம்மியமான ஊர், கோதண்டராமபுரம். அந்த ஊரின் கோடியில் ஒரு ராமர் கோயில். அந்த கோவிலை ஒட்டி ஒரு சிறிய குளமும், அரச மரமும் இருக்கிறது.

நீலகண்டன், கொஞ்ச நாளாக அந்த அரச மரத்து நிழலின், கல் மேடையில் வந்து உட்கார ஆரம்பித்தார். அவர் வயது சுமார் அறுபத்தி ஐந்து இருக்கும். அவரது நடை, உடை, பாவனை தோரணை அவர் படித்தவர், பசையுள்ளவர் என்பதை பறை சாற்றிக் கொண்டு இருந்தது. அவரது வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, வெள்ளை தாடி, நெற்றியில் திருநீறு , நடுவில் சந்தனக்கீற்று அவர் ஒரு ஆன்மிக வாதி என்பதை கோடு போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

ஆனால், அவரது முகத்தில் எதையோ இழந்தது போல் ஒரு சோகம். அவரது கண்களில் கொஞ்சம் வெறித்த பார்வை. ஆனால் பண்பட்ட களை. தேவைப் பட்டால் மட்டுமே மற்றவரிடம் பேசினார். கோவிலுக்கு பக்கத்தில் ஒரு ஒட்டு வீடு ஒன்று அவரது பூர்விக சொத்து. அதில் அவர் தங்கியிருந்தார்.

நிறைய நேரம் கோவில் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ தியானத்தில், தீவிர சிந்தனையில் இருப்பது போல் தோன்றியது.

மெதுமெது வாக, கோவிலுக்கு வரும் அந்த ஊர் மக்கள் அவரை நெருங்க ஆரம்பித்தனர். அவரை கும்பிட ஆரம்பித்தனர். முதலில் அசட்டையாக இருந்த அவர், கொஞ்ச நாளில் அவர்களுடன் பேச ஆரம்பித்தார். மக்களும் அவர்களது குறைகளை அவரிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொல்லும் தீர்வு நடக்கும் என எண்ணினர். அவர் வாக்கு அருள் வாக்கு என மக்கள் நினைத்தனர்.

ஒரு மாதம் கழிந்தது. மக்கள் அவரை தேடி அவரது வீட்டிற்கே வர ஆரம்பித்தனர்.ஒரு நாள். மாலை 6 மணி. நீலகண்டனை பார்க்க ஒரு கூட்டம் வாசலில் நின்று கொண்டிருந்தனர். நீலகண்டன் அவர்களை வரவேற்று, திண்ணையில் அமர்ந்தார்.

முதலில் ஒரு இளைஞன். பதினெட்டு வயது கூட இருக்காது. அவரது காலில் விழுந்தான். வணங்கினான்.

“சாமி!. எனக்கு வாழ்க்கையே பிடிக்கலை. அடிக்கடி தற்கொலை கூட பண்ணிக்கலாம் போல இருக்குது. அதனாலே, உங்களை பாக்க சொல்லி என் அம்மா தான் அனுப்பிச்சாங்க.”

“ஏம்பா! பாக்க நல்லா இருக்கியே! உனக்கு என்ன குறை?”

“எனக்கு படிப்பு வரல்லை சாமி. எவ்வளவு படித்தும் மூளையில் ஏற மாட்டேங்கிறது. பிளஸ் டூ கூட தேற முடியலை.. என் அண்ணன் அக்கா எல்லாரும் பெரிய படிப்பு. குடும்பத்தில் என்னால் ரொம்ப அவமானம்”- கலங்கினான் இளைஞன்.

“நாம இதை பற்றி அப்புறம் பேசுவோம். உனக்கு ஒன்னும் அவசரமில்லையே! இங்கேயே கொஞ்சம் ஓரமாக உட்கார்ந்து கொள். மத்தவங்க பிரச்னையும் என்னன்னு கேப்போம் !”

அடுத்தவன் வந்தான். அவனுக்கு சற்றேறக்குறைய 25 வயதிருக்கும். கொஞ்சம் பெரியவன். அவனும் அவர் காலில் விழுந்தான்.
“சாமி!. எனக்கும் வாழ்க்கையே பிடிக்கலை. வெறுப்பாயிருக்கு. செத்துபோகலாம்னு தோணுது.”

“அட கடவுளே ! அப்படி உனக்கு என்ன குறை?”

“எனக்கு படிப்பு நல்லா வந்தது. நல்லா மார்க் வாங்கினேன். ஆனால் என்ன பிரயோஜனம்? என்னோட படிப்புக்கேத்த வேலை கிடைக்கலை. என் தம்பி, அண்ணா , நண்பர்கள் எல்லாரும் நல்ல வேலைலே இருக்காங்க. என்னை எல்லாரும் கேலி பண்றாங்க. ரொம்ப அவமானமாக இருக்கு” கலங்கினான்.

“சரி! சரி! விசனப்படாதே! இங்கேயே உட்கார்ந்து கொள்”

மூன்றாமவன் வந்தான். வாராத தலை. கசங்கிய உடை. மண்டிய தாடி. காதல் தோல்வி கண்ட அந்த காலத்து ஜெமினி கணேசன் போல். ஒரு 30-35 வயதிருக்கும்.

நீலகண்டன் கேட்டார்: “உனக்கும் வாழ்க்கையே பிடிக்கலை. வெறுப்பாயிருக்கா? சரி, உன்னோட பிரச்னை என்ன?”

“ஆமா ஐயா!. நான் நல்லா படிச்சேன். நல்ல வேலை கிடைச்சுது. நல்ல சம்பளம். வேலை செய்யற இடத்திலேயே ஒரு அழகான பெண்ணை நேசித்தேன். ஆனால் அவள் என்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு எனது நண்பனை கல்யாணம் பண்ணிகிட்டாள். நண்பர்களிடையே, அலுவலகத்திலே ரொம்ப அவமானம். என் கிட்டே என்ன குறை கண்டாள்? ஒரு மாதமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. யாரையும் பாக்க விருப்பமில்லை. எங்க வீட்டு மாடியிலிருந்து குதிச்சிடலாமன்னு கூட தோணுது ! ”.

“அடடா ! பாவமே! காதல் தோல்வி ரொம்ப கொடுமை தான் ! நாம இதை பற்றி அப்புறம் பேசுவோம். இங்கேயே உட்கார்”

நான்காவது வந்தவள் ஒரு யுவதி. ஏறத்தாழ 35 வயது. நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, திருமணமும் செய்து கொண்டாளாம். ஆனால், இப்போது கணவனுடன் இல்லை. அவன் வேறு பெண்ணுடன். அவனுக்கு இவளது அழகில் மனம் லயிக்கவில்லையாம் இப்போது. தற்கொலைக்கு முயற்சித்தாள். ஆனால் உயிரை மாய்த்துக்கொள்ள முடியவில்லை. அழுதாள்.

நீலகண்டன் அவளையும் உட்கார சொன்னார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என கேட்க இந்த நால்வரும் மற்றும் கூடியிருந்தவரும் ஆவலாக அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள்.

அவர் சொன்னார்: “நீங்கள் எல்லோரும் உங்கள் குறைகளை சொன்னீர்கள். உங்கள் வேதனையை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள். ஆனால், உண்மையை சொல்லப் போனால், உங்கள் நால்வருடைய விரக்தி நிலையில்தான் நானும் இருக்கிறேன். ஆச்சரியப்பட வேண்டாம். எனக்கும் ரொம்ப துக்கம். நான் இந்த ஊருக்கு வந்ததே எனது வேதனையை மறக்கத்தான்”

சுற்றியிருந்தவர்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியம் தான். அட இவருக்குமா? எல்லாம் துறந்தவர், பற்றற்றவர் என நினைத்தோமே! இவருக்குமா கவலை?

நீலகண்டன் தொடர்ந்தார்: “நான் பல பெரிய பதவிகளில் இருந்தவன். அரசாங்க பணி. நிறைய ஆள் பலம், வாகனம், பெரிய வீடு, வசதி, விருந்து என இருந்தவன். எனது அதிகாரம் எங்கும் பறந்தது.எல்லாம் நான் வேலையிலிருக்கும் வரை தான். ஒய்வு பெற்ற பின் எல்லாம் போயிற்று. இப்போ என்னிடம் பதவி இல்லை, அதிகாரம் இல்லை. வேலையிலிருக்கும் வரை, நான் இட்ட வேலையை தலையால் செய்தார்கள். ஒய்வு பெற்றபிறகு சொன்ன பேச்சு கேட்க ஆள் இல்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், காசு பணம் இருந்தென்ன, இன்று நான் தனி மரம். அன்பு செலுத்த ஆளில்லை.”

“நான் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, என் மகன் இன்று சுத்தமாக என்னை மதிப்பதில்லை. மருமகளும் உதாசீனப் படுத்துகிறாள். இருவரும் என்னை விட நல்ல வேலையிலிருக்கிறார்கள். நான் சொன்ன பேச்சு கேட்பதில்லை. எனது மனைவியும் இப்போது உயிருடன் இல்லை. அந்த ஆறுதலும் இல்லை.மகனுடன் இருக்க பிடிக்காமல் இங்கே வந்து விட்டேன். எனக்கும் வாழ்க்கையே பிடிக்கலை. ரொம்ப வெறுப்பாயிருக்கு.”

இப்போ, நீங்களே சொல்லுங்கள், நானும் தற்கொலை பண்ணிக்கவா?” நிறுத்தினார். “நான் இறந்து போய்விட்டால், என் பிரச்னை தீர்ந்து விடும். என்னை மாய்த்துக் கொள்ளவா ? என்ன சொல்கிறீர்கள்?”

கூடி இருந்தவர் ஒன்றும் பேசவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரவர், தங்கள் தங்கள் மனக் கவலைகளை, மனத்திரையில் ஓட விட்டனர். யாருக்கும் தாங்கள் நிம்மதியாக இருப்பதாக தோன்றவில்லை. ஒவ்வொருவருக்கும் கவலைகள், வித விதமாக.

நீலகண்டன் “ இப்போ இங்கே என்னை தேடி வந்திருக்கீங்களே, உங்க பிரச்னை என்ன? ஒருவருக்கு படிப்பு வரல்லே அதனாலே – வெறுப்பு. இன்னொருவருக்கு படிப்பு இருக்கு ஆனால் வேலை கிடைக்கலே – அதனாலே வெறுப்பு. வேறொருவருக்கு படிப்பும் இருக்கு, வேலையும் கிடைச்சது ஆனால் விரும்பிய பெண் கிடைக்க வில்லை. அதனால் கசப்பு. இந்த பெண்ணிற்கு கல்யாணம் ஆகியும், நல்ல வாழ்க்கை அமையலே – அதனாலே வெறுப்பு.தற்கொலை பண்ணிக் கொள்ளும் அளவுக்கு விரக்தி. எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது ஆனால், வயதாயிற்று எல்லாம் போச்சு- அதனாலே எனக்கும் வெறுப்பு.”

நீலகண்டன் ஒரு நிமிட மௌனத்திற்கப்புறம் மீண்டும் தொடர்ந்தார் “மொத்தத்திலே எல்லாருக்கும் வெறுப்பு, வேதனை. வேடிக்கையாயில்லை? இப்போ நம்ப ஐந்து பேர் மட்டும் இல்லே! இங்கே இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது ஒரு வேதனை, கஷ்டம், வருத்தம் இருக்கும். எல்லாவற்றிற்கும் எல்லாரும் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான பாதையா சொல்லுங்கள்? அப்போ யார் தான் இந்த உலகத்தில் வாழறது?”

நான்காவதாக வந்து தனது குறை சொன்ன யுவதி கேட்டாள்: “அப்போ இதுக்கு என்னதான் வழி? ஐயா, நீங்களே சொல்லுங்க”

நீலகண்டன் வெறுமையாக சிரித்தார். “கிட்டத்தட்ட நம்ப எல்லோருடைய பிரச்னையும் ஒன்று தான்”

அந்த நான்கு பேருடன், சுற்றி இருந்த அனைவரும், பாம்பு தலையை தூக்குவது போல் ஒரு சேர தலையை தூக்கி அவரை பார்த்தனர். என்ன சொல்றார் இவர் ? எல்லாருக்கும் கொஞ்சம் குழப்பம்.

“சுருக்கமாக சொல்ல போனால், நாம எல்லாரும் நம்மை சுத்தி இருக்கவங்க நம்மை பற்றி என்ன நினைப்பாங்க என்றே கவலைப் படுகிறோம். சமூகம் நம்மை தாழ்வாக நினைக்க கூடாது என்பதே நம் கவலையாக இருக்கிறது. மற்றவர்கள் நன்றாக இருக்கிறார்களே? நாம இல்லியே? என்று பொறாமை படுகிறோம். சரியா?”

“நம் நிலை தாழ்ந்து விட்டதோ? நம்ம வீட்டிலே , நமது நண்பர்கள், உறவுகள் நம்மை அவமதிப்பார்களோ என்ற எண்ணமே நம்மை கீழே தள்ளுகிறது. வெறுப்பாயிருக்கு. அதனாலே தற்கொலை கூட பண்ணிக்கலாம் என்கிற எண்ணம் ஏற்படுது.”

நீலகண்டன் தொடர்ந்தார்: “வாழ்க்கையிலே எப்பவுமே வெற்றியே பார்க்க ஆசைப் படுகிறோம். தோல்வி கண்டு பயம். சொல்லபோனால், தோல்வியை விட, தோல்வி அடைந்து விடுவோமோ என்கிற நடுக்கம் தான் அதிகம் நம்மை ஆட்டி படைக்கிறது. நான் சொல்றது சரிதானே? ”

நிறுத்தினார். கூட்டத்தில் ஒரு பெரியவர் கேட்டார். . “நீங்க சொல்றது சரிதான் ஐயா. எங்க குடும்பத்தில் கூட இதை பார்க்கிறோம். எங்கே அவமானம் ஏற்பட்டுடுமோ , தலைக் குனிவு ஏற்பட்டுடுமோன்னு பயப்படறோம் தான். அப்போ, என்ன வழி?”

“நல்ல கேள்வி. ஒரே வழி தான் எனக்கு தெரிந்து. உங்க வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளுங்கள். சமூகம், சுற்றம் சொல்வதை கேளுங்கள். தப்பில்லை. ஆனால், உறவுக்காக, ஊருக்காக உங்கள் வாழ்வை பாழ் பண்ணிக் கொள்ளாதீர்கள். சுய வெறுப்பினால், உங்களை நீங்களே கருக்கி கொள்ளாதீர்கள். வேதனையில் வெந்து போகாதீர்கள். வெற்றி தோல்வி சகஜம் . உங்களது குறைகளை ஆராய்ந்து, கண்டு பிடித்து நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள்”. நிறுத்தினார் நீலகண்டன்.

உடன் அமர்ந்திருந்த தற்கொலை படையில் இருந்த நால்வரில் ஒருவன் கேட்டான்.”சாமி! அதெல்லாம் சரி.எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்!. நான் என்ன பண்ணனும்?” அவன் வேதனை அவனுக்கு.

அவனை பார்த்து முறுவலித்தார் நீலகண்டன். “நான் யாருக்கும் அட்வைஸ் கொடுக்க விரும்ப வில்லை. நீங்க என்ன பண்ணனும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால், இப்போ நீங்க கேட்பதனால், உங்க பிரச்னை என்னங்கிறதை சொல்றேன். எப்படி தீர்க்கலாம்னு சொல்றேன், முடிவை நீங்களே எடுக்கனும், சரியா?”

“ம்”

நீலகண்டன் தொடந்தார். “ஒவ்வொரு துயரத்திற்கும் ஒரு விடிவு உண்டு. அதை நாமதான் தேடிக்கணும். உனக்கு படிப்பு வரல்லையா? கவலையை விடு. உனக்கு தெரியுமோ, படிப்பு வராதவங்க நிறைய பேர் , பெரிய பணக்காரங்களாகவும், தொழிலதிபர்களாகவும், நடிகர்களாகவும் கோடி கணக்கில் சம்பாதிக்கிறாங்க. திருபாய் அம்பானி படிக்காதவங்க தான். பில் கேட்ஸ் கல்லூரி கேட் கூட தாண்டவில்லை. அவரைப்போல் எத்தனையோ பேர் முன்னுக்கு வரலியா? நீயும் பிஸினெஸில் இறங்கு. நன்றாக வருவாய். முடிவு உன் கையில் !”

நீலகண்டன் இரண்டாவதாக வந்தவனை பார்த்தார். “அப்புறம், நீங்க, படிச்சு வேலை கிடைக்கலைன்னு கவலைப் பட வேணாம்., இன்போசிஸ், விப்ரோ கம்பெனிகளை ஆரம்பித்தவர்கள், அவங்களே வேலைக்கு போகலே. செய்த வேலையை விட்டு விட்டார்கள். என்ன குறைந்துவிட்டார்கள்? தனியாக தொழில் ஆரம்பித்தார்கள். இன்று கோடீஸ்வரர்கள். இவங்க மாதிரி உங்களுக்கு பிடிச்ச விஷயத்தில் இறங்குங்கள். பிரமாதமாக வருவீங்க. ஒரு ஜன்னல் மூடியிருந்தாலும், தேடுங்கள், இன்னொரு பக்கம் கதவே திறந்திருக்கும்.”

“மூணாவதா வந்த ஐயா, உங்க பிரச்னை, என்ன ? காதலித்த பெண் கிடைக்கலை. அதுதானே ? உங்களுக்கு பழமொழி தெரியாதா “கிட்டாதாயின் வெட்டென மற”. அந்த பெண்ணை மறந்துட்டு, அவள் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, மேலே போய்கிட்டே இருங்க”.

யுவதியை பார்த்து சொன்னார்: “ இங்கே பாருங்க அம்மணி ! ஊர் என்ன சொல்லும் என்று ஏன் கவலைப்படறீங்க? நாலு பேர் நாலு விதமாகத்தான் பேசுவாங்க. அதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க! நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. நல்ல வேலையிலிருக்கீங்க. வயசும் இருக்கு . நீங்க ஏன்வேறே கல்யாணம் பண்ணிக்க கூடாது? நிச்சயமா நல்லா இருப்பீங்க”

அப்போது, அங்கே இருந்த காதலியை பறி கொடுத்த வாலிபன், நால்வரில் ஒருவன் சொன்னான்.”ஐயா. எனக்கு ஒன்னு தோணுது. அவங்களுக்கு விருப்பமிருந்தா , நானே அவங்களை திருமணம் செய்து கொள்கிறேன்”.

“பாத்திங்களா! பிரச்னை எப்படி தானாகவே தீருகிறது? நீங்க என்னம்மா சொல்றீங்க? விருப்பமா?” நீலகண்டன் யுவதியை வினவினார்.

அந்த பெண்ணும் சரியென வெட்கத்துடன் தலையாட்ட, கூடியிருந்த மக்கள் கை தட்டி கரவொலி எழுப்பினார்கள்.

கூட்டம் சிறிது நேரத்திற்கு பின் கலைந்தது.

கூட்டத்தில் ஒருவன் மற்றவனிடம் சொல்லிக் கொண்டே நகர்ந்தான். “ நான் சொல்லலே! சாமி வாக்கு அருள் வாக்கு. உடனே பலிக்கும். பார். கல்யாணம் கூட கூடி வந்திடிச்சி”. கூட இருந்தவன் சொன்னான்: “ ஆமாமா! நாளைக்கு வெள்ளனே வந்து சாமி கிட்ட வாக்கு கேப்போம்.”

அன்று இரவு நீலகண்டனுக்கு உறக்கம் வரவில்லை. எல்லோருக்கும் தீர்வு சொன்னோமே! தனக்கு என்ன வழி? என் பிரச்சனையை நான் ஏன் தீர்த்துக் கொள்ளாமல் ஓடி வந்து விட்டேன்? ஒரே யோசனை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

அடுத்த நாள். நீலகண்டனை தேடி வந்த சிலர், அவரது வீடு பூட்டியிருந்தது பார்த்து ஆச்சரியம். “ சாமி எங்கே போயிட்டார்? ’ என தேடினர். எங்கும் காணவில்லை. சென்னைக்கு போய்விட்டார் என செய்தி பரவியது. தொந்திரவு தாங்காமல், அவர் இமயமலைக்கே போய் விட்டார் எனவும் வதந்தி.

நீலகண்டன், இப்போது சென்னையில் தன் மகன் குடும்பத்தோடு வந்து சேர்ந்து விட்டார். அவர் நிறைய மாறிவிட்டார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசினார். பேரனோடு விளையாடினார். மகன் மருமகளோடு இயல்பாக , சகஜமாக நடந்து கொண்டார். தன் ஸ்டேடஸ் கீழே போய்விட்டதோ என்னும் கவலையை விட்டொழித்து விட்டார். யாரிடமும் குறை காண்பதில்லை. தனக்கு வேலை போச்சு, ஆரோக்கியம் போச்சு, துணை போச்சு எனும் பயம் இப்போது அவருக்கு இல்லை. மற்றவர் தன்னை மதிக்கவில்லை என நினைத்து வருந்த வில்லை.

தனக்கு பிடித்ததை செய்ய கிடைத்த நேரம் இது என புரிந்து கொண்டார். இது வாழ்க்கையின் மற்றொரு கட்டம் என்பதை இப்போது உணர்ந்து விட்டார். இது கோதண்டராம புரம் அவருக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

இப்போதெல்லாம், தினமும் பத்து மணிக்கு அருகிலிருந்த அனாதை ஆஸ்ரமத்துக்கு போய்விடுவார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்.

மாலைகளில் முதியோர் இல்லம் சென்று அவர்களுடன் கொஞ்ச நேரம் பொழுதை கழித்தார். உபயோகமாக உதவிகள் செய்தார். எப்போதெல்லாம் நேரம் கிடைத்ததோ, அப்போது தனது வயதொத்த நண்பர்களுடன் அருகிலிருந்த ஆஸ்பத்திரியில், நோயாளிகளுக்கு ஆறுதல் சொன்னார். நோயாளிகளுக்கு பிடித்த விஷயங்களை அன்புடன் பேசினார். முடியும் போது பழங்கள், பூங்கொத்து கொடுத்து தேறுதல் கூறினார். அவர் எண்ண அலைகளுக்கேற்ற நண்பர்களுடன் பழகினார்.

இப்போது, நீலகண்டனுக்கு “தன்னோட மதிப்பு இழந்துட்டோமோ”என்னும் பயம் இல்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறார். இப்போது தான், வாழ்க்கையில் ஏதோ சாதிப்பது போன்ற சந்தோஷம் பிறக்கிறது அவருக்கு!!

–    முரளிதரன் செளரிராஜன்

 

Likes(6)Dislikes(0)
Share
 Posted by at 11:01 am
Dec 132014
 

7

 

ஆயுள் நீளும் இரகசியம்

சிரிக்கப் பழகு

பிடித்துத் தள்ளும் தோல்வி

செரிக்கப் பழகு

உலுக்கி எடுக்கும் துரோகம்

சகிக்கப் பழகு

இடறச் செய்யும் தடைகள்

உடைக்கப் பழகு

எங்கும் மாறுவேடப் புருசர்கள்

நடிக்கப் பழகு

கோபம் தூண்டும் சொற்கள்

அடக்கப் பழகு

அன்பைத் தேடும் இதயம்

அணைக்கப் பழகு

உன்னைப் பிணிக்கும் புன்மை

புதைக்கப் பழகு

எங்கும் முளைக்கும் சவால்

போராடப் பழகு

நீளும் ஏழைக் கைகள்

கொடுக்கப் பழகு

வழியில் தடுக்கும் எருமைகள்

கடக்கப் பழகு

சுற்றிலும் சந்தை இரைச்சல்

தனிமைக்குப் பழகு

உன்னில் விழிக்கும் மிருகம்

அடக்கப் பழகு

பொதுமையில் மறையும் தமிழன்

தமிழனாகப் பழகு

அவிழும் இயற்கை அழகுகள்

ரசிக்கப் பழகு

இனத்தின் ஈனச் செயல்கள்

நீக்கப் பழகு

மனிதன் திறந்த புத்தகம்

படிக்கப் பழகு

காடும் மண்டும் தளைகள்

அறுக்கப் பழகு

காதில் ஈயச் சொற்கள்

பொறுக்கப் பழகு

உன்னை மிதிக்கக் கால்கள்

பொங்கப் பழகு

அன்புடன்,

ந.பச்சைபாலன்,

மலேசியா

Likes(3)Dislikes(0)
Share
Dec 132014
 

8

பணம்… மனிதனின் வாழ்க்கையை விதவிதமாக மாற்றவல்ல ஒரு தவிர்க்க முடியாத காரணி. முதலில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்வாதாரங்களுக்காக பணத்தைதேடி அலைந்து அவற்றை அடைந்ததும் பின்னர் நல்லஉணவு, நல்லஉடை, நல்லஇருப்பிடங்களுக்காக பணத்தை தேடுகிறோம். அவையும் கிடைத்துவிட்டால் நின்றுவிடுவோமா? அதற்கும்மேல் என்ன இருக்கிறதோ அதை இலக்காக்கிக் கொள்கிறோம். எனவே மனிதனின் மூச்சிருக்கும்வரை இந்தத் தேடல் நிற்கப்போவதில்லை.

ஆனால் இந்தத் தேடுதலின் போது நாம் சேர்க்கும் செல்வத்தை விட பலமடங்கு விலைமதிப்புள்ள சிலவற்றையும் இழக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இரண்டு மாதத்திற்கு முன்னர் வேறொரு அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்திருந்தேன். அனைத்தும் புதிது.  அலுவலகம் புதிது.. சுற்றியிருந்த ஆட்களும் புதிது. எதோ வேற்றுக்கிரக மனிதர்களுக்கு நடுவே நான் மட்டும் மாட்டிக்கொண்டது போல ஒரு மனநிலை. அனைவரும் அவரவர் வேலைகளிலேயே கண்ணாயிருந்தனர். நம்மிடம் பேசுவதற்கோ பழகுவதற்கோ யாரும் இல்லை.

அப்பொழுது நாற்பது வயதைத் தாண்டியிருந்த ஒரே ஒருவர் மட்டும் என்னுடன் இன்முகத்துடன் பேசிப்பழகினார். நீண்டகாலம் பழகிய நண்பர் போல வெகுசகஜாமகப் பேசினார். குடும்பத்தைப்  பற்றி விசாரித்தார். புதிதாக வீடு பார்ப்பதற்கு உதவுவதாகக் கூறினார். புதிய அலுவலகத்தில் கிடைத்த முதல் நண்பராக அவரைப் பார்த்தேன். ஓரிரு நாட்கள் அவ்வாறே ஓடியது.

ஒருநாள் மதிய உணவை முடித்துவிட்டு இருவரும் வெளிவந்தோம். “சற்று மரநிழலில் நடந்து விட்டு இருக்கைக்கு செல்லலாம்” என்றார். சரி என்று நானும் அவரும் அங்கு வரிசையாக இருந்த மரநிழலில் நடக்க ஆரம்பிக்க அவர் பேச ஆரம்பித்தார்.

“ஆமா நீங்க வீட்டுக்கு ஒரே பையன்ல” என்றார்.

”ஆமாசார்..”

“கடன் வேற கொஞ்சம் இருக்குன்னு சொன்னீங்கல்ல”

“ஆமாசார்.. கொஞ்சம் இருக்கு… ரெண்டு வருஷத்துல அடைச்சிருவேன் “ என்றேன்.

“நீங்க future ஐ பத்தி எதாவது யோசிச்சி பாத்தீங்களா?” என்றார்.

எனக்கு ஒன்றும் புரியாமல் “future எதப்பத்தி சொல்றீங்க”  என்றேன்

”அத எப்டி சொல்றது.. உதாரணமா நீங்க டூவீலர்ல தான் ஆஃபீஸ் வர்றீங்க..  திடீர்னு உங்களுக்கு எதாவது ரிஸ்க் ஆயிப்போச்சின்னு வைங்க..உங்க குடும்பத்த யாரு பாத்துக்குறது? கடனெல்லாம் அவங்க எப்படி சமாளிப்பாங்க?” என்றார்.

“அதுக்கு என்ன சார் பண்றது.. நம்ம கையில என்ன இருக்கு” என்றேன்

“என்ன இப்டி சொல்றீங்க.. நம்ம இல்லைன்னாலும் நம்ம குடும்பத்த நாமதான் பாத்துக்கனும்”

“சரிசார்… இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” என்றேன்.

“அஞ்சே அஞ்சி வருஷம் ப்ரீமியம் மட்டும் கட்டுனா போதும். உங்க லைஃப்டைம் ஃபுல்லா கவர் ஆகுறமாதிரி ஒரு புது பாலிஸி வந்துருக்கு” என்றார்.

எனக்கு உடனே ஒரு மாதிரி ஆகிவிட்டது.  “ஓ அப்டியா சார்… ஆனா நா ஏற்கனவே ரெண்டு பாலிஸி போட்டுருக்கேன் சார்.. இப்ப புது பாலிஸி எதுவும் எடுக்குற ஐடியா இல்லை” என்றேன்.

சிறிய ஏமாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு “சரிசரி.. ஆனா கொஞ்சம் நல்லா யோசிச்சிப்பாருங்க.. எவ்வளவு அதிகமா காப்பீடு இருக்கோ அவ்வளவும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சேஃப்டிதானே.. இப்ப ஒண்ணும் அவசரம் இல்லை. ஆனா நீங்க நம்மகிட்ட ஒரு பாலிஸி கண்டிப்பா எடுத்துக்கனும் தம்பி” என்றார்.

“சரிங்க.. நா யோசிச்சிப் பாக்குறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.

9

கடந்த நான்கு நாட்களில் அவர் என்னோடு இன்முகத்துடன் பழகியதை ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். இதற்குத் தானா இவ்வளவும் என்று அவர்மீது நான் வைத்திருந்த மொத்த மரியாதையும் கரைந்துவிட்டது. என்னுடன் சிரித்துப்பழகிய இவரைவிட பேசாமல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோமேல் என்று தோன்றியது.  தொடர்ந்த நாட்களில் அவர் என்னுடன் பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

அனைவரும் டாம் & ஜெர்ரி பார்த்திருப்பீர்கள். அதில் ஃப்ரிட்ஜை திறந்தது பார்க்கும்போது ஜெர்ரி எலிக்கு கண்ணில்படும் அனைத்து ஐட்டங்களும் cheese துண்டுகளாகத் தெரியும். டாம் பூனைக்கு ஜெர்ரியைப் பார்க்கும்போதெல்லாம் சாப்பிட உணவு தயாராக இருப்பதைப்போலத் தோன்றும். அதைப் போலத்தான் இந்த சில ஏஜெண்டுகளுக்கும் கண்ணில் படுபவர்களெல்லாம் மனிதர்களாக அல்லாமல் ஒவ்வொரு பாலிஸிகளாகத் தெரிவார்கள் போல என  தோன்றியது எனக்கு.

நிறைய பேர் பணம் சம்பாதிக்க நிறைய யுக்திகளைக் கையாளுகின்றனர். இலவசங்களை கொடுத்து இழுக்கின்றனர். ஆசைகாட்டி நம்மை அழைக்கின்றனர். விதவிதமாக ஏமாற்றுகின்றனர். நாமும் ஏமாறுகிறோம். அவர்களின் உண்மையான பழகுதலின் நோக்கம் தெரியாமல், நமக்குள்ளேயே கலந்திருந்து போலியாகப் பழகி கடைசியில் வியாபாரமுகம் காட்டும்போது தான் நமக்கு வலிக்கிறது. இவ்வளவு அன்பாக பேசியது கேவலம் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தானா?

செயற்கை அன்பு செயற்கை பாசம் செயற்கை சிரிப்பு இவற்றை உற்பத்தி செய்து உலவ விடுவதில் இவர்களுக்கே அதிகபங்கு உண்டு. உங்கள் தொழில் நீங்கள் செய்கிறீர்கள். அதில் தப்பில்லை. ஆனால் மற்றவர்களுடன் பழகுவதற்கு இந்த ஒரு காரணத்தை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு பழகாதீர்கள். பணம் மதிப்பிழக்கும்போது மனிதம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

-முத்துசிவா

Likes(5)Dislikes(1)
Share
Dec 132014
 

 

Puzz

ஒரு அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கு 10 சிறிய பைகள் உள்ளன. 9பைகளில் 10 கூழாங்கற்கள் உள்ளன. எஞ்சியுள்ள ஏதோ ஒரே ஒரு பையில் மட்டும் 10வைரகற்கள் உள்ளன.

அனைத்து கூழாங்கற்களும், வைரகற்களும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும், பார்வையால் வித்தியாசத்தை கண்டுபிடிக்கவே முடியாது.

ஒரு வைரகல்லின் எடை 1.1கிராமும், சாதா கல்லின் எடை 1கிராமுமாய் இருக்கும்.

உங்களருகில் ஒரு எடை போடும் மெஷினும் உள்ளது. ஒரே ஒரு முறை நீங்கள் எடை போட்டுக் கொள்ளலாம்.

எந்தப் பையில் வைரகற்கள் உள்ளன? சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் வைரகற்கள் உங்களுக்கு தான்.

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால்,  எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும்,  அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

1)   Queenஐ எடுத்து, King பக்கத்தில் வைத்து, செக் வைக்க வேண்டும். அப்போது, கருப்பு Rook (யானை), queenஐ வெட்டும்.

2)   Knight (குதிரையால்) செக் வைக்க செக்மேட் ஆகிவிடும்

 

சரியானபதில்அளித்தவர்கள்:

மணி, அப்துர்ரஹ்மான்

Likes(3)Dislikes(0)
Share
Share
Share