Nov 142014
 

 

Intro

சென்ற மாதம் நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். நமது B+ இதழை பற்றி கேட்ட அவர், 10மாதமாக வெளி வந்து விட்டது, உங்களது டீமில் உள்ளவர்களையும் எழுதுபவர்களை பற்றியும் சில வரிகளில் அறிமுகம் செய்யலாமே என்றார். அருமையான யோசனையாய் தோன்றவே, அவருக்கு நன்றி தெரிவித்து, கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி வந்தேன்.

அதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது போல், சென்ற மாதம் நடந்த எனது மகளின் முதலாம் வருடம் பிறந்த நாளில், B+ இதழில் பங்களித்தவர்களில்சிலர் கலந்து கொண்டிருந்தனர். இதை விட சிறந்த அறிமுக பகுதி நமக்கு கிடைக்காது என தோன்றவே, அவர்களை பற்றி சில வரிகளுடன், நிகழ்ச்சியின் போட்டோக்களுடன் இந்த மாதம் அறிமுகப் படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

1)   குழுவில், மூத்த எழுத்தாளரான திரு.முரளிதரன் சௌரிராஜன் அவர்கள்.  பாரத ஸ்டேட் வங்கியில் உயர் பதவியில் பணி செய்து ரிடையர்ட் ஆனவர். தற்போது நிறைய சமூக அக்கறை கொண்ட கதைகளை பல பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார். B+ இதழில் சமீபமாக, கதை கட்டுரை பகுதியில் வெளிவரும் கதைகள், இவரின் கற்பனை திறனில் பிறந்தவைகள். இவரது சிறந்த பதிவாக நம்  வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்டது பார்வைகள் பலவிதம்.

2)   திரு.முத்துசிவா, சென்னை L&T அலுவலகத்தில்பொறியாளராகபணியாற்றும்இவர், எழுத்து உலகத்தில் 6 வருடங்கள் முன்பே தனது தடயங்களை பதித்தவர். B+ இதழ் ஆரம்பிக்கும் யோசனையை இவரிடம் தெரிவித்த போது, மிகுந்த ஆதரவாய் இருந்து ஊக்கம்அளித்தவர். இதழின் இளைஞர்கள் பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ளார். நம் வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்டஇவரது படைப்பு – உலகை மாற்றியவர்கள். இவரின் பல நகைச்சுவை பகிர்வுகளை இவரின் இணையதளமான http://www.muthusiva.in/இல் காணலாம்.

3)   லண்டனில் டாக்டராக செட்டில் ஆன திருமதி நந்தினி.K. எனது உறவினரான இவர், தாயகதின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை உள்ளவர். நமது முயற்சிக்கு சிறந்த ஆதரவாளராகவும் விமர்சகராகவும் இருப்பவர்.  குழந்தைகள் மற்றும் கவிதைகள் பகுதிகளுக்கு தனது பங்களிப்பையும்  தந்துள்ளார். வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்ட இவரது படைப்பு – கல்கி.

4)   திரு.சரவணன்,  ஹைதிரபாதில் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். எனது நெருங்கிய கல்லூரி நண்பரான இவர், இதழின் நோக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, எடிட்டிங் பணிகளை செய்வதோடில்லாமல், கதை கட்டுரைகள், குழந்தைகள் பகுதிகளில் எழுதி  பங்களித்து வருகிறார். வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்ட இவரது படைப்பு – மோளைக் காடு

5)   திரு.சிவரமணன், பொறியாளராக பணிபுரியும் இவர், நமது புதிர்கள் பகுதியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். நான்கு புதிர்களின் சவால்களை இதுவரை நமக்காக வழங்கியுள்ளார்.

6)   துபாயில் உள்ள எழுத்தாளர் விஜி சுஷில், ஒருமுறை தமது கதையினை தந்துள்ளார்.

7)   கவிஞர் காமராசு, மலேசியா திரு.ரூபன், துபாய் திருமதி.அனு, சௌதியில் இருக்கும் நண்பர் ஜோஷுவா ஆகியோரும் கவிதைகள் பகுதி மூலம் பங்களித்துள்ளனர்.

8)   திரு.ராஜசெல்வம், சென்னையின் அரிசெண்ட் என்ற ஒரு ஸாஃப்ட்‌வேர் அலுவலகத்தில் ப்ராஜெக்ட் மானேஜராக பணிபுரிகிறார். என் மைத்துனர். B+ லோகோவை டிஸைன் செய்த பெருமை இவரையே சாரும். முதல் இரண்டு மாதம் கூகில் சைட்டில் நம் இதழ் வெளியிட உதவி புரிந்தார்.

9)   எனது சகோதிரியான திருமதி.கவிதா ராஜசெல்வமும், அவரது தோழியுமான திருமதி.சங்கீதா அவர்களும் முதல் நான்கு இதழின் எடிட்டிங் பணியை சிறப்பாக செய்து உதவினர்.

10) பல ஆலோசனைகளயும், அறிவுரைகளயும் கூறி சகோதர ஸ்தானாத்தில் இருந்து வழிநடத்தும் திரு.தண்டபாணி அவர்களின் பங்கு B+ஆரம்பிக்க மிக முக்கியமாய் இருந்தது என்றால் மிகையாகாது.

11)ஆதரவாய் தோல் கொடுத்தமற்ற அனைத்து நண்பர்களுக்கும், முக்கியமாக பாஸிடிவ் விஷயங்களை இத்தனை தூரம் விரும்பி படிக்கும் வாசகர்களுக்கும், நம் இதழை தனது நட்பு வட்டாரங்களுடன் இணையத்தில் பகிர்ந்துக் கொள்ளும் அனைவருக்கும் நன்றிகள் பல. வாசகர்களின் ஊக்கமும், கருத்துக்களும் நமக்கு பெரும் உந்துசக்தியாய் திகழ்கிறது. அந்த கருத்துக்களையும், நற்சானிதழ்களையும் இந்த லிங்கை க்லிக் செய்துகாணலாம்.

12) எனது துணைவியார் திருமதி.சிவரஞ்சினி விமல். குடும்ப சுமையினை எனக்கு தராத இவரின் புரிந்துகொள்ளுதல் இல்லையேல், இத்தனை மாதங்கள் கண்டிப்பாக வெளிவந்திருக்காது எனலாம். நமது படைப்புகளின் முதல் வாசகர் மற்றும் கடும் விமர்சகர். கவிதைகளும் எழுதியுள்ளார்.

13)இறுதியாக தமிழ் மீதும், எழுத்துககள் மீதும் அதிக மரியாதையும் ஈர்ப்பும் உள்ள நான். புரொடக்ஷன் எஞ்சினீயரிங் முடித்து, சில பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளேன். 6 ஆண்டுகள் துபாயில் வசித்ததால், அங்குள்ள நட்பு வட்டாரங்களின் ஆதரவும் இதழிற்கு கிடைக்கிறது.  தற்போது L&Tயில், விற்பனை மேலாளராக உள்ளேன்.  வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்டஎனது  படைப்பு – 2042

எழுத்து உலகத்தின் பாஸிடிவ் பக்கத்தில், தத்தித் தடுமாறி குழந்தையாய் தவழ்ந்து வந்து கொண்டிருக்கும் என்னை, அரவணைத்தும், விழும்போது தூக்கி விடவும் இத்தனை பெரிய குழுவும், வாசகர்களும் வாய்ந்தது பெரிய ஆசீர்வாதமாய் கருதுகிறேன்.

செடியாக வந்துள்ள இந்த செயல், ஆழமாக வேரூன்றி பெரிய மரமாக, இன்னும் நிறைய விழுதுகள் தேவைப்படுகிறது.

அதனால், நம் இதழை படிக்கும் வாசகர்கள் தங்கள் வாழ்வில் நடந்துள்ள சுவையான பாஸிடிவான சம்பவங்களையோ, நல்ல படைப்புகளையோ எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறோம்.

ஊக்கமளிக்க கூடிய சிறந்த பகிர்வுகளுக்கு, பாராட்டு தெரிவிக்கும் வகையில் சில ஆச்சரியங்கள் வரும் இதழ்களில் இருக்குமென தெரிவித்துக் கொள்கிறோம்.

பயணம் தொடரும்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(23)Dislikes(0)
Share
 Posted by at 12:25 am
Nov 142014
 

red-rose-wallpaper

 

அன்பு என்ற மூன்றெழுத்தில்
வந்தார் தந்தையாக !

அறிவு என்ற மூன்றெழுத்தை
தந்தார் ஆசானாக !

பாசம் என்ற மூன்றெழுத்தை
தந்தார் தாயாக !

இறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்
விட்டுச்சென்றார் தனியாக !

தனிமை என்ற மூன்றெழுத்தில்
விட்டுச்சென்றார் கொடுமையாக !

நினைவு என்ற மூன்றெழுத்தில்
வாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக !

 

– S.நித்தியலக்ஷ்மி,   தஞ்சாவூர்

Likes(6)Dislikes(0)
Share
Nov 142014
 

A1

 

(சென்ற இதழ் பேட்டியின் தொடர்ச்சி…)

12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து எடுத்தாலும் பிரச்சினை இல்லை என்கிறீர்களா?

கண்டிப்பாக, எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் சொல்வது, நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் கவலை இல்ல, உங்களுக்கு பள்ளிக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்று தான். மதிப்பெண் தான் வாழ்க்கை என்றுகூறி, மாணவர்களுக்கு நம் சமுதாயம் மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது. அவர்களுக்கு விளையாட்டு கிடையாது, பொழுதுபோக்கு கிடையாது, எப்போதும் படிப்பு படிப்பு என்று அதிக அழுத்தத்தை தந்து விடுகிறோம். அவர்கள் வயதில் செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்களை செய்ய விடாமல் தடுத்து விடுகிறோம். அதன் தாக்கம் அவர்களுக்கு பின்னாளில் வேறு விதமாய் எதிரொலிக்கிறது. இந்த அழுத்தம் இந்த வயதிற்கு தேவை இல்லை. கல்வி என்பதை ரசித்து அனுபவித்து கற்று கொள்ளவேண்டும். விருப்பப்பட்டு படிக்கும் சூழல் வேண்டும், வெறுத்து படிக்க கூடிய சூழ்நிலை இருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இந்த விழிப்புணர்வை நாங்கள் பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கூறுகிறோம்.

 

அந்த நுழைவு தேர்வுகள் எழுதுவதற்கு ஏதேனும் தனி பயிற்சி எடுக்க வேண்டுமா?

அவ்வாறு ஏதும் இல்லை. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு syllabus தான். தேர்வும் நான்கு 4 சாய்ஸில் எதாவுது ஒன்றை தேர்ந்தெடுபபதை போல் தான் வரும். இது CBSC, மெட்ரிக் என எந்த பள்ளி படித்தாலும் ஒரே மாதிரியான தேர்வு தான்.

 

இத்தனை கல்லூரி பற்றிய விவரங்கள் எல்லாம் உங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?

நான் வட இந்தியாவில் வேலை செய்த போது, நிறைய கல்லூரிகள் பல்கலைகழகங்கள் சென்று பார்ப்பேன். என் பொழுதுபோக்கே பல கல்லூரிகளுக்கு சென்று பார்த்து, விவரங்கள் சேகரிப்பதாய் தான் இருந்தது. பொழுதுபோக்காய் ஆரமபித்தது, இப்போது விவரங்கள் பெட்டகமாய் உள்ளது. இன்று பல பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அது உதவுகின்றது.

 

இது வரை எத்தனை மாணவர்களை கண்டு இந்த கருத்துகளை சொல்லிருப்பீர்கள்?

கடந்த பத்து வருடத்தில் ஏறத்தாழ 20லட்சம் மாணவர்களை கண்டு பேசியுள்ளோம். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் சென்றுள்ளோம். நகர் புறத்திற்கு சென்றாலும், அதிகம் கிராமபுறத்திற்கு செல்வோம். சிங்கப்பூர், UAE, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளோம். தற்போது CBSE BOARD, எங்கள் கல்வி நிகழ்ச்சிகளை CBSE பள்ளிகளில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதனால், எங்களால் மேலும் நிறைய மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

 

உங்கள் துறையில் நீங்கள் கண்ட பெரிய சவால்கள் என்று எதை குறிப்பிடுவீர்கள்?

சில கல்வி நிறுவனங்களில் உள்ள தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். எங்களுக்கு தெரியாததை என்ன சொல்லிவிட போகிறீர்கள் என்று உதாசீனப் படுத்துவார்கள். அவர்களை பொருத்த வரை மதிப்பெண்களும் ரிஸல்ட்டும்தான் முக்கியமாக தோன்றும். மதிப்பெண் குறைந்தாலும், நல்ல நிலைக்கு செல்லலாம் என்று நீங்கள் கூற ஆரம்பித்தீர்கள் என்றால், பின்னர் மாணவர்கள் படிக்க மாட்டார்கள், பள்ளியின் ரிஸல்ட் குறைந்து விடும் என்பார்கள். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இத்தனை தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருக்குமே என்று அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இந்த எண்ணம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இருந்தாலே இன்று கல்வியின் நிலை உயர்ந்து இருக்கும்.

 

பெற்றோர்கள் தரப்பிலிருந்து எத்தகைய சவால்களை சந்திக்கிறீர்கள்?

பெற்றோர்கள், குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளவர்கள், தொழில் கல்விக்கு (PROFESSIONAL EDUCATION) மட்டுமே, முக்கியத்துவம் தருகின்றனர். இந்த கல்வியைக் கற்றவுடன் வேலைக் கிடைத்துவிடும், கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் உள்ளது. பல பெற்றோர்கள் இசை, விளையாட்டு, உளவியல், மனித நேயம், சமூகப்பணி போன்ற மற்ற படிப்புகளுக்கு (NON-CONVENTIONAL COURSES) முக்கியத்துவம் தருவதில்லை, சிலருக்கோ அவ்வாறு இருக்கிறதென்றே தெரிவதில்லை. இன்றைய சூழ்நிலையில் இளங்கலை கல்வி மட்டுமே போதுமானதாக இல்லை. மாணவர்களுக்கு எந்த கல்வியில் ஈடுபாடு உள்ளதோ, அதை படிக்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

 

இன்று இணையத்தில் தான் அனைத்து தகவல்களும் கிடைக்கிறதே, அதிலிருந்து எடுக்கலாமே?

இன்று இணையத்தில் மிக அதிகமாக தகவல்கள் கிடைக்கிறது. அது தான் பிரச்சினை. எந்த நேரத்தில் எந்த தகவல் நமக்கு தேவை என்பதை வடிகட்டி எடுப்பது மிக சிரமம். நிறைய அரசு நிறுவனங்களில் படிப்பதற்கு அரசே பணமும் சலுகைகளும் தருகிறது. உதாரணமாக, பெங்கலூர் IISc  நிறுவனம்நடத்தும்  “kishore vaigyanik protsahan yojana (KVPY) “. இந்த தேர்விற்கு இப்போது தான் விண்ணப்பம் கொடுத்து முடித்தார்கள். இந்த தேர்வை 11ஆம் வகுப்பிலும் எழுதலாம், 12ஆம் வகுப்பிலும் எழுதலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500மட்டுமே. தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மாதா மாதம் ரூ.5000 அரசிடமிருந்து ஸ்டைபன்ட்ஆககிடைக்கும். முடித்தவுடன், “IISc Bangalore, IISER Hyderabad,  University of Hyderabad” இந்த மூன்றிலும் அனுமதி கிடைக்கும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றே நம் ஊரில் உள்ள நிறைய பெற்றோர்களுக்கும் குடும்பத்திற்கும் தெரியாது. இது போல் பல தேர்வுகள் உள்ளது. இந்த தகவல்கள் தெரியாததினால் தான் 12ஆம் வகுப்பு  முடித்த பிறகு நம் ஊரில் உள்ள சாதாரண கல்லூரியில் பல பேர் சேர்கிறார்கள். இந்த நல்ல தகவல்கள் தெரிந்தவர்கள் நல்ல அரசு கல்லூரிகளில் சேர்ந்து பையனடைகிறார்கள்.

 

நீங்கள் கிட்டத்தட்ட 20லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறோம் என்றீர்கள், அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்ற தகவல்கள் தெரிந்துள்ளது?

90% பேருக்கு தெரிவதில்லை. இத்தனை வாய்ப்புகள் இருக்கிறது என்று நீங்கள் சொல்லி தான் தெரிகிறது என்பார்கள். இன்னொரு உதாரணம், IRIMEE (Indian Institute of Railwaiy mechanical and electrical engineering) என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. இதற்கான தேர்வு SCRA (Special Class Railwaiy Apprentice) வர இருக்கிறது. 1888 ஆம் ஆண்டிலிருந்து, பீஹாரில் உள்ள ஜமால்பூரில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ரெயில்வே துறையை சார்ந்த மெக்காநிகல் மற்றும் எலெக்ட்ரிகல் பொறியியல் கல்வி உலகத்திலேயே இந்த ஒரு நிறுவனத்தில் தான் க8ற்று தருகிறார்கள். வேறு எங்கும் கிடையாது. படிப்பதற்கு ரெயில்வே துறை அமைச்சகம் மாணவர்களுக்கு மாதம் ரூ.9200 ஸ்டைபன்ட் தருகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 மட்டுமே. மொத்தம் 46 சீட்டுகள் மட்டும் தான் உள்ளது. அக்டோபர், நவம்பரில் கிடைக்கும் இந்த விண்ணப்ததிற்கான, தேர்வு ஜனவரியில் முடிந்து விடும். இவை நம் ;8யாருக்கும் தெரியாது. பெற்றோர்கள் இந்த சமையத்தில் மாணவர்களை காலாண்டு அரையாண்டு என அழுத்தம் கொடுத்து கொண்டிருப்பார்கள்.

 

12ஆம் வகுப்பு தேர்வை விட இந்த மாதிரியான தேர்வுகளை குறி வைத்து படிக்கலாமா?

12ஆம் வகுப்பு பரீட்சை கண்டிப்பாக முக்கியம் தான். அந்த பரீட்சைக்கு படிப்பதை வைத்து தான் இது போன்ற நிறைய நுழைவு  தேர்வுகள் உள்ளன. 12ஆம் வகுப்பு பரீட்சைக்கு சம்பந்தம் இல்லாத சில நுழைவு தேர்வுகளும் இருக்கிறது. ஆனால் எல்லா தேர்வுகளை பற்றியும் வாய்ப்புகள் பற்றியும் நாம் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அந்த வாய்ப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க தவறினோம் என்றால், இத்தனை வருடம் குழந்தைகளை கஷ்ட பட்டு படிக்க வைத்தது வீணாகும். அனைத்து விண்ணப்பமும்,பரீட்சைக்கு முன் வந்தாலும், இந்த நுழைவு தேர்வு அனைத்தும்,பரீட்சைக்கு அப்புறம் தான் வருகிறது. மாணவர்களோ, அவர்கள் பெற்றோர்களோ இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து தெரிந்து, பிடித்திருந்தால் விண்ணப்பித்து வைத்திருக்க வேண்டும்.

 

என் இந்திய அளவில் உள்ள இத்தனை நல்ல அரசு கல்வி நிறுவனங்கள் பற்றியெல்லாம் நமக்கு தெரிவதில்லை?

முக்கியமாக விளம்பரங்களை வைத்து தான் பெற்றோர்களுக்கு ஒரு கல்வி நிறுவனத்தை பற்றி தெரிய வருகிறது. நல்ல தரமான நிறுவங்களின் நோக்கம் தரமான கல்வி மட்டுமே. அதனால் அவர்கள் விளம்பரம் செய்வதற்கு தேவை ஏதும் இல்லை. அவர்கள் கல்வியை கல்வியாய் பார்க்கின்றார்கள். பணம் பண்ணும் வியாபாரமாய் பார்ப்பதில்லை. நாங்கள் சொல்வதெல்லாம் மாணவர்களுக்கு ஒன்று தான், விளம்பரங்கள் பார்த்து சோப்பு, சீப்பு,  பௌடர்‌எல்லாம் வாங்கலாம், ஆனால் கல்வியை வாங்ககூடாதென்று.

கல்விக்கான செலவை கொஞ்சம் எடுத்து கணக்கு போட்டு பாருங்கள்.பொறியியல்கல்வியைஎடுத்தால்ஒருஆண்டிற்கு 35 லட்சம்சீட்டுகள்இந்தியாவில்உண்டு. அதில் 5 லட்சம்சீட்அரசிற்குஎன்றுவைத்துவிட்டால், மீதி 30 லட்சம்சீட்டுகள். ஒருவருடத்திற்குஒருலட்சம்கணக்குவைத்துப்பாருங்கள். இதைபோன்றுஎத்தனைதுறை, எத்தனைபெரியதொகை?

A2

உங்கள் பார்வையில் ஒரு சமுதாயமாக எங்கு கல்வி துறையில் தவறு செய்ய ஆரம்பித்தோம்?

1948இல் Dr.சர்வேப்பல்லி ராதாகிரிஷ்ணன் அவர்கள், சுதந்திரம் அடைந்தவுடன் நாட்டிற்கு கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அழகாக பரிந்துரைத்த கோப்புகளை நாம் யாரும் படிக்கவில்லை. அதை படித்து நடைமுறைபடுத்தி இருந்தால், இன்று நம் நாடு கல்வி துறையில் முதன்மை பெற்றிருக்கும். நாம் சரியாக அதன் எதிர் திசையில் போய் கொண்டிருக்கிறோம். தரமான கல்வி தான் ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சி.

வெளிநாட்டிற்கு போய் சிறப்பாக படித்து சாதிக்கும் நம் மாணவர்களை பார்த்தால் தெரியும். இங்கு அதற்கான சூழ்நிலை இல்லை. நாட்டு வளர்ச்சியின் முதலீட்டில் கல்விக்கான முதலீடு மிக குறைவு.  IIT நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு அனுமதி கிடைப்பது மிக கடினம், போட்டி அதிகம். சுதந்திற்கு பின் ஆண்டிற்கு ஒரு IIT திறந்திருந்தால் கூட, இன்று ஒரு 60 IIT ஆவது இருந்திருக்கும். எத்தனை பேர் தரமான கல்வி படித்திருப்பார்கள், எத்தனை பேரின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும். சுதந்திரத்திற்கு பின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நல்ல மருத்துவ கல்லூரி திருந்திருந்தால், இன்று நாம் சீனாவிற்கோ, ரஷ்ஷியாவிற்கோ போய் படிக்கும் சூழ்நிலை வந்திருக்காது.

நமது பிரச்சினைக்கு நம்மிடமே பதில்கள் இருந்துள்ளது. ஆனால் நாம் அவைகளை தனியாரிடம் கொடுத்தோம், விளைவு கல்வி மாபெரும் வியாபாரம் ஆகியது.

தனியாரிடம் சென்றால் தரம் இருக்க முடியாது என்று கிடையாது. 50 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த டாடா, பிர்லா கல்வி நிறுவனங்கள் கல்வி தரத்தில் எந்த ஒரு சமரசமும் பண்ணவில்லை. சீட்டுகளும் அதிக படுத்தி கூட்டம் சேர்க்கவில்லை. அதே தரத்தை இன்று வரை தருகிறார்கள். ஆனால் அவர்களை போன்று மற்ற தனியார் நிறுவனங்கள் நடக்கிறதா?

 

உங்கள் நோக்கம் என்ன சார்?

எங்களால் எத்தனை மாணவர்களின் கல்வி தரமும் அதன் மூலம் வாழ்க்கை தரமும் உயர்த்த முடியுமோ, அதனை செய்ய வேண்டும். மாணவர்களாய் முயற்சி செய்தால் ஒரு படி மேல் ஏறுவார்கள், எங்கள் மூலம் முயற்சி செய்தால், ஒரு பத்து படி மேலே ஏத்தி விடுவோம். மாணவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை உயர்த்தி விடுவது எங்களின் லட்சியம்.

Likes(8)Dislikes(3)
Share
 Posted by at 12:22 am
Nov 142014
 

Storey

நாளை நடக்கப் போகும் நிகழ்வுகளை நினைத்து நினைத்து எவ்வளவு தான் இறுக்கமாக இமைகளை மூடினாலும் உறக்கம் விழிகளை தழுவவில்லை. மனதில் ஆயிரம் நினைவலைகள். பத்து ஆண்டுகளுக்கு முன் கடிகாரத்தை திருப்பினால் பட்டாம் பூச்சிகள் என்னுள் சிறகடிப்பதை உணர முடிந்தது. “தோற்றம் எப்படி இருக்கும்? நடை, உடை, பழக்க வழக்கம் ஏதாவது மாறி இருக்குமோ?” என கேள்வி கணைகள் தொடர்ந்து ஊடுருவின.

ஒரு வழியாக இரவை கடத்தி விடியற்காலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். சாலையின் நெருக்கடியில் வாடகை சீருந்து தாமதமாகி ரத்த அழுத்தத்தை கூட்டியது. விமான நிலையத்தை அடைந்து விமானத்தில் அமர்ந்த பின் தான் ஏதோ பெரிதாக சாதித்தது போன்ற ஒரு மன திருப்தி ஏற்பட்டது. எனக்கே இது ஒரு புது விதமான அனுபவமாக தான் இருந்தது. “இவ்வளவு ஆவல், இத்தனை வருடங்கள் எங்கே ஒளிந்திருந்தது?” என்ற கேள்விக்கு என்னுள் விடையில்லை.

பத்து மணி நேர பயணத்தில் கனவு நினைவாக இருக்கும் சந்தோஷத்தில் விமானத்துடன் நானும் ஆகாயத்தில் மிதந்தேன். இந்திய மண்ணை தொட விமானம் தயாரானது. ஆறு வருட பிரிவு, அதை உடைக்கும் தருணம் வந்து விட்டது என்றதும் குதூகலம் மனதில் தோற்றி கொண்டது. “மனிதன் இத்தனை உணர்சிகளின் சங்கமமா?”
வேலை, படிப்பு என வாழ்க்கையில் சமூக அளவில் முன்னேற்றம் இருந்தாலும் தாய் நாட்டை பிரிந்து ஏதோ ஒரு வெறுமை என்னுள் புரயோடிகொண்டு தான் இருந்திருக்கிறது.

விமான நிலையத்தில் அம்மாவும், அப்பாவும் அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். சற்று வயதானது போன்று தெரிந்தார்கள்; எதிர் பார்த்தது தான். இரண்டு பிள்ளைகளை பெற்று, இருவரும் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? அமெரிக்காவில் அக்கா வீட்டில் தங்கி விட்டு இந்தியா திரும்புகையில் என்னுடனும் இரண்டு வாரம் பாரிஸில் தங்குவது இவர்களுக்கு வழக்கம்.

“என்னடா ஹரிஷ், இப்படி மெலிஞ்சிட்ட? ஒழுங்கா சாப்பிடறியா! இல்ல சான்ட்விச் தானா?” என்ற அம்மாவின் வழக்கமான கேள்விகள். ” பெற்றோரை தாண்டி கண்கள் விமான நிலையத்திற்கு வெளியே அலைந்தன.
நான் வளர்ந்த இடம், வாழ்ந்த வாழ்கை, இவற்றை இந்த மூன்று வார விடுமுறையில் வாழ்ந்தாக வேண்டும் என்ற ஒரே லட்சியம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது.

சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் மழைத் தூறலின் அடையாளமாக மண் வாசனை நாசியைத் துளைத்தது. திரிசூலதிளிருந்து திருவொற்றியுரை அடைவதற்குள் பொழுது புலர்ந்திருந்தது. சாலைகள் சீராக இருந்தது. சென்ற பாதை இது சென்னை தானா என்ற சந்தேகத்தை கிளப்பியது.

ஐந்து மணி நேர உறக்கத்திற்கு பின் என் இலட்சியத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினேன். சின்னவயதில் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வது வழக்கம். தியாகராஜ சுவாமி கோயிலுக்கு செல்ல ஆட்டோ பிடித்தேன். “நாற்பது ருபாய் கொடுங்க, தம்பி” என்றார். நியாமான விலைதான் என்று யோசிப்பதற்குள் “தம்பி, போலீஸ் வந்து கேட்டாங்கன்னா மீட்டர் போட்டிருக்கேன்னு சொல்லுங்க” என்றார்.

கோவிலை அடைந்து சாமி தரிசனம் முடிந்த பின் கோவிலுக்கு அருகில் நண்பர்களுடன் பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய இடத்திற்கு விரைந்தேன்.  மரங்கள் இருந்த இடங்கள் மாடர்ன் அபார்ட்மேன்ட்சாக மாற்றப்பட்டிருந்தது.
அருகில் உள்ள நண்பனின் கடைக்கு சென்றேன். கடும் உழைப்பால் தன் அப்பாவின் மளிகைக் கடையை சூப்பர் மார்க்கெட்டாக மாற்றியிருந்தான். என்னைப் பார்த்த சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஆடினான். “ஏன்டா ஆளே  இப்படி சோர்வா தெரியறே?” என்று கேட்டது தான் தாமதம். அவனுடைய சர்க்கரை நோயைப்பற்றி புலம்பினான்.
விடுமுறை நாட்கள் தாறுமாறான வேகத்தில் ஓடியது. கல்லூரி நண்பனுடன் பேருந்தில் பயணிக்க விரும்பினேன்..
“ஏன்டா?! நீ போய் பஸ்ல போனுங்கிற? வேனும்னா சினிமாக்கு ஆட்டோல போகலாம்டா, இல்லைன்னா என் வீட்டிலிருந்து கார் அனுப்ப சொல்றேன்டா!” என்றான்.

அவனை ஏதோ தாஜா செய்து அவன் மனதை மாற்றி, இருவரும் பேருந்தில் பிரயாணித்தோம். ஃபுட்போர்ட் அடிக்க மனமில்லை எல்லா நாட்டிலும் பேருந்தில் பயணித்து நம்நாட்டில் செல்வதில் மட்டும் என்ன கெளரவ குறைச்சல் தெரியவில்லை. இந்த குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் “க்ரீச்” என்ற சத்தத்தோடு பேருந்து நின்றது. சுமார் ஐம்பது வயது பெண்மனி ஒரு கையில் கைப்பையும் ஒரு கையில் காய்கறி பையுமாக எழுந்தார் இறங்குவதற்காக. நடத்துனர், “ஏம்மா, முன்னாடியே எந்திரிச்சு வர மாட்டியோ?” என்றார்.
“பஸ் நின்னவுடனே தானங்க இறங்குவாங்க. ஓடுற பஸ்ல எந்திரிச்சு நடக்க சொல்றீங்களே, இது நியாயமா? இதனால தான் பஸ்ல நிறைய பேர் போக தயங்குறாங்க” என சண்டை பிடித்தேன். அந்த பெண்மனிக்கு வக்காளத்து வாங்காமல் இருக்க முடியவில்லை. நண்பன் என்னை அடக்க முயன்றான். “முரளி, உனக்கென்னடா ஆச்சு, நீனும் இப்படி அமைதியாயிட்ட” என அவனிடம் குமுறினேன். திரைப்படம் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன் இணையதளத்தில் டிக்கெட் வாங்கி ஒரு மல்டிப்ளெக்ஸ் மாலுக்குள் அழைத்து சென்றான்.

இந்தியாவிலும் மேற்கத்திய பிம்பம். கட்டிடம் மட்டுமில்லாமல், ஆடை அணிகலன், இளவட்டங்களின் பழக்க வழக்கம், அனைத்தும் பாரீஸை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. தமிழுக்கு அதிகம் தட்டுப்பாடு. ஆங்கிலம் அனைவரிடமும் சரளமாக வந்தது. நானும் விடாமல் அனைவரிடமும் தமிழில் பேசினேன். உள்ளே ஒரு உவகை. தாயகத்தில் தமிழகத்தை தேடினேன்.

திரும்பி வருகையில் புரசைவாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனங்கள் கோட்டைத் தாண்டி நின்று புகை மண்டலத்தை கிளப்பியது. “இவர்களுக்கு ஏன் இந்த அவசரம்?”. இது மட்டுமில்லாமல் புரசைவாக்கத்தில் நின்று கொண்டு “பீச் ரோட்டுக்கிட்ட வந்துட்டேன்டா” என்று ஒரு இளைஞன் அலை பேசியில் அளந்து கொண்டிருந்தான்.

அடுத்தநாள் அம்மாவுடன் அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்று உறவினர்களின் குழந்தைகளுக்கு துணிமணி வாங்கினேன். கடைக்காரர், பணத்தை பெற்றுக் கொண்டு மீதி சில்லரையை என்னிடம் கொடுத்தார். நான் அந்த இடத்தில் அகலாமல் நின்றதை பார்த்து, “சரிதானே சார்?” என்றார். “ரசீது வேணும்” என்றேன். சற்றே சலிப்புடன் அதை கையில் கொடுத்தார். “நாம் கொடுக்கிற பணத்துக்கு ஒழுங்கா வரிகட்டிட வேண்டியதுதான, இதுல இவங்களுக்கு என்னம்மா பிரச்சினை?” என அம்மாவிடம் புலம்பினேன். “ஏன்டா, வந்ததிலேர்ந்து பார்க்கிறேன், எல்லாத்துக்கும் டென்ஷன் ஆற?” என அம்மா வருத்தப்பட்டார். “முதல்ல உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும்” என்று தாய்மை தன்னை வெளிப்படுத்தியது.

“அம்மா, நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற?” என எரிச்சலை வெளிப்படுத்தினேன். என் தாய்க்குகூட புரியவில்லை. கவலை தாரத்தைப் பற்றியல்ல தாயகத்தை பற்றி என..

விடுப்பு முடிந்து பாரீஸுக்கு திரும்பி வேண்டிய நாள் வந்துவிட்டது. பட்டாம்பூச்சி கணவுகளுடன் இந்தியனாய் மட்டுமே தாயகம் வந்த நான், அதன் குறைகளை ஏற்க முடியாமல் கனத்த மனதோடு இவை சரியாகும் என்ற நம்பிக்கையுடன் விமானத்தில் புற்ப்பட்டேன். “நான் இதற்கு என்ன செய்ய வேண்டும்” என்ற கேள்வி மனதை பிசய ஆரம்பித்தது.
விமானம் தரை இறங்கியவுடன் அலைபேசிக்கு உயிரூட்டினேன். “இந்த ஞாயிறு அன்று தமிழர் திருநாள் விழாவிற்கு, அனைவரும் பாரீஸ் தமிழ் சங்கதிற்கு வருக” என்ற அலைபேசி வாசகம் என்னை பாரீஸ் நகரத்திற்க்கு அழகாக வரவேற்றது.

– Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)

Likes(17)Dislikes(0)
Share
 Posted by at 12:14 am
Nov 142014
 

kids

ஒரு ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. குருவின் இல்லத்திலேயே, அந்த குருகுலம் இயங்கி கொண்டிருந்தது. படிப்பதற்கு,  விளையாடுவதற்கு, பிறபயிற்சிகள் எடுப்பதற்கு என தனிதனி இடங்கள் மற்றும் அறைகள் இருந்தன.  அந்த குருகுலத்தில், அனைவரும் சேர்ந்து உணவு உன்ன வேண்டும் என்று ஒரு பழக்கம் இருந்தது.

குருமாதா (குருவின்மனைவி) அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து தான் சமைப்பார். குரு மற்றும் மாணவர்கள் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்கள்.

ஒருநாள், குரு ஓர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் சிறிது தாமதமாக உணவு உண்ண வந்தார். அதற்குள் மாணவர்கள் அனைவரும் உண்ண தொடங்கிவிட்டனர்.

குரு சாப்பிடும் இடத்திற்கு வந்தவுடன், தலைமை மாணவன் குரு கை கழுவ நீர் எடுத்து கொடுத்தான்.

குரு கை கழுவியவுடன், “இன்று குரு மாதா நமது உணவில் நெய் ஊற்றி சமைப்பதற்கு பதிலாக வேப்ப எண்ணையை ஊற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்.  நீங்கள் சிறிது காத்திருக்க முடியுமானால், நான் சென்று குரு மாதாவிடம் வேறு ஒரு பதார்த்தம் செய்யச் சொல்கிறேன்” என்றான்.

அதற்குகுரு, “வேண்டாம். நான் இதையே சாப்பிடுகிறேன். உனக்கு இனிமேல் கல்வி ஏறாது. நீ வீட்டுக்கு போகலாம்” என்றார்.

தலைமை மாணவன் அதிர்ந்து போனான். ஒரு வேளை குருமாதா சமையல் பற்றி தவறாக கூறியதற்காக வெளியில் அனுப்புகிறாரோ என்ற சந்தேகத்துடன் தன்னை வெளியில் அனுப்புவதற்கு என்ன காரணம் என்று கேட்டான்.

அதற்கு குரு, “நீ இங்கு வந்த நாள் முதலேயே வேப்ப எண்ணை ஊற்றி தான் சமைத்து குடுத்தோம். உனக்கு கல்வியின் மேல் இருந்த பற்றினால், சாப்பாடு சுவை பற்றியெல்லாம் தெரியாதிருந்தது. இப்பொழுது உனக்கு கல்வி முக்கியமாக படாத காரணத்தால், சுவை தெரிகிறது. கல்வி சுவைக்காத போது அது உனக்கு பாரமாகதான் இருக்கும். அதனால் தான் நீ வெளியில் செல்ல வேண்டும் என்று கூறினேன்” என்றார்.

–          D. சரவணன்

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 12:12 am
Nov 142014
 

Time

“நா மட்டும் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா இந்நேரம் ஒரு நல்ல வேலையில இருந்துருப்பேன்” “இந்த வேலைய நேத்தே செஞ்சிருந்தேன்னா இன்னிக்கு யாரும் என்ன திட்டிருக்க மாட்டாங்க” என்று பலர் புலம்புவதை நம் காதால் கேட்டிருக்கிறோம். இழந்த பிறகு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என மனிதன் ஏங்கும் ஒருசில விஷயங்களில் இந்த நேரமும் ஒன்று. கடந்து போன பிறகே அதன் முக்கியத்துவத்தை மனிதனுக்குப் புரிய வைக்கிறது. எந்த ஒரு நடந்து முடிந்த செயலையும் நம்மால் மறுபடி நிகழ்த்திக் காட்ட முடியும். ஆனால் அதே நேரத்தில் நிகழ்த்துவதென்பது தான் இயலாத காரியம்.

இதற்காக தீவிரமாக யோசித்த ஆங்கிலேயர்கள், இழந்த நேரத்தில் நாம் செய்யத் தவற விட்ட செயல்களை செய்து முடிப்பதற்காக டைம் மெஷின் என்ற ஒரு கருவியைக் கண்டுபிடித்தனர். அதனை உபயோகித்து இறந்த காலத்திற்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் நாம் செய்யாமல் விட்ட செயல்களை செய்து கொள்ளலாம். ஆனால் பின்னர் தான் அந்த டைம் மெஷின் திரைப்படங்களில் மட்டுமே வேலை செய்யும் என்றும் நிஜ வாழ்க்கையில் வேலை செய்யது என்றும் தெரிய வந்தது. எனவே இழப்பதற்கு முன்பாகவே நேரத்தை முறையாக உபயோகப் படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

ஒரு சிறிய கதை. ஒரு நாட்டில் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முனிவர் ஒருவர் இருந்தார். அவரிடன் ஒரு இளைஞன் செல்ல “குழந்தாய் உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது ?” என்று முனிவர் கேட்க அதற்கு அவன் “சுவாமி வாழ்வில் நிம்மதியே இல்லை. நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. நினைத்ததை சாதிக்க முடியவில்லை. என்னுடைய லட்சியங்களை அடையவும் முடியவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் அவ்வளவு நிம்மதியில்லை இதற்கு தாங்கள் தான் எனக்கொரு வழி கூற வேண்டும்” என்றான்.

சிறிது நேரம் யோசித்த முனிவர், “சரி நான் உனக்கு ஒரு நாளுக்கு 1440 வெள்ளிக்காசுகள் தருகிறேன். அதை நீ எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் நீ அதை சேமிக்க முடியாது. நான் காசு கொடுப்பதை ஒரு நாள் நிறுத்தி விடுவேன். என்றுடன் நிறுத்துவேன் என்றும் சொல்ல மாட்டேன். இப்போது சொல். அந்த காசுகளை நீ எவ்வாறு செலவிடுவாய்?” என்றார்

சற்று யோசித்து அவன் “ஐயா.. அந்தக் காசுகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவற்றை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் செலவு செய்வேன். எனக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்வேன். என் குடும்பத்தினருக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பேன். எஞ்சியிருக்கும் காசுகளை என் நண்பர்ளும், உறவினர்களும் சுற்றத்தாரும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு செலவிடுவேன்” என்றான்.

இதனைக் கேட்ட முனிவர் “உன்னுடைய நேர்மையான பதிலைக்கண்டு மகிழ்கிறேன். இப்போது உன்னுடைய பிரச்சனைக்கு நீயே விடை கண்டுவிட்டாய்” என்றதும் இளைஞன் “புரியவில்லையே சுவாமி” என்றான்.

அதற்கு முனிவர் “நான் 1440 வெள்ளிக் காசுகள் என்று கூறியது ஒரு நாளில் இருக்கும் 1440 மணித்துளிகளைக் குறிக்கிறது. அந்த மணித்துளிகள் வெள்ளிக்காசுகளைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. அது ஏழை, பணக்காரன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட ஒரு பொக்கிஷம். அதை ஒரு மனிதன் எவ்வாறு செலவிடுகிறானோ அதைப் பொறுத்தே அவனுக்கு வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். இப்போது உன்னுடைய பதிலிலேயே உன்னுடைய அத்தனை பிரச்சனைக்கும் தீர்வுகள் உள்ளது” என்றதும் தெளிவடைந்தவனாய் இளைஞன் வீடு திரும்பினான்.

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்மில் எத்தனை பேர் அந்த இளைஞனைப் போல் வாழ்ந்து வருகிறோம்? நம்மில் எத்தனை பேர் நம் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறோம்? வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போது பல நண்பர்களுடனான நட்பு அறுபட்டுவிடுவது தவிர்க்க முடியாத உண்மை.

ஆனால் இதற்கு நம்மிடம் இருக்கும் காரணங்களோ “ஆஃபீஸ்ல ஒர்க் ரொம்ப ஜாஸ்தி.. “ரெண்டு குழந்தைங்களாயிருச்சி அவங்கள பாத்துக்கவே டைம் போயிருது” என்று ஒரிரு வலுவில்லாத காரணங்களே..

அலுவலக வேலை என்பது முடிவில்லாத ஒண்று. எவ்வளவு செய்தாலும் செய்து கொண்டே இருக்கலாம். நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். அதே போல் குடும்பம், குழந்தைகள் மட்டுமே நம் உலகமல்ல. அதை தாண்டியும் வெளியில் நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன.

இந்த அனைத்து சூழலையும் ஒருவன் திறமையாகக் கையாண்டு அலுவலகப் பணிகளுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்குமிடையே ஒரு சமநிலையை கொண்டு வரவேண்டுமானால் நிச்சயம் நேரத்தை முறையாகப் பயன்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்பதை விட அந்த நேரத்தில் உபயோகமாக என்ன செய்தோம் என்பதே முக்கியம். எப்படி நம் ஒவ்வொரு செயலுக்கும் இந்த நேரத்தை முறைப்படுத்தி முறையாகப் பயன்படுத்துவது? அடுத்த இதழில் விரிவாகக் காணலாம்.

-முத்துசிவா

 

Likes(6)Dislikes(0)
Share
Nov 142014
 

 

 

ரஷ்ஷியாவில் உள்ள சோச்சி எனும் இடத்தில் 2014ஆம் வருட உலக செஸ் சாம்பியன்ஷிப் விறுவிறுவென நடந்துக் கொண்டிருக்கிறது. 44 வயதானாலும் நம் விஷ்வநாத் ஆனந்த் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், செஸ்ஸை வைத்து ஒரு சவாலை இந்த மாதம் காணலாம்.

chess puzzle

கேள்வி இதுதான். மேலே இருப்பதைப் போன்று ஒரு சூழ்நிலை, நீங்கள் விளையாடும் ஒரு ஆட்டத்தில் வந்துவிடுகிறது. நீங்கள் வெள்ளை நிற  காயின்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறீர். நீங்கள் நினைத்தால், அடுத்த இரண்டே நகர்த்தலில் கருப்பு காயின் ஆட்டக்காரரை  “செக்மேட்” செய்யமுடியும்.

இப்போது நீங்கள் தான் நகர்த்த வேண்டும். எப்படி இரண்டே நகர்த்தலில் எதிராளியை தோற்கடிப்பீர்?

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…

 

 

போனமாதம்கேட்கப்பட்டபுதிருக்குபதில்இதோ..

சரியான பதில்:  5 வாளி , 16 பலூன்

 

சரியானபதில்அளித்தவர்கள்:

அஷ்வத்நாகராஜன், சரவணக்குமார், B.S.அருண்,

Likes(1)Dislikes(0)
Share
Share
Share