Oct 152014
 

Intro1

லண்டனில் வசிக்கும் எனது உறவினர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். உரையாடல், சமூகத்தின் பக்கம் திரும்பி, இன்றைய கல்வி நிலையை எட்டியது. அப்போது லண்டனில் உள்ள பள்ளி கல்வி முறையின் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்.

அவர் சொன்ன முக்கியமான விஷயம் “அங்கு பாட புத்தகங்களில் உள்ள விஷயங்களை மனப்பாடம் செய்து பின்பற்றும் மாணவர்களை விட, ஏன், எதற்கு, எவ்வாறு என்று ஆராய்ந்து, எதிர் கேள்வி கேட்டு, பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். அதோடு நில்லாமல், எதாவது ஒரு மாணவன் ஒரு படி மேலே சென்று, அந்த பாட புத்தகத்தில் வந்திருக்கும் விதியோ, கருத்தோ, செயல்திட்டமோ தவறு என்று நிரூபித்து விட்டால், அவனுக்கு மதிப்பெண்கள் மட்டுமின்றி, மதிப்பும் அதிகம்” என்பதே.

அந்த உரையாடல் என்னை சற்று ஆழமாக யோசிக்க வைத்தது. சிறு வயது முதல் ஆராய்ந்து, தெளிந்து படிக்கும் முறை இருப்பதால் தான் என்னவோ, மேற்கத்திய நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை (RESEARCH &DEVELOPMENT) மிக சிறப்பாக இயங்கி வருகிறது. எந்த பெரிய கண்டுபிடிப்பும், புது தொழில்நுட்பமும் அமெரிக்கா, UK, ஜெர்மனி மற்ற சில மேற்கத்திய நாடுகளின் கைவசம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நமது பள்ளிகளின் பக்கம் வருவோம். பள்ளிகளில் இன்றும் மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வில் கொட்டி விடும் சூழ்நிலை. தேர்வு முடிந்து, மதிப்பெண் வாங்கியபின், படித்த விஷயங்கள் மாணவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை என்றாலும் நம் சமுதாயம் அதை பற்றியெல்லாம் அக்கறைப்படுவது இல்லை.

உதாரணத்திற்கு, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனிடம் அவனது மதிப்பெண் என்ன என்று கேட்போமே தவிர, அவன் என்னென்ன கற்று கொண்டான், அது சமுதாயத்திற்கும் அவனுக்கும் எப்படி பயன்பெறும் என்று பொதுவாக நம்மில் பலர் கேட்க மாட்டோம்.

மதிப்பெண் வந்தாயிற்று, அது போதும் என்று தான் பலரும் நினைக்கிறோம். மதிப்பெண்களுக்கு தான் நாம் படிக்கிறோம், மதிப்பெண்களுக்கும், ரிஸல்ட்களுக்கும் தான் பல பள்ளிகளும் ஆசிரியர்களும் பாடம் நடத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

புத்தகத்தில் உள்ள பாதி சேப்டர்களை கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து தேர்வில் கொட்டிவிட்டால் கூட, 100% மதிப்பெண்கள் எடுத்துவிடலாம் என்பதும் பலருக்கு தெரிந்த உண்மை.

எப்போது மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆராய்ச்சி முறை கல்வி, உன்மையான அறிவு வளர்க்கும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அப்போது தான் மேலை நாடுகளின் தரத்திற்கு நிகராக நம் கல்வியும் வரும்.

நாடு நிலவரம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி கொண்டிருக்கையில், நம்பிக்கை ஒளி ஏற்படுத்தும் விதத்தில் ஒரு நிகழ்வும் நடந்தது. சென்ற வாரம் புகழ் பெற்ற சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், “POSITIVE JOURNALISM – A NEW THINKING” என்ற தலைப்பில் என்னை “GUEST LECTURE” தருவதற்கு அழைத்திருந்தனர். இன்டெர்நெட் JOURNALISM பற்றி பேசுகையில், நமது B+ வெப்சைட் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் அவர்களிடம் எடுத்து கூறினேன்.

அங்கு பயில்பவர்களிடமும், தலைமை ஆசிரியரிடமும் அந்த செமினாருக்கு கிடைத்த கவனமும், உற்சாக வரவேற்பும், ஆர்வமும் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. செமினாருக்கு வந்திருந்தவர்கள் எழுதி கொடுத்த FEEDBACK, உற்சாக மருந்தாய் இருந்தது.

அதன் மூலம், இரண்டு விஷயங்கள் மிக தெளிவாக தெரிந்தது. நல்ல விஷயங்களை என்றுமே அனைத்து தரப்பு மக்களும் முழு ஈடுபாட்டுடன் ஏற்று கொள்கின்றனர். மாணவ சமுதாயம், எல்லையற்ற ஆற்றலை பெற்றுள்ளது. அவர்களை மதிப்பெண் என்ற கண்ணோட்டத்துடன் ஒரு சிறையில் பூட்டி வைத்து விடாமல், அவர்களின் எண்ணச் சிறகை பறக்க விட்டு தொலைநோக்கு பார்வையுடன், நாட்டை உண்மையான வளர்ச்சி பாதையில் செலுத்த வேண்டிய கடமை, கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பல நல்ல விஷயங்களை, எதிர் காலத்தில் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை சமாளிக்கும் முறைகளை, அவர்களுக்கு பிடித்த விதத்தில், ஆசிரியர்கள் புரியுமாறு சொல்லி தர வேண்டும்.

Intro2

இது எவ்வாறு சாத்தியம். என்ன மாதிரியான மாற்றங்கள் நம் கல்வி முறையில் தேவையாக உள்ளது என பார்க்கும் போது சில கருத்துகளை பட்டியலிடலாம். இது போன்ற பலக் கருத்துக்கள், இணையங்களிலும், பல பொது கூடல்களிலும் சமீபக் காலமாய் கேட்க முடிவதனால், கீழே குறிப்பிட்டுள்ள சில மாற்றங்கள் காலத்தின் கட்டாயமாக கூடிய விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

1)   தேர்வு மற்றும் மதிப்பெண் முறையிலிருந்து வெளிவந்து, ஒவ்வொரு மாணவனும் அவனுக்கு பிடித்த துறையை சிறு வயது முதலே கண்டுபிடிக்க வைத்து, பின் அதில் ஈடுபடுத்தி, அந்த துறையில் ஸ்பெஷலிஸ்ட் ஆக்கும் கல்வி முறை. இவ்வாறு செய்யும்போது மாணவர்கள் படிப்பை ஒரு மன அழுத்தமாக எடுத்துக்கொள்ளாமல், தங்களை முழுமையாக அர்பணிப்பர்.

2)   குழந்தைகளை மூட்டை மூட்டையாய் புத்தகமும் நோட்டுகளும் சுமக்க விடாமல் SMART CLASS கல்விமுறைக்கு மாறுதல்.

3)   இஸ்ரேல் நாட்டைப் பற்றி சமீபத்தில் WHATSAPP இல் வந்த தகவல். அந்நாட்டில், ஒரு சிறுத் தொகையை முதலீடு செய்து 15 நபர்களுக்கு கட்டாயம் வேலை கொடுத்து, அந்த தொகையை மூன்று மடங்காக பெருக்கிக் காட்டியபின்தான், ஒரு மாணவன் கல்லூரியில் சேர முடியுமாம். நாமும், குறைந்தபட்சம் வியாபாரம் தொடர்பான கல்வியில் இதுபோன்று கடைபிடிக்கலாம்.

4)   அதேப்போல் ஜப்பானைப் பற்றி சில வரிகள். அங்கு பள்ளிகளில் தினமும், குழந்தைகள் ஆசிரியர்களுடன் சேர்ந்து கால் மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனராம். அதேபோல் முதலாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கும் சமூகத்தில் பழகும் விதமும், நடத்தையும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். நம் கல்வி முறையிலும் இவற்றைக் கொண்டுவரும்போது, கண்டிப்பாக நாமே அசுத்தம் செய்யமாட்டோம்.

5)   ஏதோ ஒரு படிப்பு படித்து, பணம் சம்பாதிக்க, கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு வேலைக்கு செல்லாமல், இது தான் படிப்பு, இது தான் எதிர்காலம் என்ற திட்டமிட்டு பயிலும் கல்விமுறை.

6)   “DISCOVERY CHANNEL” தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகள் போல் சில நிகழ்ச்சிகள் எடுத்து, தயாரித்து நடத்த முடியும் என்ற நிலையை எட்டுமளவு பயிற்சியளிக்கும் கல்விமுறை.

7)   நம் கல்விமுறை மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் (CHARACTER BUILDING) விதமாய் இருத்தல் மிக முக்கியம். குறிப்பாக, தேசபக்தி, நேரம் தவறாமை, சுத்தமாக இருத்தல், சுற்றுப்புற சூழலைக் காத்தல், சுயநலமின்றி சமுதாயக் கண்ணோட்டத்துடன் இருத்தல், டிராஃபிக் விதிகளை மதித்தல், ஊணமுற்றவர்கள் மீது இரக்கம் காட்டுதல், போன்ற அடிப்படை விஷயங்களை கடைப்பிடிக்க வைக்கும் கல்விமுறை மிக அவசியம்.

சுருக்கமாக சொன்னால், கல்வி என்பது, வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும், மக்களின் மகிழ்ச்சி, சமுதாய ஒற்றுமை, பிராக்டிக்கல் அறிவு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பெருக்க கூடிய கருவியாக இருக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்க கூடுமா என சிறு சந்தேகம் வருமாயின், ISRO போன்ற நம் நிறுவனங்களின் வெற்றிப் பாதையை பார்க்கலாம். மாங்கள்யானை வெற்றிகரமாய் அனுப்பி, அதன் பணியில் ஈடுபடுத்தி, செவ்வாய் கிரஹத்தை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெயரையும், பெருமையையும் அடைந்துவிட்டோம். அப்பெரும் சாதனையையே செய்து முடித்த நம்மால், இதை செய்ய முடியாமலா போகும்?

நமது மாணவர்கள் மிகுந்த திறமைசாலிகள், சமுதாய முன்னேற்றத்திற்கான அந்த கல்வி மாற்றத்தை அவர்கள் ஏற்க தயாராக தான் இருக்கிறார்கள்.

இளைஞர்கள் கையில் இந்தியா இருக்கிறது என்பது உண்மை தான், ஆனால் அவர்கள் கையில் தரும் சாவியும் வண்டியும் சமுதாயத்தில் உள்ள நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது.

பூட்டிய சிறையினை உடைப்போம் என்ற நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM.

Likes(5)Dislikes(1)
Share
 Posted by at 1:19 am
Oct 152014
 

A1

“தரமான கல்வி தான் நாம் நாட்டிற்கு இன்று அத்தியவசமான தேவை. அது கிடைத்தால் நம் நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். ஒவ்வொரு மாணவனிடமும் ஒரு தனி சிறப்புண்டு. எந்த ஒரு தேர்வும் ஒரு மாணவனின் அறிவு திறமையை துல்லியமாக எடை போட்டு விட முடியாது. ஒரு மாணவனின் நியாபக சக்தியை எந்த ஒரு மூன்று நேர பரீட்சையும் கணித்து விட முடியாயது..”

மதிப்பென் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு, மேல்கூறியது போல் பல நச்சென்ற வரிகள், நம்பிக்கை ஊட்டும் விதைகளாய் வந்து விழுகின்றது திரு.தா.நெடுஞ்செழியன் வாயிலாக.

நாம் கேள்விபட்ட படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எல்லாம் தாண்டி பல வாய்ப்புகளும், தரமான கல்லூரிகளும், கல்வியும் நிறைய நம் நாட்டில் உள்ளது என்று அழுத்தமாக சமுதாயத்திற்கு கூறி வரும் இவரை கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளில், நிறைய தொலைக்காட்சிகளிளும் பத்திரிக்கைகளிளும் காணலாம்.

பள்ளி முடித்து உடன் நன்றாக மதிப்பெண்எடுத்தால் மருத்துவம் அல்லது பொறியியல், மதிப்பெண் நன்றாக இல்லை என்றால் வீட்டருகில் உள்ள எதாவுது தனியார் கல்லூரி என்றஎண்ணம்  இருக்கும் இன்றய சமுதாயத்தில் நீங்களும் ஒருவரா,அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்.

 

B+: வணக்கம்சார், உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.

என் பெயர் நெடுஞ்செழியன். சொந்த ஊர் மதுரை. 1986-90இல், கிண்டி காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்கில் மெக்காநிக்கல் இஞ்சினியரிங் படித்தேன். மும்பையில் சில  வருடங்கள் பணி செய்த பிறகு, சமுதாயத்திற்கு எதாவுது செய்யலாம் என்று 2004 இல் இருந்து “Technocrats India College Finder” என்ற நிறுவனத்தை துவக்கி நடத்தி வருகிறேன் அதன் வெப்சைட் www.indiacollegefinder.org

மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை குறித்தும்,இந்தியாவில்பள்ளிமுடிந்தபின்என்னென்ன கல்வி நிறுவனங்கள், வாய்ப்புகள் எந்த மாநிலத்தில்  உள்ளன, அவைகளின் தனி சிறப்பு என்ன என்று விழிப்புணர்வை எங்கள் நிறுவனம் மூலம் தந்து வருகிறோம்.

 

B+: வியாபாரம் செய்வதற்கு நிறைய துறை இருக்கும் போது, இதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

சமூகத்திற்கு ஏதாவுது பயனுள்ள வகையில் செய்ய வேண்டும் என “social entrepreneurship” செய்ய விரும்பினேன். இன்றைக்கு குழந்தைகளுக்கு நிறைய படிப்பதற்கு options உள்ளது. இப்போது பெற்றோர்கள் என்ன செய்கிறோம் என்றால், ஃபுட்‌பால் விளாயாட்டு மைதானத்திற்கு மாணவர்களை அனுப்பி விளையாட சொல்கிறோம். மாணவர்களும் கடுமையாக விளையாடி வெளியில் வந்தபிறகு தான் அவர்களிடம் “goal post” எங்குள்ளது என்றே கூறுகிறோம். அதனால் கடுமையாக உழைத்து இரண்டு வருடம் goal post எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் விளையாட, விளையாட்டின் நோக்கம் தோல்வியில் தான் முடியும். இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், மார்க்ஸ் எடுத்தால் மட்டும் தான் வாழ்க்கை, என்று ஒரு தவறான அபிப்ராயத்தில் இருக்கிறார்கள்.

கல்வி என்பது ஒட்டுமொத்த அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் பெருக்க கூடியதாக இருக்க வேண்டும். எந்த கல்லூரியில் படிக்கிறீர்கள், அங்குள்ள கல்வியின் தரம் இதெல்லாம் மிக முக்கியம். இப்போது ஹோட்டல் மேநேஜ்மென்ட் என்ற ஒரு படிப்பை எடுத்துக்கொள்வோம். சென்னையில் சாதாரண கல்லூரி ஒன்றில் இதை ஒரு மாணவன் படித்தால், எதாவுது ஒரு சிறிய ஹோட்டலில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதே படிப்பை  அரசின் IHM இன்ஸ்டிட்யூட்டில் படித்தால், ஒரு 5-ஸ்டார் ஹோட்டலில் பணி செய்யலாம். டிகிரி பெயர் ஹோட்டல் மேநேஜ்மென்ட் தான், ஆனால் எங்கு படிக்கிறோம் என்பது தான் வித்தியாசம். என்கருத்து என்னவென்றால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அறியாமையினால், அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல், அவர்களின் திறமையும் வாழ்க்கையும் வீணடிக்கப்படுகிறது.

 

B+: ஏன் குறிப்பாக கல்வி துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

இன்று குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள், நிறைய திறமை இருக்கிறது. ஆனால் அந்த திறமையை மேலும் மெருகேத்தும் சரியான நிறுவனத்திற்கு செல்வதில்லை என்பது தான் என் ஆதங்கம். நான் படித்தது ஒரு நல்ல கல்லூரி. அங்கு படித்த எங்கள் பேட்ச் 25 வருடம் கழித்து எவ்வளவு நன்றாக இருக்கிறார்கள் என ஒருபுறம் பார்க்கும் போது, எங்களை போன்றே நன்றாக படிக்கும் மற்ற மாணவர்கள் சரியில்லாத இன்ஸ்டிட்யூட் சென்று படித்ததில், கஷ்டப்படுவதையும்மறுபுறம்  பார்த்தேன். இனி அடுத்த வரும் தலைமுறைக்கும் அவர்கள் திறமைக்கேற்ற நல்ல இன்ஸ்டிட்யூட்டை காண்பிக்கலாம் என்று நினைத்தேன்.

20 வருடங்களாய் கஷ்டப்படுகிற குடும்பத்திலிருந்து வரும் ஒரு மாணவன் நல்ல கல்வியினால், அவனது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவரமுடிகிறது. அவனை சுற்றி  உள்ளவர்களும்வளர்ந்து, சமுதாயம் வளர்ச்சி பெறுகிறது.இதற்கு நல்ல கல்வியும், கல்வித்தரமும் மிக மிக முக்கியம். குழந்தைகளிடம் கல்வி என்ற பெயரில் ஒருவரும் ஏமாற்றி பணம் சம்பாதிக்ககூடாது. பணம் சம்பாதிக்க பல துறைகள் இருக்கிறது. ஆனால் கல்வி என்ற பெயரில் குழந்தைகளை ஏமாற்றினால், ஒரு நல்ல சமூகத்தை நாம் உருவாக்க தவறி விடுவோம். அதற்குதான் இந்த பயணத்தை துவக்கினோம்.

 

B+: உங்களது வேலையை பற்றி சற்று விரிவாக சொல்லுங்கள்

கல்லூரியை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று, முதலில் ஒரு புத்தகம் வெளியிட்டோம். பின்னர் அதிலிருந்து எங்களது பாதை தொடங்கி, நிறைய மாணவர்களையும் பெற்றோர்களையும்  சந்திக்கஆரம்பித்தோம். எந்த சமரசமும் செய்துகொள்ளாது, அரசு கல்வி நிறுவனங்களை, அரசு உதவியுடன் நடக்கும் அரசு சார்ந்த நிறுவனங்களை (Government aided institution) மட்டும் தான் மாணவர்களுக்கு பரிந்துரைப்போம். நாங்கள் சென்று பார்க்கும் குடும்பங்கள் பல, பொருளாதார ரீதியிலும் சற்று நலிவடைந்து இருப்பதனால், அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.

 

B+: உங்கள் பார்வையில் அரசு நிறுவனங்களில் கல்வி தரம் எவ்வாறு உள்ளது?

மிக அருமையான தரம் உள்ளது. அரசு கல்லூரிகளில் 50-60 வருட அனுபவமும், நல்ல பெயரும் உள்ளது. இதுவரை 50-60 பேட்ச் மாணவர்கள் பல நிறிவனங்களில்,  தொழிற்சாலைகளில் சென்று சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுத்துள்ளார்கள். சமீபத்தில் வந்த தனியார் கல்லூரிகளின் தரம் அரசு கல்லூரிகளின் அளவுக்கு  வரவில்லை. இதனால் தான், இத்தனை வருடங்களை தாண்டியும் அரசு கல்லூரிகளில் சேர்வதற்கான கடும் போட்டி உள்ளது. அதற்காக எல்லாஅரசு பல்கலைக்கழகமும் நன்றாக உள்ளது என்று இல்லை, பெரும்பான்மையான கல்லூரிகள் நன்றாகவே உள்ளது.

A2

B+: யாரையெல்லாம் அணுகி counseling கொடுப்பீர்கள்?

முக்கியமாக மாணவர்களையும், பெற்றோர்களையும் சென்று பார்ப்போம். ஒரு மாணவனின் வாழ்வில் அவன் பெற்றோர்கள் பங்கு ரொம்ப முக்கியம் வாய்ந்தது. ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட திறமையும் சிறு வயதிலிருந்தே பார்ப்பதினால், பெற்றோர்களுக்கு தான் அவர்களை பற்றி நன்றாக தெரியும். குழந்தைகளின் எதிர்கலாத்தில்அதிகம் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்கள் பெற்றோர்கள் தான். அதனால் மாணவர்களுடன் கண்டிப்பாக அவர்கள் பெற்றோர்களையும் சேர்த்து தான் இந்த நிகழ்ச்சியே நடத்துவோம். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் காண்பிக்கும் வெவ்வேறு துறையையும் பார்த்து பெற்றோர்களே, இந்த துறையில் எனது மகனுக்கு சிறிய வயதில் ஆர்வம் அதிகம் என்று எடுத்து சொல்வார்கள்.

 

B+: நீங்கள் சொல்லுவதையும் பரிந்துரைக்கும் படிப்புகளையும் பெற்றோர்களும் மாணவர்களும் எவ்வாறு ஏற்று கொள்வார்கள்?

கிட்டத்தட்ட அனைத்து பெற்றோர்களுமே நாங்கள் சொல்லும் கருத்துகளை ஏற்று கொள்கிறார்கள். 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கிருந்தாலும் பிரச்சினை இல்லை. 12ஆம் வகுப்பிற்குபின்சிறந்த அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் சுமார் 80 நுழைவு தேர்வு உள்ளது. இந்த 80 தேர்வுகளில், கிட்டத்தட்ட 60 தேர்வில், மதிப்பெண்களை அடிப்படையாக வைப்பதில்லை. அவர்கள் வைக்கும் நுழைவு தேர்வின் அடிப்படையில் தான் அனுமதி வழங்குகிறார்கள். 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண் இருந்தாலே போதும்.

12ஆம் வகுப்புஒரு முக்கியமான திருப்பம் என்று எவ்வாறுசொல்கிறோமோ, அதே போன்று 60 திருப்புமுனைகள் உள்ளன, இவை பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இந்த கல்லூரிகளைப் பற்றி நன்கு தெரிந்த நாங்கள் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கல்லூரிகளை பரிந்துரைப்போம். மாணவர்களுக்குள்ள பலதரப்பட்ட வாய்ப்புகளையும் அந்த துறையின் வளர்ச்சிகளையும் எடுத்துக் கூறி ஆழமான நம்பிக்கையை வளர்ப்போம்.

நாங்கள் பரிந்துரைத்த ஒரு 10 நுழைவே தேர்வை எழுதுகின்றனரெனில், எங்களது மாணவர்கள் 80 சதவீதம் பேர், ஒரு 5 தேர்வுகளாவது எளிதாக தேர்ச்சி பெற்று விடுவர். அதற்குபின் அவர்களுக்கு பிடித்த Course  மற்றும் கல்லூரியில் சேர்வதற்கு நாங்கள் அவர்களோடு பணியாற்றுவோம். 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக எடுத்த போதும், அனைத்து இந்திய அளவு தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று, அரசு கல்லூரிகளில் நுழைவு கிடைக்கும்போது அந்த மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் அளவே இருக்காது. இதையெல்லாம் நிறைய மாணவர்கள் செய்து சாதித்துள்ளனர் என்று நாங்கள் காணும் மாணவர்களிடம் எடுத்துக் கூறுவோம். ஒரு குழந்தை பரீட்சைக்கு எவ்வாறு படித்து தயார் செய்துள்ளது, அதை எவ்வாறு நியாபகம் வரவைக்கிறது, தேர்வில் எவ்வாறு எழுதுகிறது என்று உலகில் அளக்க கூடிய எந்த ஒரு கருவியும் தேர்வும் இல்லை.

 

B+: அவ்வாறு 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக எடுத்து, பின்னர் மேல் படிப்பில் சாதித்த உங்கள் மாணவர்கள் எவரேனும் பற்றி..

நிறைய இருக்கிறார்கள். ஒரு பெண் 68 சதவீதம் தான் வாங்கி எங்களிடம் வந்தார். பின்னர் அவருக்கு இந்தியாவின்  சிறந்த கல்லூரியான அஹமதாபாத்தில் உள்ள “national institute of design” இல் அனுமதி கிடைத்து அங்கே சேர்ந்தார்.

பூந்தமல்லி பார்வையற்றோர்கள் அரசு பள்ளியில் இருந்து ஒரு மாணவன். 824 மதிப்பெண், சுத்தமாக கண் பார்வையற்றவர், மூன்றாவது குருப், தமிழ் மீடியம், ஏழ்மை குடும்பம், இத்தனை சவால்களுடன் எங்களை வந்து பார்த்தார். அவருக்கு  ‘’common law“  நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தவே, அதை எழுதி, கொச்சியில் உள்ள “national university of advanced legal studies” கல்லூரியில் சேர்ந்து, மிக அதிக மதிப்பெண் எடுத்தார். அந்த course முடித்தவுடன் மேல் படிப்பிற்கு ஐயர்லாந்து நாட்டில் அனுமதி கிடைத்தது. பொருளாதார வசதி இல்லாததால், இப்போது டெல்லியீல் உள்ள “national law university“ படித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிலமையில் வேறு ஒருத்தர், 824 மதிப்பெண் எடுத்திருந்தால், எதாவுது ஒரு சாதாரண படிப்போ, சிறு கடையோ வைத்து இருந்திருப்பார். நாங்கள் பல வாய்ப்புகள் இருக்கிறது என்று அறிமுக படுத்தி, ஊக்கப்படுத்தியதால், இன்று மாபெரும் சாதனை புரிந்த நிலையில் உள்ளார்.

60% மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவர், பரோடாவில் உள்ள “MS university” இல்படிக்கிறார், இது போல் பல உதாரணங்கள், நிறைய மாணவர்களை நல்ல கல்லூரிகளில் சேர்த்துள்ளோம்.அவர்களெல்லாம் 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்துவிட்டது, இனி வாழ்க்கை அவ்வள்வுதான் என்று எங்களிடம் வந்தவர்கள். அவர்கள் அறியாமையை நீக்கி, இன்று உள்ள பல்வேறுப்பட்ட வாய்ப்புகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு பயம் நீங்கி, புது நம்பிக்கை வருகிறது. அந்த நம்பிக்கையில், நுழைவு தேர்வுகளை எழுதவைத்து வெற்றி பெற வைப்போம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு தனித்திறமை உள்ளது. அதை அவர்களுக்கு உணரச் செய்கிறோம்.

(மேலும் நிறைய கேள்விகளும் சுவாரஸ்யமான பதில்களும், மாணவர்களுக்கு தேவையான பல முக்கிய தகவல்களும் அடுத்த இதழில் தொடரும்..….)

 

வரவிருக்கும் கேள்விகளுள் சில…..

12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து எடுத்தாலும் பிரச்சினை இல்லை என்கிறீர்களா?

பெற்றோர்கள் தரப்பிலிருந்து எத்தகைய சவால்களை சந்திக்கிறீர்கள்?

நீங்கள் கிட்டத்தட்ட 20லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறோம் என்றீர்கள், அவர்களில் எத்தனை பேருக்கு இது போன்ற தகவல்கள் தெரிந்துள்ளது?

12ஆம் வகுப்பு தேர்வை விட இந்த மாதிரியான தேர்வுகளை குறி வைத்து படிக்கலாமா?

என் இந்திய அளவில் உள்ள இத்தனை நல்ல அரசு கல்வி நிறுவனங்கள் பற்றியெல்லாம் நமக்கு தெரிவதில்லை?

Likes(6)Dislikes(2)
Share
 Posted by at 1:07 am
Oct 152014
 

St1

“சைலன்ஸ்! சைலன்ஸ்! அமைதியா இருங்க. நான்தான் இனிமேல் உங்கள் வகுப்பாசிரியை. இன்று தான் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். என் பேரு நளினா.”  நான்காம் வகுப்பு ஏ பிரிவு.. அமைதியானது.

“டியர் சில்ட்ரன்! நீங்க எல்லாரும் எனக்கு செல்லம். உங்க எல்லார்கிட்டேயும் எப்போதும் அன்பா இருப்பேன். நிறைய கதை சொல்லுவேன். நிறைய விளையாட்டு சொல்லி கொடுப்பேன். நீங்க ஒவ்வொருவரும் சிறந்த மாணவர் என பேர் வாங்க வைப்பேன். ஒருத்தரை கூட அடிக்கவோ திட்டவோ மாட்டேன். சரியா?.

அந்த நிமிடமே, அந்த நொடியில், ஆசிரியை மாணவர் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது. “இந்த டீச்சர் ரொம்ப நல்லவங்க. ஜாலியாக இருப்பாங்க”  என்று நம்பிக்கை வந்து விட்டது, குட்டிகளுக்கு.

வாசலில் சிறிய சத்தம். டீச்சர் திரும்பினார். அழுக்கு சட்டை, பரட்டை தலை, பட்டன் சரியாக போடாத அரை டிராயர். அழுத முகத்துடன் ஒரு பையன். மாணவர்கள் எல்லோரும் “ஹோ” என்று சத்தம் போட்டனர். “சைலன்ஸ்! யார் நீ? என்ன வேணும்” என்று வாசலில் நின்ற சிறுவனை கேட்டார் நளினா.

அதற்குள், ஒரு முந்திரிக் கொட்டை பையன், “டீச்சர், அது மணி!. எப்போவுமே லேட்டாதான் வருவான். எதற்கெடுத்தாலும் அழுவான்” கோள்மூட்ட, சொல்லியா கொடுக்கணும் பசங்களுக்கு?

“ஏன் லேட்?” டீச்சர் மணியை வினவினார்.

“லேட்டாயிடுச்சு டீச்சர்!.” நிமிராமல் மணி பதில்.

“அதான் ஏன்னு கேக்கிறேன்?” மணி பதில் சொல்லவில்லை.

“கேக்கிறேன் இல்லே! பதில் சொல்லு!”

ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து விட்டு, மணி மீண்டும் தலை குனிந்து கொண்டான். கண்களில் கண்ணீர். உதடு அழுது விடுவேன் என துடித்தது.

“சரி சரி வந்து உட்கார். இனிமே லேட்டா வரக்கூடாது, சரியா?”

பள்ளியில் எல்லோரும் சமம் என்றாலும், இந்த பையன் கொஞ்சம் சரியில்லை என்றே தோன்றியது அவருக்கு.

மூன்று நாட்களில்அவர்கணிப்பு உறுதியானது. மணி தினமும் நேரம் கழித்தே வந்தான். பாடம் படிக்க மறுத்தான். எந்த கேள்விக்கும் பதில் தெரியவில்லை. யாருடனும் பேச விரும்பவில்லை. விளையாட்டிலும்ஆர்வம்காட்டவில்லை. “எப்படி இந்த பையன் நான்காம் வகுப்பு வரை வந்தான்? இந்த வருடம் நிச்சயம் பெயில் தான்.” எனநினைத்தார்.

நளினா, மற்ற சக ஆசிரியர்களிடம், மாணவர்களிடம் மணி பற்றி விசாரித்தார். எஸ்தர் டீச்சர் சொன்னார் “அந்த பையனை ஒன்னாம் கிளாஸ்லேருந்து தெரியும். அப்போவெல்லாம் ரொம்ப புத்திசாலி. கிளாஸ்ல முதல் மாணவன். மூணாம் கிளாஸ் படிக்கிறப்போ அவங்கம்மா தவறிட்டாங்க. அப்போலேருந்து கொஞ்சம் கொஞ்சமா மந்தமாயிட்டான். திக்கு வாய் வேறே ஆரம்பிச்சுதா, பசங்க கேலி பண்ண பண்ண, இந்த மாதிரியாயிட்டான். ரொம்ப பாவம் மணி”

நளினாவுக்கு ரொம்ப வேதனையாகிவிட்டது. “இந்த சின்ன குழந்தைக்கு இவ்வளவு கொடுமையா? அம்மா இல்லாதது, யார் பண்ணின பாவம்? இந்த பையனை போய் தப்பா நினைச்சோமே” வருந்தினார்.

“சரி, அவங்கப்பா இவனைப் பத்தி கவலைப் படறதில்லையா?” நளினா வினவினார்.

சூள் கொட்டினார் எஸ்தர். “எங்க! அவங்கப்பா கவலையை மறக்க குடிக்க ஆரம்பிச்சிட்டார். குழந்தையை மறந்திட்டார். அவரோட கூட இருக்கிற வயசான தாத்தா பாட்டிதான் அவரையும்பேரனையும் பாத்துக்கிறாங்க.”

“ஐயோ பாவமே!” வருந்தினார் நளினா. இனிமேல் மணியை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள, படிப்பு சொல்லி கொடுக்க வேண்டுமெனமுடிவெடுத்தார்.

அடுத்த நாள். மதிய உணவு நேரம். எல்லா குழந்தைகளும், ஒன்றாக உட்கார்ந்து டிபன் டப்பா திறக்க, மணி மட்டும் தனது டப்பாவுடன் தனியாக போவதை பார்த்தார் நளினா. நேராக வந்து மணியின் பக்கத்தில் அமர்ந்தார்.

“நீ என்ன கொண்டு வந்திருக்கே மணி! டப்பாவைக் காட்டு.” மணி அழ ஆரம்பித்து விட்டான்.

“பாட்டிக்கு உடம்பு சரியில்லே டீச்சர். வெறும் பிரட் ஜாம் தான்”

“அழாதே மணி, நான் 5 இட்லி கொண்டுவந்திருக்கேன். வா. சேந்து சாப்பிடலாம். நீ 2 இட்லி ! சரியா?”

“வேண்டாம் டீச்சர்! அப்ப உங்களுக்கு!”

“நான் கொஞ்சம் குண்டு இல்லையா! இளைக்கணும். 3 போறும்”

மணி முதல் தடவையாக சிரித்தான். கள்ளமற்ற சிரிப்பு. டீச்சர் கூட சேர்ந்து சாப்பிட ரொம்ப பெருமை..

அன்றிலிருந்து நளினாவும் அவனும் சேர்ந்தே சாப்பிட ஆரம்பித்தனர். மெது மெதுவா பேசவும் ஆரம்பித்தான். பேச்சு எப்போதும், இறந்து போன அவனது அம்மாவை பற்றியுமே.

நளினா மணியின் அப்பாவுடன், தாத்தா பாட்டியுடன் தனித்தனியே மணியை பற்றி பேசினார். மணியின் வளர்ப்பு பற்றி கேட்டுக் கொண்டார்.  வீட்டில் அவனிடம் பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென விவாதித்தார்.

ஒரு மாத காலத்திலேயே நல்ல முன்னேற்றம்,அவனது நடை, உடை பாவனையில். திக்குவதும் குறைந்து விட்டது. மற்ற மாணவர்களுடன் சேர, விளையாட ஆரம்பித்து விட்டான்.

வருட கடைசி வர வர, மணி வகுப்பில் முதல் மாணவனாக மாறி விட்டான். நளினாவிடம் கொள்ளை பிரியம். டீச்சர் தான் அனைத்துமாற்றத்திற்கும் காரணம் என எண்ண ஆரம்பித்து விட்டான். மற்ற மாணவர்களுக்கும், நளினா ஆசிரியையிடம் மிகுந்த அபிமானம்.

ஒரு நாள், நளினா மணியின் வீட்டு கணக்கு நோட்டை திருத்தும் போது, நோட்டில் மணியின் முத்து முத்து கையெழுத்தில் “நளினா டீச்சர் என்னோட பெஸ்ட் டீச்சர்” எழுதியிருந்ததை பார்த்தார்.

முழு வருட பரிட்சைக்கப்புறம், மணி நளினாவிடம் தனியாக வந்து, “அடுத்த வருஷம் எங்க கிளாஸ் நீங்க வர மாட்டிங்களா டீச்சர்?”  உருக்கமாக கேட்டான்.

“தெரியாது மணி, அதனாலென்ன, நான் உன்னை அடிக்கடி வந்து பாப்பேன்! நீ எப்போ வேணாலும் என்னை வந்து பாக்கலாம்! நல்லா படிக்கணும் சரியா?”

கண்கள் குளமாக, மணி கையை நீட்டினான். ஒரு பிளாஸ்டிக் மோதிரம். “இந்தாங்க டீச்சர், என்னோட ப்ரெசென்ட். இதை நீங்க பத்திரமா வச்சிக்கனும்”

“இதைவிட எனக்கு வெகுமதி என்ன வேண்டும்?” கண்கள் பணித்தன நளினாவிற்கு. மோதிரத்தை வாங்கி கொண்டு மணியை கட்டி கொண்டார்.

அடுத்த வருடம். மணி 5ம் வகுப்பில் முதல் மாணவன். விளையாட்டிலும் முதல். கோப்பை வாங்கியவுடன் நளினாவிடம் ஓடி வந்தான். “வெரி குட்”- டீச்சர் பெருமையாக. “ஆனாலும் நீங்கள் தான் என்னோட பெஸ்ட் டீச்சர்!” சொல்லிவிட்டு ஓடி விட்டான்.

வருடங்கள்பலஓடின. மணி மேல் படிப்பு, கல்லூரி என்று சென்று விட்டான். ஆனால், வருடம் தவறாமல் அவனது கடிதம்நளினாவுக்கு வரும். நிச்சயமாக அதில், “நீங்க தான் என்னோட பெஸ்ட் டீச்சர்” எனும் வாக்கியம் இருக்கும். நளினா ரொம்ப சந்தோஷப்படுவார்.

ஒரு நாள், மணியிடமிருந்து ஒரு கடிதம். “டீச்சர், உங்கள் ஆசியால்,நான் டாக்டர் பட்டம் பெற்று விட்டேன். நான் பட்டம் பெறும் போது உங்களை தான் நினைத்து கொண்டேன்.”

நளினாவுக்கு சிரிப்பு தான் வந்தது. “நான் அப்படி என்ன பண்ணி விட்டேன்!” இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஏழுவருடம் கழித்து ஒரு நாள், மணியிடமிருந்து ஒரு கல்யாண பத்திரிகை. “டீச்சர், எனக்கு கல்யாணம். மும்பையில் நடக்க இருக்கிறது.  நீங்கள் கட்டாயம் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்.இத்துடன், விமான டிக்கெட் இணைத்துள்ளேன். உங்களை உங்கள் கணவருடன் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்”

மும்பை.  கல்யாண வரவேற்பு மண்டபத்தில், நளினா,  அவரது கணவருடன், முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

கல்யாணம் முடிந்த கைய்யோடு, மணி தனது மனைவியுடன் மேடையிலிருந்து இறங்கி நளினாவிடம் வந்தான். அவரது காலில் விழுந்து வணங்கினான். “எங்களை ஆசிர்வதியுங்கள் அம்மா! உங்கள் அன்பு மட்டும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு உயர்ந்திருக்க முடியுமா?” தன் மனைவியிடம் திரும்பி “என் அம்மா எனக்கு நினைவில்லை . இவங்க தான் என்னோட அம்மா போல் என்னிடம் பாசம் காட்டினாங்க. என்னோட பெஸ்ட் டீச்சர்!”

வாழ்க்கையில் இதை விட பரிசு, பதக்கம், மரியாதை வேறு என்ன வேண்டும் அவருக்கு?  பேச வார்த்தைகள் இன்றி மணியின் தலையில் கையை வைத்து வாழ்த்தினார்.

மணி, அவரது கையைப் பார்க்கவும், அது 4ம் வகுப்பில் அவன் கொடுத்த பிளாஸ்டிக் மோதிரத்தை சுகமாக, சுமந்துக் கொண்டிருந்தது.

இருவரின் கண்களும் அவர்கள் அறியாமலே கலங்கி இருந்தது.

 

–    முரளிதரன் செளரிராஜன்

(வலையில் படித்த ஒரு உண்மை சம்பவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டக் கதை)

Likes(13)Dislikes(5)
Share
 Posted by at 12:38 am
Oct 152014
 

Iniya

 

வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டாதபோது,

புது கதவை தயாரியுங்கள்..

 

உங்களது தோல்வியிலிருந்து நீங்கள் எவ்வளவு கற்றுக்கொள்கின்றீர்களோ,

அந்த அளவு உங்கள் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது..

 

எந்த பறவை தனியாக பறக்கின்றதோ,

அதற்குதான் மிக வலுவான சிறகுகள் இருக்கும், அதனால்

உலகமே எதிர்த்து நின்றாலும்,

உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ, அதை செய்யுங்கள்..

 

தடங்கள்கள் உன்னை தடுக்க இயலாது,

துன்பங்கள் உன்னை தடுக்க இயலாது,

எந்த மனிதனாலும் உன்னை தடுக்க இயலாது,

உன்னை தடுக்க கூடிய ஒரே மனிதன் நீ மட்டும் தான்..

 

 

கடக்கப்போகும் பெரும்பாதையை கண்டு நீங்கள் வியக்கும்போது,

கடந்து வந்து பெரும் பாதையை நினைத்துப் பாருங்கள்.

சந்தித்த சவால்களையும் துன்பங்களையும் நினைத்துப் பாருங்கள்.

அனைத்து பயமும் உங்களை விட்டு ஓடிவிடும்.

நிச்சயம் உங்களால் வெல்ல முடியும்…

 

 

உங்களை முழுமையாக நம்புங்கள்

உங்களுள் உள்ளமாபெரும் ஆற்றலிற்குமுன்,

உங்கள் தடைகள் ஒன்றும் இல்லை என்பதை உணருங்கள்…

 

 

உங்கள் கனவு நினைவாக வேண்டுமெனில்

முதலில் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்

 

Likes(11)Dislikes(1)
Share
Oct 152014
 

இந்த மாத புதிர்

Puz

அந்த பள்ளியின் பீடி மாஸ்டர் டேவிட் ஜெரால்ட் ஒரு வித்தியாசமான மனிதர். மாணவர்களின் விளையாட்டு நேரத்தில், அவர்களின் வயதிற்கேற்ப மூளைக்கும் வேலை கொடுத்து விடுவார். ஒரு நாள் 11ஆம் வகுப்பு மாணவர்களின் பீடி பீரியட் வந்த போது ஒரு புதிர் விளையாட்டு வைத்தார்.

ஒரு பெரிய ட்ரம்மை எடுத்து, அதில் நிறைய பலூன்களில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார். அந்த ட்ரம்முக்கு அருகில், குட்டி வாளிகளும் இருந்தன. பசங்களை கூப்பிட்டு, அவர்களை இரு அணிகளாக பிரித்து,  விளையாட்டு விதிகளை கூறினார்.

இரண்டு அணிகளும் தனி தனியே விளையாட வேண்டும். ஒவ்வொரு அணியும் அவர்களுக்குள் கலந்து ஆலோசித்து, எத்தனை வாளி வேண்டும் எத்தனை பலூன் வேண்டும் என்று என்னிடம் கேட்டு வாங்கி கொள்ள வேண்டும். வாங்கி கொண்டபின்2 விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

வீதி1: என்னிடம் வாங்கிய ஒவ்வொரு வாளிக்குள்ளும், 4 பலூன்களை போட்டால், ஒரு வாளி மிச்சமாக இருக்கும்.

வீதி2: என்னிடம் வாங்கிய ஒவ்வொரு வாளிக்குள்ளும், 3 பலூன்களை போட்டால், ஒரு பலூன் மிச்சம் இருக்கும்.

மொத்தம் எத்தனை வாளிகள் தேவை, எத்தனை பலூன்கள் தேவை என்பதை நீங்கள் சரியாக கூற வேண்டும். எந்த அணி சரியான விடையை சொல்கிறதோ, அந்த அணி அந்த பலூன்களை எடுத்து, தோற்ற அணி மீது வீச  தொரத்துவார்கள், தோற்ற அணி ஓட வேண்டும். இது தான் போட்டி, கண்டு பிடியுங்கள் என்றார்.

சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால்,  எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும்,  அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளிவரும்…

 

 

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

சரியான பதில் – 663 ரன்கள்!!

முதல் 19 ஓவரில், முதல் ஐந்து பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறார்        – 19  x  5  x  6

முதல் 19 ஓவரில், கடைசி பந்தில் 3 ரன்கள் அடிக்கிறார்                      –  19  x  1  x  3

கடைசி (20 ஆவது ஓவரில்) 36 ரன்கள் அடிக்கிறார்.                               –   1   x  6  x  6

சரியான பதில் அளித்தவர்கள்:

  1. தியாகு, சத்தியநாதன் பாக்கியநாதன், சுஜய்

 

Likes(2)Dislikes(0)
Share
 Posted by at 12:08 am
Share
Share