Aug 152014
 

frontpage

அன்று மும்பையில் கன மழை. மாலை 6மணி. அலுவலக விஷயமாக மும்பை சென்ற நானும் எனது அலுவலக சீனியர் நண்பரும், இரவு 9:40 க்கு சென்னை செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு டாக்சியில் போய் கொண்டிருந்தோம். பொதுவாக உள்நாட்டு விமான பயணத்திற்கு, ஒரு மணி நேரம் முன்பாக செக்கின் (CHECK-IN) செய்தால் போதுமானதாக இருக்கும். அன்றைக்கு நாள் முழுதும் மழை இருந்ததனால், மும்பை ட்ராஃபிக்கில் மாட்டி, நேரமாகி விடும் என்று சீக்கிரமே விமான நிலையம் சென்று, அங்கு காத்திருக்கலாம் என்று நாங்கள் இருவரும் பேசி முடிவு செய்து கொண்டோம்.

மும்பையில் ரோட்டில் அத்தனை டிராஃபிக். மழை நேரங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ரோட்டில் போனால் தான் பிரச்சினை, லோக்கல் ரயிலில் போகலாம் என்றால், அதற்கு என்றே தனியாக பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே மும்பை ரயில்களில் போகமுடியும் போன்று, அத்தனை நெரிசல்! என்ன ஊர் இது?, எங்கு பாத்தாலும் கூட்டம், ஓட்டம்.. எப்படிதான் இங்கெல்லாம் வாழ்க்கை நடத்துகின்றனரோ என்றும், நம் சென்னையைப் பற்றி இன்னும் பெருமையாக பேசிக்கொண்டும், நானும் நண்பரும் விமான நிலையத்தை அடைந்தோம்.

மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பின் ஃப்லைட்டில் போய் அமர்ந்தோம். நண்பருக்கு ஜன்னலருகில் உள்ள சீட் கிடைத்தது, எனக்கு நடு சீட் ஒதுக்கப்பட்டிருந்தது, என் வலப்புறத்தில் உள்ள ஐல் (AISLE) சீட்டில் யார் வருகிறார்கள் என்று பார்த்தேன் (ஐல் ஸீட் என்பது நடந்து போகும் பாதையை ஒட்டி இருக்கும் சீட்) அப்போது ஐல் சீட்டில் வந்து நிதானமாய் அமர்ந்தார், அந்த 70 வயது மாமி.

ஒரு சிறிய அறிமுக புன்னகையுடன், தன்னை பிரேமா மாமி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். நானும் எனது பெயரை தெரிவித்து, நண்பரின் பெயரையும் கூறி, அவரையும் அறிமுக படுத்திவைத்தேன். பிரேமா மாமியுடன் சிறிது நேர உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து..

மாமி: “நாங்க ஒரு பத்து பேர், என் பேரன் கல்யாணத்திற்காக சென்னை தாம்பரத்திற்கு போகிறோம். நீங்க சென்னைக்கு போறேளா, அல்லது சென்னையில் இறங்கியவுடன் அங்கிருந்து தமிழ்நாட்டில் வேறு ஏதேனும் ஊருக்கு போறேளா?”.

நான்: சென்னைக்கு தான் மாமி நாங்கள் இருவரும் போறோம்.

மாமி: இங்க மும்பையில் ஒரு வாரமாக நல்ல மழை. உங்க ஊரில எப்படி?

நான்: {“என்னது உங்க ஊரா?, என்னடா ஒரு தமிழ் பேசுபவராய் இருந்துவிட்டு உங்க ஊர் என்று பிரிக்கிறாரே?” என்று சற்று திடுக்கிட்டு } “எங்க ஊரில் இப்போது மழை இல்லை மாமி, கூடிய சீக்கிரம் வரும்” என்றேன்.

மாமி: “உங்க ஊருக்கு போவதென்றால் பயமாக இருக்கு, ஒரே கசகசவென்று புழுக்கமா இருக்குமே? மழை எல்லாம் அங்கே கொஞ்சம் குறைவு தான், மரங்கள் அவ்வளவா இல்லையே, எங்க ஊரில் பாருங்கோ, நிறைய மரங்கள் இருக்கும், நிறைய மழை. நல்ல விவசாயம் பண்றோமே?”

நான்: { சற்று பொறுக்க முடியாமல் } “என்ன மாமி, உங்க ஊரு, உங்க ஊருனு சொல்றீங்க, தமிழ்நாடு உங்க ஊரு இல்லையா?”.

மாமி: “நாங்க மும்பை வந்து 60 வருடங்கள் ஆகி விட்டதுப்பா. இப்போ நேக்கு மும்பை தான் எல்லாமே, என்னை பொருத்தவரை, மும்பையை போல ஒரு வசதி வேறு எந்த இடத்திலும் கிடைக்காது, மும்பையை விட்டு என்னால வேறு ஓரிடத்தில் ஜாகை பண்ணுவதை நினைத்தும் பார்க்கமுடியாது”

என் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பருக்கும் என்னை போன்றே கோபம் வர, “எங்க ஊரில் இல்லாத வசதி அப்படி என்ன மாமி இங்குள்ளது?” என்றார்.

மாமி: ரொம்ப கூலாக, “நிறைய இருக்கு, சொல்றேன், இரண்டு பேரும் கேட்டுக்குங்கோ. மொதல்ல உங்க ஊருல சில ஆட்டோக்காரா பண்ற அழிச்சாட்டியம் இருக்கே… உலகத்தில் யார் சென்னைக்கு வந்தாலும் அத பாத்து கண்டிப்பா பயப்பட்ரா. எங்க ஊரில் அது மாதிரி எல்லாம் கிடையாது. ஆட்டோவோ, டாக்சியோ சரியான பாதை, சரியான மீட்டர் கட்டணம். வெளி ஊரிலிருந்து வந்திருக்கும் பயணி என்றெல்லாம் பார்க்கமாட்டா. ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். பஸ்ஸுக்கு காத்திருக்கும் பயணிகள் க்யூவில் நின்று பஸ் வந்தவுடன் ஒவ்வொருவராக ஏறுவா. ரோட்ரூல்ஸ மதிப்போம்.

இன்னொன்னு, ஒரு கல்யாணம் கச்சேரி போனா, மனுஷாள மனுஷா மதிப்பா. உங்க சென்னையில் பொது இடங்களில், பல பேருக்கு ஒழுங்கா மரியாதை கொடுத்துக் கூட பேச தெரில. கல்யாணத்திற்கு போகும் போது பாருங்கோ, எல்லாரும் கையிலும், கழுத்திலும் உள்ள நகைகளை தான் பாப்பா. முக்கியமாக எங்க ஊரில் ஊனமுற்றோர், பெரியவர்கள் என்றால், நிறைய மரியாதையுடன் உதவி செய்வா, பேருந்திலோ, ரயிலிலோ எல்லாரும் எழுந்து இடம் தருவா” என்றார்.

பேச்சு தொடர்ந்தது. விமானத்தில் பயணிகள் பலர் தூங்கி இருந்தனர். விமானம் விண்ணில் நல்ல உயரத்தை தொட்டிருந்தது. அத்தனை உயரத்தில் இருந்து பார்க்கையில், எல்லா ஊருமே ஒன்று தானே? எல்லைகள் எல்லாம், பூமியில் இருக்கும்போது, நம் மனத்தில் உள்ளவை தானே? இருந்தாலும் நம் சென்னையை பற்றி இப்படி வாட்டி வதைக்கிறாரே என்று கோபம் வெகுவாக வந்தது. மும்பை பற்றி மாமி சொன்ன நல்ல விஷயங்கள் ஏதும் என்னுள் ஏறவில்லை.

ntro

நான்: “என்ன மாமி, பெரிய ஊர்!? எவ்வளோ ட்ராஃபிக் மும்பையில்? கொஞ்சமாவது பாதுகாப்பு இருக்கா? தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எத்தனை இருக்கு? தமிழகம் அமைதி பூங்காவாச்சே?!”.

மாமி: “எங்கதாம்பா தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்ல? இப்போ சமீபத்தில் உங்க சென்னையில் குண்டு வச்சு ரயிலில் ஒரு பொண்ணு சாகலயா? எங்க ஊரில் நாங்க ரொம்ப பாதுகாப்பாகவே தான் ஃபீல் பண்றோம். மும்பையில எல்லா இடத்திற்கும் பெண்கள் தனியாகவே போய் வருவார்கள். ஒரு பிரச்சினையும் இல்லை” ரொம்ப ரிலாக்ஸ்டாகவே, மும்பைக்கு வக்காலத்து வாங்கினார் மாமி.

நான்: “மாமி, மும்பையில் கலாச்சாரம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது,  மால்களில் (MALLS), பொது இடங்களில் வரும் பெண்கள் எப்படி எல்லாம் ஆடைகள் அணிகின்றனர்?”

மாமி: “அப்படி இல்லப்பா, மும்பை என்பது நிறைய நாடுகள், நிறைய மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சங்கமித்துள்ள இடம், அதனால் அப்படி உடை உடுத்தினால் வித்தியாசமாக தெரியாது, ஆனா பல நூற்றாண்டுகளாய் பாரம்பரியத்திற்கு பெயர் போன சென்னையில், பிள்ளைகள் நாகரீகம் என்ற பெயரில் போடும் உடை, அந்த கலாச்சாரத்தில் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது, அதுவும் இப்போ பெண்கள் போடும் லெக்கின்ஸ்.. என்னத்த சொல்ல? கேள்வியுடன் முடித்தார்.

என்னடா இவர் எந்த பந்து போட்டாலும் பவுண்ட்ரி அடிக்கிறாரே என்றுநான்நினைக்கையில், இப்போ பாருங்க என்று என்னிடம் கண்ணை காண்பித்துவிட்டு எனது நண்பர் “மாமி, எங்க ஊரில் எவ்வளோ புனித ஸ்தலங்கள் இருக்கு! எத்தனை ஆழ்வார்கள்? எத்தனை சித்தர்கள்? எத்தனை பூண்ணிய ஆத்மாக்கள், கடைசியில் ராமேஸ்வரம் வந்துதானே ஆக வேண்டும்?” மிக அருமையாக ஒரு கூக்லீ பந்தைப் போட்டார்.

மாமி: சற்றும் சளைக்காமல், “என்ன அப்படி சொல்லிட்டேள்?, நாங்களும் அடிக்கடி காசி, ரிஷிகேஷ், ஹரித்வார் எல்லாம் போறமே, உங்களுக்கு அதெல்லாம் எத்தனை தூரம் வரும்? இங்கேயும் துளசிதாஸ், சூர்தாஸ் என எத்தனயோ மஹாபுருஷர்கள் இருந்துள்ளார்கள்..” என்றார்.

அதற்கடுத்தும் வரிசையாய் சாப்பாடு, வாழ்க்கை முறை, என எத்தனை பௌண்சர்களை நாங்கள் போட்டாலும், எல்லாத்திற்கும் பதில் கொடுத்து சிக்ஸர் சிக்ஸராய் அடித்து தள்ளினார் மாமி.

இன்னும் சிறிது நேரத்தில் விமானம் சென்னையை அடையும் என்று பணிப்பெண்கள் அறிவித்தனர். விமானமும் தாய் மண்ணிற்கு வந்து சேர்ந்தது. “வருகிறோம் மாமி”, என நானும் நண்பரும் மாமியுடன் விடை பெற்று கொண்டோம்.

வீட்டிற்கு செல்லும் வழியில், என்னுள் சில கேள்விகள். கொஞ்சம்ப டித்தால் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுவது, சற்று அதிகம் படித்தால் நாட்டை விட்டே வெளியேறுவது, இப்படி புலம் பெயர்ந்து செல்லும் பலரும், தற்போது இருக்கும் இடமே சிறந்தது என்று இருந்து விடுகின்றோம். அதைவிட முக்கியமான விஷயம், புலம் பெயர்ந்து சில வருடங்கள் வளர்ந்த நாட்டிலோ, நகரத்திலோ செட்டிலானவுடன் பழைய ஊரை பிடிக்கவில்லை என்றும், அதில் உள்ள சில குறைகளை சுட்டியும் காட்டுகின்றோம்.

உதாரணத்திற்கு மும்பையிலிருந்து அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு செல்லும் பலர், அமெரிக்கா தான் சிறந்தது என்றும் அதை விட்டு மும்பையோ, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிற்கோ திரும்ப வர இயலாது என்றும்  சொல்வதைக் கேட்கின்றோம்.

ஒருவேளை இன்னும் பல வருடங்களில் செவ்வாய் போன்ற வேற்று கிரஹத்தில் மனிதன் குடியேறலாம் என்ற சூழ்நிலை வந்துவிட்டால், அமெரிக்காவும் சரி இல்லை என்று மனிதர்கள் செவ்வாய் கிரஹம் செல்ல ஆரம்பித்து விடுவார்களோ? இதற்கு முற்று புள்ளியே கிடையாதா?

ntroo

மன நிறைவும், மகிழ்ச்சியும், மும்பையிலோ, அமெரிக்காவிலோ, செவ்வாயிலோ அல்ல, நம் மனத்திலும், நாம் வாழும் இடத்திலும், சக மனிதர்களிடம் அன்பு பாராட்டி பழகுவதிலும் தான் இருக்கிறது; ஒரு வேலை மாமி சொன்னது போன்று, அந்த சில குறைகள் நம் சென்னையில் இருக்கலாம். அதை உணர்ந்து, முழு ஈடுபாட்டுடன் அந்த குறைகளை களைய முயற்ச்சிப்போம், நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை இன்னும் அதிக படுத்திக்கொள்வோம்.

வளர்ந்த நாடுகளுக்கும், நகரங்களுக்கும் சென்று நிரந்தரமாக செட்டிலான சிலர், தாங்கள் நடந்து வந்த பாதையை மறக்காமல், சொந்த ஊருக்கும் அந்த மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவியை செய்வதை இன்றுக் கூட காணமுடிகிறது. அந்த ஊரைக் குறை சொல்லாமல், தன்னால் முடிந்தளவு, அந்த ஊரை, அம்மக்களை முன்னேற்றலாம் என சுயநலமற்ற சிந்தனை உள்ளோர்களை இன்றும் பார்க்க முடிகிறது.

நாம் வாழ்ந்த, வாழும் இடத்தை, வரும் தலைமுறைக்கு ஒரு அழகிய இடமாய்  உருவாக்குவதிலும், விட்டு செல்வதிலும் நம் அனைவருக்கும் பெரும் பங்குள்ளது.

பயணம் தொடரும்,

வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

விமல் தியாகராஜன் & B+ Team.

Likes(17)Dislikes(1)
Share
Aug 152014
 

1D

இந்த மாத B+ சாதனையாளர் பக்கத்தில், சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் திரு. S.S.ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றி பார்ப்போம். இந்திய வருவாய் துறையில், துணை இயக்குனராகப் பணி புரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று இயற்கை விவசாயத்திலும், வீட்டு தோட்டம் (KITCHEN GARDEN) அமைப்பதிலும் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் பயணம் நம்மை சற்று வியப்படையவே செய்கிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

– இவர் அலுவலகத்தில் தொங்கி கொண்டிருந்த போர்டில் எழுதி இருந்த இந்த குறளும், இயற்கை விவசாயத்தின் பலன் குறித்த பல கருத்துகளும், தகவல்களும் நம்மை பெரிதாக வரவேற்று ஈர்க்கின்றன.

“உங்கள் பால்கனியிலாவது அல்லது உங்கள் மாடியிலாவது, நீங்கள் விவசாயியாக இருங்கள்” என்று இவர் அலுவலகத்தில் குறிப்பிட்டுருந்த வசனம் நம்மை கவர்ந்து இழுத்து ஆழமாகவும் யோசிக்க வைக்கிறது.

“GOOD GOVERNANCE GUARDS” என்ற என்.ஜி.ஓ.(NGO) வை நடத்தி வரும் இவர், பல படித்த இளைஞர்களையும், விவசாயத்திற்கு அழைத்து வருவதில் பெரும் முயற்சி எடுப்பதோடு மட்டுமல்லாது, பள்ளிகள், இயற்கை விவசாய கூட்டங்கள், சமுதாய விழிப்புணர்வு அரங்கங்கள் என பல இடங்களில் தனது இயற்கை விவசாய எண்ணங்களை மக்களிடம் கொண்டு பொய் சேர்த்து வருகிறார். இனி இவரது பேட்டியிலிருந்து..

B+: வணக்கம் சார். உங்களை அறிமுக படுத்திக் கொள்ளுங்கள்.

பதில்: வணக்கம், என் பெயர் ராதாகிருஷ்ணன். 1992 இல் வருவாய் துறையில் டெப்புடி இயக்குனராகப் பணி புரிந்த எனக்கு, சென்னைக்கு மாற்றம் வந்தது. அப்போதிலிருந்து சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறேன். மக்களுக்காக ஏதாவுது சேவை செய்து ஒரு சாதனை செய்ய வேண்டும் என எண்ணி, 1995இல் வேலையை விட்டு வெளியில் வந்தேன். 1995 முதல் 2011 ஆம் ஆண்டு வரை, வருமானத்திற்காக, ஏற்றுமதி இறக்குமதி ஆலோசகர் அலுவலகம் ஆரம்பித்து நடத்தி வந்தேன். பின்னர் என் பிள்ளைகள் படிப்பு, அவர்கள் திருமணம் என என் பொறுப்புகள் அனைத்தும் முடியவே, 2011 இல் இருந்து முழு நேர சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

B+:  என்.ஜி.ஓ. ஆரம்பித்ததன் பின்னணி என்ன?

பதில்: நம்நாடு ஏழைகள் அதிகம் உள்ள நாடு. நம் மக்களின் பொருளாதாரம் உயர நாம் எதாவுது பண்ணனும்னு நினைத்தேன். யோசித்தபோது, எல்லாரும் சேர்ந்து உழைத்தால், இது சாத்தியம் என்று நம்பிக்கை வந்தது. இந்தியாவில் 125 கோடி மக்கள்உள்ளார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டல் வேண்டும். எல்லாரிடமும் தேசபக்தி இருக்கு, அதைவெளியேகொண்டுவரவேண்டும். மக்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று தான் இதை ஆரம்பித்தேன்.

B+:  எப்படி விவசாய துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்: என்.ஜி.ஓ. ஆரம்பித்து மக்களின் முக்கிய பிரச்சினை என்ன என்று பார்த்தால்,  பொருளாதாரமும், சாப்பாடும்தான் அடிப்படையாக தெரிந்தது. நமக்கு நல்ல உணவு கிடைக்காததால், பல நோய்கள் வந்து, நம் ஆரோக்கியம் தொலைந்துள்ளது.

அதனால், இயற்கையாய் காய்கறிகளை எப்படி உற்பத்தி பண்ணலாம் என்று யோசித்தேன். இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் நகரங்களில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயம் செய்கிற பொறுப்பும், சந்தர்ப்பமும்,  சரியாக கிடைக்கவில்லை. வேலை இருக்கிறது, பணம் சம்பாதிப்பார்கள்,  அங்காடிகள் போய் தனக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்வார்கள். சென்னை போன்ற நகரங்களில் உள்ள மக்களுக்கு விவசாயத்தை எப்படி கொண்டு போகலாம் என்று யோசித்தேன்.

சென்னையில், ECR ரோட்டிலிருந்து, ஆவடி வரை எடுத்தால் கூட, 1 கோடி மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்கள் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்தால், எல்லார் வீட்டிலும் “காய்கறி தோட்டம்” (TERRACE GARDEN) வைக்கலாம். மும்பை, பெங்களூர் நகரங்களில் சமீபத்தில் மக்களிடம் நல்ல சென்றடைந்த இஸ்ரேல் நாட்டின் “மண்ணில்லா விவசாய”முறையை சென்னையிலும் இப்போ கொண்டு வந்திருக்கிறோம்.

B+:   இந்த “மண்ணில்லாமுறையை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

பதில்: வழக்கமாக செய்யும் விவசாயத்தில், மண் செழுமையாக இருக்கிறதா  இல்லையா? தண்ணி இருக்கிறதா? கூலி ஆட்கள் கிடைப்பார்களா? எவ்வளவு கெமிக்கல்ஸ் உரம் போடணும்? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். ஆனால் இது முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறை (ORGANIC FARMING) ஆகும். இந்த முறையில், ஆட்கள் தேவை மிகவும் குறைவு, களை வராது, சாணியும், மண்ணும் பயன் படுத்தமாட்டோம், மண் புழு உரம், இயற்கை உரம் தான் பயன்படுத்துகின்றோம். மண்ணில்லா முறையில், விளைச்சலும் ரொம்ப வேகமாக இருக்கும்.

B+:  இந்த முறையில் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: முதலில் HDPE (POLY-ETHYLENE) கிட்டத்தட்ட பிளாஸ்டிக் போன்ற இருக்கும் இந்த பொருளில் TROUGH (பெட்டிபோல்) செய்துகொள்வோம். அதில் சாதாரண மண்ணை பயன்படுத்தாமல், தேங்காய் நாரை பதப்படுத்தி மண் போன்று மாற்றி அதை பயன்படுத்துவோம். அது கூட மண் புழு உரம் சேர்க்கிறோம் (எல்லாமே இயற்கை முறை தான்).

எவ்வளவு உரம் போட்டாலும், தண்ணீர் ஊத்தினாலும், அது இந்த பெட்டிக்குள்  தான் இருக்கும். தண்ணீரும் சீக்கிரம் காய்ந்துவிடாது. ஒரு நாள் தண்ணீர் ஊத்த வில்லை என்றாலும், அதுவே பார்த்துக் கொள்ளும். இந்த முறையில், ஒவ்வொரு தண்ணீர் துளியும், ஒவ்வொரு கிராம் இயற்கை உரமும் வீணாகாமல் செடிக்கே செல்லும். சாதாரண விவசாய முறையின் 25% தண்ணீர் இருந்தாலே போதுமானது. அது ஒரு பெரிய வித்தியாசம், சாதாரண விவசாயத்தில், நிறைய தண்ணீரும் உரமும் வீண் ஆகும். நாங்கள் மாட்டு சாணியும் பயன்படுத்தவில்லை. சாணியால் பூச்சிவரும், அதை பராமரிக்க ஆள் வேண்டும்.

இந்த முறையில் விளைச்சல் நிலமாக இருக்க வேண்டுமென அவசியம் இல்லை, எங்கே வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம். சிட்டி மட்டும் இல்லை, கிராமத்திலும் பெரிய நிலம் உள்ளவங்களும் இயற்கை விவசாயம்  பண்ணலாம். நீங்க எங்கேயாவது வெளியூர் பயணம் போனால் கூட, ஒரு ஈர துணியை போட்டு அந்த செடியை மூடிட்டால் போதும். செடி காய்ந்துவிடாது. அதற்குள் உள்ள தண்ணீரினால் அதுவே பார்த்துக்கொள்ளும்.

B+:  இந்த முறையை எங்கெல்லாம் செய்யலாம்?

பதில்: சூரிய ஒளி கிடைக்கும் எந்த திறந்த வெளியிலும் இந்த முறையில் விவசாயம் பண்ணலாம். பாறை பகுதிகளில், பாலைவனங்களில் கூட பண்ணலாம். பொதுவாக பாறை பகுதி நிலங்களை யாரும் வாங்க மாட்டார்கள். அந்த இடங்களை வாங்கி லெவல் செய்து இந்த முறையில் விவசாயம் பண்ணலாம். 1 ஏக்கருக்கு 15 லட்சம் வரை செலவு ஆகும்.

B+: உங்க வீட்டு மாடியில் உள்ள தோட்டம் பற்றி..

பதில்: என் வீட்டில் 700 சதுர அடியில் தோட்டம் போட்டுள்ளேன். நீங்கள் பார்த்த மாதிரி, அதில் எல்லா விதமான காய்கறிகளும் பயிரிட்டுள்ளேன். எல்லா பார்வையாளர்களிடமும் காண்பித்து சொல்லி கொடுக்கிறேன், சீடி(CD) தயார் செய்து எல்லாருக்கும் தருகிறேன். எவரேனும் அவர்கள் மாடியில் தோட்டம் வேண்டும் என கேட்டால், அதற்கென்று தனி குழு வைத்துள்ளேன், சென்னையில் இப்போது பல வீடுகளுக்கு எங்கள் குழு தோட்டம் போட்டு கொடுத்து இருக்கிறோம். இயற்கை உரங்களை 1கிலொ, 5கிலொ, 10கிலொ பாக்கெட்டாக தேவை படுகிறவர்களுக்கு விற்று வருகிறேன்.

சிட்டியில் உள்ள மக்களுக்கு நான் முழு தோட்டமும் மாடியில் செட் பண்ணி கொடுக்கிறேன்,  TROUGH மட்டும்இல்லை, மேலே உள்ள பச்சை நிற கூடாரம், மிகக்குறைந்த விலையில் செய்து தருகிறேன்.

பள்ளிகளில் இதை பத்தி சொல்லித் தருகின்றோம். பள்ளிகளில் இப்போத மாணவர்களுக்கு அந்த எண்ணத்தை விதைக்க வேண்டும். டாக்டர்ஆக,   பொறியாளர் ஆக வேண்டுமெனஅவர்களுக்கு குறிக்கோள்கள் உள்ளதை போல், ஒரு விவசாயி ஆக வேண்டுமென குறிக்கோள் வேண்டும்.

B+:  என்ன மாதிரியான அங்கீகாரம் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கிறது?

பதில்: டைம்ஸ் ஆப் இந்தியா, குங்குமம், சிநேகிதி என்று, பல பத்திரிகைகளிலும், செய்திதாள்களிலும் நான் செய்து கொண்டிருப்பதை எழுதிருக்கிறார்கள். 3 வருடத்தில் 33 மீடியாவில் என்னைப் பற்றி வெளியிட்டுள்ளார்கள். 2012இல்  ”ரியல்ஹீரோ”என்று ஒரு பத்திரிகை அவார்ட் கிடைத்தது, பெங்களூர் கார்டன் சிட்டி பார்மேர்ஸ் (BANGALORE GARDEN CITY FARMERS) என்னைக் கூப்பிட்டு  கௌரவித்தார்கள். http://goodgovernanceguards.com/ என்ற இணைய தளத்தில் நீங்கள் எல்லா விவரங்களையும் காணலாம். (தொடர்புக்கு: 98410 23448)

B+:  உங்க லட்சியம் எதை நோக்கி  சென்று கொண்டிருக்கிறது?

பதில்: சென்னை சிட்டியில், எல்லார் வீட்டிலும் குறைந்தது ஒரு KITCHEN GARDEN இருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே தயார் செய்ய வேண்டும். “KITCHEN GARDEN சிட்டி” என்று சென்னைக்கு பெயர் வரணும்.

மழைநீர் சேமிப்பு முறை போல், இதுவும் ஒரு கட்டாயம் ஆக வேண்டும். KITCHEN GARDEN இல்லாமல் பில்டிங் அப்ரூவல் (BUILDING APPROVAL) கொடுக்க கூடாது. முதல்வருக்கு நான் இது குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.

B+:  இந்த முறையால் மக்களுக்கு என்னென்ன பயன்?

பதில்: இதை செய்வதனால் மேல் மாடியில் உள்ளவர்கள் வீட்டிற்கு சூடுகுறையும், அதனால் ஏ.சி.யின் பயன்பாடு குறையும். சிட்டி வாழ்கையில் உள்ள காற்று மாசுகுறையும். இயற்கை முறை விவசாயத்தில் வளர்க்கபட்ட காய்கறிகள் மார்க்கெட்டில் விலை அதிகம், அது நமக்கு மிக குறைந்த விலையில் பயிரிட்டு கொள்ளலாம், நல்ல பொழுதுபோக்காகவும் அமையும்.

B+:  ஒரு சதுர மீட்டர் TROUGH வாங்கி தோட்டம் போட்டால் எவ்வளவு செலவாகும்?

பதில்: ஒரு முழு செட்டிற்கு ரூ.2300 ஆகும். கீரைகள் போட்டால், 8 இலிருந்து 10 மாதத்திற்குள் போட்ட காசை எடுத்து விடலாம். 1சதுர அடியில், 20 தினங்களுக்கு ஒரு முறை, 1கட்டு கீரை கிடைக்கும். கீரை சீக்கிரம் வரும் என்பதனால், அதை உதாரணமாய் சொல்கிறன். வெண்டி, கத்திரி என்று எந்த செடியும் போடலாம். ஒரே பெட்டியில் வித விதமான செடிகளை ஒரே நேரத்தில் போடலாம். இந்த முறையில் வளரும் காய்கறிகளை சாப்பிட்டால் எந்த நோயும் வராது.  சுகாதாரமற்ற உணவாலும் தண்ணீராலும் தான் 90% நோய் வருகிறது.

B+:  பூச்சுகள் வராமல் இருக்க என்ன செய்யணும்?

பதில்: இயற்கை உரம் இருக்கு. மெதுவாக செடியை கழுவலாம். பயோ-காஸில் வருகிற நீரை தெளித்தால் பூச்சு வராது. பூச்சு வராமல் இருக்கிறதா என்று  அவ்வப்போது பாத்துக்கொள்ள வேண்டும்.

B+:  இளைஞர்களுக்கு ஏதேனும் கருத்து..

பதில்: விவசாயம் என் வேலை இல்லை, படித்தவர்களெல்லாம் இதை செய்யகூடாது, படிக்க முடியாதவர்கள், படிப்பு வராதவர்கள் தான் விவசாயம் பண்ணனும் என்கின்ற அந்த மனநிலைமையை மாத்தனும். நமக்கு தேவையான சாப்பாட்டிற்கு நாமே விவசாயம் செய்துக்கொள்ள வேண்டும். இதை செய்ய நேரம் இல்லை என்று சொல்ல கூடாது.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் KITCHEN GARDEN வைத்துள்ளார்கள். 2008 இல் உலக பொருளாதார வீழ்ச்சி வந்தப்போது, நிறையநாட்டில் KITCHEN GARDENஐ திரும்ப பண்ணலாமா என்று யோசித்தார்கள். இந்தியா உலக அரங்கில் ஒரு துறையில் முதன்மையாக வரலாம் என்றால், அது கண்டிப்பாக விவசாயத்தில் சாத்தியம். உங்களுக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிக்கு, மார்க்கெட் போகாதீர்கள், நீங்களே பயிரிடுங்கள்.

கிராமத்தில் உள்ள விவசாயிகளை ஃப்ரீயாய் விடுங்கள். அவர்கள் பணப்பயிர்களை (தென்னை, கரும்பு, வேர்கடலை, பருத்தி) விவசாயம் செய்யட்டும். விவசாயிகள் சில சமயங்களில் தக்காளி பயிரிடுகிறார்கள். அந்த கஷ்டத்தை நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.

பெற்றோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால், குழந்தைகளும் செய்வார்கள். தேசிய பணி  ஆகும். ஆரோக்கியத்திற்கும் பயனாக இருக்கும். தொலை தூர பார்வையில் யோசிக்கணும். தலைமுறைகளாக இதை செய்யணும்.

B+:  இதில் மொத்த சமுதாயமும் ஈடுபட வேண்டுமென விரும்புகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக. ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் பெரியவர்கள், வீட்டிலிருக்கும் தாய்மார்கள், விடுமுறை மற்றும்  மாலை நேரங்களில் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கூட செய்யலாம். நல்ல படித்தவர்கள் கூட இதை எடுத்து செய்யும் பொது தான் இந்த முயற்சி அடுத்த கட்டம் போகும்.

தபால் சேகரிப்பது, பல நாட்டு காசுகள் சேகரிப்பதுபோல், இதை ஒரு பொழுதுபோக்கு பழக்கமாகவும் செய்யலாம். இது அவற்றை எல்லாம் விட அதிகம் திருப்தி தரும் ஒரு செயலாக இருக்கும். ஏனெனில், இதில் நீங்கள் இயற்கையோடு ஒன்றி விடுகிறீர்கள். ஒரு விதை விதைத்து, அது காயாகி நல்ல நிலைமைக்கு வரும் போது, நீங்கள் பூமித்தாயோடு ஒன்றாகிறீர்கள். அந்த உணர்வு உங்களுக்கு வேறு எதுவும் கொடுக்க முடியாது. இந்த இயற்கை விவசாய முறையில் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புரட்சியை கொண்டு வர வேண்டும்.

Likes(19)Dislikes(2)
Share
 Posted by at 1:06 am
Aug 152014
 

Kathai 2

திலீபன் ஒரு பி.பி.ஏ. வேலையில்லா பட்டதாரி. விவசாயக் குடும்பம். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஒரு நிறுவனம் கூட இவனை நேர்முக தேர்வுக்கு கூப்பிடவில்லை. ஆரம்ப நிலை பயிலாளர், எழுத்தர் வேலைக்கு கூட ஐந்து வருட அனுபவம் கேட்கின்ற காலம் இது.

ஆனாலும், திலீபன் மனம் தளரவில்லை. மனு மேல் மனு போட்டுக் கொண்டேயிருந்தான். போட்ட அலுவலகங்களுக்கே மீண்டும் மீண்டும். வேலை வாய்ப்பு இணையதளம், ஈமெயில் மூலமாக.

பதில் தான் ஒன்று கூட வரவேயில்லை. எதிர் பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். இப்படியிருக்க, ஒருநாள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடமிருந்து, அவனுக்கு ஒரு கடிதம் ஈமெயிலில் வந்தது.

“உங்களது மனு நிராகரிக்கப் பட்டுள்ளது…”

கூடவே அந்த ஈமெயிலில்,

“உங்கள் விண்ணப்பத்தில் நிறைய பிழைகள் உள்ளன. விண்ணப்பத்தை சரியாக எழுத முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.” என்றும் எழுதியிருந்தது.

படித்ததும், திலீபனுக்கு ஒரே எரிச்சல். வேலை கிடைக்காத நிராசையை விட, “இவனுங்க யாரு என்னை குறை சொல்ல?” எனும் எண்ணமே தலை தூக்கியது. செம கடுப்பு.

திருப்பி காய்ச்சி ஒரு கடிதம் போட, திலீபன் கையும் மனமும் துறுதுறுத்தது. உடனே மெயில் எழுதவும் ஆரம்பித்து விட்டான். கட்டிலடங்காத கோபம். தாறுமாறான எண்ணங்கள்.

“என்னோட ஆங்கிலத்தை குறை சொல்ல நீங்க யாரு? ஏன் இந்த ஆணவம்? அதுக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? வேலை இல்லைன்னா,  வேலை இல்லைன்னு சொல்றதோட மட்டும் நிறுத்திக் கொள்ளுங்க. நீங்களும், உங்க நிறுவனமும். போங்கையா போங்க. ஸ்டுபிட்!”இப்படியாக, கண்டபடி திட்டி எழுதிக் கொண்டிருந்த போது, அவன் அப்பா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.

“திலீபா! கோபமும் வெறுப்பும், ஒரு எரியற தணல் மாதிரி. கையில் கிடைச்சதை எடுத்து மற்றவர் மேல் எறியலாம்னு நினைப்போம். ஆனால் நம்ப கையை அது முதல்ல சுட்டுடும். எதையும், நிதானமா யோசனை பண்ணி செய். அவசரப்படாதே.”

அவனது ஆத்திரமும், கோபமும் கொஞ்சம் தணிந்தது. அந்த எச்.ஆர்.  சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்க கூடுமோ? தனது விண்ணப்பத்தை எடுத்து மீண்டும் படித்தான். நிறைய குறைகள் கண்ணில் பட்டன.

நமது மேலே குறைகள் வைத்துக் கொண்டு ஏன் நிறுவன அதிகாரியைத் திட்டனும்? பாவம், மீண்டும் மீண்டும் அதே போன்ற பல மனுக்களைப் பார்த்து அவர்களுக்கு அலுப்பு தட்டியிருக்கும் போல. அவர்களைத்திட்டி நமக்கு என்ன லாபம்?

பதிலை மாற்றி எழுதினான்.

“அன்புள்ள ஐயா, உங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சுட்டிகாட்டியமைக்கு வந்தனம். விண்ணப்பத்தை மாற்றி எழுதியுள்ளேன். உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.”

கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பி விட்டான்.

பத்து நாளில், அந்த நிறுவனத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு. “திலீபன்! உங்களை எங்கள் கம்பெனியில் பயிலாளர் விற்பனை அதிகாரியாக வேலை நியமனம் செய்ய உள்ளோம். நாளை, உங்கள் இறுதி நேர்முக தேர்வு. உங்கள் சான்றிதழ்களுடன், எங்களது எச்.ஆர். அலுவலகத்திற்கு நாளை வரவும். மேலும் விவரங்களுக்கு ஈமெயிலை பார்க்கவும்.”

திலீபனுக்கு ஆச்சரியம். “எப்படி? என் விண்ணப்பம் தான் முதலில் ஏற்கப் படவில்லையே?”

“நாங்கள் உங்களுக்கு அனுப்பிய ஈமெயில் தகுதிச்சுற்றிலே, சரியான முறையில் பதிலெழுதி, நீங்கள் வெற்றி பெற்றதனால், நாளை நேர் காணல். வாழ்த்துக்கள்.”

திலீபன், அப்பாவிற்கு மனதில் நன்றி சொன்னான். அப்பா படிக்காதவர் தான், ஆனால், என்ன ஒரு விவேகம் அவருக்கு!

**** முற்றும் ****

வேதாத்திரி மகரிஷி சொன்ன பொன் வரிகள்…

“எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”

 

 

–    முரளிதரன் செளரிராஜன்

 

Likes(7)Dislikes(0)
Share
Aug 152014
 

IDAY6_THDVR_1552063g

 

நேற்று……

அன்னியவன் கையில் பாரத தேசம்

இருந்த போது, நம் மக்கள்

அவலவாழ்க்கை வாழ்ந்தார்கள்.

விலை மாடுகள் போல நாடு கடத்தப்பட்டார்கள்.

எல்லாத் துயரங்களையும் நெஞ்சில் தாங்கியபடி

தினம் தினம் கண்ணீர் வடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள்.

எங்கே எம் தேசம் விடியாதா? எங்கே எம்தேசம் விடியாதா.?

சுதந்திர தாகம் மலராதா என்ற ஏக்கம்..

 

சுதந்திர வேள்வித் தீயில்,

ஆயிரம் ஆயிரம் வீரர்கள் மார்பில்

குண்டுகள் பட்டு வழிந்த இரத்தத்தில்

பிறந்தது பாரதக் கொடி,

அதுவே எங்கள் தேசத்தின் அசோகக் கொடி..

 

இன்று…….

அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம் எங்கே?

அன்றாடம் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும்

இளம் பெண்களை பாலியல் வண்கொடுமை

என்ற சொற்றொடர் தாங்கியபடி

தினம் தினம் செய்திகள்..

பெற்ற சுதந்திரம் எங்கே பெற்ற சுதந்திரம் எங்கே?

 

மீன் பிடிக்க கடலுக்கு போன மீனவன் வரும்வரை,

மனைவி கரையில் கண்ணீர் சிந்துகிறாள்

சுதந்திர நாளில் செங்கோட்டையில்

சிகப்புக் கம்பளம் விரித்து கொடி ஏற்ற,

உப்புக்கடலில் மீனவன் இரத்தம் சிகப்பாகிறது

எங்கே சுதந்திரம் புதைந்தது?

 

நாளை……

பட்டொளி வீசும் பாரதக்கொடி ஏறட்டும்

பாரத மாந்தர்கள் மகிழட்டும்

நெஞ்சினில் இனிப்பு திகட்டட்டும்

சத்திய தர்மம் நிலைக்கட்டும்

சமாதானம் நிலவட்டும்!

 

பாரத தேசத்தில் வாழ்வோருக்கும் வாழ்த்துக்கள்..

சுதந்திர தேசத்துக்காய் இன்னுரை ஈகம் செய்தோர்க்கு

வீர வணக்கம்!!!

 

 

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

(மலேசியாவில் இருந்து)

 

Likes(5)Dislikes(0)
Share
Aug 152014
 

Scared-Face

பயப்படாத மனிதர்கள் என்று யாரும் இந்த உலகில் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைக் கண்டால் பயம். சிலருக்கு பேய் என்றால் பயம், சிலருக்கு இருட்டு என்றால் பயம், சிலருக்கு பாம்பைக் கண்டால் பயம், சிலருக்கு தனிமை என்றால் பயம், சிலருக்கு மனைவியைக் கண்டால் பயம், இன்னும் ஏன், சில ஹீரோயின்களுக்கு கரப்பாம்பூச்சிகளைக் கண்டால் கூட பயம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றிற்கு பயந்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஏன் திடீரென பயத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம் என்றால், ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடையாக இருப்பது அவரவரின் பயமே. புது முயற்சிகளை நம்மில் பலர் எடுக்க  தயங்குவதற்கும், இந்த பயம் முக்கியக் காரணமாக இருக்கிறது. நம்மிடமிருக்கும் பயம் என்ற உணர்வானது நாம் செய்யும் சில செயல்களை தன்வசம் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்கின்றது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் கோபத்தின் முதற்படி இந்த பயமே.

ஒரு விஷயத்தைக் கண்டு நாம் அதிகம் பயப்படுகின்றோம் என்றால், அந்த விஷயத்தை நாம் அதிகம் சந்தித்ததில்லை, நமக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றே அர்த்தம். மிக எளிமையான ஒரு உதாரணத்துடன் ஆரம்பிப்போம்.

நம்மால் தரையில் 5 அடி தூரம் வரை தாண்ட முடியும். அதே, 30 அடுக்கு மாடி கட்டிடங்கள் இரண்டு அருகருகே உள்ளன. இரண்டிற்கும் இடையில் உள்ள இடைவெளி வெறும் மூண்றடி தான். இப்போது நம்மை முதல் கட்டிடத்தின் உச்சியிலிருந்து இன்னொன்றிற்குத் தாண்டச் சொன்னால் செய்வோமா?  இங்கு நம்மைத் தடுப்பது எது? தரையில் நம்மால் 5 அடி தாண்ட முடியும் என்ற நம்பிக்கையை ஆகாயத்தில் வெறும் மூன்றடி கூட தாண்ட முடியாத படி உடைத்தது எது? தவறி கீழே விழுந்தாலும் விழுந்து விடுவோம் என்ற பயமே.

ஒரு சின்ன கதை. ஒரு முறை ஒரு அரசர் தன் அரசவையில் ஒரு மிகப்பெரிய பாராங்கல்லை வைத்துவிட்டு, இதை யார் தூக்குகின்றனரோ அவருக்கு நூறு பொற்காசுகள் வழங்கப்படும். அப்படி தூக்க முயன்று தோற்றுவிட்டால் மூன்று கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். அனைவரும் அந்தக் கல்லின் அளவைப் பார்த்து பயந்து “இவ்வளவு பெரிய கல்லை எப்படி நம்மால் தூக்க முடியும்?” என்று போட்டியில் கலந்து கொள்ளவே வரவில்லை.

பல நாட்களாக கல் அப்படியே இருந்தது. அப்போது வந்தான் ஒரு இளைஞன் நான் தூக்குகிறேன் என்று. அவனைப் பார்த்து வியந்த அரசர் “இளைஞனே உன்னைப் பார்த்தால் அவ்வளவு பலமுள்ளவனாகவும் தெரியவில்லை. அந்தக் கல்லின் அளவைப் பார்த்தாயா? அதை உன்னால் தூக்க முடியும் என்று நம்புகிறாயா இங்கு யாருக்குமில்லாத தைரியம் உனக்கு மட்டும் எப்படி வந்தது?” என்றார். அதற்கு அந்த இளைஞன் “என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது அரசே. என்னால் இந்தக் கல்லை தூக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியே முடியாவிட்டாலும் என்ன, மூன்று கசையடிதானே, வாங்கிக் கொள்கிறேன்” என்றான்.

சரி ஆகட்டும் பாராங்கல்லை தூக்கிவிட்டு பொற்காசுகளை வாங்கிக்கொள் அல்லது கசையடி உனக்காக காத்திருக்கிறது என்றார் அரசர். அனைவரும் கூடி நிற்க இளைஞன் அந்தப் பாராங்கல்லை நெருங்கி இரண்டு புறமும் கைவைத்து முழுபலத்தையும் கொண்டுதூக்க, கல் சற்று கூட கனமில்லாமல் இருக்க, டக்கென்று அதை தலைக்கு மேல் தூக்கினான். அப்போது தான் தெரிந்தது அது பாராங்கல் அல்ல வெறும் பாராங்கல் போல வடிவமைக்கப்பட்ட ஒரு பஞ்சுமூட்டை என்று.

மக்கள் அனைவரும் ஆச்சர்யமாகப் பார்க்க, மன்னர் கைதட்டி சிரித்துக் கொண்டே கீழிறங்கிவந்து இளைஞனைப் பாராட்டினார். “எனது நாட்டுமக்களின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சோதித்துப்பார்க்கவே இப்படிச் செய்தேன். கல்லின் அளவை பார்த்து பயந்து நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட இதை தூக்க முயற்சி கூட செய்து பார்க்கவில்லை. நல்ல வேளை நீயாவது தைரியமாக வந்தாயே” என்று கூறி நூறு பொற்காசுகளை அந்த இளைஞனுக்கு அளித்தார்.

நம்மிடமிருக்கும் பயமும் இந்தப் பாராங்கல் போலத்தான். நாம் அதனை முயற்சி செய்யாதவரை அது நம்மை பயமுறுத்திக் கொண்டுதான் இருக்கும். ஒரு முறை அதனை சந்தித்துப் பாருங்கள். அப்படி பயத்தை எதிர்கொள்ளும் போது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றே ஒன்று அதனால் ஏற்படும் மிக மோசமான விளைவு என்னவாக இருக்கும்? அதனை நம்மால் எதிர்கொள்ள முடியுமா என்பதுவேயாகும். மேலே கூறப்பட்ட சம்பவத்தில், ஒருவேளை இளைஞன் கல்லைத் தூக்கவில்லை என்றால் அவனுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவு என்றால் அந்த மூன்று கசையடி மட்டுமே.

பயம் என்ற உணர்வு கண்டிப்பாக மனிதனுக்கு தேவை. ஆனால் எதற்காகப் பயப்படவேண்டும் என்ற ஒன்றை மட்டும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் பயப்படும் ஒரு விஷயம் நாம் பயப்பட வேண்டிய அளவுக்கு தகுதியுடைது தானா என்பதை முதலில் ஆராய வேண்டும். உயிர் பயம் (Fear of Death) என்பதும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் பயமும் (Fear of Survival) எல்லா மனிதர்களுக்குமுள்ள பொதுவான ஒரு பய உணர்வு. மற்றவை அனைத்தும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது. பெரும்பாலான சமயங்களில் நமக்குள் ஏற்படும் பயத்திற்கு நாமே காரணமாகின்றோம்.

பள்ளியில் படிக்கும் போது சில ஆசிரியர்களைப் பார்த்தால் பயப்படுவோம். ஏன் பயப்படுகிறோம்? அவர் அதிகம் நம்மை கேள்வி கேட்பார். கேள்வி கேட்டால் என்ன, பதில் சொன்னால் விட்டு விடுவாரல்லவா? ஆனால் நமக்கு பதில் தெரியாது எனவே அவரைப் பார்த்து நமக்கு பயம் வருகிறது. இங்கு தவறு யார் மேல் இருக்கிறது? கேள்வி கேட்கும் ஆசிரியர் மீதா இல்லை பதில் தெரியாத நம் மீதா?

வளரும்போதுள்ள அதே பழக்கமே வளர்ந்து ஒரிடத்தில் வேலைக்கு செல்லும் போதும் ஏற்படுகிறது. சிலருக்கு அவர்களது மேலதிகாரியைப் பார்த்தால் பயம். ஏன் பயப்படவேண்டும் அவரும் நம்மைப் போல் ஒருவர் ஆனால் நமக்கு முன்னால் சேர்ந்த ஒருவர். அவ்வளவு தான் வித்யாசம். எதனால் பயம் வருகிறது? அவர் கொடுத்த வேலயை நாம் முடிக்காமல் இருக்கலாம். அல்லது நமக்குத் தெரியாத எதோ ஒன்றை அவர் கேட்டுவிடுவார் என்ற பயமாக இருக்கலாம். இங்கும் யார் மீது தவறு?

பெரும்பாலான இடங்களில் நாம் நம்மைச் சரிபடுத்திக் கொள்வதன் மூலமும், நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றிய நம் அறிவைப் பலப்படுத்துவதன் மூலமுமே பல பய உணர்வுகளைத் தகர்த்தெரியலாம். பயத்தை துணிந்து எதிர்கொள்ளுங்கள். மேலே கூறியது போல ஒரு சிலவற்றைத் தவிற பெரும்பாலானவை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பயங்கள். அவற்றை நாமே உடைத்தெரிவோம்.

ஆங்கிலத்தில் பயத்திற்கு (FEAR) இரண்டு அர்த்தம் உண்டென்று கூறுவர்.

          1)  FEAR – FORGET EVERYTHING AND RUN 

          2)  FEAR – FACE EVERYTHING AND RISE.

இவை இரண்டில் பயத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பது நம் கையிலேயே உள்ளது.

கடைசியாக, “வாழ்க்கையில் பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கை ஆயிடக்கூடாது”

– முத்துசிவா

 

Likes(2)Dislikes(0)
Share
Aug 152014
 

kids

மஹாபாரதத்திலிருந்து ஒரு சின்ன சம்பவம்..

கெளரவர்களுக்கு பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் மேல் எப்போதும் பொறாமை உண்டு. பொறாமைக்கு காரணம் அவர்களுடைய குரு துரோணாச்சாரியர் அர்ஜுனன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதே. இதனை அவர்களின் குருவும் அறிவார். கௌரவர்களின் இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஒரு உபாயம் கண்டு பிடித்தார்.

துரோணர் எப்பொழுதும் மாணவர்களுடன் அருகில் உள்ள ஆற்றினில்  குளிப்பது வழக்கம். அன்று குளியல் எண்ணையை வேண்டுமென்றே  ஆசிரமத்தில் விட்டுச் சென்றார். ஆற்றங்கரையை அடைந்தவுடன், அர்ஜுனனை ஆசிரமத்திற்கு சென்று எண்ணையை எடுத்து வர சொன்னார்.

அர்ஜுனன் சென்றவுடன் துரோணர் ஒரு மந்திரம் சொல்லி ஓர் அம்பினை எய்தினார். அந்த அம்பு அருகில் இருந்த ஓர் அரச மரத்தில் உள்ள அனைத்து இலைகளிலும் துளையிட்டு துரோணரிடமே வந்து சேர்ந்தது. அனைவரும் வியப்புடன் பார்த்து கொண்டிருக்கையில், துரோணர் அந்த மந்திரத்தை ஓர் ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.

அர்ஜுனன் திரும்பி வர நேரம் ஆனதால், மாணவர்கள் அனைவரும் விளையாடச் சென்றனர். சிறிது நேரம் கழித்து அர்ஜுனன் எண்ணையுடன் திரும்பி வரவே, அனைவரும் எண்ணையை எடுத்துக் குளிக்கச் சென்று விட்டனர்.

குளித்தவுடன் குரு தியானத்தில் இருந்தார். மாணவர்கள் அனைவரும் மறுபடியும் விளையாடச் சென்றனர். சிறிது நேரம் கழித்து ஆசிரமத்திற்கு செல்லலாம் என்று கிளம்பும்போது, அந்த அரசமர இலையில் இரண்டு துளைகள் இருப்பதை பார்த்தார் துரோணர்.

இன்னொரு துளையினை யார் செய்தது என்று கேட்டார். அர்ஜுனன் முன் வந்து, “குருவே, குளித்து வந்தவுடன், அரச மர இலையில் துளை இருப்பதை பார்த்தேன், உங்களுடய வில் மற்றும் அம்பு அருகில் ஓர் ஓலை சுவடியில் மந்திரம் எழுதி இருப்பதைப் பார்த்தேன். நான் இல்லாத சமயத்தில் நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லி கொடுத்திரூப்பீர்கள் என்று எண்ணி நானும் முயற்சி செய்தேன்” என்றான்.

துரோணர் சிரித்துக்கொண்டே “இது தான் ஓர் நல்ல மாணவனுக்கு அடையாளம். எந்த ஒரு விஷயத்தையும் இன்னொருவர் சொல்லி தர வேண்டிய கட்டாயம் இல்லை. மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட மாணவர்களை அனைவரும் விரும்புவார்” என்றார்.

 –          D. சரவணன்

Likes(9)Dislikes(0)
Share
Aug 152014
 

 

puzzle final2

இந்த வருடம் சுதந்திரதினம் வெள்ளிக் கிழமை வருவதினால், மூன்று நாள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. செல்வம் தன் மகன் அர்ஜூனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு சென்று தனது பெற்றோர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று கிளம்பினார்.

அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். இந்த காலத்து மாணவர்கள் போலவே எலெக்ட்ராநிக் உலகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவன். கிராமம் அவனுக்கு பிடிக்கவில்லை. வந்ததிலிருந்தே தனது டாப்லெட்டிலும், மொபைலிலும்  நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தான். அப்போது பாட்டி அவனருகில் வந்து, “தம்பி, எப்போ பாத்தாலும் இதையே வச்சிட்டு, ஏதோ பண்ணிகிட்டு இருக்கியே, எங்களிடம்  கொஞ்சம் நேரம் பேசி விளையாடலாம்ல” என்று கேட்டார்.

அர்ஜூன் டென்ஷனாகி, “பாட்டி, இதெல்லாம் உங்களுக்கு புரியாது, நான் இதில் கேம்ஸ்  விளையாடுவேன், இணைய தளத்திற்கு செல்வேன், நண்பர்களுடன் சாட்டிங் பண்ணுவேன். எனக்கு எத்தனை அருமையாக டைம்பாஸ் ஆகும் தெரியுமா? உங்களுக்கு என்ன கேம்ஸ் தெரியும்? ஒருவேளை எனக்கு ஏற்ற மாதிரி நீங்கள் ஒரு விளையாட்டு சொல்லுங்கள், இந்த மூன்று நாளும் உங்களுடனே இருக்கிறேன்” என்று சவால் விடுத்தான்.

பாட்டி அதற்கு, “சரி தம்பி, ஒரு புதிர் சொல்கிறேன், அதற்கு விடை சொல்ல முயற்சி செய்.  ஒருவேளை உன்னால் பதில் கூற முடியவில்லை என்றால், இந்த மூன்று நாளும் நீ என்கூட தான் இருக்க வேண்டும் என்றார்”. அர்ஜூன் ரொம்ப அசால்டாக, “இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல பாட்டி, புதிரை சொல்லுங்கள்” என்றான்.

பாட்டி அந்த தெருவில் கோலிக்குண்டு விளையாடிட்டு இருந்த சிறுவர்களிடம், 10 கோலிக்குண்டுகள் வாங்கி வந்து, “அர்ஜூன், இந்த 10 கோலிக்குண்டுகளை, ஐந்து நேர் கோடுகளில் நீ அடுக்க வேண்டும், ஒவ்வொரு கோடுகளிலும் 4 கோலிக்குண்டுகள் இருக்க வேண்டும், கோடுகள் ஒன்றை ஒன்று குறுக்கிட்டு போகலாம். இது தான் புதிர், உனக்கு பத்து நிமிடம் தருகிறேன், கண்டுபிடி” என்றார்.

பலமாக யோசித்த அர்ஜூனுக்கு பதில் தெரியவில்லை. பாட்டியிடமே பதில் என்ன என்று கேட்டான். பாட்டி கொடுத்த சரியான பதில் என்ன? சரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

பழநி முதலில் 20 காசுகளையும், 7 – 13 என்று பிரித்துக் கொள்கிறான். பிறித்தபின், இடது புறத்தில் 7காசுகளும், வலது புறத்தில் 13காசுகளும் உள்ளன. பின்னர் இடது புறத்தில் உள்ள 7காசுகளையும் அப்படியே பிறட்டிப்போடுகிறான். அவ்வாறு போட்டபின், வலது புறத்திலும், இடது புறத்திலும் தலைகளின் எண்ணிக்கை ஒன்றாக இருக்கும். கீழே உள்ள அட்டவனையில் குறிப்பிட்டதைப் போன்று,  7சாத்தியங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உங்களிடம் 20காசுகள் இருந்தால், இதை முயற்சி செய்து பார்க்கவும். வரும் விடை உங்களை வியப்பில் ஆழ்த்தும்!!

 

puz

 

சரியான பதில் அளித்தவர்:

செந்தில் முத்துக்குமார்.

 

 

Likes(3)Dislikes(0)
Share
 Posted by at 12:04 am
Aug 152014
 

freedom

 

எவரின் அனுமதியுமின்றி

நீங்கள் நீங்களாகவே

இருப்பது தான்

உண்மையான சுதந்திரம்..

 

 

நீங்கள் விரும்புவதை செய்யும்போது

சுதந்திரம் பிறக்கிறது,

நீங்கள் செய்வதை விரும்பும்போது

மகிழ்ச்சி பிறக்கிறது..

 

சுதந்திரமாக செயல்பட்ட மனிதர்களால் தான்,

சரித்திரமும் சாதனையும் படைக்க முடிந்துள்ளது..

 

மற்றவர்கள் உங்களைப் பற்றி

என்ன நினைப்பார்கள் என்று

கவலைப்படாமல் இருப்பதே

மிகப்பெரிய சுதந்திரம்..

 

 

வாழ்நாள் முழுதும்

கைதியாக வாழ்வதற்கு பதில்,

சுதந்திரத்திற்காக

போராடி உயிரிழப்பது மேல்..

 

மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரமெனில்,

சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்..

 

 

எந்த மனிதன் தனது

கனவுகளைக் கைவிடாது,

அவைகளை சாத்தியமாக்கி காட்டுகிறானோ,

அவனே சுதந்திரமான மனிதன்

 

 

முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க

நம்மை நாமே கட்டுப்படுத்த தெரிந்துக் கொள்ளவேண்டும்

 

Likes(1)Dislikes(0)
Share
Share
Share