Jul 142014
 

1

தூக்கம் களைந்து, திடுக்கிட்டு எழுந்தேன். மணி அதிகாலை 4:30. என்னடா இப்படி ஒரு கனவு? 2042 ஆம் ஆண்டில் இப்படியா இருக்கும்? காற்றை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையா? நினைத்து பார்க்கவே பயமாக உள்ளதே.. புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன், தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன்.

தண்ணீரை சிறிது பருகிவிட்டு, தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை பார்த்தேன். கனவில் வந்தது சரிதான், 10-20 வருடங்களுக்கு முன், சுழற்சி முறையில் (REVERSE OSMOSIS) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையோ, பிளாஸ்டிக் பாட்டிலையோ பயண்படுத்தியது கிடையாது. ஆனாலும் இப்போது நோய்க்கிருமிகளும், வைரஸ்களும் அதிகமாகி கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. வாயில் நுழையாத பல நோய்களின் பேரையும் மாத்திரைகளையும் திணித்து கொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். எங்கும் இரசாயன மயம்.

வீடு அமைந்திருந்த தெருவில் வெட்டபடாமல் எஞ்சி இருந்த மரங்கள் வழக்கம் போல், மனிதர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தன. மனிதன்  விழிக்கும்முன் எழுந்து விடும் உயிரினங்கள், தங்களுக்குள் மனம் விட்டு பேசிக்கொண்டு, சிறகடித்துக்கு கொண்டிருந்தன. அவைகளை கூர்ந்து கவனித்தேன். கனவின் பாதிப்பு சற்றும் குறையாது இருக்கவே, மீண்டும் சில சிந்தனை ஓட்டங்கள்..

சில வருடங்களில் பெரும்பாலான பறவை இனங்கள் அழிந்து போய்விடுமோ? கைப்பேசிகள் கிராமத்தில் கூட நம்மை கூவி எழுப்பும் நிரந்தர சேவல்கள் ஆகிவிடுமோ? விளை நிலங்கள் எல்லாம், விலைக்கு விற்கப்படும் நிலங்களாக மாறி வருகிறது. சைவர்களும், அசைவர்களும் ஓரிரு  தலைமுறைகளுக்கு பின் ஒன்றாகி விடுவார்களோ? வருங்காலத்தில் அனைவருக்கும் உணவு, மாத்திரையாக தான் இருக்கக்கூடுமோ? அறுசுவை விருந்து என்பது மறைந்து, அறுசுவை மருந்து என்று ஆகக் கூடிய சூழ்நிலை வருமோ? உணவே மருந்து என்ற நேற்றைய கூற்று பொய்யாகி, மருந்தே உணவு என்று நாளைய கூற்று ஆகிவிடுமோ?

2

 

சிறுவயதில் நாம் அனுபவித்த பல நல்ல விஷயங்களையும், கள  விளையாட்டுகளையும், ஆத்மார்த்தமான உணர்வுகளையும், உறவுகளையும் இந்த தலைமுறையினர் நம் கண்ணெதிரே இழந்து வருகின்றனர். எலேக்ட்ரானிக் உலகம், இந்த தலைமுறையினரை கபளீகரம் செய்து கொண்டிருக்கையில், அடுத்த தலைமுறைகள் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு உறக்கம் போன்றவற்றைக் கூட இழந்து விடுவார்களோ?

அடுக்கடுக்காய் பல கேள்விகள். என்ன தான் பூவுலகில் நடக்கிறது? ஒரு சிறிய உதாரணம். இப்போது கூட நாம் வசிக்கும் நகரத்தை விட்டு, ஒரு மணி நேரம்  நகரத்திற்கு வெளியில் உள்ள இடங்களுக்கு சென்று பார்த்து வந்தால் அப்படி ஒரு புத்துணர்ச்சி, மனநிம்மதி!! இதற்கு முக்கிய காரணங்கள் பெருகி வரும் வாகனங்களும், அவை கக்கும் கார்பன்-மோனாக்ஸைடும், போக்குவரத்து நெரிசலும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கு ஆஸ்த்மா, தோல் ஒவ்வாமை (அலர்ஜி), நுரையீரல் நோய், கண்கள் பாதிப்பு என்று அடுக்கி கொண்டே போகுமளவிற்கு நோய்கள். அத்தனை உடல் ரீதியான கோலாருகளுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த கார்பன்-மோனாக்ஸைடு திகழ்கின்றது.

“சொந்த கிராமத்தில் போய் இரண்டு நாள் தங்கி வந்தேன், உடலும் மனமும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது தெரியுமா?” என்று நம்மிடம் நிறைய நண்பர்கள் கூற கேள்வி பட்டிருப்போம், நாமும் அதை உணர்ந்திருப்போம். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பிற்காக பெருநகரங்களை தேடி ஓடி வந்து விட்டோம், நமது  அடுத்த தலைமுறைகளுக்கு தேவைப்படும் என்று நகரங்களில் வீட்டை கடனில் (LOAN) வாங்கி, ஆயுள் முழுதும் வேலைப்பார்த்து வீட்டுக்கடன் (EMI) கட்டி கொண்டு இருக்கிறோம்.

முக்கியமான தகவல். யேல் நிறுவனம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  ஒவ்வொரு வருடமும், பல நாடுகளில், சுற்றுச்சூழல் செயல்திறன் (ENVIRONMENTAL PERFORMANCE INDEX)  எவ்வாறு உள்ளது என்று பட்டியலிட்டு வெளியிடுகிறது. மொத்தம் 178 நாடுகளில் கணக்கெடுத்ததில், நமது நாட்டிற்கு 155ஆவது இடமே கிடைத்துள்ளது வேதனையான உண்மை.

3

 

சற்று ஆழமாக யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் நன்றாகப் புலப்படும். அடுத்த தலைமுறைக்கு உண்மையான சொத்து எனும் ஒன்றை நாம் விட்டு செல்வதென்றால், கண்டிப்பாக அவை ஆரோக்கியமும், மனநிறைவும், சந்தோஷம் தரக்கூடிய சுற்றுப்புற சூழலும், நல் வாழ்க்கை முறையும் தான். சிலர் இருக்கும் வாழ்கையை தொலைத்து, அடுத்த தலைமுறைகளுக்கு என்று சொத்துகளை வாங்கி குவிப்பர், ஆனால், சில வருடங்கள் கழித்து, அந்த நகரங்களில் வாழக் கூடிய சூழ்நிலையே கிடையாது எனும் நிலை வரும்போது, அந்த சொத்துக்களுக்கு  எல்லாம் என்ன மதிப்பு இருக்கும்?

4

 

சரி என்னதான் செய்யலாம், காற்று மாசுப்படிருந்தாலோ, வசிப்பிடத்தைச் சுற்றி  குப்பையாக இருந்தாலோ, சாதாரன மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் அரசாங்கம் தானே பார்க்கவேண்டும் என நினைத்தால், நாம் பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நாம் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்து, குழந்தைகளுக்கும் கற்றுத் தர ஆரம்பிக்கவேண்டும். சிறு துளி தான் பெரும் வெள்ளம், சின்னஞ்சிறு நல்ல சேமிப்புகள் தான், நாளைய பேராபத்தை தவிர்க்கும் கேடயங்கள். அதை உணர்ந்து, நாம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய, தினமும் கடைபிடிக்க வேண்டிய, நம்மளால் செய்ய இயன்ற செயல்கள்..

1. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்து முடிக்கும் முன், 10 மரங்களாவது   பின்வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.

2. புகை பிடிப்பவர்கள், புகை பிடிப்பதை விட்டுவிடலாம் அல்லது முடிந்தளவு குறைத்துவிடலாம்.

3. மாடியிலும் வீட்டுத்தோட்டங்களிலும், சின்னஞ்சிறு செடிதொட்டிகளும், பூத்தொட்டிகளும் வளர்க்கலாம். உதாரணத்திற்கு, சோற்றுக்கற்றாழை (ALOE VERA).. இதனை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கலாம். காற்றிலிருந்து பல மாசுகளை குறைக்கும் வல்லமைகொண்ட கற்றாழையில் மருத்துவ குணங்களும் ஏராளம் உள்ளது. நம் நாட்டிலிருந்து பல கற்றாழைகள், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

4. சிலந்தி ஆளை (SPIDER PLANT), பாக்கு பனை, ஸ்நேக் பிளாண்ட் (SNAKE PLANT), மணிப் பிளாண்ட் (MONEY PLANT), மார்கினாட்டா போன்ற பல செடிகள் காற்றில் உள்ள நச்சித்தன்மையும், விஷத்தன்மையும் அகற்றுகின்றன. வீட்டில் அவைகளை வைத்தும் அழகுப் பார்க்கலாம்.

5. வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எங்காவது போக வேண்டுமென்றால், வாகனங்களை தவிர்த்து, நடந்தே செல்லலாம்.

6. ரயில், பஸ் போன்ற போக்குவரத்துகளை, அதிக அளவில் உபயோக படுத்த ஆரம்பிக்கலாம். அதுவும் தனியாக போகும் போது கண்டிப்பாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்தலாம்.

7. வாகனங்களில் தனியாக செல்வதை விட்டுவிட்டு, நண்பர்களுடனோ, அலுவலகம் செல்லும் போது கூட வேலை செய்பவர்களோடும் (CAR POOLING) செல்லலாம்.

8. பிரிட்ஜ் (FRIDGE) தண்ணீரை பயன் படுத்துவதற்கு பதில், பழையமுறையான, பானை தண்ணீரை பருகுவதும், உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

9. தேவை இல்லாதபோது, வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருள்களை அணைத்து வைத்துவிட வேண்டும். ஏஸியை (AC) முடிந்த அளவு குறைப்பது  உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

10. காகிதங்கள உபயோகத்தை முடிந்த வரை குறைத்து கொள்ளலாம்.

11. குழைந்தகளுக்கு குப்பையை குப்பைத்தொட்டியில் போட சொல்லியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் கற்றுத் தர வேண்டும். மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனியாக பிரித்து அதை சுழற்சி முறையில் பயன்படுத்துவோரிடம் தந்து பயன்பெறலாம்.

12. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளை பயன்படுத்த தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பல இயற்கை வளங்களை விரயமாக்காமல் பாதுகாக்கவேண்டும்.

நண்பர்களே, இது தவிர வேறு ஏதேனும் கருத்துக்கள் காற்று மாசுப்படுதலை தவிர்க்க உங்கள் மனதில் தோன்றினாலும், எங்களுடனும், உங்கள் நட்பு வட்டாரங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால், சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துகொள்வோம். நம்மால் இயன்ற அளவு மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்போம்.

இயற்கையை பேணிக் காப்போம், இயன்ற வரை சுற்று சூழலை மாசுபடுதலில்  இருந்து காப்போம். பசுமையான ஒரு சமுதாயத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team.

Likes(17)Dislikes(0)
Share
 Posted by at 12:53 am
Jul 142014
 

 

5

ஒரு முறை மீயாப்பூரில் [ஐதராபாத்] உள்ள எனது நண்பர் இல்லத்திற்கு சென்று இருந்தேன். அவர் வீட்டு அருகில் உள்ள மூன்று மாடி நீர் சேமிப்புத் தொட்டி அருகில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

விசாரித்ததில், திரு.ஸ்ரீநிவாசன் என்பவர், “பொட்டுக்குச்சி சோமசுந்தர சாஸ்திரி ட்ரஸ்ட்”

என்ற தொண்டு நிறுவனத்தை அங்கு நடத்தி வருகிறார் என்றும், அந்நீர் தொட்டி, வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் மாணவர்களுக்கு ஓர் டியுஷன் சென்டராக பயன் படுகிறது என்றும் தெரியவந்தது. அது மட்டுமில்லாமல், பல பொறியாளர்களை உருவாக்கும் பட்டறையாகவும் உள்ளது என்ற தகவலும் கிடைத்தது.

மிகவும் ஆச்சரியமான ஒரு சேவையாக இருக்கிறதே! என்றுத் தோன்றவும், நமது B+ பற்றியும், அவரின் சேவையைப் பற்றியும், B+ இதழில் எழுத அவரை சந்திக்கலாமா என்று கேட்டவுடன், உடனே ஒத்துக்கொண்டார். அந்த பேட்டியே இந்த பதிவு.

B+: ஐயா, உங்கள் ட்ரஸ்ட் பற்றி எங்கள் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துங்களேன்.

ஸ்ரீநிவாசன்:  “நான் இந்த ட்ரஸ்ட்டின் நிர்வாகி மற்றும் தலைவர். இந்த ட்ரஸ்ட்டின் குறிக்கோள் வறுமை கோட்டிற்கு கீழிருக்கும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, தொழிற்கல்வி கொடுத்து, அவர்களை  வறுமை கோட்டிற்கு மேல் கொண்டுவரவேண்டும் என்பது தான்.”

B+: உங்களைப் பற்றி, உங்கள் குடும்பத்தைப் பற்றி, இந்த ட்ரஸ்ட்டை தொடங்க வேண்டிய எண்ணம் ஏற்பட்ட நிகழ்வு பற்றியும் சில வரிகள்..

ஸ்ரீநிவாசன்: “எனது பூர்விகம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி கிராமம். எனது தந்தையார் மாநில மற்றும் தேசிய அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றவர். (சிரித்துக் கொண்டே..)ஆனால் எனக்கு படிப்பு ஏறவில்லை. நான் ஐ.டி.ஐ படித்துவிட்டு ஓர் பன்னாட்டு உற்பத்தி தொழிற்சாலையில் மெஷினிஸ்டாக (MACHINIST) வேலை செய்யத் தொடங்கினேன். பிறகு தொலைதூர கல்வி முறையில் எனது படிப்பைத் தொடர்ந்தேன். 1990-இல் எனக்கு திருமணம் ஆனது. நானும் எனது மனைவியும் எங்களுக்கென்று குழந்தைகள் தேவை இல்லை என முடிவு செய்து, சிறு சிறு சமுதாயப் பணிகள் செய்யத் தொடங்கினோம்.

என்னுடய தந்தை காலமான பின் வந்த முதல் நினைவு தினத்தில்(திதி) ஏழைக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று எண்ணி எனது வீட்டின் அருகினில் உள்ள அரசு பள்ளிக்குச் சென்றேன். அதன் பின் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் பணியில் இருந்து விருப்ப ஓய்வுப் பெற்று வெளியில் வந்து இந்த ட்ரஸ்ட் நடத்தி வருகிறேன்.”

B+: என்ன நிகழ்வு என்ன காரணம் என்று சிறிது விவரமாக சொல்ல முடியுமா?

ஸ்ரீநிவாசன்: “கண்டிப்பாக. என் தந்தையின் நினைவு தினத்தன்று எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா மற்றும் சில பொருட்கள் கொடுத்து வீடு திரும்பினேன். ஒரு வாரம் கழித்து அந்த மாணவர்களை சந்தித்து நான் கொடுத்த பொருட்களினால் ஏதாவது நன்மை இருக்கிறதா என தெரிந்து கொள்ள அந்த பள்ளிக்குச் சென்றேன்.

அவர்கள் கல்வி பயில நான் கொடுத்த பொருட்கள் ஒன்றும் உதவி செய்யவில்லை என்றுத் தெரியவந்தது. ஏனென்றால், அவர்கள் படிக்க முடியாததற்கு காரணம் அவர்கள் வாழும் சூழல் தானே தவிர பொருட்கள் இல்லாமை அல்ல என்று விளங்கியது. எனவே, அவர்கள் படிப்பதற்கு ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் விளைவே 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ட்ரஸ்ட்.”

B+:  படிப்பதற்கான சூழல் என்றால்? கொஞ்சம் விளக்கமாக சொலுங்களேன்.

ஸ்ரீநிவாசன்: “பெற்றோர்களுக்குக் கல்வியின் அவசியம் தெரியாதக் காரணத்தினாலோ,  வறுமையின் காரணத்தினாலோ இந்த மாணவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் வேறு வேலைக்கு அனுப்ப படுகிறார்கள். பெண் பிள்ளைகள் அம்மாவுடன் வேறு வீடு வேலை செய்யவேண்டி வரும், ஆண் பிள்ளைகள் அப்பாவுடன் கடைகளுக்கு செல்ல வேண்டிவரும். இல்லையெனில் வீட்டில் மின்சாரம் இருக்காது, அக்கம் பக்கத்தில் குடித்து விட்டு வருபவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் என பல விஷயங்களால் ஏழ்மையினில் உள்ள மாணவர்கள் படிப்பினில் கவனம் செலுத்த முடிவதில்லை. இந்த பிரச்சினையை எங்கள் ட்ரஸ்ட் முடிந்த அளவிற்கு சரி செய்ய முயற்சிக்கிறது.”

B+: ட்ரஸ்டில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தின நிகழ்வுகள் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஸ்ரீநிவாசன்: “ஒன்பதாம் வகுப்பு அறையாண்டுத் தேர்விற்குப் பிறகு மாணவர்களை எங்கள் ட்ரஸ்டிற்கு அழைக்கிறோம். பள்ளி முடிந்து தினமும் 3 முதல் 4 மணிநேரம் வரை இங்கு வந்து படிக்க வேண்டும். இங்குள்ள ஆசிரியர்களும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். சனி, ஞாயிறு, மற்றும் அனைத்து விடுமுறை நாட்களிலும் இங்கு வந்து விட வேண்டும். 10ம் வகுப்புத் தேர்விற்க்கும் பயிற்சி கொடுக்கிறோம். 10ம் வகுப்பு முடித்தவுடன், அரசு பாலிடெக்னிக்கில் சேர நுழைவு தேர்வு பயிற்சி அளித்து, அத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றால், அவர்களை பாலிடெக்னிக்கில் சேர்த்து விடுகிறோம். பாலிடெக்னிக் ஃபீஸ் ட்ரஸ்ட்டே கட்டிவிடும். பாலிடெக்னிக் முடித்த உடன், அதிக மதிப்பெண் இருந்தால் அரசு பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வு எழுதி சேர பயிற்சி கொடுக்கிறோம்.

ஆக, இந்த ட்ரஸ்ட்டிற்கு ஒரு மாணவன் 9ம் வகுப்பில் வந்து ஒழுங்காக படித்தால் பாலிடெக்னிக் அல்லது பொறியியல் கல்லூரி படிப்பு வரை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.”

B+: பள்ளி முடிந்து இங்கு வந்து தினமும் 3 முதல் 4 மணிநேரம் வரை இங்கு படிக்க வேண்டும் என்றால், மாணவர்கள் 6 அல்லது 7 மணிக்குத்தான் வீட்டிற்கு கிளம்புவார்களா? கொஞ்சம் கஷ்டம் இல்லயா?

ஸ்ரீநிவாசன்: “கஷ்டம் தான். கஷ்டப் படாமல் என்ன கிடைக்கும். இங்கு வரும் மாணவர்களுக்கு மாலையில் டீ, பிஸ்கட் மற்றும் இரவு உணவு கொடுத்தே வீட்டிற்கு அனுப்புகிறோம். வீட்டிற்கு குறிப்பிட்ட தூரம் வரை ஆட்டோவில் கொண்டு விடுகிறோம்.”

B+: நீங்கள் கூப்பிட்டவுடன் மாணவர்கள் வருகிறார்களா??

ஸ்ரீநிவாசன்: “தொடக்க காலத்தில் யாரும் வரவில்லை. நான் தினமும் அவர்களின் வீட்டிற்கு சென்று கல்வியின் அவசியத்தை எடுத்து சொல்லி பல அவமானங்கள் மற்றும் சிரமங்களுக்குப் பின் சிலர் வந்தனர். எங்களின் நோக்கம் உண்மையானது என்றும் அவர்களிடம் சில குறைகள் உள்ளது என்றும் புரிய ஆரம்பித்ததும்  வர ஆரம்பித்தனர்.”

6

B+: இப்போது எத்தனை மாணவர்கள் உங்கள் ட்ரஸ்டிர்க்யூ வருகிறார்கள்?

ஸ்ரீநிவாசன்: “350 மாணவர்கள்.”

B+: உங்கள் ட்ரஸ்டிற்கு ஆகும் செலவு பற்றி சொல்ல முடியுமா?

ஸ்ரீநிவாசன்: “உணவு, போக்குவரத்து, கரண்ட் பில், ஃபீஸ், மற்றும் ஆசிரியர் சம்பளம்.”

 

B+: இந்த செலவிற்கு வருமானம்?

ஸ்ரீநிவாசன்: “நான் இங்கு கடந்த 25 ஆண்டுகளாக உள்ளேன். 17 வருடங்களுக்கு மேலாக என் வேலையை இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாத மாதம் நன்கொடைப் பெற்றே இந்த பணியினை செய்கிறேன். இப்பொழுது நாகார்ஜுனா ஃபௌண்டேஷன் [Nagarjuna Foundation] மற்றும் யூத் ஃபார் சேவா [Youth For Sewa] போன்ற  அமைப்புகள் வெல்ஸ்ஃபார்கோ (Wellsforgo) போன்ற சில நிறுவனங்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளது.

உங்கள் நேயர்கள் கூட எங்களுக்கு உதவ விரும்பினால் எங்கள் வெப் சைட்டினைப் http://www.psstrust.org/ பார்க்கவும். இந்த வலைதளம் எங்கள் மாணவர்களால் உருவாக்கப் பட்டது

அதில் பிழைகள்இருக்கலாம்பொய்இருக்காது.

B+: ஐயா, நமது உரையாடலை bepositivetamil.com என்னும் தமிழ் இனைய இதழில் வெளியிடுவேன். எங்கள் தமிழ் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

ஸ்ரீநிவாசன்: “கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய மனிதன் கிடையது. மேலும் மொழி என்பது கருத்தைப் பரிமாறி கொள்ளத் தானே தவிர மோதிக் கொள்ள அல்ல. தமிழர், தெலுங்கர், இந்திகாரர் என எந்த பெயரிட்டு அழைத்தாலும் நாம் மனிதர்களே. எனவே சக மனிதனை மனிதனாக பாவித்து அவர்கள் கஷ்டப்பட்டால் நம்மால் முடிந்த அளவிற்கு உதவுவேன் என்ற எண்ணத்தை கொண்டால் இந்த நாடும் உலகமும் விரைவில் மாறும் என்று நினைக்கிறேன்.”

Likes(4)Dislikes(0)
Share
Jul 142014
 

7

மனைவியின் அமைதியான நிலைக்குத்திய பார்வையே மனக்கண்ணில் வந்து என்னை குற்றவாளியாக்கி கேள்விகள் கேட்டது. மௌனத்திற்கு வார்த்தைகளைவிட அர்த்தமும் வலிமையையும் உண்டு என்று புரிந்தது. மனைவியின் அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தேன். மனமோ பல நாட்களுக்கு முன்பு சங்கருடன் நடந்த நிகழ்விற்கு தாவியது.

“என்ன சங்கர், அந்த A1 கேர் ஹாஸ்பிடல் பத்தின ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம்ன்னு சொல்லியும் தயாரிச்சி என்கிட்டேயே கொண்டுவந்து தந்திருக்கீங்க?” மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி தரும் அரசு அதிகாரி என்ற முறையில் வந்த அறிக்கையை பார்த்து கேள்விகேட்டேன்.

“சார், அந்த ஹாஸ்பிடலில் புதுசா வந்த, பல பன்னாட்டு, உள்நாட்டு மருத்துகளையும் மனுஷங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறாங்க. சிலபேருக்கு சொல்லிட்டு அவங்க சம்மதத்தோடு மருந்தை போட்டாலும் முழுசா அதோட பக்கவிளைவுகளை சொல்லறதில்லை.. நம் மக்களும் டாக்டர தெய்வமாய் பாக்கறாங்க. அந்த நம்பிக்கையை இப்படி துர்உபயோகப்படுத்தி உயிரோட விளையாடலாமா? மிருகங்களுக்கு இப்படி தந்தாலே அதற்கென்று கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கு.”

“கூல் டவுன்… என்ன நீங்க இதுக்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க? நீங்க என்னதான் ரிப்போர்ட் பண்ணாலும் அவங்களோட பணபலம், ஆள்பலம் இதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடும். பணம், பொருள் இப்படி எது வேணும்னாலும் கேளுங்க கிடைக்கும்.”

“எப்படி சார், நீங்களே இப்படி பேசறீங்க? பணத்திற்கு வணங்கி தப்பான காரியங்களுக்கு துணைபோவது சரியா? ச்சே…. மண்ணை அழிச்சோம் பசுமை புரட்சிங்கற பேருல நம்மோட தானியங்களையும் இயற்கை விவசாயத்தையும் பின்னுக்கு தள்ளிட்டோம். அதோட நிக்காம நீர் நிலைகளை அழிச்சோம், மலைகளை அழிச்சோம், மனிதர்களையும் அழிக்கறோம்.. இப்போ. இப்படியே போனா எல்லாமே அழிஞ்சுபோய் கடைசியில் நாமே அழிவோம்.” என்ற சங்கர் என் கண்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தான்.

“எப்படியும் நீங்களோ நானோ அந்த ஹாஸ்பிடலுக்கு போகபோறதில்லை. யாரு எப்படி போனா உங்களுக்கு என்ன? நீங்க இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசறதுனாலதான் உங்களுக்கு அடிக்கடி வேற வேற எடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. எப்படியும் என்னோட கையெழுத்து இல்லாம உங்க ரிபோர்ட்க்கு மதிப்பில்லை. சோ நீங்க போகலாம்” சங்கரின் கண்முன்னேயே அந்த ரிப்போர்ட்டை கிழித்து குப்பையில் சேர்த்தேன்.

என் தவறான செயலுக்கான பிரதிபலன் கிடைத்தது. அதன் விலையும் புரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியே சென்ற என் மனைவி சாலையில் மயங்கி விழவே, பொது மக்கள் அருகிலிருந்த A1 கேர் ஹாஸ்பிடலில் அவளை சேர்த்து, எனக்கு ஃபோனும் செய்தார்கள்.

“ஷிட், அந்த ஹாஸ்பிடலிலா?” கைபேசியை வைத்துவிட்டு மனம் நிலைக்கொள்ளாமல் ஹாஸ்பிடலுக்கு வந்த போது எல்லாமே நிகழ்ந்து விட்டது.

“சார், இது புதிதாக பரவி வரும் நோய், லேசான காய்ச்சலில் தொடங்கி, பின் காய்ச்சல் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் இந்த மருந்தைத் தான் தருகிறோம்” என ஹாஸ்பிடலில் தெரிவித்தார்கள்.

மனைவியின் உடலில் எவ்வித உணர்வும் அசைவும் இல்லை; நினைவும் இல்லை. மூச்சு மட்டும் “நான் உயிருடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துக்கொண்டு இருந்தது.

மனைவியின் நிலையை பார்த்து பித்து பிடித்தது போல் நேராக ஹாஸ்பிடல்  மேலிடத்திற்கு சென்றேன் “டாக்டர், நீங்க எப்படி என்னோட மனைவிக்கு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் அந்த மருந்தை கொடுக்கலாம்? அந்த மருந்து இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை.”

“வாங்க மிஸ்டர், வாங்க. எங்களுக்கு எப்படி அது உங்க மனைவின்னு தெரியும்? என்று இளக்காரமாக அவர் கேட்டப்போது எனக்கு சுட்டது.

“ஸ்டாப் இட். என்ன பேசறீங்க. நான் இதை சும்மா விடபோறதில்லை”

“ஹா ஹா ஹா. கம் ஆன். குட் ஜோக். நீங்களே எங்க ஹாஸ்பிடல் பத்தி நல்ல ரிப்போர்ட் குடுத்து இருக்கீங்க. சட்டப்படி எங்க போனாலும் நாங்க தான் ஜெயிப்போம். உங்கள மாதிரி சுயநலமானவங்க இருக்கற வரை நாங்க எங்கேயும் எப்போதும் ஜெயிப்போம். இப்பவும் நீங்க எங்களுக்கு வேண்டிய ஆளா இருக்கறதாலதான் உங்க மனைவிய வேற எடத்துக்கு கொண்டுபோக சம்மதிக்கறோம்.”

எப்படியோ அங்கிருந்து என் மனைவியை வேறொரு நல்ல மருத்துவமனைக்கு கொண்டு போனாலே போதும் என்ற நிலையில் வெளியேறினோம்.

“உங்க மனைவியோட ரிப்போர்ட் கிளியரா இல்லை. மொதல்ல என்ன காரணம்ன்னு தெரிஞ்சாதானே சரி பண்ண முடியும். இப்போ ஒரே ஆறுதல் உயிரோட இருக்காங்க. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ஆண்டவன் துணையிருப்பார், அவரை நம்புங்க.” என்று கூறி சென்ற மருத்துவரை பார்த்தேன். காரணம் அறிந்தும் சொல்ல முடியாத நிலை.

அன்று சங்கர் கூறிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும், ஆதங்கமும், வலியும் இன்று புரிந்தது. ஜீவச்சவமாக இருக்கும் மனைவி எனக்கு போதிமரம் ஆனாள். மனைவியின் இந்த முகமே எனக்கு தண்டனை ஆனது. நான் செய்த காரியம் என் மக்களுக்கும் மனைவிக்கும் தெரிந்திருந்தால்….மனம் வலித்தது.

நானே என்னைப்பார்த்து அருவருப்பானேன். என் மனம் உள்ளிருந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது “இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும். இதுவரை இதுபோல் எவ்வளவு குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும்? எத்தனையோ குடும்பங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் அழிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.” என் மனம் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கும் என்னிடம் பதில்லை. பல நேரம் யோசித்து முடிவு செய்தேன்.

“சங்கர், கொஞ்சம் வரமுடியுமா?”

“எனக்கு இப்போதான் புரியுது உங்க வார்த்தைகளுக்கான அர்த்தம். என்னையே என்னால மன்னிக்க முடியல, செய்த காரியம் அப்படி. நானும் உங்க கூட இருக்கேன். எங்கெங்கே ஓட்டைகள் இருக்குன்னு எனக்கு அத்துபடி. இனி உங்கள மாதிரி குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு நான் தப்பிக்கும் ஓட்டைகளை காட்டறேன். நீங்க அதை அடைச்சா கண்டிப்பா இதுபோல் சம்பவங்கள் குறைந்து பின்பு இல்லாமலே போய்விடும்.” என்று கூறியவாறு என் மனைவியை பார்த்தேன், அந்த வெறித்த பார்வையின் குத்தல் சற்று குறைந்ததுபோல் இருந்தது.

எண்ணமும் செயலும் தான் வாழ்வை வழிநடத்தும் என்பது நன்கு புரிந்தது. கண்டிப்பாக இப்புதிய சிந்தனை என் மனைவியை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் நான் சுயநலமில்லா நல்ல மனிதர்களுடன் இணைந்தேன்.

விஜி சுஷில்

(நமது B+ வாசகர்)

Likes(4)Dislikes(1)
Share
 Posted by at 12:37 am
Jul 142014
 

8

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்து

மூவைந்து மாதங்கள்
பாலூட்டி சீராட்டி

நாலைந்து மாதங்கள்
நடைபயிற்று

ஐந்தைந்து மாதங்கள்
பிணி நீக்கி பேணி காத்து

ஆறைந்து மாதங்கள்
பசி மறந்து

ஏழைந்து மாதங்கள்
பள்ளி அனுப்பி

எனை மேதையாக்க பேதையாய் நீ
இருந்து என் கனவுகளை நீ சுமந்து

நிசங்களை எனக்களித்து
நிதர்சனமற்று  போனாலும்
நெறிகெட்டு நான் போகா வண்ணம்
காத்திட்ட என் தாயே

மீண்டும் ஒரு முறை  எனை சுமப்பாயா
கல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட துடிக்கிறேன்…! 

– கவிஞர் காமராசு

Likes(11)Dislikes(1)
Share
Jul 142014
 

9

 

பழநி அந்த கல்லூரியில் வித்தியாசமாக சிந்திக்கும் சில மாணவர்களில் ஒருவன். புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து விட்டு பரிட்சையில் போய் கொட்டிவிடும் (வாந்தி எடுக்கும்) முறையை விரும்பாத மாணவன்.

சில ஆசிரியர்களுக்கு இதனால் அவனை புடிக்காது, அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள் கணக்கு பரீட்சையின்போது, வீட்டில் ஒரு அசம்பாவிதம் ஆகியதால், பழநி சற்று கால தாமதமாய் பரீட்சை எழுத வந்தான்.

கணக்கு ஆசிரியர் அவனிடம் சிரித்துகொண்டே, “என்ன தம்பி மாடிகொண்டாயா? ஒரு சிறு விளையாட்டு, உனக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை நேரம் தருவேன், அதில் நீ ஜெயித்து விட்டால், உனக்கு மொத்த பரீட்சை நேரமும் கிடைக்கும், நீ எழுதலாம்” என்கிறார். பழநியும் சரி என்று கூறி சவாலுக்கு தயாராகிறான்.

அவனை ஒரு இருட்டு அறையில் கூட்டிச் சென்று, “பழநி, உன் முன்னாடி ஒரு பெரிய மேசை இருக்கிறது. அதில் 20 ஒரு ரூபாய் காசுகள் உள்ளன. அந்த காசுகளை மேசையின் மீது இருந்து பார்க்கையில், 7 காசுகளில் தலையும், மற்ற 13 காசுகளில் பூவும் தெரியும்.” ஆசிரயர் பழனியிடம் மேலும் விதிகளை கூறுகிறார்.

விதி1: “மொத்த காசுகளையும் நீ இரண்டு பங்குகளாக பிரிக்க வேண்டும். சம பங்காக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு, ஒரு புறம் 5 ஐந்து காசுகள் இருக்கலாம், அடுத்த புறம் 15 காசுகள் இருக்கலாம். அல்லது ஒரு புறம் 8 காசுகள் இருக்கலாம், அடுத்த புறம் 12 காசுகள் இருக்கலாம். ஒரு புறம் எத்தனை காசுகள் வேண்டுமானாலும் இருக்கலாம், 20 இல் மீதி அடுத்த புறத்தில் இருக்கும்.”

விதி2: “இரண்டாகப் பிரித்தபின், காசுகளை, இரு பகுதிகளிலும் எவ்வாறு வேண்டுமானாலும் பிரட்டி போட்டுக்கொள்ளலாம். (அதாவது, நம்மை நோக்கி பூ இருக்கிற காசைப் பிரட்டினால் தலையும், தலை இருக்கிற காசைப் பிரட்டினால் பூவும் இருக்கும்.) இருட்டில் பூ இருக்கிறதா, தலை இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது. போட்டியின் முடிவில், அறைக்குள் வெளிச்சம் வரும். அப்போது இரண்டு புறமும் தலைகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு புறத்தில் எத்தனை தலைகள் இருக்கிறதோ, அதே அளவு அடுத்த புறத்திலும் இருக்க வேண்டும்.”

விதி3: “காசுகளை கையால் தடவி பார்த்து, பூவா தலையா என்று கண்டு பிடிக்க முடியாது. ஒரு லாஜிக்கும் (LOGIC), அதை செய்வதற்கு ஒரு வழிமுறையும் இருக்கிறது. அதை கண்டுபிடித்து விட்டால் பதில் கிடைக்கும்.”

சிறிது நிமிடங்கள் யோசித்ததில் பழநிக்கு லாஜிக் கிடைத்துவிடுகிறது. சரியாக செய்து ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறான். அவன் எவ்வாறு செய்தான்? சரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

கீழ்க்கண்டவாரு செய்து இரண்டாவது மனிதன் வெற்றிப் பெறுகிறான்.

முதலில், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.

அந்த 5லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.

மீண்டும் 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.

மீண்டும் அந்த 5லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.

இப்போது 5லிட்டர் வாளியில், 3லிட்டர் தண்ணீரும், 7லிட்டர் வாலி முழுதும் நிரம்பியும் இருக்கும்.

7லிட்டர் வாளியில் உள்ள தண்ணீரை மரத்தில் ஊற்றி  விடவும்.

 

5லிட்டர் வாளியில் உள்ள 3 லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.

மீண்டும், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.

பின் அந்த தண்ணீரை 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.

அனால் இப்போதோ, ஏற்கனவே 7லிட்டர் வாளியில், 3லிட்டர் மீதம் இருப்பதால், மீண்டும் 4லிட்டர் மட்டுமே ஊற்றமுடியும்.

7லிட்டர் வாலி நிரம்பிவிடுகிறது. 5லிட்டர் வாளியில் 1லிட்டர் மீதம் இருக்கிறது.

7லிட்டர் வாளியில் உள்ள தண்ணீரை மரத்தில் ஊற்றி  விடவும்.

 

5லிட்டர் வாளியில் உள்ள 1 லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.

மீண்டும், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.

பின் அந்த தண்ணீரை 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.

இப்போது 7லிட்டர் வாளியில், சரியாக 6லிட்டர் தண்ணீர் இருக்கிறது,

மணி அடிக்கபடுகிறது, இரண்டமானவன் இப்படி தான் செய்து தப்பித்துக்கொள்கிறான்.

 

சரியான பதில் அளித்தவர்கள்:

சரவணக்குமார் அன்பழகன், ஜாஸ்பர் நிர்மல் குமார், சரவணன் தக்ஷ்னாமூர்த்தி, செந்தில்.

Likes(3)Dislikes(1)
Share
Jul 142014
 

9.2 spiderman2

 

நம் கதையின் கதாநாயகர்கள் புலியும் குதிரையும். என்னடா! எதிரும் புதிருமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? வழக்கத்திற்கு மாறாக இருவரும் உயிர் நெடுங்கால நண்பர்கள்.
தினமும் காலையும் மாலையும் மலை அடிவாரத்தை இருவரும் ஒன்றாக சுற்றி வருவது வழக்கம். இதை அடிக்கடி ஒரு நரி பார்த்து வந்தது. பொறாமையும் கொண்டது.  புலி குதிரயை கொன்றால் தனக்கும் விருந்து தான் என திட்டம் தீட்டியது.
ஒரு நாள் புலியிடம் சென்று நரி “குதிரையுடன் நட்பாக இருக்கிறாயே, உனக்கு இது வீரத்திற்கு இழுக்கு  இல்லையா?” என வினவியது.
புலியோ “நட்பில் வீரத்திற்கு என்ன இடம்? நான் அதை குதிரையாக அல்ல, என் நண்பனாக பார்க்கிறேன் என்றது”.
தந்திரக்கார நரியாயிற்றே. சும்மா விடுமா என்ன?  இவர்களை பிரித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டியது.
விடாமுயற்சியாக மீண்டும் புலியிடம் சென்று “நேற்று நான் குதிரையிடம் பேசினேன். அதுவோ நீ ஒரு ஏமாளி, அதனால் தான் நட்பாக இருக்கிறாய்” என கூறியதாக உசுப்பேற்றியது. ஆத்திரமடைந்த புலி நரியின் வார்த்தையை நம்பி நிஜமாக ஏமாளி ஆனது. “ஆனால் எக்காரணத்தை கொண்டும் தன் நீண்ட கால நண்பனை கொன்று இறை ஆக்க முடியாது” என்றும் உறுதியாக கூறியது.
தன்னுடன் பேசாமல் போகிறதே என்று குதிரையும் வருத்தப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல புலி குதிரையுடன் பேசாமல் கவலைக்கு உள் ஆகியது. “இந்த புலிக்கு என்னதான் பிரச்சனை?  கண்டுபிடித்தே ஆக வேண்டும்” என குதிரை தீர்மானித்தது.
ஒரு நாள் குதிரை மனம் விட்டு பேசியபொழுது தான் புலிக்கும் நரியின் சூழ்ச்சி புரிந்தது. மாற்றான் பேச்சை கேட்டு தன் நீண்ட கால நண்பனை சந்தேகப்பட்டோமே என வெட்கி மனதார குதிரையிடம் மன்னிப்பு கேட்டது.
குழந்தைகளே, எந்த ஒரு விஷையத்தையும் யார் கூறினாலும் அதை அப்படியே நம்பாமல் “சரியா, தவறா?” என யோசித்து ஏற்பது தான் புத்திசாலித்தனம்.
இதை தான், திருவள்ளுவர்
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு” என கூறியுள்ளார். எதையும் ஆராய்ந்து பின் பற்றுவோம்.

– Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)

Likes(8)Dislikes(0)
Share
Jul 142014
 

9.1

 

“இன்று தான் என் வாழ்வின் கடைசி நாள் என ஒருவேளை இருந்தால்,  இப்போது செய்ய இருக்கும் இந்த வேலையைத் தான் செய்வேனா?

என்று நான் ஒவ்வொரு காலையும் கண்ணாடியில் பார்த்து என்னை கேட்டதுண்டு.

ஒருவேளை பதில் வரிசையாகப் பல நாட்கள் ‘இல்லை’ என்று வந்தால், தவறானப் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று தெரிந்துக்கொண்டு

அதை மாற்றிக்கொள்வேன்.”

–    ஸ்டீவ் ஜாப்ஸ்

 

 

இன்று பிறந்த இந்த நாள்..

உங்கள் புதிய வாழ்க்கையின் முதல் நாளாக இருக்க முடியும்.

அது உங்கள் கையில் தான் உள்ளது!

 

 

யோசனைகள் உங்கள்

வாழ்க்கையை மாற்றுவதில்லை,

யோசனைகளின் சக்தியால்,

உங்கள் வாழ்க்கையை நீங்களே மாற்றுகிறீர்கள்!

 

 

இவ்வுலகம்,

அதனுள்ளே

மறைந்திருக்கும் ஆற்றலை

உணர்ந்தவர்களுக்கே, சொந்தமாகிறது!

 

 

குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள்.

பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்!

 

 

உங்கள் பெற்றோரை நடத்தும் விதம்,

உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது.

நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

 

 

 

உங்களுக்கு வேறு சில அதிகாரம் இல்லையே என ஏங்குவதை விடுத்து

உங்களிடம் இருக்கும் அதிகாரத்தின் மீது கவனத்தை செலுத்தும்போது

நம்பமுடியாத மாற்றம் உங்கள் வாழ்க்கையில் நடந்தேறுகிறது!

 

 

 

நீங்கள் இந்த உலகுக்கு வந்ததின் நோக்கம்

உங்கள் பூரணத்துவத்தை அடைவதற்கும்,

அதே நோக்கத்தில் வாழ்வதற்கும்,

அதை முழு தைரியத்துடனும் செய்வதற்குமே ஆகும்!

Likes(4)Dislikes(1)
Share
 Posted by at 12:01 am
Share
Share