Jun 142014
 

Intro (Comp)

அன்று காலை வெகு சீக்கிரமே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:40 எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன்.

நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், பேருந்து நிறுத்தங்கள், மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள பெட்டிக் கடைகள், தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகள் என எங்கு நோக்கினும், சுத்தமானக் காற்றை பணத்திற்கு விற்றுக் கொண்டிருந்தனர். ஆம், சுத்தமான ஆக்ஸிஜன் விதவிதமான சைஸ் டப்பாக்களில் (CONTAINERS), அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

தனி நபர்களாய் வருபவர்கள், சிறிய டப்பாக்களை வாங்குகின்றனர். நான்கைந்து நண்பர்களாகவும், குடும்பமாக வருபவர்களும், பெரிய டப்பாக்களை வாங்கி பின் சிறிய டப்பாக்களில் பிரித்துக்கொள்கின்றனர்.

பணம் கொடுத்து வாங்க கூடிய சூழ்நிலை உள்ளவர்கள் மட்டும் காற்றை வாங்கிக்கொள்ள, அவ்வாறு வாங்க இயலாதவர்கள், இருமிக் கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் நடந்துச் செல்கின்றனர். காற்றை வாங்கியவர்கள், இந்த டப்பாக்களை தங்களுடன் இடுப்பிலோ, முதுகிலோ பொருத்திக்கொள்கின்றனர். அந்த டப்பாக்களில் இருந்து அவர்களது மூக்கிற்கு மேல் பொருத்தப்பட்டுள்ள ஃபில்டருக்குள் காற்று செல்ல ஏதுவாக டியுபுகள் உள்ளன.

அந்த நகரமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. எங்கும் தூசு, புகை. காற்று மிக மோசமாக மாசடைந்து இருக்கிறது. எங்கு நோக்கினும் 40, 50 மாடி கட்டிடங்கள், மணிக்கு 120 கிலோமீட்டருக்கு மேல் சீறிப் பாயும் வாகனங்கள், அதற்கு ஏற்றார் போல், பளபள என்று மின்னும் சாலைகள். சுருக்கமாக சொன்னால், அது ஒரு ஸ்மார்ட் சிட்டி (SMART CITY).

மனிதர்களைத் தவிர மற்ற நகர உயிரினங்களான காக்கை, குருவி, பூனை, நாய், போன்றவைகளின் சுவடுகளே இல்லை. இயற்கை மிக மோசமாக மாசுபட்டு இருந்ததினால், அந்த இனங்களே அழிந்து போயிருந்தன.

intro1

தெருவோரம் இருக்கும் கடைக்குச் சென்று ஒரு சிறிய டப்பா காற்று தாருங்கள் எனக் கேட்டு, 2000 ரூபாயினை தந்தேன். அதற்கு கடைக்காரர், “என்னங்க, நேற்று இரவிலிருந்து விலை 200 ரூபாய் ஏறிவிட்டது, உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்கவும், நான் “ஓ, அப்படியா? எனக்குத் தெரியாதே, என்று என் பர்ஸை பார்க்க, பர்ஸில் பல கிரெடிட் கார்டுகளும், ஸ்மார்ட் கார்டுகளும்  மட்டுமே இருக்கிறது. வேறு பணம் இல்லை. ஏடிம் மெஷினோ (ATM MACHINE) ஒரு ஐந்து நிமிட தொலைவில் இருக்கிறது. என் கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:45 எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. பேருந்து இன்னும் 3 நிமிடங்களில் வரும் என்று டிஜிட்டல் போர்ட் (DIGITAL BOARD), அருகே சிரித்துக் கொண்டிருந்தது.

அப்போது இந்த நிகழ்வுகளை எல்லாம் என் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த, 25 வயதுள்ள ஒரு வாலிபர், “என்னங்க, சில்லரை இல்லையா? நான் தருகிறேன்” என்று உங்களிடம் அந்த 200 ரூபாயினைக் கொடுக்க, நானும் கடையில் காற்றை வாங்கிவிட்டு, வாலிபரிடம் அந்த மூன்று நிமிடங்கள் உரையாடினேன்.

நான்: “ரொம்ப நன்றி தம்பி, நான் கொஞ்சம் அவசரமாக க்ளீனிக்கிற்குப் போக வேண்டும், நீங்கள் இல்லையென்றால் இன்றைக்கு என்னால் காற்றை வாங்கிருக்க முடியாது, என் பேருந்தை தவரவிட்டிருப்பேன். அந்த மருத்துவரிடம் ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பாயின்மெண்ட் வாங்கி வச்சிருந்தேன். இந்த காற்றை வாங்காமல் அத்தனை தூரம் பயணம் செய்துவிட்டு வந்தால், அவ்வளவு தான், அடுத்த பத்து நாள் மருத்துவமணையில் தான் இருக்க வேண்டும்”

வாலிபர்: “பரவாயில்லைங்க, அதனாலென்ன, இன்றைய காலத்தில் 200ரூபாய் எல்லாம் பெரிய விஷயமா?”

நான்: “அது சரி தம்பி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”

வாலிபர்: “நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப் புரிகிறேன். இன்று சனிக்கிழமை என்பதால், எங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை. எனது நண்பர்கள் பத்து பேர் குழுவாக இருக்கிறோம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் அனைவரும், சுற்றுப்புறம் இன்னும் மாசடையாமல் இருக்க, பொது மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல நல்ல முகாம்களை  நடத்துகிறோம். சுற்றுப்புற சூழலை பாதுகாக்க, மரங்கள் வளர்ப்பது, தண்ணீரை சேமிப்பது, இயற்கையைப் பாதுக்காப்பது போன்ற பல செயல்களை மக்களுடன் சேர்ந்து செய்கிறோம். எங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு இது தான் நாங்கள் செய்யும் முக்கிய கடமையாக எண்ணுகிறோம்.”

நான்: “மிக அருமையான முயற்சி தம்பி, எங்கள் தலைமுறையில் உள்ள அனைவரும் உங்கள் வயது இருக்கும்போது, இந்த மாதிரி சமூக உணர்வோடு, சுற்றுப்புற சூழல் குறித்த சிந்திருந்தால், இன்று நிலைமை இத்தனை மோசமாக இருந்திருக்காது. எனக்கு உங்கள் வயது இருக்கும்போது, நாங்கள் தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கினோம், இப்போதோ, காற்றையும் விலைக் கொடுத்து வாங்குகிறோம். 50, 60 வருடங்களுக்கு முன் தண்ணீரையே விலைக் கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலை ஒருநாளில் வரும் என்று என் முன்னோர்கள் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

intro2

என் வயது ஆட்கள் நிறைய பேர் தவறு செய்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடுங்கள். இப்போது எனக்கு 55 வயதிற்கு மேலாகிவிட்டது, என் வயது ஆட்களை பார்த்தால் நான் இந்தத் தவறை கூறிதான் வருத்தப்படுகிறேன்.”

வாலிபர்: “அதெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க போவதையாவது, நல்ல முறையில் வைத்துக்கொள்வோம். இன்னும் 20வருடத்தில் பெரும்நகரங்களில், வசிக்கவே முடியாது என்ற சூழ்நிலை வரும் என்று காலையில் தான் செய்திததாளில் படித்தேன். நல்ல வேலை, இந்த நகரமயமாக்கள், இன்னும் சென்றடையாத, ஆபத்தான தொழிற்சாலைகள் இல்லாத சில கிராமங்களில் காற்று ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது. அங்கே காற்றை இன்னும் பணம் கொடுத்து வாங்கும் நிலை வரவில்லை. ஆனால் அதுவும் கொஞ்சம் வருடங்கள் தான், அதற்கு முன், எந்தளவு எங்களால் முடியுமோ அந்தளவு செய்யப்போகிறோம். வேலை நிறைய உள்ளது, நான் வருகிறேன்” என்றுக் கூறி வேகமாக கிளம்பிவிட்டார்.

நான் இருப்பது ஸ்மார்ட் சிட்டி என்பதால், பேருந்து நிறுத்தத்தில் நான்கு அல்லது ஐந்து வரிசை (QUEUE) இருக்கும். யார் முதலில் பேருந்து நிறுத்தத்திற்கு வருகின்றனறோ, அவரே வரிசையில் முதலில் சென்று நிற்பார். அவருக்கு அடுத்து வருபவர்கள் எல்லோரும் அவருக்கு பின்னே வரிசையில் நிற்பார்கள். ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பேருந்தில் ஏற நடத்துனர் அனுமதிக்கமாட்டார். கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகள் துள்ளியமாக வரும்.

அன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், ஒவ்வொரு வரிசையிலும் ஆட்கள் நான்கு ஐந்து எனக் குறைவாகவே இருந்தனர். அந்த வாலிபர் என்னிடம் பேசிமுடித்துக் கிளம்பியவுடன், என் பேருந்து வரும் வரிசையில் சென்று நின்றேன். ஸ்மார்ட் சிட்டியின் சமிபத்து விதியின்படி முடிந்தளவு ஹாரன் ஒலியை ஓட்டுனர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை என்றால் தான், ஹாரன் ஒலி எழுப்ப வேண்டும் என ஓட்டுனர்களுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது.

“இந்த முப்பது வருடங்களில் தான் எத்தனை மாறிவிட்டது? இன்றைய இளைங்கர்களுக்கு தான் சமூகத்தின் மீது எத்தனை அக்கறை?” அந்த வாலிபருடன் நடந்த உரையாடலையும், இப்போதுள்ள விதிகளை பற்றியும் நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் பேருந்து வந்துவிட்டது. நாங்கள் ஒவ்வொருவராக பேருந்திற்குள் ஏறி அமரவும், பேருந்து கிளம்புகிறது. ஜன்னலோரும் கிடைத்த சீட்டில் அமர்ந்தப்படி, ஜன்னல் சற்று சாய்த்தப்படி கண்களை மூடி யோசித்தேன்.

லேசாக தூக்க நிலைக்கு நான் செல்ல, ஒரு திருப்பத்தில் பேருந்து பலமாக பிரேக் போட, வேகமாக ஹாரன் ஒலி எழுப்பப்பட்டது. “ஸ்மார்ட் சிட்டியில் தான் ஹாரன் ஒலி அடிக்கமாட்டார்களே, எதாவது விபரீதம் நடந்திருக்குமோ” என்று பதட்டத்துடன் தூக்கம் கலைந்து, கண் விழித்துப் பார்த்தேன்.

என் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு எதிரே தொங்கிக்  கொண்டிருந்த காலண்டர், இன்றைய நாள் 14/06/2014 எனக் காட்டவும், அந்த ஏசிக் காற்றிலும் எனக்கு குப்பென்று வியர்க்க ஆரம்பிக்கிறது.

அடுத்த இதழில் தொடரும்,

விமல் தியாகராஜன் & B+ Team

(பி.கு: ஜூன் மாதம் ஐந்தாம் நாள், உலக சுற்றுப்புற சூழல் தினம் என்பதால், இந்த மாத இதழில் சுற்றுப்புற சூழலை மைய்யமாக வைத்து எழுதலாம் என்று ஒரு முயற்சியுடன் இந்த மாத இதழை உங்களுக்கு அர்பணிக்கிறோம்)

Likes(16)Dislikes(0)
Share
Jun 142014
 

ach2c

17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள்!!

மதுரை கரைசநேந்தல் பகுதியில், தேன் வளர்ப்புத் துறையில், தான் சாதித்துக் கொண்டிருப்பதன் மூலம் இவைகளை சொந்தமாக்கியுள்ள திருமதி.ஜோசஃபின் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம்.

“இவர் வளர்க்கும் தேனீக்களைக் கூடப் பிடித்துவிடலாம், இவரைப் பிடிப்பது சற்றுக் கடினம் தான்” என்று கேள்விப்பட்டதைப் போல், மிகவும் பரபரப்பாக வேலை செய்து சுற்றிக் கொண்டிருந்தவரை இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேட்டி எடுத்தோம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை சாப்பிடக் கொடுத்து, தனது “கம்பெனி ப்ராடகட்” என அறிமுகப்படுத்தினார்.

பல நாளிதழ்கள், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் இவரைப் பற்றிய பலத் தொகுப்புகளை வெளியிட்டு, இவரை வெளியுலகிற்கு தெரியவைத்துக் கொண்டிருக்கிறது. இனி அவருடன் பேட்டியிலிருந்து சில..

B+: வணக்கம் மேடம். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

ஜோசஃபின்: எனது பெயர் ஜோசஃபின், மதுரை விவசாய பல்கலைக்கழகத்தில் பயிற்சி எடுத்தேன். 2006 இல், தேன் வளர்ப்பை ஆரம்பித்தேன். முதன் முதல் தேன் பெட்டிகளில் 8கிலோ தேன் எடுத்ததும், அந்த செய்தியை ஒரு நாளிதழில் வெளியிட்டதும், எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்து, இந்த துறையில் நிறைய சாதனை செய்யவைத்தது. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மார்த்தாண்டம், பூனே, பஞ்சாப் போன்ற பல இடங்களுக்கு சென்று,  இந்த தொழிலின் பல நுனுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

B+: ஆரம்பம் எவ்வாறு இருந்தது?

ஜோசஃபின்: முதலில் நான் மட்டும் தான் செய்தேன். ரொம்பக் கடினமாக இருந்தது. தேன் எடுக்கும்போது, தேன் பூச்சிகளிடம் பலக் கொட்டுகளை வாங்கியுள்ளேன். தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன்களை எடுப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளவே, எனக்கு ஒன்னரை வருடம் ஆகியது. கிட்டத்தட்ட 1000 தேனீக்களிடம் கடி வாங்கியிபின் தான், இந்த ரகசியத்தைத் தெரிந்துக்கொண்டேன். இப்போது அதை நிறைய பேருக்குக் கற்றுத் தருகிறேன். கடந்த 8 வருஷத்தில், 40000 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன் எடுக்கிறார்கள்.

B+: எங்கு எப்போது பயிற்சி கொடுக்கின்றீர்கள்?

ஜோசஃபின்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, எனது மதுரை வீட்டிலேயே பயிற்சிக்கூடம் அமைத்து, இதில் விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கின்றேன். இந்தப் பயிற்சிக்கு குறைந்தது 100பேராவது வருவர். நான் இதற்காக விளம்பரம் ஏதும் தருவதில்லை, ஏற்கனவே இங்கு வந்து பயிற்சி எடுத்தவர்கள் மூலமாக சொல்லி வருபவர்கள் தான்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் (NATION HORTICULTURE MISSION) கீழ் 50% மானியமாக தேன் கூட்டுடன் சேர்ந்து தேன் சேகரிக்கும் பெட்டியை, அவ்வாறு பயிற்சிக்கு வருபவர்களிடம் கொடுக்கிறோம். அது மட்டுமன்றித் தமிழ்நாட்டில் ஒரு 23 மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் கொடுக்கின்றோம். இருந்தாலும், என்னைப் போல் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பேராவது இருந்தால் தான் தமிழகத்தின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

B+: பயிற்சி எத்தனை தூரம் சென்றடைந்துள்ளது?

ஜோசஃபின்: என்னால் பயிற்சி பெறப்பட்டவர்கள் 362 பேர் தமிழகத்தின் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு சம்பாதிக்கின்றார்கள். இது மட்டுமின்றி எனக்கு சம்பந்தமில்லாத 50000 பேர், மார்த்தாண்டம், கண்ணியாகுமரி பகுதிகளில் தேனீ வளர்ப்பை மட்டுமே தொழிலாக செய்து வருகின்றனர். 2007இலிருந்து இதை செய்கிறேன். அப்போது ஒரு வருடத்திற்கு 300 முதல் 500 பெட்டிக் கொடுக்க ஆரம்பித்து இன்று 5000 பெட்டிகள் வரைக் கொடுக்கின்றேன். நான் சொல்லித்தரும் அனைவரும் இதில் வல்லுநர் ஆகிவிடுவதில்லை. ஒரு 10000 பேருக்கு பயிற்சிக் கொடுத்தால் 100 பேர் மட்டுமே ஒழுங்காக வேலை செய்து பயன் பெருகின்றனர்.

B+: தேன் பெட்டி பற்றி சிலவற்றை கூறுங்கள்.

ஜோசஃபின்: ஒவ்வொரு தேன் பெட்டியிலிருந்தும் ஒரு மாதத்திற்கும் 2கிலோ தேன் கிடைக்கும், இந்தப் பெட்டியை நான் தான் டிசைன் செய்தேன். ப்ளாஸ்டிக்கில் இல்லாமல் டப்பர்வேரில் இருப்பதால், கிட்டத்தட்ட 25 வருடம் வரை நீடித்து வரும். முன்பிருந்த பெட்டிகளில் இருந்த பல பிரச்சினைகளை நீக்கி, புது யுக்திகள் பலவற்றை சேர்த்துள்ளதால், உலகத்திலேயே முதல்முறையாக இப்படி மிக அருமையான ஒரு டிசைனாக  வெளி வந்துள்ளது.

B+: விவசாயிகளுக்கு நீங்கள் தேன் பெட்டிக் கொடுப்பது எத்தனை தூரம் பயனளித்துள்ளது?

ஜோசஃபின்: நிறைய விவசாயிகளை சந்தித்து பெட்டிகள் கொடுக்கிறேன். நிலங்களில் தேன் கூடு இருப்பது, (மகரந்த சேர்க்கையின் மூலம்) 10 முதல் 70% வரை விவசாயிகளுக்கு மகசூல் கூடுகின்றது. நாம் எடுக்கும் இரண்டு கிலோ தேன் முக்கியமல்ல, இந்த தேன் பூச்சிகளினால் கிடைக்கும் அதிக மகசூல் தான் முக்கியம். இதை நன்கு உணர்ந்த பல விவசாயிகள் நன்றாக ஆதரவு தருகின்றனர். இதேக் காரணத்தினால் தான், தோட்டக் கலையில் இதனை மானியத்தில் தருகின்றனர். இப்போது காதியிலும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

B+: தேன் சேகரித்தபின் என்ன செய்வீர்கள்?

ஜோசஃபின்: தேன்களில் மொத்தம் 30 வகை தேன் உள்ளது. அதில் 10வகைத் தேன் தனி மலர் தேனாக இருக்கும். அத்தகைய தேன் பூச்சிகள், பருவநிலைக்கு (SEASON) ஏற்றார்போல், வளர்க்கும் இடங்களில், கிட்டத்தட்ட 60% ஒரே மாதிரியான மரங்களில் இருந்து தேனை எடுத்துவரும். உதாரணத்திற்கு இப்போது உள்ள பருவநிலைப்படி நாவல் மரம், முருங்கை மரம், வேப்பமரம் போன்ற மரங்களிலிருந்து தேன் பூச்சிகள் தேனை எடுத்து வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமாகவும், ஒவ்வொரு சுவையாகவும் இருக்கும். சில கசப்புத்தன்மையுடன் இருக்கும் தேன், மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக இருக்கும்.

தேனை எடுத்து அதை புட்டியில் (BOTTLE) அடைத்து பல இடங்களுக்கு விற்பனை செய்கிறேன். மதிப்பூட்டியும் ஒரு புறம் செய்கிறேன். அதாவது தேனிற்குள் மாம்பழம், நெல்லி, அத்திப்பழம் போன்றவற்றை ஊறவைத்து புட்டியில் அடைத்து தமிழகம் முழுவதும் நமது நிறுவனம் விநியோகிக்கிறது. இந்த பழங்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள என் தந்தையின் தோட்டத்தில் இருந்து, இயற்கை விவசாய முறையில் (ORGANIC FARMING) வருவது கூடுதல் சிறப்பு. பதனச்சரக்கு (PRESERVATIVE) இல்லாமல், துளசித் தேன், இஞ்சித் தேன், பூண்டுத் தேன் போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.

B+: இந்தத் தொழிலின் எவரெவர் பயன் பெறுகின்றனர்? மருத்துவ குணமுள்ள தேனின் பலன் என்ன?

ஜோசஃபின்: நிறையக் குடும்பங்களுக்கு இந்தத் தொழிலை சொல்லித் தருகிறேன். அவர்கள் அனைவரும் இதனால் நல்ல பயன் பெருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள வீடுகளில் இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும், 3பெட்டி முதல் 5பெட்டி வரை வளர்க்கின்றனர். கோயிலைச் சுற்றி பழக்கடைகளும், பூக்கடைகளும் மிகுதியாக உள்ளதால், தேன் மிகுதியாகக் கிடைக்கிறது.

இது ஒரு மிக அற்புதமான தொழில். மருத்துவ குணமுடையத் தேனை சாப்பிடுகிறவர்களுக்கு சளி, காய்ச்சல், மூல நோய், வாத நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்பெறுகிறது. தேனீ விஷ மருத்துவம் (BEE VENOM THERAPHY) இங்கு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் மிக பிரசித்திப்பெற்றது. தேனீ கடிப்பது நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. தீக்காயத்திற்கு கூட தேனை தடவலாம். செல்களை புதுப்பிக்கவும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் தேன் அருமையாக உதவுகின்றது. மலைத்தேனீயின் விஷம் மட்டுமே ஆபத்தானது.

B+: எந்த மாதிரியான ஊக்கம் உங்களுக்கு கிடைக்கிறது?

ஜோசஃபின்:  எனது பணியைப் பாராட்டி, 17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள் இதுவரைக் கிடைத்துள்ளது. தேன் வளர்ப்பில் மிகப் பெரிய சாதனை செய்ததாக பஜாஜ் நிறுவனம் என்னைப் பாராட்டி “ஜானகி தேவி புரஸ்கார்” விருதும் மூன்று லட்ச ரூபாயும் கொடுத்து பாராட்டியது. எனது மகனின் முகம் முழுவதும் தேன் பூச்சிகளினால் மூட வைத்து “கின்னஸ் சாதனையும்” முயற்சித்தோம்.

B+: உங்களது எதிர்காலத் திட்டம்?

ஜோசஃபின்: இந்தப் பணியை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும். சென்னை மாதிரியான நகரங்களில் கூட வீடுகளில மொட்டைமாடிகளில் வைத்து வளர்க்கலாம். ஒரு “பழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)” செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். இத்தனைக் கஷ்டப்பட்டு வளர்க்கின்றேன், என்னிடமே சிலர், இந்தத் தேன் சுத்தமான தேனா? என்றுக் கேட்பர். அவர்களிடம் எல்லாம், உங்களுக்கே பெட்டித் தருகிறேன், நீங்களே வளருங்கள் என்று கூறுவேன்.

தமிழகம் முழுவதும் வீட்டிற்கு ஒரு தேன் பெட்டி என்பதே என் இலக்கு. இது சமூக ஆரோக்கியத்தையும், இயற்கையையும் கண்டிப்பாகக் காக்கும்.

வீட்டிற்கு ஒரு தேன் பெட்டி,

நம் குடும்பத்தின் ஆயுள் கெட்டி!!

இதைத் தான் நான் அனைவரிடமும் கூறுவது.

 

Likes(54)Dislikes(1)
Share
Jun 142014
 

 

“சார், நம்ம நடிகர் விவேக் தனி ஆளா 20  லட்சத்துக்கு மேல் மரக்கன்று நட்டு இருக்கார். அவரோட இலக்கு கோடிக் கணக்கில் நடனுமாம், பெரிய விஷயம்ல” என்றபடி பேச்சைத் தொடங்கினார் என்னுடன் பணிபுரியும் அன்பர்.

“பெரிய விஷயம், சார். ரொம்ப நல்ல காரியம்” என்றேன் நான்.

“ரொம்ப பெரிய விஷயம் சார். நான் கூட இது மாதிரி பண்ணனும். இதுக்கு எல்லாம் எவ்வளோ செலவு ஆகும் சார்?” என்றார்.

இன்னொரு அன்பர் அதற்குள் “சார், அவரு ஒரு நடிகர் மக்களுக்கு நல்ல அறிமுகம் ஆனவரு அவரு போய் 100 கோடி மரம் நடணும் காசு கொடுங்கனு கேட்டா எல்லாம் கொடுப்பாங்க நீங்களும் நானும் கேட்டா யாரு கொடுப்பா?” என்றார்.

நாங்கள் அனைவரும் இதனை ஆமோதிக்கும் போது, எங்களுள் கொஞ்சம் அதிகம் அனுபவம் உள்ள மற்றொரு அன்பர், “உங்களில் யாருக்காவது  அஸ்ஸாமில் உள்ள மோளைக் (Molai) காடு பற்றியும், ஜாதவ் “மோளை” பாயெங்க் [Jadav Molai Payeng] பற்றியும் தெரியுமா?” என்றார்.

“மூலகடை, ஜாவா, c++, தவிர உலகத்துல வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது” என்றோம்.

அதன் பிறகு எங்கள் சீனியர் சொன்ன விஷயம் தான் இந்த பதிவு.

ஜாதவ் மோளை பாயெங்க் என்பவர் அஸ்ஸாமில் உள்ள மிஷிங் (Mishing) என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக அவர் தங்கி இருந்த இடத்தின் அருகில் இருந்த மரங்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. அதனால் அங்கு வாழ்ந்த பறவைகள் மற்றும் சில வன விலங்குகள் குறையத் தொடங்கின.

ஜாதவிற்கு அப்போது 16-17  வயது இருக்கும். அப்போது அவருக்கு ஏற்பட்ட கவலை ‘இப்படி மரங்கள் அழிவாதானால் அதனை சார்ந்துள்ள எல்லா உயிரினங்களும் அழிகின்றனவே அப்படியானால் ஒருநாள் நாமும் அழிஞ்சிடுவோமே. அதை எப்படி தடுக்கிறது?’.

அதற்கு ஜாதவின் நண்பர்களும் பெரியவர்களும் சொன்ன அறிவுரை – “நீயே ஒரு காட்டை வளார்க்க வேண்டியது தான்”.

இந்த வாக்கியத்தை எடுத்துகிட்டு அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகில் ப்ரஹ்மபுத்திரா நதியின் கரை அருகில் உள்ள சிறு தீவு போன்ற நீல பரப்பை தேர்ந்தெடுத்து அங்கு மரக்கன்றுகளை நட்டார். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுகணக்கில். மரக்கன்றுகள் வளர வளர அதற்கு நீர் பாய்ச்சுவது பிரச்சினை ஆனது. மூங்கில் மரங்கள் கொண்டு சொட்டு நீர் பாசனம் செய்தார்.

படிப்படியாக மரங்கள் வளர்ந்தன அடர்த்தியான காடாக அந்த நிலப்பரப்பு மாறியது. இப்பொழுது புலிகளில் வங்களா புலி (Bengal Tiger) என்ற இனம், காண்டாமிருகம், நூற்றுக்கணக்கான மான்கள், அரியவகைக் குரங்குகள், மற்றும் பல வகையான பறவைகளின் இருப்பிடமாக அந்த இடம் இப்போது இருக்கிறது.

“அப்போ அது அவருடய சொந்த நிலமா சார்?” என்றோம்.

“இல்லை. அது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம். பழங்குடி இனத்தவரான இவர், வனத்துறையில் தோட்டக்கராராக வேலை செய்கிறார். இப்பவும் அவருடய சொத்து மனைவி இரண்டு குழந்தைகள், சில எருமை மாடுகள், மற்றும் ஒரு குடிசை”.

இப்படி எங்கள் சீனியர் சொன்ன உடன், “சார், அது எவ்வளவு பெரிய காடு?” என்றார் ஒரு அன்பர்.

“1360 ஏக்கர் பரப்பளவு கொண்டது” என்றார்.

1360 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடு, ஒரு தனி மனிதன் செய்ததா என்ற பிரம்மை இன்னும் அகலவில்லை.

indian-man-forest

–          D. சரவணன்

Likes(2)Dislikes(0)
Share
Jun 142014
 

 

கண்ணைக் கவரும் கணிப்பொறி,
கவனத்தை ஈர்க்கும் கைப்பேசி,
விண்ணை அளக்கும் செயற்க்கைகோள்,
ஒன்றா இரண்டா! இதுபோல

உலகமெங்கும் உபகரணங்கள்
கண்ணுக்கு தெரியா கதிர்களை;
கணம் தவறாமல் சுற்றிலும் வீசி
மண்ணைக் காக்கும் மரங்களையும்,
மரங்கள் தாங்கும் பறவைகளையும்,
மனிதன் போற்றும் உடலினையும்,
ஊனமாக்கும் ஊமைக் காலனே!
கலியுகத்தின் கல்கி நீ தானோ?

-Dr. K. நந்தினி (லண்டனிலிருந்து)

 

 

kavithai

Likes(5)Dislikes(0)
Share
Jun 142014
 

youthசில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழும் உலகமானது தட்டையான வடிவத்தில் இருக்கின்றது என மக்கள் நம்பினர். பலரும் அதையே தாங்களும் தங்களின் வழிவந்த மக்களுக்கும் பயிற்றுவித்தனர். ஒரே ஒருவரைத் தவிற. முதன் முதலாக ஒருவர், நாம் வாழும் பூமி தட்டையானது அல்ல. உருண்டையாக இருக்கின்றது என்றார். அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தனர். ஏளனப்படுத்தினர். மனநலம் சரியில்லாதவர் என அடித்தே கொன்றனர். சில நூறு ஆண்டுகள் கழித்தே தெரிந்தது அந்த மன நலம் சரியில்லாதவர் சொன்னதே சரி மக்கள் நினைத்தது தவறு என்று.

இப்பொழுதும் மக்களாகிய நாம் மாறாமல் அதே போலத்தான் இருக்கிறோம். நமக்கென்று ஒரு வீடு இருக்கின்றது. நமக்கென்று ஒரு வேலையிருக்கின்றது. நமக்கென்று ஒரு குடும்பமிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொன்றையும் இப்படித்தான் செய்யவேண்டும் என்ற வரையறையும் இருக்கின்றது.  அதைத் தாண்டி நாம் எதையும் செய்வதில்லை. நம்மைச் செய்ய எவரும் விடுவதுமில்லை. கடிவாளமணிந்த குதிரையாக அக்கம் பக்கம் பார்க்காமல் ஒரே பாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பெட்டியே நமது உலகம் என பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றோம்.  அந்த பெட்டையைத் தாண்டி நாம் எதையும் செய்ய முயல்வதில்லை. அந்த பெட்டிக்கு வெளியே பறந்து விரிந்த இந்த உலகம் இருப்பதே நமக்குத் தெரியவில்லை. இப்படித்தான் பார்க்கவேண்டும், இப்படித்தான் பேச வேண்டும் இப்படித்தான் உடை அணிய வேண்டும் ஏன் இப்படித்தான் கை குலுக்க வேண்டும் என்ற அளவுக்கு நமக்கு சொல்லித்தருகின்றனர்.  நாம் எப்படி கை குலுக்க வேண்டும் என்பதை யாரோ ஒருவர் எழுதி வைக்கிறார்.

ஒரு செயலை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் அதனை எப்படிச் செய்யவேண்டும் என்றும் நமக்கு சொல்லும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது. அந்த செயலைச் செய்யக் கூடிய வேறு வழிமுறைகளை நாம் ஆராயாமலேயே விட்டுவிடுகின்றோம். இதற்கே நமக்கு வரையறை தாண்டிய சிந்தனை (Out of box thinking) என்ற ஒன்று தேவைப்படுகின்றது.  மேலும் இதைப்பற்றி விவாதிப்பதற்கு முன் இரண்டு குட்டிக்கதைகளை இங்கே கூற விழைகிறேன்.

ஒரு அலுவலக மேளாளர் ‘A”  என்ற  பணியாளரை ஒரு மிக அகலமான, வேகமான நீரோட்டம் உள்ள ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, ஆற்றைக் கடந்து சென்று மறுகரையில் இருக்கும் ஒரு பெட்டியை எடுத்துவருமாறு பணிக்கிறார். மேலும் அந்த வேலையை ஒரு மணி நேரத்திற்குள் முடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்.

உடனே ‘A” என்பவர் பத்து ரூபாய் செலவு செய்து அங்கிருக்கும் படகுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி மறுகரைக்குச் சென்று பெட்டியை 55 நிமிடத்திற்குள் எடுத்து வந்துவிடவும், மேலாளர் “நன்று” என பாராட்டுகின்றார்.

மறுநாள் மேலாளர் அதே வேலையை ‘B’ என்ற பணியாளனுக்கும் அளிக்க, அவன் ஒரு மோட்டர் படகை 50 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து முப்பது நிமிடத்தில் பெட்டியை எடுத்து வந்து விட, மேலாளர் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்.

அடுத்த நாள் ‘C’ என்ற பணியாளருக்கும் அதே வேலை வழங்கப்பட, அவர் முதலில் ‘A’, ‘B’ என்ற இருவர் இதே வேலையை எப்படிச் செய்தார்கள் என அறிகிறார். அவர்கள் செலவிட்ட நேரத்தையும் , செலவிட்ட தொகையையும் அவர்கள் செய்த தவறுகளையும் ஆராய்ந்து பார்த்தபின்,  இந்த வேலைக்கு (Standard Operating Procedure) நிலையான செயல்பாட்டு முறை அவசியம் என அறிந்து 25 ரூபாய் மதிப்பில் நிலையான செயல்பாட்டு முறையையும்  வகுத்து பெட்டியை எடுத்துவந்து மேலாளரிடம் ஒப்படைக்கிறார். மேலாளர் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்

மறுநாள் அதே வேலையை மேலாளர் ‘D’ என்ற பணியாளனுக்கும் அளிக்கிறார். ஆனால் அவனோ, மேல் கூறியவர்கள் போல் எதுவும் செய்யாமல், அந்த ஆற்றுக்கு குறுக்கே படகு ஓட்டுபவரிடம் பெட்டியை அக்கரையிலிருந்து கொண்டு வர வெறும் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கிறார். இப்பொழுது செலவும் குறைந்தது. தேவையில்லாமல் ஒரு பணியாளரின் வேலையும் இந்த பெட்டியை எடுப்பதற்காக வீணாகாமல் இருந்தது. மேலாளர் செம ஹேப்பி அண்ணாச்சி.

A, B, C மூவரும் என்ன நினைத்தனர். பெட்டியை நாம் தான் சென்று எடுத்து வர வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையில் நாம் செய்யவேண்டிய வேலை பெட்டியை கொண்டு வரவேண்டியது தான். அதனை நாம் தான் சென்று எடுத்து வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட்டவர் D.

youth box

இப்பொழுது இன்னொரு சிறு கதை.

ஒரு வயதான பெரியவரிடன் வியாபாரி ஒருவர் பெருந்தொகையைக் கடனாகப் பெற்றுக்கொண்டு திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். பல முறை கேட்டும் வியாபாரி பணம் தராததால், அந்த வயதானவர் ஒரு மாற்று வழி கூறினார். வாங்கிய பணத்திற்கு பதிலாக உன்னுடைய பெண்ணை எனக்கு திருமணம் முடித்துக் கொடுத்துவிடு என வியாபாரியிடம் கேட்க வியாபாரியும் அவரது மகளும் சம்மதிக்க வில்லை.

மாறாக வேறு ஒரு வழியையும் அந்த வயதானவர் கூறினார். அதாவது ஒரு பையில் கருப்புக் கல் ஒன்றையும், வெள்ளைக்கல் ஒன்றையும் எடுத்துப் போடுவேன். உன் மகள் அதிலிருந்து ஒரு கல்லை எடுக்கட்டும். அது கருப்புக்கல்லாக இருந்தால் அவள் என்னை மணம் புரிந்து கொள்ளட்டும். உன் கடனை தள்ளுபடி செய்கின்றேன். ஒரு வேளை வெள்ளைக்கல்லாக இருந்தால் என்னை மணம் முடிக்கத் தேவையில்லை உன் கடனையும் தள்ளுபடி செய்து விடுகின்றேன். ஒரு வேளை உன் மகள் இந்த விளையாட்டிற்கு வரவில்லையென்றால் வாங்கிய பணத்திற்காக நீ சிறைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறினார். பட் அந்த டீலிங் அவங்களுக்கு பிடிச்சிருந்ததால வியாபாரியும் சரி என்றார்.

அந்த குறும்புக்காரப் பெரியவர் வியாபாரியையும் மகளையும் ஒரு ஆற்றங்கரக்கு அழைத்துச் சென்று ஒரு பையில் இரு கூழாங்கற்களை எடுத்துப் போட, அந்த பெண் மட்டும் அவர் ஒரு வெள்ளை ஒரு கறுப்பு கல்லுக்கு பதிலாக இரண்டு கறுப்புக் கற்களையே உள்ளே எடுத்து போடுவதைக் கவனித்து விட்டாள்.

இப்போது என்ன செய்வது? கல்லை எடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் தந்தை சிறை செல்ல வேண்டும். துணிந்து கல்லை எடுத்தால் கண்டிப்பாக அது கருப்புக் கல்லாகத்தான் இருக்கும். உண்மையைக் கூறி பெரியவரின் முகத்திரையை கிழிக்கலாம் என்றாலும், அது அவருக்கு மேலும் கோபத்தை உண்டாக்கும் என எண்ணி யோசித்தாள்.

நன்கு யோசித்து, பின்னர் பைக்குள் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றிற்குள் விட்டெறிந்தாள்.  பின்னர் பையிலிருந்த கருப்புக் கல்லை பெரியவரிடம் காண்பித்து “பார்த்தீர்களா நான் வெள்ளைக் கல்லைத்தான் எடுத்திருக்கின்றேன்” என கூறிவிட்டு சந்தோஷமாக தந்தையைக் கூட்டிச்சென்றாள்.

முதல் கதைக்கும் இரண்டாவது கதைக்கும் உள்ள ஒரு சிறுவித்யாசம் இரண்டாவது கதையில் அந்தப் பெண் வேறு வழியே இல்லை என்ற தருணத்திலேயே வித்யாசமாக யோசித்து ஒரு முடிவெடுத்தாள். ஒரு வேளை பெரியவர் கல்லை மாற்றியதை பார்த்திராவிட்டால் கண்டிப்பாக அப்படிஒரு யோசனை தோண்றாமல் சிக்கித்தான் இருக்க வேண்டும்.

அதேபோலத்தான் நம்மில் பலரும் வரையறுக்கப்பட்ட குறுகிய பகுதியிலேயே நம் சிந்தனைகளைச் ஓட விடுகிறோம். நமக்கு வேறு வழியே இல்லை என்ற தருணம் வரும் பொழுதே மாற்று வழிமுறைகளை தேட முயல்கிறோம் முதலில் நம் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் எந்த வரையறையும் கிடையாது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். நமக்கு மற்றவர்கள் சொல்லித்தருவது அவர்களுக்கு தெரிந்த்தே தவிற அது மட்டுமே தீர்வு என்பது அர்த்தமல்ல.  மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு கூட மிக எளிய தீர்வுகள் உண்டு. நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று வரையறைகளைத் தாண்டி வேறு வேறு கோணங்களில் சிந்திக்கப் பழகவேண்டும்.

பூமி தட்டையானது என கலிலியோவும் நினைத்திருந்தால் இன்று வரை பூமி தட்டையானது என்றே நாம் படித்துக் கொண்டிருப்போம். அதேபோல ஏதோ ஒரு சத்தியால் தான் ஆப்பிள் கீழே விழுந்தது என நியூட்டன் நினைத்ததால் தான் நமக்கு புவியீர்ப்பு விசை புலப்பட்டது. கடலைத் தாண்டியும் நகரங்கள் இருக்கின்றது என்று நம்பியதால் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்தார். கொலம்பஸ் என்றவுடன் ஒரு சிறு சம்பவம் ஞாபகம் வருகின்றது. ஒருமுறை கொலம்பஸோடு விருந்து உண்டுகொண்டிருந்த ஸ்பெயின் காரர்கள் “நீங்கள் அமெரிக்காவை கண்டறியாவிட்டாலும் நாங்கள் கண்டறிந்திருப்போம். எங்களிடம் அறிவுக்கூர்மை மிக்க ஆட்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றனர் என்றனர்.

உடனே கொலம்பஸ் ஒரு முட்டையை அவர்களிடம் கொடுத்து “இந்த முட்டையை இந்த மார்பில் தரையில் செங்குத்தாக நிற்கவையுங்கள்.. நீங்கள் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றார். அவர்களும் முயற்சி செய்தனர். முட்டையை செங்குத்தாக நிற்கவைக்க முடியவில்லை. களைப்படைந்தது தான் மிச்சம். பின்னர் கொலம்பஸ் அந்த மார்பிள் தரையில் லேசாக ஒரு குழி பறித்து அதில் அந்த முட்டையை செங்குத்தாக நிற்க வைத்தார்.

அதனைப் பார்த்த ஸ்பெயின்காரர்கள் இதென்ன ப்ரமாதம் இதைத்தான் நாங்கள் செய்வோமே என்றனர். அதற்கு கொலம்பஸ் “அடுத்தவன் செய்து காட்டிய பின்னர் அதனை செய்வது எல்லோராலும் முடியும். முதலில் செய்வதற்குதான் நிறைய பயிற்சியும் சிந்தனையும் தேவை என முடித்தார்.

இப்பொழுதும் ஒருவன் கண்டறிந்த வழிமுறையை பின்பற்றி நடக்க நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் புதியதோர் வழிமுறையைக் கண்டறிபவர்கள் தான் குறைவு. மேலே கூறிய கலிலியோ, கொலம்பஸ், நியூட்டன் யாவரும் யாரோ ஒருவர் கண்டுபிடித்த வழியைப் பின்பற்றவில்லை. தாங்களாக ஒன்றை கண்டறிந்து உலகைப் பின்பற்ற வைத்தனர். எப்பொழுதும் இதுபோன்ற எல்லை தாண்டிய சிந்தனையுடையவர்களாலேயே (out of box thinking) உலகம் அடுத்த படிக்கு முன்னேறியிருக்கின்றதே தவிற ஒரே வழிமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வருபவர்களால் அல்ல.

–    முத்துசிவா

Likes(5)Dislikes(0)
Share
 Posted by at 5:49 pm
Jun 142014
 

bkt1

அந்த மன்னன், அவனது நாட்டில் யாராவது மரங்களை வெட்டினார்கள் என்று கேள்விபட்டான் என்றால், அவ்வாறு வெட்டியவர்களுக்கு, அவனது தோட்டத்தில் கடுமையான தண்டனை கொடுத்துவிடுவான். ஓருமுறை மன்னனது காவலாளிகள், இரண்டு பேரை இழுத்துவந்து, “மன்னா இவர்கள் இருவரும் ஊருக்கு எல்லையில், பெரிய மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர், இவர்களுக்கு என்ன தண்டனை?” எனக் கேட்டனர்.

மன்னன் அந்த இருவரையும் பார்த்து, “தோட்டத்தில் இரண்டு வாளிகள் (BUCKET) உள்ளது, ஒன்று 7லிட்டர் அளவுடையது, இன்னொன்று 5லிட்டர் அளவுடையது. அவைகளை வைத்து நான் ஒரு புதிர் கூறுவேன், அதை  வைத்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்” என்று புதிரின் விதிகளையும் தெரிவித்தான்..

விதி1: அருகில் உள்ள குளத்தில் தண்ணீரை எத்தனை முறை வேண்டுமானாலும் இரண்டு வாளிகளிலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வாளிகளில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி எடுத்து வரவேண்டும்.

விதி2: அவ்வாறு எடுத்து வரும் தண்ணீரை முழுவதுமாக தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊற்ற வேண்டும். இல்லையெனில் ஒரு வாளியிலிருந்து அடுத்த வாளியில் முழுவதுமாக ஊற்றிக்கொள்ளலாம்.

விதி3: சரியாக பெரிய வாளியில் 6லிட்டர் வரும்போது மணி அடிக்கப்படும். நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். நீங்கள் மாற்றி மாற்றி தோட்டத்திலும், வாளியிலும் ஊற்றும்போது, ஒருக் கட்டத்தில் சரியாக 6லிட்டர் வரும், அதுவரை ஊற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒவ்வொருவராக முயற்சி செய்யவேண்டும்.

இதைக் கேட்டவுடன், முதலாமானவன் பல முறை முயற்சி செய்கிறான். தோட்டத்திலும் வாளியிலும் நீரை மாறி் மாறி பாய்த்து, வழி தெரியாமல், மயங்கி விழுந்துவிடுகிறான். அடுத்தவன், சற்று புத்திசாலி. கொஞ்சம் யோசித்து வழியை கண்டுபிடித்துவிடவே, சிறிய தண்டனையுடன் தப்பித்துவிடுகிறான். அவன் எப்படி இந்த சவாலை சமாளித்திருப்பான்.

சரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

9

ராமு முதலில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் உள்ளன என லேபில் ஒட்டியுள்ள பெட்டியைத் திறக்கிறான். இப்போது இரண்டு சூழ்நிலை உள்ளது.

முதல் சூழ்நிலை:

ராமு திறந்த பெட்டியில், வெள்ளைப் பந்து இருந்தால்…

சிகப்பு பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் இருக்கும்.

வெள்ளை பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு பந்து இருக்கும்.

இரண்டாம் சூழ்நிலை:

ராமு திறந்த பெட்டியில், சிகப்பு பந்து இருந்தால்…

வெள்ளை பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் இருக்கும்.

சிகப்பு பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் வெள்ளை பந்து இருக்கும்.

 

சரியான பதில் அளித்தவர்கள்:

சதீஷ், வித்யா கோபால், செந்தில் அழகன்

Likes(0)Dislikes(0)
Share
 Posted by at 5:38 pm
Jun 142014
 

 

கடவுள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும்போது,

உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது,

கடவுள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்காதபோது,

கடவுளுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,

 

இன்று நீ நிழலில் அமர்ந்து

ஓய்வெடுக்கிறாய் என்றால்,

பல வருடங்களுக்கு முன்

எவரோ ஒருவர் கஷ்டப்பட்டு

மரத்தை வளர்த்தார் என்று அர்த்தம்

 

சுயநலத்தை மறந்து

பிறரை விரும்பும் ஒரு சிலரே

மரங்களை வளர்க்கின்றனர்.

 

நீங்கள் அவ்வப்போது தோல்வி அடைகின்றீர்கள் என்றால்,

நிறைய புதிய முயற்சி எடுக்கின்றீர்கள் என அர்த்தம்

 

தினசரி நீ மேற்கொள்ளும் சின்னஞ்சிறு முன்னேற்றம்,

ஒருநாள் மாபெரும் மாற்றத்தையும் வெற்றியையும் தருகின்றது

 

மற்றவர்கள்

விரும்பி கவணித்து கேட்பதற்கு,

ஆழமாய் நீ பேச வேண்டும்,

மற்றவர்கள்

விரும்பி உன்னிடம் பேசுவதற்கு,

கவணமாய் நீ கேட்க வேண்டும்!

 

Likes(5)Dislikes(0)
Share
Share
Share