May 142014
 

hd-wallpaper-nature-40

வணக்கம் நண்பர்களே!

ஒரு வாரத்திற்கு முன்னர் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் B+ இதழைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், என் முயற்சிகளைப் பாராட்டிவிட்டு எதேச்சையாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுச் சென்றார் “இப்பொழுதெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்ப்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. செய்தித்தாள்களில் கூட பத்து சினிமா செய்திகளுக்கு மத்தியில் தான் ஒரு நல்ல செய்தியை வெளியிடுகின்றனர். இதில் அவர்களை குறை சொல்வதற்கில்லை. மக்களும் சினிமா விளையாட்டு போன்ற பொழுதுப்போக்கு விஷயங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் மக்களைப் படிக்க வைக்க அதுபோன்ற கமர்ஷியல் விஷயங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அப்படியிருக்க உன்னுடைய கட்டுரைகளை மக்கள் எப்படி விரும்பிப் படிப்பார்கள் என எதிர்பார்க்கிறாய்?”  என்றார்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் அவர் கேட்ட கேள்விக்கு அப்போது என்னிடம் எந்த பதிலும் இல்லை. அன்று இரவு சரியான உறக்கமும் இல்லை. ஒரு வேளை தவறான பாதையை தெரிவு செய்து விட்டோமோ? நாம் கூற விரும்புவது மற்றவர்களைச் சென்றடையாவிட்டால் நம் உழைப்புக்கு என்ன பலன்? என்று என்னுள் பல கேள்விகள். ஆனால், மறுநாள் எனக்குள் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் விடையாய் வந்தது ஒரு மின்னஞ்சல்.

முகம்மது ரஃபீக் என்பவர் அனுப்பிய அந்த மின்னஞ்சல் இது தான்.

“சார், உங்களது மார்ச் மாத இதழைப் எதேச்சையாக ஒரு சமூக வலைத்தளப்  பகிர்வின் மூலம் படித்தேன். அதில் நீங்கள் முதல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, ஒரு பைக் விபத்தைக் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நான் சந்திக்க  நேர்ந்தது. ஒரு நண்பரைப் பார்க்க சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டிற்கு  எனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது முகப்பேர் சிக்னலைத் தாண்டி ஒரு சிறியக் கூட்டம். பைக்கை ஓரங்கட்டிவிட்டு உள்ளே நுழைந்து பார்த்தால், தலையில் நல்ல அடியுடன் ரத்தம் வழிய 25 வயதுள்ள வாலிபர் கீழே மயங்கி விழுந்துக் கிடக்கிறார். கூடியிருந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த அதே மாதிரியான சம்பவம், அதே மாதிரியான உரையாடல்கள் நடந்தது. 2-3 காவல் அதிகாரிகளும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

ஒரு ஆச்சரியம். நொடிப்பொழுதில் என்னுள் ஏதோ ஒரு மாற்றம், அனுதாபத்துடன் கூடிய ஒரு மனித நேயம் எட்டிப் பார்த்தது. என்ன நடந்தாலும் சரி, இந்த மனிதனுக்கு தேவையான உதவியைச் செய்வோம் என்று மனது சொல்லியது. முதலில் அடிப்பட்டவரை கொஞ்சம் ஓரமாக படுக்க வைத்து ஓய்வெடுக்க வைத்தேன். அவரது செல்ஃபோனில் அதிர்ஷ்டவசமாக அவர் நண்பரின் அழைப்பு வரவே, நடந்த விஷயத்தைக் கூறினேன். கூட்டத்தில் உள்ள ஒருவர் அடிப்பட்டவருக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஃபோன் பேசி முடித்தவுடன், அடிப்பட்டவரின் தலையில் ரத்தம் வந்த இடத்தை நான் பார்த்தபோது, நல்ல ஆழமாக கீரி இருந்தது. கூட்டத்தில் காவலாளிகள் இருந்தும் கூட, அடிப்பட்டவரை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க கிளம்பினேன். அவரை என் பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்றபோது கூட்டத்தினர் ஒவ்வொருவரும் என்னை வித்தியாசமாகவும், மிகவும் வியப்புடனும் பார்த்தது நன்றாகத் தெரிந்தது.

மருத்துவமனையில் மருத்துவரோ, காயம் நல்ல ஆழமாக உள்ளது, தையல் போட்டு விடலாமா அல்லது முதலுதவி மட்டும் போதுமா என்றுக் கேட்க எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு முன் ஃபோனில் பேசியதன் பலன், சரியான தருணத்தில் அடிப்பட்டவரின் இரண்டு நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அவர்கள் காயத்தைப் பார்த்து, தையல் போடுமாறுக் கேட்டுக்கொள்ளவே, தையல் போடப்பட்டு ஓய்வெடுக்க ஆரம்பித்தார் இளைஞர்.

சில நிமிடங்களில் ஓரளவுக்குத் தெளிவான இளைஞரும், அவர் நண்பர்களும்   எனக்கு நன்றித் தெரிவித்தனர். அவர்கள் அனைவரின் கண்களில் கண்ட நன்றி உணர்ச்சி, என்னை அன்று ஒரு மனிதனாக உணர வைத்தது. வாழ்க்கையில் அன்று உருப்படியாக ஒரு விஷயத்தை செய்ததாக உணர்ந்தேன்.

இதற்குமுன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், காவலாளிகளே உள்ளார்கள், மருத்துவமனையில் பல கேள்விகள் வரும், நமக்கு ஏன் தேவையில்லாதப் பிரச்சினை என்று ஒதுங்கிருப்பேன். எதேச்சையாக உங்கள் இதழைப் படித்ததன் பாதிப்பு, என்னை சற்று வித்தியாசமாக யோசித்து நடந்துக் கொள்ள வைத்தது. தொடர்ந்து இதுப்போன்றக் கட்டுரைகளை நீங்கள் எழுதவும், என்னைப் போல் ஓரிருவரின் மனதிலாவது மாற்றத்திற்கான விதையை விதைக்கும். அதனால் எவரேனும் சமுதாயத்தில் பலனடைவர்” என்று முடித்திருந்தார்.

2

இதேப்போல் ஹைத்ராபாத்திலிருந்து மற்றொரு வாசகர், B+ இன் ஏப்ரல் மாத இதழைப் படித்துவிட்டு அவரது வீட்டு பால்கனியில் பறவைகளுக்காக நீரும், அரிசியும் வைப்பதாகவும் அதனை ஃபோட்டோ எடுத்தும் அனுப்பியிருந்தார்.

3

இப்போது திரும்ப முதல் பத்தியில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு வருகிறேன். தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். அந்த அனைவரும் B+ இதழை படிப்பார்கள் என்றோ, அனைவரிடமும் மாற்றம் உடனே ஏற்படும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை. இதனைப் படித்துவிட்டு ஒருவருக்கேனும் சில கேள்விகள் எழுந்து, அவர்களுக்குள் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட நமக்கு அது மிகுந்த மகிழ்ச்சிதான். அவ்வாறான சிறந்த மனிதர்களின் எண்ணிக்கை ஒன்று, பத்து நூறாகும் என்பது தான் நமது கனவும், நம்பிக்கையும்.

கீழுள்ள படமும் அதில் உள்ள வாசகமும் நான் சொல்ல விரும்புவதை எளிமையாகத் தெரிவிக்கிறது.

1

நண்பர்களே, நமது B+ இதழ் ஒரு சிறிய முயற்சி. நல்ல விஷயங்கள் பரவுவதற்கு, கண்டிப்பாக காலம் சற்று அதிகமாகவேத் தேவைப்படும். B+ இதழ் ஒரு நல்ல சிந்தனையின் விதை. சிறு விதைக்குள் தான் பல பெரும் விருட்சங்கள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு மாபெரும் பயணத்திற்கும், முதல் அடி எடுத்து வைத்து தான் துவக்க வேண்டும். போகும் பாதை தூரம் தான், ஆனால் பயணம் தொடங்கிவிட்டது. நிறைய நல்ல மனிதர்களின் மனமும், சிந்தனையும் இந்த  இனியப் பயணத்தில் பங்கேற்கும்போது நம்மைச் சுற்றி சிறந்த சமுதாயம் படைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(2)Dislikes(0)
Share
May 142014
 

Hannde

இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் மருத்துவம், அரசியல், இலக்கியம், சமூக சேவை என பலதரப்பட்ட களத்தில், தன் திறமையாலும் கடிண உழைப்பாலும், ஆழமாக முத்திரையைப் பதித்த டாக்டர் H. V. ஹண்டேவை பற்றிக் காண்போம் http://www.handehospital.org/hvhande.htm.

86 வயதாகும் இவர், சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஹண்டே மருத்துவமனையில், தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவ பயிற்சி செய்துக்கொண்டு வருகிறார். பல நோயாளிகளுக்கு நான்கு தலைமுறைகளாக ஒரு குடும்ப மருத்துவராக இருந்து வரும் இவர், இன்றும் சமுகத் தொண்டிலும் அரசியலிலும் தனது கால்தடையங்களைச் சிறப்பாகப் பதித்து வருகிறார்.

1942 இல் கல்லூரி மாணவராக இருந்தபோதே,  “வெள்ளையனே வெளியேறு“ போராட்டத்தில் கலந்துக்கொண்ட டாக்டர், அரசியலில் நுழைந்து பல சாதனைகள் புரிந்து, பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றார். 1965 ஆம் ஆண்டு முதல், மூதறிஞர் ராஜகோபாலச்சாரியின் (இராஜாஜி) அடிச்சுவடில் முன்னேரினார்.

தமிழ்நாடு சட்டசபைக்கு (மேலவை மற்றும் பேரவைக்கு) ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் சுகாதார மந்திரியாக பணியாற்றி உள்ளார். சுகாதார துறையில் தனது சிறந்த பணிக்காக 1985 ஆம் ஆண்டு டாக்டர் பி சி ராய் விருது பெற்றார்.

பேரரிஞர் அண்ணா, Dr.அம்பேத்கர், மூதறிஞர் இராஜாஜி, இவர்களின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள டாக்டர் ஹண்டே, தற்போது பா.ஜ.க வில் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும், தமிழக பா.ஜ.க. வின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இவருடன் பேட்டியிலிருந்து..

 

B+: வணக்கம் சார். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

டாக்டர்: எனது தந்தை தான் எனக்கு மருத்துவத் துறையில் முழு ஈடுபாடு வரக் காரணமானவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற அவரின் தொழில் நாட்டத்தைப் பார்த்து மிகவும் வியந்திருக்கிறேன். பல நாட்கள் அவராகவே நோயாளிகளின் இல்லத்திற்கு, இரவில் கூட சென்று மருத்துவப் பணி செய்து வருவார். பணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கமாட்டார். ஒரு மாபெரும் அர்பணிப்பை நேரடியாகவே அவரிடம் பார்த்து வளர்ந்ததன் தாக்கம் தான், பிற்காலத்தில் நான் செய்த வேலைகளுக்கு அடித்தளம் இட்டது.

 

B+: மருத்துவத் துறை அனுபவம் பற்றி..

டாக்டர்: 1945-50 இல் சென்னை கே.எம்.சி கல்லூரியில், மருத்துவம் படித்தேன். என் தந்தை 1000ரூபாய் கொடுத்ததை வைத்து 1950 இல் இந்த ஷெனாய் நகர் மருத்துவமனையை ஆரம்பித்தேன். நல்ல பெயர் கிடைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தேடி வர ஆரம்பித்தனர். அப்போதிலிருந்தே பணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதில்லை. குறைந்தக் கட்டணம் தான் வாங்குவேன். பல நோயாளிகளுக்கு அவர்களது இயலாத நிலைக் கண்டு இலவச சிகிச்சை வழங்குவேன்.

1951 முதல் 53 ஆண்டு வரை, கே.எம்.சி கல்லூரியில், பயிற்சி ஆசிரியராகவும் இருந்தேன். கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியின் தந்தை கூட என்னிடம் மாணவராகப் பயின்றவர். 1955 இல் எனக்கு திருமணம் நடந்தது. இரண்டு மகன்களும் இப்போது  மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவராக ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஒரு மகிழ்ச்சி, திருப்தி, மன நிறைவு. மிகவும் ரசித்து, முழுமையாக என்னை அர்பணிதது, இந்தத் தொழிலை செய்து வருகிறேன். இந்த சேவையில் பெருமை அடைகிறேன். நிறையப் பேருக்கு இலவச மருத்துவம் செய்து, அவர்களைக் குணப்படுத்தியது எல்லாம் ஒருப் பெரியத் தியாகமாக இல்லை. அது எனக்கு ஒரு பெரிய ஆனந்தத்தையும், பெருமிதத்தையும் கொடுத்தது. அந்த உணர்வுக்கெல்லாம் மதிப்பே இல்லை. இந்த சேவை மனப்பான்மையில் கிடைக்கும் திருப்தி வேறு எங்கும் கிடைக்காது.

 

B+: ஏதேனும் சுவையான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

டாக்டர்: நிறைய இருக்கிறது. அரசியல் சம்பந்தப் பட்ட ஒரு உதாரணமே சொல்கிறேனே. திரு.இராஜாஜியின் கட்சியில் எம்.எல்.ஏ வாக இருந்தேன், அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். எதிர்கட்சியில் இருக்கும் சிலர் கூட  என்னைத் தேடி வந்து என்னிடம் மருத்துவம் பார்ப்பார்கள். அவர்களுக்கு குடும்ப மருத்துவராகவும் இருந்துள்ளேன். அவ்வாறுள்ள ஒரு அரசியல்வாதி, தன் பெண்  திருமணத்திற்கு என்னையும் அழைத்தார். திருமணத்தில் எதிர்கட்சிக்காரர்கள் எல்லோரும் இருக்க, நானும் அழைக்கப்பட்டுக் கலந்துக் கொண்டேன். அப்போது நான் அங்கு அரசியல்வாதியாக இல்லை, மருத்துவராக அழைக்கப்பட்டேன்.அரசியலில் எதிரெதிராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நட்புடன் இருக்க  மருத்துவத் துறை உதவியது. இதெல்லாம் மிகப் பெரிய திருப்தி அளிக்கும்.

எத்தனையோ நோயாளிகளுக்கு வைத்தியம் செய்துவிட்டேன். அவர்கள் குணமடைந்து சந்தோஷமாக திரும்பச் செல்லும் போது அத்தனை பேரானந்தம். நிறைய நோயாளிகளிடம் கொடுப்பதற்கு பண வசதிக் கூட இருக்காது. அதையெல்லாம் சேவையாக மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன்.

 

B+: இப்போது பயிலும் மாணவர்களைக் காணும்போது, அவர்களுக்கு என்ன மாதிரியான குறிப்புகள் வழங்குவீர்கள்?

டாக்டர்: என் மாணவர்களுக்கும், இப்போது மருத்துவம் பயில்பவர்களுக்கும்  சிலவற்றை அடிக்கடி கூறுவேன். இந்தத் துறைக்கு நுழையும்போது எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று யோசித்து வந்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தோல்வியில் முடியும். எவ்வாறு நற்சேவை செய்யலாம், எவ்வாறு நல்ல மருத்துவம் மக்களுக்கு செய்ய முடியும் என்று நினைத்து வந்தீர்கள் என்றால், மிகப்பெரிய வெற்றியைச் சந்திப்பீர்கள். இதை நான் அனைத்து மருத்துவர்களிடமும் கூறுகிறேன்.

பல மாணவர்களைப் பார்க்கிறேன். எம்.எம்.சி, ஸ்டேன்லி, கே.எம்.சி போன்ற கல்லூரியில் நுழைவு கிடைத்தவுடன் அத்தனை மகிழ்ச்சி அவர்களிடம். ஆனால் அது இரண்டாம் வருடம், மூன்றாம் வருடம் என்று போகும்போது, படிப்படியாகக் குறைந்து, கல்லூரி முடித்து வெளிவரும்போது மிகவும் சோர்ந்து போய் வருகின்றனர். இங்கே போட்டி அதிகம், உடனேயெல்லாம் சம்பாதிக்க முடியாதென்றும், வாய்ப்புகள் மிகக் குறைவு என்றும் எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் தான் அவர்களுக்கு தெரிய வருகிறது. அவர்கள் மனதில் குறிக்கோலை நிர்னயிக்கவில்லை. நான் அதைத் தான் அவர்களிடம் கூறுவேன். முதலில் உன் லட்சியத்தை நிர்னயித்துக்கொள், பின் மருத்துவத் துறையில் நுழை என்று.

என் வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்தே இந்த மனநிறைவை அடைந்ததாலும், வேலையை ரசித்து செய்வதாலும், எனக்கு ஒரு நாள் கூட சோர்வே வருவது கிடையாது. உங்களது பேட்டி முடிந்தவுடன் நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன். நோயாளிகளிடம் தெளிவாகப் பேசி பிரச்சினைகளை எடுத்துக் கூறுவேன். என்னவெல்லாம் செய்ய வேண்டும், எதெல்லாம் செய்யக் கூடாது என்றும் பொருமையோடு சொல்லித் தருவேன். இதை ஒரு சேவையாகவே பார்ப்பதால், மிகவும் ரசித்து, அனுபவித்து செய்ய முடிகிறது.

 

B+: அரசியல் அனுபவம் பற்றி..

டாக்டர்: அரசியல் வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நிறைய இருக்கிறது. முக்கியமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூறுகிறேன். மொத்தம் 9 தேர்தலில் நின்றேன், அதில் 6 இல் வெற்றிப் பெற்றேன் – இதில் மூன்று முறை எம்.எல்.ஏ ஆகவும், மூன்று முறை மேல்சபை பட்டதாரி தொகுதியிலும் வென்றேன்.

முதலில் 1962 இல் எனக்கு சென்னை மாநகரத்தின் பட்டதாரித் தொகுதி கிடைத்தது. நிறையப் பேருக்கு மருத்துவ சேவை செய்து நல்ல பெயர் எடுத்ததாலும், மிகக் கடிணமாக ஓராண்டு உழைத்ததாலும் முதல் வெற்றி கவுன்சில் தலைவராக (Legislative Council Chairman) கிடைத்தது. Dr.A.L. முதலியார், Dr.P.V. செரியன், திரு.காமராஜரின் வேட்பாளர், திரு. இராஜாஜியின் வேட்பாளர், அறிஞர் அண்ணாவின் வேட்பாளர் என்று பல ஜாம்பவான்கள் நின்றும் கூட, எனக்கும் Dr.A.L. முதலியார் அவர்களுக்கு மட்டும் தான் வெற்றிக் கிட்டியது. அப்போது இரண்டு சீட்கள் உண்டு, எங்கள் இருவரைத் தவிர அனைவரும் டெப்பாசிட்டை இழந்தனர்.

அப்போது திரு. S.V.சுப்ரமணியம் மூலம் திரு.இராஜாஜி அழைப்பு விடுக்க, அவரைப் போய் சந்தித்தேன். திரு.இராஜாஜி அவர்களிடம் மிக நேரடியாக அவரிடம் பிடித்த மற்றும் பிடிக்காதக் கொள்கைகளை எடுத்துக் கூறினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். தனது “சுதந்திரா கட்சி” யில் சேருமாறு கேட்டுக்கொள்ளவே, நானும் அவரிடம் சேர்ந்தேன். “நீ என்ன நினைக்கிறாயோ அதை வெளிப்படையாகச் சொல், யாருக்கும் பயப்படாதே” எனக் கூறினார்.

இன்னொரு சம்பவம். அப்போது 1966 ஆம் வருடம். சென்னையில் பயங்கர மழை. சமூகத் தொண்டில் ஆர்வம் அதிகம் என்பதால், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினேன். சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை போன்ற பகுதிகளில் கடுமையாக உழைத்து மக்களுக்காக வேலை செய்தேன். பேரரிஞர் அண்ணாவிடம் நெருங்கிப் பழக அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அண்ணாவைப் போல் ஒருத் தலைவரை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. அவர் மீது எனக்கு பெரும் மதிப்புண்டு. அவர் என் பெயரை வழிமொழிந்ததில், 1967 தேர்தலில் “பூங்கா நகரத்” (PARK TOWN) தொகுதியில் போட்டியிட்டேன். திரு.காமராஜர் நிறுத்தி வைத்த, பெரிய பேர்பெற்ற  ஒரு வேட்பாளரை வென்றேன்.

நிறைய அருமையான அனுபவங்கள் அரசியலில் கிடைத்தது. வெற்றி பெற்றவுடன், தொகுதியை, 9 வட்டமாகப் பிரித்தேன். ஒவ்வொரு வட்டத்திலும் கிட்டத்தட்ட 12000 மக்கள் இருப்பர், 10-12 தெருக்கள் இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மதியமும் ஒரு வட்டத்திற்கு செல்வேன். பொதுவான இடத்தில், அந்த வட்டத்து மக்களை வரவைத்து, சந்திப்பேன். அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டுத் தேவையானதை செய்து தீர்த்து வைப்பேன். இவ்வாறாக மூன்று மாதங்களில் ஒருமுறை, அனைத்து வட்டத்தில் உள்ள மக்களையும் சந்தித்து விடுவேன். இந்த களப்பணி செய்ததால், 1971இல் நடந்த மற்றொரு கடினமான தேர்தலிலும் வென்றேன். எந்தப் பணியிலும், நம்மை முழுமையாக அர்பணித்து, கடுமையாக உழைத்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்காக இதையெல்லாம் கூறுகிறேன்.

 

B+: இலக்கியத்தில் உங்களது பங்குப் பற்றி?

டாக்டர்: தமிழை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டேன். நிறைய இலக்கியங்கள் படித்தேன். தமிழில் உள்ள நிறையப் புத்தகங்கள், செய்யுள்கள் என நிறையப் படித்தேன். கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, ஒரு புத்தகத்தை வெளியிட்டேன். மற்ற நிறையப் புத்தகங்களும் எழுதியுள்ளேன். அரசியலிலும், மருத்துவத்திலும் செய்ததை விட, இரு மடங்கு இலக்கியத்திற்காக செய்துள்ளேன். படிக்கும் காலத்தில் நான் சராசரி மாணவன் தான். பிற்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். மிகவும் கஷ்டப்பட்டு இலக்கியத்தையும், ஆங்கிலத்தையும் கற்று இதையெல்லாம் செய்தேன்.

 

B+: குடும்பத்திற்கு எப்படி நேரம் ஒதுக்குவீர்கள்?

டாக்டர்: எத்தனை வேலை இருந்தாலும் குடும்பத்திற்கு கண்டிப்பாக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். நான் அரசியலில் தீவிரமாக இருந்த சமயம், கோட்டைக்கு சென்றுக்கொண்டும், வந்துக்கொண்டும் இருப்பேன். ஆனால் அப்போது கூட, மதிய உணவிற்கு வீட்டுக்கு போகும்போது, மகன்களிடம் நல்ல நேரம் கொடுத்து, அவர்களிடம் கலந்துரையாடுவேன். நாம் என்றுமே குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது. நம் நாட்டுக் கலாச்சாரப்படி குடும்பம் மிக முக்கியம். வீட்டில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

 

B+: எப்படி இத்தனை நேரம் கிடைக்கிறது?

டாக்டர்: நம் அனைவருக்கும் நேரம் நிறைய இருக்கிறது. நாம் தான் அதை விரயம் செய்கிறோம். நான் ஒரு நிமிடம் கூட விரயம் செய்வதை விரும்பமாட்டேன். எல்லா நண்பர்களிடமும் இதை சொல்வதுண்டு – எனக்கு விலை உயர்ந்தப் பொருள் என்றால் அது நேரம் தான். நேரத்தை சிக்கனமாக பயண் படுத்தினோம் என்றால், 24மணி எனது 48மணி ஆக கூட மாற்றலாம்.

 

B+: மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதேனும் நீங்கள் கூற விரும்பும் செய்தி.

டாக்டர்: நான் கூற விரும்புவது இது தான். வேலையில் திருப்தி ரொம்ப முக்கியம். இதை நான் மருத்துவத்துறைக்கு மட்டும் சொல்லவில்லை. பொதுவாக எல்லோருக்குமே தான். என்ன வேலை செய்தாலும், உங்களுக்கு அதனால், சந்தோஷமும், திருப்தியும் வந்தால் மட்டும் செய்யுங்கள். வேறு வழி இல்லை, பணத்திற்காக மட்டும் இந்த வேலையைச் செய்கிறேன் என்று செய்தீர்கள் என்றால், அதில் உங்களுக்கு உபயோகம் இருக்காது. மனதிற்கு பிடித்த வேலையை மட்டும் செய்யுங்கள்.

மகிழ்ச்சியும், மன நிறைவும், குறிக்கோளாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி தருகிறது என்று தவறான பாதையில் சென்று பொருளீட்டினாலோ, அல்லது வேறு எதாவது தவறு செய்தாலோ, அது மகிழ்ச்சிக்கு பதில் துன்பத்தையே தரும். அதனால் போகும் பாதை நல்ல பாதையாக இருக்க வேண்டும். செய்கிற வேலையில் ஆர்வமும் பிடிப்பும் வேண்டும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லையென்றால் எதையும் சாதிக்க முடியாது.

உலகத்தில் நாம் இருப்பது நிரந்தரம் இல்லை. வாழும் வரை மனநிறைவுடனும், திருப்தியுடனும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இந்தத் தேவைக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ, அவை அனைத்தையும் செய்யவேண்டும். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள, ஏதெனும் பாசிடிவான செயல்களை செய்துக் கொண்டே இருங்கள்.

Likes(1)Dislikes(0)
Share
May 142014
 

VVS

சில மாதத்திற்கு முன்பு வேலை விஷயமாக திருச்சிக்கு காலை ரயிலில் போக வேண்டியிருந்தது. அப்போ உடன் இருந்த சக பயணி ஒருவர் சொன்ன நல்ல விஷயத்தை இப்போ படிக்க போறீங்க.

எல்லா ஊரிலேயும் லட்சக்கணக்கான மக்கள் இருந்தாலும் சில நபர்கள் தான் அந்த ஊருக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கிறார்கள். பாளையம்கோட்டைனா கட்டபொம்மன், போர்பந்தர்னா காந்தி, எட்டயபுரம்னா பாரதி, திருப்பூர்னா குமரன் இப்படி சொல்லிட்டே போகலாம். அது மாதிரி வரகனேரினா  வேங்கடேச சுப்பிரமணிய அய்யர். இந்த பெயரை புதுசா கேக்குற மாதிரி இருக்கும். ஆனால், வ.வே.சு.அய்யர் என்று நமக்கு அறிமுகமான சுதந்திர போராட்ட வீரருடய முழு பெயர் தான் இது.

காந்தியுகத்திற்கு முன் சுதந்திர வேள்வியை நடத்திட தமிழகம் பல தவப்புதல்வர்களை கொடுத்தது. அவர்களுள் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார், முண்டாசு கவிஞன் என்று அழைக்கப்பட்ட சுப்ரமணிய பாரதி, மற்றும் வ.வே.சு. அய்யர் என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய அய்யர் இவர்கள் எல்லோரும் சமகாலத்தவர்கள்.

வ.வே.சு.அய்யர் 1902இல் சட்டம் படித்து, திருச்சி மற்றும் ரங்கூனில் வேலைப் பார்த்து 1907இல் இங்கிலாந்திற்கு பாரிஸ்டெர் சட்டம் [Barrister Law] படிக்க சென்றார். அந்த சமயத்தில் வீர் சாவர்கருடன் தொடர்பு ஏற்பட்டு சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்கர் அவர்கள், அய்யரை ராஜரிஷினு தான் கூப்பிடுவார். மற்ற விடுதலைப்போராட்ட வீரர்களான விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின்  “இந்தியா” பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

சாவர்கர், 1857 இந்தியா சுதந்திர போர் என்று ஒருப் புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்கள், அப்புத்தகத்தை தடை செய்தவுடன், அந்த புத்தகத்தை ரகசியமாக இந்தியாவிற்கு எடுத்து வந்து முதல் பதிப்பு வருவதற்கும் அய்யர் பெறும் பங்கு வகித்தார். சாவர்கர் அந்தமான் சிறையிலிருந்து வெளிக்கொணர பல முயற்சிகள் எடுத்தார் அய்யர்.

நிறையப் பேருக்கு வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார் என்று தெரியும். ஆனால், அய்யர் தான் அவருக்கு துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார் என்று தெரியாது. நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயுதம் ஏந்தி போரடினவங்களோடா சேர்க்கப்ப்படவேண்டியவர். அதற்காகப் பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்வு நடத்தியுள்ளார்.

 

இலக்கியத்திலும் தொண்டு:

பாரதிக்கு அடுத்தபடியாக வ.வே.சு.அய்யர், தமிழ் இலக்கியத்திற்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளார். வ.வே.சு.அய்யர் சிறந்த இலக்கியவாதிகவும், மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வ.வே.சு.அய்யர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு மிக நீண்ட ஆய்வு முன்னுரையும் வழங்கியுள்ளார். இலக்கியவாதிகள் இவரை திறனாய்வின் முன்னோடி என்று சொல்கிறார்கள்.

இன்றைக்கு எல்லோரும் சிறுகதைகள் படிக்கிறோம். தமிழில் சிறுகதையின் தந்தை வ.வே.சு.அய்யர்னு சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். வ.வே.சு.அய்யர் “குளத்தங்கரை அரச மரம்” என்ற பெயரில் ஒரு சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதையாகும். 1917-ஆம் ஆண்டில்வெளிவந்த “மங்கையர்க்கரசியின்காதல், காங்கேயன், கமலவிஜயம், ழேன்ழக்கே, குளத்தங்கரை அரசமரம் ஆகிய ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இதுவே தமிழில் வெளி வந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.

அய்யரது இலக்கியப்பணிக்குப் பின்புலமாக இருந்தது அவரது பரந்த படிப்பு. ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு முதலான மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார். அந்த மொழிகளில் உள்ள காவியங்களை அந்த மொழிகளிலேயே படித்தவர் அவர். கம்பராமாயணத்தையும் ஆழமாகப் படித்திருக்கிரார். கம்பனைப் படித்து அதில் காதல் கொள்ளாதோர் எவரும் இருப்பாரோ. கம்பனை மற்றக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுக்காட்டி, இவர்கள் எல்லாரையும் விடக் கம்பன் உயர்ந்தவன் என்று கூறியவர் அய்யர்.

அவருடைய வார்த்தையாகவே பார்ப்போமே – “கவிலோகத்தில் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்ந்து வணங்க வேண்டியதுதான். மேல்நாட்டாருக்குள் கவிசிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர் (Homer), விர்ஜில் (PubliusVergiliusMaro), தாந்தே (Durante degli Alighieri), ஷேக்ஸ்பியர் (Shakespeare), மில்டன் (Milton), மோலியர் (Jean-Baptiste Poquelin (a) Molière), கதே (Kate Tempest) ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை

சொன்னது மட்டும் இல்லாமல் அய்யர், கம்பனைப் பற்றி ஆங்கிலத்தில் “A Study of Kamba Ramayana” என்ற நூலை எழுதினார். எழுதினார் என்றால் வீட்டில் இருந்து எழுதவில்லை. தீவிரவாத செயலில் ஈடுபட்டார் என்று ஆங்கில அரசு இவரை சிறையில் அடைத்தது. 1921-ல் பெல்லாரி சிறையில் 9 மாதம் இருந்போதுதான் கம்பனைப் பற்றி எழுதினார். இந்த முயற்சியுடன் அய்யர் நிற்கவில்லை. சாதாரண மனிதனுக்கும் விளங்க வேண்டும் என்று கம்பராமாயணத்தினை பதம் பிரித்து பாலகண்டத்தினை சுருக்கி வெளியிட்டார். இதே போன்று பாடபேத ஆராய்ச்சி, கம்பனது காலம் பற்றிய ஆராய்ச்சி ஆகியவற்றிலும் அய்யர் ஈடுபட்டார். சிறைதண்டனைகள், அவருள் இருந்த மற்றொரு இலக்கிய திறைமையை வெளிக்கொணர கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டார்.

இத்துடன் மட்டுமல்லாமல் கவிதை பற்றிய கொள்கையை மூன்று கட்டுரைகளில் விவரித்துள்ளார். அவரது “காவியஉத்தியானம்’ என்ற கட்டுரை உலக இலக்கியங்கள் அனைத்தினையும் பற்றியது.

தமிழ்நாட்டு அறிஞர்களில் இவ்வளவு மொழிப்புலமை வாய்த்த ஆய்வாளர்கள் இருந்திருப்பார்களா என்கிற சந்தேகம் வருகிறது.

வன்முறைப்பாதையில் நம்பிக்கை கொண்டிருந்து, அந்தப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவரான வ.வே.சுஅய்யர், காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக ஆன ஆரம்பகாலத்தில், காந்தியை நேரில் சந்திக்கிறார். அந்த சாதாரண சந்திப்பில் காந்தியின் தோற்றத்தாலேயே மனமாற்றம் கொண்டு உறுதியான அகிம்சைவாதியாக ஆனார்.

இன்றைக்கு எல்லோரும் ஆங்கிலேய கல்விமுறை சரி இல்லை என்று சொல்கிறோம். இதை 1920-லேயே நிறைய பேர் சொன்னார்கள். பின்னாளில் காந்தி தேசியத்தை வளர்க்கிற சுதேசிக்கல்வி முறை தான் இந்த நாட்டுக்கு நல்லது என்று அவருடைய ஆசிரமத்தில் அதற்கான பாடம் சொல்லி கொடுத்தார். அதை பலபேர் பின் பற்றினார்கள். ஐய்யர் கூட நெல்லை அருகே உள்ள சேரண்மாதேவில பரத்வாஜ் அஷ்ரம்னு ஒன்றைத் தொடங்கி அங்குள்ள பிள்ளைகளுக்கு தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார். ஆனால் பணப் பற்றாக்குறையினாலும் அய்யரின் அகால மரணத்தினாலும் அந்த ஆசிரம பள்ளி தொடர்ந்து நடக்கவில்லை.

வ.வே.சு.அய்யர் பாபநாசம் அருவியில், தனது மகளைக் காப்பாற்ற முனைந்து, தவறி விழுந்து, 1925-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் நாள் மண்ணுலகை விட்டுப் பொன்னுலகை அடைந்தார்.

புறக்கணிக்கப்பட்டோ இருட்டடிக்கப்பட்டோ இருக்கிற நம்ம வரலாற்றை வெளிச்சம் போட்டு காட்டினாலே தனி தெம்பு வரும் என்று அந்த பயணத்தில் புரிந்துக் கொண்டேன்.

– D.சரவணன்

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 1:10 am
May 142014
 

4

இரை எந்தக் கண்டத்தில் இருந்தாலென்ன

இறக்கையாய் உன் உந்துசக்தி இருக்கையில்!

இலக்கு எத்தனை தொலைவில் இருந்தாலென்ன

ஈட்டியாய் பாயும் உன் நம்பிக்கை இருக்கையில்!

 

போராட்டம் எத்தனை வந்தாலென்ன,

எரிமலையாய் துணிவு இருக்கையில்!

சவால்கள் எத்தனை வந்தாலென்ன,

சாதிக்க நீ வெறியுடன் துடிக்கையில்!

 

பயணம் எத்தனை தூரம் இருப்பின் என்ன,

சூறாவளியாய் உன் வேகம் இருக்கையில்!

பிரச்சினைகள் எத்தனை இருப்பின் என்ன,

சுட்டெரிக்கும் விவேகம் உன் வசம் இருக்கையில்!

 

சோகம் பல சூழ்ந்து வந்தாலென்ன

அக்கினி பிழம்பாய் உன் சக்தி இருக்கையில்!

சோர்வடையச் செய்யும் சூழ்நிலைகள் வந்தாலென்ன

சுறுசுறுப்புடன் கூடிய உன் விடாமுயற்சி இருக்கையில்!

 

முட்டுக்கட்டை எத்தனை இருந்தாலென்ன – அவைகளை

மூட்டைக்கட்டும் கடிண உழைப்பு உன்னிடம் இருக்கையில்!

முறுக்கேற்றி பல எதிர்ப்புகள் வந்தாலென்ன

வெற்றி பெரும் பேராற்றல் உன்னிடம் இருக்கையில்!

 

ஆயிரம் கைகள் மறைத்தாலும்

ஆதவனை மறைக்க இயலுமா?

ஆயிரம் செம்மறிகள் சேரினும்,

சிங்கத்தை எதிர்க்க இயலுமா?

 

நண்பா, நீ சிங்கம், ஆதலால்

கர்ஜித்து, வீறுகொண்டு எழுந்து வா

உலகம் உன் காலடியில்!!!!

–    விமல் தியாகராஜன்

Likes(8)Dislikes(0)
Share
May 142014
 

6

உலகில் மனிதர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களும், பார்வைகளும், செயல்களும்,  இடத்திற்கு இடம் வேறுபட்டுக்கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் அனைவருக்குமே பிடித்த பொதுவான விஷயங்கள் என்று பார்க்கப்போனால், ஒரு சில விஷயங்கள் மட்டுமே. அவற்றில் ஒன்றே இந்தப் பாராட்டு.

புகழ்ச்சி பிடிக்காத மனிதர்கள் என்று எவருமே கிடையாது. முகத்திற்கு நேராக மறுத்தாலும் உள்ளுக்குள் மனது மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்புகிறது. மற்றவர்கள் செய்யும் செயல் மிகச்சிறியதாக இருப்பினும் அதனை உணர்ந்து பாராட்டும் பண்பு அனைவருக்கும் இருப்பதில்லை.

“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என கீதை உரைத்தாலும், இரண்டாவது முறையாக நம் கடமையைச் செய்ய, முதல் முறை செய்த கடமைக்கு ஒரு சிறிய பாராட்டு தேவைப்படுகின்றது. இந்த பாராட்டு என்பது மிகப்பெரிய பரிசாகவோ,  இல்லை பணமாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை. “நன்றி” என்ற ஒரு  சொல்லே போதுமானது. இந்த  வார்த்தையின் தாக்கம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது பெரிதாகத்  தெரியவில்லை  என்றாலும் சற்று உள்ளிறங்கிப் பார்ப்போமேயானால், மனிதர்கள் இந்த வார்த்தைக்கு  எவ்வளவு ஆசைப்படுகின்றனர் என்று விளங்கும்.

பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் ஒரு சாலையில் செல்லும் போது எதிரே வந்து கொண்டிருப்பவர், தவறுதலாக கையில் வைத்திருக்கும் புத்தகத்தை கீழே தவற விட, அது நம் காலடியில் வந்து விழுகிறது. உடனே அதனை

நாம் எடுத்துக் கொடுக்க, அவர் நமக்கு “ரொம்ப நன்றிங்க” என்று சொல்கிறார். உடனே அதற்கு நம் பதில்  “அட பரவால்லீங்க இதுல என்ன இருக்கு?”.  அதாவது நாம் செய்த உதவிக்கு நன்றி தேவையில்லை..  நன்றிக்காக நாம் அதைச் செய்யவில்லை, என்று பொருள் படும்படிக் கூறி அவரை அனுப்புகிறோம். அதே  மனிதர் நாம் அந்த புத்தகத்தைக் கீழிருந்து எடுத்துக் கொடுக்கும் போது பதில் எதுவும் கூறாமல் புத்தகத்தை  வாங்கிக்கொண்டு கிளம்புவாரேயானால் நாம் “இதுல என்ன இருக்கு” என்றா நினைப்போம். “கீழக்கிடந்து  புத்தகத்த எடுத்து கொடுத்துருக்கேன், ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போகுது பாரு” என்று  திட்டுவோமா இல்லையா?  நாம் செய்த மிகச்சிறிய உதவிக்கு கூட நன்றி என்ற ஒரு வார்த்தையை  எதிர்பார்க்கிறோம். அதே போலத்தான் ஒவ்வொருவரும். அவர்கள் செய்யும் செயல்களுக்கு அதற்கேற்றார் போல் அங்கீகாரமாய் ஏதையாவது எதிர்பார்க்கின்றனர்.

பல உறவுகளில் இன்று பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் அங்கீகாரமோ, பாராட்டுதலோ மிக அவசியமாக  இருக்கிறது. உதாரணத்திற்கு நம்மில் எத்தனை பேர், நம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இன்று சாப்பாடு நன்றாக இருந்தது எனக் கூறுகிறோம்?  இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் அந்தப் பாராட்டை பெறுபவருக்கு  அது ஒரு ஊக்க டானிக்காக இருக்கும். பொதுவாழ்க்கையைக் காட்டிலும் பெரும்பாலும் பணி சார்ந்த  இடங்களிலேயே இந்த பாராட்டுதல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு வேலையை எவ்வளவு கடினமாக உழைத்து செய்தாலும், அந்த வேலையைச் செய்ததற்காக நான்கு பேருக்கு  மத்தியில் நம்மை ஒருவர் பாராட்டும்பொழுது, அந்த வேலையைச் செய்ய நாம் பட்ட துன்பங்கள் அனைத்தும்  மறைந்து போகின்றன. அதே போல் அவ்வளவு கடினமாக உழைத்தும், அந்த வேலையை முடித்தற்கான ஒரு  சிறிய பாராட்டு கூட கிடைக்கவில்லை  என்றால் ஏற்படும் மன உழைச்சல் என்ன என்பதையும் நாம் நன்றாக  அறிவோம்.

வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஒரு சிறு ஆய்வு முடிவு என்ன சொல்கின்றது என பார்ப்போம். என்பது சதவீத பணியாளர்கள், மேல் அதிகாரிகள் தாங்கள் செய்த பணிகளை அங்கீகரித்துப் பாராட்டும்போது மட்டும் மிகவும் உற்சாகமாகவும் கடினமாகவும் உழைப்பதாகவும், மீதமுள்ள இருபது சதவிகிதத்திற்கும்  குறைவான பணியாளர்களே மேலதிகாரிகள் வேலையில் குறை சொல்லும் போதோ அல்லது பணிநீக்கம் செய்யப்படுவோம் என்ற பயத்திலேயோ கடினமாக உழைப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இன்னொரு ஆய்வில், ஐம்பது  சதவீதத்திற்கும் அதிகாமான பணியாளர்கள் ஒரே அலுவலகத்தில் நீடித்திருக்கக் காரணம் மேலதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் முறையான பாராட்டும், அங்கீகாரமுமே என்றும் வேறு அலுவலகத்திற்கு மாறும் பணியாளர்களோ, முந்தைய அலுவலகத்தில் பணிக்குத் தகுந்த  அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தை முக்கியமாகக் கூறியிருக்கின்றனராம்.

மனிதனுக்குள் காணப்படும் மிக உயரிய பண்புகளில் இந்த பாராட்டுதலும் ஒன்று. சிலருக்கு மற்றவர்களைப் பாராட்டுவது என்பதே தெரியாது. மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும், ஆனால்  நாம் யாரையும் பாராட்டி விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஏனென்றால் மற்றவர்களை பாராட்டினால் இவர்களின் கவுரவம்  பாதிக்கப்படும் என்றும் பாராட்டு பெருபவர்களுக்கு தலைக்கனம் கூடிவிடும் என்றும் கருதுவார்கள்.

ஒரு விதை தானாக விருட்சம் விட்டு வெளியே  வருகிறது என்றால், அதன் வளர்ச்சியைத் தூண்டும் தண்ணீர் போன்றதே இந்தப் பாராட்டு. ஒருவரின் செயலைப் பாராட்டுவதின் மூலம் அந்த செயல் மென்மேலும் சிறக்குமே தவிர எக்காரணம் கொண்டும்  மங்கிப்போகாது.

அலுவலகத்தில் சக பணியாளர்களை பாராட்டுவதற்கும் அங்கீகரிப்பதற்கும் சில வழிமுறைகள்:

1. நம் ஒவ்வொரு பணியாளர்களையும் நம்மிடமிருக்கும் விலைமதிப்பில்லாத சொத்தாக மதிக்கவேண்டும்.  ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துகள் எதுவாக இருந்தாலும், முதலில் அதனை முழுவதுமாகக் “திறந்த மனதோடு (OPEN MIND)” கேட்பதே அவர்களுக்குக் கிடைக்கும் முதல் மற்றும் பெரிய அங்கீகாரம்.

2. சக ஊழியர்கள் செய்யும் ஒவ்வொரு சிறந்த வேலைக்கும் அவ்வப்போது சிறு பரிசுகளை வழங்குவது நல்லது. அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களுக்கு இடையிலும் ஒரு ஆரோக்கியமான  போட்டியாக அமையும்.

congratulations

3. அவ்வப்போது சக ஊழியர்களுக்கு உணவு விருந்தளித்து ஆச்சர்யப்  படுத்துங்கள்.

4. வெற்றிகளைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். சிறு விஷயமாக இருந்தாலும் அதனைக் கொண்டாடுவது, அதைவிட மிகப் பெரிய வெற்றிகளை அடைவதற்கு வித்தாக அமையும்.

5. பாராட்டும் பொழுது குறைகள் கூறுவதை தவிருங்கள். “நீ இந்த வேலையை நன்றாக செய்திருக்கிறாய்.. ஆனால் இப்படி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்” என்று ஒருவரிடம் கூறும் பொழுது பாராட்டியதற்கான அர்த்தமே இல்லாமல் போகிறது. முடிந்த வரை பாராட்டும் பொழுது ஆனால் என்ற  வார்த்தையை தவிருங்கள். ஒரு வாக்கியத்தில் ஆனால் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் பொழுது அதற்கு  முன் கூறிய வார்த்தைகள் மதிப்பிழக்கின்றன.

6. அப்படி வேறு வழியே இல்லை, ஒருவர் தவறு அதிகம் செய்கிறார். அவரிடம் பேசி அவர் தவறை எடுத்துச் சொல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால், அவரை பத்து பேர் முன் நிறுத்திவைத்து, அந்த  தவறை சுட்டிக்காட்டாதீர்கள். அவரைத் தனியாக அழைத்து, உங்கள் கருத்தை அவருக்கு புரியும்படி சொல்லுங்கள்.

             “PRAISE IN PUBLIC, PUNISH WHEN ALONE” என்பார்கள்.

அதாவது, எல்லோருக்கும் முன் ஒருவரைப் பாராட்டலாம், ஆனால், எவர் முன்பும் ஒருவரை திட்டாமல் இருப்பது என்பது ஒரு பெரிய நற்பண்பாக இருக்கும்.

சிறு சிறு விஷயங்களைக்கூட பாராட்ட ஆரம்பிக்கும் போது, நமக்குள் இருக்கும் பொறாமை குணங்களும் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்து நட்புறவுகள் வலுப்பெறுகின்றன.

கடைசியாக ஒரு விஷயம். பாராட்டும்போது, வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், பெருந்தன்மையோடும், நல்ல மனதோடும், உண்மையாகவும் பாராட்டுங்கள்.

Likes(1)Dislikes(0)
Share
May 142014
 

9

தமிழகத்தில் அது ஒரு நல்ல பள்ளி என பெயர் பெற்று இருந்தது. வழக்கமாக பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் மட்டும் மாணவர்களுக்கு போதாது, எதிர்காலத்தில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை தீர்க்கும் அறிவும் வளர வேண்டும் என விரும்பி, பள்ளி நிர்வாகம் வித்தியாசமான ஒரு முயற்சி செய்தது.

அதன்படி ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 25% மதிப்பெண்களை, வித்தியாசமாக சிந்தித்து பிரச்சினைகளை அனுகக்கூடிய திறமைக்கு (lateral thinking) ஒரு புதிர் வைத்தது. புதிர் போட்டிக்கு பின், பள்ளி நிர்வாகத்திற்கோ மிகுந்த ஆச்சர்யம். வழக்கமாக மதிப்பெண்களை அள்ளும் மாணவர்கள் (toppers) பதில் கூற முடியாமல் முழிக்க, சராசரியாக மதிப்பெண் வாங்கும் ராமுவும் அவனைப் போல் வேறு 3 மாணவர்களும் சரியான பதில் சொல்லி விடுகிறார்கள். அந்த புதிர் இதுதான்.

மேசை மீது ஒரே மாதிரியான மூன்று பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டிக்குள் சிகப்பு பந்து, இரண்டாவது பெட்டிக்குள் வெள்ளை பந்து, மூன்றாவது பெட்டிக்குள் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் உள்ளன. பெட்டிக்கு வெளியில் லேபில் (label) ஒட்டியிருக்கிறது. ஆனால் அந்த லேபிலும் உள்ளே இருக்கும் பந்தும் ஒன்றாக இருக்காது. உதாரணமாக, சிகப்பு பந்து என்று ஒரு பெட்டியில் லேபில் ஒட்டியிருந்தால், கண்டிப்பாக அந்தப் பெட்டிக்குள் சிகப்பு பந்து இருக்காது. (வெள்ளை பந்து அல்லது வெள்ளை மற்றும் சிகப்பு பந்து இருக்கும்). அதேபோன்று மற்ற இருப் பெட்டியிலும், உள்ளே இருக்கும் பந்திற்கும், வெளியே உள்ள லேபிலுக்கும் பொருத்தம் இல்லாது இருக்கும்.

விதி 1: நீங்கள் ஏதெனும் ஒரு பெட்டியை மட்டும் திறந்துப் பார்க்க வேண்டும். மற்ற இரு பெட்டிகளையும் திறக்கக் கூடாது. ஒரு பெட்டியை திறந்துப் பார்த்து விட்டு, மற்ற இரண்டு பெட்டிகளிலும் என்ன பந்துகள் உள்ளன என்று சரியாக சொல்ல வேண்டும்.

ராமுவின் சரியான பதில் என்னவாக இருந்திருக்கும்? சரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு, சரியான விடையைக் கொடுத்தவர்களின் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகன்களுக்கு தந்தைக் கூறிய விதி 2 இல், பதில் உள்ளது.  “முதலில் எவரது பைக் நமது வீட்டின் எல்லைக்கோட்டைத் தொடுகிறதோ, அவர் தோற்றவர்”.

அப்படி என்றால் என்ன அர்த்தம்? உதாரணமாக தம்பி, அண்ணனின் பைக்கைக் கொண்டு வீட்டில் சேர்த்தால், தம்பி வென்றும், அண்ணன் தோற்றும் விடுவர். இதேப்போல், அண்ணன், தம்பியின் பைக்கைக் கொண்டு வீட்டில் சேர்த்தால், அண்ணன் வென்றும், தம்பி தோற்றும் விடுவர்.

இதை சரியாகப் புரிந்துக் கொண்ட ஆசிரியர், அவர்கள் இருவரையும் தங்களது பைக்கை மாற்றிக் கொள்ளுமாறு கூறுகிறார். இப்போது, அண்ணன் பைக் தம்பியிடமும், தம்பி பைக் அண்ணனிடமும் இருக்கிறது.

உண்மையான (வேகமான) போட்டித் தொடங்குகிறது, அண்ணன் பைக்கை முதலில் சேர்த்து,  தான் வெல்ல வேண்டுமென தம்பியும், தம்பி பைக்கை முதலில் சேர்த்து, தான் வெல்ல வேண்டுமென அண்ணனும், சீறிப் பாய்கின்றனர்.

இறுதியாக எவர் வெல்கின்றனரோ, அவரே ராணுவத்தில் சேர்ந்து, நாட்டிற்கு சேவை செய்யும் சந்தர்ப்பத்தை அடைகிறார்..

 

சரியான பதில் அளித்தவர்கள்:

சதிஷ், ஸ்ரிகாந்த், அன்சர், சிவா

 

Likes(0)Dislikes(0)
Share
May 142014
 

10

பிறரைப் பற்றி அவதூறு கூறாமலும், வதந்திகளை பேசாமலும் இருந்தால்,

உங்கள் வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்?

இன்றே ஏன் அதை முயற்சிக்கக் கூடாது?

அடுத்தவர்களைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே பேசி,

உங்களை சுற்றி உள்ளோரையும் அதேப் போல் செய்ய ஊக்கமளியுங்கள்!!!

 

 

தனிமையில் இருக்கும்போது

உங்கள் எண்ணங்களையும்,

கூட்டத்தில் இருக்கும்போது

உங்கள் வார்த்தைகளையும்,

கவணமாக நல்ல முறையில் பாதுகாத்து உபயோகிங்கள்!

 

 

அடுத்தவர்கள் வாழ்வில் நடக்கும் செய்திகளை

தெரிந்துக் கொள்வதை தவிர்த்து,

உங்களது கணவை நோக்கி

வேலையைத் தொடங்குங்கள்!

 

 

அற்ப விஷயங்களையும்,

சின்னஞ்சிறு கவலைகளையும்

உதறித்தள்ள பெரிய இதயம் தேவைப்படுகிறது!

 

உங்கள் நண்பர்,

கோழியாய் இருந்தால், கொக்கரிப்பீர்கள்,

பருந்தாய் இருந்தால், சிறகடித்துப் பறப்பீர்கள்..

உங்களது வாழ்க்கையை, உங்கள் சேர்க்கையும் முடிவு செய்கிறது!

 

 

நீ உனது உண்மையை

எப்போது பேச ஆரம்பிக்கிறாயோ,

அப்போதே உனது தலைமைப் பண்புகளை

வெளிப்படுத்த தொடங்குகிறாய்!

 

 

தலைமை என்பது பட்டம் அல்ல,

அது நடத்தையும், குணமும் ஆகும்,

அதனால், சரியாக நடந்து, முன்னுதாரணமாய் இரு!

 

 

நுட்பமான அறிவு உடையவர்களின் முத்திரை – எளிமை!

 

 

பெரிதாக கணவு காண்,

சிறிதாக தொடங்கு,

இப்போதே அதற்கான வேலையில் இறங்கு!

 

 

நீ சரியான பழக்கங்கள்

ஏதும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால்,

தவறானப் பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறாய் என்று அர்த்தம்!

Likes(2)Dislikes(0)
Share
Share
Share