Apr 132014
 

index

மதுரை!! அலுவலகப் பணியை முன்னிட்டு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த அழகிய நகருக்கு பலமுறை செல்ல நேரி்ட்டதுண்டு. ஒருமுறை அவ்வாறு சென்றபோது, அங்கு நடந்த ஒரு அருமையான நிகழ்வு, அதன் தொடர்பாக என்னுள் எழுந்த பலக் கேள்விகளை உங்களுடன் இந்த மாதம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மதுரையில் ஒரு பிரசித்திப்பெற்ற தனியார் நிறுவனம். அந்நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள்ளே நுழைய வேண்டுமெனில், நம் பைகளை வாயிலில் உள்ள பாதுகாப்பு அதிகாரி (SECURITY OFFICER) சோதணையிட்டுத் தான் உள்ளே அனுப்புவார். கேட்டருகில் உள்ள அவரது உதவியாளரிடம் உள்ளேக் கொண்டுசெல்லும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விவரங்களைப் பதிவு செய்துக்கொள்ளுமாறும் கூறினார்.

மேளாலரின் அறையை விட்டு வெளியே வந்த நான், தொழிற்சாலைக்கு நுழையுமுன் கேட்டருகில் உள்ள அந்த செக்யுரிட்டி உதவியாளரிடம் பதிவு செய்ய சென்றேன். அந்த உதவியாளர், அப்போது தான் புதியதாக வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும் என்றும், படிப்பறிவு சிறிது குறைவு என்பதை அவர் நடந்துக் கொண்ட விதமும், அவரது பேச்சும் எடுத்துக் காட்டியது. “சார், உங்களிடம் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருள்களின் விவரங்களை இந்த படிவத்தில் எழுதி, நீங்கள் கிளம்பும்போது உள்ளே சந்திக்கும் அலுவலரிடம் கையெழுத்து வாங்கிவிடுங்கள்” என்றுக் கூறினார்.

நானும் ஒவ்வொருப் பொருளாய் பையினிலிருந்து வெளியே எடுத்து, படிவத்தில் எழுத ஆரம்பித்தேன். செல்ஃபோன், லேப்டாப், டேட்டாகார்டு (DATA CARD), ஹார்டு டிஸ்க் (HARD DISC), பெண் டிரைவ் (PEN DRIVE) என எல்லாப் பொருள்களையும் காட்டிப் படிவத்தில் பதிவு செய்ததை ஆர்வமாகப் பார்த்தார் அந்த உதவியாளர். செல்ஃபோன், லேப்டாப் தவிர மற்ற பொருள்கள் எதற்கு பயண்படுகிறது என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் கேட்கவும், நானும் ஓரிரு வரிகளில் அந்தப் பொருள்களின் பயண்பாட்டினை அவரிடம் தெரிவித்தேன்.

“இந்தப் பொருள்களின் மூலம், உலகமே உள்ளங்கையில் அடங்கிவிடுகிறது” என நான் முடிக்கவும், சற்றும் தாமதிக்காது அந்த நபரோ, “சார், மனிதன் எத்தனையோ நல்லவற்றைக் கண்டுபிடித்துவிட்டான், மிகவும் சந்தோஷமான விஷயம் தான், ஆனால் ஓரிரு வருடங்களுக்கு முன் நம்மூரில் நிறைய சிட்டுக்குருவிகளும், சின்னஞ்சிறு பறவைகளும் விலங்குகளும் சுற்றிக் கொண்டே இருக்கும், இப்போதெல்லாம், அவற்றைக் காண முடியவில்லை, உங்களை மாதிரி படித்தவர்கள் அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பீர்களா” என்று கேட்டதும், நான் திடுக்கிட்டுப் போனேன்.

வெகு சாதாரணமாக அந்தக் கேள்வியைக் கேட்டு முடித்த அவர், அடுத்த வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் இன்றும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரு நியாயமானக் கேள்வி அது. என்ன ஆகிவிட்டது மனித இனத்திற்கு? நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது இந்தப் முன்னேற்ற பாதை? முன்னேற்றத்தையும் விட்டுக் கொடுத்துக்கொள்ளாமல், நாம் செய்யவேண்டிய சில முக்கியமான கடமைகள் என்ன? பரபரப்பாக இயங்கிக் கொண்டும் ஓடிக்கொண்டிருகும் நாம், ஓரிடத்தில் நின்று நம்மையே சிலக் கேள்விகள் கேட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் தெரியவரும்.

1

எத்தனையோ தினசரி வசதிகளை விஞ்ஞான மற்றும் பொருளாதார ரீதியில் நாம் பெற்றுவிட்டாலும், நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் சென்றத் தலைமுறையினரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

முன்பெல்லாம், இணையத் தளம் இல்லை, சமூக வலைகளில் இன்றுபோல்  பல ஆயிரக்கணக்கில் நண்பர்களை தனது அக்கவுண்டுகளில் குவித்து வைத்திருப்போரும்  இல்லை. ஆனால் உண்மையான உறவும், தோழமையும், உயிர்க்காக்கும் ஒன்று இரண்டு நண்பர்களும் கட்டாயம் இருந்திருப்பர். இன்றையக் காலத்தில் மருத்துவமணையில் அட்மிட் ஆகியிருந்தும், அட்டெண்டராக (ATTENDER) யாரையாவது தேடினால், நம் வீட்டில் உள்ளவர்களைத் தவிர, ஒருவர் கிடைப்பது கூட மிகக் கடிணமாக உள்ளது. நமது நண்பர்கள், உறவினர்கள் அனைவரின் வேலைப்பளுவும், நேரமிண்மையும் நமக்குத் தெரிவதனால், நாமும் அதை எதிர்பாராமல் இருந்து விடுகிறோம்.

மரம் வளர்ப்பது மட்டுமில்லை, மனிதநேயம் வளர்ப்பதும் இன்றையக் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எப்படி இந்தக் பிரச்சினைகளுக்கெல்லாம் விடைகாணப் போகிறோம்? இனி வரும் தலைமுறைகளுக்கு முன்னேற்றத்துடன் சேர்த்து, என்னென்ன நல்ல விஷயங்களை விட்டுச் செல்லப் போகிறோம்?

சுயநலமின்மை, விட்டுக்கொடுத்தல், தேசிய சிந்தனை, சமுதாயத்தில் பழகுமுறை, சகோதரத்துவம், இயற்கையின் மீது அக்கறை, இயற்கையோடு ஒன்றி வாழ்தல் எனப் பல விஷயங்களை குழைந்தைகளுக்கு சொல்லித்தரும் பெரும் கடைமை நம் அனைவருக்கும் உள்ளது.

NECESSITY IS THE MOTHER OF ALL INVENTIONS. அதாவது எந்த ஒரு தேடலுக்கும் “தேவை” என்கிற முக்கியமான விஷயம் ஆழமாக இருந்துள்ளது. தேவை இப்போது மிக அதிகமாகி விட்டதனால், தேடல் கூடிய விரைவில் பிறக்கும், நம் இனிய தமிழ் புத்தாண்டுடன்…

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

2

Likes(3)Dislikes(0)
Share
Apr 132014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில் திரு.அண்ணாமலை அவர்களைப் பற்றி பார்ப்போம். இவரது சென்னை பெசன்ட்நகர் வீட்டிற்கு பேட்டி எடுக்கலாம் என்று சென்றிருந்தபோது, கன்னிமாரா நூலகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற உணர்வு உதிக்கிறது. காரணம், புத்தகங்கள்!! வீட்டின் பெரும் பகுதிகளை புத்தகங்களே ஆக்கிரமித்திருந்தது. இவரது சாதனைகள் என்னை மிகவும் வியக்கவைத்தது.

இந்திய விடுதலை, சுதந்திரத் தியாகிகள், இந்திய தேசிய ராணுவம் (INA), INAவில் தமிழர்கள் பங்கு என நாம் சுதந்திரம் பெற்றதைப் பற்றி பல புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்து, வைத்திருக்கின்றார். வரலாறு குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, இடையிடையே பல நூல்களை எடுத்து வந்து, மிகுந்த ஆர்வத்துடன் உதாரணம் காட்டுகிறார்.

விடுதலைக்காக தமிழக வீரர்கள் செய்த தியாகங்கள், அனுபவித்த துயரங்கள் பற்றிய அருமையான குறும்படத்தை திரு.எம்.ஈ.ஸ்வர்னவேல் அவர்கள் எடுத்தபோது, பெரும் பின்புலமாய் இருந்துள்ளார் (அந்த வீடியோக் காட்சிகளை இந்த மாதம் கதைக்கட்டுரைகள் பகுதியில் காணலாம்

தன் வாழ்வின் பெரும் பகுதியை, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட வீரர்களை ஆராய்ச்சி செய்வதில் செலவிட்டவர். மறைக்கப்பட்ட தமிழர் வீரவரலாற்றை அனைவருக்கும் தெரியப்படுத்த, சில புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள், “இந்திய தேசிய ராணுவம் தமிழர் பங்கு” மற்றும் “தூக்கிலிடப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்கள்” என்ற இரு புத்தகங்களும் ஒவ்வொருத் தமிழனும் படிக்க வேண்டியவை. இவரின் பேட்டியிலிருந்து..

B+: வணக்கம் சார். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.

அண்ணாமலை: 1966-1968 இல், ஐ.ஐ.டியில் எம்.எஸ்.ஸி கணிதம் (Msc Maths, IIT) படித்தேன். கணிதப் பேராசிரியராக கோவை பொரியியல் கல்லூரியில் சில வருடங்களும், பின்னர் 34 வருடம் சென்னை அரசு கலைக்கல்லூரியிலும் பணிப்புரிந்தேன். பலத் துறைகளைப் பற்றி நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அப்போதிலிருந்தே இருந்தது.

என் வாழ்வில் திருப்புமுனையாக திரு.சிவலை இளமதி என்ற எழுத்தாளரின் புத்தகம் அமைந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி அவர் எழுதியப் புத்தகத்தை 1994 இல் நான் படித்தேன். அந்தப் புத்தகத்தில் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த பல பேரை சென்னைச் சிறையில் தூக்கில் போட்டார்கள் என்ற விவரங்களைக் கொடுத்திருந்தார். இந்தத் தகவலைப் பற்றி எந்த செய்தித்தாளிலோ, பிற ஊடகத்திலோ, காணாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தூக்கிலிடப்பட்டோரைக் குறித்து மேலும் விவரங்களை அறிய எனது பயணமும் ஆராய்ச்சியும் தொடங்கியது. இந்தத் தேடல், என்னை பல இடத்திற்கும், உயர்ந்த மனிதர்களைச் சந்தித்து விவரங்களை சேமிப்பதற்கும் வித்திட்டது.

old-india-photos-unknown-freedom-fighters-hanged

B+: உங்களின் அந்த அருமையானப் பயணத்தை பற்றி..

அண்ணாமலை: ஆரம்பத்தில் தகவல்கள் சேகரிப்பது மிகக் கடிணமாக இருந்தது, இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றியும், நேதாஜிப் பற்றியும் பல விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். தமிழில், நேதாஜிப் பற்றி ஒரு சில புத்தகங்கள் இருந்தன. ஆனால் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் (INA) பற்றியத் தகவல்கள் இல்லை.

பின் எனது சொந்த விருப்பத்தில் பணியில் இருந்தபோதே, கொல்கத்தா மற்றும் பல இடங்களுக்குச் சென்று பல விவரங்களைச் சேகரித்தேன். கல்லூரியில் காலையில் பேராசிரியர் வேலை, மாலையிலோ INA வைப் பற்றித் தகவல்கள் சேர்ப்பதற்கு பல பேரைத் தொடர்புக் கொள்ளுதல், இவ்வாறாக கழிந்தன நாட்கள். தூக்கில் இடப்பட்டவர்களின் விவரங்களை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற வெறி என்னுள் இருந்தது. இதை அறிவதற்காக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா போர்முனை, அயர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆவணக் களங்களையும் ஆராய்ந்தேன்.

ஆச்சரியமாக, “ஹிந்து” பத்திரிக்கையில் திரு.C.G.K.ரெட்டி என்பவர், இந்த நிகழ்வுக் குறித்து ஒருக் கட்டுரை எழுதியிருந்தார். பெங்களூரில் இருந்த அவரை நான் சென்று சந்தித்தது ஒரு பெரிய வரம். திரு.ரெட்டியின் வாழ்க்கை சுவாரஸ்யம் வாய்ந்தது. அவர் INA வில் பணியாற்றி, இந்திய விடுதலைக்காக மட்டுமல்லாது பல நல்ல விஷயங்களுக்கு போராடிய மாமனிதர். திரு.ரெட்டி அவர்கள், INA வைப் பற்றி 16 பக்கப் புத்தகம் ஒன்றை எனக்குக் கொடுத்தார். அவரது புத்தகமும், கூடவே தூக்கில் இடப்பட்ட வீரர்கள் பற்றிய சிலத் தீர்ப்புகளும் கிடைக்கவே, அந்த வீரர்கள் குடும்பத்தைத் தொடர்புக் கொண்டு தகவல்களைத் திரட்டினேன்.

B+: அந்தப் பயணத்தில் உங்களை நெஞ்சை உருக்கிய சம்பவம்..

அண்ணாமலை: நிறைய சம்பவங்கள் இருந்தது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், ராமாநாதபுரத்தைச் சேர்ந்த திரு.ராமுத்தேவர் என்ற இளைஞனின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு சரித்திரம். 1945 ஆம் வருடம், அவருடைய 18 வது வயதில், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்.  சிங்கப்பூருக்கு படிப்பதற்கு சென்ற திரு.ராமுத்தேவர், இந்திய விடுதலையின் ஆர்வத்தினால், INA வில், உளவுத்துறைப் பிரிவில் சேர்ந்தார். சிங்கப்பூரிலிருந்து பர்மா வழியாக இந்தியாவிற்க்கு, உளவுபார்க்க நடந்தே வருகிற பொழுது, பர்மாவில் கைதுசெய்யப்பட்டு, கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

திரு.ராமுத்தேவருடன் சேர்த்து, INA வைச் சேர்ந்த இன்னமொரு 8 பேர், சென்னை சிறைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களில் 4 பேரை மட்டும் தேர்வு செய்து, பிரிட்டிஷ் அரசு 1945 இல் தூக்கில் போட்டது. சுதந்திரம் கிடைத்தப்பிறகும் கூட, தூக்கிலிடப்பட்ட தகவல் ராமுத்தேவரின் வீட்டிற்கு தெரியப்படுத்தவில்லை.  . உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை, அவரது தாயார் தொடர்ந்து  அலைந்து திரிந்து 1948ல் தான் தெரிந்துகொண்டது தான் வேதனையின் உச்சம். 1945-1946 வரை இந்தியாவில் அதிகமாக தூக்கிலிடப்பட்டது சென்னைச் சிறையில் தான்.

நாங்கள் 10பேர் ஒருக் குழுவாக சென்று தூக்கிலிடப்பட்டவர்களின் உடலை எங்கு புதைத்தார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தோம். ஓட்டேரி இடுகாட்டில் என்று தெரிந்து, அங்கு சென்று இறுதி மரியாதை செய்தோம். கேரளாவிலும் மற்ற மாநிலங்களிலும், அவ்வாறு INA வில் பணியாற்றித் தூக்கிலிடப்பட்டு வீரமரணமடைந்த வீரர்களுக்கு இன்று வரை விழா எடுத்துக் கொண்டாடும்போது, INA வில் பெரும் பங்கு வகித்த தமிழர்களின் வரலாறு வெளியேத் தெரியாமலும், தமிழகத்தில் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததும் எனக்கு பெரும் ஏமாற்றமும் கவலையையும் தருகிறது. (INA வின் ஜெனரல் தில்லான் அவர்கள், INA வின் இதயமும், உயிரோட்டமும் தமிழர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.)

B+: இதற்காக என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்கள்?

அண்ணாமலை: இந்திய விடுதலை வரலாறு சிறப்பு வாய்ந்தது. இதன்  உண்மை சரித்திரம் மக்களுக்கு இன்று வரை சரியாக சென்றடையவில்லை. பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றி நாம் சொல்லித்தர வேண்டும். அந்தப் பாடங்களில் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு அங்கீகாரம் தர வேண்டும். உதாரணமாக “வீர் சாவர்கர்” என்ற ஒரு மிகப்பெரிய வீரரைப் பற்றி சொல்லலாம். விடுதலைக்காக பல தியாகங்கள் புரிந்து, மிகக் கொடுமையானத் தண்டனைகளைப் 11 வருடங்கள் அந்தமான் சிறையில் பெற்றவர். அவரைப் பற்றி தமிழ்நாட்டில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? INA வைப் பற்றியும், அதில் தமிழர்கள் பங்குப் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

B+: வீர் சாவர்கர் அவர்களைப் பற்றி சிறு வரிகள்..

அண்ணாமலை:  சாவர்கர் ஒரு பெரும் சகாப்தம். ஊக்கத்தொகை (SCHOLORSHIP) கிடைத்து லண்டனுக்கு படிக்க செல்கிறார். இந்திய விடுதலையில் தீவிர ஆர்வத்தை லண்டனிலும் வெளிக்காட்டுகிறார். அப்போது 1857ல் போராட்டம் (சிப்பாய்க் கலகம்) இந்தியாவில் வெற்றிகரமாக முடிகிறதை ஒட்டி சாவர்கரும் அவரது பெரும் குழுவும் லண்டனில் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். 1857 போராட்டம் குறித்து  அருமையான புத்தகம் ஒன்றை வெளியிடுகிறார். வெளிவந்தால், இந்தியர்களின் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்று அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, அந்தப் புத்தகத்தைத் வெளியிடும் முன்பே தடை செய்தது.

Savar images

அந்தப் புத்தகம் தான் ஏறத்தாழ 100வருடங்களுக்கு முன் பஞ்சாபில் “கத்தார் புரட்சி” ஏற்படக் காரணமாய் இருந்துள்ளது. அமெரிக்கா, கணடா, மலேசியா மற்றும் பல நாட்டில் மிக நன்றாக வாழ்ந்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் பெரும் செல்வம், தொழில் இவற்றை எல்லாம் துறந்து, விடுதலைக்காக கத்தார் புரட்சியில் கலந்துக்கொண்டனர். பிரிட்டிஷ் அரசு இவர்களில் சுமார் 200 பேரைத் தூக்கிலிட்டது. நிறையப் பேரை 20 முதல் 30 வருட தண்டனையாக அந்தமான் சிறையில் அடைத்தது. கத்தார் புரட்சியில் ஈடுபட்டத் தமிழர் “திரு.செஞ்சைய்யா” சொல்ல முடியாத் தியாகங்களைப் புரிந்துப் பல துன்பங்களைச் சந்தித்தவர். செஞ்சைய்யா போல் நிறையத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றிய வரலாறு தெரியாமலையேப் போய்விட்டது.

சாவர்கரையும் கைது செய்து, அந்தமான் சிறையில் பிரிட்டிஷ்ஷர் அடைத்தனர். அந்தமான் சிறையில் காந்திஜி, பகத்சிங், சாவர்கர் இவர்கள் மூவரின் வரிகள் மூன்றுக் கல்வெட்டுகளாய் ஒருக்காலத்தில் பிரசித்திப்பெற்று இருந்தது. பின்நாளில் சாவர்கர் “தீவிர ஹிந்துத்வாவில்” தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அடுத்து, அவரது கல்வெட்டை மட்டும் நம் முன்னால் மந்திரி ஒருவர் அரசியலுக்காக சமீபத்தில் உடைத்து எரிந்தார். சாவர்கரைப் பற்றி நிறைய விஷயங்களை கீழே உள்ள இணையத் தளங்களில் கண்டறியலாம்.

www.savarkar.org/en/veer-savarkar

http://en.wikipedia.org/wiki/Vinayak_Damodar_Savarkar

B+: நேதாஜி அவர்களைப் பற்றி நீங்கள் அறிந்த சில விஷயங்கள்..

அண்ணாமலை: நேதாஜியின் மிக நெருங்கிய செயலாளராக இருந்த, சென்னையைச் சேர்ந்த திரு.பாஸ்கரனைச் சந்தித்து பல முறைப் பேட்டி எடுத்துள்ளேன். அவரைப் போல் நேதாஜியுடன் நெருங்கி பழகி வாய்ப்புப் பெற்ற பல மாமனிதர்களைச் சந்தித்துள்ளேன். நேதாஜியின் INA வில் 65 முதல் 70% வரைத் தமிழர்களே இருந்தனர். நேதாஜிக்கு அப்போது பெருமளவு ஆதரவு அளித்ததும் நமது தமிழர்கள் என்பது உலகரிந்த விஷயம்.

2294974.cms

ஒரு சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு. 18 மார்ச் 1944 அன்று, INA பர்மா வழியாக இந்தியாவில் நுழையத் திட்டமிடுகின்றனர். இப்போது உள்ள மணிப்பூரில் “மோரெ” என்ற இடத்தை பிரிட்டிஷ் அரசுடன் போரிட்டு INA வீரர்கள் கைப்பற்றுகின்றனர். அந்த மாகாணத்தை மூன்று மாதம் INA ஆட்சி செய்தது பெரும் சாதனை. இந்த நிகழ்வும் வரலாற்றில் பெரிதாகக் கூறப்படவில்லை. இன்று வரை INAவில் 60000 பேர் போரில் இறந்திருக்கிறார்கள். ஆனால் INA விற்கு ஒரு நினைவுச் சின்னம் கூட நம் நாட்டில் இல்லை.

INA வீரர்களைச் சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய ராணுவத்தில் (INDIAN ARMY) நேரு அரசு சேர அனுமதிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் மவுண்ட்பேட்டனின் மனைவி. அவர் நேருவைக் கேட்டுக் கொண்டதனால் தான் INA வீரர்களை இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமானப் பதிவுகள் (OFFICIAL RECORDS) உள்ளன. மவுண்ட்பேட்டனின் மனைவியின் வாழ்க்கை வரலாற்றில் கூட இந்தத் தகவல் பதிவாகி உள்ளது.

B+: உங்களது முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்..

அண்ணாமலை: தினமனியில் எனது நேதாஜிப் பற்றி பல கட்டுரைகள் வெளிவந்துள்ளது. அது மட்டுமின்றி செஞ்சைய்யா, கத்தார் புரட்சி, கத்தார் புரட்சியில் தமிழர் பங்கு, M.P.T.ஆச்சார்யா பற்றியெல்லாம் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளது. தமிழக அரசிடமிருந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். ஹைதர் அலி தமிழகத்திற்கு வந்த வரலாற்றை 700 பக்கம் கொண்ட புத்தகமாக சமீபத்தில் வெளியிட்டுள்ளேன்.

B+: இளையத் தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது..

அண்ணாமலை: நீண்ட வருடங்கலாக தடை விதிக்கப்பட்டிருந்த INA விவரங்கள், ஆறு வருடத்திற்கு முன் தடைநீங்கப் பெற்று, இப்போது ஆவணக் காப்பகங்களில் (ARCHIVES) இருக்கிறது. நம் நாட்டில் கிடைப்பதை விட நிறைய ஆவணங்கள் லண்டனில் இருக்கின்றது.

இந்திய சுதந்திர வரலாற்றைப் பற்றி நாம் அனைவரும் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இத்தனைக் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தை நினைத்து, நல்ல வழியில் வாழ்ந்து பேணிக் காக்க வேண்டும். அது நம் அனைவரதுக் கடமை.

ஜெய் ஹிந்த்!!

Likes(4)Dislikes(0)
Share
Apr 132014
 

INA_Jubilation

இந்த மாதம் கதைக்கட்டுரையில் மூன்று குறும்படங்களைக் (VIDEOS) வெளியிடுகிறோம். இவை அனைத்தும் கடிண உழைப்பால் ஒரு குழுவின் முயற்சியில் வெளிவந்துள்ளன. இவைகளை நமக்குத் தந்த பேராசிரியர்.அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் பல.

நேதாஜியைப் பற்றியும், இந்திய தேசிய ராணுவத்தில் (INA) தமிழர்களின் பங்கும் இந்தப் படக்காட்சிகளில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

எளிதாக டவுன்லோட் (DOWNLOAD) செய்வதற்காக மூன்று பாகங்களாகப் பிரித்து வழங்கியுள்ளோம். குறிப்பாக ஒன்று மற்றும் மூன்றாவது பாகங்களைக் கண்டிப்பாகக் காணவும். அதிலும் மூன்றாம் பாகத்தில் வரும் திரு.ராமுத்தேவரின் கடிதம், காண்போரைக் கலங்க வைக்கும். இத்தனைப் பேரின் தியாகத்தில் பெற்ற சுதந்திரத்தைக் காப்போம், சுயநலத்தை மறப்போம்..

பாகம் – 1    https://www.youtube.com/watch?v=kqsJQTYdSyg

பாகம் – 2    https://www.youtube.com/watch?v=vpenxBFZAZM

பாகம் – 3    https://www.youtube.com/watch?v=y1guzWFnjUw

Likes(1)Dislikes(0)
Share
Apr 132014
 

(துபாயிலிருந்து ஒரு வாசகர் எழுதி அனுப்பியது)

images

 

பூ மொட்டா காத்திருக்கேன்

புது வருஷம் பிறக்குமுன்னு !

 

சாணி தெளிக்கயிலே

கோணி சிரிச்சவனே !

 

மேலோட்டம்   பார்த்துகிட்டே

நீரோட்டம் இறச்சவனே !

 

அம்மியில நான் அரச்ச

அரவைகளை ருசிச்சவனே !

 

காடு மேடு சுத்தி

ரம்மியத்தை படிச்சவனே !

 

கும்மியாடும் குமரி என்னை

கூப்பிட்டு கவுத்தவனே !

 

மாவட்டும் என் கைக்கு

மருதாணி  வச்சவனே !

 

தயங்காம  காத்துருக்கேன்

தல பொங்கல் தருவேன்னு !

 

வாசலில  வேத்து இருக்கேன்

வருசம் உன்னால் பிறக்குமுன்னு !

 

சித்திரையை நோக்கி நித்திரை !!!

 

–       கவிஞர் அனு

tamil-new-year-001

Likes(2)Dislikes(0)
Share
Apr 132014
 

LB

நாம் குழந்தைகளாக இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குச் செல்லும் போதும் நிறைய விஷயங்களை புதிதாகப் பெறுகிறோம்,  சிலவற்றை இழக்கிறோம். சிலவற்றை மறக்கிறோம். அப்படி வயது ஏற ஏற, நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த சிரிப்பு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை சிரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் நமக்கு அமைகிறது?  ஒரு நாளுக்கு எத்தனை முறை நாம் சிரிக்கிறோம்?

மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது போலவே நாம் உணர்கிறோம். ஆனால் எப்பொழுதாவது நம்முடைய பழைய கல்லூரி நண்பர்களையோ, இல்லை பள்ளி நண்பர்களையோ சந்திக்கும் போதே நமக்குப் புரியும், ஒவ்வொரு நாளும் நாம் சிரிப்பதை எவ்வளவு குறைத்திருக்கிறோம் என்று.

நம்மிடம் இருக்கும் சிரிப்பு ஏன் நாளாக நாளாக குறைந்து கொண்டே வருகிறது? பதில் அனைவருக்கும் தெரிந்ததே. சிறுவயதில் எந்தக் கவலைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரியும் நமக்கு வயது ஏற ஏற சில கடமைகளும், பொறுப்புகளும் வந்து சேர்கின்றன. அவற்றை நிறைவேற்ற காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கின்றது. ஒரு கட்டத்தில் நண்பர்களே உலகம் என்றிருக்கும் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது குடும்பம் என்ற ஒன்றிலேயே கவனத்தைச் செலுத்தி, நண்பர்களுக்கான முக்கியத்துத்தை குறைத்து விடுகின்றோம். ஆனால் நாம் அதிகமாக சிரிப்பது நண்பர்களோடு இருக்கும் சமயத்தில் மட்டுமே.

நாம் சிரிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதைக் காட்டிலும் நம்முடைய கவலைகளும் பிரச்சனைகளும் மேலோங்கி நிற்கின்றன என்றே அர்த்தம். இதுபோன்ற பிரச்சனைகளை நாம் ஒருவரே கட்டிக்கொண்டு அழுவதை விட ஒரு முறை அவற்றை நண்பர்களிடம் பகிர்ந்து சிரியுங்கள். நம் கவலைகளும் குறையும் அவற்றை சரி செய்ய புது வழிகளும் பிறக்கும். மகிழ்ச்சியாக இருப்பது என்பது எந்த பிரச்சனைகளும் இல்லாமல் இருப்பது என்று பொருளல்ல. அவர்கள் சந்திக்கும் சவால்களை இலகுவாக எதிர்கொள்ளும் சக்தி அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

மேலே இருக்கும் படத்தில் இருப்பவரை நீங்கள் பெரும்பாலான கடைகளிலும் வீடுகளிலும் பார்த்திருக்கலாம். சிரிக்கும் புத்தர் (Laughing Budda or Bhu dhai)  என அழைக்கப்படும் இந்த துறவியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை. இவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு மூட்டையை சுமந்து செல்வார். அதில் குழந்தைகளுக்கான இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் நிறைந்து காணப்படும். ஒரு நகரத்தின் மையப் பகுதிக்கு சென்று அங்கு அந்த இனிப்புக்களை குழந்தைகளுக்கு வழங்கிவிட்டு, அவரைச் சுற்றி சிறு கூட்டம் கூடியதும் திடீரென வானத்தை நோக்கி சத்தம் போட்டு குலுங்க குலுங்க சிரிக்க ஆரம்பித்துவிடுவார். சுற்றி எவர் என்ன சொல்கிறார் என்றெல்லாம் மனதில் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருப்பாராம்.

சிறிது நேரத்தில் சுற்றி இருப்பவர்களும் இவருடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுவார்களாம். கொஞ்ச நேரம் அனைவருடனும் சிரித்து விட்டு பையை எடுத்துக் கொண்டு வேறு ஒரு நகரத்திற்குச் சென்று அங்கும் இதே போலச் செய்வாராம். வாழ்நாள் முழுவதையும் இந்த செயலை மட்டுமே செய்துகொண்டிருந்தவர் இந்த சிரிக்கும் புத்தர். அவருடைய இந்த செய்கையால் பலரும் தங்களுடைய மன பாரங்களிலிருந்தும் விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவருடைய மன பாரங்களையும் கவலைகளையும் போக்கும் சக்தி சிரிப்பிற்கு உண்டு என உணர்த்தும் வகையில் சிரிப்பு வைத்தியத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துவந்தவர் இந்த சிரிக்கும் புத்தர்.

ஒரு முறை ஒருவர் அவரைப் பார்த்து “நீங்கள் ஏன் இதுபோல குழந்தைகளுக்கு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகின்றீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் “நாம் எந்த அளவு கொடுக்கிறோமோ அது இருமடங்காக நமக்கு வந்து சேரும்… அதுவும் குழந்தைகள் கள்ளங் கபடம் இல்லாதவர்கள். பொறாமை குணமற்றவர்கள். எந்நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பவர்கள். அவர்களுக்கு கொடுப்பது நேரடியாக இறைவனுக்கே கொடுப்பதாக உணர்கிறேன்.. மேலும் அவர் மனிதர்களிடையே காணப்படும் பிரச்சனைகளையே நான் மூட்டையாக தான் சுமக்கிறேன்” என்றும் கூறினார்.

நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது,  நம்மைத் தவிற அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும், கடவுள் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகளைத் தருகிறார் எனவும் நினைக்கிறோம். ஆனால் இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் நமக்கு பிரச்சனை என நினைக்கும் ஒரு விஷயத்தை மற்றொருவர் நம்மிடம் கொண்டு வருவாரேயானால் அவருக்கு நாம் அதை சரி செய்ய நூறு யோசனைகள் சொல்வோம். ஆனால் அதே நமக்கு எனும் போது பிரச்சனையை எதிர்கொள்வதை விட்டுவிட்டு கவலையில் மூழ்கிவிடுகிறோம்.

3

கவலைகளோ பிரச்சனைகளோ நம்மை ஆட்கொள்ளும் போது அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளாமல் ஒரு முறை அவற்றை நோக்கி சிரித்துப் பாருங்கள். அடுத்த முறை நம்மை நெருங்கவே அவற்றுக்கு பயம் வந்துவிடும்.

சரி.. சிலருக்கு சிரிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சிரித்துக் கொள்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லையே. நீங்கள் கூறுவது போல் என்னால் சிரிக்க சூழ்நிலைகள் அமைவதில்லை என்று நீங்கள் கூறினால் அது உங்களுடைய தவறேயன்றி வேறில்லை.

மகிழ்ச்சியை அதிகப் படுத்துவதற்கு சில வழிகள்:

1)   பொதுவாக ஒரு மனிதன் அதிகம் சிரிப்பது என்பது குழுக்களாக இருக்கும் போது தான். அப்படி குழுக்களாக சேர்ந்து சிரிக்கும் சந்தர்ப்பம் சில சமயங்களிலேயே நமக்கு அமைகிறது. உதராணமாக நண்பர்களின் திருமணம். முடிந்த வரையில் அதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஏதேனும் காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்காமல் சென்று வாருங்கள். நாம் அலுவலகங்களில் சிடுமூஞ்சிகளாகவும், அரக்கர்களாகவும் பார்க்கும்  சிலரது உண்மையான நல்ல முகங்களை இதுபோன்ற விழாக்களிலேயே காணமுடியும்.

2)   உங்களது அலுவலக மேலாளர் உங்களை திட்டுகிறாரா? உங்கள் மேல் எரிந்து விழுகிறாரா? அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்தால் தான் உங்களுக்குக் கவலை. அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து சிரியுங்கள். அடுத்த முறை உங்களுக்கு அது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கோபத்தை விட சிரிப்பே முதலில் வந்து நிற்கும். கோபப்படுவதாலோ அல்லது சிரிப்பதாலோ ஒரு விஷயம் மாறப் போவதில்லை எனும்போது எதற்கு நாம் கோபப் பட்டு நம் உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டும். சிரித்துவிட்டுப் போவோமே.

4

3) அதே போல் சிரிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் அவசியம். நாம் நண்பர்களுடன்  மகிழ்ச்சியாக இருப்போம் என்று நமக்கு நன்றாகத் தெரிந்தால் அவர்களை விழாக்களில் மட்டும் சந்திக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் அல்ல. வாரமொருமுறையோ அல்லது மாதமொருமுறையோ நமக்கு விருப்பமான நண்பர்களைச் சந்திக்க நாமே ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

4) நண்பர்களைத் தெரிவு செய்தல் என்பதும் மிக முக்கியமானது. சிரிப்பு என்ற ஒரு விஷயத்திற்கு மூலதனம் ரசனை. ஒருவரை முழுமையாக நமக்குப் பிடிக்காவிட்டால் அவர் செய்யும் எந்த விஷயமும் நமக்குப் பிடிப்பதில்லை. இதற்கு மனிதர்களுக்கிடையே காணப்படும் wavelength matching எனப்படும் அலைவரிசை ஒற்றுமை மிகவும் முக்கியமானது. எனவே நம்முடைய அலைவரிசையில் இருப்பவர்களை நட்பாக்கிக் கொள்ளுதல் நம்முடைய சிரிப்பின் அளவை அதிகப்படுத்தும்.

5) நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருக்கும் சிறு சிறு நகைச்சுவையைக் கூட உணர்ந்து சிரிக்க வேண்டும். சிறு குழந்தைகளை உற்று கவனித்து அவர்கள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட எப்படி ஆச்சர்யப்படுகின்றனர் எப்படி நகைச்சுவையாகப் பார்க்கின்றனர் என்பதை நாமும் உணர்ந்து ரசிக்க வேண்டும்.

6) தேநீர் இடைவேளையைப் போல தினமும் கொஞ்ச நேரம் நகைச்சுவை இடைவேளை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அன்று நடந்த நகைச்சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நம்மை சோகத்தில் ஆழ்த்தும் விஷயங்களை மற்றும் செய்திகளை விவாதிப்பதை கூடுமான வரை தவிர்க்கலாம்.

7) நாம் யாருடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்போமோ அவருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். ஒருவர் நம் மகிழ்ச்சியை குலைத்துவிடுவார் எனத் தெரிந்தால் அவரிடமிருந்து முடிந்தவரை விலகியும் இருக்க வேண்டும்.

இயன்றவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்

-முத்துசிவா

Likes(3)Dislikes(0)
Share
Apr 132014
 

images bike

ஒரு மனிதருக்கு 22 மற்றும், 21 வயதுள்ள இரண்டு மகன்கள். இரு மகன்களும் பைக் பந்தையங்களில் சிறந்தவர்கள். தந்தை அவர்கள் விரும்பியவாறு, இரண்டு 200CC பைக்குகள் வாங்கி கொடுத்தார்.

அந்த இரு மகன்களுக்கும், தேசப்பக்தியும் மிக அதிகம். இருவரும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினர். தந்தைக்கோ இருவரில் யாரேனும் ஒருவனை மட்டுமே அனுப்ப விருப்பம். அவர் “மகன்களே, நான் உங்களுக்கு பைக் போட்டி வைப்பேன், யார் அந்தப் போட்டியில் வெற்றி பெறுகின்றீரோ, அவர் மட்டும் நம் நாட்டிற்கு பணி செய்யப்போகலாம்” என்றுக் கூறவும், மகன்களும் சரி என்றனர்.

அன்று மாலை ஐந்து மணிக்கு, தந்தை, ஊரின் எல்லைக்கு இருவரையும் அழைத்துச் சென்று போட்டியின் விதிகளைக் கூறுகிறார்.

விதி1:  “இந்த இடத்திலிருந்து, நீங்கள் குறைந்தது 10கிலோமீட்டர் தூரமாவது பைக்கை ஓட்ட வேண்டும். மாலை ஆறு மணிக்குள், நம் வீட்டின் எல்லைக் கோட்டைத் தொடவேண்டும்”.

மகன்கள் இருவரும், பைக்கில் பாய்ந்து உட்கார்ந்து, “எனது வேகத்தைப் பாருங்கள், நான்தான் முதலில் வருவேன்” என்று ஒரே மாதிரிக் கூறவும், தந்தையோ விதி இரண்டைக் கூறுகிறார்.

விதி2: “முதலில் எவரது பைக் நமது வீட்டின் எல்லைக்கோட்டைத் தொடுகிறதோ, அவர் தோற்றவர். இரண்டாவதாக எவரது பைக் நமது வீட்டின் எல்லைக் கோட்டைத் தொடுகிறதோ, அவரே வெற்றிப் பெற்றவர்” என்றும் கூறுகிறார்.

பசங்களும் சிறுத்தை என சீரிப் பாய்ந்து, முதல் 10கிலோமீட்டரை முடித்து விடுகின்றனர். வீடு திரும்பலாம் என்று  நினைக்கும்போது தான் இரண்டாம் விதி நியாபகத்திற்கு வருகிறது. ஒரு இடத்தில் நின்று என்ன செய்வது எனத் தெரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக அந்த ஊரின் ஆசிரியர் வருகிறார். அவரிடம் தங்களது தந்தை வைத்த போட்டி மற்றும் அதன் விதிகளைப் பற்றிக் கூறி தங்களுக்கு ஒரு idea சொல்லுங்கள் எனக் கேட்கிறார்கள்.

ஆசிரியரும், அந்த போட்டியை சரியாகப் புரிந்துக் கொண்டு, சற்று யோசித்து, அந்த சவாலை சமாளிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து விடுகின்றார். சரியான தீர்வையும் போட்டியாளர்களிடமும் தெரிவிக்கிறார். அதைக் கேட்டவுடன், போட்டியாளர்கள் இருவரும் படு குஷியாகி, அவர் கொடுத்த ideaவை ஒத்துக் கொள்கின்றனர்.

ஆசிரியர் கொடுத்த idea என்ன என்று உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு, பல பேர் சரியான விடையைக் கொடுத்தனர். அவர்களின் சிலரின் பெயர் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் உள்ள வரிசையிலிருந்து 2 காசுகளை எடுத்து, மூன்றாவது வரிசையில் வைக்கவும். அவ்வாறு செய்தபின், முதல் வரிசையில் 2 காசுகளும், மூன்றாவது வரிசையில் 4 காசுகளும் இருக்கும். (கீழேப் படத்தைக் காணவும்)

பின்னர் நான்காம் வரிசையில் உள்ள ஒரு காசை எடுத்து முதல் வரிசைக்கு மேல் வைக்கவும். இப்போது வரிசை அப்படியே ASCENDING ORDER இல் மாறியிருக்கும்.

5

சரியான பதில் அளித்தவர்கள்:

சக்திவேல், அருன், கிரிபாபு, சுந்தர் K.R, அன்ஸர், அமல்ராஜ் & கோபால்சாமி

Likes(1)Dislikes(0)
Share
Share
Share