Mar 142014
 

வணக்கம் நண்பர்களே!!!

சென்ற வாரம் அலுவலகப் பணி முடிந்து மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சாலையில் ஓரிடத்தில் சிறு கும்பலாக சுற்றி நின்று மக்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலைத் தாண்டிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகத்தை சிறிது குறைத்து, அந்த கூட்டத்தின் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டே புறப்பட்டுச் சென்றன. எனக்கும் ஒரு ஆர்வம். அன்று வீட்டில் பெரிய வேலை எதுவும் இல்லையாதலால் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு நானும் அந்த கும்பலுக்குள் எட்டிப் பார்த்தேன்.

ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்,  விபத்தில் அடிபட்டுத் தரையில் குப்புறக் கிடந்தான். அவன் ஓட்டிவந்திருந்த பல்சர் அவனுக்கு 5 அடி இடைவெளி விட்டு அவனைப் போலவே சாலையில் புரண்டு கிடந்தது. தலைப்பகுதியில் அடிபட்டிருக்கக்கூடும் என தலையைச் சுற்றிக்கிடந்த ரத்தம் சொன்னது. ஆனால் உயிர் இருக்கிறது. கால்களும் கைகளும் அசைந்துகொண்டே இருக்கின்றன. அவனைச் சுற்றி ஐந்தடி தூரத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருக்கும் மக்கள் அதற்குமேல் முன்னேறி அவனுக்கு உதவும் எந்த எண்ணத்திலும் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது.

“இவனுங்கல்லாம் வண்டியா ஓட்டுறானுங்க.. ஏறி உக்காந்தா ஃப்ளைட் ஓட்டுறோம்னு நெனைப்பு” என்றது கூட்டத்திலிருந்த ஒரு குரல். “ஆளப்பாருங்க… ஃபுல் மப்புல இருப்பான் போலருக்கு.. அதான் கொண்டு போய் விட்டுட்டான்” என்றது மற்றொரு குரல். உதவி செய்யவேண்டும். ஆனால் நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என எண்ணிய மற்றொருவர் “ஹலோ… நூத்தியெட்டா… சார் மீனம்பாக்கம் ஃப்ளை ஓவர் பக்கத்துலருந்து பேசுறேன் சார்.. இங்க ஒரு டூவீலர் ஆக்ஸிடண்ட்.. உடனடியா வாங்க” என கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

மற்றொரு ஒரு இளைஞர் அடிபட்டுக் கிடந்தவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிந்தார். வீட்டுக்குச் சென்றவுடன் சமூக வளைத்தளங்களில் மற்றவர்களுடன் அந்த புகைப்படங்களை பகிர்வார் போலத் தெரிந்தது. ஐந்து நிமிடமாக சுற்றி நிற்கும் கூட்டம் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமே மும்முரமாக இருந்தது. அப்போது தான் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேகவேகமாக வந்தார். மற்றவர்களைப் போலவே அவரும் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருப்பவர் என்பதை அவர் தோற்றமே காட்டிக்கொடுத்தது. அவர் தோளில் மாட்டியிருந்த பையை அருகில் கழற்றி வைத்துவிட்டு கீழே கிடப்பவரின் கழுத்தையும் தலையையும் சேர்த்துப் பிடித்தவாறு தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். அந்த இளைஞனின் ஒரு புற முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்த்து. தன் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து மெல்ல அவன் முகத்தை துடைத்துவிட்டார் அந்த மனிதர். இளைஞனுக்கு நெற்றியின் ஒரு ஓரமாக உடைந்து ரத்தம் கசிந்துகொண்டே இருக்க, கைக்குட்டையை அதில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். “சார் அந்த தண்ணி பாட்டில குடுங்க” என அருகிலிருந்த மற்றவரிடம் வாங்கி அவனுக்கு தண்ணீரும் கொடுத்தார்.

அப்போதுதான் விபத்தைக் கேள்விப்பட்ட போக்குவரத்து காவலர் வந்து சேர்ந்தார். சுற்றியிருந்தவர்களை கலைத்து காற்றுவரச் செய்தார். சரியாக 10 நிமிடம். ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அடிபட்ட இளைஞனை அவர் மடியிலிருந்து மெல்ல தூக்க, அடிபட்ட இளைஞன் மெதுவாக எழுந்து நின்றான். அவர் கொடுத்த கைக்குட்டையை தலையில் வைத்து அழுத்தியவாறே ஆம்புலன்ஸில் நடந்து சென்று ஏறினான். ஆம்புலன்ஸ் புறப்படும் வரை அங்கு நின்றிருந்த அவர், பின்னர் ரோட்டில் கிடந்த தனது பையை எடுத்துக்கொண்டு, ரத்தக் கரை படிந்த ஆடையுடன் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். அவர் உருவம் சாலையில் மறையும் வரை நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

யார் அவர்? அடிபட்டுக் கிடந்தவனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? எனக்கும் அடிபட்டவனுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் இவருக்கும் அவனுக்கும். அவர் செய்ததை என்னால் ஏன் செய்ய முடியவில்லை? எனக்கு ஏன் அது தோன்றவில்லை? அவர் ஒன்றும் மருத்துவர் இல்லை. எனக்குத் தெரியாத எதையும் அவர் செய்துவிடவும் இல்லை. ஆபத்தில் இருக்கும் ஒருவனுக்கு அல்லது உதவி தேவைப்பட்ட ஒருவனுக்கு அவரால் ஆன உதவியை எந்த பலனும் எதிர் பாராமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செய்தார். எனக்கும் என் அருகில் இருந்தவர்களுக்கும் அவர் ஒரு மனிதானகத் தெரிந்தார். ஆனால் கீழே அடிபட்டுக் கிடந்தவனுக்கு அவர் நிச்சயம் கடவுளாகத்தான் தெரிந்திருப்பார்.

நானும் ஒரு முறை கடவுளைப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் பள்ளி செல்லும் போது நடந்த ஒரு நிகழ்ச்சி. 1989 ஆம் வருடம். எனது பிறந்த ஊரான நாகை மாவட்டம், கடல் சார்ந்தப் பகுதி. தமிழகத்தில் எப்போதெல்லாம் மழையோ, புயலோ மிகுதியாக இருக்குமோ, நாகையிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அடை மழைக்காலத்தில், ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.

பொதுவாக நான் பள்ளிக்கு நடந்து செல்வதே வழக்கம். அது ஒரு நல்ல மழைக்காலம். முதல்நாள் பெய்த கனமழையில் நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை முழுவதும் சேரும் சகதியுமாக நசநசத்திருந்தது. மழையில் நனைந்துக்கொண்டே நானும், வீட்டருகே உள்ள நண்பரும் பள்ளிக்கு (நாகை புனித அந்தோனி பள்ளி) சென்றுக் கொண்டிருந்தோம். அவருக்கு என்னை விட ஐந்து/ஆறு வயது அதிகம் இருந்திருக்கலாம், அதே பள்ளியில் மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து, இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் வளாகத்தில் ஒரு பெரிய ஆழமான குளம் இருந்தது.

நான் அப்போது சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்ததால், காலணிகள் அணியவில்லை. தெருக்களில் சேற்றிலும் மழைநீரிலும் நடந்து வந்ததால் முதலில் கால்களை அந்தக் குளத்தில் கழுவிக்கொண்டு வருகிறேன், பிறகு இருவரும் அவரவர் வகுப்புக்கு செல்வோம் என நான் கேட்டுக்கொள்ளவும், நண்பரும் சரி என்றுக் கூறி குளத்தின் கரையில் காத்துக்கொண்டிருந்தார்.

அது ஒரு பெரியக் குளம் என்பதால், அந்தக் குளத்திற்கு நான்கு ஐந்து இடங்களில் படித்துறைகள் இருக்கும். அதன் வழியாக குளத்திற்குள் இறங்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால், குளம் முழுவதும் நிறைந்திருந்ததால், ஒரு இடத்தில் படி இருக்கும் என்று தவறாக எண்ணி நான் காலை வைக்க, துரதிருஷ்டவசமாக அங்கு படிகள் இல்லை. காலை வைத்தவுடன் சர்ரென்று இழுக்கப்பட்டு முழுமையாகக் குளத்தின் உள்ளே சென்றுவிட்டேன். எனக்கோ நீச்சல் கொஞ்சம் கூட தெரியாது. முதன் முதலாக நீருக்கு அடியில் இருக்கும் உலகத்தைக் காண்கிறேன்.

தலை முதல் கால் வரை முழுதும் தண்ணீர். எனது முழு உடலுக்குக் கீழேயும் மூன்று நான்கு அடிக்குத் தண்ணீர் இருந்திருக்கும். நண்பரைக் கூப்பிட நினைக்கிறேன், அதெல்லாம் தண்ணீரினுல் மூழ்கிக் கொண்டிருக்கும்போது முடியாது என்று அப்போது தான் புரிகிறது. மடக் மடக் என்று தண்ணீரைக் குடித்துக் கொண்டே குளத்தின் அடிக்கு மூழ்கிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். எனது இடது கையின் ஓரிரு விரல்கள் மட்டும் வெளியேத் தெரிந்திருக்க வேண்டும்.

mp1

கரையில் சுற்றுமுற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு திகைப்பு. தண்ணீரினுள் மூழ்கியதை நொடிப்பொழுதில் புரிந்துக்கொண்டு சட்டெனக் குளத்தில் பாய்ந்து, என் தலை முடியைப் பிடித்து இழுத்து, கரையில் ஏற்றினார்

அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். இருப்பினும் இவனைக் காப்பாற்றப் போய் நம்மையும் இவன் உள்ளிழுத்து விட்டால் என்ன செய்வது எனவோ, நினைந்த ஆடைகளுடன் வகுப்புக்கு எப்படி செல்வது எனவோ அவர் ஒரு நிமிடம் யோசித்திருந்தால், நான் நீருலகிலேயே ஐக்கியமாகியிருப்பேன். அந்த நாளிலிருந்து, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு அவரால் கிடைத்தது. அந்த மனிதனை என் வாழ்நாளில் மறக்க இயலுமா? துரதிருஷ்டவசமாக அந்த நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

இன்று நடந்த சம்பவம் மீண்டும் அவரை ஞாபகப்படுத்தியது. என்னை மிகவும் வருத்தப்பட வைத்து, சிந்திக்கவும் வைத்தது. தன்னலமற்ற ஒருவரிடமிருந்து நான் வாழ்நாளில் மறக்க முடியாத அளவு உதவிகளைப் பெற்றேன். ஆனால் அதையே நான் மற்றவர்களுக்குச் செய்ய ஏன் தயங்குகின்றேன்? பிறகு, அன்று அவர் என்னைக் காப்பாற்றியதற்கு என்ன பலன்? என் மேல் எனக்கே கோவமாக வந்தது. சிறிது நேரம் புறப்படாமல் அங்கேயே இருந்துவிட்டுக் கிளம்பினேன். என்மேல் எனக்கு இருந்த கோபம் தீர்ந்ததா என்றால் தெரியவில்லை. ஆனால் அடுத்தமுறை என் கண்முன் இதுபோன்றொரு சம்பவம் நிகழும்போது, ஓடிச்சென்று முதலில் உதவுபவன் நானாகத்தான் இருப்பேன்.

காலத்தினால் செய்யப்படும் மிகச் சிறிய உதவிகள் கூட, அது சென்று அடையும் நபர்களுக்கு அது ஞாலத்தை விட பெரிய விஷயமாக இருக்கும். நம்மால் இயன்ற உதவியை சக மனிதர்களுக்கு செய்வோம். சுயநலத்தை முடிந்தளவு மறப்போம். இறந்தப் பின்னும் மக்களின் மனதில் வாழும் வழியைத் தேர்ந்தெடுப்போம். நமது இந்த மண்ணுலக வாழ்க்கை பயனத்தை அர்த்தமுள்ளதாகவும், பயணுள்ளதாகவும் இருக்கச் செய்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team

Likes(3)Dislikes(0)
Share
Mar 142014
 

இந்த மாதம் சாதனையாளர்கள் பக்கத்தில், ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றிக் காண்போம். அவர் வீட்டருகில் பேசிக் கொண்டிருந்த ஒரு  கூட்டத்தினரிடம், ஓய்வுப் பெற்ற எஸ்.பி.மாணிக்கம் வீடு எது என விசாரக்கையில்,  “பச்சைத்தண்ணீ மாணிக்கமா, அதோ அந்த வீடுதான்” எனக் கூறினர். வித்தியாசமான இந்த அடைமொழியைக் கேட்டவுடன் ஆர்வமும் ஆச்சரியமும் பிறந்தது. அவர்களிடமே ஐயத்தைக் கூறியவுடன், அந்த மக்களிடம் வந்த பதில்  இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.

இவரது தனித்துவமே இது தான், மிகப் பெரிய அதிகாரியாக இருந்தும், தனக்கென்ற ஒரு பெரிய செல்வாக்கு இருந்தும், அதிகாரத்தை என்றுமே துஷ்பிரயோகம் செய்யாது, ஊழல் என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், “க்ளீன் ஹேண்டுடன் (Clean Hand)” சர்வீசிலிருந்து ஓய்வுப் பெற்றவர். பச்சைத் தண்ணீர் கூட தன்னை நாடி வருபவர்களிடமோ, சந்திக்கும் கேசுகளில் (CASES) ஈடுப்பட்டு இருப்பவரிடமோ பெற்றுக்கொள்ளாமல், இந்த அடைமொழியை மட்டும் பெற்றுக் கொண்டவர். பல  சாதனைகளுக்கு சொந்தமான திரு.மாணிக்கம் அவர்களிடம் பேசியவற்றிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

B+: வணக்கம் சார். காவல் துறைக்கு எவ்வாறு வந்தீர்கள்? அந்தப் பயணத்தைப் பற்றி?

மாணிக்கம்: அது ஒருப் பெரியப் பயணம். பள்ளிப் பருவத்தில் என்.சி.சி (NCC) யில், முழு ஈடுபாட்டுடன் இருந்து, என்.சி.சி. கேம்ப், சமூக சேவை கேம்ப் என பலவற்றில் ஈடுபட்டிருந்தேன். அதுவே எனக்குக் காக்கிச்சட்டை மீது ஒருப் பெரிய விருப்பத்தைக் ஏற்படுத்தியது. பிறந்தது, 1941 இல், பரமக்குடி பக்கத்தில் உள்ள வளநாடு என்ற ஒரு கிராமம். படித்தது ராமனாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் பள்ளி. பின் அமெரிக்கன் கல்லூரியில் பீயூசியும், மதுரை மெஜிராக் கல்லூரியில் பீ.எ. வும் படித்தேன்.

              படிப்பு முடித்தவுடனே, முதல் வேலை உசிலம்பட்டியில் முதியோர்களுக்கான வருவாய்த்துறையில் உதவியாளர் பணி. பின், குருப்-4, சர்வீஸ் கமிஷன் எழுதியதில் கிருஷ்ணகிரியில் ஒரு சிறிய பணி, இவ்வாரெல்லாம் தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கோ, மிலிட்டரி அல்லது காவல் துறையில் தான் ஈடுபாடு இருந்தது. அதிருஷ்டவசமாக, கல்லூரியின் இறுதி ஆண்டில் எஸ்.ஐ வேலைக்கு விண்ணப்பித்திருந்தது கைக்கொடுத்தது. வெல்லூரில் எஸ்.ஐ பயிற்சிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அது 1962 ஆம் வருடம். அந்த வருடம் தான் முதன் முதலில் உடல் ரீதியான மிகக் கடினமான பயிற்சி அறிமுகப் படுத்தப்பட்டது. கயிறு ஏறுதல், தவ்விக்கொண்டே செல்லுதல் போன்ற ஆறு விதமான கடுமையான சவால் இருக்கும். கல்லூரியில் ஓட்டப்பந்தையம், கால்பந்து என பல விளையாட்டுத் துறையில் பரிசுகளை வென்று இருந்ததினால், இந்த ஆறு பயிற்சியிலும் நல்லபடியாக தேர்ச்சிப் பெற முடிந்தது. பின்னர், கண்ணியாக்குமரியில் உள்ள வடசேரி காவல் நிலையத்தில் போஸ்டிங் கிடைத்தது.

B+: காவல் துறையில் ஆரம்பக்கால அனுபவம் எப்படி இருந்தது?

மாணிக்கம்:  பயிற்சிக்காலத்தில் (Probation period) இருக்கும் போதே, நேர்மை, காலம் தவறாமை, ஒழுக்கம், மேல் அதிகாரிகளுக்கு கீழ்படிதல் இவற்றை திரு. கந்தசாமி (எஸ்.ஐ) அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். கேஸ் எழுதுவதிலிருந்து, குற்றவாளிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது வரையிலானப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர்.

பின், பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு என்னை அனுப்பினார்கள். அரிசிக்கடத்தல், சட்ட விரோதச் செயல் என்று  அங்கு நிறைய குற்றங்கள் நடந்துக் கொண்டிருந்த சமயம். களத்தில் இறங்கிக் கடுமையாக வேலை செய்ததில், குற்றங்கள் குறைந்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது.

B+: போலிஸ் தொழிலில் சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் சிலவற்றைக் கூறுங்கள்.

மாணிக்கம்: அப்போது ஒரு அருமையான நிகழ்வு. பக்கத்து கிராமத்தில் அடிக்கடி திருட்டு நடந்தது. மக்கள் என்னை அணுகி உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளவே நானும் அங்கு சென்றேன். சந்தேகிக்கும் அனைவரையும் அழைத்து கேஸ் ஏதும் போடாமல், கடினமான முறைகளைப் பயன்படுத்தாமலேயே, நிறைய நல்ல விஷயங்களைப் எடுத்துக் கூறினேன். நான் விரும்பி அணிந்த காக்கிச்சட்டை மரியாதை தரும் விதமாகவும், என் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவும், மக்கள் என் பேச்சைக் கேட்கவும், குற்றங்கள் குறைந்தன.

            பின் நாகர்கோயில் ட்ராஃபிக்கில் ஆறு மாதம் பணியாற்றும் போது, நாற்பது பேர் கொண்ட ஒரு பெரியக் கூட்டம் என்னைத் தேடி வந்து மாமுல் கொடுப்பதற்கு காத்துக்கிடந்தது. அலுவலகத்தின் இருக்கதவுகளையும் மூடிவிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி திரு.கோபாலகிருஷ்னனுக்கு ஃபோன் போட்டு, வரவழைத்து, அனைவரையும் கைது செய்தோம். பயிற்சிக்காலத்தில், லஞ்ச ஒழிப்பில், சாதனை செய்த முதல் எஸ்.ஐ. நானாகத் தான் இருப்பேன். இது நேர்மை விரும்பும் பலரிடம், மிகப் பெரிய வரவேற்ப்பைப் பெற்றுத் தந்தது. மற்றவர்களுக்கு என் மீது கோபம் வரவே, என்னை சட்ட ஒழுங்குத் துறைக்கு (LAW & ORDER) மாற்றினர்.

            சட்ட ஒழுங்கில் ஒரு இரவு ரோந்து போகும்  வேளையில், ஒருவன் நடந்து சென்றது, சற்று வித்தியாசமாக இருக்கவே, அவனை ரகசியமாக பின்தொடர்ந்து,  அவனைப் பிடித்தபோது, அவன் நிறைய தங்க பிஸ்கட்கள் கடத்துவது தெரியவந்தது. அவனைப் பிடித்துக் கொடுத்ததுப் போன்ற பல கேசுகளை வெற்றிகரமாக முடித்தேன். பின்னர் 1966 முதல் 1972 ஆம் ஆண்டு வரை சீபிசீஐடி யில் எஸ்.ஐ ஆக சென்னைக்கு மாற்றப்பட்டேன். கஞ்சாக் கடத்தல், சிலைத்திருட்டு, கடையநல்லூர் கூட்டுறவு சங்கம் போன்ற பல கேசுகளை வெற்றிகரமாக முடித்தேன்.

                  பயிற்சிக் கல்லூரியில், அதற்குப்பின் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வுப் பெற்று பல கான்ஸ்டபில்கள், எஸ்.ஐ கள், டீ.எஸ்.பி களுக்கு மூன்று வருடம் பயிற்சி ஆசிரியராக இருந்தேன் . பின்னர் மூன்று வருடம் ரயில்வே போலிஸாகப் பணியாற்றி பல ரயில்வேக் கடத்தல்களைத் தடுத்திருக்கிறேன். அதற்கு பின் சிட்டி போலிஸுக்கு (CITY POLICE) எனக்கு பணிமாற்றம் வந்தது. அங்கும், சிறப்பாகப் பணியாற்றி சட்டக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் நடந்த போராட்டங்களையும், கலாட்டாக்களையும் நிறுத்தினேன்.

                  1988 ஆம் ஆண்டு ஏ.சி யாக பணி உயர்வில் சைதாப்பேட்டை வந்தேன். பின் 1991 ஆம் ஆண்டு வரை திருவள்ளிக்கேனியில் எனக்கு மாற்றம். அங்கு தான் மிகக் கடினமான நேரம். பலப் பிரச்சினைகளையும், போராட்டங்களையும் அமைதியான மனதோடு அணுகி வெற்றிப்பெற்றது, பெரியப் பெயரை வாங்கித் தந்தது. பின் வன்னாரப்பேட்டையில் ஒரு திருடனைத் திருத்தினேன். விமான நிலையம், மவுண்ட் சீபிசீஐடி, திண்டுக்கலில் ஏ.டி.எஸ்.பி, மதுரை டிராஃபிக்கில் டீ.சி. யாக இருந்து கடைசியாக திண்டுக்கலில் எஸ்.பி யாக 1999 ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றேன்.

B+: இத்தனை பிஸியாக இருந்த வாழ்க்கை, ஓய்விற்குப் பின் எவ்வாறு இருக்கிறது?

மாணிக்கம்: ரிட்டையரானப் பிறகு, ஓய்வெடுக்க விருப்பமில்லை.  நிறைய மக்களுக்கு உதவிகளைச் செய்கிறேன். நிறையப் படித்து பல டிகிரிகளும், டிப்ளமோகளும் பெற்றுள்ளேன். அனைத்து அனுபவங்களையும், பயின்ற கல்விகளையும், பாடங்களையும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று, 2007 இல், அனைத்து மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறேன். www.ammkindia.org  என்ற இணையத் தளத்தில் நீங்கள் அதன் விவரங்களைக் காணலாம்.

B+: உங்கள் வாழ்க்கையில் லஞ்சம் பெறாமல் எவ்வாறு இருந்தீர்கள்?

மாணிக்கம்: இன்னொருவரிடம் கையேந்துவது என்ற எண்ணமே வரக்கூடாது. எனக்கும் அது வராமல் இருந்ததற்கு, எனது குடும்பப் பின்னணித் தான் முதல் காரணம், வருமானத்திற்கு ஏற்ற மாதிரி வாழக் கற்றுக் கொண்டு செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாய் வாழப் பழகினேன். மனசாட்சிக்கு பயந்து நேர்மையைக் கடைசி வரைக் கடைப்பிடித்தேன். வீட்டிலிருந்தே, சாப்பாடு, தண்ணீர் என அனைத்தையும் கொண்டு வந்து விடுவேன். யாரிடமும் பச்சைத் தண்ணீர்க் கூட இலவசமாக வாங்கிக் குடிக்காமல் இருந்தக் காரணத்தினால் “பச்சைத் தண்ணீர் மாணிக்கம்” என்றப் பெயர் பெற்றேன்.

B+: இந்த வயதிலும் உங்கள் சக்தியின் ரகசியம் என்ன?

மாணிக்கம்: எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு டீடோட்டலர் (teetotaler) நான்.     முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு, எப்போதும் மூளையை பிஸியாக வைத்துக்கொள்ளுதல், யோகா, சமூக நிகழ்ச்சிகள் எனப் பலவற்றைக் கூறலாம்.

B+: நேர்மையான போலிஸாக வரவிரும்பும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது..

மாணிக்கம்: போராடத் தயாராக இருந்தால் முடியும். என்னை எத்தனையோ பேர் மிரட்டினார்கள், ட்ரான்ஸ்ஃப்ர் கொடுத்தனர். நானாக இது வரை ஒரு ட்ரான்ஸ்ஃப்ர் கூடக் கேட்டதில்லை. மடியில் கனம் இல்லை அதனால், எனக்கு வழியில் பயம் இருந்ததில்லை.  அவ்வாறு வர நினைக்கும் இளைஞர்களுக்கு சவால்களை எதிர்த்து போராடும் தைரியம் வேண்டும். அவர்களுக்கு பல்வேறு திறமைகள் வேண்டும். அவற்றை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். நேர்மையும், ஒழுக்கமும் இருக்க வேண்டும். நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் நம் நாட்டிற்கும், காவல் துறைக்கும் இன்று தேவை.

Likes(3)Dislikes(0)
Share
Mar 142014
 

           

அலுவலக பணிகள் தொடர்பாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்கிற வாய்ப்புகள் எனக்கு  கிடைத்தன. அந்த இடங்களுக்கு போகும்போது, ராஜபுத்திர மன்னர்கள் பற்றிய சுவையான விவரங்கள், அவர்களது குணநலங்கள், வாழ்க்கைச் சரித்திரங்கள் பற்றியெல்லாம் தெரிய வந்தது.

அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ராஜபுத்திர வம்சத்தில் வந்த  மிக மிக முக்கியமான வீரனான பிருத்விராஜ் சவுகான் என்ற மன்னரைப் பற்றி கிடைத்த தகவல்கள் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. யாரிந்த மன்னன்? பல நூறு வருடங்கள் கழித்தும், அங்குள்ள மக்கள் இவரை நினைவில் வைத்து வணங்குவதற்குக் காரணங்கள் என்ன என்பதைப்பற்றி, இந்த மாத B+ இதழில், கதைக் கட்டுரைப் பகுதியில் காண்போம்.

இந்த மன்னரைப் பற்றிய நிறையத் தகவல்கள், அவரது வீரம், பெருந்தண்மை, தியாகம், காதல் வாழ்க்கை என பல விஷயங்கள் இணைய தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவரது இறப்பைப் பற்றி மட்டும் வேறுபட்டத் தகவல்கள் இணைய தளங்களில் இருக்கின்றன. மேற்கூறிய மாநில மக்களிடம் கிடைத்த கருத்துக்களையும், இணையங்களின் பெரும்பாலரின் கூற்றுகளையும் வைத்து அந்த வீரணைப் பற்றி சில விவரங்களை இங்கே காண்போம்.

பெயரிலேயே வருவதைப் போல், ராஜபுத்திரர்கள் என்றால், மன்னர்களின் மகன்கள் என்று பொருள்படும். ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த ராஜபுத்திரர்களின் தொழில் போர் புரிதலும், விவசாயமும் ஆக இருந்திருக்கிறது. போர் புரிதலுக்கு தேவையான பல திறமைகள் மற்றும் தற்காப்புக் கலைகளில் வல்லவர்களாய் இருந்தாலும், ராஜபுத்திரர்கள் என்றுமே இசை, சிற்பக்கலை, ஓவியம் என்று பல கலைகளில் கைத்தேர்ந்தவர்களாய் இருந்துள்ளனர். நமது நாட்டின் கலைத் துறையில், இவர்களின் அர்பணிப்பு ஒரு பெரும் பங்காக இருந்தது என்றே சொல்லலாம்.

சவுகான் என்ற வம்சவழி வந்த பிருத்விராஜ் சவுகான் 1169 ஆம் ஆண்டு, தனது 20 வயதிற்குள்ளேயே, பெரும் சாம்ராஜியத்தை அஜ்மீர், மற்றும் தில்லியையும் தலைநகராகக் கொண்டு ஆட்சிப் புரிந்திருக்கிறார். பொதுவாக அச்சிறு வயது இளைஞர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அந்த பருவ வயதில் அவர்கள் என்னவெல்லாம் செய்துக் கொண்டிருப்பார்கள்? ஆனால் நம் மன்னரோ, இரு பெரிய சமஸ்தானங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார் என்றால், அவரது வீர தீரமும், ஆளுமைத்திறனும் எவ்வாறு இருந்திருக்க வேண்டுமென்று யோசித்துப் பாருங்கள்.

சிறு வயதிலிருந்தே கூர்மையான புத்தியும், போர்க்கள யுக்திகளில் கைத்தேர்ந்தவராய் இருந்திருக்கிறார். வில்வித்தையில் மிகச் சிறந்த வல்லுநராய்த் திகழ்ந்த நம் மன்னர், கண்களைக் கட்டிக் கொண்டு கூட, ஓசையை  வைத்தே துள்ளியமாக இலக்கை தாக்கி அழிக்கும் பேராற்றலைப் பெற்றிருந்தார்.  சிறு வயதில், எந்த ஒரு ஆயுதமுமின்றி ஒரு சிங்கத்தைத் தனி ஆளாய் எதிர்த்து நின்று கொன்றது, அவரது வீரத்திற்கு மற்றொரு சான்றாக சரித்திரத்தில் உள்ளது.

பிருத்விராஜ் மன்னனின் காதல் மற்றும் வீரம் தொடர்பான ஒரு அருமையான சம்பவம். கன்னாஜ் என்னும் மாவட்டத்தை ஜெய்சந்திர ரத்தோட் என்றொறு ராஜபுத்திர மன்னர் ஆண்டு வந்துள்ளார். (இப்போது உத்தரப்பிரதேஷ மாநிலத்தைச் சேர்ந்த பகுதியாக இந்தக் கன்னாஜ் உள்ளது). ஜெய்சந்திரனும் பிருத்விராஜும் தங்களுக்குள் அச்சமையத்தில், ஒற்றுமையின்றி மிகப்பெரிய எதிரிகளாய் இருந்துள்ளனர். இருப்பினும், ஜெய்சந்திரனின் மகளான சம்யுக்தைக்கும் (சன்யோகிதா என்றொரு பெயரும் உண்டு) பிருத்விராஜுக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதை மிக மிக பிரசித்திப் பெற்றது.

இவர்களது காதல் ஜெய்சந்திர மன்னருக்கும் தெரிய வந்தது. ஜெய்சந்திரன் ஒரு பெரிய சுயம்வரத்தை தன் மகளுக்கு ஏற்பாடு செய்தார். பல தேசங்களின்  இளவரசர்களை அழைத்து, சுயம்வரத்தில் கலந்துக் கொள்ளச் செய்தார். மேடையின் வாசலுக்கருகில், ஒரு காவல் காக்கும் வீரனைப் போல் பிருத்விராஜ்  கற்சிலை ஒன்றை செய்து, அவரை அவமதிக்கும் வகையில் அச்சிலையை அங்கேயே நிறுத்தி வைத்தார்.

சுயம்வரத்திலோ ஒரு அதிசயத்தக்க, யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தேரியது. சம்யுக்தை மாலையுடன் சுயம்வரத்திற்கு வர, யாரும் எதிர்பாராத வகையில், பிருத்விராஜின் சிலைக்கு மாலையிட்டு, தன் காதலைப் பறை சாற்றினாள். அப்போது அந்த சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிருத்விராஜ்  சம்யுக்தையை நொடிப்பொழுதில் தனது குதிரையில் தூக்கிக்கொண்டு சென்றது, இன்றும் காதலுக்கு அடையாளமாய் திகழ்கிறது. சம்யுக்தாவுடனானக் காதலும், மணமுடித்த வீரச்செயலும் சரித்திரத்தில் சிறப்பாய் இடம் பெற்றுள்ளது.

அது 1191 ஆம் வருடம். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த மன்னனான முஹமது கோரி பிருத்விராஜ் மன்னன் மீது படையெடுத்து வருகிறான். சிங்கமென போர் புரிந்த பிருத்விராஜ் மன்னனும், அவரது படையினரும், கோரியின் படையை  தோற்கடிக்கின்றனர். கோரி கைது செய்யப்பட்டு, பிருத்விராஜ் மன்னர் முன் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டு நிற்கிறான். பல போதகர்களும், ராஜகுருவும் எச்சரித்தும், ராஜபுத்திர வம்சத்தினரின் பண்பாட்டின்படியும், பெருந்தண்மையோடும், “பிழைத்துப் போ” என்று உயிர் பிச்சை வழங்கி கோரியை அனுப்பி விடுகிறார்.

நயவஞ்சகர்களுக்கு மன்னிப்பளிக்கக் கூடாது என்று அருமையாக உணர்த்திய ஒரு உண்மைச் சம்பவமாய் சரித்திர வல்லுனர்கள் இன்று கூட இதனை எடுத்துக் காட்டுகின்றனர். ஏனெனில், இந்த மன்னிப்பு முடிவு தான் ஹிந்துக்களின் சாம்ராஜ்யம் இந்தியாவில் முடிவிக்கு வரக் காரணமாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அடுத்த வருடமே (1192 இல்), கோரி இன்னுமொரு பெரும் படையுடன் வந்து,  பிருத்விராஜ் மன்னரை அவரது மாமனார் ஜெய்சந்திரனின் உதவியோடு, வஞ்சகமாய் போர்களின் விதிகளை கடைப்பிடிக்காமல், தோற்கடித்தான்.

பிருத்விராஜ் மன்னரால் எப்போதுமே தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என நினைத்து, காய்ச்சுப் பழுக்க வைத்த இரும்புக் கம்பிகளினால், பிருத்விராஜின்  இரண்டு கண்களையும் பொசுக்கி, பார்வையற்றவராய் ஆக்கி விடுகிறான். பிருத்விராஜின் அத்தனை சொத்துக்களையும் சூரையாடியது கோரியின் படை. இந்த விஷயங்கள் அனைத்தையும் கேள்வி பட்டவுடன், கோரி அந்தபுரத்திற்குள் நுழைவதற்கு முன்பே, ராஜபுத்திரர்களின் கலாச்சாரத்தின்படி, பிருத்விராஜ் மன்னரின் மனைவியும், அவரது படை வீரர்களின் மனைவிகளும், தங்கள் உயிரை மாய்த்து இருந்தார்கள்.

இப்போது கதையின் முக்கியமான விஷயத்திற்கு வருவோம். ஆஃப்கானிஸ்தானிற்கு பிருத்விராஜ் மன்னரைக் கொண்டு சென்று சிறையில் அடைத்த கோரி, பல சித்திரவதைகளை கொடுத்தான். பிருத்விராஜின் சிறந்த நண்பரும், அரண்மனைக் கவிஞரான சந்த் பார்டாய் என்பவரும் அவருடன் ஆஃப்கானிஸ்தானில் கைதியாக இருந்தார். கோரி ஒரு நாள் வில்வித்தைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். விளையாட்டு மைதானத்தில் பல படிகட்டுகளுடன் உயரமான இடத்தில், சிம்மாசனத்தில் அவன் அமர்ந்திருக்க, மைதானத்தை சுற்றிலும் பார்வையாளர்கள் போட்டியை ரசித்து ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். கோரி உட்கார்ந்திருந்த நேரெதிர் திசையில் ஒரு மணி உயரத்தில் கட்டி விடப்பட்டிருந்தது. பிருத்விராஜ் அந்த மைதானத்திற்கு இழுத்து வரப்பட்டார். அவரைப் பார்த்து, கோரி, “நீ தான், வில்வித்தை வீரனாயிற்றே, அதோ அங்கு தொங்கிக் கொண்டிருக்கும் மணி ஓசை ஒளிக்கும், அதனை சரியாக வில்லால் வீழ்த்து” எனக்கூறி சவால் விட்டான்.

சந்த் பார்டாயும், பிருத்விராஜிற்கு மணி எந்த இடத்தில், எத்தனை தூரத்தில் கட்டப்பட்டுள்ளது எனவும், கோரி எங்கு அமர்ந்துள்ளான், எத்தனை தொலைவில் உள்ளான் என்ற விவரத்தையும் ஒரு அழகானக் கவிதை மூலம் தெரிவிக்கிறார்.  முதல் மணி மைதானத்தில் அடிக்கப்பட்டவுடன், நண்பன் கூறியிருந்த விவரங்களை வைத்தும், மணியோசையினையும் கவணித்து, துள்ளியமாக கணக்கிட்டு, பிருத்விராஜ் அம்பை எடுத்து வில்லை மணி இருந்த இடத்தில் சீராகப் பாய்ச்ச, கட்டப்பட்டிருந்த மணி தொப்பென்றுக் கீழே விழுந்தது. இதனைப் பார்த்த கோரி ஆர்வத்தை அடக்க முடியாமல், “சபாஷ்” எனக் கத்தி ஆர்ப்பரிக்கவும், “இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது, முடித்து விடு பிருத்வி அந்தக் கொடிய மிருகத்தின் கதையை” என்று சந்த் பார்டாய் கர்ஜிக்கவும், அடுத்த வில்லை பிருத்விராஜ் மின்னலென கோரியின் கழுத்தை நோக்கி எய்கிறார். அம்பிலிருந்து சீரிப்பாய்ந்த வில், கோரியின் கழுத்தை நேராக சென்று துளைத்து, அவன் தலையைத் துண்டிக்கிறது. இரத்த வெள்ளத்துடன் கோரி சிம்மாசனத்திலிருந்து சாய்ந்துக் கீழே விழுந்து உயிர்விடுகிறான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் இது அத்தனையும் நடந்து முடியவே, கோரியின் படை வீரர்கள், பிருத்விராஜை நோக்கி மைதானத்திற்குள் வேகமாகப் பாய்கின்றனர். அவர்கள் நெருங்குவதற்கு முன்பே, “என் மரணம் உன் கையில் நிகழ்ந்தால் தான் மகிழ்ச்சி நண்பா” என இருவரும் ஏற்கனவே பேசி வைத்தபடி, பிருத்விராஜும் நண்பர் சந்த் பார்டாயும் தங்களை ஒருவருக்கொருவர் கத்தியால் குத்திக் கொண்டு வீர மரணம் அடைகின்றனர். பிருத்விராஜின் உடலுக்கு ஆஃப்கானிஸ்தானிலேயே ஒரு சமாதி, கோரியின் சமாதிக்கு அருகில் அந்நாட்டு மக்களால் கட்டப்பட்டுள்ளது.

kk1கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் முன் நடந்த உண்மையான வீர சம்பவத்தைக் கண்ட பின், இன்றைய நிகழ்காலத்திற்கு வருவோம். இன்று வரை, ஆஃப்கானிஸ்தானில் கோரியின் சமாதியினைக் காணச் செல்லும் அந்நாட்டு மக்கள், தங்கள் மன்னன் கோரியை கொன்றதற்காக, பிருத்விராஜ் சமாதியினை கல்லால் அடித்தும், காலால் உதைத்தும் அவமரியாதை செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். நமது இந்திய அரசு முயன்றால், இத்தகைய சிறப்புடைய மாவீரன் பிருத்விராஜ் சவுகானின் சுவடுகளையும், அடையாளங்களையும், நினைவுப் பொருள்களையும் ஆஃப்கானிஸ்தானிலிந்து வரவழைக்கப்பட்டு நமது தேசிய பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்றாய் பராமரிக்கலாம் என்று பிருத்விராஜின் வம்சாவழியினர் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் இன்றும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

Likes(3)Dislikes(0)
Share
 Posted by at 6:25 am
Mar 142014
 

நண்பனே!

நீ உலகின் கதாப்பாத்திரம் அல்ல

உலகின் கதாநாயகனே நீ தான்..

 

நம்பிக்கையோடு வாழ்ந்திடு மனிதனே..

சிறு சிலந்திப் பூச்சிக்குக் கூட எவ்வளவு நம்பிக்கை!

படைப்புகளின் சிறந்த நீ, நம்பிக்கை இல்லாமல் வாழ்வதா?

ஆம், எழுந்திடு, சிகரம் தொடு…

 

வெற்றியின் முகவரி, நம்பிக்கை என்று தெரியாதா உனக்கு?

பட்டாம் பூச்சியைப் பார்,

நீ பரந்துக் கொண்டே இரு,

வானம் தாண்டி செல்

 

வாழ்க்கைத் தரம் உயரும் உனக்கு

நீ செல்லும் இடமெல்லாம் வெற்றி நிச்சயம்

வெற்றி ஒன்றே நமது லட்சியம்..

 

வெற்றி உனக்கு நெடுந்தொலைவில் இல்லை,

தொடும் தொலைவில் தான் உண்டு…

எழுந்திடு, கடல் தாண்டி செல்

கரம் கூப்பி அழைக்கும் அனைத்து நாடும்,

உன்னைத் தன் மகன் என..

காரணம் உன் நம்பிக்கையின் வெற்றி!!!

 

–       கவிஞர் ஜோஷுவா

Likes(2)Dislikes(0)
Share
Mar 142014
 

 

il1

வணக்கம் நண்பர்களே… இந்த மாத இளைஞர் பகுதியை ஒரு சிறிய கதையுடன் ஆரம்பிப்போம்.

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழ்ந்த மக்கள் விசித்திரமான ஒரு பாரம்பரியச் சடங்கைப் பின்பற்றி வந்தனர். அதன்படி ஒவ்வொரு அரசரும் அந்த நாட்டை ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆள வேண்டும். ஐந்தாமாண்டின் முடிவில் அந்த அரசருக்குச் சகல மரியாதைகளும் செய்து அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி ஊருக்கு வெளியே ஒரு நதிக்கு மறுபுறம் இருக்கும் ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அதன் பின்னர் அந்த அரசர் மறுபடி நாட்டுக்குள் வர அனுமதிக்கப் படமாட்டார். ஒரிரு நாட்களில் காட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அந்த அரசரை அடித்து சாப்பிட்டு விடும். அதாவது ஒவ்வொரு அரசரும் அவரது ஆட்சிகாலத்திற்குப் பிறகு மரணிக்க வேண்டும் என்பதையே பாரம்பரியமாகக் கொண்டிருந்தனர். மக்கள் பல வருடங்களாக இந்த சடங்கையே பின்பற்றி வந்தனர். ஒவ்வொரு அரசரும் அதன்படியே நடத்தப்பட்டனர்.

சில அரசர்கள் ஐந்து வருடமும் நாட்டை மகிழ்ச்சியுடன் ஆண்டு விட்டுப் பின்னர் அந்த சடங்கை ஏற்று, மக்களுக்காக உயிரை விடுவதில் பெருமை கொண்டு மாண்டு வந்தனர். இன்னும் சில அரசர்கள் ஐந்து ஆண்டு முடிவதற்குள்ளாகவே,  மரண பயத்திலேயே உயிரை விட்டனர்.

இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ஒரு அரசர் வெற்றிகரமாக தனது ஐந்தாண்டு ஆட்சிகாலத்தை முடித்தார். மக்கள் அனைவரும் கூடி அவருக்கு மரியாதை செய்து, அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி நதியின் அக்கரைக்கு அனுப்பி வைத்தனர். பல்லக்கைத் தூக்கிச் செல்லும் காவலாளிகள் அரசரை நதிக்கரையில் இறக்கி விட்டுவிட்டு “அரசரே.. நாங்கள் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றனர்

“ஹ்ம்ம் கேளுங்கள் “ என்றார் அரசர்.

“நாங்கள் இதுவரை பல மன்னர்களை இங்கே இறக்கிவிட வந்திருக்கின்றோம். எவ்வளவு தான் மக்களுக்காக உயிரை விடுவதில் அவர்கள் பெருமையாகக் கருதினாலும் இங்கே நாங்கள் கொண்டு வந்து விடும் அந்த கணத்திலாவது அவர்கள் முகத்தில் ஒரு பயம் தெரியும். ஆனால் தங்கள் முகத்தில் அந்த மாதிரி ஒரு உணர்வை எங்களால் காண முடியவில்லையே ஏன்? உங்களுக்கு சாவென்றால் பயம் கிடையாதா?” என்றான் ஒரு காவலாளி.

”சாவென்றால் யாருக்குத் தான் பயம் இருக்காது. எனக்கும் சாவென்றால் பயம்தான்” என்றார் அரசர்.

”அப்படியா.. எப்படியோ இன்னும் சில மணி நேரங்களில் எதோ ஒரு காட்டு விலங்கிற்கு இரையாகி இறக்கப் போகின்றீர்கள். ஆனால் தாங்கள் அதற்காகப் பயப்படுவது போல் தெரியவில்லையே” என்றான் மற்றொரு காவலாளி.

”நான் சாகப்போகின்றேன் என்பது உண்மை.. ஆனால் அது இன்றைக்கு அல்ல” என்றார் அரசர்.

“புரியவில்லையே மன்னா… அது எப்படி சாத்தியம். இந்தக் காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களைப் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். பல முறை பார்த்தும் இருக்கிறோம். இந்தக் காட்டில் ஒரு இரவைத் தாண்டினாலே பெரிய விஷயம்.. அப்படியிருக்கையில்….” என காவலாளி இழுக்க மன்னர் தெளிவாகப் பதில் கூற ஆரம்பித்தார்.

”காவலாளிகளே.. மற்ற அரசரைப்போல நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே ஐந்தாவது ஆண்டில் இவ்வாறு நடக்கப் போகின்றது என்பதை அறிந்திருந்தேன். ஆனால் நான் மற்றவர்களைப் போல எதுவும் செய்யாமல் விதியை நினைத்துப் புலம்பவில்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சில வீரர்களைக் காட்டுக்குள் அனுப்பி, இங்கு வாழும் கொடிய மிருகங்கள் அனைத்தையும் கொன்று விட்டேன். இரண்டாம் வருடத்தில் மரம் வெட்டும் சிலரைக் காட்டுக்குள் அனுப்பி, ஒரு பகுதி மரங்களை வெட்டச் செய்தேன். மூன்றாம் வருடத்தில்  சில விவசாயிகளை உள்ளே அனுப்பி அதன் ஒரு பகுதியை விளைநிலங்களாக்கி பயிர்களை வளர்க்கச் செய்தேன். நான்காம் வருடத்தில் வீடு கட்டுபவர்கள் சிலரை அனுப்பி காட்டுக்குள் வீடுகள் அமைக்கச் செய்தேன். ஐந்தாம் வருடம் என் நாட்டின் ஒரு பகுதி மக்களை இந்த காட்டுக்குள் இடம் பெயரச் செய்துவிட்டேன்.

இப்போது நான் சாதாரணமானவானக இந்த காட்டுக்குள் செல்லவில்லை. நான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தில் ராஜாவாகவே செல்கிறேன். என்னை வரவேற்க உள்ளே என் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என கூறி முடிக்கவும் ஆச்சர்யத்திலிருந்து மீளாத காவலாளிகள்

”மன்னா இதற்குப் பெயர் என்ன?” என்று கேட்டவுடன் மன்னர் ஒரு  புன்னகையை உதிர்த்துவிட்டு

“காவளாளிகளே… இதற்குப் பெயர்தான் திட்டம்” என்று கூறிவிட்டு அந்தப் புன்னகை மாறாத முகத்துடன் காட்டிற்குள் சென்றார்.

அதாவது இந்த மாதம் நாம் planning எனப்படும் திட்டமிடுதல் பற்றியே சிறிது அலசப் போகின்றோம்.  திட்டமிடுதல் அல்லது முன்கூட்டியே சிந்தித்து செயல்படுதல் (Forethought) எனப்படுது, ஒரு இலக்கைச் செம்மையாக அல்லது சுலபமாகச் செய்து முடிக்கத் தேவையான வழிமுறைகளை வகுத்து, முறைப்படுத்தி அதனை செயல் படுத்துவதேயாகும்.  ஒரு முறையான திட்டமிடுதலில்  வழிமுறைகளின் உருவாக்கமும் அதனை செயல்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு முறையான திட்டமிடுதலில் கீழ்கண்ட படிகளைப் பின்பற்றுதல் அவசியமாகும்

  1. 1.     இலக்கை நிர்ணயித்தல்

திட்டமிடுவதற்கு முன்பாக நமது இலக்கு என்ன என்பதில

தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். ஊட்டிக்கு செல்வதற்கு ஒரு திட்டத்தைப் போட்டு பாதி வழியில் வண்டியை கொடைக்கானலுக்கு திருப்பினீர்களேயானால் அதற்கு முன் நீங்கள் போட்ட திட்டம் அனைத்தும் வீணே.

 

  1. 2.     இலக்கை அடைவதற்கான பல்வேறு வழிமுறைகளை ஆராய்தல்

இப்போது நம் இலக்கு தெளிவாக உள்ளது. அந்த இலக்கை அடையக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள பல்வேறு வழிகளை நன்றாக ஆராய வேண்டும்.  அதவாது நமது இலக்கை அடைய எத்தனை வகையான வழிகள் உள்ளதோ அத்தனையும் அலச வேண்டும்.

 

  1. 3.     சரியான வழிமுறையை தெரிவு செய்தல்

அந்த பல்வேறு வழிகளில் நம்மிடம் இருக்கும்  திறமைகளையும், ஆதாரங்களையும் கொண்டு, நம்மால் எளிதாக இலக்கை அடையக் கூடிய வகையில் அமைந்த வழியைத் தெரிவு செய்து செயல்படுத்த வேண்டும்.

திட்டமிடுதல் என்பது மனித மூளையின் ஒரு பிரத்யேகமான ஒரு பண்பு. மேலும் இந்தப் பண்பானது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. ஒரே மாதிரியான  வேலையை இரண்டு வெவ்வேறு மனிதர்கள் ஒரே மாதிரி செய்து முடிப்பதில்லை. ஒரே நேரத்திலும் செய்து முடிப்பதில்லை. இதற்குக் காரணம் அவர்களின் மூளையின் திட்டமிடுதல் செயல்பாட்டில் உள்ள வித்தியாசமேயாகும்.

ஒரு மனிதனின் திட்டமிடுதல் பண்பின் அளவை கண்டறிய லூகாஸ் கோபுரம் (Lucas Tower) என்ற ஒரு விளையாட்டு 18ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. அது என்ன லூகாஸ் கோபுரம். இதோ பார்ப்போம்.

il2

மேலுள்ள படத்தில் உள்ளபடி மூன்று கம்பிகளும்,  ஒரு கம்பியில் பெரிய அளவிலிந்து படிப்படியாக சிறியதாகக் குறையும் வட்டத்தட்டுகளும் இருக்கும். விளையாட்டு என்னவென்றால் ஒரு கம்பியில் இருக்கும் தட்டுகளை அதே வரிசையில் அடுத்த கம்பிக்கு மாற்ற வேண்டும்.

“இதிலென்ன பிரமாதம். அப்படியே மொத்தமாகத் தூக்கி அடுத்த கம்பியில் சொருகி விட வேண்டியது தானே? “ என நீங்கள் மனதிற்குள் கேட்பது எனக்குப் புரிகிறது. அதுதான் கூடாது. அந்த தகடுகளை மாற்றும் போது நாம் கீழ்கண்ட மூன்று விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

  1. ஒரு சமயத்தில் ஒரே ஒரு வட்டத் தட்டை மட்டுமே நகர்த்த வேண்டும்.
  2. எப்பொழுதுமே மேலே உள்ள தட்டை மட்டுமே நகர்த்த வேண்டும்.
  3. விளையாட்டின் எந்த ஒரு நிலையிலும் சிறிய தட்டின்  மேல் பெரிய தட்டுகள் இருக்க்க் கூடாது.

எவ்வளவு விரைவாக, எத்தனை நகர்த்தல்களில் நீங்கள் இந்தக் கோபுரத்தினை அடுத்த கம்பிக்கு மாற்றுகின்றீர்களோ அதைப் பொறுத்து உங்களின் திட்டமிடுதல் பண்பு மதிப்பிடப்படும். இந்த விளையாட்டை எத்தனை தகடுகளை வைத்து வேண்டுமானாலும் விளையாடலாம். ஒரு விளையாட்டை முடிக்கத் தேவையான குறைந்த பட்ச நகர்த்தல்கள் 2^n-1. அதாவது நாம் மூன்று தகடுகளை வைத்து விளையாடுகின்றோம் என்றால் அந்த விளையாட்டை முடிக்கத் தேவையான குறைந்த பட்ச நகர்த்தல்கள் 2^3-1= 7.

அதேபோல் திட்டமிடுதல் என்று ஒன்று இருந்தால் அதற்கு மாறான ஒரு பண்பு இருக்கத்தானே வேண்டும். அதாவது திட்டமிடாத செயல்பாடு (reaction or firefighting).  அதன் படி நாம் எந்த செயலையும் திட்டமிட்டுச் செய்ய மாட்டோம். அந்த சமயத்தில் நமக்கு என்ன தோன்றுகின்றதோ அதனை மட்டுமே செய்வோம். நாம் அந்த சமயத்தில் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்திருக்க மாட்டோம்.  எதிர்பாராத பல திருப்பங்களைச் சந்திப்போம்.

இந்த திட்டமிடாத செயல்பாட்டில் கூட நமக்கு சில சமயம் வெற்றிகள் கிடைக்கும். ஆனால் அதன் சதவிகிதம் மிகக் குறைவாக இருக்கும். மேலும் அவை நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. உதாரணமாக காசை சுண்டி பூவா தலையா கேட்பது போல் எனலாம். பூவும் விழலாம் தலையும் விழலாம். அதனை உங்களால் தீர்மானிக்க முடியாது. அதே போல் தான் இந்த திட்டமிடாத செயல்பாடு. உங்களுக்கு வெற்றியும் கிடைக்கலாம் தோல்வியும் கிடைக்கலாம். இரண்டுக்குமே 50 சதவிகித வாய்ப்பு உள்ளது. ஆனால் திட்டமிடுதலில் நம் வெற்றி விகிதம் அதிகரிக்கும். திட்டமிட்டு ஒரு பணியை செய்கையில் எதிர்பாராத எந்த முடிவையும் சந்திக்கமாட்டோம்

நாம் எடுத்துக் கொண்ட செயல்களின் முடிவு வெற்றியில் மட்டுமே முடிய வேண்டும் என விரும்பினால், அவற்றை திட்டமிட்டுச் செய்வதே நல்லது.  சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், Plan your Work ; Work your Plan

 

–        முத்துசிவா

(குட்டிக்கதை உபயம் : திரு. ரஜினிகாந்த்)

 

Likes(2)Dislikes(0)
Share
 Posted by at 6:15 am
Mar 142014
 

இந்த மாத புதிர்

உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், நல்ல நிறுவனம் ஒன்றில் நேர்முகத்தேர்விற்கு (Interview) அழைப்பு வரவே, கலந்து கொள்ளச் செல்கிறார். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் கூறி முடித்து விடுகிறார். கடைசியில் ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டார் என்றால், வேலை கண்டிப்பாக அவருக்கு தான் என்று அந்த நிறுவனத்தின் முதலாளி உறுதி அளிக்கிறார். நண்பரும் சற்றே குஷியாகி சரி என்கிறார்.

முதலாளி, அவர்கள் இருவருக்கும் நடுவில் உள்ள மேசையின் மீது, கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதைப் போன்று, சரியாக பத்து காசுகளை (COINS) அடுக்கி வைக்கிறார். முதல் வரிசையில் நான்கும், இரண்டாம் வரிசையில் மூன்றும், மூன்றாம் வரிசையில் இரண்டும், நான்காம் வரிசையில் ஒரு காசு எனவும் அடுக்கி வைக்கிறார். அதாவது மேலிருந்து கீழேப் பார்க்கும்போது, நான்கிலிருந்து ஒன்று என்ற இறங்கு வரிசையில் (Descending Order) இருக்கிறது.

pt1

இப்போது கேள்வி இதுதான். நீங்கள் மூன்றே காசுகளின் இடத்தை மட்டும் மாற்றி அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தபின் இந்த வரிசை அப்படியே தலைக்கீழாக மாறி இருத்தல் வேண்டும். அதாவது மேலிருந்து கீழேப் பார்க்கும்போது, ஒன்றிலிருந்து நான்கு என்ற ஏறு வரிசையில் (Ascending Order) இருக்க வேண்டும். எவ்வாறு செய்வீர்கள் எனக் கேட்கவும், உங்கள் நண்பர் வேர்க்க விறுவிறுக்க, திருதிரு என்று முழிக்கிறார், தவறான முடிவெடுத்து இந்த நிறுவனத்திற்கு வந்துவிட்டோமோ என்று நினைக்கிறார்.

அதை புரிந்துக் கொண்ட முதலாளி, கவலை வேண்டாம், ஒரு சிறிய வாய்ப்பு உண்டு. நீங்கள் உங்கள் நண்பர்கள் யாரையாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதனை அவருடன் கலந்துப் பேசி சரியான விடையை அளிக்கலாம் என கூறியவுடன் தான் நண்பருக்கு உயிரே வந்தது. உடனே அந்த முதலாளியைப் பார்த்து, ஒரு வெற்றி புன்னகை பூத்தவாறே, நண்பர் அவரது செல்போனிலிருந்து உங்களை அழைக்கிறார். உங்கள் நண்பருக்குத் தான் தெரியுமே, நீங்கள் தான் பதில் கூறி விடுவீர்கள் என்று..

நண்பர்களே, உங்களுக்கு விடைத் தெரிகிறதா? தெரிந்தால் எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…

 

 

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு, மூன்று பேர் சரியான விடையைக் கொடுத்தனர். அவர்களின் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிரைப் பார்த்த உடனே ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அது என்ன என்றால், முதல் மற்றும் இரண்டாம் நண்பர்களால் விடையைக் கூற இயலாது. விடையைக் கூற மூன்றாம் மற்றும் நான்காவது நண்பர்களால் மட்டுமே முடியும். ஏனெனில் அவர்கள் இருவர் மட்டுமே, முன்னால் நிற்பவர்களின் கல்லின் நிறத்தைக் காண இயலும். அதை வைத்து அவர்கள் தலையில் உள்ள கல்லின் நிறத்தை அவர்கள் யூகிக்க வேண்டும்.

சூழ்நிலை இவ்வாறு இருக்கையில், சில நிமிடங்கள் ஆகியும், நான்காவது நண்பனும் பதில் சொல்லாதது, மூன்றாம் நண்பனை ஆழமாக யோசிக்க வைக்கிறது. தான் மட்டுமே சரியான பதிலைக் சொல்ல முடியும் என்று அவனுக்கு விளங்கியது. முதலில் ஏன் நான்காவது நண்பன் பதில் சொல்லவில்லை என்று அவன் யோசித்தான்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நண்பர்களின் தலையில் ஒரே நிறக் கல் (உதாரணமாக நீலம்) இருந்திருந்தால், முதல் மற்றும் நான்காவது நண்பர்களின் தலையில் எஞ்சியுள்ள ஒரே நிறக் கல்லான சிகப்பு இருந்திருக்கும். ஆனால் நான்காவது நண்பன் பதில் கூறாமல் இருந்ததினால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நண்பர்களின் தலையில் ஒரே நிறக் கல் இல்லை என்று அவனுக்கு விளங்கியது.

அதாவது இரண்டாம் மற்றும் மூன்றாம் நண்பர்களின் தலையில் உள்ளக் கற்கள், மாறி இருக்க வேண்டும். இரண்டாம் நண்பனின் தலையில சிகப்பு நிறக் கல் இருப்பதை மூன்றாம் நண்பன் பார்க்கிறான், இதனால் தன் தலையில் உள்ளக் கல் நீலமாகத் தான் இருக்க வேண்டும் என்பதை வெற்றிகரமாகக் கண்டுப்பிடித்து தனது பதிலை தெரிவிக்கிறான்.

சரியான பதில் அளித்தவர்கள்:

சுவாமிநாதன், விஜய் & மோகன்.C.P

Likes(1)Dislikes(0)
Share
Mar 142014
 

 

நாம் இவ்வுலகில் ஒரு சிறந்த காரணத்திற்காகவும் லட்சியத்திற்காகவும் உள்ளோம்,

அதனால் கடந்த காலத்தின் தவறுகளை எண்ணி வருந்திக்கொண்டே இருக்காமல்,

நமது எதிர் காலத்தின் நிர்ணையிக்கும் சிற்பியாக இருப்போம்..

 

ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் சிறிதளவே வித்தியாசம் உள்ளது.

ஆனால் அச்சிறு வித்தியாசமே மிகப்பெரிய மாற்றத்தை அவரவருக்குள் தருகிறது.

அந்த சிறு வித்தியாசம் தான் அவரவர்களுக்கு உள்ளே இருக்கும் எண்ணங்கள்..

ஆம், நம் எண்ணங்களே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

 

பிரச்சினைகளில் மட்டுமே எண்ணிப் பார்க்கும் போது,

துன்பங்களே அதிகமாக நம் கண்களில் தெரிகிறது..

ஆனால், பிரச்சினைகளின் தீர்வுகளை எண்ணிப் பார்க்கும் போது,

வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் நமக்குப் புலப்படுகிறது..

 

 

மகிழ்ச்சிக்கான காரணம் வெற்றி அல்ல

மாறாக, வெற்றிக்கான காரணம் மகிழ்ச்சி ஆகும்,

நீ விரும்பிய செயலை செய்யும்போது, நீ வெற்றி வீரன் ஆகிறாய்

  

உன்னைப் பற்றி மற்றவர்கள்

என்ன நினைக்கிறார்கள் என்பதை விட

உன்னைப் பற்றி நீ

என்ன நினைக்கிறாய் என்பதே மிக மிக முக்கியமாகும்

 

ஒரு செயலைத் தொடங்குவதற்கு நோக்கம் தேவை,

ஆனால் அச்செயலைத் தொடர்ச்சியாக செய்ய ஊக்கமும், ஒழுக்கமும் தேவை.

 

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்தபின்னும்,

ஊக்கத்துடன், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்,

இதுவே ஒரு பெரிய இலக்கை அடைய உங்களுக்கு சக்தி அளிக்கும்.

 

எவனொருவன், கடமைக்கான சில வேலைகளை செய்துக்கொண்டே

தன் மனதிற்குப் பிடித்த வேலைகளையும் செய்து முடிக்கிறானோ,

அவன் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறான்

 

எப்போதாவது ஒருமுறை எடுக்கும் முயற்சி அல்ல,

நீங்கள் எடுக்கும் சீரான மற்றும் ஒழுங்கான தொடர் முயற்சிகளே

உங்கள் குணத்தையும் வாழ்வையும் செதுக்குகிறது

 

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்

உங்களிடம் என்ன சாதனங்கள் இருக்கிறது என்பதைக் காட்டிலும்

இருக்கும் சூழ்நிலையில் எத்தனைச் சிறப்பான செயலைச் செய்கிறீர் என்பதே உங்களை வித்தியாசப் படுத்திக்காட்டுகிறது..

 

நீ உனது முழு திறமையையும் வெளிப்படுத்தாமல்

இவ்வுலகத்தை விட்டுச் செல்வதைப் போல்,

ஒரு துன்பம் ஏதுமில்லை

 

ஒரு மனிதன் தனது பிறப்பால் இல்லாமல்

தனது செயல்களின் மூலமே

சிறந்தவனாகிறான்!

Likes(11)Dislikes(0)
Share
Mar 012014
 

வணக்கம் நண்பர்களே…

நம் வாழ்வில் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள், எதிர்கொள்ளும் சவால்கள், சந்திக்கும் மனிதர்கள் நமக்கு பல அனுபவங்களை அளித்து, நமது பண்புகளையும் சமுதாயம் குறித்த நம் சிந்தனைகளை உருவாக்கவும் மாற்றவும் செய்கின்றன. சில நாட்களுக்கு முன் நடந்த என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் இந்த இதழில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இடம்: சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம்

ஒரு மாலை நேரம், எக்ஸ்பிரஸ் வருகைக்காக குறிப்பிட்ட பிளாட்பார்மில், காத்துக் கொண்டிருந்தேன். அன்று நடந்த ஒரு நிகழ்வு, இன்றும் மனதில் நங்கூரமாய் பதிந்து கிடக்கிறது. அன்று சந்தித்த நபர், நம்பிக்கை வேரை, மிக ஆழமாக மனதில் ஊன்றி சென்றார் என்றே கூற வேண்டும்.

பிளாட்பாரத்தில் ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாக மக்கள் நின்று கொண்டும் நடந்துகொண்டும் இருக்க, “டக்.. டக்” என்ற சத்தமும் ”சார் கொஞ்சம் நகருங்க” என்ற சத்தமும் மாறி மாறி கேட்கவே, என் கவனமும் பார்வையும் சத்தம் வந்த திசையில் திரும்பியது.

ஒரு பத்து மீட்டர் இடைவெளியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு மாற்றுத் திறனாளி, இரண்டு கால்களும் இல்லாத நிலையில், நான்கு சக்கரம் உள்ள ஒரு சிறு பலகையின் மீது அமர்ந்து கொண்டு பிளாட்பாரத்தில் உள்ள அனைத்து குப்பைகளையும் கூட்டி ஓரம்கட்டிக் கொண்டிருந்தார். சற்று ஆச்சர்யத்துடனும் ஆர்வத்துடனும் அவரை உற்று கவனித்தேன்.

சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில், இடது கை மிகவும் மெலிதாக சிறிய செயல் திறனுடன் இருக்கிறது. வலது கை மட்டும் முழு திறனுடன் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உடலை குனிந்து  இரண்டு கைகளாலும் வண்டியை இயக்குகிறார். வலது கையால் ஒரு துணியாலும், சிறு பிரஷ்ஷாலும் குப்பைகளை கூட்டித் துடைத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு இடமாக, சுத்தம் செய்தபின், அங்கு நின்று கொண்டிருக்கும் மனிதர்களை பார்க்கிறார். சிலர் அவருக்கு கையில் இருக்கும் சில்லரைகளை கொடுக்கின்றனர். சிலர் அவரின் பரிதாபப் பார்வைக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் விலகிச் செல்கின்றனர். அவ்வாறே கூட்டிக்  கொண்டு என்னை நெருங்க, என்னையும் அறியாமல் ஒரு பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்து சற்று பரிதாபத்துடன் பார்த்தேன். எனது பரிதாபமோ, கரிசனப் பார்வையோ அவருக்கு ஒரு நிம்மதியையும் அங்கீகாரத்தையும் தந்திருக்க கூடும். அதனால் சற்று வேலையை நிறுத்தி சில நிமிடங்கள் பேச ஆரம்பித்தார்,

அவர்: என்ன சார் சென்னைக்கு புதுசா?

நான்: புதுசு இல்லைங்க. ஒரு பதினைந்து வருஷத்துக்கு மேலாகுது. உங்க பேர் என்ன? உங்க வீடு எங்க இருக்கு?

அவர்: என் பேரு முருகன் சார். வீடு இங்க பக்கத்தில் ரெண்டு கிலோமீட்டர் போகணும்.

நான்: இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க. எப்படி உங்களால் முடிகிறது?

அவர்: ரொம்ப கஷ்டம் தான் சார். ஆரம்பத்துல உடம்பு ரொம்ப வலிக்கும். ஆனாலும் அதை பெரியது படுத்தாமல் வந்து சுத்தம் செய்வேன். ஆனால் சிலர், இவ்வளவு கஷ்டப்பட்டு எதாவது வேலை செய்கிறேன் என்று கூட நினைக்காமல், என்னைப் பார்த்தாலே திட்டுவாங்க. அப்போதான் சார் எனக்கு ரொம்ப வலிக்கும்.

சிறிது நாளில் அது எல்லாமே பழகிவிட்டது. கோவில்களிலோ, தெருக்களிலோ உட்கார்ந்து பிச்சை எடுக்க மனம் வரவில்லை சார். அதனால், ஏதோ என்னால முடிஞ்ச வேலை செய்யலாம் என்று இந்த வேலையில் இறங்கி விட்டேன். இந்த கஷ்டங்களைப் பார்த்தால், வாழ முடியாது. எவ்வளவு தூரம் முடிகிறதோ, அவ்வளவு தூரம் சுத்தம் செய்கிறேன். சிலர் அவர்களால் முடிந்ததை தருகிறார்கள். அவர்கள் தரும் காசில்தான் என்னோட வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு. ஆனால் நான் இதை கேவலமா நினைக்கவில்லை சார்.

என்னை மாதிரி இருக்கும் சில மாற்றுத் திறனாளிகள், ஃபோன் பூத்தோ, சிறிய பெட்டிக் கடையோ வைத்து பிழைக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஸ்டேஷன்லயே, நிறைய பிக்பாக்கெட்டுங்க இருக்காங்க சார். உடம்பு நல்லா இருந்தும், அடுத்தவர் காசுக்கு ஆசைப்படுகிற அவர்களை பார்க்கும் போது, என்னை நினைத்து எனக்கே ரொம்ப பெருமையாக இருக்கும் சார்.

யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல் தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக்கொண்டிருந்தார். ஒரு பத்து நிமிடத்திற்கும் மேல் பேசிக்கொண்டிருந்தவர், திடீரென “மன்னிச்சிருங்க சார். உங்க நேரத்தையும் வீணாக்கிட்டேன்… வருகிறேன் சார்” என்று கூறிவிட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு அடுத்த இடத்தை சுத்தம் செய்யப் புறப்பட்டார். என் பார்வை அவரை விட்டு விலக மறுத்தது. இதயம் சற்று கனமான ஒரு உணர்வுடன் கண்களில் லேசாக நீர்த்துளி எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

அன்று அவரிடம் கண்டது ஒரே ஒரு கையில்லை, அது தாங்க நம்பிக்கை.

மனிதர்களுக்கு உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு குறையே அல்ல, மனம் தான் ஊனப்படக் கூடாது என்ற உண்மையை ஆழமாக உணர வைத்தது அந்த சம்பவம்.

உடல் ரீதியில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும் நம்மில் சிலரோ சிறிய பிரச்சனை நம் வாழ்வில் வந்தால் கூட ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டத்தை தருகிறாய் என்றோ, வாழ்க்கையை வெறுத்தவர் போன்றோ பேசுவதை நிறைய பார்த்திருக்கிறோம். அப்போது, முருகனைப் போல் உள்ள தன்னம்பிக்கை மனிதர்களை கண்டு புரிந்து கொள்ளலாம், நமக்கு உள்ளதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்று.

நண்பர்களே, இறைவன் நம்மை நன்றாக படைத்திருக்கிறான். நம்மிடம் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது. அதனை வீணடிக்காமல் தன்னலத்தை மறந்து, ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழப் பழகுவோம். நம்மால் இயன்ற வரை சக மனிதர்களுக்கு உதவிகளைச் செய்து, இவ்வுலகை வாழ்வதற்கு உகந்த நல்ல இடமாக மாற்ற முயற்சிப்போம்.

Likes(3)Dislikes(0)
Share
Mar 012014
 

நாம் பிறந்து வளர்ந்த இடத்திற்கும், வாழ்வில் நாம் அடைய இருக்கும் உயரத்திற்கும் சம்பந்தம் இல்லை, கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் முன்னேரலாம் என்பதை நமக்கு உணர்த்தி கொண்டு இருக்கும் வக்கீல் திரு.கே.பாலு அவர்களைப் பற்றி இந்த மாத சாதனையாளர் பக்கத்தில் பார்ப்போம்.

இவர் பிறந்தது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி என்னும் கிராமம். இந்த ஊரை தமிழக வரைப்படத்தில் தேடினால், கிடைக்குமா என்று கூட தெரியாது, ஆனால் இன்று இவர் சாதனைகளையும், பேச்சுகளையும், பேட்டிகளையும் தொலைக்காட்சிகளிலும், youtube லும், மிகுதியாக காணலாம். சட்டத்தைப் பற்றி பல தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில், இவர் இடம் பெறுவது நிச்சயம்.

ஒரு சிறிய கிராமத்தில் உள்ளவர்கள், குடும்ப சூழ்நிலையாலும், தகவலோ, தொழில்நுட்பமோ, அவர்களை இன்னும் சென்றடையாத நிலையாலும், பள்ளி மேல்படிப்பை தாண்டுவதே பெரிய விஷயம் என்று இருக்கும்போது, ஐ.நா. சபை வரை சென்று சாதித்துக் காட்டிய ஒரு கடின உழைப்பாளி.

சட்டத்தைப் பற்றி பல விஷயங்களை கரைத்து குடித்திருக்கும் இவரிடம் பேசியவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். நமதுB+ இதழில் தனிப்பட்டக் கட்சி சார்ந்த அரசியலை முடிந்தளவு தவிற்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருப்பதால், இவர் நம்முடன் பகிர்ந்த சில அரசியல் நிகழ்வுகளையும், தலைவர்களையும், கட்சியையும் நீங்களாக, மற்ற விஷயங்கள் இதோ..

B+:  வணக்கம் சார்உங்கள் பிசியான நேரத்திலும் எங்கள் விண்ணப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. சட்டத்துறைக்கு எவ்வாறு வந்தீர்கள்?

பாலு: அது ஒரு ஆச்சரியமான விஷயம். சொக்கலிங்கபுரம் என்ற ஊரில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கணேச அரசு உதவி ஆரம்ப பள்ளியில் படித்தேன். அது ஒரு ஓராசிரியர் பள்ளி.  ஒரே ஒரு ஆசிரியர் தான் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களையும் எடுப்பார். மொத்த பள்ளிக்குமே, ஐந்தாம் வகுப்பு வரை, ஐந்து ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். ஆங்கிலம் சுத்தமாக இருக்காது.

ஆறாவதிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை மீன்சுருட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். சாதாரண கிராமத்து வாழ்க்கை. ஆறாவதில் தான், ஆங்கிலமே படித்தோம். அப்பா ஊரில் விவசாயி. எங்க குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. அதற்கு முன் யாரும் படிக்கவில்லை. அக்கா மட்டும் ஆசிரியர் பட்டையப் பயிற்சி முடித்து இருந்தார்கள். அந்த கிராமத்திலும், முற்போக்காக சிந்தித்து, “என் பையனை ஒரு பட்டதாரி ஆக்கனும்” என்று விருப்பப்பட்டது எங்க அம்மா தான். அவர்களால் தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன்.

மயிலாடுதுரை அடுத்து உள்ள மன்னபந்தல் AVC கல்லூரியில், பி.காம் படித்து முடித்தேன். பி.காம் படித்தால், பி.எல். போக முடியுமா என்று கூட தெரியாத நிலை. பொதுவாக பி.எ. படித்தால் தான் பி.எல். படிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பி.காம். முடித்துவிட்டு மன்னபந்தல் பேருந்து நிலையத்தில், ஊர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தோம்.

நண்பன் ஒருவன் மட்டும், திருச்சி சென்று பி.எல். விண்ணப்பிக்க போகிறேன் என்றான். அப்போது தான் பி.காம் படித்தால் கூட, பி.எல். போக முடியும் என்ற தகவலே தெரிந்தது. பின்னர், நானும் பி.எல். படிப்புக்கு விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதினேன். நல்ல மதிப்பெண் எடுத்ததினால், சென்னை சட்டக் கல்லூரியிலேயே அனுமதி கிடைத்தது. சட்டக் கல்லூரி படிப்பு 93 லிருந்து 96 ஆம் ஆண்டு வரை, ஒரு அற்புதமான வாழ்க்கை என்று சொல்லலாம். பிரச்சினைகள், தகராறுகள் என்று நிறைய சந்தித்தோம்.

பள்ளியில் மாணவர் தலைவராகவும், கல்லூரி இறுதி ஆண்டில் மாணவர் செயலாளராகவும் இருந்தேன். படிப்பை விட அதிகமாக, பொது பிரச்சனைகளில் தான் கவனம் செலுத்துவேன். அதில் ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும். கல்வி வாழ்க்கையை பொறுத்த வரையில், சிறு வயதில் இருந்தே, முதல் மதிப்பெண் என்றெல்லாம் கிடையாது, எதோ படித்து தேர்ச்சி மட்டும் பெற்று விடுவேன்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஆரம்பம், மிக மிக சிறிய அளவில் தான் தொடங்கியது. பள்ளி முடித்து, கல்லூரி போவோம் என்று நினைத்தது இல்லை. பிற்காலத்தில், சென்னை வருவேன் என்றும்  நினைத்தது இல்லை. ஆனாலும் என்னால் வர முடிந்தது என்றால், என்னை போல் உள்ள அனைவருக்கும் இது முடியும்.

B+:  உங்களது ஆரம்ப கால வக்கீல் வாழ்க்கை எவ்வாறு இருந்தது?
பாலு:  96 இல் கல்லூரி முடித்து வெளியில் வந்து வக்கீல் தொழிலை ஆரம்பித்தேன். பி.எல். முடித்து, வக்கீலாக பதிவு செய்து விட்டு, உயர்நீதி மன்றத்தில் நுழையும் போது, நீதிமன்ற வளாகத்து அறையில், எல்லோரும் கருப்பு கோட் அணிந்து இருப்பதையும், அவர்கள் பேசுவதைப் பார்த்தும், பயந்து விட்டேன். இங்கெல்லாம் நம்மால் இருக்க முடியாது, ஒடி விடுவோம் என்று நினைத்தேன்.

அன்றைய காலத்தில், சீனியர் வக்கீல் N.T.வானமாமலை, குற்றவியல் துறையில் மிகப்பெரிய ஜாம்பாவான். நடிகர் M.R.ராதா சுடப்பட்ட வழக்கில் ஆஜரானவர். அவரது ஜூனியரான அனந்தநாராயணனிடம் ஜூனியராக சேர்ந்தேன். அவருக்கு ஜூனியராக ஒரு 5 வருடம் 2001 வரை இருந்தது, எனக்கு ஒரு பெரிய வரம். என்னை விட திறமை வாய்ந்த பல வக்கீல்கள் எல்லாம், சீனியர் சரி இல்லாத காரணத்தினால், வக்கீல் துறையை விட்டே போய் விட்டார்கள். ஆனால் எனது சீனியரோ, நான் என்ன தப்பு செய்தாலும், என்னை நன்றாக ஊக்குவித்து, முன்னேற்றினார். அவர் எனக்கு ஒரு குருநாதர் மாதிரி. முதல் சம்பளமாக சீனியர் கொடுத்தது 300ரூபாய் காசோலை. பின் எனது உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்து சிறிது சிறிதாக உயர்த்தினார்.

இன்று தமிழ்நாட்டில் 60,000 வக்கீல்களும், சென்னை உயர் நீதி மன்றத்தில் மட்டும் 6,000 வக்கீல்களும் இருக்கிறார்கள். இதெல்லாம் மீறி ஒரு வழக்கறிஞர் என்ற ஒரு அந்தஸ்தை நம் சமுதாயத்தில் அடைவது ரொம்ப கடினம். வக்கீல் ஆன பிறகு, இத்துறையில் பல சவாலான குற்ற வழக்குகளை சந்தித்திருக்கிறேன். அவை எல்லாம் மிக மிக நெருக்கடியான வழக்குகள். அப்படியே வாழ்க்கை ஓடுகிறது என்று இது மட்டும் இல்லாமல், இந்த துறையில் இருந்து கொண்டே வேறு என்ன வித்தியாசமாக செய்யலாம் என்று யோசிக்கும் போது தான், பொது நலன் சார்ந்த வழக்குகளை நடத்தலாம் என்ற ஒரு விஷயத்தை எடுத்தேன்.

 

B+:  உங்கள் சாதனைகளை நிறைய மீடியாக்களில் நாம் பார்த்திருக்கிறோம். உங்களுக்கு மன நிறைவைத் தந்த சாதனைகளைப் பற்றி?

பாலு:  முதலாவதாக, தேசிய நெடுஞ்சாலைகளில், மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று ஒரு மனுப் போட்டேன். உயர்நீதி மன்றமும் 31/3/2013 தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை டாஸ்மாக் உச்சநீதி மன்றம் எடுத்துச் செல்லவே, உச்சநீதி மன்றத்திலும் அந்த வருட சுதந்திர தினத்திற்குள் –(15/8/2013 தேதிக்குள்), அந்தக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இது ஒரு மிக சவாலான வழக்கு.

அடுத்ததாக, சமச்சீர் கல்வி ரத்து ஆகும் சூழ்நிலை வந்த போது, அதை எதிர்த்து முதலில் வழக்கு எடுத்து நடத்தினேன். உயர்நீதி மன்றம் ரத்து செய்தது தப்பு என்று கூறியவுடன், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் சென்று, அங்கு வழக்கை நடத்தி, சமச்சீர் கல்வியை மீண்டும் வேண்டும் என்று கூறிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை பெரிய விஷயமாக நினைக்கிறேன்.  நம் சமுதாயத்தில், பல தரப் பட்டவர்கள் இருக்கிறார்கள். FC, BC, MBC, SC, ST என்று அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி இருந்தால் தான் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் ஒரு சமூக நீதிக்கான பார்வை. அந்த வகையில் சமச்சீர் கல்வி வந்தது மகிழ்ச்சி.

அடுத்ததாக, “சட்டப் பாதுகாப்பு” என்ற ஒரு மாத இதழை நடத்தும் ஆசிரியராக உள்ளேன். “Ignorance of law is not an excuse”  என்று சொல்லுவார்கள். அதாவது, சட்டம் எனக்குத் தெரியாது என்று கூறி ஒருவன் குற்றத்திலிருந்து தப்ப இயலாது. சட்டம் அனைவருக்கும் தெரியும் என்று சட்டம் நம்புகிறது. ஆனால், நம் சமூகமோ, பள்ளிக் கல்வியோ ஒரு தனி  மனிதனுக்கு சட்டம் தெரிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதே இல்லை. பள்ளிகளில் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை, அடிப்படை சட்டம் கூட ஒரு பாடமாகவே இருப்பதில்லை. பி.எல். படிப்பிற்கு போனால் மட்டுமே, சட்டத்தைப் பற்றி படிக்க முடியும். அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ன? என்பது போன்ற மிக அத்தியாவசமான தகவல்கள் கூட நம் மக்கள் பலருக்குத் தெரியாதது தான் வேதனை.

சட்டத்தைப் பற்றி தெரிவதற்கான வாய்ப்பு எங்கேயாவது இருக்கிறதா என்று பார்த்தால், மிக மிக குறைவு தான். நம் நாட்டில், முக அழகிற்கு, உடல் ஆரோக்கியத்திற்கு, விளையாட்டு என அனைத்து துறைகளுக்கும் புத்தகங்கள் பல உண்டு. ஆனால், சட்டத்திற்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அது ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.

புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில், 80% பேர் தாய்மொழி மட்டுமே தெரிந்தவர்கள் ஆக இருக்கின்றனர். 16 முதல் 17% தான் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர்களாய் உள்ளனர். அப்படி உள்ள ஒரு மாநிலத்தில், சட்டம் தொடர்பான ஒரு புத்தகமாவது தமிழில் உள்ளதா என்று பார்த்தால் ஒன்று கூட இல்லை. அதனால் எளிய தமிழில் சட்டத்தைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த புத்தகத்தை ஆரம்பித்து, ஏழு ஆண்டுகளாய், நடத்தி வருகிறேன். அது மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற ஒரு இதழ். அதற்கு ஒவ்வொறு ஆண்டும் ஊக்கத் தொகை தருகின்றனர். நிறைய பொது மக்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு, சட்டம் தொடர்பான ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல புத்தகமாய் சென்று அடைகிறது.

அடுத்தது, முக்கியமாக ஐ.நா. சபை சென்ற அனுபவத்தை பற்றி சொல்ல வேண்டும். ஈழத்தில் தமிழர்களின் இனப்படுகொலை நடந்தது. அதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும், அதை போர்குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று, ஐ.நா.வில் நடந்த மனித உரிமை மன்றத்தில் கலந்து கொள்வதற்கு, ஜெனிவா வரை போகும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து உலகத்தின் ஒரு உச்சம் என்று விளங்கும் ஐ.நா.விற்கு போகக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும்போது, நம்மால் முடியும் என்ற ஒரு நம்பிக்கை எல்லாரிடமும் இருந்தால், என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

 

B+:  ஐ.நா சபை சென்று வந்த அனுபவத்தை பற்றி கொஞ்சம்..

பாலு: ஐ.நா.வில் “பசுமை தாயகம்” என்ற ஒரு அமைப்பு, சிறப்பு ஆலோசனை வழங்கும் அமைப்பாக (“Special Consultative Status”)  உள்ளது. இலங்கைக்கு எதிராக கொண்டு வந்தத் தீர்மானத்திற்கு பொது வாக்கெடுப்பு நடை பெற்றது. அந்தத் தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்குமா அளிக்காதா என்று ஒரு போராட்டம் தமிழகம் முழுதும் 2009 ஆம் ஆண்டு நடந்தது. வாக்கெடுப்பின் போது, ஐ.நா.வில் “பசுமை தாயகம்” அமைப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், நானும், அமைப்பின் செயலாலர் திரு.அருளும், தர்மபுரி டாக்டர்.செந்தில் என்பவரும் ஐ.நா. சென்று இருந்தோம். அந்த வாக்கெடுப்பு ஐ.நா.வில் நடை பெறும்போது, ஐ.நா. மன்றத்தில் இருந்தோம்.

B+:  இத்தனை பிரச்சனைகளைப் பார்த்த பிறகு, இந்த துறையை விட்டே சென்று விடலாம் என்று தோன்றியது உண்டா?

பாலு: ஒரு போதும் அப்படி தோன்றியது இல்லை. எத்தனையோ மிரட்டல்கள், சோதனைகள் வந்த போதும் கூட, இந்த துறையை விட்டு போக வேண்டுமென்று  யோசித்தது இல்லை. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் என் குடும்பத்தினருடன் கூட பகிர்ந்து கொண்டதும் இல்லை.

இந்தத் துறையில் மிக மிக அருமையான அனுபவங்களும் கிடைப்பதும் உண்டு. சவால்களும் நிறைய உள்ளது. தைரியமாக நின்று எதிர் கொள்ள வேண்டும்.  முன்பெல்லாம் வக்கீல் தொழில் என்றால், மக்கள் மத்தியில், ஒரு மிக பெரிய கௌரவம் இருக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் அந்த மதிப்பை சற்று குறைத்தன. அப்படி இருந்தாலும் இந்த துறையை புனிதமாக செய்கிறவர்கள், நேர்மையாக இருப்பவர்கள் என்று இன்றும் இருக்கிறார்கள்.

B+:  கிராமத்து சூழ்நிலையில் இருந்து, ஐ.நா. செல்லும் அளவு உயர்ந்து உள்ளீர்கள். மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது? 

பாலு: உங்கள் B+ சென்ற மாத இதழை படித்தேன். ஒரு இடத்தில், சமுதாயத்தில் எத்தனையோ குறைபாடுகள், குற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும், பாஸிடிவான விஷயங்களை மட்டுமே focus செய்வோம் என்று கூறி இருக்கிறீர்கள். அதன்படி சில நம்பிக்கைத் தரும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

எத்தனையோ துறைகளில் செய்ய வேண்டிய நல்ல காரியம் நிறைய உள்ளது. இந்தக் காலத்து இளைஞர்கள் சிலர், வேலை கிடைக்க வில்லை என்று கூறுகின்றனர். வேலை கிடைக்கவில்லை என்பதே ஒரு தவறான பிம்பம்.

வெறும் கை என்பது மூடத்தனம்

விரல்கள் பத்தும் மூலதனம்..

அப்படி என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், கண்டிப்பாக வேலை கிடைக்கும். நீங்களே இன்னொருத்தருக்கு வேலைக் கொடுக்கும் அளவிற்கு கூட போக முடியும்.

இரண்டாவது, ஆங்கிலம் இல்லை என்றால் கடினம் என்று, சரளமாக  ஆங்கிலம் பேசுவோரைக் கண்டால், சிலருக்குத் தாழ்வு மனப்பான்மை  வரும். இந்தக் கூட்டத்தில் ஆங்கிலம் தெரியாமல் நிற்க முடியுமா, சாதிக்க முடியுமா என்றும் யோசிக்கிறார்கள். அதெல்லாம் தேவையில்லை. மொழி என்பது, ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் முறை தான். தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே. அது தான் அறிவா என்று பார்த்தால், இல்லை என்று தெளிவாகத் தெரியும். இங்கிலாந்து நாட்டில்  பிச்சைக்காரர்கள் கூட, ஆங்கிலத்தில் பேசி தான் பிச்சை எடுப்பார்கள், அதற்காக, அவர்கள் நம்மை விட அறிவாளிகள் என்று சொல்ல முடியுமா?

B+:  உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?

பாலு:  நான் வெற்றிப் பெற்றதாக நினைக்கவில்லை. என்றாலும் இந்தளவு வந்ததற்கு காரணம் விடாமுயற்சி. பிடித்த விஷயமான வக்கீல் துறையில் உள்ள சவால்களை எல்லாம் தெரிந்து தான் வந்தேன், துறைக்கு வந்தப்பின், அவற்றை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்பு.

B+:  இப்போது உங்கள் கிராமத்தினர் நீங்கள் தொலைக்காட்சிகளில் வரும்போது மிகவும் மகிழ்ச்சி அடைவார்களே?
பாலு: கண்டிப்பாக. இந்த முறை, பொங்கலுக்கு ஊருக்கு சென்றபோது, எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஒவ்வொரு ஆசிரியரையும்  நண்பர்களோடு வீடு வீடாக சென்று பார்த்தேன். அந்த ஆசிரியர்களுக்கெல்லாம் 85 வயதுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர்களும், கிராமத்து மக்களும் எனது வளர்ச்சியைப் பார்த்து மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

B+:  கிராமத்து மக்களுக்கு சில வரிகள்?

பாலு: கிராமத்தில் இருந்து பார்க்கும் போது, நகரத்தில் உள்ளவர்கள் எல்லாரும் நம்மை விட மிகவும் அறிவாளிகள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் கிராமத்தில் இருந்து வந்தவர்கள், தாய்மொழி கல்வி படித்தவர்கள், ஒரு பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வருபவர்கள், இவர்கள் எல்லாரும், எங்கள் நீதி மன்றத்தில் மிகப் பெரிய வக்கீல்களாக பிரகாசித்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் கிராமத்து மாணவர்கள், நகரத்திற்கு வந்தால், நம்மால் முடியாது என்றெல்லாம் நினைக்கக் கூடாது, ஆரம்ப நாட்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கும், அதையெல்லாம் உறுதியுடன் தாண்டி விட்டால், மிகப் பெரிய வெற்றி அடையலாம்.

Likes(1)Dislikes(0)
Share
Mar 012014
 

(இது ஈமெயிலில் ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரை. இதனை எழுதியவரின் விவரமோ, இதன் ஆரம்பமோ நம்மிடம் இல்லை. B+, இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து, வாசிப்பவர்களின் ரசனைக்கு ஏற்றவாறு சில வரிகளை மாற்றி இங்கே உங்களுக்கு அர்பணிக்கிறது)

ஒரு நல்ல சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பிராஜக்ட் மேனேஜரான விவேக் பிரதான், அன்று சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயிலின் அந்த குளிர் சாதன கோச்சின் இதமானக் காற்றுக் கூட அவரின் கோபத்தை தணிக்க முடியவில்லை.

பிராஜக்ட் மேனேஜரான பின்பும் விமான பயணத்திற்கு அனுமதி தராத தனது நிறுவனத்தின் விதிமுறைகளின் மீதும், அதனை நடை முறைப்படுத்தும், மனித வள துறையின் (HR Department) மீதும் படு டென்ஷனாய் இருந்தார். “நான் என்ன, கௌரவத்திற்காகவோ, வசதிக்காகவோ விமானப் பயணம் கேட்டேன்? எத்தனை வேலை உள்ளது, எத்தனை நேரம் மிச்சமாகும், புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே!” என்று எண்ணிக் கொண்டே மடிக்கணினியை (Laptop) திறந்தார். ரயிலில் பயணித்த படியே, ஏதாவது சில வேலைகளை பார்ப்போம் என்று நினைத்தார்.

அவரையும் அவர் வேலை செய்வதையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞர், “நீங்கள் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்களா சார்?” என்று கேட்க, விவேக் அந்த இளைஞரையும் கணினியையும் பார்த்துக் கொண்டே, ஆம் என்பது போல் தலையாட்டினார். கணினியை இன்னும் சற்று அதிகப்படியான கவனத்துடன் பிடித்துக் கொண்டே உற்றுக் கவனித்தார்.

“நீங்கள் அனைவரும் தான் சார், நம் நாட்டிற்கு இத்தனை வசதிகளையும், வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளீர்கள். இன்று எல்லாமே கணினி மயமாகிவிட்டது” என்று இளைஞர் கூறவும், “நன்றி” எனக் கூறி விவேக், அந்த இளைஞரைப் சற்று மெலிதான புன்னகையுடன் பார்த்தார். இந்த உலகில் பாராட்டும், அங்கீகாரமும் பிடிக்காமல் யார் தான் இருக்க முடியும்.

அந்த இளைஞருக்கு, ஒரு நல்ல விளையாட்டு வீரன் போல உறுதியான நேர்த்தியான உடல். பார்ப்பதற்கு, மிகவும் எளிமையாகவும், ஒரு கிராமத்து வாலிபன் போன்ற தோற்றம். “ஏதாவது ரயில்வே விளையாட்டு அணியின் வீரனாக இருக்க கூடும், தனது இலவச ரயில் சேவையை பயன்படுத்தி எங்கேயாவது பயணித்து கொண்டிருக்க வேண்டும்” என்று விவேகிற்கு தோன்றியது.

“உங்களை மாதிரி பொறியாளர்களைப் பார்த்து எனக்கு எப்போதுமே ஒரு வியப்பு உண்டு சார்.  நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதும் சில விஷயங்கள், வெளி உலகத்தில் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்துகிறது” என இளைஞர் தொடர, விவேக் இளைஞரை சற்று கூர்ந்து பார்த்து. தம்பி, அது அத்தனை சுலபமான காரியம் இல்லை. கணினியில் சில வரிகளை எழுதியவுடன் முடிந்து விடக் கூடிய  விஷயமும் இல்லை. அதற்கு பின்னனியில் நிறைய முறையான இயக்கங்கள் உள்ளன. ஒரு மணி நேரம் எடுத்து சாஃப்ட்வேர் துறையின் மொத்த நிகழ்வுகளையும், அது பணியாற்றும் விதத்தையும் இளைஞருக்கு எடுத்து சொல்ல நினைத்து, பின்னர், தன்னையே சற்று சமாதானப் படுத்திக் கொண்டு, ‘அது மிக மிக கடினமான ஒரு துறை’ என்று மட்டும் பதில் அளித்தார்.

அதற்கு அந்த இளைஞர் “கண்டிப்பாக சார், அது கடினமாகத் தான் இருந்தாக வேண்டும், அதனால் தான், உங்கள் அனைவருக்கும், சம்பளமும் அதிகமாகக் கிடைக்கிறது” என்று கூறியது, விவேக்கிற்கு சிறிய கோபத்தை வரவழைத்திருக்க  கூடும். அத்தனை நேரம், மெதுவாக இருந்த விவேக்கின் குரல், சற்று உயர்ந்து,  “எல்லோரும் சம்பளத்தை மட்டும் தான் பார்க்கின்றனர். யாருமே எங்கள் கடின உழைப்பைக் காண்பது இல்லை. குளிர் சாதன அலுவலகத்தில், உட்கார்ந்து இருந்தாலும், நாங்களும் மிகவும் கடினமாக உழைக்கிறோம், நீங்கள் உடல் ரீதியாக உழைக்கிறீர்கள், நாங்கள், மூளையைக் கடுமையாக பயன்படுத்தி உழைக்கிறோம்.

நான் இன்னொரு உதாரணத்தையும் தருகிறேன், “இந்த ரயில்வே பதிவு இயங்கும் முறையைப் பார்த்தால் தெரியும், ஏதாவது இரண்டு ஸ்டேஷன்களுக்கு பயணம் செய்ய வேண்டிய டிக்கட்டை, நம் நாட்டில் உள்ள நூற்றுக் கணக்கான, கணினியால் இயங்கும் பதிவு அலுவலகத்தில் எங்கு வேண்டுமானாலும், பதிவு செய்ய முடியும். ஒற்றை டேட்டாபேசில் (Database), ஆயிரக் கணக்கான தகவல்கள், தொடர்புகள், பரிமாற்றங்கள், ஒருங்கிணைப்புகள் அரங்கேருகின்றன, கூடவே தகவல்களின் பாதுகாப்பும், பராமரிப்பும் முறையாக நடந்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் உருவாக்கவும், ஒருங்கிணைக்கவும், எத்தனை Program coding எழுதி, இயக்க வேண்டும்” என்று விவேக் கூறவும், அந்த இளைஞருக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

“இது அனைத்தும் எனது கற்பனைக்கு கூட எட்டாத மிகப் பெரிய விஷயம் சார். நீங்கள் coding எல்லாம் எழுதுவீர்களா” என இளைஞர் ஆர்வத்தோடு கேட்க,  “முன்னாடி எழுதிக் கொண்டிருந்தேன், இப்போது பிராஜக்ட் மேனேஜரான பின் எழுதுவது இல்லை” என விவேக் பதில் அளித்தார்.

அந்த இளைஞர், “ஓ, பரவாயில்லை சார், அப்படி என்றால், இப்போது உங்களுக்கு வாழ்க்கை சற்று சுலபமாக இருக்கும்” என்று கேட்க, விவேக் சற்று டென்ஷனாகி, “தம்பி, வயது ஏற ஏற, வாழ்க்கை என்றாவது, சுலபமாக இருக்குமா? பொறுப்புகள், வேலையை இன்னும் அதிகம் தான் ஆக்கும், இப்போது இருக்கும் வேலை முன்பை விடக் கடுமையானது. என் வேலையை, சிறிய நேரத்தில், மிக நேர்த்தியாகவும், விரைவாகவும் செய்து கொடுத்தாக வேண்டும்.

வேலை பளுவையும் மன அழுத்தத்தையும் சொல்ல வேண்டும் என்றால் தனது தேவைகளை மாற்றிக் கொண்டே இருக்கும் வாடிக்கையாளர் ஒரு புறமும், அனைத்து வேலைகளையும் நேற்றே முடித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் எனது முதலாளி மறு புறமும், ஒரு வழி ஆக்கி விடுவார்கள்” நொந்து போன விவேக்கின் வலி அவர் பேச்சில் தெரிந்தது. “தம்பி, ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. “லைன் ஆஃப் ஃபையர்” (Line of Fire). உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இது தான் லைன் ஆஃப் ஃபையரில் இருப்பது”

இதைக் கேட்டவுடன், அந்த இளைஞர் கண்களை மூடி, ஏதோ ஒரு விஷயம் பலமாக தலையில் அடிப்பதுப் போல் ஒரு உணர்வுடன், சீட்டில் சாய்ந்து அமைதியாக உட்கார்ந்ததை விவேக் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

சிறிது நொடிகள் கழித்து இளைஞர் கண்களை திறந்து, நிதானமாகவும் ஆழமாகவும் பேசியது விவேகிற்கு இன்னும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. “லைன் ஆஃப் ஃபையரில் இருப்பது என்ன என்பது எனக்கும் தெரியும் சார்”

சிங்கத்தின் கம்பீரத்தோடு, இளைஞர் பேச்சைத் தொடர, “அன்று இரவு எங்களது அணியில் 30 பேர் இருந்தோம், பாயிண்ட் 4875 ஐ அடுத்த நாள் சூரியன் உதிப்பதற்குள் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டளை எங்களது அணிக்கு கொடுக்கப் பட்டது. எதிரிகள் மலை மேலிருந்து சுட்டுக் கொண்டு இருக்கின்றனர். கீழிரிந்து அனைத்து ஆயுதங்களையும், பைகளையும் எடுத்துக் கொண்டு, எங்கள் அணி கிளம்பியது. தோட்டாவும், குண்டும் எங்கிருந்து வரும், எப்படி வரும், எவரின் உடலுக்கு வரும், எங்கு கன்னி வெடி புதைந்து கிடக்கும் என்று தெரியாத ஒரு சூழ்நிலையில், “பாரத் மாதா கி ஜெய்” என்ற கோஷத்துடன், அக்கினி பிழம்பாக எங்கள் அணி மேலே சீறிப் பாய்ந்தது. சூரியன் உதிப்பதற்குள் ஒரு வழியாக, எதிரிகளை அழித்து, பாயிண்ட் 4875 ஐ கைப்பற்றி, நம் தேசத்து மூவர்ணக் கொடியை ஏற்றி, ஆழமாக நட்டு வைத்தோம். அப்போது எங்களது அணியில் நால்வர் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால், நம் தேசம் நம்மோடு இருந்தது!

விவேக் கணினியை கீழே சட்டென்று வைத்துவிட்டு, சற்று படபடப்புடன் இளைஞரை நோக்கி, “நீ.. நீங்க யார்??” என்றார்.

நான் சுபேதார் சுசாந்த். கார்கிலை சேர்ந்த சிகரம் 4875 பகுதியில் எனக்கு  சிறப்புப் பணி. எனது போர்காலம் முடிந்துவிட்டது எனவும், நான் எளிதான வேலையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் என் நண்பர்கள் கூறினர்.

ஆனால் வாழ்க்கை சுலபமாக ஆக்கிக் கொள்ளலாம் என்று எவரேனும்  கடமையை விட்டுக் கொடுக்க முடியுமா சார்? அன்று விடிவதற்கு முன், நாங்கள் ஒரு பங்கருக்கு பின் ஒளிந்திருந்தோம். எங்களது அணியில், எதிரியின் குண்டுக்கு இரையாகி, ஒரு வீரர் காயப்பட்டு கீழே விழுந்துக் கிடக்கிறார். அவரைக் காப்பாற்றி, பாதுகாப்பான பகுதிக்கு தூக்கி வர வேண்டியது என் பணி. ஆனால் என் கேப்டன் அவர்கள் எனக்கு அனுமதி தர மறுத்து விட்டார் சார்.

அவர் எங்களிடம் அன்று சொன்னது, இன்றும் கேட்டுக் கொண்டே இருக்கிறது சார். “நான் பதவி ஏற்கும் போது, செய்து கொடுத்த சத்தியத்தின் படி, முதலில் நம் தேசிய நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் முன்னுரிமை கொடுப்பேன், அடுத்து எனது தலைமையில் இயங்கும் எனது அணியின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பேன், கடைசியில் தான் என் பாதுகாப்பிற்கு கவனம் கொடுப்பேன்” என்று  கூறி அவரே அந்த செயலை செய்வதற்கு சென்றார்.

என் கேப்டன், அந்த காயப்பட்ட வீரனை பாதுகாத்து தூக்கி வரும்போது, பல குண்டடிப்பட்டு உயிர் துறந்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும், பணிக்குப் போகும் போதும், அவர் எனக்கு பதிலாக, தன் உடம்பில் வாங்கிக் கொண்ட அனைத்து தோட்டாக்களும் நினைவிற்கு வருகிறது. அதனால், எனக்குத் தெரியும்… “லைன் ஆஃப் ஃபையரில் இருப்பது என்ன என்பது எனக்குத் தெரியும் சார்” என்று முடித்தார்.

விவேகிற்கு என்ன சொல்லுவதென்றும், என்ன செய்வதென்றும் புரியவில்லை. சட்டென்று கணினியை தன்னையும் அறியாமல், அணைத்து வைத்தார். விவேகிற்கு  கணினி இப்போது துச்சமாக பட்டது, தினசரி வீரத்தையும், தியாகத்தையுமே கண்களாய் பார்க்கும் இப்படி ஒரு மனிதனுக்கு முன் கணினியில் ஒரு சிறிய விஷயம் செய்வதையும் அந்த மாமனிதனுக்கு கௌரவம் இல்லை என்று என  விவேக் எண்ணினார்.

அடுத்த ஸ்டேஷன் வரவிருந்ததால், ரயிலின் வேகம் குறைய ஆரம்பித்தது.  சுபேதார் சுசாந்த் ரயிலின் இருக்கைக்கு அடியிலிருந்த தனது பெரிய மிலிட்டரி பையை வெளியில் எடுத்தவாறே, “உங்களை சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி சார்” என்றார் விவேகிற்கு கை குடுத்தவாறே.

அந்த கை, காய்ச்சுப் போய், இரும்பு போல் இருந்தது. அந்த கை பல மலைகளை பற்றி ஏறி கடந்திருக்கின்றது, பல துப்பாக்கிகளை தேச நலனுக்காக பயன் படுத்தி இருக்கிறது, மூவர்ணக் கொடியை ஏத்தி இருக்கிறது. விவேகிற்கு உடலில் ஒரு பெரிய சிலிர்ப்பு, ஒரு பெரிய இடி தாக்கியது போல் இருந்தது. தன்னையும் அறியாமல், இரண்டு கால்களையும் ஒன்றாக்கி நேராக நின்று வலது கையால், சுபேதார் சுசாந்தைப் பார்த்து, ஒரு ராயல் சல்யூட் அடித்தார்.

பி.கு: பாயிண்ட் 4875 ஐ குறித்து சொல்லப்பட்டது கார்கில் போரின் போது நடைப்பெற்ற உண்மை சம்பவம். வெற்றியின் கோடு, வெகு அருகில் இருந்தபோதும், கேப்டன் பத்ரா, தனது  படைவீரர் ஒருவரை காப்பாற்ற தனது இன்னுயிரை தியாகம் செய்தார். இந்த வீரசெயலுக்கும், தியாகத்திற்கும், நம் நாட்டின் ராணுவ உயரிய விருதான “பரம் வீர் சக்ரா” அவருக்கு வழங்கப்பட்டது.

Likes(9)Dislikes(0)
Share
Mar 012014
 

சிறப்புக் கவிதைகள்

 

    என் தேசம்

 தேசமே! என் தேசமே!

தேகத்தை கூச்செறியும் பசுமை,

நாடியின் இரத்த வேகத்தை விட

வீறு கொண்டு எழும் புனித நதிகள்,

 

தொண்மை தொட்டு தொடரும் பாரம்பரியம்,

ஒழுக்கம் என நின்ற வீரப் பெண்மையின் மரபு,

துரோகம் தெரியா வீரம்,

அந்நிய ஈக்கள் மொய்த்த இனிப்பு,

 

உலகையே ஈரடியில் அளந்த வள்ளுவன்,

பெண்ணிற்கும்! ஏன், பறவைக்கும் கூட சுதந்திரம் கண்ட பாரதி

அக்னிக்கே அஹிம்சை சொன்ன காந்தி!

 

எத்தனை! எத்தனை!

சிறு மண் துகளும், நெற்பதரும் சொல்லும் தேசம், என் தேசம்!!!

 

 

    இராணுவ வீரர்கள்

உங்களுக்கு தினசரி,

உண்ண எந்த உணவு கிடைக்கும் என்றும்,

உறங்க எந்த இடம் கிடைக்கும் என்றும் எங்களுக்கு தெரியாது,
நமது தொலைக்காட்சிகளும் மீடியாக்களும்

உங்களைப் பற்றி திரும்ப திரும்ப சொல்லுவதும் இல்லை
ஆனால் குளிரிலும், மழையிலும் கஷ்டப்பட்டு தேசத்தைக் காக்கும்

சகோதரர்களே, நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள். 
நீங்கள் இல்லையெனில், நாங்களும் இல்லை.

உங்கள் தியாகத்திற்கும், தன்னலமற்ற சேவைகளுக்கும் கோடி நன்றிகள்!!!

 

 

மற்றவை

பூட்டிக் கிடந்த என் மனக்கதவை உடைத்தன அவள் விழிகள்..

உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தன அவள் மொழிகள்..

என் மடியில் படுத்துக் கொண்டு அவள் உதிர்க்கும் சிரிப்பு,

அதை பார்த்து ரசிக்கையில் நேரத்திற்க்கு இல்லை மதிப்பு..

என் வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவைத்தது அவள் பிறப்பு..

அவள்… மூன்று மாத குழந்தையான என் செல்ல மகள்!!!

Likes(1)Dislikes(0)
Share
 Posted by at 7:00 pm
Mar 012014
 

சமரசம் (compromises)

சமரசம் (compromises). நம்முடிய வாழ்வில் அமைதிக்காகவும் சகமனிதர்களின் சந்தோஷங்களுக்காகவும் நம்முடன் நாமே செய்துகொள்ளும் ஒரு உடன்பாடு. ஆனால் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இந்த சமரசம் என்ற சொல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதே மகிழ்ச்சியை தருவதுபோல் தோன்றினாலும், ஒவ்வொருவர் வாழ்விலும் அதன் உண்மையான தாக்கம் என்ன? வாங்க கொஞ்சம் உள்ளே போய் பாக்கலாம்.

இந்த சமரசம் செய்துகொள்ளுதல் (compromises) என்பது என்ன? தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நமக்கு விருப்பம் அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்கிறோம். நாளைடைவில் அதன் கூடவே வாழக் கற்றுக்கொண்டும் விடுகிறோம். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? ஒரு சிறிய உதாரணம். நாம் இப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றோம்? நமக்கு ஒரு 15 வயது இருக்கும் பொழுது இந்த வேலைதான் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டோமா? நூற்றுக்கு 90 சதவீத பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். நம்மில் சிலர் மருத்துவர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், சிலர் வக்கீல்களாக ஆசைப்பட்டிருக்கலாம். சிலர் நடிகர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், ஏன், சிலர் அரசியல்வாதிகளாகக் கூட ஆசைப்பட்டிருக்கலாம்.

ஆனால் எதோ ஒரு சூழலில், சில நிர்பந்தங்களால் நாம்  இப்பொழுது செய்யும் வேலைக்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலேயே பழகியும் விடுகிறோம். இப்பொழுது சிறு வயதில் உண்மையிலேயே நாம் என்னவாக ஆக விரும்பினோம் என்பதையே மறந்து எதோ ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். காரணம் நம் வாழ்க்கையின் எதோ ஒரு சூழலில் நாம் செய்துகொண்ட compromise.

இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமானால், உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆசைப்படுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக என்னுடைய மதிப்பெண், மருத்துவப் படிப்பில் சேர போதுமானதாக இல்லை. உடனே நான் என்ன செய்ய வேண்டும்? ஒன்று நான் முன்னதாகவே ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும். அல்லது ஒரு வருடம் காத்திருந்து மறுதேர்வெழுதி  மருத்துவராக வேண்டும். இதை இரண்டையுமே செய்யாமல் மருத்துவர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவை விட்டுக்கொடுத்து பொறியியல் என்ற ஒரு பிரிவுக்குள் நுழைகின்றேன். இந்த இடத்தில் நான் செய்து கொண்ட சமரசமே என்னுடையை வாழ்வை திசைமாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  அன்றிலிருந்து என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் அன்று செய்த அந்த சமரசமே காரணமாகவும் அமைகிறது.

இங்கே ஒரு கேள்வி எழழாம்..”நான் மருத்துவராக ஆசைப்பட்டேன். ஆனால் சூழ்நிலை காரணமாக வேறு துறைக்கு சென்றுவிட்டேன். அதனால் என்ன இந்த துறையிலேயே நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். இதற்கு மேல் என்ன வேண்டும்?” என்று. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். நமக்கு விருப்பமல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு நம்மால் இந்த அளவு வெற்றிபெற முடிகிறதென்றால், நமக்கு பிடித்தமான ஒரு துறையையே தெரிவு செய்து நம் வாழ்க்கையை அமைத்திருந்தால் நம் வெற்றி எந்த அளவு இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறதா?

நமது ஊரில் ஒருவரைப் பார்த்தால் என்ன கேட்போம். “what are you doing?” அதாவது அவர் என்ன வேலை செய்கிறார் என்பதைத் தான் நாம் அவ்வாறு கேட்போம். ஆனால் சில வெளிநாடுகளில் “what you do for living” என்றே கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமான கேள்வி இதுவே. வாழ்வாதாரத்திற்காக மட்டுமே நாம், நமக்குப் பிடிக்காத துறைகளில் இருக்கின்றோமே தவிற வேறொன்றுமில்லை. பெரும்பாலும், நாம் பணி செய்யும் துறை நமக்கு பிடித்த துறையாக இருப்பதில்லை.  எப்பொழுது நம்முடைய விரும்பிய துறையே நாம் பணி செய்யும் துறையாகவும் மாறுகின்றதோ அதன் பிறகு நம் வெற்றிக்கு அந்த வானமே எல்லை

சமரசத்தில் இரண்டு வகை இருக்கின்றது.

முதலாவது நன்மைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் சமரசம் (Good vs Good compromise). உதாரணத்திற்கு நீங்கள் உங்களது பைக்கை 20,000 ரூபாய்க்கு விற்க ஆசைப்படுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் அதனை 15000 ரூபாய்க்கு கேட்கின்றார். இறுதியில் இருவரும் 17500 க்கு ஒப்புக் கொள்கிறீர்கள். இதனை ஒரு சரிசமான பரிமாற்றம் என கூறலாம். இந்த பரிமாற்றத்தில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பெரிய லாபமும் இல்லை. இந்த வகையான சமரசங்களால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இரண்டவது ஒரு வகை உள்ளது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் சமரசம்  (Good Vs Bad compromise). இதனை கீழ்வரும் ஆங்கில வாசகம் ஒன்று எளிதாக விளக்குகின்றது.

If there is any compromise between food and poison death will be the winner. If there is a compromise between good and evil it is only evil that can profit

உதாரணமாக நமது இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் என்ற எரிபொருளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மண்ணென்னையும் ஒரு எரிபொருள் தான். அதிலும் நமது வாகனங்கள் இயங்கும். ஆனால் விலைகுறைவு என்பதற்காக மண்ணென்னையை உபயோகிக்க ஆரம்பித்தோமேயானால் என்னவாகும்? 10 வருடம் இயங்கவேண்டிய நம் வாகனங்கள் 2 வருடத்தில் பழுதடைந்துவிடும். இந்த வகை சமரசம் பொதுவாக நீண்டகால பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சமூக அந்தஸ்து அல்லது சமூக பார்வை” என்பது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஒரு மாணவன் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பினால், சிறு வயதிலிருந்தே அதில் ஈடுபட நேரிடலாம், ஆனால் நம் சமூகமோ, முதலில் படிப்பு, பின்னர் மற்றவை என்று அவனை சமரசப் படுத்தி விடுகிறது.

இது போன்று பல அன்றாட விஷயங்களில் நடைபெறும் சமரசங்களை நாம் காண்கிறோம். இவ்வாறு சமூக அந்தஸ்து காரணமாகவோ, பொருளாதாரத்தின் அடிப்படையிலோ, மற்ற சில காரணங்களினால் செய்துக் கொள்ளும் சமரசங்கள், நீண்டகால அடிப்படையில் சமரசம் ஆகிக்கொள்பவர் மனதில் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கும் என்பதுதான் உண்மை.

இறுதியாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு மனிதரைப் பற்றி இந்த பதிவுக்கு சம்பந்தமான சில விஷயங்களைக் கூறி முடிக்கின்றேன். ஜேம்ஸ் கேமரூன் என்பவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும். இன்றும் உலக அளவில் பெரும் வசூலை குவித்த முதல் இரண்டு படங்களை இயக்கியவர் இவரே. ஆனால் அவரைப் பற்றி சிலருக்குத் தெரிந்த பலருக்கு தெரியாத சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

1990 களின் ஆரம்பத்தில் நீருக்கடியில் படம் பிடிக்கும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் இருந்த வசதிகளின் மூலம், சில கோணங்களில் மட்டுமே படம் பிடிக்க முடியும். நீருக்கடியில் வீடியோ கேமராக்களை எடுத்துக் கொண்டு நமக்கு தேவையான கோணங்களில் இயக்கி காட்சிகளை பதிவு செய்வது, அன்று பெரும் சவாலான ஒரு விஷயமாக விளங்கியது. தனது டைட்டானிக் படத்திற்குத் தேவையான சில காட்சிகளை எடுக்க அப்போதிருந்த வசதிகள் போதவில்லை என்பதை கேமரூன் உணர்ந்திருந்தார். உடனே தனக்கு தேவையான வசதி இல்லை என்றவுடன் சமரசம் செய்துகொண்டு இருக்கின்ற வசதியை வைத்துக் கொண்டு அந்த திரைப்படத்தை எடுத்துவிடவில்லை. அவருக்குத் தேவையான வசதிகளை அவரே  உருவாக்கிக் கொண்டார்.

அவரும் அவரது சகோதரரும் இணைந்து நீருக்கடியில் கேமராக்களை எடுத்துக் கொண்டு, வெகு இலகுவாக தேவையான எந்த கோணத்திலும் இயக்கும் படியான ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதனை அமெரிக்காவில் பதிவும் செய்து அதன் பின்னரே டைட்டானிக் உருவாக்கதில் ஈடுபட்டிருக்கின்றனர். (Under water dolly – US patent No: 4,996,938)

அந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி், வெளியாகி 19 வருடங்கள் ஆன பின்னரும் இன்றும் மற்ற எந்த திரைப்படத்தாலும் நெருங்க முடியாத அளவு வசூல் சாதனை படைத்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கே இப்படி என்றால் முதலிடத்தில் உள்ள அவதார் திரைப்படத்தை பற்றி கூறினால் என்ன மனிதர் இவர் என்று தோன்றும். அவதார் திரைப்பட கதையை உருவாக்கி தேவையான தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் 10 வருடம் காத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அவதார் திரைப்படத்தின் கதை ”பேண்டூரா” என்ற ஒரு கிரகத்தில் வசிக்கும் ”நாவி” இன மக்களை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. நாவி இனத்தவர்கள் நமக்கு புரியாதது போல ஒரு மொழி பேசுகின்றனர் அல்லவா?  அது எதோ புரியாத வார்த்தைகளை வைத்து எழுதப்பட்டது அல்ல. அது ஜேம்ஸ் கேமரூனால் அவதார் திரைப்படத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட, ஆயிரம் வார்த்தைகள் கொண்ட, இலக்கணத்துடன் கூடிய ஒரு புதிய மொழி. நாவி இனத்தவர் பேச ஒரு மொழி வேண்டும். ஆனால் அது பூமியில் பேசப்படும் எந்த மொழிகளுடனும் ஒத்துப் போகக் கூடாது. விளைவுதான் அந்த புதிய மொழியின் உருவாக்கம்.

அந்தப் படத்தில் தொடர்புடைய நடிகர்கள் அனைவருக்கும் அந்த மொழியை கட்டாயமாக கற்பித்த பின்னரே படப்பிடிப்பை துவங்கியிருக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதோ புரியாத சில வார்த்தைகளை உபயோகித்திருந்தால் கூட நாம் பார்த்து தான் இருப்போம். ஆனால் அவருக்கு தேவையான ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு படி மேலே போய் ஒரு புதிய மொழியையே உருவாக்கியிருக்கின்றார். எங்குமே சமரசம் செய்துக் கொள்ளாமல், தனக்கு விருப்பான ஒரு விஷயத்தை அடைய எத்தனை தூரம் உறுதியாக நின்றதால், பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றார்.

இதனை ஏன் கூறுகின்றேன் என்றால், சமரசம் செய்துகொள்வது சில இடங்களில் நன்மையை தந்தாலும், சமரசம் செய்துகொள்ளாமலிருப்பது பல இடங்களில், நீண்டகால அடிப்படையில் நன்மையை தரும். மாபெரும் வெற்றிகளைத் தரும். இந்த உலகத்தின் எந்த விஷயத்தை அடையவும் நமக்கு உரிமை உண்டு. அதற்குத் தேவையானவை சமரசம் இல்லாத தெளிவான நோக்கமும், கடின உழைப்பும் மட்டுமே.

Likes(1)Dislikes(0)
Share
Mar 012014
 

இந்த மாதப் புதிர்

நண்பர்கள் நான்கு பேர், விடுமுறைக்கு குற்றாலம் செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்புகின்றனர். வெகுநேரம் குற்றால அருவியில் குளித்துவிட்டு திரும்புகையில், மாலை ஆகிவிடுகிறது. பின் மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தவர்களை கூர்மையான ஆயுதங்களுடன் ஒரு திருடர்கள் கூட்டம் கடத்திக் கொண்டு சென்று, அந்த கூட்டத்தின் தலைவனிடம் ஒப்படைக்கின்றனர். தலைவன் நண்பர்களை நோக்கி, ஒரு சிறிய விளையாட்டு. அதில் நீங்கள் குழுவாக இணைந்து யோசித்து விளையாடினால் தான் வெல்ல முடியும். வென்று விட்டால் உங்களை விட்டு விடுகிறேன் எனக் கூறவும், நண்பர்களும் சரி என்று சொல்லி விடுகின்றனர். நண்பர்கள் எவ்வாறு இந்த சவாலை எதிர் கொண்டார்கள், எவ்வாறு வென்றார்கள் என்பது தான்இந்த மாதப் புதிர்.

தலைவன் மேலுல்ல படத்தில் உள்ளதைப் போன்று நான்கு நண்பர்களையும் நிறுத்தி வைக்கிறான். முதலில் உள்ளவனுக்கும், இரண்டாவதாக உள்ளவனுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் உள்ளது. இரண்டாம் நண்பனுக்கு பின்னால், மூன்றாவது நண்பனையும், நான்காவது நண்பனையும் நிறுத்தி வைக்கின்றான். விளையாட்டிற்கான விதிகளையும் அவர்களிடம் கூறினான்.

விதி1: என்னிடம் நான்கு கற்கள் உள்ளது. இரண்டு சிகப்பு கற்கள், இரண்டு நீல கற்கள். உங்கள் ஒவ்வொறுத்தர் தலையிலும் ஒரு கல் வைக்கப்படும். உங்களால் உங்கள் தலையின் மீது உள்ள கல்லைக் காண இயலாது. உங்கள் முன்னால் நிற்கும் நண்பர்களின் கற்களை மட்டும் காண முடியும். அதாவது நான்காவதாக நிற்பவன், இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்திலும் நிற்பவர்களின் கற்களின் நிறங்களைக் காணலாம். மூன்றாவதாக நிற்பவன், இரண்டாம் இடத்தில் நிற்பவனின் கல்லின் நிறத்தை மட்டும் காணலாம்.

விதி2: நீங்கள் யாரும் உங்களுக்குள் பேசிக் கொள்ளக் கூடாது. நீங்கள் யாரையும் திரும்பியும் பார்க்கக் கூடாது.

விதி3: உங்கள் ஓரே ஒருவர் மட்டும தன் தலையில் எந்த நிறக் கல் இருக்கிறது என்று கூற இயலும். நான் மேலேக் கூறிய அனைத்து தகவல்களையும் வைத்து, ஒருவர் மட்டும் சரியானப் பதிலைக் கூற வேண்டும். விடை தெறியாதவர்கள் அமைதியாக இருந்து விட வேண்டும். சரி..உங்கள் நேரம் ஆரம்பித்து விட்டது. யோசியுங்கள்.

புதிரைப் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே, உங்களுக்கு விடைத் தெரிகிறதா? தெரிந்தால் எங்களுக்குbepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். விடைத் தெரியாதவர்கள், எங்களுடன் தொடர்புக் கொள்ளுங்கள், ஒரு “க்ளூ”(Clue) கிடைக்கும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்.

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..

போன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு, இரண்டு பேர் சரியான விடையைக் கொடுத்தனர். அவர்களின் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில், யாரையாவது ஒருத் திருடனைத் தான் கேட்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? இரண்டு பேரில் யாராவது, ஒருத்தனைக் கேட்டால் கூட போதும் (அல்லது) இரண்டு பேரில் யாரிடம் கேட்டாலும் வருகின்ற பதில் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்பது புரியும். அது தான் அந்த புதிருக்கு உள்ள முக்கிய “க்ளூ”(Clue) ஆகும்.

இரண்டாவது “க்ளூ”, ஒரு பொய், ஒரு உண்மை என்றால், இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, பதில் எப்போதுமே பொய்யாகத்தான் வரும். வரும் பதிலுக்கு எதிரான பாதயை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் நாம் கேட்கும் கேள்வியும்  இந்த இரண்டு க்ளூக்களையும் வைத்து தான் இருக்க வேண்டும்.

கேள்வி இது தான்: ஏதாவது ஒரு திருடனிடம் சென்று, “பின் உள்ள பாதைகளில் எந்த பாதை சரி என்று, உன் பக்கத்தில் உள்ள திருடனிடம் கேட்டால் என்ன பதில் சொல்லுவான்?” என்று கேட்க வேண்டும்.

உங்களுக்கு கிடைக்கும் பதில் எப்போதுமே தவறானதாகத்தான் வரும். அதை வைத்து நீங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

கொஞ்சம் யோசித்து, இரண்டு பேரிடமும், மேலுள்ள கேள்வியைத் தனி தனியாகக் கேட்டுப் பாருங்கள், முடிவில் உங்களுக்கு எந்தத் திருடனிடம் இருந்து வரும் பதிலும் தவறானதாகவே (பொய்யானதாகவே) வரும். அதை வைத்து நீங்கள் மாற்று பாதையில் அதாவது அடுத்த பாதையில் செல்ல வேண்டும்.

விடைப் புரியாதவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தையும், இரண்டு சூழ்நிலைகளையும் தொடர்ந்து படியுங்கள்.

உதாரணத்திற்கு, இடது பாதை சரியான பாதை, இடது புறம் இருக்கும் திருடன் உண்மை சொல்லுபவன் என்றும், வலது பாதை தவறான பாதை, வலது புறம் இருக்கும் திருடன் பொய் சொல்லுபவன் என்றும் நினைத்துக் கொள்ளுங்கள்.

சூழ்நிலை1:  இடது புறமுள்ள திருடனிடம், “வலது புறமுள்ள திருடன் சரியான பாதை எது என்று கேட்டால் என்ன சொல்லுவான்” என்று கேட்கிறீர்கள் என வைத்து கொள்வோம்.

வலது புறமுள்ள திருடன் பொய்யன் என்பதனால், வலது பாதை தான் சரியான பாதை என கூறுவான். வலது புறமுள்ள திருடனின் பதில் “வலது பாதையாகும்” என்று இடது புறமுள்ள திருடன் உங்களிடம் கூறுவான்.

சூழ்நிலை2:  வலது புறமுள்ள திருடனிடம், “இடது புறமுள்ள திருடன் சரியான பாதை எது என்று கேட்டால் என்ன சொல்லுவான்” என்று கேட்கிறீர்கள் என வைத்து கொள்வோம்.

இடது புறமுள்ள திருடன் உண்மை சொல்லுபவன் என்பதனால், இடது பாதை தான் சரியான பாதை எனக் கூறுவான்; ஆனால் வலது புறமுள்ள திருடன் பொய்யன் என்பதனால், அந்த பதிலை மாற்றி, இடது புறமுள்ள திருடனின் பதில் “வலது பாதையாகும்” என உங்களிடம் கூறுவான்.

நாம் கேட்டக் கேள்வியினால், இரண்டு சூழ்நிலையிலும் நமக்கு ஒரே பதிலான, பொய்யான பதில் மட்டும் தான் வரும். அதனால், நீங்கள் இந்த புதிரில், திருடர்கள் பதிலுக்கு எதிராக மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டும்.

 

சரியான பதில் அளித்தவர்கள்: ஸ்ரீகாந்த் & சிவரமனன்

 

பெரும்பாலான நண்பர்கள், போன மாதப் புதிர் கொஞ்சம் கடினமாக இருந்தது என்றே கூறினர். அதனால், இந்த மாதப் புதிர், கொஞ்சம் எளிமையாக இருக்கும்.

Likes(0)Dislikes(0)
Share
Mar 012014
 

 

வாழ்க்கையின் அழகு..

நீ எத்தனை சந்தோஷமாக இருக்கிறாய் என்பதில் இல்லை,

உன்னால் எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள்

என்பதில் தான் அடங்கி இருக்கிறது!!

 

 

சாக்கு போக்குகளையும் காரணங்களையும் விட,

உனது விருப்பமும் உழைப்பும் பெரியதாகும் போது,

வெற்றி பிறக்கின்றது..

 

 

தடைக்கல்லுக்கும் வெற்றிப்படிக்கும் உள்ள வித்தியாசம்,

ஓருவர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துள்ளது

 

 

வெற்றிப் பெறும் நோக்கத்திற்கு மட்டும் மன உறுதி முக்கியமல்ல..

வெற்றிக்கு தேவையான பயிற்சிக்கும், முன்னேற்பாட்டிற்கும்

உள்ள மன உறுதி மிக மிக முக்கியம்.

 

 

தோல்வி என்பது,

வீழ்வதில் இல்லை,

வீழ்ந்த பின், எழாமல் இருப்பதில்..

 

 

முயற்சிகளை கைவிட்டு விடுதலில் தான், நமது தோல்வி உள்ளது,

வெற்றியை நிர்ணையிக்கும் சிறந்த பாதை…

இன்னொறு முறை முயற்சிப்பதே ஆகும்.

 

 

ஒரே ஒரு மனிதனை நீங்கள் தோற்கடிக்க வேண்டுமெனில், அது உங்களை மட்டும்தான்…

உங்களுக்குப் போட்டி நீங்கள் மட்டும் தான்.

 

 

ஒரே ஒரு இடம் மட்டும் தான் உங்கள் கனவு நடக்க முடியாமல் போகும்..

அது உங்கள் சிந்தனையில் மட்டும்

 

 

தன்னம்பிக்கையை அடைய சிறந்த வழி என்ன தெரியுமா?

நீங்கள் மிகவும் அச்சப்படும் செயலை செய்வதாகும்…

 

 

நாம் வளர்கிறோம் என்றால்…

நம் சுகத்தை தியாகம் செய்வதற்கு,

தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்

           

 

எவ்வாறு உடல் வலுவற்றவன்,

கடின உடற்பயிற்சியின் மூலம் தன் உடலை வலுவானதாக மாற்ற முடியுமோ,

மன வலுவற்றவன்,

நல்ல, ஆரோக்கியமான சிந்தனைகள் மூலம் தன் மனதை வலுவானதாக மாற்ற முடியும்       

 

 

 

கட்டுபாடு என்பது விருப்பமே இல்லை என்றாலும்,

சில செய்ய வேண்டிய

முக்கியமான வேலைகளை செய்வதாகும்.

 

 

விஷயங்களை தெரிவது மட்டும் போதுமானது அல்ல,

தெரிந்தனவற்றை உபயோகப்படுத்த வேண்டும்..

விருப்பம் மட்டும் போதுமானது அல்ல,

முழு அர்ப்பணிப்புடன் விரும்பியவற்றை செயல்படுத்த வேண்டும்..        

 

 

சூழ்நிலை எளிதாக இருக்கும் போது

நீ யாரென்று தெரிவதில்லை..

சூழ்நிலை கடினமாக இருக்கும் போதும்,

சவால்கள் அதிகமாகும் போதும் தான்,

நீ யாரென்று தெரிகிறது..

 

 

பிறரை அறிந்தவன் படிப்பாளி

தன்னையே அறிந்தவன் அறிவாளி

பிறரைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் சக்திசாளி

தன்னையே கட்டுப்படுத்த தெரிந்தவன் மிகப்பெரிய ஞானி!!

Likes(1)Dislikes(0)
Share
Mar 012014
 

வணக்கம் நண்பர்களே! தமிழர்களின் முக்கியமான பொங்கல் தினத்தில், எங்களது B+ இணைய இதழின் முதல் பதிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

B+ இதழின் நோக்கம்:

இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள்(media) மனிதனுக்கு ஒரு பெரிய கருவி. வன்முறைகள், குற்றங்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் கிடைக்கும் இந்த நேரத்தில், நெகட்டிவ் விஷயங்களை முற்றிலும் புறம் தள்ளி நம்மை சுற்றி நடக்கின்ற, நாம் பார்க்கின்ற இடங்களிலும், பழகும் மனிதர்களிலும், படிக்கும் புத்தகங்களிலும், இருக்கும் பாஸிடிவ் விஷயங்களை மட்டுமே 100% share செய்து கொள்ள ஒரு களம் இருந்தால் எப்படி இருக்கும்! என்ற கேள்விக்கு பதில் தான் இந்த B+ இணைய இதழ்.

ஏவுகணை!

மனிதன் படைப்புகளின் ஒரு மாபெரும் அதிசயம்.

தனது இல்லத்தைத் தாண்டி பறந்து விரிந்த அண்டத்தை அளந்த ஒரு அத்தியாயம்.

எல்லைகள் மனிதனின் மனதில் தான், இயற்கைக்கு அல்ல என உணர்த்திய ஒரு உல்லாசப் பயணம்.

தன்னை அடிமைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சக்திகளை உடைத்தெரிந்து இலக்கை அடைந்த மாவீரம்.

ஏவுகணை விஞ்ஞானம் மட்டும் அல்ல, பரமனே வியக்கும் பிரம்மாண்டம்!!!

ஏன் இப்படி சம்பந்தமே இல்லாமல் ஏவுகணையிலிருந்து ஆரம்பிக்கின்றேன் என்று யோசிக்கிறீர்களா?

உயிரற்ற ஒரு பொருளுக்கு புவியீர்ப்பு என்னும் மாபெரும் விசையை எதிர்த்து செல்லும் மிகப்பெரிய சக்தியை, அளித்தது நம்மைப் போல மனிதர்களே. அப்படியிருக்க, நம்மை சூழ்ந்துள்ள துன்பங்கள், துயரங்களிலிருந்து விடுபட நமக்குள் ஒரு உந்து சக்தியை ஏற்படுத்தி, அவற்றை உடைத்தெறிய நம்மால் முடியாதா என்ன? அப்படியொரு உந்து சக்தியை மக்களிடையே விதைக்கும் ஒரு சிறு முயற்சியே இந்த B+ இணைய இதழ்.

 

ஒரு சின்ன கதையோட ஆரம்பிப்போம்.

அதிகாலை நேரம். ஒரு வயதானவர் கடற்கரை ஓரமாக நடந்து வருகிறார். அப்போது அங்கே ஒரு பத்து வயது சிறுவன் கரையிலிருந்து, எதையோ கடலுக்குள் வீசி கொண்டு இருக்கிறான். கொஞ்சம் அருகில் வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது, அந்த சிறுவன் கடல் அலையால் கரைக்கு கொண்டு வரப்பட்டு திரும்பிச் செல்ல முடியாமல் கடற்கரை மணலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நட்சத்திர மீன்களை ஒன்று ஒன்றாக எடுத்து கடலுக்குள் வீசி கொண்டு இருந்தான். அவன் அருகில் சென்ற பெரியவர்,

”தம்பி, என்ன செய்கிறாய்?” என்றார்
 

அந்த சிறுவன், “இந்த மீன்கள் எல்லாம் கரையில சிக்கி விட்டது. சூரியன் உதித்தால் சூடு தாங்க முடியாமல் சிறுது நேரத்தில் இறந்து விடும். அதனால் தான் கடலுக்குள் வீசுகிறேன்” என்றான்.

“என்னப்பா முட்டாள் தனமான வேலையைப் பார்த்து கொண்டு இருக்கிறாய். கொஞ்சம் கரையைப் பார். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான மீன்கள் கரையில் ஒதுங்கி இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னால் எப்படி காப்பாற்ற முடியும்? இன்னும் அரை மணி நேரத்தில் சூரியன் வரப்போகிறது. உன்னால் எவ்வளவு மீன்களை காப்பாற்றி விட முடியும்?” என்றார்.

“தாத்தா.. நீங்கள் சொல்வது சரிதான். என்னால் 30 நிமிடத்தில் கொஞ்சம் மீன்களை மட்டுமே காப்பாற்ற முடியும். உங்களை பொறுத்த அளவில், இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், காப்பாற்றப்பட்ட ஒவ்வொரு மீனுக்கும் இது மிகப்பெரிய விஷயம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் மீன்களை எடுத்து வீச ஆரம்பித்தான்.

பதில் பேச முடியாமல் அந்த சிறுவனை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்த பெரியவர் தன்னையும் அறியாமல் மணலில் சிக்கியிருந்த மீன்களை எடுத்து ஒவ்வொன்றாக கடலுக்குள் வீச ஆரம்பித்தார்.இது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதை. ஒரு சின்ன உதவியோ இல்லை தகவலோ மற்றவர்கள் பார்வையில் மிகச் சாதாரணமாகப் பட்டாலும் அந்த உதவியை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அது மிகப் பெரிய விஷயம்.

ஒரு பெரிய உந்துதல் அல்லது நம்பிக்கை தரக்கூடிய எதாவது ஒரு விஷயம் தனக்கு கிடைக்குமா! என இணையத்தை தேடுவோருக்கு இந்த B+ ஒரு சிறிய அளவிலாவது உதவியாக இருக்கும். தன்னம்பிக்கை, சுயநலமின்மை, positive energyயை பிரதிபலிக்கும் கதைகள், கவிதைகள் கட்டுரைகளை வழங்குவதே இதன் நோக்கம்.

அதற்காக “ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கயா, அறுத்து கொல்லப்போறாங்கயா” என்று யாரும் பயப்பட வேண்டாம், B+ இதழில் சொல்ல நினைக்கும் விஷயங்கள், உங்களை வந்து அடைந்தாலே போதும். எங்களின் கருத்துக்களை டாக்குமெண்டரி படமாக சொல்லி உங்களை போரடிக்காமல் ஒரு interesting படமாக கொடுத்து ரசிக்க வைப்பதே எங்கள் நோக்கம்.

இந்த B+ இதழ் எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல், பாஸிடிவ் கருத்துகளை மட்டும் பரிமாறும் ஊடகமாய், பாஸிடிவ் மனிதர்களின் ஒருங்கிணைப்பாய் இருக்க வேண்டும் என்ற ஒரு சிறிய எண்ணம், அவ்வளவே. இந்த இதழை மாதாந்திரியாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எல்லா மனிதர்களிடமும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். நம்ம B+ இன் நோக்கம், நல்லதை மட்டுமே focus & share செய்வதாக இருக்கும். இந்த முயற்சி யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எங்களை அறியாமல் ஏதாவது தவறு பதிவாகிருந்தால் மன்னிக்கவும்.

இந்த இதழுக்காக சில படங்கள் மற்றும் தகவல்கள் சில இ
ணைய தளங்களில் இருந்து எடுத்து வழங்கியுள்ளோம், அந்த ணைய தளங்களுக்கு எங்களது நன்றி.

எங்களது முயற்சிகள் நிறைய மனிதர்களை சென்றடைய, உங்களுடைய பேராதரவு கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறோம். பாஸிடிவ் சம்பவங்கள், உரையாடல்கள், சாதனைகள், ரசித்த நல்ல நிகழ்ச்சிகள், படங்கள் என இருந்தால் எங்களுக்கு email செய்யவும். இந்த இதழைப் படிக்கும் அனைவருக்கும் உங்கள் உதவி தேவைப்படலாம்.

நம்பிக்கை மற்றும் நன்றியுடன்,
விமல் தியாகராஜன் & B+ Team

Likes(9)Dislikes(0)
Share
Mar 012014
 

சாதிப்பதற்கும், மக்களுக்காக வாழ்வதற்க்கும், வயது ஒரு தடை அல்ல, “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என்பதை நிருபித்துக் கொண்டிருக்கும், 75 வயது இளைஞர் திரு.C.S.Rajagopal அவர்கள் தான் அவர்கள் தான் B+ இன் இந்த மாத சாதனையாளர் பக்கத்தின் ஹீரோ. இவரது தொடரும் சேவைகளை பாராட்டி B+ இவரை பற்றி ஒரு தொகுப்பை மிகப் பெருமையுடன் வழங்குகிறது.

சென்னை ஷெனாய் நகர் பகுதியில், திரு.வி.க பூங்கா அருகில் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைத்து அங்கே ஜுடோ மற்றும் ஜிஜிட்சு கலைகளை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இளைஞர்களுக்கு மிகுந்த சக்தியுடனும், நம்பிக்கையுடனும் பயிற்சி கொடுத்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளர் தான் இவர்.

ரிடையர் ஆகி, வீட்டிலே ஓய்வெடுப்போம் என்று இல்லாமல், தன்னால் முடிந்த ஒரு சேவையை சமுதாயத்திற்காக செய்ய வேண்டும் என்று ஒரு கனவுடன் இளைஞர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வாழ்க்கையின் சவால்களுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் ஒரு சூப்பர் மாஸ்டர் இவர்.

Father of South India Judo என்று இவரை நன்கு தெரிந்தவர்கள் கூறும் அளவிற்கு உயர்ந்தவர். B+ இன் சாதனையாளர்கள் பக்கத்தைக் குறித்து சொல்லி இந்த மாதம் இவரைப் பற்றி வெளியிடலாம் என்ற நமது விருப்பத்தை சொன்னவுடன், “அதனாலென்ன, கண்டிப்பாக செய்யலாமே” என்று நம்முடன் உரையாடலை துவங்கினார். உரையாடலில் இருந்து சில வரிகள்.

B+: மாஸ்டர், உங்களைப் பற்றி. 

மாஸ்டர்: படித்தது BE (Civil Engineering), சின்ன வயதிலிருந்தே “Martial Arts மேல ஒரு தனி ஆர்வம் இருந்ததனால, எலிமெண்டரி கராத்தே, ஜுடோ, அகிட்டோ போன்ற கலைகளை சின்ன வயசுலே ஆரம்பிச்சிட்டேங்க.
மாஸ்டர்.விஜயகுமார்(Late), மாஸ்டர்.பீட்டகிள் எனக்கு சொல்லிக் கொடுத்தவங்களில் முக்கியமானவர்கள். PWDல கிட்டத்தட்ட 28 வருடம் வேலை செய்து 1997ல ரிடையர் ஆயிட்டேன். நிறைய ஸ்டூடண்ட்ஸுக்கு class எடுத்து, முறையா பயிற்சிக் கொடுத்து அவர்களை முன்னேத்திகிட்டு இருக்கேன்.

B+: மாஸ்டர், நிறைய சாதனை பண்ணிருப்பீங்க. உங்களுக்கு ரொம்ப பிடித்த சாதனையப் பற்றி. 

மாஸ்டர்: ஜுடோ ஒரு ஜப்பானியக் கலை. அதை கத்துக்கிட்டு நம் மக்களுக்கு பயிற்சி கொடுப்பதை ஜப்பான் நாடும், ஜப்பான் கவுன்சலேட்டும் ரொம்ப வரவேற்று அங்கீகரிக்கிறார்கள். ஜப்பான் பாரம்பரிய நிகழ்ச்சி, ஜுடோ சம்பந்தப் பட்ட நிகழ்ச்சி இந்தியாவில் எங்கு நடந்தாலும் ஜப்பான் கவுன்சலேட்டுல இருந்து நம்மை அழைச்சிடுவாங்க.

அது 1982 ஆம் வருஷம். ஜப்பான் பவுண்டேஷன், சுக்குபா யுனிவர்சிட்டியில் 27 நாட்கள், ஜுடோ பயிற்சி கொடுப்பதற்கு 4 பேரை ஜப்பான் அழைச்சிட்டு போறதுக்கு தேர்வு செய்தாங்க. ஃபிஜி, சில்லி, செனேகல் போன்ற நாட்டுலருந்து தலா ஒருத்தரையும், இந்தியாவிலிருந்து என்னையும் தேர்வு செய்தார்கள்.

அப்போ எனக்கு 43 வயது இருக்கும். அந்த பயிற்சிக்கு 24 லிருந்து 33 வயது தான் இருக்கணும். நம்ம ஃபிட்னஸயும், ஆர்வத்தையும், வேகத்தையும் பார்த்து நம்மளை சிபாரிசு செய்து அந்த பெரிய வாய்ப்பை கொடுத்தார்கள்.

PWD ல ஒரு மாசம் லீவுப் போட்டு ஜப்பானுக்கு சென்று, அந்த பயிற்சியை முடித்ததும், ஜப்பானியர்கள் கையாலேயே “black belt” வாங்கினதும் மறக்கவே முடியாது.

நம்ம கிட்ட கத்துட்டு நம்ம பசங்க நேஷனல் லெவல்ல “bronze medal” வரைக்கும் வந்துருக்காங்க. இன்னும் அதிகம் பயிற்சி செய்தால், அடுத்த லெவலுக்கு போய்டுவாங்க.


B+: மாஸ்டர், இப்போ என்னென்ன அமைப்புகளிள் பொறுப்பில் இருக்கீங்க? 

மாஸ்டர்: தமிழ்நாடு ஜிஜிட்சு அசோஷியேசன்ல ப்ரெசிடெண்ட் ஆகவும், தமிழ்நாடு ஜுடோ அசோஷியேசன்ல வைஸ்-ப்ரெசிடெண்ட் ஆகவும், தமிழ்நாடு ஜுடோ technical committee Chairman ஆகவும் இருக்கேன்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஜுடோ அசோஷியேசன் ஆரம்பித்ததில் நமக்கு பெரிய பங்குண்டு. பாண்டிச்சேரியிலும் ஜுடோ அசோஷியேசனுக்கு நிறைய உதவி செய்தோம். இன்றைக்கு அவர்களெல்லாம் நன்றாக வளர்ந்திருக்காங்க.

நிறைய international tournaments க்கு technical officer ஆ இருந்துருக்கேன். Judo federation of Indiaல Executive member ஆகவும் இருந்துருக்கேன். இன்றைக்கு நிறைய இளைஞர்கள் அந்த பொறுப்புகள்ல இருக்காங்க. நாம அவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொண்டு இருக்கோம்.

B+: மாஸ்டர், இந்த கலையை நீங்க மட்டும் கத்துக்கிட்டு இருந்துவிடாமல், ஏன் மற்றவங்களுக்கும் கொடுக்கணும்ணு நினைச்சீங்க?

மாஸ்டர்: எந்த கலையுமே அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்கணும். பயிற்சி செய்துகிட்டே இருக்கணும். மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கலைனா, எந்த கலையும் துருப்புடிச்சி அழிந்துவிடும். அதனால் எந்த அளவுக்கு கற்றுக் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு வளரும். நான் சொல்லி கொடுக்கணும்னு ஆரம்பித்ததே, நம்மளால் நாலு பேரு நல்லா வளரட்டும், முன்னேரட்டும்னு ஒரு ஆசையில் தான். அதனால் தான் பசங்களுக்கு சக்தி கொடுத்துகிட்டே இருக்கேன். பசங்க மேல வரணும்னு தான் கத்திக் கிட்டேருக்கேன். இன்னைக்கு 75 வயதை தாண்டி ஓடிகிட்டு இருக்கு. இந்த தொடர் பயிற்சியினால், உடம்பு நல்லாயிருக்கு.

B+: நிறைய எதிர்ப்புகளும், கிண்டலும் வருமே? எப்படி அத்தனையும் சமாளித்த பிறகும் உங்களுக்கு இத்தனை சக்தி வருது? 

மாஸ்டர்: எந்த ஒரு வேலையையும் முழுமனசோடு செய்யணும். முழுமையாக நம்மை அர்ப்பணித்து செய்யும் போது, எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நாம் வெற்றி பெற்றிடலாம். அதற்கு மேல் கடவுள் நம்பிக்கை, நமக்கு மேலே ஏதோ ஒரு சூப்பர் பவர் இருக்கு என்று முழுதாக நம்புகிறேன்.

அதனால எதிர்ப்பெல்லாம் பார்த்து நாம் கவலை படக்கூடாது. கவலை தான் நோய்க்கு காரணம். கவலையை துரத்தி அடித்துவிட்டு ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக்கணும்.

என்னிடம் நிறைய பேர் சொல்லுவாங்க. office tension, அதனால் உடற்பயிற்சி செய்ய முடியலை மாஸ்டர்னு. ஆஃபிஸ்ல சொல்றவன் ஆயிரம் சொல்லுவான், அதெல்லாம் உதறித் தள்ளுங்க. மனதில் அதெல்லாம் ஏத்திக்காம, பாசிட்டிவா சிந்திங்க.

சாப்பிடறது, தூங்கறது எப்படி அன்றாட விஷயமோ, உடற்பயிற்சியும், ஆரோக்கியமான எண்ணங்களையும் அன்றாட விஷயமாக ஆக்கிடுங்க. இந்த மாதிரி பாசிட்டிவ் விஷயங்களுக்கு ADDICT ஆகிடுங்க. அதுவே கொஞ்ச நாளில் பழக்கமாக போய்விடும்.

B+: மாஸ்டர், உங்கள் லட்சியம். 

மாஸ்டர்: இருக்கும் வரை நல்லது செய்யணும். போறது நம்மிடம் இல்லை. உயர்வான எண்ணங்கள் இருக்கணும். நம்மளால் சிலர் மேலே வரணும். நம் கலை நாலு பேரை சேரணும், அவர்களால் இன்னும் சிலர் டெவலப் ஆகனும்.

Think Positive, Act Positive, Get rid of the Negative.
Do not forget God. Involve yourself in all activities you do.
HEALTH IS WEALTH.

ஜுடோ பாஷையில் மாஸ்டருக்கு ஒரு பெரிய ஓஸ் (நன்றி கலந்த வணக்கம்) போட்டு, அந்த பயிற்சிக் கூடத்தை விட்டு விடைப் பெற்றோம்.

Likes(0)Dislikes(0)
Share
 Posted by at 6:56 pm
Mar 012014
 

Passionate Goals

ஃப்ரண்ட்ஸ்… நமக்கெல்லாம் நல்லா தெரிந்து, அடிக்கடி கேள்விப்படுகிற ஒரு விஷயம் தான் goal setting. நிறைய நபர்கள் நமக்கு அட்வைஸ் செய்து கேள்வி பட்டிருப்போம். நாமும் லட்சியத்தை அடைய தீவிரமாக முயற்சி செய்வோம். ஆனால் எல்லா லட்சியத்தையும் அடைய முடியுமா? என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். ஏன் நடக்க வில்லை, அப்படின்னு கொஞ்சம் யோசித்து பார்த்தால், ஒன்று நன்றாகத் தெரியும். அது தாங்க Passion.

அட என்னப்பா? Passion, Pulsar ன்னு பைக் பெயரா சொல்றாங்கன்னு நினைக்கிறீங்களா? வாழ்க்கையில மிகப் பெரிய உயரங்களை அடைந்த பல வெற்றியாளர்களோட வாழ்க்கைப் பக்கத்தை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால், அதில், நமக்கு தெரியும் மிக முக்கியமான & பொதுவான விஷயம் தான் இந்த Passion.

விஸ்வநாதன் ஆனந்த், இளையராஜா, அப்துல் கலாம்னு பல பெயர்களை அடுக்கி கொண்டே போகலாம். இப்படிப்பட்ட வெற்றியாளர்கள் எல்லாருமே பொதுவாக சொல்றது, முக்கியமா இந்த மூன்று விஷயம் தான்.

“chase your passion”
“Love what you do, do what you love”
“Don’t limit your challenges, but challenge your limits”

அதாவது மனதிற்கு ரொம்ப பிடித்த விஷயத்தை, நமது இலக்காக எடுத்து செய்யும்போது, எவ்வளவு கஷ்டம் வந்தாலும், நமக்கு அது பெரியதாகவே தெரிவதில்லை.


ஒரு சின்ன உதாரணம். பள்ளியில் படிக்கும் போது நினைத்து பாருங்க, PT periodல செம ஜாலியா இருப்போம், ஒரு பயங்கர Energy இருக்கும், ஆனால் பிடிக்காத ஒரு சப்ஜக்ட் periodல பார்த்தால் “கண்ணைக் கட்டும், எல்லா கனவும் வரும்”. PT period எப்போது முடிந்தது என்றே தெரியாது, பிடிக்காத சப்ஜக்ட் period எப்போது முடியும் என்றே புரியாது.

அதுதான் நமக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்கும், பிடிக்காத விஷயத்தை செய்வதற்கும் உள்ள வித்தியாசம்.

பிடித்த விஷயத்தை செய்யும்போது நாம், RISK கூட ஈசியாக எடுப்போம். ரொம்ப ரசித்து செய்வோம். தாமஸ் ஆல்வா எடிசனைப் பாருங்க, எத்தனை முயற்சிகள்! எத்தனை தோல்விகள்!, கடைசியில் கொடுத்தார் அல்லவா, ஒரு விஸ்வரூப வெற்றி!

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது ஒரு வகை வெற்றி என்றால்,
விழுந்த போதெல்லாம் எழுந்தான், “பலமடங்கு சக்தியுடன்” என்றால், அது மிகப் பெரிய வெற்றி.

அந்த வெற்றிக்கு தேவையான சக்தியை கொடுப்பதில் இந்த Passion க்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

இந்த இடத்தில் “Selective listening” ங்குற ஒரு சின்ன விஷயத்தை சொல்லியே ஆகனும். ஒரு நாள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டு இருந்தது. பட்டிமன்றத்தில் பேசுகிறவர்களை தவிர, மற்ற எல்லோருமே அரை தூக்கத்தில் தான் இருந்தார்கள். பேச்சாளர்கள் எல்லோரும், அப்படி பேசி அறுத்து கொண்டு இருந்தார்கள். திடீர்னு ஒருவர் வந்து பேசவும், மொத்த கூட்டமும் படு உற்சாகம் அடைந்தது. அதுவரைக்கும் தூங்கி வழிந்த கூட்டம், அவரோட பேச்சை ரொம்பவே ரசித்துகேட்டார்கள்.

எப்படி இவரால் மட்டும் மக்களை ரசிக்க வைக்க முடிகிறது என்றால், அவரே அதற்கு பதில் சொல்கிறார், “மக்களுக்கு என்ன சொல்லணும்னு நினைக்கிறேனோ, அதை சரியாக அவர்கள் புரிந்துக் கொள்கிற மாதிரியும், அவர்களுக்கு பிடித்த மாதிரியும் சொல்கிறேன். அதுதான் என் நோக்கம்” என்று. அவர் சொன்ன ஒரு சின்ன கதையை இங்கே சொல்லலாம்ணு ஆசைப்படுகிறேன்.

ஒரு நாள், ஒரு ஆசிரியர், மாணவர்களிடம் ஆல்கஹாலோட பாதிப்புகளை விளக்குவதற்கு, குட்டி கதை ஒன்றை சொல்கிறார். இரண்டு கிளாஸ் (Glass) ஒரு டேபிள்ல இருக்க, சுற்றி நின்ற மாணவர்களை பார்த்து,

“மாணவர்களே, இந்த இரண்டு கிளாஸ்ல ஒன்றில் தண்ணீரும், இன்னொரு கிளாஸ்ல ஆல்கஹாலும் இருக்கு. இப்போது ஒரு சின்ன சோதனை செய்வோம்” என்று சொல்லிவிட்டு, இரண்டு கிளாஸ்லையும் ஒவ்வொரு சின்ன புழுவை எடுத்து போட்டார். சிறிது நேரத்தில் ஆல்கஹாலில் போட்ட புழு, துடி துடித்து இறந்து போனது. தண்ணிரில் போட்ட புழு நீந்திக் கொண்டே இருந்தது.

அப்போது, அந்த ஆசிரியர் மாணவர்களை பார்த்து,

“மாணவர்களே, இந்த சோதனையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது, சொல்லுங்க பார்ப்போம்?” என்றார்.

உடனே ஆர்வமாக ஒரு மாணவன் சொன்னான், “சார், தண்ணீர் குடித்தால், வயிற்றில் உள்ள புழுவெல்லாம் சாகாது. ஆல்கஹால் குடித்தால், உடனே செத்து விடும். அதனால், இனிமேல் நாம் தண்ணீருக்கு பதிலாக ஆல்கஹாலை குடிக்கலாமா சார்?” என்றான்.

அன்றைக்கு பள்ளிக்கூடத்தை விட்டு சென்ற வாத்தியார் தான். திரும்பவே இல்லையே..

OK.. ஏன் இதை சொன்னேன் என்றால் selective listening என்பது ஒரு சூப்பரான விஷயம். யாராவது ஒரு விஷயத்தை சொல்லும் போது நம் மனது, அதற்கு பிடித்த மாதிரி கேட்டுக் கொள்ளுமாம். ரொம்ப ஆச்சரியமாக உள்ளது!

அதனால், மேலே சொன்ன goal setting ஐ பற்றி படித்துவிட்டு, மனதிற்கு பிடித்ததை செய்ய போகிறேன் என்று எக்குத்தப்பாக ஒரு Goalஐ setசெய்யாமல், சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டு பாசிட்டிவ் ஆன நோக்கத்தை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் பயணிப்போம்.


 

 

திறமையை அங்கீகரியுங்கள்
நம்ம சமுதாயத்தில், நிறைய பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லித் தருவது ஒரே ஒரு விஷயம் தான். நல்லா படிக்கணும், நிறைய மார்க் எடுத்து ஒரு டாக்டராகணும் இல்ல இஞ்சினியர் ஆகணும். அளவுக்கு அதிகமாக pressure கொடுத்து குழந்தைகளை ஒரு வழி பண்ணிடுவாங்க.

நம் education systemமும் அப்படித்தான் இருக்கு. மதிப்பெண்களை குறி வைக்கிறதே தவிர, யோசிக்கும் திறனையும், அறிவு மற்றும்Character வளர்ப்பதிலும், சற்று குறைவாகத் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு குழந்தைகளிடமும், ஒவ்வொரு Special Talent, அவர்களுக்கு பிடித்த விஷயம்னு ஒன்று இருக்கும். பெற்றோரும், பள்ளியும் அதை கண்டுபிடித்து, குழந்தைகளை அதில் பயிற்சி கொடுக்கணும்.

நம் education system எப்படி இருக்கு என்பதை ரொம்ப அருமையாக விளக்குகிறது கீழே உள்ள படம்.

ஒரு காகம், குரங்கு, பென்குயின், யானை, மீன், சீல், நாய்.. இது எல்லாவற்றையும் பொதுவாக “இந்த மரத்தில் ஏறுங்க, இது தான் உங்க எல்லாத்துக்கும் பொதுவான பரீட்சை” என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய மடத்தனம்?

இயற்கையாகவே, மரம் ஏறும் திறமை உள்ள குரங்கும், பறவையும் உடனே மேலே ஏறிவிட, மற்ற மிருகங்கள் கடைசி வரைக்கும் கீழே தான் இருக்கும். ஏனெனில், இயற்கை அவைகளுக்கு வேறு சில திறமையை கொடுத்திருக்கு.

இந்த உலகத்தில், திறமை இல்லாதவர்கள் என்று யாருமே இல்லை. எல்லாரிடமும் ஏதோ ஒரு Special Talent கண்டிப்பாக இருக்கு. நம் பள்ளிகளில் கூட பார்த்திருப்போம். நல்ல மதிப்பெண் வாங்காத நிறைய மாணவர்கள் கூட, பிற்காலத்தில் மிகப் பெரிய சாதனைகள் செய்து இருப்பார்கள்.

ஒரு பழமொழி சொல்லுவாங்க…

“ஓடாத கடிகாரம் கூட, ஒரு நாளுக்கு ரெண்டு முறை சரியான மணி காட்டும்”

ஒரு பள்ளிக்கூடத்தோட வாசகம் இப்படி வருகிறது

“No one is use less, some are used less”

அதனால், இந்த மாணவன் எதற்குமே உபயோகம் இல்லை என்று, யாரையும் ஒதுக்காமல் ஒரு பள்ளியோ, சமுதாயமோ ஒரு மனிதனிடம் இருக்கும் தனித்திறமையை அங்கீகரித்து, அதில் பயிற்சி கொடுத்தோம் என்றால், எல்லாருமே சாதனையாளர்கள் தான்.

பாலிவுட்டில், வெளியான இரண்டு மிகப் பெரிய வெற்றி படங்கள் “தாரே ஜமீன் பர்” மற்றும் “3-Idiots” கூறிய விஷயமும் இது தான்.

டெண்டுல்கர் நல்லா கிரிக்கெட் விளையாடுகிறார்னு 7 வயதிலேயே அவர் அப்பா கண்டுபிடித்து, அதற்கு உண்டான பயிற்சியை கொடுத்ததாலதான், 16 வயதில் இந்தியா டீம்ல விளையாடினார். இன்றைக்கு பல சாதனைகளின் சொந்தக்காரராகவும் இருக்கிறார்.

ஒரு நாள், நண்பர் ஒருத்தர், ஒரு பெற்றோரிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த பெற்றோர் ரொம்ப பெருமையாக,

“என் பையனை கண்டிப்பாக டாக்டராகவோ இல்லை எஞ்ஜினியராகவோ ஆக்கப் போகிறோம் என்று, நண்பரிடம் சொல்லி கொண்டு இருந்தார்கள்.

அதற்கு நண்பர் இரண்டு கேள்வி அவர்களிடம் திரும்ப கேட்டார்

1) எஞ்ஜினியர் ஆகணும், இல்லை டாக்டர் ஆகணும்னு சொல்றீங்களே, அப்படி ஆனவுடன், அவன் என்ன செய்ய போகிறான்னு சொன்னீங்களா?

2) உங்க குழந்தையை என்ன ஆகணும்னு சொல்றீங்களே, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று எப்பொழுதாவது கேட்டு இருக்கீங்களா?

இதற்கு பதில் சொல்ல முடியாமல், அவர்கள் முழிக்கவே நண்பர் மேலே சொல்லியிருக்கார்.

“சார்.. பையன் வாழ்க்கையில் நன்றாக வரணும்னு நினைக்கிறீங்க.. தப்பே இல்லை. ஆனா, நம்ம என்ன ஆகணும்னு பசங்க நினைக்கிறதை விட என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கணும். அதற்கு என்ன முக்கியமோ அந்த விஷயத்தை சின்ன வயசுல இருந்தே சொல்லி கொடுங்க.

ஏன்னா, நிறைய எஞ்ஜினியருங்க டாக்டருங்க படிச்சதுக்கப்புறம் “நாம ஏன் இப்போ எஞ்ஜினியரானோம் / டாக்டரானோம்” னு யோசித்து கொண்டு இருக்காங்க. நம்மளோட விருப்பம் இது இல்லையோன்னு, படித்து முடித்தவுடன் தான் யோசிக்கிறாங்க.

இதை கேட்டவுடன், அந்த பையனோட பெற்றோர்கள் எதோ தீவிரமா யோசித்த மாதிரி தெரிந்ததாம் நண்பருக்கு.

குழந்தைகளுக்கு இசை, நடனம், விளையாட்டு, விண்வெளி, ஆராய்ச்சி, சட்டம், Military, Photography, Journalism, Drawings என்று ஏதாவது ஒன்று பிடிக்கலாம். அதை கண்டு பிடிக்கிறதும், பயிற்சி கொடுத்து ஊக்குவிப்பதும் தான் பெற்றோர்களின் முக்கியமான கடமை என்று எல்லோரும் உணரும் நாள் சீக்கிரமே வரும்!

Likes(0)Dislikes(0)
Share
Mar 012014
 
பொங்கலைப்பற்றி
பொங்கல் – ஒரு சுதந்திரம்
தன்னை சி்றைப்படுத்தி வைத்திருந்த மண்ணிடமிருந்து கரும்புகளுக்கும்,
நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறை பெறும் மாணவர்களுக்கும்.

பொங்கல் – ஒரு குதூகலம்
கும்மியடித்து காணம் பாடும் கன்னியருக்கும்,
பல தியாகம் புரிந்து அறுவடைக்கு தயாராகும் உழவர்களுக்கும்.

பொங்கல் – ஒரு வீரம்
கொம்புகளுக்கு வர்ணமிட்டு பாய்ந்து ஓடும் காளைகளுக்கும்,
அந்த காளைகளோடு ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் சிங்கங்களுக்கும்.
பொங்கல் – ஒரு மறுமலர்ச்சி்
ரப்பரையும் பாயையும் கொளுத்தி புகைமூட்டும் நாளல்ல,
பழையன பறக்கவும் புதியன பிறக்கவும் உள்ள நன்னாள்.
பொங்கல் – ஒரு வரலாறு
தொலைக்காட்சியில் தொலைந்து போகும் தினமல்ல,
தொலைக்கவே முடியாத தமிழினத்தின் அடையாளம்!


உழவர் திருநாள்

ஆடியில வெர தெளிச்சி
பெருகிய ஆத்த பாத்திகட்டி
உழுது நட்டு
கால்பதிச்சி களையெடுத்து
ஒட்டுன வயித்தோட
ஊருக்கு சோறு போட அவண் நினைச்சான்

புள்ள கனக்குதுன்னு தாய்கூட நினைக்கலாம்
மண்ண பாரமா பாக்காம பிள்ளபோல தூக்கி சுமந்தான்
காடு மேடுன்னு பாக்கல
முடியலனு உழைக்க தயங்கல
வேர்வைய உரமாக்கி
உதிரத்துல நீர் பாச்சி
கருதருத்து, கலத்துல சேத்து
காத்துல தூத்தி
அரண்மன சேக்குர வர
உசுரா காத்த அவனுக்கு கூலி ஒரு கலம்
உழவனுக்கு திருநாளாம் தை பொறந்தாச்சி

மண்ணால அடுப்பு கட்டி
பனைஓலை தீ மூட்டி
மஞ்ச கொத்துப் பறிச்சி
மண் பான வச்சி
புது நெல்லு குத்தி
கரும்பு கழி நட்டு

பொங்கலோ பொங்கல் என
பொங்கியது புதுப்பானை!

–  வி.சிவரஞ்சினி
Likes(3)Dislikes(0)
Share
Mar 012014
 

இளைஞர்கள்

இந்த மாதம் நாம் எல்லோரையும் மிகவும் கவர்ந்திருக்கின்ற, நம்முள் ஊறிவிட்ட, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற technology development ஒரு மனிதனின் சிந்திக்கும் தன்மையை எப்படி பாதிக்கின்றது என்று பார்ப்போம்.

ஒரு சின்ன உதாரணத்துடன் ஆரம்பிக்கின்றேன். நான் கல்லூரியில் படிக்கும் போது, என்னிடம் மொபைல் போன் இல்லை. இத்தனை வகையான மொபைல் ஃபோன்களும் அப்பொழுது இல்லை. பாலிஃபோனிக் ரிங் டோன் வரும் மொபைல் ஃபோன் ஒருவன் வைத்திருந்தால், அது மிகப்பெரிய விஷயம். எங்களுக்கு இருந்ததெல்லாம் விடுதி முழுவதற்குமே ஒரே ஒரு லேண்ட் ஃபோன் தான். ஆனால் அந்த சமயத்தில் வீட்டு நம்பர், நண்பர்களின் நம்பர் என்று கிட்டத்தட்ட ஒரு 20 தொலைபேசி எண்கள் மனப்பாடமாகத் தெரியும்.

அதே இன்றைக்கு என்னிடம் ஒரு advanced smart phone இருக்கின்றது. ஆனால் என்னால் ஒரு 3 நம்பர்கள் கூட ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்னும் வெளிப்படையாக கூற வேண்டுமானால், என்னுடைய இரண்டாவது சிம் நம்பரை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால் கூட மொபைலில் உள்ள contact list பார்த்து தான் எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஏன் அப்படி? என்னுடைய மூளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அத்தனையையும் என் மொபைலில் உள்ள ஒரு சின்ன chip ஞாபகம் வைத்துக்கொண்டு என்னுடைய மூளைக்கு வேலையே இல்லாமல் செய்து விடுகின்றது.

நாம் தினமும் காலையிலருந்து மாலை வரை என்னென்ன செய்கிறோம் என்று ஒரு முறை யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும். காலையில் எழுந்ததுமே காஃபி மேக்கரில் instant coffee உடனே கிடைக்கின்றது. Switch மட்டும் தட்டினால் ஹீட்டர்லருந்து சுடு நீர் கொட்டுகின்றது. இருசக்கர வாகனங்களை உயிர்ப்பிக்க கிக்கரைக் கூட உதைக்கத் தேவையில்லை. Self start பட்டனை ஒருமுறை லேசாக அழுத்தினாலே போதும். உணவு சமைக்கவில்லையென்றால் ஹோட்டலுக்கு கூட போகத் தேவையில்லை. படுத்துகிட்டே ஒரு ஃபோன் கால் செய்தால் போதும். அரை மணி நேரத்தில் உணவு உங்கள் வீடு தேடி வந்து விடும். சிரமப்பட்டு  துணி துவைக்கத் தேவியில்லை. வாஷிங் மெஷினில், துணிகளை இட்டு, ஒரு பட்டனை அழுத்தினால் போதும். துவைத்து, பிளிந்து, காயவைத்தும் கொடுத்து விடுகின்றது.

ஒரு பக்கம் இந்த டெக்னாலஜி நம்மை மிக மிகச் சோம்பேறிகளாக மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இது பரவாயில்லை. ஆனால் நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குக் காரணமே நம்மிடம் இருக்கும் அந்த ஆறாவது அறிவு தான். ஆனால் அதைக்கூட நம்மை உபயோகிக்க விடாமல் தடுத்து விடுகின்றது என்பது தான் உண்மை.

ஒரு சின்ன உதாரணம். உங்களுடைய gmail கணக்கிலோ இல்லை irctc கணக்கிலோ உள்ள forget password என்ற வசதியை எத்தனை பேர் உபயோகித்து இருப்பீர்கள்? எத்தனை முறை உபயோகித்திருப்பீர்கள்? எங்கள் அலுவலக employee portal passwordஐ நான் மாதா மாதம் மறந்துவிட்டு forgot password option உபயோகித்துத் தான் retrieve செய்துகொண்டு இருக்கின்றேன் . நான் மட்டும் இல்லை. என்னைப் போலவே தான் பலரும் இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாம் தான் நம்முடைய password ஐ செட் செய்கிறோம். அது மறந்து போனால் யோசிப்பதற்கு ஒரு 5 நிமிடம் ஒதுக்குகின்றோமா? உடனே forgot password வசதியை அழுத்தி விடுகிறோம்.  ஏன்? ஏனெனில் கொஞ்ச நேரம் யோசிப்பதற்குக் கூட நாம் தயங்குகின்றோம். அந்த பட்டனை அழுத்தினால் 15 நொடிகளில் புது password வந்துவிடும். ஏன் கஷ்டப்படுவானேன் என்ற ஒரு நினைப்பு.

அப்புறம் ஐந்தும் ஐந்தும் எவ்வளவு என்று பார்கின்ற ஒரு சின்ன கணக்குக்குக் கூட நாம் இப்பொழுது, மொபைலில் இருக்கும் கால்குலேட்டரின் உதவியைத் தான் நாடுகின்றோம்.

சரி நீங்கள் இப்போது ஒன்று கேட்கலாம். ஏன் என்னுடைய இந்த டெக்னாலஜி எல்லா வேலைகளையும் செய்யும் போது, நான் எதற்கு கஷ்டப்பட்டு யோசிக்க வேண்டும் என்று. நல்ல கேள்விதான். உபயோகிக்காமல் எந்த பொருளை வைத்திருந்தாலும் சிறிது நாட்களில் அது கெட்டுப் போய்விடும். அதேபோல் தான் இதுவும். நம்முடைய மூளைய உபயோகிக்காமல் வைத்திருக்க வைத்திருக்க, மூளை செல்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்து கொஞ்ச நாளில், அதன் வேலை என்ன என்பதையே மறந்து விடும். ஒரு கட்டத்தில் நாமே அதை உபயோகிக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அது வேலை செய்யாது. நம்முடைய யோசிக்கும் திறனும் சரி, ஞாபக சக்தியும் சரி கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டே வரும்.

ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான gadgets உதவிகள் இல்லாமல் நம்மால் செயல்பட முடியாத நிலை வந்துவிட கூடும். இப்போதே நிறைய பேருக்கு அவ்வாறு வந்துவிட்டது. சிலரிடம் மட்டும் மொபைல் ஃபோனை பிடுங்கி விட்டால், சிறிது நேரத்தில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

இந்த உலகத்திலேயே, உபயோக்கிக உபயோகிக்க ஒரு பொருள் புதிதாக மாறும் என்றால், அது மனிதனின் மூளை மட்டுமே. . நம்முடைய மூளையில் ’N’ GB dataவை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த உலகத்திலேயே மிகப்பெரிய hard disc நம்முடைய மூளை தான். அதற்காக அதில் data cable சொருகி, டிவியில் படம் பார்க்க முடியுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது.

என்னங்க எதோ உபயோகித்தால் வளரும், காய்க்கும், பூக்கும் என்றெல்லாம் ரீல் விடுகின்றேன் என்று தானே யோசிக்கிறீர்கள். இதே சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல, பலருக்கு இருந்தது. அதனால் மனிதனின் மூளையின் தன்மையை அறிய Harward என்ற ஒரு பள்ளியில் ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள்.

ஒன்றும் இல்லை ஒரு பதினெட்டு பேரை தெரிவு செய்து, அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தனர். முதல் குழுவை ஒரு பியானோ உள்ள ஒரு அறைக்கு அனுப்பி அவர்களுக்கு 5 நாட்கள் தொடர்ந்து  பியானோ பயிற்சி கொடுத்தனர். அதேபோல் மற்றொரு ஆறு பேர் குழுவை அதே மாதிரியான பியானோ உள்ள மற்றொரு அறைக்கு அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் அந்த 5 நாட்களுக்கு எதுவுமே செய்யாமல் இருக்கவேண்டும்.

மூண்றாவது குழுவையும் அதே போல் பியானோ உள்ள மற்றொரு அறைக்கு அனுப்பி, அவர்கள் பியானோ பயிற்சி எடுப்பது போல் கற்பனை மட்டும் செய்துகொள்ளச் செய்தார்கள்.

5 நாட்கள் முடிந்த பிறகு அனைவருடைய மூளையையும் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து பார்த்தனர்.

எதிர்பாத்தது போலவே, உண்மையாகவே பியானோ பயிற்சி எடுத்த குழுவில் இருந்தவர்களின் மூளையில விரல் அசைவுக்குச் சம்பந்தமான மூளை செல்களில் குறிப்பிடத்தகுந்த அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதேபோல் எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தவர்களின் மூளையும் எதுவுமே செய்யாமல் இருந்ததால் அந்த செல்களில் எந்த மாற்றமுமே ஏற்படவில்லை. மூண்றாவது குழுவின் ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்த பொழுதுதான் அனைவருக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது. உண்மையிலயே பியானோ பயிற்சி எடுத்தவர்களின் மூளையில என்ன மாதிரியான மாற்றம் நடந்திருந்ததோ, அதே அளவு மாற்றம் பயிற்சி எடுப்பது போல் யோசித்தவர்களின் மூளையிலும் ஏற்பட்டிருந்தது.  இதற்குப் பெயர் தான் power of imagination.

ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி மனிதர்கள் அனைவரும் நம்முடைய மூளையின் திறனில் ஆயிரத்தில் ஒரு பங்கு தான் உபயோகிக்கின்றோமாம். ஆனால் இந்த டெக்னாலஜிக்களால் அந்த ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே மூளையை நாம் உபயோகித்துக் கொண்டு இருக்கின்றோம்.

இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நம் வருங்கால சந்ததிகளுக்கு இந்த மாதிரியான டெக்னாலஜிக்கள் இல்லாமல் எப்படி வாழ்வதென்றே தெரியாமல் போய்விட கூடும். அதற்காக எந்த டெக்னாலஜியுமே வேண்டாம் என்று தூக்கி போட்டுவிட்டு 100 வருஷம் பின்னோக்கி சென்றுவிட முடியுமா? நாட்டில் நம்மால் வாழ முடியாது.

சரி டெக்னாலஜியையும் பயன்படுத்த வேண்டும், மூளையும் active ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வது? எவ்வளவோ செய்கிறோம். இதை செய்யமாட்டோமா? இருக்கின்றது. அதற்கும் வழி இருக்கின்றது.

Brain exercises என்று சொல்லப்படுகின்ற மூளை பயிற்சிகளை அவ்வப்போது செய்வதால் நம்முடைய மூளையின் திறன் மங்காமல் நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். அது என்ன Brain exercise? அதில் நிறைய வகைகள் இருக்கின்றன. பல இணையங்களில் குறிப்பிட்டுள்ள ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே பாக்கலாம்.

1.   ஒரு அறைக்குள் நடந்து செல்லுங்கள். அந்த அறையை விட்டு வெளிய வரும்போது அந்த அறைகுள் பார்த்த ஒரு 5 பொருட்களை ஞாபகப்படுத்தி பாருங்கள். உங்களால் ஞாபகப்படுத்த முடியவில்லையா? விட்டுவிடாதீர்கள். இன்னும் இரண்டு நிமிடம் யோசியுங்கள். கண்டிப்பாக உங்களுடைய மூளை அதனை எதாவது ஒரு ஓரத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றாலும் அடுத்த முறை நீங்கள் சொல்லாமலேயே உங்களின் மூளை அதுமாதிரியான விஷயங்களை, அதுவாக பதிவு செய்ய ஆரம்பித்துவிடும்.

2.   புதிதான மொழிகளைக் கற்பதும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதும் ஒரு வகை மூளை பயிற்சிதான்.

3.   ஒரே மாதிரி வேலையை தினமும் செய்யாதீர்கள். ஓருவேளை தினமும் ஒரே மாதிரி வேலையை செய்ய வேண்டியிருந்தால், அதனை வேறு விதமாக செய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்யும் பொழுது, மூளை செல்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை. உதாரணமாக உங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு ஒரே பாதையில் நீண்ட நாளாக போய்வருகின்றீர்கள் என்றால், கொஞ்சம் வேறு பாதையில் முயற்சி செய்து பாருங்கள். (ஆனால் உங்கள் வீட்டுக்குத் தான் போகவேண்டும். வித்யாசமாக முயற்சிக்கிறேன் என்று வேறு யார் வீட்டுக்குள்ளேயும் போய் விடக்கூடாது).

4.   அவ்வப்போது கொஞ்சம் பழைய நினைவுகளை நினைத்துப் பாருங்கள். இரண்டு வருஷம் முன்னால் நீங்கள் சென்று வந்த ஒரு சுற்றுலாவைப் பற்றியோ, அங்கு நடந்த விஷயங்களைப் பற்றியோ யோசித்துப் பாருங்கள். ஞாபக சக்தியை அதிகப் படுத்துவதற்கான பயிற்சி இது.

5.   நீங்கள் சென்று வந்த இடத்தை மட்டுமில்லாமல் உங்களுக்கு பிடித்தமான இடங்களை, நீங்களே கற்பனையில் உருவாக்குங்கள். நீங்களே சொந்தமாக எதாவது கதை எழுதிப்பாருங்கள். உங்களோட கற்பனை திறன் வளர்வதற்கான பயிற்சி இது.

6.   செஸ், சுடோக்கு மாதிரியான மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுக்களை அவ்வப்போது விளையாடுங்கள்.

இவை மட்டும் இல்லை. இன்னும் ஏராளமான brain exercises இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவற்றை முயற்சி செய்து பாருங்கள். எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முயற்சியுங்கள். இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய சொத்தான மூளையை மங்க விடாமல் காத்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களை, நேர்கருத்தோ அல்லது எதிர்கருத்தோ தவறாமல் எங்களுடன் பதிவு செய்யுங்கள்.

Likes(20)Dislikes(1)
Share
Share
Share