admin

Oct 302018
 

இரண்டு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளை ஒரு தராசில் வைத்து நிறுத்து பார்க்கும் அனுபவம் சமீபத்தில் கிடைத்தது. ஒரு தட்டில் பெரும் வெற்றியடைந்த மூன்று தொழிலதிபர்களின் வாழ்க்கை பயணம். இரண்டாவதாக, சிறு வயதிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட எங்கள் உறவுக்கார இளைஞர் ஒருவர்.

தராசின் முதல் தட்டில் மூன்று தொழிலதிபர்கள். முதலாமானவர் தமிழகத்தில் பெரிய ஜவுளிக்கடையை வெற்றிகரமாக இயக்கி வருபவர். இரண்டாம் தொழிலதிபர் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை இயக்கி, சென்னையின் பல மென்பொருள் நிறுவனங்களுக்கு உணவு சப்ளைகளை வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கிறார். மூன்றாவது தொழிலதிபர் கட்டடக்கலையில் முதுகலைப் பெற்ற ஒரு பெண். அவரும், கட்டிடங்கள், பொட்டிக் என இரு தொழில்களை பெரியளவில் வெற்றிகரமாக இயக்கி வருகிறார்.

மூன்று தொழிலதிபர்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணம். செய்யும் தொழில், பிறந்த இடம், வளர்ந்த பின்புலம், வயது என மூவருக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள். ஆனாலும் இந்த மூன்று வெற்றியாளர்களுக்குள்ளும் சில பொதுவான ஒற்றுமைகள் இருந்தன.

அவற்றுள் முதலாமானது, மூவரும் கடுமையாக உழைத்து தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொண்டு வருபவர்கள். அதை தக்க வைப்பதற்கு புதிது புதிதாக எதாவது ஒரு விஷயத்தைக் கற்று வருகிறார்கள். அப்படி கற்றுக்கொள்கையில் தாங்கள் வெற்றி அடைந்த நிலை, வயது போன்றவற்றை அவர்கள் பார்க்கவில்லை. கற்றுக்கொள்கையில், குழந்தைகள் போல் மாறி அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள். பல தோல்விகளை, ஏமாற்றங்களை சிறு வயதிலிருந்து கண்ட இந்த சாதனையாளர்கள், போராடும் குணத்தை பெருமளவில் வளர்த்து உள்ளனர்.

ஒவ்வொரு முயற்சியிலும் அவர்கள் பெற்ற வெற்றி தோல்விகளில் ஏதேனும் ஒரு அனுபவத்தைக் கற்றுக்கொண்டு, அதை அடுத்த முயற்சிகளில் பயன்படுத்த தெரிந்தவர்கள். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் வித்தகர்கள்.

தராசின் இரண்டாவது தட்டில் எங்கள் உறவினர் ஒருவன். 24 வயது இளைஞன். பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில். பிறப்பிலிருந்தே வசதி அதிகம். “இல்லை” என்ற நிலையே கேள்விபட்டதில்லை. எல்லாமே அதிகப்படியாகத் தான் கிடைத்தது. சென்னையில் மருத்துவம் பயில்வதற்கு அவனது பெற்றோர்கள் அவனை நம்மூர் அனுப்பி வைத்தனர். பெற்றோர்கள் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்க, அவன் மட்டும் சென்னையில் அவனது பாட்டியுடன் தங்கி மருத்துவம் பயின்று வந்தான்.

சென்னையில் படிக்கும்போது, அவனை பார்த்துக்கொள்ள ஒரு பாதுகாவலர், ஒரு ஓட்டுனர், ஒரு சமையல்காரர் என 24 மணி நேரமும் மூன்று பணியாட்களை அமர்த்தியிருந்தனர் அவனது பெற்றோர்கள். அவன் அடிக்கடி அமேரிக்கா போவதும், பெற்றோர்கள் அவனை பார்க்க சென்னை வருவதும் கூட உண்டு. இத்தனை இருந்தும், சில தினங்களுக்கு முன், அந்த இளைஞன் தற்கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டான்.

இப்படியான இரு வித்தியாசமான சூழ்நிலைகளை ஒரே தட்டில் வைத்து ஆராயும் போது, பெற்றோர்களாகிய நாம் என்ன கற்க வேண்டும், நம் பிள்ளைகளுக்கு எதை சொல்லிக்கொடுக்க வேண்டும், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் போன்ற புரிதல் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு சொத்து சுகம் சேர்ப்பதில் மட்டும் பெரும் கவனம் கொடுக்கும் பல பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உண்மையாக என்ன தேவை என்பதை புரிந்துக்கொள்வதில்லை. பொருள்களை சேமித்து கொடுக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால், சமாளிக்கும் பக்குவத்தை, மனோபாவத்தை பெரும்பாலும் சொல்லித்தர விட்டுவிடுகின்றனர்.

அதிலும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிறுவயது முதல் எதிலும் தோற்றுவிடக்கூடாது, ஏமாந்துவிடக்கூடாது என்ற உறுதியான எண்ணத்துடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்கையில் அந்த குழந்தைகளுக்கு எத்தகைய துன்பத்தை எதிர்காலத்தில் தர இருகின்றனர் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

“வீழ்வது தோல்வியல்ல, வீழ்ந்த பின் எழ மறுப்பதே தோல்வி. ஒவ்வொரு தோல்வி தரும் பாடமும், அனுபவமும் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்மையான ஆசிரியர்கள். வெற்றிகள் தற்காலிக மகிழ்வை தருகின்றன, ஆனால் தோல்வி மட்டுமே நீண்ட நெடிய பயணத்துக்கு தேவையான எரிபொருளைத் தருகிறது”. இந்த முக்கியமான பாடங்களை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும்.

ஒரு வித்தியாசமான கோணத்தில் வாழ்வை பார்க்கலாம். தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்கள், துயரங்கள், இழப்புகள் தான் வாழ்வில் பெருமளவு வெற்றியடந்தவர்களை செதுக்கியுள்ளன. இதற்கு வரலாற்றில் எண்ணற்ற ஆதாரங்களும் சான்றுகளும் உள்ளன.

தோல்விகளை வெற்றியின் படிக்கற்களாக பார்ப்பவர்கள், வாழ்வை வென்றுவிடுகிறார்கள், தோல்வி பயம் உள்ளவர்கள், முயற்சி செய்யாமல், அந்த படிக்கட்டிலேயே உட்கார்ந்துவிடுகின்றனர்.

உங்கள் குழந்தைகளுக்கு நிறைய முயற்சிகளையும் சவால்களையும் காண்பியுங்கள். நிறைய தோற்கவிடுங்கள். வெற்றியின் தாரக மந்திரத்தை, வாழ்வின் உண்மையான அர்த்தத்தை, லட்சியத்தை அவர்கள் தானாக புரிந்துக்கொள்வர்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(4)Dislikes(0)
Share
Aug 312018
 

 

1990 ஆம் ஆண்டு. புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எலிசபெத் நியுடன் என்ற பெண் முதுகலை பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஒரு எளிமையான ஆனால் வித்தியாசமான விளையாட்டு போட்டியை தனது ஆராய்ச்சிக்காக உபயோகப்படுத்தினார்.

அந்த விளையாட்டில் சில மனிதர்களை கலந்துக்கொள்ள வைத்து, அவர்களை இரண்டு அணிகளாக பிரித்தார். ஒன்று “ஒலி எழுப்புபவர்கள்” குழு, மற்றொன்று அந்த “ஒலியை கேட்பவர்கள்” குழு.

போட்டி இது தான். உலகின் புகழ்பெற்ற 25 பாடல்களை ஒலி எழுப்புபவர்களிடம் கொடுத்து, அவர்களை அதற்கான இசையை, ஒரு மேசையில் தாளமாக தட்டி வாசிக்க வைப்பது (அதாவது மேசையை தட்டி அந்த பாடலுக்கான இசையை எழுப்பவேண்டும். இந்த 25 பாடல்களும் “happy birthday to you” போன்று நாம் மிகவும் பழக்கப்பட்ட, பல முறை கேட்டும் உபயோகப்படுத்தியும் உள்ள பாடல்கள்)

அந்த 25 பாடல்களில் ஒரு பாடலை தேர்ந்தெடுத்து, ஒலி எழுப்புபவர் ஒருவர் மேசையில் வாசிக்க வேண்டும். அதே போல் எதிரணியில் உள்ள ஒருவர்  அது என்ன பாட்டு என யூகித்து சரியாக சொல்ல வேண்டும்.

அவ்வளவு தானே, இது ரொம்ப எளிதாயிற்றே என் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. நடந்ததோ முற்றிலும் வித்தியாசமான செயல். கேட்பவர்களின் வேலை அத்தனை எளிதாக இருக்கவில்லை. சரியான பாடலை கண்டுபிடிப்பது மிகக் கடினமாக இருந்தது.

மொத்தமாக எலிசபெத்தின் சோதனையில் 120 முறை பாடல்கள் வாசிக்கப்பட்டது. கேட்பவர்கள் அணியிலிருந்து வெறும் மூன்று முறை மட்டுமே சரியாக பதில் கிடைத்தது.

முக்கியமாக இந்த உளவியல் சோதனையில் ஒரு விஷயம் தெளிவாக உணரப்பட்டது. எலிசபெத் விளையாட்டின் துவக்கத்தின் போது ஒவ்வொரு ஒலி எழுப்புபவரிடமும் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். “நீங்கள் எழுப்ப இருக்கும் இந்த பாடலின் இசையை, கேட்க இருக்கும் நபர் கண்டுபிடித்து விடுவாரா?” என்பதே அந்த கேள்வி.

ஒலி எழுப்புவர்களும், தாங்கள்  எழுப்பும் இசையை கேட்டு எளிதாக கண்டுபிடித்து விடலாம் என தீர்மானத்துடன் கூறினர். ஆனால் மொத்தமாக 120 பேரில், மூன்று பேர் மட்டுமே சரியாக பாடல்களை கண்டுபிடித்தனர்.

என்ன தான் நடந்தது என அலசி ஆராய்ந்த எலிசபெத், மிக அருமையான ஒரு விஷயத்தைக் கண்டறிந்தார்.

ஒலி எழுப்புபவர்கள், ஒலியை மீட்டும்போது அந்த பாடலுக்கான இசை அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அனால் அந்தப் பாடலுக்கான இசையை கேட்பவர்களுக்கு அவர்களால் சரியாக தெரியபடுத்த முடியவில்லை.

கேட்பவர்கள் அணியில் இருந்த பெரும்பாலான நபர்கள், தங்களுக்கு எதிரணி நபர் வாசித்த தாளமே புரியவில்லை என்றும், ஏதோ சில ஒலிகள் மட்டும் விட்டுவிட்டு கேட்டதாகவும், அது என்ன பாடல் என்று கண்டுபிடிக்கவே இயலவில்லை எனவும் தெரவித்தனர்.

ஒலி எழுப்புபவர்கள் அணியிள் இருந்தவர்களுக்கு அந்த பதில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “எத்தனை எளிதான பாடல்? இதைக் கூட இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே? மிகவும் தெளிவாகத் தானே நாம் வாசித்தோம்” என எண்ணினர்.

நடந்தது இதுதான்.

ஒலி எழுப்புபவர்களுக்கு அது என்ன பாடல் என்று தெரிவதால், அது என்ன என்று தெரியாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாதுதான்.

சுருக்கமாக சொன்னால், நமக்கு ஒரு விஷயம் தெரியும் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த விஷயம் தெரியாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என நமக்கு தெரிவதில்லை. பெரும்பாலும் அதை நம் மனது கற்பனை செய்து பார்ப்பதில்லை.. இதற்கு பெயர் “அறிவின் சாபம்”  என கூறுகிறார் எலிசபெத்.

இதில் இன்னொரு பெரிய சவால் என்னவென்றால், நம் அனுபவத்தையும், அறிவையும் அடுத்தவர்களுக்கு புரியுமாறு பகிர்வது.

மனிதர்களுக்கு வாழ்வில் அன்றாடம் வீட்டில், அலுவலகத்தில், சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கும், இடைவெளிகளுக்கும், புரிதளின்மைகளுக்கும் இந்த “அறிவின் சாபம்” ஒரு முக்கிய காரணமாகிறது.

அலுவலகத்திலும், வீடுகளிலும் இதை நாம் பல முறை பார்த்திருப்போம்.

“இது ஒரு சுலபமான வேலை தானே, இதை செய்வது மிக எளிதாயிற்றே” என வேலை வாங்குபவர்கள் எளிதாக யூகித்துக் கொள்கின்றனர். அனால் அந்த வேலையை செய்பவர்களுக்கு அந்த வேலை சுத்தமாக தெரியவில்லை, வேலை வாங்குபவர் கூறியது சுத்தமாக புரியவில்லை என்றால் என்ன நடக்கும்? கண்டிப்பாக அந்த வேலை முடியாமல் தானே போகும்?

ஒரு விஷயத்தில் நம் புரிதல் இங்கு அவசியம் ஆகிறது.

நாம் ஒரு பொறுப்பை, ஒரு வேலையை மற்றவரிடம் ஒப்படைக்கும் போது, அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என நமக்குத் தெரிந்தால் மட்டும் போதாது. அது செய்பவர்களுக்கும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

பொறுப்பை ஒப்படைப்பவருக்கு எந்தளவிற்கு அறிவும் அனுபவமும் உள்ளதோ, அதே அளவு அந்த வேலையை செய்பவர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஒருவர் சொல்வது, கேட்பவருக்கு புரியவில்லை எனில் அது சொல்பவர் பிரச்சினை தான் தவிர, கேட்பவர் பிரச்சினை அல்ல. கேட்பவருக்கு புரியுமாறு கூறுவது தான் உண்மையான உரையாடலின் வெற்றி.

நமக்கு ஒன்று தெரிந்தால் மட்டும் போதாது, அதை கேட்பவர்க்கு சரியாக புரியவைக்கவும் தெரிய வேண்டும். இது வீடு, அலுவலகம், சமூகம், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். இந்த உண்மையை சரியாக புரிந்துக் கொள்பவர்கள், வெற்றிப் பெறுகிறார்கள்.

புரிந்துக் கொள்வோம். புரிய வைப்போம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(5)Dislikes(0)
Share
Jul 242018
 

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் திரு.ஷிவ் கேரா உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். படிப்பில் பெரியளவில் இல்லையென்றாலும் தனது விற்பனை, வியாபாரம் மற்றும் பேச்சுத்திறமை மூலம் உயர்ந்த இடத்தை அடைந்தவர் இவர். இவரின் “You can win” புத்தகம் நிறைய பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் சென்ற அவரது பேச்சின் முடிவில் ஒரு கதையை கூறினார். அந்தக் கதையை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். (கதை என்பதால் லாஜிக் இல்லை)

இந்தக் கதையில் நீங்கள் தான் முக்கிய கதாப்பாத்திரம். ஒரு நாள், ஒரு விமானியுடன், ஒற்றை பயணியாக, விமானத்தில் பயணம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். திடிரென்று விமானத்தின் இஞ்சின் பழுதடைந்துவிடவே, விமானம் ஆகாயத்தில் தடுமாறுகிறது. எந்த நேரத்திலும் விமானம் விபத்துக்குள்ளாகும் நிலைமை வருகிறது. அப்போது விமானி உங்களிடம், பாராஷூட் ஒன்றை கொடுத்து, தப்பி விடுமாறு உதவுகிறார்.

நீங்களும் பாராஷூட்டை எடுத்துக்கொண்டு வானிலிருந்து குதித்து விடுகின்றீர்கள். ஆனால் சோதனையாக அந்த பாராஷூட்டோ உங்களை ஒரு அடர்த்தியான காட்டிற்குள் எடுத்துச் சென்று இறக்கிவிடுகிறது. காட்டின் எல்லாப்புறமும் ஒரே மாதிரி இருக்கின்றது. காட்டின் எந்தப் புறம் ஓடினால் தப்பிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியவில்லை.

சில நொடிகள் சுற்றிமுற்றி பார்க்கின்றீர்கள். அப்போது ஒரு பலகையில் காட்டின் இரு விதிகள் எழுதப் பட்டிருக்கிறது.

முதல் விதி, மனிதர்கள் எவரேனும் தவறுதலாக காட்டிற்குள் நுழைந்து விட்டால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டின் மிகக் கொடிய விலங்குகள் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு மோப்பம் பிடித்து வந்து சேரும். எனவே ஒரு மணி நேரத்திற்குள் அந்த காட்டை விட்டு நீங்கள் தப்பித்தாக வேண்டும்.

இரண்டாவது, கிழக்கு பக்கமாக சென்றால் மட்டும் தான் அந்தக் காட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.

மீண்டும் ஒருமுறை சுற்றிலும் பார்க்கின்றீர்கள். கிழக்கு திசை எங்கு இருக்கிறது என்று   தெரியவில்லை. என்ன செய்வது என்று ஒரு யோசனையும் வரவில்லை. காட்டு விலங்குகளின் பசிக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் வேறு ஒரு பக்கம்.

அப்போது அந்த இடத்தில் திடிரென்று ஒரு தேவதை உங்கள் முன் தோன்றுகிறது. உங்களின் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு, உங்களிடம் இரு பொருள்களை நீட்டுகிறது.

ஒன்று மணிப் பார்க்கும் கடிகாரம். அதன் மூலம் உங்களுக்கு இன்னும் எவ்வளவு நேரம் தப்பிக்க இருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதை வைத்துக் கொண்டு திசையை கண்டுபிடிக்க இயலாது.

மற்றொன்று திசைக் காட்டும் கருவி. இந்தக் கருவி மூலம் உங்களுக்குத் தப்பிச் செல்லக்கூடிய திசை தெரியும். ஆனால் நீங்கள் தப்பிக்க எவ்வளவு நேரம் மீதம் உள்ளது என்று தெரியாது.

தேவதை, உங்களிடம் இந்த இரு பொருள்களையும் காண்பித்து, “நான் உனக்கு உதவ முடியும். ஆனால் இந்த இருப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் நீ எடுத்துக் கொள்ள முடியும். உனக்கு எது வேண்டும்?” என்று கேட்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எந்தப் பொருளை தேர்வு செய்வீர்கள்? எது உங்களுக்கு மிக முக்கியமானதாக தோன்றும்?

திசையா, நேரமா?

வேகமா, வழியா?

ஆம், உங்கள் யூகமும் பதிலும் சரிதான். திசைகாட்டும் கருவிதான் உங்களுக்கு அதிக தேவையாக இருக்கும்.

இந்தக் கதைக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் இதே நிலை தான்.  பல பிரச்சினைகள் நமக்கு வரும்போதும், சரியான திசையில் செல்லக்கூடிய முடிவே பெரிய வெற்றியை பெற்றுத் தருகிறது.

ஒருவர் எவ்வளவு தான் திறமைகள் கொண்டவராய் இருப்பினும், வேகமாக செயல்படக் கூடியவராய் இருப்பினும், சரியான வழியில் செல்லத் தெரியவில்லை என்றால், அவர் இலக்கை அடைவது இயலாதக் காரியமே.

வெற்றிக்கு வேகமாக ஓடுவதை காட்டிலும், சரியான திசையில் ஓடுவது முக்கியமான காரணமாக இருக்கிறது.

எனவே உங்கள் திசையை, வழியை சரியாகத் தீர்மானியுங்கள். பயணம் வெற்றிபெறட்டும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

 

Likes(16)Dislikes(0)
Share
Jun 292018
 

நம் கதாநாயகி 1915 ஆம் ஆண்டு, கியூபாவின் ஹவானாவில் பிறந்தவர். ஓவியம் என்றால் பெரும் ஈடுபாடு அவருக்கு. எட்டு வயதிற்குள் ஒரு பேராசிரியரிடம் ஓவியப் பாடங்களைப் கற்றார். பள்ளிக்குப் பிறகு, கட்டிடக்கலை பாடத்தில் சேர்ந்தது, அவரது ஓவியத்தை மேலும் மெருகேற்றியது.

1939-ல், ஒரு ஆங்கில ஆசிரியரை திருமணம் செய்து, நியூயார்க்கிற்கு குடிப்பெயர்ந்தார். 1943 முதல் 1947 வரை நியூயார்க்கில் பிரபலமான கலைக் கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தும், தனது படங்களை சேகரித்துக் கொண்டேயும் இருந்தார். படங்களின் எண்ணிக்கை தான் கூடியதே தவிர அவருக்கு உரிய அங்கீகாரமோ, வெற்றியோ என்றுமே கிட்டவில்லை. தனது படைப்புகளை பல கண்காட்சிகளில் சமர்ப்பித்து வந்தார், ஆனால் உலகம் அவரை என்றுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

பிறகு 1948 ஆம் ஆண்டில், கலைக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ள பாரிஸ் நகரத்திற்கு சென்று குடியேறினார். பிரபலமான கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பும் அவர்களிடமிருந்து மேலும் சில நுணுக்கங்களை கற்கவும் முடிந்தது. அவரது கலைத் திறனில் மேலும் சில முன்னேற்றம் இருந்தது. ஆனாலும் அவருக்குத் தேவைப்பட்ட சிறு அங்கீகாரம் கூட கிடைக்காத சூழ்நிலையே தொடர்ந்தது.

1950 ஆம் ஆண்டில், ஹவானாவில், தனது அத்தனை படங்களையும் சேர்த்து ஒரு கண்காட்சி செய்து முயற்சித்தார், ஆனால் இம்முறையும் மக்கள் அவருடைய படைப்புகளுக்கும் உழைப்பிற்கும் மதிப்பளிக்கவில்லை. மீண்டும் தோல்வியடைந்தார்.

அவரது திறமையையும் விடாமுயற்சியையும் கண்டு, என்றாவது ஒரு நாள் அவர் பிரபலமாகிவிடுவார் என்று நம்பிக்கை வைத்து அவருடைய கணவரும், அவருக்கு பெரிதும் உதவினார். ஆனால் பொருளாதாரச் சுமை அவர்களை துரத்தியது. எனவே 1953 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தை விட்டுத் திரும்பவும் நியூயார்க்கிற்கு செல்ல வேண்டியிருந்தது.

நியூயார்க்கிற்குத் திரும்பியபின்னும், அவர் தொடர்ந்து வரைந்துக் கொண்டே இருந்தார். தனது படங்களில் நிறைய பரிசோதனைகளும், புது முயற்சிகளும் செய்தார்.

என்ன தவறு நடக்கிறது என்று தீவிரமாக யோசிக்கையில், ஒரு உண்மை விளங்கியது. ஓவியக்கலை உலகில் அப்போது ஆண் ஆதிக்கம் நிரம்பியிருந்தது. போட்டிகளுக்கு இடையில் எவ்வாறு வேலை செய்வது அல்லது போட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஆண்கள் நன்றாக அறிந்திருந்தனர். இந்த காரணம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க ஒரு பெரிய சவாலாக இருந்தது.

1965 ஆம் ஆண்டில் அவர் 50 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது இன்னொரு சிக்கலையும் சந்தித்தார். பழைய கலைஞர்களை அறிமுகப்படுத்துவதை தவிர்த்து, புதியவர்களை சேர்க்குமாறு கண்காட்சிகளில் அதிகாரப்பூர்வமற்ற விதி வந்திருந்தது. இதனால் ஒவ்வொரு வருடமும் அவரது வாய்ப்புகள் குறைந்து கொண்டே இருந்தன.

ஆனாலும்… அவர் தடுமாறவில்லை. ஓவியத்தைத் தொடர்ந்தார், உலகமும் அவரை தொடர்ந்து அவமதித்தது.

புகழ்பெற்ற அரங்கங்களில் தனது கலையை காண்பிப்பதற்கு ஒரு வாய்ப்பைப் பெற முடியவில்லை என்றாலும், சின்னஞ்சிறு தனி நிகழ்ச்சிகளில் கடினமாக முயற்சித்தார், ஆனால் வெற்றி அவரை நெருங்கவே இல்லை. இருப்பினும், அவரது கணவர் தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவளித்து, மேலும் உழைக்கும்படி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது வேலையை பாராட்ட அல்லது விமர்சிக்க யாரும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து வரைவார். “எப்படியும் யாரும் நமது கலையை கண்டுக்கொள்ளப் போவதில்லை.. பின் எதற்காக உலகத்திற்கு ஏற்றமாதிரி வரைய வேண்டும், தன் இஷ்டம் போல் வரையலாமே?” என எண்ணி பல புது முயற்சிகளை, சோதனைகளை செய்து பார்த்தார். அதற்கான சுதந்திரம் அவரிடம் இருந்தது. அவருடைய ஆர்வம் மற்றும் நோக்கம் மட்டுமே தொடர்ந்து அவரை பணியாற்ற வைத்தது.

1970 கள், 1980 கள் மற்றும் 1990 களில் தொடர்ந்து வரைந்தார். அவருடைய ஓவியங்களிலிருந்து பணத்தையோ பெயரையோ சம்பாதிக்கவில்லை. வயது அதிகரித்துக் கொண்டே இருந்தது ஆனால் அவர் மனவலிமை மற்றும் குறைந்துபோகவில்லை.

அவரது ஓவியங்களை அவர் மட்டுமே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.

வரைவதும் பார்வையாளரும் அவர் மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஓவியம் வரைந்து அவற்றை பராமரித்து வைப்பது கடினமாக இருந்தது. பொருளாதார நெருக்கடி வேறு. சில படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்துப்போக ஆரம்பித்தது.

1998 ஆம் ஆண்டில், 83 வயதை எட்டினார்.

அப்போது தான் அத்தனை வருட உழைப்பிற்கு முதன் முதலில் ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்தது. ஒரு பத்திரிகை அவரைப் பற்றியும் அவரது படங்களைப் பற்றியும் சிறு தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆனால் அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. 2000 ஆம் ஆண்டில் அவரது கணவர் இறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த துணையை இழந்ததில் மிகவும் இடிந்து விடுகிறார்.

“ஒரு நாள் நீ இந்த உலகில் மதிக்கப்படுவாய்” என்று அடிக்கடி நம்பிக்கை கொடுத்து, வாழ்க்கையில் பெரும் உந்துசக்தியாக இருந்தார் அவர் கணவர். கணவரின் நம்பிக்கை பொய்க்க கூடாது என மீண்டும் வரையத் துவங்குகிறார்.

கணவரின் மரணத்திற்குப் பின்னரும், ஒவ்வொரு காலையும் எழுந்து தொடர்ந்து வரைந்தார். உடலில் மூட்டுகள் பாதிப்படைந்த போதிலும், அவர் மனம் உறுதியுடனே இருந்தது.

2000 ஆம் ஆண்டில், 85 வயதை எட்டி இருந்தார். வேறு எவரையும்விட கலை உலகில் பல நிராகரிப்புகளை கண்டிருந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய பணமோ, புகழோ, அங்கீகாரமோ பல வருடங்கள் ஆகியும் கிடைக்காமலே இருந்தன.

பொதுவாக மற்றவர்கள் வாழ்வில் இது போல் நடந்து இருந்தால், தம் திறமை சரியில்லை, அல்லது நேரம் சரியில்லை என ஏதாவது காரணம் கூறி வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருப்பர். ஆனால் நம் கதாநாயகி அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை. அவர் எளிதாக வெறுப்படைந்து இருக்கலாம், சோகமோ, கோபமோ அடைந்து இந்த உலகத்தை திட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் இதை எதுவும் செய்யாமல் வரைந்துக்கொண்டே இருந்தார்.

விதி பணிந்தது.. வெற்றி கதவை தட்டுகிறது..

2004 ஆம் ஆண்டில், அவரது நெருங்கிய நண்பர், மன்ஹாட்டன் நகரத்தில் உள்ள லத்தீன் கலெக்டர் கேலரி உரிமையாளரான ஃபிரடெரிகோ சேவியுடன் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்த இரவு அவரது வாழ்வில் ஒரு பெரும் விடியலை கொண்டு வந்தது.

மூன்று பெண் ஓவியர்கள் இடம்பெற வேண்டுமென திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியை சேவி ஏற்பாடு செய்திருந்தார். அதிர்ஷ்டவசமாக ஒரு பெண் ஓவியர் கலந்துக் கொள்ள முடியாமல் போகவே, அவருக்கு மாற்றாக ஒருவரை சேவி தேடிக்கொண்டிருந்தார்.

நண்பர் நம் கதாநாயகி பெயரை பரிந்துரைத்து, அவரது படைப்புகளில் சில மாதிரிகளை காண்பித்தார். சேவி அவரது ஓவியங்கள் பார்த்த போது, பிரமித்து விடுகிறார். அவரது மற்ற ஓவியங்களையும் சேகரித்து, கண்காட்சியில் வெளியிடுகிறார்.

கண்காட்சி மிகப்பெரிய வெற்றி அடைகிறது. இறுதியாக, 85 வயதிற்கு மேல் நம் நாயகியின் கதவை வெற்றி தட்ட ஆரம்பிக்கிறது.

அதற்கு பின் நடந்த சம்பவங்கள் நம்பமுடியாததாக இருந்தன. பல பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் நம் நாயகியை பிரசுரித்தனர். “89 வயதில் இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு” என பாராட்டி தள்ளினர். குறுகிய காலத்தில், நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது.

அவரது ஓவியங்களின் விற்பனை தொடங்கியது. கோடிகணக்காண பணத்திற்கு அவரது படங்களை வாங்கினர் ஓவிய ஆர்வலர்கள். மாபெரும் செல்வந்தராக ஆனார். கணவன் தன் வெற்றியைப் பார்த்து இருந்திருக்கலாமே என்று விரும்பினார். பின்னர், அவரது ஒவ்வொரு படைப்புகளும், சிறந்த கலைஞர்களின் பல புகழ் பெற்ற அருங்காட்சியகங்களில் வைக்கப்படுகின்றன.

அத்தனை பெரும் சாதனை புரிந்த அந்த பெண்மணியின் பெயர் ‘கார்மென் ஹெர்ரெரா’.

இத்தனை வெற்றிக்குப் பின்னரும் கூட, ஒவ்வொரு நாளும் எழுந்து ஒரு உதவியாளரின் உதவியுடன் வண்ணம் தீட்டுகிறார் ஹெர்ரெரா. அவர் 101 வயதை வரை வரைந்தார். இப்போது அவருக்கு 102 வயது ஆகிவிட்டது.

இந்த மாபெரும் சரித்திரம் நமக்கு சில பாடங்களை விட்டுச் செல்கிறது.

தம் மீது ஏதோ பிரச்சினை உள்ளது என தவறாக எண்ணி எத்தனையோ மனிதர்கள் வெற்றியை நெருங்கும் நேரத்தில் தங்களது முயற்சியை விட்டுச்சென்றுள்ளார்கள். அவை பெரும்பாலும் சூழ்நிலை சரியாக அமையாததே காரணமாய் இருக்கும் என்பது பலருக்கு புரிவதில்லை.

தோல்வி என்பது தள்ளிப்போகும் வெற்றி என்பதை நாம் ஆழமாக உணர வேண்டியுள்ளது.

அதனால் எதையும் நம் பிரச்சினை என எண்ணி போட்டியிலிருந்து விலகிவிடாதீர்கள். நீங்கள் விரும்பும் வேலையை ரசித்து செய்யுங்கள். பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், பிடித்த வேலையில் தம்மை முழுமையாக அர்பணித்து ரசித்து செய்கையில், சாதாரண மனிதனும் ஒருநாள் சாதனையாளர் ஆகிறார்.

பயணம் தொடரும்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(நன்றி: கார்மென் ஹெர்ரெராவின் கதையை ஆங்கிலத்தில் எழுதிய நண்பர் ஷா முஹமது அவர்களுக்கு)

Likes(4)Dislikes(0)
Share
May 182018
 

1-cuGQFeKbVTDX_tyj4UGuOQ

1938 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம்.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கரோலி டக்காக்ஸ் (Károly Takács), தன் நாட்டின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் எனப் பெயர் பெற்றிருந்தார். ராணுவத்தில் சர்ஜன்ட்டாக பணிப்புரிந்த அவரிடம் “உலகத்தின் தலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக ஒருநாள் ஆக வேண்டும்” என்பது மட்டுமே ஒரே ஒரு கனவாக இருந்தது.

பல வருடங்கள் இந்த இலக்கிற்காக உழைத்ததினால், கிட்டத்தட்ட அந்த இலக்கை அடைந்துவிடும் தூரத்தில் இருந்தார். அடுத்து நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இவர் தான் தங்கம் வெல்வார் என அனைவரும் நம்பினர்.

ஆனால் 1938 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ பயிற்சியில் அந்த துயர சம்பவம் நடந்தது. எந்த கையை எப்போதும் பார்த்து, ஒருநாள் உலகப்புகழ் அடையப்போகிறது என்று பெருமைப் பட்டுக்கொண்டே இருந்தாரோ, அந்த கையில் தவறுதலாக வீசிய கைக்குண்டு ஒன்று வெடித்துவிடுகிறது. அந்த சம்பவத்தில், இத்தனை வருடமாக பயிற்சி செய்து வந்த கையை இழந்து விடுகிறார். கை போய்விட்டது, அதனோடு சேர்ந்து அவர் கண்ட கனவும்.

அந்த சமயத்தில் அவரிடம் இரண்டே வழிகள் இருந்தன.

ஒன்று – கனவு கலைந்துவிட்டதே என வருந்தி, மீதமுள்ள மொத்த வாழ்க்கையையும் தொலைத்து, எங்காவது போய் ஒளிந்துக்கொள்வது.

மற்றொன்று – ஒரு கை போனால் என்ன, நம்பிக்கை இருக்கிறது என மீண்டும் தன் கனவைப் பற்றிக்கொள்வது.

கரோலி கடினமான இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தார். தான் எதை இழந்தோம், தன்னிடம் எது இல்லை என்பதை மறந்து, கனவை மீண்டும் நினைவாக்க தன்னிடம் என்ன இருக்கிறது என்று யோசிக்கிறார்.

தனது இடது கையை முதன் முதலாக வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்.

இதுவரை எழுதக் கூட பயன் படுத்தாத தன் இடது கையால், முயற்சி செய்ய ஆரம்பிக்கிறார். நாட்டில் யாருக்கும் தெரியாமல், ஒரு வருடம் கடுமையாக பயிற்சி செய்கிறார்.

1939 ஆம் ஆண்டு, ஹங்கேரியில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. நாட்டின் பல வீரர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டிக்குச் சென்று அவர்களை வணங்கி வாழ்த்து சொல்கிறார் கரோலி.

“என்ன ஒரு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்! இந்த நிலையிலும் தங்களை வாழ்த்த, உற்சாகப்படுத்த வந்துள்ளாரே” என மற்ற வீரர்கள் வியக்க, கரோலியோ, “நான் உங்களை வாழ்த்த வரவில்லை, வீழ்த்த வந்துள்ளேன்” என கர்ஜிக்கிறார்.

போட்டிகள் தொடங்குகின்றன. அங்குள்ள மற்ற வீரர்கள் தங்களிடம் இருக்கும் இரு கைகளுள் சிறந்த கையை பயன்படுத்தி போட்டிப்போட, கரோலியோ தன்னிடம் உள்ள ஒரே கையால் போட்டிப்போடுகிறார்.

கடைசியில் ஒரே கையுள்ள கரோலி, தான் கூறியது போலவே வென்றுவிடுகிறார்.

ஆனால் அவர் அந்த போட்டியுடன் நின்று விடவில்லை. அவரது இலக்கு ஹங்கேரியின் தலை சிறந்த வீரனாவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் சிறந்த வீரர் ஆவதாக இருந்தது.

அந்த இலக்கிற்காக 1940 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நோக்கி பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார் கரோலி. அனால் உலகப்போரினால் அந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்தாகின்றன.

அதை அடுத்து, 1944 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம் என முயற்சிக்கிறார். அந்த போட்டிகளில் தங்கம் வெல்லலாம் என முழு கவனம் செலுத்துகிறார். ஆனால் அந்த முயற்சிகளும் வீணாகின்றன. உலகப்போரினால் 1944 ஆம் ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளும் ரத்தாகின்றன.

கரோலி சற்றும் மனம் தளராமல், 1948 ஆம் ஆண்டு நடக்க இருக்கும், அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ளலாம் என மீண்டும் பயிற்சி செய்கிறார். அனால் வேறு சில சவால்கள் இம்முறை வந்தன. அவருக்கு 38 வயது ஆகியிருந்தது. அவருக்கு  போட்டியாக வேகமும் வீரமும் நிறைந்த பல சிறிய வயது இளைஞர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

இம்முறை வயது அவருக்கு தடையாக, கடினமாக இருக்கும் என பலர் நினைத்தனர். ஆனால் கடினம் என்ற வார்த்தையே அவரது அகராதியில் இல்லாமல் இருந்தது.

உலகத்தின் ஒட்டுமொத்த தலை சிறந்த வீரர்களும் தங்களது இரு கைகளுள் சிறந்த கைகளால் போட்டியில் சுட, கரோலி மட்டும் தனது ஒரே கையால் சுடுகிறார்.

அவரது கடும் நம்பிக்கைக்கு விதி வழி விடுகிறது. வெற்றிக்கனியை பறிக்கிறார்.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று, உலகத்தின்  தலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெயர் பெறுகிறார். வெற்றிப் பெற கைகளோ, உடலோ முக்கியமல்ல, உள்ளமும், நம்பிக்கையும் தான் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. 1952 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் கலந்து, தனது  42 ஆம் வயதில் மீண்டுமொரு தங்கம் வென்று, பல சாதனைகளை முறியடிக்கிறார்.

25 மீட்டர் ரேபிட் பயர் (Rapid Fire) துப்பாக்கி சுடும் போட்டியில் தொடர்ந்து இரு முறை தங்கப்பதக்கம் வென்ற ஒரே மனிதர் என்ற சாதனையை அடைகிறார்.

தோல்வியாளர்கள், இலக்கில் வெற்றிப் பெற முடியாமல் போவதற்கு பல காரணங்கள் கூறுவர். தங்களை தோற்கடிக்க கூடிய, அதே காரணங்கள் வெற்றியாளர்களிடமும் இருக்கும், ஆனால் அந்த காரணங்களையும் தாண்டி, வென்றே ஆவதற்கு ஒரு பலமான சக்தியுள்ள காரணம் வெற்றியாளர்களிடம் இருக்கும். அதுதான் இருவருக்கும் உள்ள சிறு வித்தியாசமாக இருக்கிறது.

தன்னிடம் என்ன இல்லை, தான் என்னவெல்லாம் இழந்துள்ளோம் என்பதையே நினைப்பவர்கள் தோர்த்து விடுகின்றனர். ஆனால் தன்னிடம் இருப்பது என்ன, அதை எவ்வாறு சிறந்த முறையில் பயன் படுத்தலாம் என சிந்திப்பவர்கள் சாதித்து விடுகின்றனர்.

அதனால் நண்பர்களே, உங்களிடம் இருப்பவைகளை மட்டும் நேசியுங்கள், சரியாக கவனியுங்கள், சிறப்பாக பயன்படுத்துங்கள், உலகமே உங்களிடம் இருக்கும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

Likes(11)Dislikes(0)
Share
Mar 302018
 

maslows-Tamil

மாஸ்லோவின் பிரமிடு பற்றி எனது மாணவர்களிடம் சமீபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தேன். அதை தெரிந்துக்கொண்டவர்களிடம் ஒரு பெரிய உற்சாகம். மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.

அவர்களது வரவேற்பை கண்டவுடன், இதைப் பற்றி நம் B+ தளத்திலும் எழுதலாம் என்று தோன்றவே இந்த இதழில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

மாஸ்லோவின் பிரமிட்டில், (படத்தில் உள்ளது போல்) ஐந்து வெவ்வேறு கட்டங்கள் அடுக்கி வைக்கபட்டிருக்கும். மனிதனுக்கு வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான பொருள்கள், உணர்வுகள், மனநிலைகள் என அனைத்தும் அந்த ஐந்து கட்டங்களில் இருக்கும்.

தனது ஒவ்வொரு தேவைகளை முடித்து, கீழிருந்து மேலாக ஒவ்வொரு கட்டத்திற்கும், தாவிக் கொண்டே மனிதன் இருக்க விரும்புகிறான்.

முதல் கட்டம் – உடல் சம்பந்தப்பட்டது. இதில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், நீர், காற்று, உடல் உறவு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டம் – பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இதில் பாதுகாப்பு, வேலை, சொத்து, சேமிப்பு, உடல் ஆரோக்கியம் ஆகியன இருக்கிறது.

மூன்றாம் கட்டம் – அன்பு சம்பந்தப்பட்டது. இந்தக் கட்டத்தில் நட்பு, பாசம், குடும்பம், உறவுகள், சமூகம் ஆகியவை அடங்கும்.

நான்காம் கட்டம் – மரியாதை சம்பந்தப்பட்டது. இங்கு மதிப்பு, அந்தஸ்து, அங்கீகாரம், வலிமை, சாதனைகள், சுதந்திரம் ஆகியன உள்ளன.

ஐந்தாம் கட்டம் – தன்னை அறிதல் பற்றி சம்பந்தப்பட்டது. இதில் நாம் ஏன் பிறக்கிறோம், ஏன் பிறந்தோம், இந்த பிறவியின் லட்சியம் என்ன போன்றவற்றை அறிந்து உணரும் மனநிலை உள்ளது.

இந்த ஐந்து கட்டங்கள் தான் மாஸ்லோவின் பிரமிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மனிதனும் இந்த கட்டங்களின் மூலம், தன் வாழ்வில் இப்போது எந்த கட்டத்தில் இருக்கிறோம், எந்த மனநிலையில் இருக்கிறோம், நமக்கு முக்கிய தேவையாக எது இப்போது இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக, கீழிருக்கும் முதல் மூன்று கட்டங்களில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதில்,  நிறைய மனிதர்களின் வாழ்க்கை பயணம் நின்றுவிடுகிறது.

ஒரே மாதிரியான வாழ்க்கை முறை அமைத்துக்கொள்ளாமல் சற்று ரிஸ்க் எடுத்து சாதித்து, வித்தியாசமான வாழ்க்கை முறையை தேடுவதை பலர் விரும்புவதில்லை.

தான் பிறந்தது எதற்கு, தன்னால் அதிகபட்சமாக செய்யக்கூடிய செயல்கள் என்ன என்று தெரிந்துக்கொள்ளும் மனநிலையை அவர்கள் எட்டிப்பார்பதில்லை. இருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை விட்டு, தங்களால் அத்தகைய கடினமான செயல்களை செய்ய முடியாது என இருந்துவிடுகின்றனர்.

ஆனால் அத்தகைய சாதாரண வாழ்க்கை வட்டத்தை தாண்டி, அடுத்த கட்டங்களைத் தேடி கடினமான இலக்குடன் பயணித்து வெற்றிப் பெறுபவர்களையே சரித்திர நாயகர்களாக இவ்வுலகம் கொண்டாடுகிறது.

அதனால் “வாழ்வில் பணம் வருகிறது, அடிப்படைத் தேவைகள் இருக்கிறது, என் தேவைகள் பூர்த்தி ஆகிவிட்டன” என இருக்கும் சில மனிதர்கள் தங்களது சுயநலக் கூட்டை விட்டு சற்று வெளியே வரவேண்டும்.

நான்காம் ஐந்தாம் கட்டங்களை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மனிதானாலும் இது கண்டிப்பாக முடியும்.

சரி, எவ்வாறு அடுத்தக் கட்டங்களுக்குச் செல்வது?

மிக எளிது..

உங்களது வாழ்வை அர்த்தமுள்ளதாக, அடுத்தவர்களுக்கு உபயோகமுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்த பூமியில் பிறந்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்வில் வித்தியாசத்தை, ஏற்றத்தை, மாற்றத்தை எப்படி ஏற்படுத்தலாம் என கற்றுக்கொள்ளுங்கள்.

“நீ இந்த உலகிற்கு வந்துள்ளதால், உனக்குப் பின் ஒரு முத்திரையை, தடயத்தை விட்டுச் செல். இல்லையேல் உனக்கும், கற்களுக்கும், மரங்களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை” என சுவாமி விவேகானந்தரும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தறிவுள்ள மரங்கள், பறவைகள் கூட பல விதங்களில் சுற்றுப்புறத்திற்கும், மனிதர்களுக்கும் உதவி செய்து விட்டுத்தான் மடிகின்றன. ஆறறிவு உள்ள நாமோ அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

“நீ உனக்காக தேடி வைப்பது, நீ மறைந்தபின் உனக்கு சொந்தமாகாது, அனால்

நீ பிறருக்காக தேடி வைப்பது, நிலையான மதிப்புள்ள புகழை உனக்குத் தேடி தருகிறது”.

என்ற கூற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்றே உங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். எனது வீடு, எனது வாழ்க்கை என குறுகிய வட்டத்தில் இருந்துவிடாமல், மற்றவர்கள் வாழ்வில் சிறிதேனும் பாசிடிவான தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.

பேரின்பத்தை தேடுங்கள். நான்காம் ஐந்தாம் நிலைக்கு ஏற்றம் பெறுங்கள்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(9)Dislikes(0)
Share
Feb 282018
 

651452-priya-prakash-varrier

மது மரணம், மதுவால் மரணம், மஜ்ஜைக்காக மரணம், மழழைகள் மரணம் !!

கடந்த ஐந்து நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த செய்திகள் தான் பெருமளவு விவாதிக்கப்பட்டு, அதிகளவில் பகிரப் பட்டும் வந்துள்ளது.

கேரளாவில் மது என்ற இளைஞர் பசியினால் அரிசி திருடியதாக, அங்குள்ள மக்கள் அவரை அடித்தே கொலை செய்தனர் என்ற ஒரு செய்தி;

அடுத்து, நடிகை ஸ்ரீதேவி துபாயில் மது அருந்தியப் பின், குளியல் தொட்டியில் குளிக்கும் போது மரணமடைந்தார் என்ற செய்தி;

மூன்றாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ட.ஜோசப் முதியவர்கள் இல்லத்தில் எலும்பு மஜ்ஜைக்காக 1560 முதியவர்கள் கொலை என்ற செய்தி;

அடுத்து சிரியாவில் குழந்தைகள் கொத்து கொத்தாக கொலை என்ற செய்தி.

இந்த நான்கு செய்திகளில் எந்த செய்தி, எத்தனை தூரம் உண்மை என்பது யாருக்கு தெரியும்? இந்த செய்தியை பகிர்ந்தவர்கள், ஏன் பகிர்கிறோம், இதை பகிர்வதால் யாருக்கு என்ன பயன், யாருக்கு என்ன தீமை என்பதை எல்லாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. கண்மூடித்தனமாக பல நேரங்களில் பல விஷயங்களை பகிர்ந்து விடப்படுகின்றன.

மக்களின் இந்த மனநிலை தான் சமூக வலைதள மற்றும் தகவல் தொழில் நிறுவனங்களுக்கு தேவை. இந்தியாவும் இங்குள்ள மக்களும், மக்களின் உணர்ச்சியும் வேகமும் ஒரு மாபெரும் சந்தை.

இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடிக்கும் அதிகமான மக்கள் இணையத்தை உபயோகிக்கின்றனர். சுமார் 30 கோடி ஸ்மார்ட் போன்கள் இங்கு உள்ளன. முகநூலில் 24 கோடிக்கும் அதிகமான அக்கவுண்டுகள் உள்ளன. வாட்ஸாப்பை 20 கோடிக்கும் அதிகமான மக்கள் உபயோகிக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நம்மூரில், மீம்ஸ் தயாரிப்பது, பொய்யான செய்திகள் உருவாக்குவது, ஹாஷ்டக் போடுவது, போட்டோக்களை, விடியோக்களை வைரல் ஆக்கி தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆக்கிவிடுவது போன்றவற்றை செய்வதற்கென்றே சில நிறுவனங்களும் ஆட்களும் பணியில் உள்ளனர்.

உழைப்பே இல்லாமல், ஏதாவது வித்தியாசமாக செய்து ஓவர்நைட்டில் உலகப் புகழ் அடைய வேண்டும் என்ற பைத்தியக்கார ஆசை சிலரிடம் பரவி வருவதை காண முடிகிறது.

சமீபத்திய ஜிமிக்கி கம்மலும், பிரியா பிரகாஷ் வாரியார் என்ற பெண்ணின் கண்ணடிப்பும் எத்தனை பெரிய விவாதங்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியன  என்பதும், இவைகளுக்கு இத்தனை கவனமும் முக்கியத்துவமும் தேவையா எனவும் யோசிக்க வைக்கிறது.

சில நேரங்களில் இது போன்ற சில்லரை விஷயங்களுக்கு நாம் தரும் தேவையற்ற முக்கியத்துவம், ஒரு தவறான முன்னுதாரணமாய் அந்த பெண்ணின் வயதில் உள்ளோர்களுக்கு இருந்து விடுகிறது.

அது மட்டுமின்றி அரசியல் கேளிக்கைகளும், மீம்ஸ்களும் கிண்டல்களும் மற்றொரு புறம்.

முகநூலில் இந்த கட்சி/ஆட்சி சரியில்லை என ஒரு பகிர்வும், அந்த கட்சி/ஆட்சி சரியில்லை என அடுத்து பகிர்வும் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கலாம். வாட்ஸாப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அதுவும் “உண்மையான தன்மானத் தமிழன் என்றால் டக்குனு இந்த செய்தியை யோசிக்காமல் பகிரவும்” என ஒரு பின்னூட்டம் வேறு!

பெரும்பாலும் ஒரு பொய்யான தகவல் பகிரப்படும் போது, அதைப் பகிர்பவர் தனது பங்கிற்கு இரண்டொரு பிட்டை சேர்த்தே போட்டு விடுவது, எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் ஆகி விடுகிறது.

நம் பகிரும் ஒவ்வொரு செய்தியும் எவரேனும் ஒருவருக்கு ஏதாவதொரு வகையில் பணம் ஈட்டி தந்து கொண்டிருக்கிறது. அதை அறியாமல் உணர்ச்சியின் வேகத்தில் சம்பளம் வாங்காத ஒரு மார்க்கெட்டிங் ஏஜெண்டாக நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

முன் பின் தெரியாத, அறிமுகமே இல்லாத ஒருவரை பற்றி தேவையற்ற விவாதங்களை வலைதளங்களில் செய்து, அறிமுகம் உள்ள, நல்ல பழகியவர்கள் உறவை, நட்பை இழக்கிறோம்.

ஒரு கணம் நின்று, ஏன் இத்தகைய பொய்யான செய்திகள் பரவுகின்றன என யோசித்து பார்த்தால், குறைந்து வரும் ஸ்மார்ட் போன்களின் விளையும், இன்டர்நெட் டேட்டாவின் விளையும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

நாணயத்தின் இரு பக்கங்கள் போல், ஒரு புறம் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நமக்கு பெரும் பலன்களை தரும் வேளையில், மறு புறம் இத்தகைய பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

எந்த வித முன்னெச்சிரிக்கையும், வழிகாட்டுதலும் இல்லாமல், திடீரென நம் கைக்கு எளிதாக வந்து விட்ட இந்த இருமுனை கூறிய கத்தியை கையாள தெரியாமல், விழிப்புணர்வும் கூட இல்லாமல் மாட்டிக் கொள்கிறோம்.

சமீபத்தில் இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அருமையான மூன்று வழிகளை கூறினார். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 • முதலில் நமக்கு வரும் எந்த ஒரு எதிர்மறை தகவல்களையும், யோசிக்காமல் நம்பி விட கூடாது
 • அதை விட முக்கியம், முடிந்த வரை எதிர் மறை செய்திகளை உணர்ச்சிவசப்பட்டு பகிராமல் இருப்பது
 • தனக்கு கண்டிப்பாக உண்மையென தெரிந்த மற்றும் நல்ல செய்திகளை மட்டும் பகிர்வது

எளிமையான வழிகள் தான்! அதை கேட்டவுடன், சரி தான், நாமும் இது போல் செய்யலாமே எனத் தோன்றியது.

ஒரு சிறு கதை. ஒரு முறை ஒரு துறவியிடம் சீடர் ஒருவர், “சுவாமி, வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த துறவி சிரித்து கொண்டே, “பக்தா, இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்பதே ஒன்று கிடையாது. உனது ஒவ்வொரு நாளின் அனுபவத்தையும், உன் சிந்தனை மற்றும் நடத்தை மூலம், இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்று. அது தான் முக்கியம்” என்றார்.

எத்தனை ஆழமான அறிவுரை!

நாமும் இந்த சமூக வலைதளங்களில், நேரத்தை விரயமாக்கும் தேவையற்ற வதந்திகளை, மற்றும் அடுத்தவரை பாதிக்கும் பொய்யான செய்திகளை பகிராமல், நல்ல விஷயங்களை நல்ல பகிர்வுகளை மட்டும் பகிரலாமே?

மார்கெடிங் ஏஜெண்டாக இருந்து தான் ஆவோம் என்று முடிவெடுத்துவிட்டால், நல்ல விஷயங்களுக்கு மட்டும் இருப்போமே..

மாற்றி யோசிப்போம்.

அற்புதமான வாழ்வை மேலும் அழகாக்குவோம்!

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(8)Dislikes(0)
Share
Jan 132018
 

ML1 - Copy

சமிபத்தில், சுமார் 45வயது நிரம்பிய அந்த பெண்ணிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. நீச்சல் குளத்தில் நீருக்குள் தான் நடப்பதை வீடியோ எடுத்து மகிழ்வுடன் அனைவருடனும் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் நடப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா, அதை ஏன் படம் எடுத்து அவர் பதிவிடவேண்டும்?

காரணம் இருக்கிறது. அவருக்கு அது மகிழ்ச்சி தான். ஏனெனில் வாழ்வின் பெரும் பகுதியை சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுள் அவரும் ஒருவர். சக்கர நாற்காலியிலேயே தொடர்ந்து அமர்ந்திருந்ததினால், முதுகுத்தண்டில் பெரிய பிரச்சினை வரவே, சில மருத்துவர்களால் இனி பிழைப்பது சிரமம் என ஒரு நேரத்தில் கைவிடப்பட்டவர்.

“விழுவது தோல்வியல்ல, விழுந்தப்பின் எழ மறுப்பதே தோல்வி” என்று எண்ணி அந்த கடினமான தருணத்திலும் போராடி, படிப்படியாக முன்னேறி பல சாதனைகளைப் புரிந்த அபூர்வ சாதனைப் பெண் அவர்.

அவர் பெயர் மாதவி லதா. ஒரு தனியார் நிறுவனத்தில் உதவித் தலைமை அதிகாரியாக பணிப்புரிகிறார். தேசிய பாரா-ஸ்விம்மிங் போட்டிகளில் பல முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் கூடைப் பந்து அமைப்பின் தலைவர், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒரு தொண்டு நிறுவனத்தின் நிறுவி நடத்தி வருபவர் என பல முகங்கள் இவருக்கு. இவரது வெற்றிப் பயணத்தை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்புவர்கள் இந்த லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். http://bepositivetamil.com/?p=1136

நீருக்குள் அவர் நடந்த வீடியோவை பதிவிட்டதுடன் கூடவே “என்னாலும் நடக்க முடியும்” என்ற பின்னூட்ட வரியின் மூலம் தன் மகிழ்வை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தார். அந்த வரி சற்று வித்தியாசமான கோணத்தில் என்னை சிந்திக்க வைத்தது.

இவர் போல் இயற்கையால் தண்டனை அளிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு எந்த மாதிரி உணர்வு இருக்கும்? “கண் தெரியாதவர்கள், தங்களது வாழ்வில், இந்த உலகத்தின் அழகை, வர்ணங்களை ஒரு முறையாவது பார்த்து ரசித்து விட மாட்டோமா எனவும், காது கேளாதோர் ஒரு முறையாவது ஒலிகளை, தங்களுக்கு பிடித்தோரின் குரல்களை கேட்டு விட மாட்டோமா” எனவும் தோன்றுமல்லவா?

இருந்தும் அத்தகைய துயர உணர்வை, ஏக்கத்தை உதறி தள்ளிவிட்டு பெரும் நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும், இயற்கை அளித்த தண்டனையை எதிர்த்து போராடி வென்றுக் கொண்டிருக்கும் மாதவி லதா போன்ற சாதனையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஆனால் உடல் ரீதியில் எந்த பிரச்சினையும் இல்லாமல், உள்ளத்தில் மட்டுமே பிரச்சினையுடன் சில மனிதர்கள் தங்களுக்கு கிடைத்த அருமையான வாழ்வை சோம்பல், அலட்சியம், முயற்சியின்மை, நம்பிக்கையின்மை என சில எதிர்மறை குணங்களினால் வீணடித்து விடுகின்றனர்.

முயற்சி செய்தால் எத்தகைய இலக்கையும் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை விட்டுவிட்டு, அருமையான இந்த வாழ்வையும் இன்னுயிரையும் சிறுசிறு தோல்விகளுக்குக் கூட இத்தகையோர் சிலர் மாய்த்துக் கொள்கின்றனர்.

அப்படி வாழ்வின் மீது நம்பிக்கையில்லாத சில மனிதர்கள், மாதவி லதா போன்ற மனிதர்களை,  அவர்களது கடும் முயற்சிகளை, அவர்களது அளவற்ற நம்பிக்கை சக்தியை, அதன் மூலம் வந்த வெற்றிகளை பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.

முயன்றால் முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை என்பதற்கு இத்தகைய வெ(ற்)றியாளர்கள் தான் சான்று.

புது நம்பிக்கையுடன் இந்த ஆண்டினை தொடங்குவோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(2)Dislikes(0)
Share
Dec 262017
 

1473233204

பேருந்தில் ஏறி

அமர்ந்தும் நின்றும் பிதுங்கி வழியும் நெரிசலில் ஊர்ந்துக்கொண்டே

படியிலும் பக்கவாட்டு கம்பியிலும் தொங்கிக் கொண்டிருக்கும்

பயணக் குழந்தைகளை அவரவர் இடத்தில் பத்திரமாய் சேர்க்கும் போது

சேகவனாய்

கைக் காட்டியதும் நிற்பதில் கடமையைச் செய்யும்

கர்மவீரனாய்

ஒவ்வொருகொருவர் விட்டுக்கொடுத்தலே வாழ்க்கை என்பதை புரிந்து

சாலையின் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கும் போது உயிர்காக்கும்

கவசமாய்

இவனே தாயுமானவனாய்..

ஆம் “விபத்தில்லா ஓட்டுனர்”

– குடந்தை பிரேமி

 

Likes(1)Dislikes(0)
Share
Nov 252017
 

accident

முரளி ஒரு பேச்சளார். சகஜமாக பழகக்கூடியவர். உற்சாகமான மனிதர். நிறைய புத்தகங்கள் வாசித்து, பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளவர். பாசிட்டிவான மனிதர். அனால்..

சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஹோசூர் பகுதியில் நடந்த ஒரு சோக சம்பவம் அவரது வாழ்வை புரட்டிப் போட்டு, அவரை நிலைக்குலைய வைத்தது.

21/4/2007 அன்று முரளி இரு சக்கர வண்டியில் தனது குடும்பத்துடன் சென்றுக் கொண்டிருந்தார். வண்டியின் முன் புறத்தில் அவரது பத்து வயது பெண் குழந்தை நின்றுக்கொள்ள, அவரது துணைவியார் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார். ஹோசூரில் உள்ள TVS நிறுவனத்தின் அருகில், இவரது வண்டி கடக்கும்போது, ஒரு லாரி இவர்களை மோதி விடுகிறது.

இந்த மோதலில் மூன்று பேரும் கீழே விழுந்து விடுகின்றனர். முரளியின் கால் மீது லாரி ஏறி இறங்கிவிடுகிறது. கால் மிகவும் பாதிப்பு அடைகிறது. இவரது மனைவிக்கு பெரிய ஆபத்து இல்லை; சிறு காயங்களுடன் தப்பிவிடுகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக முன்னால் நின்ற அவரது மகள் இறந்து விடுகிறார்.

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் எல்லாம் முடிந்து விடுகிறது. எதிர்பாராது நடந்த இந்த விபத்து, பெரும் துயரத்தை இவருக்கு விட்டுச் செல்கிறது.

இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காலில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்படுகிறது. மகளை இழந்த சோகம் ஒரு புறம். மருத்துவ மனையில் காலுக்காக போராட வேண்டிய வலி மறு புறம்.

வாழ்வின் அதிகபட்ச சோகத் தருணங்களை அவருக்கு கடக்க வேண்டி இருந்தது. வெறுப்பு மற்றும் துக்கத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார். மருத்துவர்கள் ஓரளவு காலை தயார் செய்து கொடுத்துவிட்டாலும், பாசமாக வளர்த்த ஒரே குழந்தையை விபத்தில் பரி கொடுத்ததில் முரளிக்கு வாழ்வதற்கான அர்த்தம் புரியவில்லை.

பொதுவாக இந்த மாதிரியான நிகழ்வுகளில் தான் மனிதர்களுக்கு மனச்சோர்வு, நம்பிக்கையின்மை, விரக்தி ஆகியவை தொற்றிக்கொள்ளும். ஆனால் முரளி அந்த மனநிலையிலும் சற்றே வித்தியாசமாக சிந்தித்துள்ளார்.

“சரி இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது. யாரும் அதற்கு பொறுப்பு அல்ல. அடுத்து என்ன செய்யலாம்” என யோசித்து, பெரும் சோகத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்.

தன் அதிகபட்ச துக்கத்தை திசைத் திருப்பும் வகையில் இரண்டு கேள்விகளை தன்னையே கேட்க ஆரம்பிக்கிறார்.

“அதனால் என்ன?

அடுத்து என்ன?”

(So What?..  What Next) என்று அந்த இரு கேள்விகளை தனக்குள் மீண்டும் மீண்டும் ஆழமாக கேட்க ஆரம்பிக்கிறார். அந்த இரு கேள்விகளும் பிற்காலத்தில் அவரது வெற்றிக்கு அடித்தளமாக மாறுகின்றன.

இன்று முரளி நிறைய பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு சென்று பல குழந்தைகளுடன் உரையாடுகிறார். “அங்குள்ள பெண் குழந்தைகளைப் பார்த்து பேசும்போது, தன் குழந்தையுடன் பேசுவது போல் உணர்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். தன் மகள் உயிருடன் இருந்திருந்தால் அத்தகைய வயது தான் இருக்கும் என்று நினைவுக் கொள்கிறார்.

மிக முக்கியமாக பல பெற்றோர்களை சந்தித்து தனது அனுபவத்தை  பகிர்ந்துக் கொள்கிறார். அவர்களிடம். “உங்கள் குழந்தைகளை மதிப்பெண்களுக்காக,  சின்னஞ்சிறு தவறுகளுக்காக கடிந்துக் கொள்ளாதீர்கள். எத்தனை அன்பு காட்ட முடிகிறதோ அத்தனை அன்பு காட்டுங்கள். உங்களுக்கு கிடைத்துள்ள வரத்தை மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடுங்கள்” எனக் கேட்டுக்கொள்கிறார்.

வாழக்கை ஒரு முறை தான், அதை வீனடிக்காதீர் (“Life is one time offer. Don’t waste it”) என ஒரு அழகான வாக்கியம் உண்டு. நம்மைச் சுற்றியுள்ள சில மனிதர்கள் நமக்கு அதை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் அதை உணராமல் பல நேரங்களில் கவலைகளில் ஆழ்ந்து விடுகிறோம்.

முரளி போன்ற மனிதர்களுக்கு நடக்கும், இயற்கை தரும் இத்தகைய பெரும் இழப்புகளை காண்கையில், நமது அன்றாட சவால்கள், பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சிறியது தானே?

அதனால் கவலைகளை, துன்பங்களை உதறித் தள்ளுங்கள். சோகத்திலிருந்து மீண்டு வாருங்கள். வெற்றி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி என்ற சாவியின் மூலம் வெற்றி பாதைக்கான கதவைத் திறங்கள்.

வெற்றிப் பயணம் தொடங்கட்டும்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(7)Dislikes(0)
Share
Nov 162017
 
How-does-stress-affect-you_sml

முப்பத்தேழு வயது அவருக்கு. கும்பகோணத்துக்காரர். திருமணமாகி ஒரு குழந்தை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறது. மென்பொருள் துறையில்தான் வேலை. பிடிஎம் லே-அவுட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். எப்பொழுதோ பேருந்துப் பயணத்தில் அறிமுகம். அதன் பிறகு நிறைய முறை சந்தித்திருக்கிறோம். பெங்களூரில் சில கூட்டங்களுக்கும் வந்திருக்கிறார். அலைபேசியில் பேசிக் கொள்வோம். ‘சாகற வரைக்கும் வீட்டுக்கடன் கட்டுவேன்’ என்று ஒரு முறை சொன்னது நினைவில் இருக்கிறது. கடன் முடிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் செத்துவிட்டார்.

நேற்றிரவு அலுவலகம் முடித்து அதிகாலை இரண்டு மணிக்கு வந்தாராம். ‘அப்பா பாவம்..உறங்கட்டும்’ என்று அம்மாவும் மகளும் அவரை எழுப்பவேயில்லை. காலையில் குழந்தையைக் கிளப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு மனைவியும் அலுவலகத்துக்குத் தயாராகிவிட்டு ‘வீட்டைப் பூட்டிக்குங்க வாங்க’ என்று எழுப்பும் போதுதான் வெற்று உடலென்று உணர்ந்திருக்கிறார். ‘சில்லுன்னு ஆகிடுச்சுங்க’ என்று அழுது கொண்டிருந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் நண்பர்கள் சிலரை அழைக்க பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

அந்தப் பெண்ணின் தம்பி இதே ஊரில்தான் இருக்கிறான். அவன் அக்காவையும் அக்கா பெண்ணையும் அழைத்துக் கொண்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்கிறான்.

குழந்தை ‘அப்பாவுக்கு என்னாச்சும்மா?’ என்று கேட்டுக் கொண்டே செல்கிறது.

மிக இயல்பாக இருந்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லை. பீடி சிகரெட் இல்லை. சர்க்கரை இல்லை. ஒரேயொரு இருதய நிறுத்தம். ஆளை முடித்திருக்கிறது. மருத்துவர்களிடம் பேசினோம். ‘ஸ்ட்ரெஸ்தான்’ என்றார். அதேதான். கடந்த மாதம் முழுக்கவவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார். போனால் வேலைதானே! தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார். சோறு தண்ணி இல்லாத உழைப்பு. தினசரி நள்ளிரவு தாண்டிய தூக்கம். எந்நேரமும் அலுவலக நினைப்பு. ஆளையே முடித்துவிட்டது.

அங்கே யாரிடமும் சொற்கள் இல்லை. சமீபத்தில் இத்தகைய சில சாவுகளைக் கேள்விப்பட்டேன். இப்பொழுது நேரடியாகப் பார்த்தாகிவிட்டது.

என்ன சொல்வது எனத் தெரியவில்லை. வேலை போனால் குடி முழுகிப் போய்விடாது.

இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒன்றேகால் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். என்னவோ காரணம் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இப்பொழுது திருப்பூருக்குப் பக்கத்தில் ஒரு கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூருவில் வாங்கிக் குடியிருந்த அபார்ட்மெண்ட்டில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகை வருகிறது. ஒரு திருமணத்தில் சந்தித்த போது‘இது போதும்’ என்றார். ஊருக்குள் அவரைப் பைத்தியகாரன் என்கிறார்கள். என்னிடம் கூட அப்படித்தான் சொன்னார்கள். ‘இப்பொழுதே வேலையை விட்டுவந்துவிட்டான்’ என்று கிண்டலடிக்கிறார்கள். ஊர் எப்பொழுதுதான் வாழ்த்தியிருக்கிறது? இப்படி இருந்தாலும் பேசுவார்கள்; அப்படி இருந்தாலும் பேசுவார்கள். ஊர் வாயை அடைக்க முடியாது. அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். அமைதியான சூழல். அளவான வருமானம். சிரமமில்லாத வாழ்க்கை. ஒன்றும் ஆகிவிடவில்லை.

பெங்களூரிலும் சென்னையிலும் இருப்பவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்?

வேலையில் இருக்கும் அரசியல், பணியிடங்களில் கொடுக்கப்படும் அழுத்தம் என எல்லாமும் சேர்ந்து மனிதர்களைப் பாடாய்ப்படுத்துகின்றன. தமக்கே தெரியாமல் அவற்றை தலையில் ஏற்றிக் கொண்டு மெல்ல மெல்ல உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்காக உயிரைக் கொடுப்பது மடத்தனம். ஏன் இவ்வளவு அழுத்தங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்? பணி செய்யுமிடங்களில் அழுத்தட்டும். ‘போங்கடா டேய்’ என்று மனதுக்குள்ளாவது சொல்கிற மனநிலை அவசியம். அதிகபட்சம் என்ன செய்வார்கள்? வேலையை விட்டு அனுப்புவார்கள். இது ஒன்றுதான் வேலையா? இரண்டு மாதத்தில் இன்னொரு வேலை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அப்படியே இல்லையென்றாலும் திருப்பூர்க்காரரைப் போல வாழ்க்கையை எதிர்கொள்ளலாம். கடை வியாபாரமும், ஆல்டோ காரும், அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தையுமாக வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

மருத்துவமனையின் வெளியில் அமர்ந்திருந்தோம். மயான அமைதி விரவிக் கிடந்தது. பிரேத பரிசோதனைக்காக கூடத்துக்குள் உடல்கள் வந்து கொண்டேயிருந்தன. இவரது உடல் வெளியே வர மாலை ஆகிவிட்டது. இடையில் அவருடனான நினைவுகள் வந்து போயின. சில வருடங்களுக்கு முன்பாக சேலம் செல்லும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுக் கொடுத்து நண்பர்களானோம். ஊரிலிருந்த அம்மா அப்பாவைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஃபோனில் பேசிக் கூட சில மாதங்கள் ஆகிவிட்டது. இலை உதிர்வதைப் போல உதிர்ந்துவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருடைய அலைபேசியிலிருந்த எண்களுக்கெல்லாம் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்கள். அலுவலகத்தில் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றிருந்தேன்.

அவரது மனைவிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. உடல் வெளியில் வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பாக குழந்தையை அழைத்து வந்திருந்தார்கள். அது அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டது. உடல் வெளியே வந்தவுடன் அம்மாவும் மகளும் கதறினார்கள். உடலை ஏற்றிய பிறகு அவர்கள் மூவரும் ஏறிக் கொண்டார்கள். அவர் மீது போடப்பட்டிருந்த மாலையிலிருந்து ரோஜா இதழ்கள் விழுந்தன. வண்டி கிளம்பியது. அவரவர் தாம் வந்த திசையில் திரும்பினார்கள்.

அந்தக் குழந்தையைவிடவுமா வேலையும் சம்பளமும் முக்கியம்? அந்தக் குழந்தையும் குடும்பமும் இனித் தாங்கப் போகிற சுமையைவிடவுமா மேலாளர் அழுத்திவிட்டான்? யோசிப்பதேயில்லை.

ஒன்றைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது- நம்முடைய உடலும் உயிரும் நமக்கானது. நம் குடும்பம் முக்கியம். பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம். மற்ற அத்தனையும் இதற்குப் பின்னால்தான்.

வா.மணிகண்டன்,
Bangalore
http://www.nisaptham.com

Likes(3)Dislikes(0)
Share
Nov 122017
 

800px-tidel_park

மணி! மணி !” மணியை தேடிக்கொண்டு, அவனது நண்பன் கோபி, மணியின் அறைக்கே வந்து விட்டான்.

அப்போது மாலை மணி சுமாராக ஆறு முப்பது இருக்கும். மணி, இருட்டில் விளக்கு கூட போடாமல், கட்டிலில் பான்ட் சட்டையுடன் படுத்திருந்தான்.

வா கோபி ! என்ன விஷயம்?” மணி சுரத்தில்லாமல் முனகினான்.

மணி, நீ இங்கேயிருக்கியா? உன்னை எங்கேயெல்லாம் தேடறது? கிளம்பு, கிளம்பு. ரவியோட பார்ட்டிக்கு நேரமாச்சு பார் ! இங்கே தனியா, கவுந்தடிச்சி, எந்த கோட்டைய பிடிக்க திட்டம் போடறே?”

பார்ட்டிக்கு நான் வரல்லே கோபி! மூட் இல்ல! . நீ போய்ட்டு வா!மணி அலுப்புடன் சொன்னான். அவனுக்கு அலுவலக களைப்பை விட, கடுப்புதான் அதிகமாக இருந்தது. ஆற்றாமை ஆறாக பெருகிக் கொண்டிருந்தது. பொறாமையில் பொங்கிக் கொண்டிருந்தான்.

என்னடா ஆச்சு உனக்கு? காலைலே நல்லா தானே இருந்தே! உன் பிரண்ட்ஸ் எல்லாம்,. வின்ட்சர் பார்க் ஹோட்டல்லே, கும்மாளம் அடிக்க போயிட்டாங்க. நீ என்னடான்னா இங்கே, கப்பலே மூழ்கினா மாதிரி, தலைலே கை வெச்சிகிட்டு! எழுந்திரு மச்சி!. கிளம்பு , கோஷ்டியிலே ஐக்கியமாயிடலாம்!

என்னை விட்டுடு! சொன்னாக் கேளு கோபி! நீ போ, ப்ளீஸ்! நான் வரலை!

உன் ப்ராப்ளம் என்ன மணி? உடம்பு கிடம்பு சரியில்லையா? ”

நான் வரலே கோபி! ரொம்ப வெறுப்பா இருக்கு! இந்த மாதிரி பார்ட்டி ஒண்ணு நானே கொடுத்திருக்கணும் தெரியுமா ? நானும் ரவியும் ஒண்ணாதான் இந்த கம்பனிலே சேர்ந்தோம்! இன்னிக்கு அவன் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆயிட்டான்னு பார்ட்டி கொடுக்கிறான். அவனுக்கு வந்த வாழ்வை பாத்தியா? எனக்கு மேலே உக்காந்துகிட்டு என்னை விரட்டறான்.

என்ன கொடுமைடா இது! நீ இன்னும் டீம் லீடே ஆகலே. அப்புறமா நீ ப்ராஜெக்ட் லீட் ஆகணும். அப்புறம்தானே ரவி மாதிரி ஆகி பார்ட்டி கொடுக்கமுடியும். அதுக்கு ரொம்ப காலம் இருக்கேப்பா!

வெறுப்பேத்தாதே கோபி! நானே கடுப்பிலே இருக்கேன். நீ வேறே! எனக்கு அதிர்ஷ்டம் இல்லைடா ! ஏன்டா இந்த கம்பனிலே சேர்ந்தோம்னு இருக்கு!.

அதுக்கெல்லாம் அப்புறம் ரூம் போட்டு யோசிக்கலாம்! இல்லே ரூமுக்கு வந்து பேசிக்கலாம்! இப்போ கிளம்பு. இல்லாட்டி அங்கே உன் பேரு ரிப்பேராயுடும்!

****

பிரமோத் ஐடி சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட், சுருக்கமா பிட்ஸ், ஒரு கணினி, தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த 350 பேர் வேலை செய்யும் கம்பெனி. வெளிநாட்டு வணிக நிறுவனங்களுக்கு மென் பொருள் எழுதி தரும் ஒரு அலுவலகம். சென்னையிலே புற்றீசல் மாதிரி வளர்ந்து, அழிந்து வரும் நிறுவனங்களிலே ஒண்ணு இல்லே அது. நல்ல படியாக , வெளி நாட்டு பேங்க் காண்ட்ராக்ட் ஒன்றில் , நாளுக்கு நாள் முன்னேறி வரும் கம்பனி.

மணி, இந்த அலுவலகத்தில்தான் ஒரு மென் பொருள் நிரலர் (ப்ரோக்ராம்மர்), கடந்த எட்டு வருடங்களாக. தனக்கு குழு லீடராக உயர்வு கிடைக்கும் என ஒவ்வொரு வருடமும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். இன்று வரை கிடைத்த பாடில்லை. இந்த வருடமும் கிடைக்காது என உள்ளூர பயம். காசு பணத்தை விட, அவனுக்கு இது ஒரு தன்மான பிரச்சனை.

****


பிட்ஸ் கம்பனியின் எச். ஆர். மேனேஜர் சிந்து பாலகுமாரின் டிஸ்கஷன் அறை.

எச். ஆர். மேனேஜர்  சிந்து ஒரு நடுத்தர வயது நாகரிக யுவதி. நுனி நாக்கால் ஆங்கிலம் பேசி, அனைவரையும் சுண்டி இழுப்பதில் அசால்டாக வெற்றி பெறுபவள். அதே நேரத்தில் மிகவும் கறாராக இருப்பாள். இன்று அவளது அறையில், டீம் லீட் தேர்வுக்கான நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தனர். ப்ராஜெக்ட் மேனேஜர் ரவி, டெலிவரி மேனேஜர் ஸ்டீபென் மற்றும் சிந்து மூவரும்.

மணி உள்ளே நுழைந்தான். குட் மார்னிங் சிந்து, ரவி, ஸ்டீபன்

குட் மார்னிங் மணி. உக்காருங்க. உங்க வருடாந்திர அப்ரைசல் பார்த்தேன். நல்லாயிருந்தது..”- சிந்து புன்னகையுடன் ஆரம்பித்தாள்.

தேங்க்ஸ் சிந்து!

உங்க வாடிக்கையாளர் உங்களை பாராட்டின ஈமெயில் நகல்கள் கூட பார்த்தேன். குட் ! .
ரொம்ப தேங்க்ஸ் சிந்து!
உங்க மேலதிகாரி கூட உங்க திறமையை எக்ஸ்செல்லேன்ட் என்று மதிப்பிட்டிருக்கிறார்.
ரொம்ப தேங்க்ஸ் சிந்து”. ஆரம்பம் நன்றாகவே இருந்தது. மணி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான். 

இதெல்லாம் சரி மணி, ஆனால், இதைத்தவிர, வேறே என்னன்ன தகுதிகள் உங்களுக்கு இருக்குன்னு சொல்ல முடியுமா? இந்த வருஷம் நம்ப கம்பனிலே, மொத்தம் ஏழு டீம்லீட் வேகன்சிதான் இருக்கு. ஆனால், 19 பேர் போட்டியிலே இருக்கீங்க. உங்களுக்கு ஏன் நாங்க இந்த ப்ரோமோஷன் கொடுக்கணும்? உங்க மற்ற தகுதிகள் என்ன ? கொஞ்சம் சொல்ல முடியுமா ? ” – சிந்து தனது முதல் கணையை ஏவினாள்.


சிந்து, நான் நல்லா ஹார்ட் வொர்க் பண்ணுவேன். கஸ்டமர் கிட்டே என்னை பற்றி நல்ல மதிப்பு இருக்கு. ஆனால், ஏன் எனக்கு இதுவரை ப்ரோமோஷன் கிடைக்கலைன்னு தான் தெரியலை!

அது ஏன்னு நீங்க எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா மணி?” – ப்ராஜெக்ட் மேனேஜர் ரவி இடை மறித்தான். அவன் முகத்தில் ஒரு மெலிய நக்கல் புன்னகை. மணி பற்றி அவனுக்கு நல்ல மதிப்பு எதுவும் இல்லை. தன்னைப் பற்றி அவன் மற்றவரிடம் நக்கலாக பேசுவதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். மணி அதற்கு என்ன பதில் சொல்லலாம் என மண்டையை கசக்குவதற்குள், சிந்து உதவிக்கு வந்தாள்.

மெலிதாக சிரித்துக் கொண்டே கேட்டாள். மணி, போட்டியிலே இருக்கிற 19 பேருக்கும் நீங்க சொல்லற தகுதி எல்லாம் இருக்கு. இதைத்தவிர, உங்ககிட்டே வேறே ஏதாவது திறமை, தகுதி இருக்கா?”

எனக்கு புரியலே சிந்து ! வேறேன்னா?”
ஏதாவது புதுமையா பண்ணியிருக்கீங்களா? கிரியேட்டிவா? கம்பனிக்கு உபயோகமா? ”
சாரி! இல்லையே!
ஸ்டீபென் குறுக்கிட்டான் ஏதாவது பிசினெஸ் முன்னேற்ற ஆலோசனை கம்பனிக்கு கொடுத்திருக்கீங்களா மணி ? எப்பவாவது?”
சாரி! இல்லையே!மணி. அவன் முகத்தில் லேசான வியர்வை, முத்து முத்தாக, அந்த குளிரூட்டப் பட்ட அறையிலும்.

சரி, இந்த வருஷம், உங்கள் முயற்சியாலே, எத்தனை புது கஸ்டமர் சேர்ந்திருக்காங்க? ஏதேனும் உங்க முயற்சியாலே புது ப்ராஜக்ட்? கொஞ்சம் அதை பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? ” – ரவி கேட்டான்

சாரி! எதுவும் இல்லையே!”. மணி, அவனை அறியாமல், உதட்டை பிதுக்கினான்.

மணியின் முக பாவத்தை புரிந்து சிந்து இருக்கட்டும்! மணி.! இந்த எட்டு வருடத்திலே, உங்க வேலையை சுளுவாக்கற மாதிரி ப்ரோக்ராம், டூல் இப்படி ஏதாவது பண்ணியிருப்பீங்களே?. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மணி!
மண்டையை பிழிந்து கொண்டான் மணி சாரி ! இல்லையே!”.

சரி ! விடுங்க !, மணி, உங்க பேரிலே ஒரு புகார் இருக்கு. நீங்க கஸ்டமர் மீட்டிங், மற்ற இன்டர்னல் மீட்டிங்லே வாயே திறக்கரதில்லையாமே. உங்க பகிர்தல் ரொம்ப குறைவுன்னு கேள்விப்பட்டோம். என்ன காரணம்னு சொல்ல முடியுமா?”
இல்லே சிந்து, அப்படி ஒண்ணும் கிடையாது. அது வெறும் புரளி”. மணிக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒருவேளை இந்த வருஷமும் நமக்கு டீம் லீட் கொடுக்க மாட்டாங்களோ? அதுக்குதான் இப்படியெல்லாம் கேக்கிராங்களோ? தனக்கு ப்ரோமோஷனே வேண்டாம், விட்டால் போதுமென்றிருந்தது. இங்கிருந்து ஓடி விடலாம்.

சரி, வேறே ஏதாவது? திறமையை வளர்த்துக்கரா மாதிரி ஏதாவது செர்டிபிகேஷன், கோர்செஸ், லைக் , ஜாவா, நெட்வொர்க் மாதிரி எதாவது பண்ணியிருக்கீங்களா?”

எதுவும் இந்த வருடம் பண்ணலே சிந்து”. என்னடா இது, விட மாட்டேன்கிறாங்களே. பேசாம எழுந்துடலாமா? டார்ச்சர் தாங்கலையே!

அப்படின்னா, போன வருடம் பண்ணிணீங்களா? தட்ஸ் குட்”. இது ரவி. அவன் குரலில் கொஞ்சம் இளக்காரம் தெரிந்தது போல இருந்தது. 

இல்லே ரவி, போன வருடமும் பண்ணலவேறே என்ன சொல்ல !

சிந்து உதட்டை பிதுக்கினாள். ஓகே, மணி, வேறே ஏதாவது உங்களுக்கு சொல்லனுமா?”

நான் என்னோட வேலையை சரியாத்தானே செய்யறேன்! அதிலே எந்த குறையும் இல்லையே?” 

சிந்து நிமிர்ந்து மணியை பார்த்தாள். சாரி மணி, தவறா எடுத்துக்காதீங்க. உங்க வேலைத்திறன் , ஓகே தான். மே பி, ஒரு ப்ரோக்ராம்மரா இது போதலாம். ஆனால், ஒரு டீம் லீடாக, இந்த திறமை மட்டும் போதாது. உங்க தகுதிகளை நீங்க இன்னும் நிறைய வளர்த்துக்கணும். டீம் லீடரா , மற்றவரை வழி காட்ட, நீங்க உங்களை இன்னும் மேம்பாடு பண்ணிக்கணும். அப்போதான் நீங்க மேல வர முடியும். மற்றவரிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும் ! நான் சொல்றது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

சிந்து, நான் இந்த கம்பனிலே எட்டு வருஷமா இருக்கேன்.ரவி ஈன ஸ்வரத்தில் முனகினான். 

ஸ்டீபன் அது வெறும் நம்பர் தான் மணி. சொல்லப் போனால், அதனால் தான் நாங்களும் உங்களை வெளியே அனுப்ப கொஞ்சம் யோசிக்கறோம்! . இல்லாட்டி, தகுதி அடிப்படைலே, இந்த கம்பனிலே நீங்க பணி புரியறது கூட கஷ்டமாயிடும்.

சிந்து குறுக்கிட்டாள். லுக் மணி, நீங்க வேனால், தாராளமாக வேறே இடத்திலே முயற்சி பண்ணலாம். வேறே நல்ல வேலை கிடைத்தால் விலகலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . சரியா ? மேலிடத்திலே என்னையும் கேள்வி கேக்கிறாங்க, ஏன் அவர் எட்டு வருஷமா அதே பொசிஷன்லேயே இருக்காரு! ப்ரோக்ராமர் வேலைக்கு ஒரு ஜூனியர் போதுமே? அவர் போல சீனியர் எதுக்கு ? காஸ்ட் கட்டிங் பண்ணுங்கன்னு கேக்கறாங்க! நான் என்ன பதில் சொல்ல, மணி ? ”

செவிட்டில் அறைந்தது போல இருந்தது மணிக்கு. குனிந்த தலை நிமிராமல் வெளியே வந்தான்.

*****
அன்று மாலை. அலுவலகத்தை விட்டு வரும்போது , வாசலில் அவன் நண்பன் கோபி, மணிக்காக காத்துக் கொண்டிருந்தான். வாடா மச்சி ! டீம் லீட் பொசிஷன் கொடுத்திட்டாங்களா? ரவி கிட்டே நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன்! பார்ட்டி எப்போ? ”

இல்லே கோபி! இந்த வருடமும் இல்லேன்னு சொல்லிட்டாங்க. அதுவும், உன் பிரன்ட் ப்ராஜக்ட் மேனேஜர் ரவி ,என்னை சுத்தமா நாற அடிச்சிட்டான். கூட அந்த சிந்து வேறே, என்னை காய்ச்சிப்புட்டா!. சே! பேசாம பேப்பரை போட்டுடலாமென்று பாக்கறேன்.!

அவசரப்படாதே மணி! இப்போவெல்லாம் நம்ம படிப்புக்கு, வேலை அவ்வளவு ஈசியா கிடைக்கரதில்லே. வேறே கம்பனியிலும் இதே மாதிரி ஆகாதுன்னு என்ன நிச்சயம்? வெயிட் பண்ணு.. வேறே வேலை தேடிக்கிட்டு அப்புறமா இதை விடு

எல்லாம் ட்ரை பண்ணிட்டேன் கோபி! எவனும் கூப்பிட மாட்டேங்கிறான்! சும்மா ஸ்கைப்லே இண்டர்வியு பண்ணிட்டு, அத்தோட காணாம போயிடறாங்க. ! கடுப்படிக்கராங்கப்பா! நேரா கூட கூப்பிட மாட்டேங்கிறாங்க! மணி அலுத்துக் கொண்டான்.

மணி! இப்போவாவது புரிஞ்சுக்கோ. நமக்கு தகுதி இல்லேன்னா நம்மை எவனும் சீந்த மாட்டான்க!”. 

மாப்பிள்ளே, நீ கூட என்னை நக்கல் பண்றே பாத்தியா? நான் இந்த கம்பனிக்காக ராத்திரி பகல் பாக்காம உழைச்சிருக்கேன்! அந்த நன்றி கூட இல்லை ரவிக்கு ! எல்லாம் கிடக்க, செர்டிபிகேஷன் இருக்கான்னு கேக்கறாங்கடா!

மணி, டென்ஷன் ஆவாதே ! இது ஒன்னும் கவர்மென்ட் ஆபிஸ் இல்லே! சீனியாரிட்டி பாத்து ப்ரோமோஷன் கொடுக்க!

அப்போ என்கூட சேர்ந்தானே ஸ்டீபென், அவன் மட்டும் எப்படி மேலே மேலே போயிண்டிருக்கான்?” இது மணியின் ஆதங்கம்!

அது உனக்கு தெரியாதா என்ன? அவன் மாமா தான் கம்பனி சீனியர் வைஸ்பிரசிடென்ட் !ஒன்னு செய், பேசாம உங்கப்பா கம்பனிலே போய் சேந்துக்கோ. டைரக்டர் கூட ஆயிடலாம்.

அது முடியாதே! அவருக்குதான் கம்பனியே கிடையாதே!
தெரியுதில்லே! அப்போ வாய பொத்துகோபி சிரித்தான்.


இருவருக்கும் இடையே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அதைக் கலைத்தான் கோபி ரவியை பாத்து பொங்கறையே! மணி, அவனை மாதிரி உன் திறமையை வளர்த்துக்க பாரேன்! பொங்கி மட்டும் என்ன பிரயோசனம்? . கஷ்டப்பட்டு உழை. சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதே. எல்லாரையும் அனுசரிச்சு போயேன் . ரவியை பாத்து இதெல்லாம் கத்துக்கோயேன்.
நிறுத்து! நிறுத்து! விட்டா அட்வைஸ் அளவில்லாம கொடுக்கறியே

சாரிடா! உனக்கு உதவி பண்ண ஆசை!கோபி, “தேங்க்ஸ். எல்லாம் சரி, ஆனால், என்னாலே படிக்க முடியாது. நேரம் இல்லியே”- மணிக்கு அவன் கவலை.
அப்போ ஒன்னு செய். பேசாம எதாவது அரசாங்க உத்தியோகத்திலே சேர்ந்துடு. ரொம்ப ஒன்னும் படிக்க வேணாம். சீனியாரிட்டி அடிப்படையிலே, ஒன்னு ரெண்டு உயர்வு கிடைச்சாலும் கிடைக்கும். உன்னை மாதிரி ப்ரோமோஷன் இல்லாம நிறைய பேர் இருப்பாங்க. அதனால யாரையும் பாத்து பொரும வேண்டாம். நிம்மதியா இருக்கலாம். ஓகேவா?”
என்ன கோபி, நக்கலா?’
இல்லே, அப்பா நிறைய பைசா வெச்சிருந்தா வீட்டோட இரு. எதை பத்தியும் கவலை பட வேண்டாம். படிக்க வேண்டாம். தண்ட சோறுன்னு மட்டும் சொல்வாங்க . பரவாயில்லயா?”
யப்பா. யப்பா. இத்தோட நிறுத்திக்குவோம். போறுண்டாப்பா. நான் படிக்கிறேன். டிவி பாக்கிறதை விட்டுட்டு, சினிமாக்கு போகாமல், அரட்டை அடிக்காமல். அடுத்த வருடம் டீம் லீட் ஆகி காட்டறேன்
வெரி குட் மணி. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நோ பெயின், நோ கெயின்கமல் சொன்னது. ஜேன் போண்டா சொன்னது

நல்லாயிருந்தது நீ சொன்னது!மணிக்கு தன் குறை புரிந்தது !

 

****

மூன்று வருடம் கழித்து

கோபியின் அறிவுரைப் படி, மணி தன்னை முழு மனதாக வேலையில் ஈடுபடுத்திக்கொண்டான். திறமைகளை வளர்த்துக் கொண்டான்.

மணி ஆசை பட்டது போலவே, இப்போது அவனுக்கு ப்ராஜெக்ட் லீட் ஆகிவிட்டது. இதை காண்பித்து, வேறு ஒரு கம்பனியில் ப்ராஜெக்ட் மேனேஜர் வேலையும் கிடைக்கும் போலிருக்கிறது. அதை ஒட்டி மணியின் ட்ரீட் எல்லாருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில். ரவி, ஸ்டீபன், சிந்து அனைவரும் ஆஜர் . கோபி இன்னும் வரவில்லை. அவனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.

கோபி வேக வேகமாக உள்ளே நுழைந்தான். வா கோபி! ஏண்டா லேட்?” மணி.

எங்க ஆபீஸ்லே கொஞ்சம் வேலை. ரொம்ப சந்தோஷம் மணி. கங்கராட்ஸ்!

உனக்கு தான் தேங்க்ஸ்!. நீ மட்டும் இல்லேன்னா, நீ மட்டும் அன்னக்கு என்னை திட்டலன்னா, நான் இன்னிக்கும் ப்ரோக்ராம்மர் தான் ! மில்லியன் தாங்க்ஸ் டா ! நீதான் என் நன்பேண்டா!

உளராதே! வா. எல்லாரும் பாக்கரறாங்க பாருகோபி, மணியை தள்ளிக் கொண்டு போனான்.

  *****

குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்செனறு இடித்தற் பொருட்டு”

(ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.)

****

முரளிதரன். S

Likes(2)Dislikes(0)
Share
Oct 252017
 

 

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள்” ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்திகேயனுடன் பேட்டி

Like our FB page for regular feeds

https://www.facebook.com/bpositivenews

Likes(1)Dislikes(0)
Share
Oct 202017
 

Sagar Reddy

ஒன்றுமே அறியாத அந்த கைக்குழந்தை சாகருக்கு ஒரு வயது தான் முடிந்திருந்தது. ஆனால் விதியின் கொடுமை. கலப்புத் திருமணம் செய்த ஒரே காரணம், (அவனது சமூகத்தின் கோரத் தாண்டவத்திற்கு பெற்றோரை இழந்து) அவனை நிர்கதியாய் நிற்கச்செய்தது.

அவனது தாத்தா மட்டும் ஆதரவுக் கரம் நீட்ட, தாத்தாவுடன் சில காலங்கள் இருந்தான். விதி மீண்டும் சோதித்தது. தாத்தாவும் இறந்து விட, ஒரு குழந்தை காப்பகத்தில் தனது குழந்தைப் பருவத்தை தொடங்கினான் சாகர்.

சொந்த பந்தம் என்று யாருமே இல்லை. எல்லாமே அந்த காப்பகம் தான். குறிப்பாக ஒரு சிறுமி மட்டும் அவனிடம் மிகவும் பாசமாக, உடன் பிறவா சகோதரி போல் நடந்துக்கொண்டாள்.

ஆனால் இந்த மகிழ்வும் நிரந்திரமாக நீடிக்கவில்லை. குழந்தைகள் காப்பகங்களில் 18 வயதிற்கு மேல் தங்க முடியாத சூழ்நிலை உள்ளதால், சாகர் மீண்டும் தெருவிற்கு வருகிறான். கோவில், குளம், நடைபாதைகள், ரயில் பிளாட்பாரம் என பல பொது இடங்களில் வசித்தும், சின்னஞ்சிறு வேலைகளை செய்தும், தனது வாழ்க்கையை நகர்த்தியுள்ளான்.

பசி, வறுமை, தனிமை, சோகம், சமூகம் மீது கோபம் போன்றவற்றால் சில முறை தற்கொலை முயற்சிக்கும் ஈடுபட்டதுண்டு. விதி அதற்கும் அவனுக்கு உதவவில்லை.

இத்தனை துன்பங்கள் இருந்தும், படிக்க வேண்டும், அதுவும் பொறியாளர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசை அவனுள் இருந்தது. அதிர்ஷ்டவசமாக ஒரு நல்லிதயம் படைத்த மனிதர் அவனது ஆர்வத்தையும், திறமையையும் கண்டு அவனுக்கு உதவவே, பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

நான்கு வருடங்கள் ஓடிற்று. சாகர் அருமையாக படித்து L&T நிறுவனத்தில் பொறியாளராய் வேலைக்கு சேர்ந்தவுடன், வாழ்க்கை கிடுகிடுவென நல்ல நிலைக்கு  மாறத் துவங்கியது.

குழந்தைகள் காப்பகத்தின் நட்புகளிடம் தான் இருக்கும் நல்ல நிலையை கூறச் சென்ற சாகருக்கு பேரிடி காத்திருந்தது. அவருடன் இருந்த பல சிறுவர்கள் காலச் சூழ்நிலையில் குற்றவாளிகளாய் மாறியிருந்தனர். சகோதரியாய் தன்னுடன் பழகிய அந்தச் சிறுமியோ, விலை மாதராக மாறிய அவலத்தைக் கண்டு சோகத்தின் உச்சத்திற்கே சென்றார் சாகர்.

சில சமயங்களில் விதி நம் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டு, எழ முடியாதவாறு அடித்து வீழ்த்திவிடுகிறது. அத்தகைய சோகத் தருணங்களில் இரு வாய்ப்புகள் மட்டுமே நம்மில் இருக்கிறது.

ஒன்று விதிக்கு தோற்று வீழ்ந்துவிடுவது.

மற்றொன்று, “வீழ்வது தோல்வியல்ல,  வீழ்ந்தவுடன் எழ மறுப்பதே தோல்வி” என எழுந்து தோல்வியை துரத்தி அடித்து சாதிப்பது.

சாகர் கடினமான அத்தகைய இரணடாவது வழியை கையில் எடுத்தார்.

நம் சமூகத்தில் சிறு குழந்தைகளுக்கு காப்பகங்கள் நிறைய உள்ளன, அனால் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு எதுவும் கிடையாது என்ற சூழ்நிலை அவருக்கு விளங்குகிறது. தன்னைப் போல் நிராதவராய் நிற்கும் 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்காக தன் சொந்த செலவில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஆதரவு தர ஆரம்பித்தார்.

தனது நல்ல வேலையையும் உதறித் தள்ளி, இந்த நோக்கத்தை முழு நேரமும் செயல் படுத்த, “ஏக்தா நிராதார் சங்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். சில நல்ல மனிதர்களின் நிதி உதவியுடன், இன்று அந்த அமைப்பின் மூலம் 700க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உணவு, கல்வி, என அனைத்து ஆதரவுகளையும் அளித்து வருகிறார், முப்பது வயதை நெருங்கும் இந்த சாகர் ரெட்டி.

மேலும் அறுபதிற்கு மேற்பட்ட இளம் பெண்களுக்கு தனது அமைப்பு மூலம் திருமணம் நடத்தி அவர்களுக்கு சிறந்த எதிர் காலத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் விரிந்துள்ள இவரது பணிகள் வெகு விரைவில் தமிழகத்திற்கும் வரவுள்ளது. அடுத்த மாதம், முதல் வாரத்தில் தனது பணிகளைத் தொடங்க புதுவை வர இருக்கிறார் சாகர்.

பல விருதுகளையும் பாராட்டல்களையும் பல நிறுவங்கள் மூலம் பெற்று வரும் சாகர் ரெட்டிக்கு தமிழகத்திலும் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் என நம்புவோம்.

சற்று யோசித்தால், நம்மில் பலருக்கு அருமையான வாழ்க்கையும் சந்தர்ப்பங்களும் அமைந்துள்ளன. ஆனால் அதையெல்லாம் புரிந்துக் கொள்ளாமல், உணராமல் சின்னஞ்சிறு தோல்விகளுக்கு கூட மனம் உடைந்து விடும் பலரைக் காண்கிறோம்.

மேலும் சிலர், சமூகம் மீதுள்ள கோபத்தினால் போராட்டம் நடத்துகிறேன் என்று தங்களது வாழ்வையும், தன்னைச் சேர்ந்துள்ள கூட்டத்தின் வாழ்க்கையையும் வீணடித்து விடுகின்றனர். அவர்கள் எல்லாம் சாகர் ரெட்டியுடம் கற்றுக்கொள்ள முக்கியமான ஒரு இரகசியம் இருக்கிறது.

அது என்ன தெரியுமா?

“உங்களக்கு கிடைத்துள்ள ஆசிர்வாதங்களை எண்ணிப் பாருங்கள், அரிதான இந்த மனித வாழ்க்கை அழகாய், ஆனந்தமாய்த் தெரியும்” – என்பது தான்.

“உன்னிடம் என்ன இல்லை என்பதை விட என்ன இருக்கிறது என சிந்தித்துப் பார், இந்த உலகமே உங்கள் வசம்” என்பார்கள். இந்தக் கூற்று தான் எத்தனை நிஜம்!

மீண்டும் சந்திப்போம்.

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(3)Dislikes(0)
Share
Oct 082017
 

 

1

 

மிடில் கிளாஸ் சங்கரன்: 
15 ஜூன் 1964 மதியம் 3.30 சதய நட்சத்திரம், சங்கரன் ஜனனம். அப்பா சாஸ்திரி , அம்மா ராதை. சங்கரன் பிறந்தது , சென்னையில் அமிஞ்சிக்கரையில் . சங்கரன் மூன்றாவது குழந்தை, இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு. !

சாஸ்திரி புரசை வாக்கத்தில் ஒரு சைவ ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார். நடுத்தர வர்க்க குடும்பம்ஏற்ற இறக்கமான வாழ்க்கை. “அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்குமாமே?சாஸ்திரியின் ராசி அந்த வகை. 

அப்பர் கிளாஸ் ராமன்:
15 ஜூன் 1964மதியம் 3.30 சதய நட்சத்திரம், அதே நாளில், அதே நேரம் ராமன் ஜனனம். அப்பா கோவிந்தன், அம்மா கல்யாணி . சென்னையில் புரசைவாக்கம். 

ராமன்தான் முதல் குழந்தை. ஒரே குழந்தையும் கூட. அப்பா கோவிந்தன், நல்ல பசையுள்ளவர். சமூக மேல் தட்டு. சென்னையில் இரண்டு வீடு, பெரம்பூரில் பெரிய நகைக் கடை, இதைத்தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் வேறு. செல்வம் கொழித்துக் கொண்டிருந்தது. தொட்டது துலங்கியது. இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை எல்லோரும் செய்வர் சிறப்பு , இது இயற்கை தானே!

முன் குறிப்பு:

இந்த கதை சங்கரன் – ராமனை பற்றியது. அவர்களது வளர்ப்பு பற்றியது. வாழ்க்கை தரம் பற்றியது.

அவர்களது பெற்றோர் பற்றியது அல்ல.!

 

குழந்தை பிராயம் :

மிடில் கிளாஸ் சங்கரன்: 
சங்கரன் பிறவியிலேயே திறனாளி. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் குழந்தை, அந்த செல்லம் வேறு, அவனது அம்மா அலட்டிக் கொள்(ல்)வதற்கு கேட்பானேன்?

எங்க சங்கரன் ரொம்ப கெட்டிக்காரன் தெரியுமோ? எட்டு மாசத்திலே பேச ஆரம்பிச்சுட்டான். மூணு வயசிலே எ,பி,சி,டி சொல்லுவான்!

சங்கரா! எங்க எ,பி,சி,டி சொல்லு ?”

இசட்,ஒய்,எக்ஸ்,டபிள்யூ…

அட தலை கீழா சொல்றானே!” – அதிசயிப்பார்கள். ஆச்சரியமா இருக்கே! குழந்தைக்கு சுத்தி போடு ராதா! கண்ணு பட போறது!

ராதாவுக்கு பெருமை பிடி படாது.

மேல்தட்டு ராமன்:
ராமனும், சங்கரனை போன்ற திறனாளிதான். அறிவுத்திறன், மிடில் கிளாஸ் சங்கரனை விட ஒன்று அல்லது இரண்டு மாற்று குறைவாக இருக்கலாம். 

ராமனின் அம்மா கல்யாணியும் எல்லா அம்மாவை போல்தான். கொஞ்சம் படித்தவள். மேல் தட்டு . அதனால், கொஞ்ச(ம்) ல் ஆங்கிலத்தில் அலட்டிக் கொள்வாள். நாகரிக யுவதி. அவள் பேச்சு கேட்பவருக்கு அவதி! 

ராமா ! ஆண்டிக்கு ரைம்ஸ் சொல்லு” – அம்மா பெருமை தாளாது. . 

பாபா ப்ளாக் ஷீப் ……

அடேடே! ரொம்ப கெட்டியா இருக்கானே!உறவுகள் கொஞ்சுவார்கள். 

அம்மாவின் அலட்டல் இன்னும் கொஞ்சம் அதிகமாகும். இதேல்லாம், இவன் போன வருஷமே சொல்ல ஆரம்பிச்சுட்டான். இப்போ, ஒன் டு 100 கூட திருப்பி ரிவர்ஸ்லே சொல்லுவான். எங்க ? ஆண்டி கேக்கிறாங்க பாரு ! சொல்லு ராமா.

“100,99, 98,97,…” ராமன் மழலையில் 

ஆச்சரியமா இருக்கே! தலை கீழா சொல்றானே ! இதெல்லாம் எப்படி தெரியும் குழந்தைக்கு! சுத்தி போடு கல்யாணி! கண்ணு பட போறது!

இவன் ஐ.க்யு ரொம்ப அதிகமாம். இப்போ சரியா சொல்ல முடியாதாம். பின்னாளில், ஒன் ட்வென்டிக்கு மேலே இருக்குமாம். அமெரிக்கா அனுப்பி பெரிய டாக்டராக்கணும். ஹார்வர்ட்லே சேக்க போறோம். இதே நினைப்பு தான் அவருக்குஅம்மா கல்யாணிக்கு பெருமை தாளவில்லை.

 

இடைநிலை பள்ளிப் பருவம்:

மிடில் கிளாஸ் சங்கரன்:
மிடில் கிளாஸ் சங்கரனுக்கு படிப்பு வெகு எளிதாக வந்தது. மிக நன்றாக படித்தான். முதல் மார்க் எதிலும். தனது வருமான தகுதிக்கு கொஞ்சம் அதிகமாகவே, சாஸ்திரிஅவனை பெரிய பள்ளியில் சேர்த்தார். பணக்கார வீட்டு பிள்ளை ராமனும் அதே பள்ளியில், அவனது வகுப்பில். சேர்ந்தே படித்தனர். இருவரும் நல்ல நண்பர்கள். 

சங்கரா! சாயந்தரம் நீ என்னடா பண்ணுவே!” – ராமன்

கிரிக்கெட் விளையாட போயிடுவேன்”- சங்கரன்

எங்கே?”

வேறெங்கே! எங்க தெருவிலே தான். பக்கத்து வீட்டு ராஜா, செல்வம், குமார் எல்லாரும் சேர்ந்து ஆறு மணி வரை விளையாடுவோம்

அப்புறம்?”

அப்புறமென்ன? குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு, படிப்பேன். அப்புறம் சாப்பாடு. தூக்கம். நீ என்ன பண்ணுவே?”

நானா! அதுக்கெல்லாம் சான்சே இல்லேடா ! எங்க வீட்டிலே கேம்ஸ் எல்லாம் ஆட விட மாட்டாங்க! போனவுடனே, டுயஷன், அப்புறம் மியூசிக் கிளாஸ், ட்ரம்ஸ் கத்துக்கணும். ஞாயிற்றுக்கிழமை வந்தா போதும், அம்மா கராத்தே கிளாஸ் போ, யோகா போன்னு சொல்லி படுத்துவாங்க. ரெஸ்டே கிடயாது. டிவி கூட கொஞ்சம் தான் பாக்க விடுவாங்கராமன் அலுத்துக் கொண்டான். 

பாவண்டா நீ!

இவர்கள் இருவருக்குமே பகுத்தறிவு (analytical intelligence) மற்றவரை விட அதிகம். கூடவே ஆக்கபூர்வ அறிவும் (creative intelligence) மற்ற மாணவரை விட அதிகம். 

மிடில் கிளாஸ் சங்கரன்:
சங்கரனின் அம்மாவிற்கு வீட்டு வேலையே சரியாக இருந்தது. மூணு குழந்தைகளை கவனிக்கணும். சமையல் வேலை. கணவர் வீட்டுக்கு வரவே, இரவு 11.00 மணி போல ஆகிவிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆசை இருந்தாலும், அவர்களின் தேவைகளை கவனிக்க , அம்மா அப்பா இருவருக்குமே நேரம் இல்லை. 

அதனால் சங்கரனே , தன் முயற்சியால், கணித போட்டிகளில் கலந்து கொண்டான். வினா விடை போட்டிகளில் பெயர் கொடுத்து பரிசு வாங்கினான். ஸ்கவுட்டில் சேர்ந்தான். பேச்சு போட்டி, மற்றும் கட்டுரை போட்டிகளில், ஆசிரியர் சொல்படி கலந்து கொண்டு, பள்ளிக்கு பெயர் வாங்கி கொடுத்தான்.

சாஸ்திரியோ, ராதாவோ இதற்கு தடை சொல்லவும் இல்லை. ரொம்ப கேட்டுக்கொள்ளவும் இல்லை. காரணம் அவர்களுக்கு நேரம் இல்லை. நேரம் போத வில்லை. அவர்கள் கவலை அவர்களுக்கு. குடும்பம் நடக்கணுமே? பார வண்டி. மூன்று குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், காசு வேணுமே? நாள் ஆக ஆக சங்கரனை பாராட்டுதலும் குறைந்து விட்டது.

மேல்தட்டு ராமன்:
ராமனின் பெற்றோர், சங்கரனின் பெற்றோருக்கு நேரெதிர். ஒரே குழந்தை. செல்லம். பார்த்து பார்த்து செய்தனர். அவனது ஒவ்வொரு செய்கையிலும் ஈடுபட்டனர். 

என்ன ! ராமா! இரண்டாவது ரேங்க் தான் வாங்கியிருக்கே?. எனி ப்ராப்ளம்? பரவாயில்லே. விடு. இது கூட ரொம்ப சந்தோஷம் தான். நெக்ஸ்ட் டைம்லேருந்து எப்பவும் முதல் ரேங்க் வாங்கணும் என்ன? அப்பதான், ஹார்வர்ட்லே சேர்க்க முடியும்!” …
ஏன் ராமா, அசதியா இருக்கா? டாக்டரை வர சொல்லட்டுமா? வேணா, இன்னிக்கு கராத்தே வகுப்பு வேண்டாம். சேர்த்து நாளைக்கு பண்ணலாம் என்ன?” …
ராமா, மாத்ஸ் கிளப் சேர்ந்தியே, இன்னிக்கு என்ன பண்ணினே சொல்லு?” …
உன்னோட சயின்ஸ் டுயஷன் மாஸ்டர் நல்லா பாடம் எடுக்கிறாரா?” …

இப்படி இருக்கும் அவர்களின் கவனிப்பு. 

ராமனின் வளர்ப்பில், கோவிந்தனும், கல்யாணியும் ஆர்வம் காட்டினர். உற்சாகப் படுத்தினர். ஊக்கமளித்தனர். செஸ் போட்டி, பில்லியர்ட்ஸ் போட்டி, நீச்சல் பயிற்சி, ஸ்கேட்டிங், என ஒரு செயலிலிருந்து மற்றொன்றிற்கு அவனை அடிக்கடி மாற்றி கொண்டிருந்தனர். வாழ்க்கையை எதிர்கொள்ள அவனை தயார் பண்ணினர். 

அவர்களிடம் நேரம் இருந்தது. செலவு செய்ய பணம் இருந்தது பையனிடம் பிரியம் நிறையவே இருந்தது. எதிர்பார்ப்பும் இருந்தது. ராமனிடம் அதற்கேற்ற உழைப்பு இருந்தது.

 

மேல்வகுப்பு பள்ளி படிப்பு

மிடில் கிளாஸ் சங்கரன்
பிரபல கதை ஆசிரியர் சுஜாதா சொல்வது போல், மத்திமர் வர்க்கத்தை சேர்ந்தவர்களே கொஞ்சம் பயந்த சுபாவம். சங்கரனின் பெற்றோர் சாஸ்திரி மற்றும் ராதா அதற்கு விதி விலக்கல்ல!. அதிகார வர்க்கத்தை, பள்ளி நிர்வாகத்தை , எதிர்க்கும் துணிவு அவர்களிடம் கொஞ்சம் கம்மி. அதனால் சிறிது பணிந்த, அடங்கிய தொனி. இது அவர்களின் பாணி.! 

ஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளில், ராதா மட்டும் கலந்து கொள்வாள். சாஸ்திரியால், வேலைப் பளு காரணமாக பொதுவாக வர இயலாது. ஆசிரியர் என்ன சொன்னாலும், ராதா பதிலே பேச மாட்டாள். சங்கரனுக்காக பரிந்து பேசவே மாட்டாள். 

அப்படியா மேடம்!”…
“ … சரி மேடம்!. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”….
“… தேங்க்ஸ் மேடம், நீங்க சொல்றபடியே செய்யறேன்.

இப்படியே இருக்கும், சங்கரனின் அம்மா ராதாவின் பேச்சு.

டீச்சர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவங்களுக்கு தெரியாதா என்ன? இது ராதா, சாஸ்திரியின் எண்ணம். ஆசிரியர் சொன்னதை சங்கரனிடம் பகிர்ந்து கொள்வதும் குறைவே. அவர்களின் நேரமின்மையும், கட்டுப்பட்டித்தனம், பகிர்ந்து கொள்ளும் எண்ணமின்மையுமே காரணமோ என்னவோ?. 

அப்பர் கிளாஸ் ராமன்:
ராமனின் பெற்றோர், இந்த விஷயத்திலும் சங்கரனின் பெற்றோருக்கு நேரெதிர். கோவிந்தனும், கல்யாணியும், ராமனுடன் சரி சமமாக அமர்ந்து அவனுடன் பேசினார்கள். விவாதம் செய்தனர். பகிர்ந்து கொண்டனர். நிறைய தகுதி வளர்த்துக் கொள்ள மறைமுகமாக ஊக்குவித்தனர். 

ஒரு நாள், ராமனுக்கு பல் வலி. டாக்டரிடம் போக வேண்டி வந்தது. அப்பாவுடன் காரில். 

அப்பா! ஏம்பா! என் பல் வலிக்குது?”
உன் பல்லுலே குழி இருக்கு. கொஞ்சம் ஈறு பிரச்னை கூட இருக்கும் ராமா.
கூட வந்த அம்மா நீ டாக்டர்கிட்டே உன் சந்தேகமெல்லாம் கேக்கணும்? கூச்சப் படகூடாது. என்ன?”
என்ன வேணாலும் கேக்கலாமா?”
அவர் அதுக்கு தானே இருக்கார். தாராளமா கேள். தைரியமா கேக்கணும் என்ன?”

ராமன் பல் டாக்டரின் அறையில் அமர்ந்து கொண்டிருந்தான் . 
என்ன ராமன்? என்ன ப்ராப்ளம்?
பல்லு வலி டாக்டர்.
ஆ! காட்டு
ஆஆஆஆ
குட். சரி பண்ணிடலாம். கொஞ்சம் வலிக்கும்.சரியா ? வலிக்காம இருக்க ஊசி போடறேன். ஓகே வா
ஓகே டாக்டர். ஆனால் ஊசியை வலிக்காம போடுங்க
டாக்டர் சிரித்தார். சரி சார், அப்படியே ஆகட்டும்”. 
டாக்டர், ஏன் எனக்கு பல்லிலே வலிக்குது?”
அதுவா! உன் ஈறுலே இன்பக்ஷன்டாக்டர் பதில் சொன்னார் 
இது ஏன் எனக்கு வந்தது?”
உணவுத்துகள்கள் ஈறுகளில் போய் ஒட்டிக் கொள்ளும்போது ரசாயன மாற்றம் நடக்கும். இதனால் ஈறுகளில் ரத்தம் வரும்
ஆனால், டாக்டர், அப்பா எனக்கு பல்லிலே குழி இருக்குன்னாரே!
அது கூடத்தான். ஆனால் அடைச்சிடலாம்
பல்குழின்னா என்ன?” ராமன் அடுத்த கேள்விக் கணை. 
பாக்டீரியா நமது உணவில், முக்கியமா இனிப்பை லேக்டிக் அமிலமாய் மாற்றுகிறது . அமிலம் எல்லாவற்றையும் அரிக்கும் . ஆனால் டென்டின் அடுக்கை அடையும் போது கூச ஆரம்பிக்கும். அப்போதான் பல் குழி விழும்.”…..
இப்படி போகும் ராமனின் விவாதம். ராமனின் பெற்றோர் வாக்குவாதம் செய்ய அவனை தூண்டினர். பதவியில் இருப்பவரிடம், படித்தவரிடம் விவாதம் செய்ய முடுக்கினர். உரமிட்டனர், தண்ணீர் ஊற்றினர், களை எடுத்தனர், மருந்து அடித்தனர், பயிர் வளர.

ஆசிரியர் பெற்றோர் சந்திப்புகளில், ராமனின் பெற்றோர் கல்யாணி மற்றும் கோவிந்தனும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆசிரியை, ஆசிரியர் என்ன சொன்னாலும், ராமனுக்காக கச்சை கட்டிக்கொண்டு பரிந்து பேசுவார்கள். ஆசிரியர் சொன்னதை ராமனிடம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வர்.

மேடம், ராமன் இந்த தடவை ஆங்கிலத்தில் மார்க் 75 தான் வாங்கியிருக்கான். ஏன்?”

சரியாய் படிக்கலை என நினைக்கிறேன்!

சாரி மேடம்! ராமன் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறான். டியுஷன் வேறே போறான். எனக்கு சந்தேகமா இருக்கு! இன்னொரு தடவை அவன் பேப்பரை செக் பண்ணுங்க ப்ளீஸ்

இருக்காதே. ஆனாலும், உங்களுக்காக மீண்டும் சரி பார்க்கிறேன்”.

சிறிது நேரத்திற்கு பின் ஆசிரியை சாரி கல்யாணி மேடம், நீங்க நினைச்சது சரி, 85 மார்க் வாங்கியிருக்கிறான். கூட்டல் பிழை. மாத்திட்டேன்

எனக்கு தெரியும், எங்க ராமன் பத்தி” 

 

குண நலன்கள்

மிடில் கிளாஸ் சங்கரன்: 
கீழ்ப்படிதல், சத்தம் போடாத அமைதி இது சங்கரனின் குணமாயிற்று. தனது நேரத்தை உபயோகமாக செலவழிக்க கற்று கொண்டான். சொந்தக் காலில் நிற்க கற்றுக் கொண்டான். ஆனால், மற்றவரிடமிருந்து ஒதுங்கி போனான். கொஞ்சம் ரிசெர்வ் டைப். 

கொஞ்சம் குறைவான தன்னம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை, விட்டுக் கொடுத்தால் என்ன என்று எண்ணும் போக்கு சங்கரனுக்கு. அடித்துப் பேசும் திறமை இல்லை. அதை அவன் வளர்த்துக் கொள்ள வில்லை. என்ன காரணம்? பெற்றோரின் ஜீனா, வளர்ப்பா, மத்திமர் குணமா, சுற்று சூழலா?

மேல் தட்டு ராமன்:
ராமனுக்கு கிடைத்த வளர்ப்பு, எக்ஸ்போசர் காரணமாகவோ என்னவோ, அவனுக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. கூட்டு முயற்சி, கட்டுக் கோப்பாக இருக்க கற்றுக்கொண்டான். பெரியவர்களுடன் அழகாக பேச தெரிந்து கொண்டான். “யாரிடம், எதை, எப்படி, எப்போது சொல்கிறோம்” என்பது வாழ்க்கையில் முன்னேற மிக முக்கியம் என சொல்வர். நடைமுறை அறிவாற்றல். (Practical Intelligence) ராமன் அதை மிக அழகாக வளர்த்துக் கொண்டான். அவன் வளர்ந்த விதம் அப்படி. 

ராமனுக்கு தனது தேவை என்ன என்பது தெரிந்திருந்தது. தான் என்ன படிக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருந்தான். அப்பா அம்மாவின் முழு பக்க பலமும், பண பலமும் இருந்தது. 

மருத்துவராகட்டும், கல்லூரி, விளையாட்டு, நண்பர் குழாம், எங்கும் அவன் பேச்சு எடுபட்டது.

 

இன்று: 26th April 2017 

காஞ்சிபுரம். பெரிய தெரு . பிரம்மாண்டமான பட்டுப் புடவைக் கடை. அதன் வாசலில் ஒரு பெரிய வெளி நாட்டுக்கார் வந்து நின்றது. அதன் பின்னாடியே ஒரு ஜீப். அதிலிருந்து இரண்டு அரசு அதிகாரிகள் இறங்கினர். பின்னர் காரிலிருந்து கோட் அணிந்த ஒரு நபர் இறங்கினார். புடவைக் கடை முதலாளி “ வாங்க! வாங்க! உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கிறோம். கலக்டர் ஆபிஸ்லேருந்து இரண்டு மூணு கால்ஸ் வந்துடுத்து, நீங்க வந்துட்டீங்களான்னு கேட்டு” – வாயெல்லாம் தங்கப் பல் தெரிய வரவேற்றார் . பெரிய இடம். வரவேற்புக்கு கேக்கணுமா?

கோட் அணிந்த நபர் சிரித்துக் கொண்டே படி ஏறினார். கூடவே அவரது மனைவியும், மகளும்.

வாசலில் யாரோ தன்னையே பார்ப்பது போலிருக்கவே, திரும்பினார். ஆச்சரியம். தனது பள்ளிக்கூட நண்பன் போல இருக்கிறதே? எத்தனை வருஷமாச்சு பார்த்து! அதே நேரம் வாசலில் நின்றிருந்த மனிதர் இவரைப் பார்த்து சிரித்தார். அவருக்கும் இவரை அடையாளம் தெரிந்து விட்டது.
நீங்க! நீ ! சங்கரன் தானே?”

நீங்க ராமன்தானே? ஆளே அடியாளம் தெரியாம மாறிப் போயிட்டிங்க?”

நீ மாறவேயில்லை சங்கரா! நீ இங்கே எங்கே?”

நான் இப்போ காஞ்சிபுரத்திலே தான் இருக்கேன். கடைக்கு தான் வந்தேன்! உன்னை பார்த்து அப்படியே நின்னுட்டேன்

சரி வா! வா! உள்ளே போய் பேசலாம்பால்ய சிநேகிதரர்கள். பேச, பரிமாற எவ்வளவோ இருக்கும். கை கோர்த்த படியே உள்ளே போனார்கள். 

****

மிடில் கிளாஸ் சங்கரன்: வயது 53. 

சங்கரன் காஞ்சிபுரத்தில், ஒரு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் . பேராசிரியர்பதவி இன்னும் கிடைக்கவில்லை. அரசியல் செல்வாக்கும், ஆள் பலமும் இவருக்கு இல்லை . திறமை இருந்தும், அவருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சகோதரிகளின் திருமணம் , பெற்றோர் மருத்துவ செலவு, பற்றாக்குறை பட் ஜட். அதனால், குடும்ப பொறுப்புகளை தான் ஏற்று கல்லூரியில் விரிவுரையாளரானர்.
சங்கரன்அருமையான ஆசிரியர். எந்த ஒரு கடினமான பிரச்னைக்கும் மிக அழகாக பதில் சொல்லுவார். கடுமையான உழைப்பாளி . விருப்ப பட்டு‘ , காஞ்சிபுரம் வந்தார். இப்போது சுமாரான சம்பாத்தியம். சொந்த வீடு. மனைவி , இரண்டு குழந்தைகள். காலையில் காபி அவரே போடுவார். தினமும் நடை பயிற்சி. கோவில். அவரது அப்பாவை விட நல்ல நிலையில் இருக்கிறார்.

டாக்டர் ராமன் வயது 53

அப்பாவின் விருப்பப் படி, ராமன் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் டாக்டரேட் படித்தார். பெற்றோரின் முழு ஆதரவு, பண பலம் தொடர்ந்தது. அமெரிக்காவில் பெரிய கல்லூரியில் வேலை கிடைத்தது. தனது வாக்கு சாதுரியத்தினாலும், பேச்சு திறமையினாலும் பதவிகளை தட்டி பறித்தார். படிப்படியாக முன்னேறி, பேராசிரியர், பெரிய கல்லூரியின் டீன், பின்னர் இந்தியா திரும்பினார். இப்போது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தரானார். அப்பாவின் ஆசிர்வாதத்தாலும் அரசியல் பலத்தாலும், பத்ம பூஷன் விருது பெற்றார். மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் முக்கிய ஆலோசகர். பல கமிட்டிகளில் பணி புரிகிறார். 

தேவைக்கு அதிகமாகவே நிறைய சொத்து. இவர் சம்பாதித்தது, அப்பாவுடையது எல்லாம் சேர்ந்தது. இனம் இனத்தோடு சேரும். பணம் பணத்தோட சேரும்.! . பணக்கார மனைவி , பெரிய பங்களா, பெயர், புகழ், அப்பாவின் சமூக அந்தஸ்து ,அவருக்கு கூடவே துணை வந்தது. 

பின் குறிப்பு:

படிப்பில் மிடில் கிளாஸ் சங்கரனுக்கு ஒன்றாம் இடம். ராமனுக்கு இரண்டாம் இடம்!

ஆனால், வாழ்க்கையில், சமூகத்தில் மேல் தட்டு ராமனுக்கு ஒன்றாம் இடம். சங்கரனுக்கு இரண்டாம் இடம் தான் .

அப்போ வசதி இருக்கிரவர்தான் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? லாஜிக் சரியில்லயே.!‘ 
ஸ்டாப்! . ஸ்டாப்.! நீங்க நினைக்கிறது சரிதான். லாஜிக் கொஞ்சம் இடிக்குதுதான்.

எத்தனையோ மத்திம மட்டும் கீழ் தட்டு மக்கள், மிக உயர்ந்த நிலைக்கு வந்திருக்காங்க. அதேபோல், எத்தனையோ மேல்தட்டு , வசதி படைத்தவர் பசங்க வாழ்க்கையில் சுமாராதான் இருந்திருக்காங்க. அதனாலே, பணம் மட்டுமே ராமனின் மேன்மைக்கு காரணமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் வாழ்க்கையில்வசதி வாய்ப்புகள் ஒருவரை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் காரணிகள். அது சரிதானே

சரியா? கதையை சொல்லிவிட்டேன். 

இப்போது என் கேள்வி இது! 

கேள்வி:

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற காரணங்கள் என்ன?
பதில் : என் பதில். தவறாக இருக்கலாம். முடியுமென்றால் , உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . என்னை திருத்திக் கொள்ள உதவும். 

வாழ்க்கையில் முன்னேற நிறைய காரணங்கள் உள்ளன. ஜீன், வளர்ப்பு, பெற்றோர், அவர்களின் வசதி, வாழ்க்கையில் சந்தர்ப்பம், பகுத்தறிவு, நடைமுறை அறிவாற்றல், ஆக்கபூர்வ அறிவு போன்றவை. கூடவே . தன்னம்பிக்கை, ஊக்கம், அயராத உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் இவை போன்றவையும் தேவை.

ஆனால்,

மேல் தட்டு ராமனிடம் இருந்த மிக முக்கியமான ஒன்று,

மிடில் கிளாஸ் சங்கரனிடம் கொஞ்சம் குறைவாக இருந்த ஒன்று,

நடைமுறை அறிவாற்றல்” ( Practical Intelligence)
மிடில் கிளாஸ் சங்கரன் ஒரு ஜீனியஸ் தான். அவன் எதிலும் முதல்.தான் அவனது ஐ.க்யு 140 க்கும் மேல்தான். ( மிக பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ஐ.க்யு 150 என படித்த ஞாபகம்). ஆனால், சங்கரன் வாழ்க்கையில் பெரிய வெற்றி பெறவில்லை. அவன் வாழ்க்கையில் தோற்றான் என சொல்ல முடியாது. ஆனால் பணம், புகழ் கிட்டியது குறைவே.

மாறாக,மேல் தட்டு ராமனின் ஐ.க்யு 130 . ஆனால் அவனது நடைமுறை அறிவாற்றல்அவனை வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெற வைத்தது. ராமனை அவனது பெற்றோர் வளர்த்த விதம் ஒரு காரணமாக இருக்கலாம். வளர்ந்த சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். 

சரி; நடைமுறை அறிவாற்றல் என்றால் என்ன?

யாரிடம்எதைஎப்படிஎப்போது சொல்கிறோம் ?” என்னும் திறமை. இதையே Practical Intelligence என்கிறோம். இது படிப்பினால் மட்டும் வருவதல்ல. படிப்பு கொஞ்சமே சொல்லிக் கொடுக்கும். சுற்று சூழ்நிலை, சமூகம் மற்றும் வளர்ப்பினால் வருவது. முயன்றால், நாமும் வளர்த்துக் கொள்ள முடியும். நமது பிள்ளைகளை வளர்க்க முடியும்.
இந்த திறமையுடன் , ஆக்கபூர்வ ஆராயும் (Creative) மற்றும் பகுத்தறியும் (analytic) திறமையும் ( இது படிப்பினால் , பிறப்பு ஜீனினால் வருவது, ) சேரும்போது ஒளிர முடியும், வெற்றிப்பாதையில். 

உங்கள் மற்றும் உங்கள் மக்கள் நடைமுறை அறிவாற்றல்பெருக வாழ்த்துக்கள். 

முரளிதரன். S

Likes(4)Dislikes(1)
Share
Sep 302017
 

Tree 2

மரத்தை கடக்கையில்

போகிற போக்கில்

ஒரு தளிர் இலையை

ஒடித்துவிட்டு போவோர்

கவனத்திற்கு…

 

நீங்கள் ஒடித்தது

அந்த கிளையின்

கடை குட்டியாக இருக்கலாம்

 

காற்றைக் கடிக்கப் பழகும்

கிளையின் பால் பல்லாக இருக்கலாம்…

 

அந்த மரத்தின்

ஒரு சொட்டு புன்னகையாக இருக்கலாம்…

 

கிளையின் காதுகளின்

மரகத தோடாக இருக்கலாம்…

 

கைக்கு எட்டும் உயர்த்தில்

வளர்த்த அந்த

தாழ்ந்த கிளை மீது

நீங்கள் நிகழ்த்திய

ஆணவக் கொலையாக இருக்கலாம்…

 

அந்த மரம்,

பச்சயம்  சேமிக்க

‎காற்றில் தோண்டிய

பச்சைக் குழியாக இருக்கலாம்…

 

இயற்கையின் சட்டத்தில்

நீங்கள் செய்தது

வன்கொடுமைகளின்

வரிசையில் இருக்கலாம்…

 

சரி…

மன்னிப்பு வேண்டுமாயின்,

 

இன்றே ஒரு மரம் நடுங்கள்…

 

அதில் துளிர்விடும் இலை நுனியில் வழியும் மழைத்துளிகளால்

துடைக்கப்படலாம் உங்கள் பாவ அழுக்கு…

 

-அ.க.இராஜாராமன்

Likes(6)Dislikes(0)
Share
Sep 122017
 

samacheer-kalviprotest-kids-4

நண்பர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு,

உங்கள் வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது!!

தமிழகத்தில் சாதித்துவரும் பல தொழிலதிபர்களை சந்தித்து, அவர்களைப் பற்றி சிறு தொகுப்புகளை வெளியிடும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் வந்தபோது, மேலுள்ள இந்த வரியின் முழு அர்த்தத்தை உணர்ந்தேன்.

இந்த வெற்றியாளர்களை சந்தித்தபோதும், அவர்கள் குணங்களை அருகிலிருந்து கவனித்தபோதும் சில முக்கியமான விஷயங்களை கற்று அறிந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

முதலில், இந்த சாதனையாளர்கள் வெளியில் உள்ள எந்த சூழ்நிலைகளும் தங்களது வெற்றியை தடுக்க இயலாது என ஆழமாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு, GST அமுல்படுத்தியது, பண மதிப்பிழப்பு (Demonetization), உலக பொருளாதார தேக்க நிலை போன்ற காரணங்கள் தங்கள் தொழிலின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் என அவர்கள் எண்ணவில்லை. வித்தியாசமான, புதுமையான செயல்களை செய்து அடைய வேண்டிய இலக்கை அடைந்து மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் மட்டுமே கவனமாய் இருக்கின்றனர்.

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திரு.ஜாகிர் ஹுசைன் அவர்கள் GST தனது தொழிலிற்கு சிறந்த முறையில் உதவுவதாகவும், GST வரியை இன்னும் சில வருடங்கள் முன்னரே அறிமுகப் படுத்தியிருந்தால், தான் வாங்கிய மெஷின்களுக்கு சில வருமானம் கிடைத்திருக்கும் எனவும், தொலைநோக்கு பார்வையில் GST நம் நாட்டிற்கு நன்மை பயக்கும் எனவும் தெரிவித்தது எனக்கு ஆச்சரியமூட்டியது.

ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. தோல்விக்கு “உங்களது குடும்பம், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளி, சமுதாய-பொருளாதார பின்னணி, அரசுகளின் திட்டங்கள், ஆளும்கட்சி, எதிர்கட்சி” என யாரை வேண்டுமானாலும் நீங்கள் குறை கூறலாம், ஆனால் உங்கள் வாழ்க்கை சிற்பத்தை நீங்கள் மட்டுமே செதுக்குகிறீர்கள்; உங்கள் வெற்றி தோல்விக்கு நீங்கள் மட்டுமே முழு காரணமாக உள்ளீர்கள் என்பதை தெளிவாகப் புரிந்துக்கொள்ளுங்கள்.

மாணவர்களாகிய நீங்கள் சமூக அக்கறையில், சில போராட்டங்களை நடத்தி வரும் இந்த வேளையில் இன்னொன்றையும் உங்களுக்கு கூற வேண்டும். சில ஆண்டுகளுக்குப் பின், இந்தச் சமூகம்,  “நீங்கள் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள் என்றோ எத்தகைய போராட்டத்தில் கலந்துக்கொண்டீர்கள் என்றோ உங்களைப் பார்க்காது, மாறாக உங்களது வாழ்வில் நீங்கள் வெற்றி அடைந்துள்ளீர்களா, தோல்வி அடைந்துள்ளீர்களா” என்பதை மட்டும் தான் பார்க்கும்.

ஆர்ப்பாட்டங்கள் வரும், போகும். அவற்றுக்கு ஒரு முடிவே கிடையாது. மேலும், இந்தப் போராட்டத்தை நடத்தி விட்டால் நம் மாநிலம் சிங்கப்பூர் மாதிரி ஆகிவிடும் என்பதைப் போல  பல போராட்டங்களை நாம் கண்டுவிட்டோம். அனால் முடிவில் நாம் சிங்கப்பூர் போல் ஆகிவிட்டோமோ?

அதனால் மாணவர்களே, உங்கள் சகோதரனாக உங்களை கேட்டுக்கொள்கிறேன். உங்கள் படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். ஒரு பெரிய இலக்கை, தொலைநோக்குப் பார்வையை வைத்துக்கொண்டு, அதில் முழு முயற்சியுடன் ஈடுபடுங்கள். சுயலாபம் அடையும் சில மனிதர்களுக்கு பசிக்கு உங்கள் வாழ்க்கையை இரை ஆக்கிவிடாதீர்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் வாழ்க்கை மிக முக்கியமானது. நீங்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக பின்னாளில் மாறும்போது, நூற்றுக்கணக்கான மருத்துவர்களையும், தமிழ் அறிஞர்களையும், நல்ல குடிமகன்களையும் நம் சமூகத்திற்கு புதிதாக உருவாக்கி விட்டுச்செல்ல முடியும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை உங்களை இன்னும் பெரிய மனிதனாக அடையாளம் காண்பிக்கும்.

கடைசியாக ஆனால் முக்கியமான ஒரு உண்மை. நான் கண்ட வெற்றியாளர்களில் பலர் பள்ளிகளில், கல்லூரிகளில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களாக இருக்கவில்லை. சராசரி மானவர்களாய் தான் இருந்துள்ளனர். அவர்கள் இந்த நிலையை அடைய ஆர்வம், அர்பணிப்பு, கடின உழைப்பு போன்ற குணங்களே காரணமாய் இருந்துள்ளன.

அதனால் நேர்மறையாக சிந்தித்து, உங்களிடம் உள்ளத் திறமைகளை வைத்து, உங்கள் வாழ்க்கையையும், சமூகத்தையும் எத்தனை அழகாக மாற்ற முடியும் என்பதை வெளியுலகிற்கு காட்டுங்கள்.

யோசித்து செயல்படுங்கள்.

உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது அறிவுக் கதவை திறந்திடுங்கள். உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல, உலகமே உங்கள் கையில்.

அக்கறையுடன்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(2)Dislikes(0)
Share
Aug 052017
 

WhatsApp Image 2017-08-04 at 09.19.54

மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வியியல் தொழில் நுட்பப் பிரிவு, உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்தவுள்ளது. தமிழ்க்கணிமை சார்ந்த கருத்தாடல்கள், பகிர்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், படைப்புகள், விவாதங்களை வரவேற்று பல்துறை களஞ்சியமாக மாநாடு நிகழ உள்ளது. தமிழ் ஆர்வலர்கள், கணினி வல்லுநர்கள்,  பேராசிரியர்கள், ஆசிரியர்கள், முனைவர்கள், ஆய்வார்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.

நோக்கம்

 1. அனைத்துலகத் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழி, அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்க வழிவகுத்தல்
 1. தமிழர் வரலாறு, இலக்கியம், கலை மற்றும் பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவதற்கு வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துதல்
 1. அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்து இணையவழிப் பயன்பாட்டைப் பெருக்குதல்.

மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் ஐந்து பக்களவில் யுனிகோடு எழுத்துருவில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 1. இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)

எழுத்துப் பகுப்பாய்வு – Text Analytics/Mining (ex: word frequency, paraphrases, automatic textual encoding), உணர்ச்சிப் பகுபாய்வு- Sentiment Analysis, ஆவண வகைப்படுத்தல் – Document Classification, உருப்பொருள் பிரித்தெடுத்தல் – Entity Extraction

 1. இயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள்,தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.
 2. மொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)
 3. ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
 4. கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத்தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)
 5. திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
 6. தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
 7. எண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்
 8. தொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை(semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization
 9. கற்றல் மேலாண்மை அமைப்புகள்(Learning Managements Systems),மெய்நிகர் கல்விச்சூழல்(Virtual Learning)
 10. எண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data,மெய்ப்பொருளியம் –Ontology

இடம்: சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம்

நாள்: ஆகஸ்ட் 25,26,27 – 2017

பதிவுக்கட்டணம்: 60 அமெரிக்க டாலர்

கட்டணம்செலுத்த: paypal.me/WTIC

வலைப்பதிவு: www.wtic.my

கட்டுரை வழங்க நிறைவு நாள்: 07.08.2017

தொடர்புக்கு: 9094107500, +60143279982

மின்னஞ்சல்: cpc2017.wtic@gmail.com

மாநாட்டின் தலைவர்:

திரு. தனேசு பாலகிருசுணன்(மலேசியா)

மாநாட்டின் இணைத்தலைவர்:

முனைவர் இலட்சுமி கார்மேகம்(இந்தியா)

மாநாட்டின் நெறியாளர்கள்:

முனைவர் பத்மநாப பிள்ளை

திரு. திருவள்ளுவன் இலக்குவனார்

முனைவர் காமாட்சி

Likes(1)Dislikes(0)
Share
Jul 312017
 

1

“சார், உங்கள் மகன் படிக்கும் பள்ளியிலிருந்து தான் அழைக்கிறோம், உங்கள் மகன் எங்கள் பள்ளியில் இப்போது ஒரு பரீட்சை எழுத இருக்கிறான், இதனால் தான் உங்களை அழைத்தோம்” என்று ஒரு தந்தைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது.

தந்தை சற்று குழப்பத்துடன், “பரீட்சை நடத்த வேண்டுமெனில், நடத்துங்கள், இதற்கு ஏன் என்னை தொடர்பு கொள்கிறீர்கள்?” என்கிறார்.

“பையன் உங்களிடம், பள்ளியில் நடப்பவைகளுள் எதை கூறுகிறான், எதை கூறுவதில்லை என எங்களுக்குத் தெரிவதில்லை, எனவே தான் உங்களை அழைத்தோம். பரீட்சை நடக்கும் அறையில் இருக்கும் ஆசிரியருக்கு இந்த லைனை மாற்றுகிறோம். சற்று லைனில் காத்திருங்கள்” என்கிறது எதிர்முனை குரல்.

தந்தையும், “சரி, லைனில் காத்திருக்கிறேன்” என ஒப்புக்கொள்கிறார்.

பரீட்சை அறையில் இருக்கும் ஆசிரியர் என அறிமுகப்படுத்தி கொண்டு ஒருவர், “சார், உங்கள் மகன் என் முன் தான் இருக்கிறான், இவனால் பரீட்சை எழுத முடியுமென எனக்குத் தோன்றவில்லை. எழுதினாலும் தோல்வி அடைந்துவிடுவான்” என தெரிவிக்கிறார்.

தந்தை படு டென்ஷனாகி, “என் மகன் இன்னும் எழுதவே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் ஏன் அவனது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் இது போல் எதிர்மறையாக பேசுகிறீர்கள்? அவன் மீது நம்பிக்கை வைக்காது நீங்கள் சொல்லும் இத்தகைய கருத்துக்கள், அவனது தைரியத்தை கண்டிப்பாக இழக்க வைக்கும். முதலில் அவனை எழுத வையுங்கள், பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

எதிர்முனையில் இருக்கும் குரல், “சார் நான் மும்பை ரேடியோ மிர்ச்சியிலிருந்து, நவீத் பேசுகிறேன். முகநூலில் நம் நாட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லாத வார்த்தைகளை ஒரு மாத காலமாக கூறி வருகிறீர்கள். சீனாவிற்கும், நம் நாட்டிற்கும் சண்டை வந்தால் நம் நாடு தோல்வி அடையும் என நம் ராணுவ வீரர்கள் நம்பிக்கையை இழக்கும் வகையில் பேசி வருகிறீர்கள்” என்கிறது.

“போர்க்களத்தில் உயிரைப் பணையம் வைத்து ராணுவ வீரர்கள் போராடுகையில், நம் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை இல்லை என தெரிய வந்தால், அவர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? அவர்களால் எப்படி வீரத்துடன் போராட இயலும்? மேலும் தங்கள் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களையும் சேர்த்துக் காப்பாற்றத் தான், தங்கள் குடும்பத்தையும், பாசமானவர்களையும் இழந்து எல்லையில் போராடுகின்றனர் எனவும் புரிந்துக்கொள்ளுங்கள்” என்றார் நவீத்.

தந்தை தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகின்றார். சமீபத்தில் ஹிந்தியில் இருந்த இந்த உரையாடல் வாட்ஸாப் மூலம் வைரலாக பரவியது.

அந்தத் தந்தை செய்த தவறைப் போல் தானே, நம்மில் பலரும் ஏதாவது ஒரு தவறை செய்துக் கொண்டே இருக்கிறோம்?

வீட்டில் உள்ளவர்கள் மீது, சமுதாயத்தின் மீது, நாட்டின் மீது நம்பிக்கையை இழந்து சதா சர்வ காலமும் எதிர்மறையான சொல்களையும் வாக்கியங்களையும் சிலர் கூறுவதை காண முடியும்.

குறிப்பாக முகநூலிலும், சமூக தளத்திலும் இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள், ஒருவரை ஒருவர் குறைக் கூறுவது மிகுதியாகிக் கொண்டே வருகிறது.

நம்பிக்கையற்ற எதிர்மறை வாக்கியங்கள் பேசுவதால் யாருக்கும் எந்த விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இவ்வுலகத்தில், பல வருடங்களாக முடியாது எனக் கூறப்பட்ட அனைத்து செயல்களையும், வெற்றிகரமாக முடித்ததற்கு பின்னணியில், நம்பிக்கை என்ற வேர் ஒளிந்துக்கொண்டு தான் இருந்திருக்கிறது.

அதனால் நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். நாளை அறுவடை செய்ய இருப்பது இன்று விதைப்பதை பொறுத்துதான் உள்ளது.

மீண்டும் சந்திப்போம்,

விமல் தியாகராஜன் & B+ TEAM

(எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்து, தொடர்ந்து பகிர்வுகளை பெற்றுக்கொள்ளுங்கள் https://www.facebook.com/bpositivenews)

Likes(3)Dislikes(0)
Share
Share
Share